தொடர்பாடல் - COMMUNICATION


தொடர்பாடல் 


தொடர்பாடல் - COMMUNICATION

தொடர்பாடல் என்பது தொடர்பு கொள்ளுதல் ஆகும். அதாவது ஒருவர் இன்னொருவரோடு தொடர்பினை மேற்கொள்வதனைக் குறிக்கும்.

தொடர்பாடல் என்பது செய்திகளைப் பரிமாற்றும் ஒரு செயன்முறையாகும். அதாவது ஒருவரிடமுள்ள தகவலை இன்னொருவருக்கு அல்லது பலருக்குப் பரிமாற்றும் செயற்பாடாகும்.

ஒருவரின் கருத்துகள், சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் என்பவற்றை இன்னொருவருக்கு வாய்மொழியாகவோ, அல்லது வாய்மொழிசாராத உடல்மொழியாகவோ, குறியீடாகவோ அல்லது சைகையாகவோ மற்றும் எழுத்து மூலமாகவோ வெளிப்படுத்தும் செயற்பாடு தொடர்பாடல் ஆகும்.

தொடர்பாடலில் செய்தியை அனுப்புவர் அனுப்புநர் (Sender) என்றும் செய்தியைப் பெறுபவர் பெறுநா (Receiver) என்றும் அழைக்கப்படுவர். வாய்மொழி சார்ந்த பேச்சுத் தொடர்பாடலில் செய்தியை அனுப்புவர் பேசுவோன் (Speaker) என்றும் செய்தியைப் பெறுபவர் கேட்போன் (Listener) என்றும் அழைக்கப்படுவர்.

தொடர்பாடலில் ஆகக்குறைந்தது இருவர் சம்பந்தப்படுவதனால் அது இருவழிதொடர்பாடல் முறையாக அமையும். 


மனிதனும் தொடர்பாடலும் 

மனிதன் ஒரு சமூகப் பிராணி அல்லது தொடர்பாடும் விலங்கு என்று அழைக்கப்படுகின்றான். மனிதன் எப்போதும் குழுக்களாகவே வாழ விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவர்களிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகத் தொடர்பாடல் முறைகள் உருவாகின.

ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்வும் தொடர்பாடலினனால் மற்றவருடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. ஒருவர் தனது கருத்தை. உணர்வை அல்லது அனுபவத்தை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வதற்கும் இன்பமான குடும்ப வாழ்வினை வாழ்வதற்கும். சிறப்பாகத் தமது தொழிலினை மேற்கொள்வதற்கும், சேவைகளைச் செய்வதற்கும் தொடர்பாடல் என்பது அவசியமாகின்றது. இதனால் குழந்தைகள் முதல் வளர்ந்தவர்கள் வரை தொடர்பாடல் பற்றிய அடிப்படை அறிவு அத்தியாவசியமாகின்றது.

நாம் வீட்டிலும் அலுவலகத்திலும் பாடசாலைகளிலும் வியாபார நிறுவனங்களிலும் பயணங்களிலும் எமது தேவைகளை நிறைவேற்றும் சந்தர்ப்பங்களிலும் வழிகாட்டல்களைப் பெறுவதற்காகவும் மற்றவர்களுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக தொடர்பாடலில் இன்று பல வகையான ஊடகங்கள். ஊடக உத்திகள். ஊடகக் காவிகள் என்பவை தொடர்பாடலில் பயன்படுத்தப்படுகின்றன.


பண்டைய தொடர்பாடல் முறைகள்

உலகத்தில் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் தோன்றிய காலத்திலிருந்து தொடர்பாடலும் தோன்றி விட்டன என்று கூறப்படுகின்றன. உயிரினங்கள் தோன்றிய காலத்திருந்து இற்றைவரை அவ்வுயிரினங்கள் தமக்கிடையே கருத்துகளையும் செய்திகளையும் உணர்வுகளையும் தேவைகளையும் பரிமாறிக் கொண்டிருக்கின்றன என்பது நாம் அறியும் உண்மையாகும்.

ஆதிகாலத்தில் சைகைகள், குறியீடுகள். அங்க அசைவுகள், கூக்குரல்கள். ஒலியெழுப்புதல் மூலமாகத் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புறாக்கள், நெருப்பு அல்லது புகை எழுப்புதல், முரசறைதல் போன்றவற்றின் மூலமும் தூதுவர், தூது ஓலை மூலமும் செய்திகள் பரிமாறப்பட்டன. அஞ்சலோட்டம், மரதன் ஓட்டம் வழியாகத் தகவல்கள் தொலைதூரங்களிற்குப் பரிமாறப்பட்டன.


தொடர்பாடலின் முக்கியத்துவம் 

தகவல்கள், கருத்துகள், செய்திகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பரிமாற்றிக் கொள்வதற்கு தொடர்பாடல் அவசியமாகின்றது.

