ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு - ஆங்கிலேயர் காலம் - HISTORY OF EELAM TAMIL LITERATURE - BRITISH PERIOD

 

ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு 

ஆங்கிலேயர் காலம்


ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு - ஆங்கிலேயர் காலம் - HISTORY OF EELAM TAMIL LITERATURE - BRITISH PERIOD

ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் மேனாட்டாராட்சியில் ஆங்கிலேயராட்சியே பெரும் புரட்சி செய்ததென்பதை எவரும் மறுப்பதற்கில்லை. பிரித்தானியர் ஆட்சியும் கத்தோலிக்க மதமும் ஈழத்தில் சமூகம், அரசியல், பொருளாதாரம் என்ற கட்டமைப்புக்களில் பாரிய தாக்கத்தினை உண்டுபண்ண, அதன்விளைவாக தமிழ் இலக்கியமும் நவீனமயவாக்கத்துக்குள் படிப்படியாக உள்வாங்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டென்ற இவ் இலக்கியப் பயில் நெறியானது விரிந்து பரந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு, மூன்று தசாப்தங்களினையும் தன்னகத்தே கொண்டு, பல புதுமைகளைச் செய்து தமிழிலக்கியத்தில் மாற்றங்களினை உண்டுபண்ணியதுடன் பிற்காலத்தில் ‘நவீனத்துவம்’ என்ற செல்நெறியில் தன்னையும் இணைத்துப் புதுமை படைக்க வழிகோலியது.

“தமிழ் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியில், 1835 - 1929 க் காலகட்டமே சிக்கல் மையப்பட்ட காலமென்று கொள்ளப்படத் தக்கதாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை விளங்கிக் கொள்வதற்கும் அதனைத் தமிழர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கும், மேனாட்டு அணுகுமுறைகளையும் கைக்கொண்டு தொழிற்பட்ட ‘உருவாக்க காலம்’ என்ற வகையில், இக்கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றெழுது நெறிகள், தமிழிலே இப்பாடத்தின் அணுகுமுறையில் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.”

எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கூறுவது இவ்விடத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும். இவ்வகையில் 19 ஆம் நூற்றாண்டானது ஈழத்து இலக்கியச் செல்நெறியில் ஓர் மாறுங்காலப் பிரிவாக நின்று பிற்கால இலக்கியங்களுக்கு வழிகாட்டிய வகையிலும் அவற்றுக்கான அத்திபாரமாக இருந்த நிலையிலும் ஈழத்து இலக்கிய வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்கின்றது.

ஆங்கிலேய நேரடித் தொடர்பானது தமிழ்ச் சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப பின்வரும் மூன்று வழிகளில் துணைபுரிந்தது.

1. தமிழ்ச் சமூகத்தின் தனித்துவம்
2. தமிழர்களை ஒருங்கிணைத்தல்
3. தமிழ்ச் சமூக ஒருங்கமைப்பு

என்ற நிலையில் பாரிய மாற்றங்களினை உண்டுபண்ணியது. அதுவரைகாலமும் ஈழத்தறிஞர் பலர் தமிழகத்துடன் சிற்சில தொடர்புகளைக் கொண்டிருப்பினும் ‘தமிழர்’ என்ற பரந்துபட்ட நிலையில் ‘தமிழ்த்தேசியம்’ ஒருங்கிணைக்கப்பட்ட நிலையினை நாம் ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களின் ஈழத்துதமிழக பணிகளிலிருந்து அறிய முடிகின்றது. இதற்குக் களம் அமைத்த 19ஆம் நூற்றாண்டானது ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிறப்புப்பெறுகின்றது.


ஆங்கிலேயர் காலத்தில் எழுந்த இலக்கியங்களை வகைப்படுத்துக.

19 ஆம் நூற்றாண்டின் மாறுபட்ட சூழலும் அச்சியந்திர விருத்தியின் பன்முகப்பாடும் ஆங்கிலக்கல்வி விருத்தியும் திண்ணைக்கல்வி முறைகளினைப் பாடசாலைக் கல்வியாக மாற்றியமைத்தன. நாடு முழுவதையும் ஒரே அரசு ஆட்சி புரிந்தமையானது புதுமையான கருத்துக்களுக்கு முதன்மையளிப்பதாக இருந்தது. இதனால் இலக்கியங்களிலும் புதுமைக்கான தேடல் இடம்பெறத் தொடங்கியது. அவ்வாறு படைக்கப்பட்ட இலக்கியங்கள் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டதாக விளங்கக் காணலாம்.

செய்யுள் இலக்கியம்

சமயச் சார்புடையன - இளவசப் புராணம், றகுலமலைக் குறவஞ்சி, முகைதீன் புராணம்

மக்கள் சார்புடையன - கனகி புராணம், கோட்டுப் புராணம், தால புராணம்.

நவீனத்தினூடே பழமை பேணுவன - தத்தைவிடு தூது, சுவதேச கும்மி, தனிப் பாடல்கள் சில.

