தீபாவளி 2025 : வரலாறு, பாரம்பரியம் மற்றும் கொண்டாட்ட முறைகள் - DIWALI 2025: HISTORY, TRADITIONS AND CELEBRATION METHODS

ஒளியின் திருநாள் தீபாவளி


தீபாவளி 2025 : வரலாறு, பாரம்பரியம் மற்றும் கொண்டாட்ட முறைகள் - DIWALI 2025: HISTORY, TRADITIONS AND CELEBRATION METHODS

எங்கள் விரதங்களும் பண்டிகைகளும் சமயம் வேறு, வாழ்வு வேறு அன்று, வாழ்க்கையோடு இணைந்ததுதான் சமயம் என்பதைப் புலப்படுத்துவனவாக அமைந் துள்ளன. அவை நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன. இறையுணர்வை வளர்த்துக் கொள்ளவும் அதன்மூலம் சிந்தனை, சொல், செயல் என்பவை புனிதப்படவும் விசேட நாட்கள் எமக்கு வழிகாட்டுகின்றன.

தைப்பொங்கல், வருடப் பிறப்பு, தீபாவளி, முதலான பண்டிகைகளின் போதும் சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, திருவாதிரை போன்ற விரத நாட்களிலும் நாம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்துகின்றோம். வீட்டைக் கழுவுவதும் மெழுகுவதும் தோரணங்கள், கோலங்களால் அலங்கரிப்பதும் நீராடிப் புதிய ஆடை தரிப்பதும் புறத்தூய்மையின்பாற்படுவனவே. புதிய பாத் திரங்களிலே உணவைச் சமைத்து, இறைவனுக்கு அதை நிவேதனமாக்கி, உறவினர் விருந்தினருடன் கூடி உண்பது என்பனவெல்லாம் விசேட நாட்களில் நாம் கைக்கொள்ளும் வழக்கங்களாக அமைந்துள்ளன. இவையெல்லாம் உள்ளத் தூய்மையை வளர்ப்பதற்கு வழியாக அமைபவை.

சூரியனுடைய நிலைமாற்றத்தால் பூமியில் பருவ மாற்றங்கள் உண்டாகின்றன. இயற்கை எழில் நிறைந்த இளவேனில் கால ஆரம்பமே சித்திரைப் புதுவருடப் பிறப்பாக மலர்கிறது. திருக்கோயில்களில் பகலிலே நிகழும் பூசை சூரிய வழி பாட்டுடனும் இரவிலே சந்திர வழிபாட்டுடனும் தொடங்குவதை நாம் பார்க்கிறோம். இவ்வாறாக எமது பண்டிகைகள், விரதங்கள், வழிபாடுகள் யாவும் இயற்கையோடு இயைந்தனவாக அமைகின்றன. நாம் கொண்டாடும் அத்தகைய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளி பற்றி இங்கு நோக்குவோம்.

ஐப்பசி மாதத்திலே தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். ஆவளி என்ற சொல்லுக்கு வரிசை என்பது பொருள். எனவே தீப + ஆவளி என்றால் தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்தல் என்பது பொருளாகும். ஐப்பசி மாதத்திலே கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினத்தில் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகை ஒரு புராணக் கதையுடன் தொடர்புடையது.

புராணங்களிலே அசுரர்கள், தேவர்கள் என இரு வகையினர் கூறப்படுகின்றனர். இவர்களுக்கிடையே போர் நடைபெற்று அசுரர் அழிவதாகவும் தேவர்களின் வாழ்வதாகவும் எடுத்துரைக்கப்படுகின்றது. நரகாசுரன் என்னும் ஓர் அசுரன் "நானே பெரியவன்” என்று அகங்காரம் கொண்டிருந்தான். அவன் எல்லோரையும் வருத்தினான். ஆலயங்களிலே பூசைகள், விழாக்களை நிறுத்தினான். வீடுகள், கோயில்கள் யாவும் இருளில் மூழ்கிக் கிடந்தன. மக்களின் வாழ்க்கையே இருள்மயமாகிவிட் டது. மக்கள் இறைவனிடம் முறையிட்டனர். அவ்வேளை காத்தற் கடவுளாகிய விஷ்ணுமூர்த்தி துவாரகாபுரியில் கிருஷ்ண பகவானாக அவதரித்திருந்தார். "நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் காலந்தோறும் நான் தோன்றுகிறேன்" என்று பகவத்கீதையில் அருளிய அக்கிருஷ்ண பகவான், நரகாசுரனை அழிக்கத் திருவுளங்கொண்டார். பகவானின் கையால் இறக்கும் வேளையில் நரகாசுரன் உண்மையை உணர்ந்தான்; இறப்பதற்கு முன் பகவானிடம் ஒரு வரம் வேண்டினான்.

