வேதங்கள்
இந்து சமயம் பல உட்பிரிவுகளை உடையது. எமது நெறியாகிய சைவம் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டது. அதுபோலவே திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டது வைஷ்ணவம்; சக்தியை முழுமுதற் கடவுளாகப் போற்றுவது சாக்தம்; கணபதியை முழுமுதலாகப் போற்றுவது காணாபத்தியம்; குமரக்கடவுளை (முருகனை) முழுமுதற் பொருளாகப் போற்றுவது கௌமாரம்; சூரியனை முழுமுதலாகப் போற்றுவது சௌரம். இந்து சமயத்தின் இந்த ஆறு பிரிவுகளையும் சண்மதம் என்பர்.
இந்து சமயத்தின் முதல் நூல்களாகப் போற்றப்பெறுவன வேதங்களும் ஆகமங்களும். அவற்றுள் வேதங்கள் இந்து சமயத்தின் உட்பிரிவுகள் அனைத்துக்கும் பொதுவானவை. ஆதலால் அவை பொதுநூல் என்று வழங்கப்பெறுவன. ஆகமங்கள், அவ்வாறன்றி சைவம் முதலான உட்பிரிவு ஒவ்வொன்றுக்கும் வேறுவேறாக அமைபவை. அதனால் அவை சிறப்புநூல் என்று வழங்கப்பெறுகின்றன.
இந்த உண்மையை, திருமந்திரம் பின்வருமாறு கூறும்:
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உன்னுக.
வேதங்கள்
இந்து சமயத்துக்கு ஆதாரமான திருநூல்கள் வேதங்களே. 'வேதம்' என்ற சொல்லின் பொருள் அறிவு என்பதாகும். மெய்யறிவைத் தருவன என்ற பொருளிலேயே வேதங்களை அச்சொல் சுட்டி நிற்கின்றது.
வேதங்கள் 'சுருதி' என்றும் சுட்டப்பெறும். 'சுருதி' என்றால் காதால் கேட்கப்படுவது என்று பொருள். சுருதி, இறைவனால் மெய்ஞானியருக்கு உபதே சிக்கப்பட்டது. அவர்களது ஞான பரம்பரை காலாதிகாலமாக வேதங்களை செவிவழியாகவே பேணி வந்தது. அவை எழுதப்படவில்லை. அதனால் வேதத்தை எழுதாமறை என்பர்.
வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை; மனிதனால் படைக்கப்படாதவை. அதனால் அவற்றை அபௌர்ஷேயம் என்பர். அவை ரிஷிகளுக்கு உபதேசிக்கபட்ட நிலையான உண்மைகளைக் கொண்டவை. அதனால் அவற்றுக்கு அழிவில்லை; அவை நித்தியமானவை.
'ரிஷி' என்ற சொல் 'காண்' என்னும் பொருள் கொண்ட 'த்ருஷ்' என்ற சொல்லிலிருந்து பிறந்தது. 'ரிஷி' என்ற சொல்லின் பொருள் 'காண்பவன்' என்பதாகும். ரிஷிகள் உண்மைகளைக் கண்டு, கேட்டு உணர்ந்தவர்கள்.
இந்து சமயம் எந்த ஒரு நபரினாலும் உருவாக்கப்பட்டது அன்று. காலாதி காலமாக வெளிப்பட்ட உண்மைகளை ரிஷிகள் ஞானியர்கள் கண்டுணர்ந்தார்கள். அந்த உண்மைகள் அவர்கள் உண்டாக்கி வெளிப்படுத்தியவை அல்ல. ரிஷிகள் கண்டுணர்ந்த ஆன்மிக உண்மைகள் அவர்களது ஞானபரம்பரையால் தொடர்ந்து பேணப்பட்டும் போதிக்கப்பட்டும் வந்தன.
வேதங்கள் நான்கு. அவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் எனப்படுகின்றன.