உரைநடை இலக்கியம்

பழைய உரைநடை காரர் நடையில் அமைந்த நூல்கள்.
நாவல்கள்
சமயச் சார்புடைய நூல்கள்
பாடநூல்கள்
நாடகங்கள்
பத்திரிகைகள்

பன்முக வளர்ச்சி

பத்திரிகைகள்
பதிப்பு முயற்சிகள்
அகராதி முயற்சிகள்
மொழி பெயர்ப்பு
இலக்கண நூல்களின் உருவாக்கம்
புலவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதுதல்
அரசியல் சார்பாக எழுதுதல் என நீண்டு செல்லும்


அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும்

கி.பி. 1835ஆம் ஆண்டில் அப்போது மகா தேசாதிபதியாக இருந்த சேர் “சார்ள்ஸ் மெக்காஃவ்” என்பவரினால் ‘அச்சுச்சுதந்திரம்’(2) இந்தியா எங்கணும் வழங்கப்பட்ட பின்னர் ஈழத்திலும் பல அச்சுச்சாலைகள் நிறுவப்பட்டன. இவ்வாறு சுதேசிகளினால் அச்சியந்திர சாலைகள் நிறுவப்பட்ட பின்னர் அச்சுக்கலையின் செயற்பாடும் விரிவடையத் தொடங்கியது. 1849இல் ஆறுமுக நாவலர் அவர்கள் நல்லூரில் அச்சியந்திர சாலையை நிறுவி(3) ஈழத்தவரின் இலக்கியச் சாதனைகள் பலவற்றுக்கு களம் அமைத்துக் கொடுத்தார். அச்சியந்திர விருத்தியானது அதிசயிக்கத்தக்க வகையில் ஈழத்தில் பெரும் இலக்கியப் புரட்சியை ஏற்படுத்தியது.

பத்திரிகைத் துறைவளர்ச்சி
உரைநடை இலக்கியங்களின் பெருக்கம்
பதிப்பு முயற்சி
புத்தாக்க முயற்சி
மொழிபெயர்ப்பும் ஆய்வுமுயற்சியும்

போன்ற பல துறைகளும் பாரியளவில் வளர்சிசியடைந்தன.



பத்திரிகைத்துறையின் வளர்ச்சி

19 ஆம் நூற்டறாண்டில் ஆங்கிலேயரின் வருகையுடன் சுதேசிகளுக்கான அச்சியந்திரப் பயன்பாட்டு வசதிகள் உண்டாகின. இவ் அச்சுச் சுதந்திரமானது பத்திரகை, சஞ்சிகை போன்றவற்றின் வெளியீட்டு முயற்சியில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியது.

அக்கால ஊடகத்துறையில் அரசியலும், சமயமும், சமூகமும் பெற்றளவு செல்வாக்கினை அறிவியல் பெறவில்லை என்பது வருந்தப்பட வேண்டிய விடயமே. அமெரிக்க மிசநெறிமார் ஆரம்பித்த உதயதாரகை 1841 இல் வெளியான முதல் பத்திரிகை ஆகும். ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் தான் ஆறுமுகநாவலரின் துணையுடன் உதயதாரகை புதுப்பொலிவு பெறத் தொடங்கியது. உதயதாரகையின் பின்னர் பல பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. 1841 - 1900 ஆம் ஆண்டு வரை வெளிவந்த சில குறிப்பிடத்தக்க பத்திரிகைகள், சஞ்சிகைகளினை பின்வருமாறு நோக்கலாம்,


உதயதாரகை - கிறிஸ்தவபிரச்சாரம் - 1841
உரைகல்லு - கத்தோலிக்கம் - 1845
மாணவன் - கிறிஸ்தவம் - 1896

உதயாதித்தன் - இந்துசமய பிரச்சாரம் - 1841
திராவிடகோகிலம் - சைவம் - 1900
சத்தியவேத பாதுகாவலன் - சைவம் 1901
சைவசம்போதினி - சைவம் - 1881
விஞ்ஞானவர்த்தனி - சைவம் - 1882
உதயபானு - சைவம் 1880

இலங்கை நேசன் - பொது - 1848
வித்தியா தர்ப்பணம் - பொது -1853
பிறீமன் - பொது - 1862
இலங்காபிமானி - சமயம், பொது - 1863
தின வர்த்தமானி - செய்தி,அறிவியல் - 1855
புதினாதிபதி - செய்தி - 1870
யாழ்ப்பாணச் செய்தி - அரசியல், சமயம், அறிவு - 1871

பாலியர் நேசன் - சிறுவர் இதழ் - 1859

முஸ்லீம்நேசன் - முஸ்லீம் முன்னேற்றம் - 1882
இஸ்லாம்மித்திரன் - இஸ்லாம் - 1893
முஸ்லீம் பாதுகாவலன் - முஸ்லீம் முன்னேற்றம் - 1900

அறிவியல் சார் அம்சங்கள் குறைவாக இருப்பினும், பொதுவாக இக்காலப்பகுதியில் எழுந்த பத்திரிகைகளில் ஒருவிதமான பன்முகப்பாட்டைக் காணமுடிகின்றமை விசேடமானது. எளிமையான உரைநடை, புதமையாக்கம், உரைநடையில் நெகிழ்ச்சி, வசன அமைப்பில் மாற்றம் போன்ற தன்மைகளினையும் இப்பத்திரிகைகள் வெளிக்கொணர்ந்தமையினால் பிற்கால உரைஇலக்கிய வளர்ச்சிக்கும் வழிசமைத்த சாதனமாக விளங்குகின்றன.


