தென்னிந்திய தமிழ் இலக்கிய வரலாறு - ஐரோப்பியர் காலம் - HISTORY OF SOUTH INDIAN TAMIL LITERATURE - EUROPEAN PERIOD



தென்னிந்திய தமிழ் இலக்கிய வரலாறு 

ஐரோப்பியர் காலம்


தென்னிந்திய தமிழ் இலக்கிய வரலாறு - ஐரோப்பியர் காலம் - HISTORY OF SOUTH INDIAN TAMIL LITERATURE - EUROPEAN PERIOD

தமிழ் உரைநடை வரலாற்றில் கி.பி.பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள காலப்பகுதி ஐரோப்பியர் காலம் எனப்படும். கிறித்தவ சமயப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் ஐரோப்பியர் தமிழ்நாட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் தமிழ் மொழிக்கும், தமிழ் உரைநடைக்கும் செய்த தொண்டே மிகப் பெரியதாகும். சமயம் பரப்பும் நோக்கில் தமிழைப் படித்த ஐரோப்பியர், அதன் இனிமையில் மயங்கினர். ஆய்வு நோக்கில் மொழியை வளப்படுத்தினர். தமிழ் எழுத்து வடிவில் இருந்த குறைபாடுகளை நீக்கினர். பண்டிதரே படித்தறிய முடிந்த உரையாசிரியர்களின் உரைநடையை மாற்றினர். சிறுசிறு வாக்கியங்களில் மக்கள் பேசும் மொழியில் ஐரோப்பியர் எழுத ஆரம்பித்தனர். அதன் பயனாகத் தமிழுக்கு ஒரு புதிய உரைநடை கிடைத்தது.


அச்சு இயந்திரமும் அச்சேறிய நூல்களும்

தனிநாயகம் அடிகளார் 1958 சூலையில் வெளியான Tamil Culture என்னும் ஆங்கிலம் முத்திங்கள் இதழில் தமிழில் அச்சேறிய முதல் நூல் என்னும் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அதில் போர்த்துக்கீசிலிருந்து வந்த குருக்களே தமிழ் நூல்களை அச்சிடுவதற்குத் தமிழ் அச்சுப் பொறிகளை உருவாக்கிப் பதினாறாம் நூற்றாண்டிலே தமிழ் நூல்களை அச்சிட்டனர் என்கிறார். அவர் லிஸ்பன் நகரில் 1554 இல் அச்சிடப்பட்ட கார்த்தில்யா என்ற நூலே முதல் தமிழ் நூல் என்பார். இந்நூலில் தமிழ் எழுத்துகள் கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும், செபங்களும் அடங்கியுள்ளன.

தமிழில் இரண்டாவதாக அச்சேறிய நூல் தம்பிரான் வணக்கம். இது 1577 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் நாள் கேரளாவிலுள்ள கொல்லம் என்னும் இடத்தில் அச்சிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பக்கங்கள் உள்ளன. 1579 இல் கொச்சியில் அச்சிடப்பெற்ற கிரிசித்தியானி வணக்கம் என்னும் நூல் மூன்றாவதாக அச்சிடப்பட்ட நூலாகும். இது மொத்தம் 120 பக்கங்களைக் கொண்டது.


தத்துவ போதக சுவாமிகள்

தமிழில் புதிய உரைநடையைத் தொடங்கி வைத்தவராகத் தத்துவ போதக சுவாமிகளைக் குறிப்பிடுவார் வி.செல்வநாயகம் அவர்கள். இத்தாலியிலிருந்து கி.பி.1606ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார். மதுரையில் தங்கிக் கிறித்தவ சமயப் பிரச்சாரம் செய்தார். தமிழ், வடமொழி இரண்டிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். சுமார் ஐம்பது ஆண்டுகள் அவர் தமிழகத்தில் வாழ்ந்திருந்தார்.

தத்துவக் கண்ணாடி, இயேசு நாதர் சரித்திரம், ஞானதீபிகை, பிரபஞ்ச விநோத வித்தியாசம் முதலிய பல நூல்களைத் தத்துவ போதகர் எழுதினார். இவை சமயப் பிரச்சார நூல்களாக அமைந்தாலும், ஒரு புதிய உரைநடைப் போக்கைக் கொண்டதாக அமைந்தன.

பேச்சு வழக்கும், வடமொழியும் கலந்த தத்துவ போதகரின் உரைநடைக்குச் சான்றாக
''ஆதி மனுஷனையும் அவனுக்குத் துணையாகக் கற்பித்தருளின ஸ்திரீயையும் பரிபூரண செல்வங்களைப் பொழிந்திருக்கிறவொரு ஸ்தலத்திலே நிறுத்தி.....'' எனவரும் பகுதியைச் சொல்லலாம். வடசொல் கலந்து பேசும் உயர் வகுப்பினர் பாதிப்பில், கிறித்துவப் பாதிரியார்களும் வடசொல் கலப்புடன் உரைநடை எழுதினர்.