'சுவாமி நான் இறக்கும் இத்தினத்திலே உன்னை அருச்சித்து வழிபடுவோருக்கு அருள் புரிய வேண்டும்" என்றான். அந்த வரம் வழங்கப்பட்டது. அன்று தொட்டுத் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நரகாசுரன் இறந்தபோது இருள் நீங்கியது; தேவர் முதலானோர் தாம் இழந்தவற்றை மீண்டும் பெற்றுக் களிப்படைந்தனர்; சிறைப்பட்டிருந்தவர்கள் விடுதலை பெற்று மகிழ்ச்சியோடு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்; உலகம் ஒளிமயமாகத் திகழ்ந்தது.

நரகாசுரனின் அழிவையும் அதனால் தேவரும் மனிதரும் அடைந்த சுதந்திர வாழ்வையும் நினைவுகூருமுகமாகவே ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உண்மையில் மனிதனது மனதுக்குள் உள்ள தீய எண்ணங்கள் அசுரர் என்றும் நல்ல எண்ணங்கள் தேவர் என்றும் உருவகிக்கப்படுகின்றன. நம்மிடம் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதே அர்த்தமுள்ள உண்மையான தீபாவளிக் கொண்டாட்டமாக அமையும்.

தீபாவளி தினத்தில் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் வைத்து, நீராடி, புதிய ஆடைகள் அணிந்து, இறைவனை வணங்கி, சுவையான உணவுகளை உற்றார் உறவினருடன் கூடி உண்டு மகிழ்கிறோம். ஒவ்வொருவரும் ஞானமாகிய ஒளியை அடைவதுதான் தீபாவளியின் தத்துவமாகும். நல்லெண்ணமாகிய எண்ணெயை நம் உடம்பிற் பூசுதல் வேண்டும். சித்தமாகிய அரப்பினால் அழுக்காறு, வெகுளி ஆகியவற்றைத் தேய்த்துப் போக்குதல் வேண்டும். ஞானமாகிய தூய உடைகளை உடுத்துப் புனிதமாக இருத்தல் வேண்டும். விளக்கேற்றிப் புற இருளை நீக்கும்பொழுது, எமது அக இருளும் நீங்க வேண்டும். அப்பொழுது நம்மை அறியாமலே நம் அகத்தில் ஒருவித ஒளி தோன்றும். நமக்கு என்றுமில்லாததோர் ஆனந்த நிலை உண்டாகும்.

ராமாயணமும் தீபாவளியும் :

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராணக் கதைகள் கூறப்படுகிறது. தீபாவளி இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையாக உள்ளது. அந்த வகையில் வடநாட்டு மக்கள் தீபாவளி கொண்டாட பல வரலாற்று கதைகள் உள்ளது.  ராமாயணத்தில்  ராமர் ராவணனை அழித்து தனது வனவாசத்தை முடித்து சீதா மற்றும் லட்சுமணனுடன் அயோத்தி திரும்பிய நாள் அமாவாசை இரவு.. இந்த இருட்டு வேளையில் அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அவர்களை அகல் விளக்கு ஏற்றி வரவேற்றுள்ளனர் .இந்த தீப ஒளியில் மூலம் நாட்டை அடைந்தார்கள். இவர்கள் வந்த நாள் தீபாவளி நாளாகும் .தீப ஒளியின் வெளிச்சத்தில் வந்ததால்  தீபாவளியை தீப ஒளி என்றும் கூறுகின்றனர் .