உரைநடை இலக்கியங்களின் பெருக்கம்

19 ஆம் நூற்றாண்டில் சிறப்புடன் வளர்ந்த துறைகளுள் ஒன்றாக உரைநடை இலக்கியமும் அமைகின்றது. செய்யுள் இலக்கியத்தின் இடத்தினை வசனநடை கைப்பற்றியமையே இக்கால இலக்கியத்தின் வெற்றியாகும். அரசநிர்வாகம், மதப்பிரச்சாரம், நவீனகல்விமுறை, பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் போன்ற செயற்பாடுகள் காரணமாக வசன இலக்கியங்கள் பல எழுந்தன.

அச்சியந்திர விருத்தி, ஆங்கிலக்கல்வி விருத்தி, மொழிபெயர்ப்பு, துண்டுப்பிரசுரப் பயன்பாடு, பாடப்புத்தக அறிமுகம் போன்றனவும் உரைநடை இலக்கிய வளர்ச்சிக்கான காரணங்களாக அமைந்தன. சுதேசிகள் புதிய இலக்கியங்களினை எளிமையுடன் படைக்க முற்பட்டமையும் பண்டைய ஏட்டுச் சுவடிகள் நூலுருப் பெற்றமையும் எனப் பல்வேறு புறக் காரணிகளும் ஈழத்தில் வசனநடை வளர்ச்சிக்கான உந்துசக்கியாகச் செயற்பட்டன.

செய்யுள்களை உரைநடையில் எழுதுதல், சமயச்சார்பான உரைநடை ஆக்கங்கள், நாவல், நாடகம், தனித்தமிழ் இலக்கியங்களின் தோற்றம், புலவர்களையும் பழைய நூல்களையும் ஆய்வுக்குட்படுத்தியமை எனப்பல புத்தாக்க முயற்சியில் ஈடுபட்டமையாலும் உரைநடை இலக்கியம் புதுமையான மெருகுடன் செல்லத் தலைப்பட்டது.

ஆறுமுக நாலலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, அறிஞர் சித்திலெப்பை முதலியோரின் பங்களிப்பு இத்துறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
‘வசனநடை கைவந்த வல்லாளர்’ என நாவலர் போற்றப் பட்டமையும், சி.வை.தாமோதரம்பிள்ளையின் கலித்தொகைப் பதிப்புரையும் இவற்றுக்குத் தக்க சான்றுகளாம்.


பதிப்பு முயற்சி

19 ஆம் நூற்றாண்டில் தான் ஈழத்தில் மிகச்சிறந்த பதிப்பாசிரியர்கள் தோன்றினர். பண்டைத்தமிழ் நூல்கள் பல அழிந்தொழிந்து போகாமல், பதிப்பு முயற்சியில் தமிழகத்துக்கு வழிகாட்டும் வகையில் ஈழத்தறிஞர்களின் பணிகள் அமைந்தன. ‘நாவலர் பதிப்பு’ சுத்தத் தமிழில் அமைந்து காணப்பட்டதனால் அவரது பதிப்புக்கு ‘மவுசு’ கூடுதலாக இருந்தது.

நாவலரின் பின்னர் சி.வை.தா, ச.சரவணமுத்துப்பிள்ளை போன்ற பலர் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். சி.வை.தா. வின் பதிப்பு முயற்சிக்குச் சிறப்பான ஓர் இடமுண்டு. தமிழகத்தில் முன்னின்றுழைத்த உ.வே. சாமிநாதஐயருக்கு வழிகாட்டியாக இருந்த பெருமையும் இவரைச் சாரும்.

தொல்காப்பியம், சேனாவரையம் (1868), வீரசோழியம் மூலமும் பெருந்தேவனார் உரையும்(1881), இறையனார் அகப்பொருள் மூலமும் நக்கீரர் உரையும்(1883), தணிகைப்புராணம்(1883), தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியமும் பேராசிரியமும்(1885), கலித்தொகைப் பதிப்பு முதலியவற்றை இனிதே பதிப்பித்த பதிப்புப் பேராசான் சி.வை.தா. அவர்கள், நிறைய ஏட்டுப் பிரதிகளினையும் தேடித் தொகுத்துப் பதிப்பித்தும் வெளியிட்டார். ஏட்டுப்பிரதிகளைத் தந்த தமிழன்பர்கள் பற்றிய குறிப்புக்களையும், அவர்களுக்கான நன்றியறிதலையும் தமது பதிப்புரைகளில் பொறித்து வைத்தார்.