வீரமாமுனிவர்

பெஸ்கி அடிகளார் எனப்படும் வீரமாமுனிவர் இத்தாலியைச் சேர்ந்தவர். கி.பி.1710ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். அவரது வாழ்க்கை முறையே ‘தமிழர்’ போல மாறியது. சுப்ரதீபக் கவிராயர் போன்ற பெரும் புலவர்களுக்கு உதவி செய்து, தமிழ் கற்றார்.

தமிழின் முதல் அகராதியான சதுரகராதி 1732இல் வீரமாமுனிவரால் தொகுத்து வெளியிடப்பட்டது. தமிழ் இலத்தீன் அகராதியையும் படைத்தார்.
தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தேம்பாவணி, கித்தேரியம்மாள் அம்மானை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களை வெளியிட்டார். லூத்தேர் இனத்தார் இயல்பு, வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம் போன்ற உரைநடை நூல்களையும், பரமார்த்த குருகதை போன்ற கதைகளையும் எழுதினார்.

வீரமாமுனிவர் உரைநடை இரண்டு வகையாக அமைகின்றது. அவை,

01. பேச்சு வழக்குத் தமிழில் எழுதப்பட்டது. இந்நடை வேதியர் ஒழுக்கம் நூலில் அமைகின்றது.

02. உரையாசிரியர்கள் கையாண்ட நடையைப் பின்பற்றி எழுதப்பட்டது. இதற்குச் சான்றாகத் தொன்னூல் விளக்கம் நடை அமைகின்றது.

இருவகை உரைநடையில் எழுதினாலும் பெரும்பாலும் ஒரு புதிய உரைநடை வகையினை வீரமாமுனிவர் முதன் முதலில் கையாளத் தொடங்கினார். சான்றாகப் பரமார்த்த குருகதை உரைநடையைக் காட்டலாம்.
''அவிவேக பூரண குருவென்று ஒரு ஆசாரியரிருந்தார். அவர் ஏவிய ஊழியம் செய்யும்படி மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற பெயர் பெற்ற சீஷர்கள் ஐந்துபேர் அவர் மடத்திலிருந்தார்கள்.''


சீகன்பால்கு

ஜெர்மனியரான சீகன்பால்கு 1706இல் இந்தியா வந்தார். தரங்கம்பாடியில் 13 ஆண்டுகள் வாழ்ந்தார். தன் பணிகள் பற்றிய விபரங்களை நாட்குறிப்பாக எழுதி வைத்தார். ஐரோப்பியர்கள் தமிழ் மொழியின் சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்ள வித்திட்ட முதல் வித்தகர் சீகன்பால்கு அவர்கள்.


1716இல் தமிழ் மொழி இலக்கணம் என்னும் நூலை சீகன்பால்கு எழுதினார். 128 பக்கங்களையுடைய இந்நூல், தமிழ் மொழியைப் பிற மொழியினர் கற்க உதவியது. 1708இல் தமிழில் உரைநடை, செய்யுள் அகராதியை எழுதி வெளியிட்டார். மருத்துவக் குறிப்புகள், சீதோஷ்ண நிலை எனப் பல அறிவியல் குறிப்புகளையும் எழுதி வைத்தார்.

சீகன்பால்குவின் உரைநடை, கல்வெட்டுகளில் அமைந்த உரைநடையைப் பின்பற்றியதாக இருந்தது. இலக்கண நடை தழுவாது மக்கள் பேச்சில் உள்ள மொழியை அப்படியே பின்பற்றினார். மிக நீண்ட வாக்கியங்களை அமைத்து எழுதினார். சான்றாக, ''இதற்கிடையிலெ,  அவரதானெ இந்தப் பிறையாசங்களை யுந, தமது நித்திய சுவசெஷத்தையும் பொதுவாகவும், பிரதானமாகத் தமிடபடுத்தப்பட்ட புதிய ஏற்பாட்டின் இந்தப் பொத்தகங்களையும், அதுகளுனக்குச் சீவியத்துக்கான.....'' என அமைகின்றது.


பெப்ரிஷியஸ்

ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் அருட்பணி புரிந்தவர் பெப்ரிஷியஸ். 1740இல் ஜெர்மானியிலிருந்து இந்தியா வந்தார். பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.

பெப்ரிஷியஸ் இடையறாது எழுதி வந்தார். அவரது பணிகள் இவ்வாறு அமைகின்றன.

