மெய்கண்டதேவர்
மெய்கண்டதேவர், திருமுனைப்பாடி நாட்டிலே வாழ்ந்த அச்சுதக்களப்பாளர் மங்களாம்பிகை தம்பதிக்கு மகனாக அவதரித்தவர். இவரது காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு என்பர். இவர், திருவெண்காட்டு இறைவனது அருளினால் பிறந்ததனால், பெற்றோர், சுவேதவனப் பெருமாள் எனும் நாமத்தை இவருக்குச் சூட்டினர். இவர், தமது மூன்றாவது வயதிலே பரஞ்சோதி முனிவரிடம் ஞான உபதேசம் கேட்ட சிறப்புடையவர். வான்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பரஞ்சோதியார், பூவுலகில், தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சுவேதவனப் பெருமாள் எனும் இக்குழந்தையின் பரிபக்குவத்தை உணர்ந்து, அக்குழந்தைக்கு மெய்ஞ்ஞான உபதேசம் வழங்கினார்; மெய்கண்டார் எனும் தீட்சாநாமத்தை உபகரித்தார்.
பரஞ்சோதியாரிடம் தாம் அறிந்த மெய்ஞ்ஞானத்தைக் கொண்டு, தனது காலத்துக்கு முற்படத் தோன்றிய சைவத் திருமுறைகளிலே காணப்பெற்ற தத்துவக் கருத்துக்களை வகுத்தும் தொகுத்தும் சைவசித்தாந்தக் கோட்பாடாக மெய்கண்டார் வழங்கினார்.
சைவசித்தாந்த சாத்திர நூல்களுள் மிகுந்த புகழ்பெற்றது இவர் அருளிய சிவஞான போதம் ஆகும். அது, சித்தாந்த சாத்திர முதல் நூல் எனும் சிறப்பை உடையது; பன்னிரண்டு சூத்திரங்களால் ஆனது.
மெய்கண்டாரிடம் நாற்பத்தொன்பது மாணவர்கள் கல்வி கற்றனர் என்று கூறுவர். இவர்களுள் அருணந்தி சிவாச்சாரியார் தலை சிறந்தவராவார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான மனவாசகம் கடந்தார், உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த நூலை இயற்றினார். மெய்கண்டதேவர் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தில் இறை திருவடி அடைந்தார்.
புறச்சந்தானகுரவர்களில் முதல்வராக மெய்கண்டார் காணப்படுகின்றார். அவர் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகின்றார். மெய்கண்டார் ஆற்றிய சைவசமயப் பணிகளுக்கெல்லாம் தலையாயது சைவசித்தாந்தம் சார்பான முப்பொருளுண்மையை முதன் முதலாக நிறுவியமையாகும். 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் காணப்பட்ட தத்துவ விசாரணைகளைத் தொகுத்து அவற்றுக்குச் சைவசித்தாந்த ரீதியில் விளக்கம் அளிக்க முன்வந்தார்.
அதாவது வடமொழி நூல்களான வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள் ஆகியவற்றிலும் திருமந்திரம், தேவாரம் ஆகிய நூல்களிலும் தொன்று தொட்டு வலியுறுத்தப்பட்டு வந்த இறைவன், உயிர், உலகு என்பவற்றுக்கு கோட்பாட்டு ரீதியிலான விளக்கத்தினை அளித்தவர் மெய்கண்டதேவராவார். மெய்கண்டதேவர் தனது குருவாகிய பரஞ்சோதியார் தமக்கு உபதேசித்த சிவஞான சூத்திரங்களைத் தமிழில் அருளிச்செய்தார். அவை சிவஞான போதம் என்ற நூலாக வெளிவந்தன. சிவஞான போதம் மெய்கண்ட சாத்திர நூல்களுக்குள் முதலாவதாக காணப்படுகின்றது. இதுவே பிற்காலத்தில் எழுந்த சைவசித்தாந்த நூல்களுக்கெல்லாம் ஆதார நூலாக அமைகின்றது.
சிவஞான போதம் பிரமாண இயல், இலக்கண இயல், சாதன இயல், பயன் இயல் என நான்காக வகுக்கப்பட்டு ஒவ்வோர் இயலும் மும்மூன்று சூத்திரங்களைக் கொண்டு காணப்படுகின்றது. இச் சூத்திரங்கள் பதி பற்றிய விளக்கம், உயிர் பற்றிய விளக்கம், உயிர்கள் தம் கருமவினைக்கு ஏற்ப அமையும் நிலை, ஆன்மாமுத்தி நிலையைப் பெறும்வழி, அறிவினால் இறைவனை அடைதல், புலன்களின் வழியன்றி ஞானவழியில் இறைவனைக் காணுதல், பரிபக்குவ நிலை எய்தும்போது இறைவன் ஆட்கொள்ளவருதல், எல்லாம் இறைவன் செயல் என எண்ணும் நிலை, இறைவன் திருவருள் கூடினால் இன்பம் கூடும், இறை இன்பம் பெற்ற ஆன்மா திரும்பவும் இறை இன்பத்தையே நாடும் என்றவாறு இதில் உள்ள தத்துவ விசாரணைகள் அமைகின்றன.
மெய்கண்டார் தன்னிடம் உபதேசம் பெற்ற மாணவர்களுக்கு சிவஞான உபதேசத்தை அருளினார். இவரிடம் 46 மாணவர்கள் கல்வி கற்றதாக சைவசந்தானா சாரியார் புராண சங்கிரகம் குறிப்பிடுகின்றது. அவர்களுள் தலைமை மாணாக்கனாக அருணந்தி சிவாச்சாரியார் அவர்கள் விளங்கினார். சந்தான குரவர் வரிசையில் இவருக்கு அடுத்த நிலையில் இவர் விளங்கினார். மேலும் பதின்நான்கு மெய்கண்ட சாத்திர நூல்களுள் ஒன்றாகிய உண்மை நெறி விளக்கம் என்ற நூலின் ஆசிரியரான மனவாசம் கடந்தார் மற்றும் சிற்றம்பல நாடிகள் போன்றோரும் இவரிடம் கல்வி கற்ற சீடர்களாவர்.
மெய்கண்டதேவர் சைவசித்தாந்த தத்துவங்களை நிறுவியதோடு மாத்திரமல்லாது, வேதாந்தம் முதலிய தத்துவங்களின் தத்துவ விசாரணைகளில் நின்று சைவ மெய்யியலைக் காப்பாற்றினார். உபநிடத மகாவாக்கியங்களுக்கு சங்கரர் அத்வைத வேதாந்தக் கருத்துக்களை முன்வைத்தது போன்று மெய்கண்டதேவர் முன்வைத்த தத்துவக் கருத்துக்கள் "சுத்தாத்துவித சைவ சித்தாந்தம்" என அழைக்கப்படுகின்றது.
மெய்கண்டார் எவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது அறியப் படுமாறில்லை. ஆயினும் அவர் திருவெண்ணை நல்லூரிலேயே முத்தியடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இவரது சமாதிக் கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கிளை மடமாகிய திருவெண்ணை நல்லூரில் காணப்படுகின்றது.
நன்றி
0 Comments