தமிழின் தொன்மை தேடும் முயற்சிக்கு சி.வை.தா. பல ஆதாரங்களினை முன்வைத்துள்ளார். ‘திரமிள’ என்ற ஆரியச்சொல் ‘தமிழ்’ எனத் திரிந்ததென்றும், ‘சங்கதமொழி’யே தமிழின் தாய்மொழி என்று மொழிப் பயிற்சியுடைய மேலைத்தேச அறிஞர்கள் தெரிவித்த காலத்தில்: ‘எல்லீஸ்’( கு. று. நுடடளை – 1819 ) போன்றோர், ‘இந்தோஐரோ மொழியிலிருந்து திராவிட மொழிகள் வேறுபட்டுச் செல்கின்றன’ என்ற கருத்தை முன்வைத்தனர். ‘தமிழ்மொழியிலே திராவிடத் தாய்மொழியின் பண்டைய கூறுகள் பல காப்பாற்றப்பட்டிருக்கின்றன.’ என்று ‘கால்டுவெல்’ தனது ஒப்பிலக்கண நூலில் கூறியுள்ளார். கால்டுவெல்லின் ஆதாரங்களினை எடுத்து சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள் ‘தனக்கிணையில்லாப் பாசை தமிழ்’ என்று நிறுவிக் காட்டினார்.

இவ்வாறு ஈழத்தில் மரபுவழி, நவீன நிறுவனவழி என இருவழிக் கல்வி மூலம் புகழ்பெற்ற சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பதிப்பு முயற்சியினைத் தொடர்ந்து 20 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதிவரை ஈழத்தில் பழந்தமிழ் நூல்கள் பல ஆர்வமுள்ள தமிழறிஞர் பலரால் பதிப்பிக்கப்பட்டன.



புத்தாக்க முயற்சிகள்

19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் புதுமையான இலக்கியங்கள் பல தோன்றியுள்ளன. குறிப்பாக: பாடநூல்கள், அகராதி முயற்சிகள், நவீன நாடகங்கள், அறிவியல்சார் அம்சங்;களை உள்ளடக்கிய நூல்கள் போன்றன இவற்றுள் அடங்கும். இக்காலத்தில் கல்விப்பணிகள் நிறுவன மயப்படுத்தப் பட்டன. பாடசாலைகளுக்கென ‘பாடத்திட்ட வரைபு’ அறிமுகமானது. பாடநூல்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. பாரம்பரியமாக நிலவிவந்த மொழி, இலக்கண, சமயக் கல்வியுடன் இணைந்த நிலையில் நவீன அறிவியல் சார் கல்வியும் போதிக்கப்பட்டது. அறநூல்களுடன் வசன நூல்களும் பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்பட்டன. 

ஆறுமுக நாவலர் திருத்தமாகவும் செம்மையாகவும் வயதுக்கேற்ற முறையிலும் பாலர் பாடங்களை வெளியிட்டு கல்வியியற் சிந்தனையில் சிறந்த தரத்தினைப்பெற வழிசெய்தார். 1849இல் அமெரிக்க மிசநெறிமார் ‘பாலகணிதம்’ என்ற நூலை வெளியிட்டனர்.

அச்சியந்திர விருத்தியானது ‘அகராதி’களின் புதுமையான தோற்றத்துக்கு வழிபுரிந்தது. தமிழ்-தமிழ், தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என மூன்று விதமான அகராதிகள் தோன்றின.
“மானிப்பாய் அகராதி, தமிழ்ச் சொல்லகராதி, தமிழ்ப் பேரகராதி, இலக்கியச் சொல்லகராதி, சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழகராதி” முதலிய தமிழ் அகராதிகளும், உவிஞ்சிலோ, பேர்சிவல் பாதிரிகள் பதிப்பித்த ஆங்கிலம்-தமிழ் அகராதிகளும் இக்காலப் பிரிவில் தோன்றின.

விசுவநாத பிள்ளை அவர்களின் தமிழ்-ஆங்கில அகராதி 1870 இல் வெளிவந்ததைத் தொடர்ந்து கதிரவேற்பிள்ளை, சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை முதலியோர் இணைந்து ‘கதிரவேற்பிள்ளை அகராதி’யை வெளியிட்டனர். பின்னர் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் அவர்கள் ‘இலக்கியச் சொல்லகராதி’ ஒன்றினை வெளியிட்டார்.

பேர்சிவல் பாதிரியாரின் தொகுப்பு நூலான ‘பழமொழி அகராதி’யும் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளையின் ‘அபிதானகோசம்’ என்ற கலைக் களஞ்சியமும் வல்வை ச.வைத்திலிங்கம் பிள்ளையின் ‘சிந்தாமணி நிகண்டு’ம் இசை நாடகங்களும், விலாசங்களும் 19 ஆம் நூற்றாண்டை அலங்கரித்தன. நாவலரின் தந்தையான ‘கந்தப்பிள்ளை’ பல நாடக நூல்களை எழுதினார் எனினும் அவற்றில் ஒன்றுதானும் இன்று கிடைத்தில. ஊசோன் பாலந்தை கதை, மோகனாங்கி, அழகவல்லி, சுந்தரன் செய்த தந்திரம் போன்றனவும் இக்காலக் கதைநூல்களே. அமெரிக்க நாட்டவரான ‘டாக்டர்.கிறீன்’ அவர்களின் பங்களிப்பு ஈழத்து மருத்துவத் துறையில் காத்திரமான ஓர் இடத்தினைப் பெறுகின்றது. 1850இல்
‘ர்ரஅயn யுயெவழஅலa’ என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்த இவர் மானிப்பாயில் தன் வாழ்நாள் முழுவதும் இருந்து வைத்தியப் பணி புரிந்தார். ‘மருத்துவ அறிவியலின் தந்தை’ என ஈழத்தவரால் புகழப்பட்ட இவர் ‘உடற்கூற்று உளநலத் துறை’ என்ற நூலை மொழிபெயர்த்துத் தந்தார். இவருடைய வழியைப் பின்பற்றி தரமான நூல்களைத் தந்த பேராசிரியர்.வைத்திய கலாநிதி.அ.சின்னத்தம்பி அவர்களும் இவ்விடத்தில் பாராட்டப்பட வேண்டியவரே.