01. விவிலிய மொழிபெயர்ப்புப் பணி
02. அகராதிப் பணி
03.ஞானப்பாட்டுகள் (தொகுப்பு மற்றும் மொழி பெயர்ப்பு)
04. இலக்கணப் பணி
05. அருளுரைகள்

பெப்ரிஷியஸ் செய்த மொழிபெயர்ப்பு, நுணுக்கமாகச் செய்யப்பட்ட சொல்வழி மொழிபெயர்ப்பு ஆகும். நடையை விடக் கருத்தே முதன்மையாகக் கொண்டார். ‘இவரது நடையைப் பின்வந்தவர்களும் பின்பற்றியதால், கிறித்தவத் தமிழ் நடை ஒன்று உருவானது. இதற்குக் காரணம் பெப்ரிஷியசே.’ என்பார் சபாபதி குலேந்திரன் என்ற ஆய்வாளர். 
பெப்ரிஷியஸின் அருளுரைகள் என்ற நூலின் உரைநடை மிகச் சிறப்பாக அமைந்து உள்ளது என்பார் தி.தயானந்தன் பிரான்சிஸ்.

தமிழ் வசன நடையில் வெளிவந்த மிகப் பெரிய நூல் பெப்ரிஷியஸ் எழுதிய பழைய ஏற்பாட்டு மொழி பெயர்ப்பு என்பதாகும். பெப்ரிஷியஸ் தமது புதிய ஏற்பாட்டுக்கு எழுதிய முகவுரை, அவரது உரைநடைத் தன்மைக்குச் சான்றாக அமைகிறது. ''கர்த்தராகிய பராபரன் மகா இரக்கமாய்ச் சர்வ மனுஷ சாதிக்கும் பரமண்டலத்திலிருந்து அனுப்பின தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்கிற உலக இரட்சகருடைய சுவிசேஷத்தை விளங்கப் பண்ணும் இந்தப் புஸ்தகத்தை வாசிக்கிற யாவருக்கம் பாக்கியம்.....''


ஹென்றி பவர் 

ஒரு யூரேசியர் ஆவார். இவர் சீவகசிந்தாமணி ‘நாமகள் இலம்பகத்தை’ உரையுடன் வெளியிட்டார். வேத அகராதி உட்பட ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது நடை ஆங்கிலக் கலப்புடன் அமைந்தது. ஐரோப்பிய மொழிகளின் வாக்கிய அமைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்.


ஜி. யு போப்.

1830 இல் இங்கிலாந்தில் பிறந்த போப் எனும் பாதிரியார் தம் பத்தொன்பதாம் வயதில் தமிழகம் வந்தார். நீண்டநாள் தமிழ்த் தொண்டாற்றினார்; திருக்குறள், நாலடியார், சிவஞான போதம். திருவாசகம் முதலியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்; தமிழ் இலக்கணத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் வெளியிட்டார். தம் கல்லறையில் ஒரு தமிழ் மாணவன், என்று பொறிக்க வேண்டும் என விரும்பினார். இஃது அவருக்குத் தமிழின் பாலிருந்த பற்றினை விளக்குகிறது. இவர் சமுதாயப் பணியும் ஆற்றினார்.


டாக்டர் கால்டுவெல்.

1814 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்: சமயத் தொண்டாற்றத் தமிழகம் வந்தார்; திருநெல்வேலி மாவட்டக்தில் தங்கி, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகட்குமேல் தமிழ்ப்பணி ஆற்றினார். பல மேனாட்டு மொழிகளையும், தென்னக மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்து பெரும் புலமை பெற்றார். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் பெருநூலை இயற்றித் தமிழுக்குச் சிறந்த பெருமையைத் தேடித் தந்தார். 'திராவிட மொழிகளின் தனித் தன்மைகளைச் சுட்டி, அவற்றின் பெருமையை உலகறியச் செய்தார். 

உலக மொழிகள் பலவற்றிலும் தமிழிச் சொற்கள் சென்று கலந்ததை எடுத்துக் காட்டினார். 'திருநெல்வேலி சரித்திரம்' என்னும் அரிய வரலாற்று நூலையும் எழுதினார். இவ்விரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் அமைந்தவை. தாமரைத் தடாகம், நற்கருணைத்தியான மாலை முதலிய பல நூல்களை உரைநடையில் எழுதித் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குத் துணை செய்தார். தமிழுக்காகவும், கிறித்தவ சமயத்துக்காகவும் உழைத்த இவ் அறிஞர் பெருந்தகை தம் இறுதிக் காலத்தில் தாயகம் செல்ல மறுத்துக் கோடைக்கானலிலேயே உயிரிழத்தமையை நினைக்குங்கால், நெஞ்சம் நெகிழாமல் இருக்க முடியவில்லை.


முக்கூடற்பள்ளு.