கந்த புராணமும்  தீபாவளியும் :

கந்த புராணத்தின் படி பார்வதி தேவியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவடைந்த பிறகு சிவன் பார்வதியை தன்னுள் பாதியாக ஏற்று அர்த்தநாதீஸ்வரர்  உருவம் எடுத்த நாளாக கூறப்படுகிறது.  இதனை நினைவுபடுத்துவதாகவும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தில் வாயிலாக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது . மகாபாரதத்தில் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனவாசம் அனுப்பப்பட்டனர் .அதன் பின் அவர்கள் போரிட்டு வெற்றி பெற்று நகரம் திரும்பிய போது நாட்டின் மக்கள் அவர்களை வரவேற்கும் விதமாக தீபம் ஏற்றி கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.


சமண மற்றும் புத்த சமயமும் தீபாவளியும் :

சமண மதத்தின் படி பீகார் மாநிலத்தில் கி.மு 599 இல் பிறந்தவ தான் மகாவீரர். இவர் பிறந்த நாள் மகாவீரர் ஜெயந்தியாக கொண்டாடப்படுவதைப் போல் முக்தி அடைந்த நாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மாமன்னர் அசோகர் புத்த மதத்தை தழுவிய நாள் தீபாவளி ஆக சொல்லப்படுகிறது. அதனை நினைவு கூறும் விதமாக புத்த மதத்தினரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், வங்காளதேசம், இலங்கை போன்ற அண்டை நாடுகளும் தீபாவளியை வெளிச்ச நாளாக கொண்டாடுகின்றனர்.


நரகாசுரன் அழிக்கப்பட்ட வரலாறும் தீபாவளியும் :

இதில் நம் தமிழ்நாட்டுக்கு என்று பரவலாக பேசப்படுவது நரகாசுரனின் கதைதான். இது பலருக்கும் தெரிந்த கதையாக உள்ளது. பூமாதேவிக்கும் விஷ்ணு பகவானுக்கும் பகுமன்  என்ற மகன் பிறக்கிறான். அவர் பல துர்குணங்களை பெற்றிருக்கிறான். அதனால் நரக அசுரன் என்று கூறப்பட்டு நாளடைவில் நரகாசுரன் என்று அழைக்கப்படுகிறான். அவன்  வளர்ந்த பிறகு தேவர்களையும் தேவலோக பெண்களையும் மிகவும் துன்புறுத்துகின்றான். அது மட்டுமல்லாமல் பிரம்மாவிடம் தன் தாய் கையால் மட்டுமே தான் இறக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்று விடுகிறான்.

இதனை அறிந்த மகாவிஷ்ணு ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் எடுத்து நரகாசுரனுடன்  போரிடுகிறான். அப்போது நரகாசுரன் கிருஷ்ணனின் மீது அம்பை எய்துகிறார். இதனால் கிருஷ்ணர் மயக்கம் அடைவது போல் கீழே விழுகின்றார். இதை பார்த்த பூமாதேவி கோபமுற்று  சத்தியபாமா என்ற அவதாரம் எடுத்து நரகாசுரனுடன் போரிட்டு அவனை அம்பால்  எய்ததால்  பழியாகிறான் .

அப்போதுதான் அவள் தன் தாய் என உணர்கிறான். இறக்கும் தருவாயில் ஒரு வரம் கேட்கிறார்.. என் பிடியில் இருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் நான் இறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என கேட்கிறார்.. அதற்கு கிருஷ்ணரும் அந்த வரத்தை கொடுக்கிறார்.  இந்த வரலாற்று கதைகள் அனைத்தும்  நடந்த இடம் வடநாட்டில் தான் .கிபி  15ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசின் காலத்தில் இருந்துதான் தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாக முனிவர் தோ பரமசிவன் அவர்கள் கூறுகிறார் .


நன்றி 

Post a Comment

0 Comments