மொழிபெயர்ப்பும் ஆய்வு முயற்சியும்

19 ஆம் நூற்றாண்டினை ஈழத்துக்கே உரியது. என்று கூறும் வகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் சிறப்பான முறையில் நடைபெற்றன. தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு அரிச்சந்திர நாடகம், யாழ்ப்பாண வைபவமாலை, சிவஞானபோதம், சிவப்பிரகாசம், திருக்கோவையார், பகவத்கீதை, தாயுமானவர் பாடல்கள் போன்ற பல நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டன. முத்துக்குமார சுவாமி, பிறிற்றோ போன்றோர் மொழிபெயர்ப்புத் துறையில் முன்னின்றுழைத்தனர்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு நாவலரால் ‘பைபிள்’ மொழிபெயர்க்கப் பட்டமை மகத்தான பணியாகும். அதன்பின் டாக்டர் கிறீன், கறோல் விசுவநாதபிள்ளை, தி;.த.சரவணமுத்துப்பிள்ளை போன்றோர் பல நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்குப் புதுமெருகூட்டினர்.

இவ்வாறு 19 ஆம் நூற்றாண்டிலேயே ஆய்வுப் பணிகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள் இடம் பெற்றிருப்பினும், இருபதாம் நூற்றாண்டில் பேராசான் க.கைலாசபதியின் (1933 - 1982) வரவுடன்தான் அவற்றில் பன்முக வளர்ச்சியினை அவதானிக்க முடிகின்றதெனலாம்.


ஆறுமுக நாவலர் புரிந்த தமிழ் இலக்கியப் பணிகள் 

யாழ்ப்பாண நல்லூரில் கந்தர்-சிவகாமி தம்பதியரின் மகனாக ‘ஆறுமுகம்’ என்ற பிள்ளைத் திருநாமத்துடன் பிறந்து பின்னை நாளில் உலகம் போற்றும் நாவலராகத் திகழ்ந்த பேராளன் உதித்த பொன் நாள் 1822.12.18 ஆகும். இவர் சைவமும் தமிழும் இரண்டு கண்கள் எனக் கொண்டு வாழ்ந்தவர். மிகச் சிறந்த உரை ஆசான், உரைநடை வல்லாளர், பதிப்பாசிரியர், நல்லாசான், நாவன்மைப் பேச்சாளர், சைவ வாழ்வு வாழ்ந்த தண்ணளியான்.

நாவலர் அவர்கள் எழுதியும் பிரசுரித்தும் வெளியிட்ட நூல்கள் 73, தாமே எழுதிய நூல்கள் உட்பட உரைநடை நூல்கள் எனப்பட்டன 22, இவற்றுள் உரைநடை ஆற்றலுக்கு உன்னத எடுத்துக் காட்டாய் கொள்ளத் தக்கன 10, அவை 1ஆம், 2ஆம், ; பால பாடங்கள், பெரிய புராண வசனம், சைவ சூசன பரிகாரம், யாழ்ப்பாணச் சமயநிலை, திருவிளையாடற் புராண வசனம், நல்லூர் கந்தசுவாமி கோயில், பெரிய புராண சூசனம், போலியருட்பா மறுப்பு, நாவலர் பிரபந்தத் திரட்டு ஆகியனவாகும்.

நாவலர் தமிழ் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகப் பாடசாலைகள் அமைத்தும் அருந் தொண்டாற்றியுள்ளார். திண்ணைப் பள்ளிக்கூடங்கள் அமைத்து இலவசக் கல்வி சொல்லிக் கொடுத்துள்ளார். அச்சியந்திர சாலைகளை அமைத்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவருடைய இலக்கியப் பணிகள் காலச் சூழலோடும் சமயப் பணிகளோடும் இணைந்தவை. தற்கால உரைநடையின் தந்தையாக விளங்கும் இவர் ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப் பாராட்டப் படுகின்றார். இலக்கிய உரை நடையை வளர்த்து, இலக்கியப் பணி புரிந்தவர்.