நாயக்கர் காலத்து எழுந்த இலக்கிய வகைகளுள் பள்ளு என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஃது உழவர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்க வல்லது. பள்ளு இலக்கியங்களுள் முக்கூடற்பள்ளு தலைசிறந்ததாகும். இதன் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

கடவுள் வணக்கம், பள்ளன் பெருமை, அவள் மனைவியர் உறவுகள், நாட்டு வளம், மழைக்குறி, ஆற்று வெள்ளம் முதலிய செய்திகள் இடம் பெறுகின்றன. பண்ணையாரிடம் பள்ளன் பேசும் உரையாடல்களும், அவன் தன் மனைவியரிடையே நிகழ்த்தும் ஊடற்செய்திகளும் நகைச்சுவை நல்குவன. நெல் வகைகளும், எருது வகைகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன.


மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

இவர் திருவாவடுதுறை ஆதீனப் புலவராய் விளங்கினார். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர், தியாகராச செட்டியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலியோர் இவர் மரணவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர்.
முருகன் பிள்ளைத் தமிழ், அகிலாண்ட நாயகி மாலை, அம்பல வாணதேசிகர் கலம்பகம், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் முதலியன இவர் நூல்களுள் குறிப்பிடத்தக்கன. இவர் பாடல்கள் கம்பர் பாடல்களைப் போலக் கருத்துச் செறிவும், சொல்லின்பமும் வாய்ந்தவை. அதனால் இவர் நவீன கம்பர் எனப் போற்றப்படுகிறார். சேக்கிழார் பிள்ளைத் தமிழில் பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என்று சேக்கிழாரை இவர் பாராட்டுகிறார். உலா, கோவை, தூது முதலாய சிற்றிலக்கியங்களையும் இவர் மிகுதியாகப் படைத்துள்ளார். இவர் 1815 முதல் 1867 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.


இராமலிங்க அடிகள்

தாயுமானவருக்குப் பிறகு சமரச சன்மார்க்க நெறிக்குப் புத்துணர்வூட்டிய பெருந்தகை இவரே. இறைவனை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து இவர் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. அவை அனைத்தும் திருவருட்பா எனும் பெயரில் வெளிவந்துள்ளன. அப்பாடல்கள் கற்பார் நெஞ்சினை உருக்கவல்லன. திருவாசகத்தில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. குவலயமெல்லாம் கொல்லாமையைக் கடைப்பிடித்தொழுக வேண்டும் என்பது இவரது உள்ளக் கிடக்கையாகும்.
'மனுமுறை கண்ட வாசகம்’ எனும் உரைநடை நூலையும், பல கட்டுரைகளையும் இவர் இயற்றியுள்ளார்.

'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் உலைந்தே
வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுஉளம் துடித்தேன்;
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்"

உலக உயிர்களின் துன்பத்தைக் கண்டு இவர் ஏங்கும் ஏக்கத்தை இப்பாடல் புலப்படுத்துகிறது. இவர் 1823 முதல் 1874 வரை நிலவுலகின்கண் வாழ்ந்தார்.


ஆறுமுக நாவலர்

இவர் யாழ்பாணத்துத் தமிழ்ப் புலவராவார். சைவத்தை நிலை நிறுத்தவும், தமிழை வளர்க்கவும் அரும் பணியாற்றினார். பள்ளிப் பிள்ளைகளுக்காகப் பாட நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். சென்னையில் அச்சுக் கூடம் ஒன்றினை நிறுவிச் சைவ சமய நூல்களையும், இலக்கண நூல்களையும் பதிப்பித்தார். ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதலிய சிறு நூல்களுக்கு உரை எழுதினார். திரு விளையாடற் புராண வசனம், பெரிய புராண வசனம், இலக்கணச் சுருக்கம், இலக்கண வினா விடை, சைவ வினா விடை முதலியன இவர் இயற்றியனவே. இவர் இயற்றிய நூல்களுள் நன்னூல் காண்டிகை உரை போற்றத்தக்க தாகும். இவர் 1822 முதல் 1889 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.