இருக்குவேதம்
இது வேதங்களுள் முதலாவதும் முக்கியமானதுமாகும். அதில் அடங்கும் மந்திரப் பாடல்கள் பல, ஏனைய வேதங்களிலும் இடம்பெறுகின்றன. இருக்கு என்பதற்குப் பாட்டு என்பது பொருள். பாட்டுக்களின் தொகுப்பாகிய இருக்கு வேதம் இருக்குவேத சங்கிதை எனப்படும் (சங்கிதை தொகுப்பு). இருக்கு வேதசங்கிதையிலே காணப்படும் பாடல்கள் அக்கினி, இந்திரன், சூரியன், உருத்திரன், வாயு, வருணன்,
இருக்கு வேதப் பாடல்கள் இயற்கைக் கூறுகளைத் தெய்வ நிலைப்படுத்தி நோக்குகின்றன. அதனால் அங்கே தெய்வங்கள் பற்றிப் பேசப்படும். ஆயினும் பரம்பொருள் ஒன்று என்பதே வேதத்தின் முடிவு. 'உள்பொருள் ஒன்றே; அதனையே அறிந்தோர் பல பெயர்களால் வழங்குவர்' என்று பொருள்படும். சுலோகம் இருக்குவேதத்தில் இடம்பெறுகின்றது. பல
யசுர்வேதம்
வேள்வியில் ஓத வேண்டிய மந்திரங்களையும் கிரியைகளை ஆற்ற வேண்டிய முறை பற்றிய விளக்கங்களையும் கொண்டதாக அமைகின்றது.
சாமவேதம்
இசையோடு கூடிய பாடல்களைக் கொண்டது. அவை யாகத் தின்போது இசைக்கப்படுவன. சாமவேதம், ஒருவகையில் இசை நூலாகவும் கொள்ளத்தக்கது. அவ்வகையில் அதுவே காலத்தால் முந்திய இந்திய இசைநூல் எனலாம்.
அதர்வணவேதம்
நீண்ட ஆயுள், செல்வம், நோய்நீக்கம், பகைநீக்கம் முதலான வற்றைத் தரவல்ல மந்திரங்களின் தொகுப்பாக அமைகின்றது.
இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதம் ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளை உடையது. அப்பகுதிகள் மந்திரங்கள், பிராமணங்கள், ஆரணியகங்கள், உபநிடதங்கள் எனப்படுவன.
மந்திரங்கள்
தெய்வங்களை நோக்கிப் பாடும் துதிப்பாடல்கள் ஆகும். தெய்வங்களிடம் இம்மை, மறுமை இன்பங்களை வேண்டு வனவாக அவை அமைகின்றன.
பிராமணங்கள்
யாகங்களின்போது மேற்கொள்ளவேண்டிய சடங்கு முறைகளை விளக்குவன.
ஆரணியகங்கள்
சடங்குகள் பற்றிய தத்துவ விளக்கங்களை உருவகக் கதைவடிவில் எடுத்துரைப்பன.
உபநிடதங்கள்
வேதங்களின் இறுதிப் பகுதியாக அமைவன. வேதங்களில் கூறப்படுகின்ற உண்மைகளின் முடிவாக விளங்குகின்றன. இந்த இரண்டு கருத்திலும் அவை 'வேதாந்தம்' (வேத+அந்தம்) என்றும் சுட்டப்பெறுகின்றன. மிக ஆழமான ஆன்மிக உண்மைகளை விளக்குவனவாக, ஒரிறைக்கோட்பாட்டை வலியுறுத்துவனவாக உபநிடதங்கள் அமைகின்றன. உண்மையில் உபநிடதங்களே இந்துமதத்தின் இந்து தத்துவங்களின் அடிப்படையாக அமைகின்றன.
வேதங்களில் அடங்கியுள்ள விடயங்கள் மற்றொரு அடிப்படையில் மூன்று வகையாகப் பிரித்து நோக்கப்படுகின்றன. அப்பிரிவுகளாவன :
1. கர்மகாண்டம்
இது கிரியைகள், மத ஆசாரங்கள் பற்றிக் கூறும் பகுதியாகும். மந்திரங்களும் பிராமணங்களும் கர்ம காண்டத்தைச் சேர்ந்தவை.
2. உபாசனாகாண்டம்
தியானத்துக்கு உரிய விடயங்களை உள்ளடக்கியதாகும். ஆரணியகங்கள் இப்பகுதியைச் சேர்ந்தவை.
3. ஞானகாண்டம்
இது தத்துவ விளக்கங்களை உள்ளடக்கிய பகுதி எனலாம். உபநிடதங்கள் ஞானகாண்டத்தைச் சேர்ந்தவையே.
நன்றி
0 Comments