இவருடைய பதிப்புத் துறை சார்ந்த பணிகள் மிகவும் பலம் வாய்ந்தவை. இவர் பரிசோதித்துப் பதிப்பித்த நூல்கள் இவருடைய இலக்கியப் பணியின் குறிகாட்டியாய் அமைவன. சூடாமணி நிகண்டு, நன்னூல் விருத்தியுரை, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, சிதம்பர மும்மணிக் கோவை, கந்தபுராணம், பெரியபுராணம், திருச்சிற்றம்பலக்கோவையுரை, முதலான 35க்கு மேற்பட்ட நூல்கள் இவர் பரிசோதித்துப் பதிப்பித்தவை ஆகும். இவர் உரை எழுதி வெளியிட்ட நூல்களும் இவருடைய இலக்கியப் பணியின் சிறப்புக்குச் சான்று. திருமுருகாற்றுப் படை, கோயிற்புராணம், ஆத்திசூடி, நல்வழி, நன்னெறி, கொன்றை வேந்தன் போன்றனவற்றை சான்றாகக் காட்டலாம்.

சொற்பொழிவுகள் மூலமும் இலக்கியப் பணியாற்றியவர். நாவன்மைப் பேச்சாளராகத் திகழ்ந்தவர். இதனால் இவருக்குத் “திருவாவடுதுறை ஆதீனம்”; “நாவலர்” என்ற சிறப்புப் பட்டம் சூட்டியது. இவருடைய சொற்பொழிவு முயற்சி பிற்காலத்தில பலரைத் தூண்டியது. விவாதங்கள் வழக்காடு மன்றங்கள் போன்றனவற்றின் அடிப்படையாகியது.

இவருடைய உரை நூல்கள் அக்காலத்தில் கொடுமுடியாய் விளங்கின. பெரியபுராண வசனம், கந்தபுராண வசனம், பால பாடங்கள், சைவ வினா விடைகள், கட்டுரைகள் போன்றன குறிப்பிடத் தக்கவை. சமய உணர்ச்சியூட்டக் கூடிய நூல்களை எழுத்துப்பிழை, வசனப்பிழை, இல்லாது இலகு உரைநடையில் எழுதி வெளியிட்டும் அச்சிலும் ஏட்டுப் பிரதிகளில் உள்ள நூல்களைப் பரிசோதித்தும் வெளியிட்டார்.

பொருள்த் தெளிவை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்ததனால் சொற்களை வலிந்து கொள்ளாது சொல்லும் பொருளும் திரியாதபடி பொருள் இனிது விளங்க உரைகளை எழுதினார். இவருடைய வசனங்கள் ஒன்றுடனொன்று தொடர்புற்று தேவையற்ற சொற்களும் அடைகளும் இல்லாமல் தர்க்க ரீதியாக அமைந்திருந்தன.

தர்க்க முறையிலும் சிலேடையிலும் எழுதும் வன்மை அவருக்கு இயல்பாகவே இருந்தது. தமது கொள்கைகளை நிலைநாட்டும் போதும் பிறர் கோட்பாட்டை மறுக்கும் போதும் மிடுக்கு நடையில் தர்க்க ரீதியாக வசனங்கள் அமையும். வெறும் அடைமொழிகளைச் சேராதும் அளபெடைகளை கூட்டாதும் அவர் உரைநடைகளைக் கையாண்ட பொழுதும் வசனங்கள் ஓசை நயம் பொருந்தியனவாய் படிக்கும் போது தட்டுத் தடையின்றிச் செல்லும் எதுகை மோனைச் சொற்களை வழங்கியும் ஏகாரத்தினைப் பலவிடங்களில் நயம்படச் சேர்த்தும் சாரியைகளை இன்பம் பயக்கப் புகுத்தியும் உரைநடைகளை அமைத்தார்.

நாவலர் இன்றியமையாத இடங்களில் வடசொற்களைத் தமிழ் மரபுக்கு ஏற்பக் கையாண்டுள்ளார். ஆனால் அவ் வடசொற்களை யாரும் இலகுவில் புரிந்து கொள்ள முடிகின்றமை சிறப்பானது. அத்துடன் அக்கால வழக்கிலிருந்த கச்சேரி, கமிசனர், துரை போன்ற மேலை நாட்டுச் சொற்களையும் தெளிவு கருதிப் பயன்படுத்தியிருந்தார்.

குறியீட்டு இலக்கணத்தை பொருள்த் தெளிவும் விரைவும் கருதி அதனை முழுவதும் தழுவிக் கொண்டார். உறுப்பிசைக்குறி, தொடரிசைக் குறி, விளக்கக் குறி, முற்றுப் புள்ளி, வினாவிசைக் குறி, மெய்ப்பாட்டிசைக் குறி, அனுதாபக் குறி முதலியவற்றைப் பயன்படுத்தினார். நாவலர் கற்றோருக்கும் மற்றோருக்கும் விளங்கும் வகையில் தமிழ் உரைநடையை எழுதினார். அவர் எழுதிய பெரியபுராண சூசனம் பண்டிதர்களுக்கு எழுதப் பட்டது.

நாவலரைப் போல முன்னும் பின்னும் பல்துறை சார் தமிழ் வித்துவான்கள் இல்லை எனலாம். 1879 இல் நாவலர் இறந்த போது தமிழ் உலகு கதறிக் கண்ணீர் வடித்து மெய்யுருகியது. அந்த இரங்கற் கூட்டத்தில் சி.வை. தாமோதரம்பிள்ளை எழுதி வாசித்த “நல்லை நகர் நாவலர் பிறந்திடரேல் சொல்லு தமிழ் எங்கே? சுருதி எங்கே?” என்ற வரிகள் நாவலரின் புகழை என்றும் எடுத்துரைப்பன.