டாக்டர் உ. வே. சாமிநாதய்யர்

டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவராவார். இவர் பல்வேறு இடங்களுக்கெல்லாம் சென்று அலைந்து ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து அவற்றை அச்சுக்குக் கொண்டு வந்தார். இவர் அப்பணியை அன்று செய்து கொடுக்கவில்லை யென்றால் எத்துனையோ நூல்கள் செல்லுக்கும், பிற அழிவுக்கும் இரையாகி அழிந்திருக்கும். அதனால், இவர் தொண்டு அளப்பரிய தொன்றாகும். பதிப்புத் துறையில் இவருக்கிணையாவார் ஒருவரும் இலர். சிறந்த முன்னுரை, அரிய குறிப்புரை, சொற்பொருள், அகர வரிசை விளக்கம், நூலின்கண் இடம் பெற்ற அரசர், விலங்கு, புள், மரம் முதலியவற்றின் பெயர் முதலானவை இவர் பதிப்பின் முதற்கண் இடம் பெறும். பத்துப்பாட்டு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, பெருங்கதை முதலியன இவர் பதிப்பித்த நூல்களுள் குறிப்பிடத் தக்கனவாகும், பல சிற்றிலக்கிய நூல்களையும் இவர் பதிப்பித்துள்ளார். ‘என் வரலாறு’ எனும் தலைப்பில் தம் வரலாற்றை அழகாக வெளியிட்டுள்ளார்; நினைவு மஞ்சரி, புதியதும் பழையதும், சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும் முதலாய பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். இவர் 1885 முதல் 1942 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.


பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். வடமொழியிலும் தமிழிலும் புலமை மிக்கவர்; சுக்கிர நீதியும், மண்ணியல் சிறு தேரும் இவர் மொழி பெயர்த்த நூல்களாகும். உரை நடைக் கோவை, சுலோசனை, உதயணன் கதை முதலியவை இவர் இயற்றிய உரைநடை நூல்களாகும். மண்ணியல் சிறுதேர் என்பது கவிதைகள் இடையிட்ட உரைநடை நாடக நூலாகும். இஃது இவர் படைப்புகளுள் மிகச் சிறந்ததாகும். இவர் 1891 முதல் 1963 வரை வாழ்ந்தார்.


வையாபுரிப்பிள்ளை

இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ச் சுடர் மணிகள், சொற்கலை விருந்து முதலாய நூல்களை எழுதினார். பேரகராதியாகிய லெக்சிகனை உருவாக்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு சங்க இலக்கியம் முழுவதையும் இவர் தொகுப்பித்துள்ளார். இலக்கிய விளக்கம் முதலிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதி வெளியிட்டார். புதுமை இலக்கியத்தில் இவருக்கிருந்த ஆர்வம் காரணமாக ‘இராஜி' எனும் நாவலையும் ‘சிறுகதை மஞ்சரி’ என்னும் கதைத் தொகுப்பு நூலையும் இயற்றினார். 1891 முதல் வரை வாழ்ந்தார்.


தமிழறிஞர்கள் பிறர்

தமிழுக்குப் பணியாற்றிய அறிஞர்கள் பலர். நாவலர் சோமசுந்தர பாரதியார், ரா.பி. சேதுப்பிள்ளை, மு. வரதராசனார் முதலியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவார். இவர்கள் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஆக்கமளித்துள்ளனர்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் 

நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்களுள் மாரிவாயில் என்னும் செய்யுள் இலக்கியமும் “தசரதன் குறையும் கைகேயியின் நிறையும்” எனும் உரைநடை நூலும் குறிப்பிடத்தக்கவை. இவர் 1880 முதல் 1959 வரை வாழ்ந்தார்.

ரா. பி. சேதுப்பிள்ளை 

இவர் சொற்பொழிவு கேட்பாருள்ளத்தைக் கவரவல்லது. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், கந்த புராணம் முதலியன இவர் சொற்பொழிவுகளில் இடம்பெறும் நூல்களாகும். இவர் பேச்சும் எழுத்தும் எதுகை மோனைத் தொடை மிக்கன. இன்று பலர் இவரைப் பின்பற்றி வருகின்றனர். இவர் 1896 முதல் 1961வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

மறைமலையடிகள் 

இவர் நாகப்பட்டினத்தையடுத்த சிற்றூரொன்றில் பிறந்தார்; இயற்பெயரான வேதாசலம் என்பதன் தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது. தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழியிலும் இவர் புலமை மிக்கவர். தமிழ் நடையில் ஒரு மறுமலர்ச்சியை இவர் உண்டாக்கினார். மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், முல்லைப் பாட்டாராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி எனும் ஆராய்ச்சி நூல்களையும், திருவொற்றியூர் மும்மணிக் கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் எனும் செய்யுள் நூல்களையும் குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள் எனும் நாவல்களையும், சைவ சமய தத்துவ விளக்க நூல்களையும், சிறுவருக்கான நூல்கள் சிலவற்றையும், அம்பிகாபதி, அமராவதி எனும் நாடக நூலையும், தொலைவில் உணர்தல், நூற்றாண்டு வாழ்வது எப்படி முதலிய அறிவியல் நூல்களையும் யாத்துள்ளார்; ஞான சாகரம் எனும் இதழ் ஒன்றனையும் வெளியிட்டு வந்தார். தமிழ் மொழிக்கு இவர் செய்த தொண்டு அளப்பரியது. 1876 முதல் 1950 வரை இவர் வாழ்ந்தார்.

திரு. வி. கல்யாணசுந்தரனார் 

திருவாரூர் விருதாச்சலனார் மகன் கலியாணசுந்தர்ன் என்பது இவர் பெயரின் விளக்கமாகும். இன்று அப்பெயர் திரு. வி. க. என வழங்குகிறது. இவர் விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு நாடு சுதந்தரம் பெறப் பலவாறு முயன்றார்; தொழிலாளர் நலத்தில் பங்கு கொண்டு பல அரிய சாதனைகளைப் புரிந்தார்; எழுத்திலும், பேச்சிலும் புதுமையைப் புகுத்தி மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தார். இவர் பேச்சுக்கள் ‘தமிழ்த் தென்றல்’ எனும் நூலாக வெளிவந்துள்ளன.

பெண்ணின் பெருமை, காந்தியடிகளும் மனித வாழ்க்கையும், முருகன் அல்லது அழகு, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், இந்தியாவும் விடுதலையும் தமிழ்ச்சோலை, உள்ளொளி, சைவத் திறவு முதலிய நூல்களை எழுதி உரைநடை வளர்ச்சிக்கு இவர் புத்துயிருட்டினார்; முருகன் அருள் வேட்டல், இருளில் ஒளி, படுக்கைப் பிதற்றல் முதலிய பல செய்யுள் நூல்களையும் இயற்றினார்; தேசபக்தன், நவசக்தி எனும் இதழ்களையும் வெளியிட்டார்.

டாக்டர் மு. வரதராசனார் 

டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் பணியாற்றியுள்ளார். பழமையை விளக்கியும், புதுமையை வரவேற்றும் கற்றவரையும், மற்றவரையும் தம்பால் ஈர்த்தார். இவரெழுதிய திருக்குறள் தெளிவுரை மிக அதிக அளவில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மொழியியல், திறனாய்வு, நாவல், கட்டுரை முதலாகப் பல துறைகளிலும் நூல்களை எழுதித் தமிழ் இலக்கியத்தை இவர் வளமாக்கியுள்ளார். மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். இவர் தோற்றம் 25.04.1913 மறைவு 10.10.1974.

டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் 

தமிழ் ஆராய்ச்சித் துறைக்கு வழிகாட்டிய பேரறிரஞர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். மொழி வரலாறு பற்றிய கட்டுரைத் தொகுப்பு இவர் வெளியீடுகளுள் மிகச் சிறந்ததாகும். ‘கானல் வரி' என்னும் ஆராய்ச்சி நூல் சிலப்பதிகாரத்தின் சீர்மையைக் காட்டும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறைப் பேராசிரியராகவும்: மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும், பணியாற்றித் தமிழுக்கும் கல்வித்துறைக்கும் பெருந் தொண்டாற்றியுள்ளார். இவரைப் பல்கலைச் செல்வர் எனப் பாராட்டுவர்.

டாக்டர் வ. சுப மாணிக்கம் 

‘வள்ளுவம்’ என்னும் குறள் விளக்க நூலும் ‘தமிழ்க் காதல்’ என்னும் ஆராய்ச்சி நூலும் இவரது ஆராய்ச்சித் திறனைப் புலப்படுத்துவனவரகும். மேலும், நெல்லிக்கனி, மனைவியின் உரிமை, உப்பங்கழி முதலாய பல நாடக நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராய்ப் பணியாற்றிய இவர், மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராய் விளங்கினார். சங்க இலக்கிய ஆய்வுகளில் இவருக்குத் தனி இடம் உண்டு.


ஐரோப்பியர் காலத்தில் உரைநடை இலக்கியங்கள் வளர்ச்சியடைந்தமைக்கான காரணங்கள்.

தென்னிந்திய தமிழிலக்கிய வரலாற்றில் உரைநடை இலக்கிய வளர்ச்சி சங்கமருவிய காலம் தொட்டு நடைமுறையில் இருந்தாலும், ஐரோப்பியர் காலத்தில் பெருமளவு உரைநடை இலக்கியங்களின் தோற்றத்தை அவதானிக்கூடியதாக உள்ளது.

ஆங்கிலக்கல்வியின் அறிமுகம்.