ஆங்கிலேயர் காலத்தில் ஈழத்தில் எழுந்த இலக்கியங்களின் பண்புகள்.

19 ஆம் நூற்றாண்டானது ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஓர் திருப்பு மையமாக, பொற்காலமாக விளங்குகின்றமையால் தனித்துவமான முறையில் அக்காலம் ஈழத்துக்கே உரியதாக விளங்குகின்றது. அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களினை நுணுகி ஆராய்வோர் அவ்விலக்கியங்களினூடே அக்காலத்தில் நிலவிய அரசியல், பொருளாதார, சமய, பண்பாட்டம்சங்களினை தெளிவாக அறிந்து கொள்வர்.

முன்னைய காலத்து இலக்கியங்களில் இடம் பிடித்த சமயமே ஆங்கிலேயர் காலத்திலும் இலக்கியப் பொருளாக நின்று தனியாட்சி செலுத்தியது என்று கூறின் மிகையாகா. மேலைத்தேசத்துச் சமயம் இலங்கையிலும் காலூன்ற முற்பட்டதன் விளைவாக ஏற்பட்ட விழிப்புணர்வு இலக்கிய நெறியின் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

கதிர்காமப்புராணம், திருகோணாச்சலப் புராணம், நல்லூர் கந்தசுவாமி கிள்ளைவிடு தூது, வல்வைக் கலித்துறை, கதிரேசர் பதிகம், சுன்னாகம் ஐயனாரஞ்சல், நல்லை வெண்பா, போன்ற தலச் சார்புடைய நூல்களும் எண்ணற்ற சிறு புராணங்களும் மறைசைக் கலம்பகம், யேசுநாதர் பிள்ளைத்தமிழ், அஞ்ஞானக் கும்மி, பஞ்ச பட்சித் தூது, போன்ற நூல்களும் மரபிலக்கிய வடிவங்களுக்கு மீளுருக் கொடுத்துப் பாடியனவாகவுள்ளன.

சமயத்தினை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்தவ மதக் கண்டனம், சிவதூசன கண்டனம் போன்றனவும் பல்கிப்பெருகின. தமது வித்துவச் செருக்கினைப் புலப்படுத்தச் சிலர் பாடல்களைப் பாடினர் போன்றும் தெரிகின்றது.

சமயக்கல்வி விருத்தியும், மொழிபெயர்ப்புக் கலையின் தோற்றமும் இக்காலத்தின் இலக்கியங்களில் பெரும் தாக்கத்தினை உண்டுபண்ணியிருந்தன. இக்காலப் புலவர்கள் உலகியல் சார்புடைய நூல்களை எழுதியபோது தம்மை ஆதரித்த புரவலரை அல்லது பிரபுக்களைப் பாடிய போதிலும் ஆங்கிலேயரைப் போற்றிப் பாடியதாக ஆதாரங்கள் இல்லை.

அகராதி முயற்சிகள், நிகண்டு இலக்கியங்களின் தோற்றம் என்பனவும் ஆய்வு முயற்சிகளும் மொழிபெயர்ப்பு முயற்சியும் ஈழத்து இலக்கியம் 19 ஆம் நூற்றாண்டின் பின் புதிய மெருகுடன் வளரத் துணைபுரிந்தன. இதற்கு அச்சியந்திர ஆங்கிலக் கல்வி விருத்திகள் காரணமாக அமைந்தன.

அச்சியந்திர விருத்தியின் காரணமாக பதிப்புத்துறை துரிதமாக முன்னேறி வளர, மறுபுறம் பத்திரிகை தோன்றி புதிய இலக்கியங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. சோதிடம், எண்கணிதம், வானசாஸ்திரம், தருக்கம், வைத்தியம், போன்ற துறைகள் ஆங்கிலேயர் காலத்தில் வளர அவை சார்புடைய பத்திரிகைகள், சஞ்சிகைகள், போன்றனவும் காரணமாக அமைந்தன.

அக்காலத்தில் பெரும் புரட்சி செய்த நூல்களுள் ஒன்றாக ‘கனகிபுராணம்’ விளங்குகின்றது. சமூகச் சீரழிவைச் சாடுவதே இப்புராணத்தின் நோக்கமாகும். வண்ணார் பண்ணையைச் சேர்ந்த நட்டுவச் சுப்பையரினால் ‘தாசி’யான கனகியைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்ட இப்புராணத்தில் பிரபுக்கள், அறிஞர்கள் முதலியோரின் பெயர் சுட்டி அவர்களின் சீர்கேடு சொல்லப்பட்டிருக்கின்றது.

"…நன்னியர் உறியறுத்தார் நடுவிலார் பூண்டுகொண்டார்
சின்னியோ டொன்றி விட்டார் செங்கை ஒன்றிலாச் சொத்தி
முன்னுளோர் கதையைக் கேட்டு முத்தரும் அகஞ் சலித்தார்
நன்னிய கனகி பாடும் நடுராசி ஆச்சுதன்றே
நட்டுவனொருவனாலே நாடகசாலை வந்தாள்
செட்டியில் ஒருவன் பட்டான் சேணியர் இருவர் பட்டார்
மட்டுவில் குருக்கள் பட்டார் கொக்குவிற் சுப்பன் பட்டான்
மட்டிகள் இவரைப்போலப் பட்டவர் பலபோர் அறிந்தோ"

என அங்கதமாக எழுதப்பட்ட வரிகளின் மூலம் கனகிபுராணத்தில் பிரபுக்களின் ஒழுக்கச் சீர்கேடுகள் சுட்டப்பட்டன. சிலேடை, யமகம், திரிபு, மடக்கு போன்ற சொல்லணிகளும் அக்காலத்தில் எழுந்த தனிப் பாடல்களில் ஆங்காங்கே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.

ஒருவிதமான மனத்திருப்தியை நோக்கமாகக் கொண்டும் அக்காலப் புலவர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர் போலத் தெரிகின்றது. மொழிபெயர்ப்பு நூல்களினைத் தொடர்ந்து தமிழில் ஆங்கிலம், வடமொழி போன்றவற்றின் கலப்பு அதிகரிக்க, மறுபுறத்தில் மேலைத்தேச மொழிக் கலப்பானது தமிழில் கலைச் சொற்களின் வருகைக்கும் காரணமாக அமைந்து விட்டது.


தமிழறிஞர் சிலர் பற்றி…

புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை

காலம் - 1899 - 1978

பின்னணி - மட்டக்களப்பைச் சேர்ந்தவர்

திறமை - மரபுவழித் தமிழ் அறிஞர், பல பட்டங்கள் பெற்றவர், சிறந்த கவிஞர், சிறந்த பேச்சாளரும், ஆசிரிய கலாசாலை அதிபரும், வசனகர்த்தாவும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார், உரைநடை நூல்கள் பலவற்றை எழுதினார்.

சிறப்பு - வெண்பாவிற் புலவர்மணி எனப் பாராட்டுப் பெற்றார்.

நூல்கள் - பகவத்கீதை வெண்பா, புலவர்மணி கவிதைகள், மண்டூர்ப் பதிகம், விபுலாநந்தர் மீட்சிப்பத்து, உள்ளதும் நல்லதும்.

யாழ்ப்பாண பதுறுத்தீன் புலவர்

காலம் - 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி

பின்னணி - இஸ்லாமிய அறிஞர்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.

திறமை - சிறந்த தமிழ் மொழியறிஞர், புலமையாளர்.

நூல் - முகைதீன் புராணம் - இது 2 பாகம், 74 படலம், 2983 திருவிருத்தங்களுடன் இயற்கை வர்ணனை, அணிநலன் மிகுந்து விளங்குகின்றது.

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

காலம் - இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி.

பின்னணி - மட்டுவிலில் பிறந்தவர்.

திறமை - மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்றுப் பின் மரபுவழித் தமிழறிஞராக இருந்தார்.

சிறப்பு - கம்பனைப் புகழ்ந்து பல கட்டுரைகள் எழுதினார், அகத்திணைக் கோட்பாட்டுக்கு விளக்கம் தந்தார்.

நூல்கள் - இலக்கியவழி, அத்வைத சிந்தனை, இன்னும்பல நூல்களும் கட்டுரைகளும்.


தனிநாயகம் அடிகள்

காலம் - ஆங்கிலேயர் காலம்

திறமை - தமிழை இனியமொழி, ஆய்வுமொழி, உலகமொழி என நிறுவிக்காட்ட முயன்றார், உலகம் எங்கும் சுற்றிய தமிழ்த் தூதர், சங்க இலக்கிய ஆய்வின் தொடக்க கர்த்தா

சிறப்பு - உலகத் தமிழாராய்ச்சி மையம் நிறுவினார்.

நூல்கள் - ஈழத்து இலக்கியத்தில் இவரது பணி காத்திரமானது. எண்ணற்ற நூல்களினை இயற்றி தூய தமிழில் வெளியிட்டு புரட்சி செய்தார்.

சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர்

பின்னணி - சுன்னாகத்தைச் சேர்ந்தவர், மரபுவழித் தமிழறிஞர்

சிறப்பு - நாவலரின் காவியப் பாடசாலையில் ஆசிரியராக இருந்தார்.

புலமை - இலக்கணம், மொழி, இலக்கியம், வடமொழிப் புலமை பெற்றிருந்தார்.

நூல்கள் - இராமோதந்திரம், மறைசைஅந்தாதியுரை, யாப்பெருங்கலப் பொழிப்புரை, இலக்கண சந்திரிகை, தமிழ்ப்புலவர் சரிதம், யாப்பெருங்கலக் காரிகை (பதிப்பு), சிவதோத்திரத் திரட்டு (பதிப்பு), இலக்கியச் சொல்லகராதி போன்றனவும் தனிப்பாடல்கள் பலவும் இயற்றிய இவர் ‘கதிரவேற்பிள்ளை அகராதி’ இயற்றிய ஆசிரியர் குழாமில் ஒருவராக இருந்தார்.

நன்றி 

Post a Comment

0 Comments