ஐரோப்பியர் காலத்தில் ஆங்கிலமொழிப் பாடசாலைகள் பல பகுதிகளில் அமைக்கப்பட்டன. இதனால் ஆங்கிலக் கல்வி படிப்படியாக விருத்தியடையத் தொடங்கியதுடன், ஐரோப்பியர் தம் நாட்டுப் பாடத்திட்டங்களை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தனர். பொருளாதாரம், அரசியல், அறிவியல் சார்ந்த பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இப்பாடப்புத்தகங்கள் யாவும்
உரைநடை கையாளப்பட்டே படைக்கப்பட்டன. ஆங்கிலக் கல்வியைக் கற்ற மத்தியதர வர்க்கத்தின் தோற்றம் மேலைத்தேய இலக்கியங்களைப் படித்து அவ்விலக்கிய வடிவங்களை தமிழ் மொழியில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பையும் ஆக்கிக் கொடுத்தது. இதனால் நாவல், சிறுகதை, விமர்சனம் போன்ற உரைநடை இலக்கியங்கள் தமிழில் தோற்றம் பெற்றதைக் காண முடிகின்றது.

அச்சியந்திரங்களின் வருகை. 

தமிழ் மொழியில் உரைநடை இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டமைக்கு முக்கிய காரணமாக அச்சியந்திரங்களின் அறிமுகம் விளங்குகின்றது. ஐரோப்பியரால் தமிழ் நாட்டில் தரங்கம்பாடி, அம்பலக்காடு ஆகிய இடங்களில் அச்சியந்திர சாலைகள் நிறுவப்பட்டன. அச்சியந்திர அச்சுரிமை தனியாருக்கும் உரிமையாக்கப்பட்டது. இதனால் பெருமளவு அச்சுப்பதிப்புக்கள் இடம்பெற்றன. செய்யுள் இலக்கியங்களை விட உரைநடை இலக்கியங்களே அச்சியந்திரங்களின் உபயோகத்திற்கு சாலப் பொருத்தமாக அமைந்தன. இதன் பொருட்டு அச்சியந்திரம் பிறப்பித்த சிசுவே உரைநடை இலக்கியங்கள்" எனும் கூற்று பிரபலமாக விளங்கியது. இக்கூற்று உரைநடை இலக்கிய வளர்ச்சியை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

பத்திரிகைகளின் தோற்றம். 

அச்சியந்திரத்தின் வருகையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நவீன உரைநடை இலக்கிய அறிமுகத்தோடு பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவும் வெளியிடப்பட்டன. ஆங்கிலேய அரசு தமது அரசியல் கொள்கைகளையும், ஆட்சிச் செயற்பாடுகளையும் பொதுமக்களுக்கு விபரித்துக் கூறுவதற்காக பத்திரிகைகளை ஊடகமாகப் பயன்படுத்தினர். பத்திர்கைகளில் உரைநடையை பயன்படுத்தி அரசியல் الأ செய்திகள், பல ஆக்கங்கள் 6161600 வெளிவந்தன. இந்நிலை உரைநடை வளர்ச்சிக்குக் குறித்த வகையில் பங்களிப்புச் செய்வதாக அமைந்தன.

சமயப் பிரச்சாரப் போட்டி. 

இந்து, கிறிஸ்தவ மதங்களுக்கு இடையே ஏற்பட்ட சமயப்பிரச்சார போட்டி பல இலக்கியங்களின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது. இந்து சமயத்தின் குறைபாடுகளை எடுத்து விளக்கி கிறிஸ்தவ சமயத்தவர்களால் கண்டன நூல்கள் வெளியிடப்பட்டதுடன், அதனை எதிர்த்து இந்து சமயத்தவர் பல கண்டன நூல்களைப் படைப்பதையும் காண முடிகின்றது. இவ்வாறாக ஒவ்வொரு மதத்தவரும் மற்றைய மதத்தவரைப் பற்றி பழித்துரைத்த விடயங்கள் உரைநடை இலக்கிய வளர்ச்சியில் கண்டன நூல்களின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தன. இலக்கியங்கள், இலக்கண நூல்கள் என்பன ஆக்கப்படும் போது எழுந்த விமர்சனம் சார்ந்த கண்டன நூல்களும் உரைநடை இலக்கிய வளர்ச்சிக்கு தீனி போடுவதாய் அமைந்தன.

பாடப்புத்தகங்களின் அறிமுகம். 

ஆங்கிலக்கல்வியின் அறிமுகமும், மத்திய தர வர்க்கத்தின் தோற்றமும் கல்வியை மையமாகக் கொண்டு நிகழ்ந்தன. பிரித்தானியாவில் ஏற்பட்ட கைத்தொழிற்புரட்சி. பிரான்சில் ஏற்பட்ட புரட்சி என்பன புதிய கல்விச் சிந்தனைகளை தமிழ்நாட்டு பாடசாலைகளில் கற்கின்ற பாடங்களாக திட்டமிட்டு அறிமுகம் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தியது. இதனால் அறிவியல், சமூகவியல், வரலாறு,சட்டம் சார்ந்த விடயங்கள் பாடத்திட்டங்களிலே சேரக்கப்பட்டிருந்தன. இதன்மூலம் உரைநடை இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டமையை காண முடிகின்றது.

கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு.

கிறித்தவப் பெருமக்கள் சிறப்பாகப் பாதிரிமார்கள தமிழ் மொழியின் பெருமையினையும், இலக்கிய இலக்கணச் சிறப்புகளையும் உலகறியச் செய்தனர். தமிழில் இக்கால வளர்ச்சிக்குக் கடந்த முந்நூறு ஆண்டுகளாகக் கிறித்துவப் பெருமக்கள் ஆறறிய தொண்டே முக்கிய காரணமெனின் அது மிகையாகாது. வீரமாமுனிவரும், ஜி. யூ. போப்பும், டாக்டர் கால்டு வெல்லும் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர்.


ஐரோப்பியர் காலத்தில் எழுந்த சமயச்சார்பான செய்யுள் இலக்கியங்களை வகைப்படுத்துக.

தமிழ் பல்சமயங்களுக்கு பொதுவான ஊடக மொழியாகத் திகழ்கின்றது. சங்ககாலத்தில் இருந்து இந்துசமயம், சங்கமருவிய காலத்தில் அவைதீக மதங்களான சமணம், பௌத்தம், என்பனவும், நாயக்கர் காலத்தின் இறுதிப்பகுதியில் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயக்கருத்துக்களும் தமிழ்மொழியில் பரவின. ஐரோப்பியர் காலத்தில் தமிழ்மொழியில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயம் சார்ந்த பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன.


இந்து சமயம் சார்பான இலக்கியங்கள்

தாயுமான சுவாமிகள் - வேதாந்த சித்தாந்த சமரசம், கவிச்சுவை உணர்ச்சிப்பெருக்கு

கோபாலக்கிருஸ்ணப் பாரதியார் - நந்தனார் சரித்திரக் கீர்த்தனை.

சிவஞானமுனிவர் - காஞ்சி புராணம், அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ், திருத்தணிகை புராணம், திருவனைக்கா புராணம், கச்சியானந்த ருத்ரேசர் வண்டுவிடுதூது

அருணாச்சலக்கவிராயர் - இராம நாடகக் கீர்த்தனை, முக்கூடற்பள்ளு.

மீனாட்சி சுந்தரம்பிள்ளை - குசேலபாக்கியானம், முருகன் பிள்ளைத் தமிழ், அகிலாண்ட நாயகி மாலை, அம்பல வாணதேசிகர் கலம்பகம், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், தலபுராணங்கள் (பதினாறு), பிள்ளைத்தமிழ் (பத்து), அந்தாதிகள் (பதினொன்று), மாலை, கோவை முதலியன.

திரிகூடராசப்பக் கவிராயர் - குற்றாலக் குறவஞ்சி

இஸ்லாமிய சமயம் சார்பான இலக்கியங்கள்

உமறுப்புலவர் - சீறாப்புராணம், முதுமொழிமாலை.

வண்ணக்களஞ்சியப் புலவர் - முகையதீன் புராணம்.

மதாறுசாகிபு புலவர் - மிதுறுசாநா.

அலியார் புலவர் - இபுனு ஆண்டான் படைப்பு, சிறாவண்ணம், நாகையந்தாதி, புலவராற்றுப்படை.

குணங்குடிமஸ்தான் - சாகிபு பாடல்கள்.

கிறிஸ்தவ சமயம் சார்ந்த இலக்கியங்கள்

வீரமாமுனிவர் தேம்பாவணி, திருக்காவலூர்க்கலம்பகம்,
கித்தேரியாம்மாள் அம்மானை, அடைக்கல நாயகி வெண்பா, அன்னையழுங்கால் அந்தாதி.

H.A.கிருஸ்ணப்பிள்ளை - இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம்.

மாயூரம் வேதநாயகம்பிள்ளை - சர்வசமய சமரசக் கீர்த்தனை.


ஐரோப்பியர் காலத்தில் எழுந்த உரைநடை இலக்கியங்களை வகைப்படுத்துக.

தாண்டவராய முதலியார் - பஞ்ச தந்திரக் கதை.

வீரசாமிச் செட்டியார் - வினோதரசமஞ்சரி.

சூரிய நாராயண சாஸ்திரி - மதிவாணன் கதை.

இராஜமையர் - கமலாம்பாள் சரித்திரம்.

வீரமா முனிவர் - வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குருகதை, ஞானக்கண்ணாடி, வாமன்கதை பேதகமறுத்தல், லூத்தர் இனத்தியல்பு (கண்டன நூல்கள்).

தத்துவ போதக சுவாமிகள் - தத்துவக்கண்ணாடி முதலியன.


நன்றி 

Post a Comment

0 Comments