திட்டமிடல். ஒழுங்கமைத்தல், வழிப்படுத்தல், கட்டுப்படுத்தல் ஆகிய முகாமைத்துவச் செயற்பாடுகளை முகாமையாளர்கள் திறம்படச் செய்வதற்கும். தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், முரண்பாடுகளைக் குறைப்பதற்கும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தொடர்பாடல் அவசியமாகின்றது. அத்துடன் பொருட்கள் உற்பத்திகளை விளம்பரம் செய்வதற்கும், அவற்றைச் சந்தைப்படுத்துவதற்கும் தொடர்பாடல் அவசியமாகும்.

நிறுவனம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மற்றவர்களை அறிவுறுத்தவும் வழிநடத்தவும் தொடர்பாடல் அவசியமாகின்றது.

உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு தொடர்பாடல் அவசியமாகும். சிறந்த தொடர்பாடல் மூலம் பரஸ்பர புரிந்துணர்வும், கருத்து மற்றும் உணர்வுப் பரிமாற்றமும் நிகழ்கின்ற அதேவேளை மனித உறவுநிலைகளும் வலுப்படுத்தப்படுகின்றன.

தொடர்பாடல் மூலம் மற்றவரின் எண்ணங்கள், கருத்துகள். தகவல்கள் பரிமாற்றப்படுகின்ற அதேவேளை மற்றவர்களின் கலை கலாசாரப் பண்பாடுகளையும் அவர்களின் தேவைகளையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் உதவுகின்றது.

பொழுதுபோக்கு மற்றும் நேரம் செலவிடலுக்காகவும் தொடர்பாடல் அவசியமாகின்றது.


விளைதிறன் மிக்க தொடர்பாடல் ஒன்றுக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள்

விளைதிறன் மிக்க தொடர்பாடலில் சிறந்த தொடர்பாடல் செயற்பாட்டுப் படிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். அனுப்புநர், செய்தி, ஊடகம், பெறுநர் ஆகியோர் தொடர்புபடுதல் வேண்டும்.

ஒருவர் இன்னொருவருடன் தொடர்பாடலினை மேற்கொள்ளும்போது இடம், காலம், சூழல் அறிந்து அதற்கேற்றவாறு தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்பாடப்படும் விடயம், தகவல் அல்லது செய்தியானது சரியானதாகவும் சுருக்கமானதாகவும் தெளிவானதாகவும் அத்துடன் உண்மையானதாகவும் முழுமையானதாகவும் இருத்தல் வேண்டும். இச்செய்திகள் பெறுநரோடு பகிர்ந்துகொள்ளும் தகவல்களாக அமைவதுடன், அறிவுறுத்துவதாகவும் வழிப்படுத்துவதாகவும் அமைய வேண்டும். 

அனுப்புநர் தொடர்பு கொள்ள வேண்டிய விடபத்தை அல்லது செய்தியைச் சரியாகப் புரிந்து கொண்டு தெளிவான முறையில் வழங்குதல் வேண்டும்.

தொடர்பாடலின் போது பொருத்தமான ஊடகத் தெரிவினை மேற்கொள்ளுதல் வேண்டும். கிரயம் / செலவு, விரைவு, சரியான தன்மை, பெறுபவரின் தன்மை, ஊடகத்தின் சரியான பாவனை முறை, பழுதுகள் இன்மை, செய்தி அனுப்புநருக்குப் பரிச்சயமானதாக ஊடகம் அமைதல்.

மிகச் சிறந்த தொடர்பாடலானது பின்னூட்டலுடன் சேர்ந்ததாகக் காணப்பட வேண்டும். அனுப்பிய செய்தி அனுப்பியவாறு சரியானமுறையில் சென்றுள்ளதா என்பதையும் அனுப்பப்பட்ட தகவல் முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதா, சென்றடைந்துள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

ஒருவர் ஒரு தொடர்பாடல் முறையினைத் தெரிவு செய்யும் போது பெறுநரின் அறிவு, ஆளுமை என்பவற்றின் தன்மைக்கேற்ப தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும். வாசித்து அறிந்து கொள்ளக்கூடிய தன்மையற்ற பெறுநர்களுக்கு எழுத்து மூலமான தொடர்பாடலினைத் தவிர்த்து வாய்மொழி மூலமான தொடர்பாடலினை மேற்கொள்ளுதல் வேண்டும்.

தொடர்பாடலில் பகிரப்படும் / அனுப்பப்படும் தகவலானது பிழையின்றியதாகவும் சுருக்கமானதாகவும், தெளிவானதாகவும், உண்மையானதாகவும் நம்பகத்தன்மையுடையதாகவும் ஏற்புடைமை கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். நடைமுறை வாழ்வில் பொருந்தக் கூடியதாகவும், அறிவுறுத்தக் கூடியதாகவும் வழிகாட்டக் கூடியதாகவும் விளங்க வேண்டும். தகவலானது சிறந்த திட்டமிடலையும் ஒழுங்கமைப்பையும் கொண்டிருத்தல் வேண்டும்.

விளைதிறன்மிக்க தொடர்பாடலை மேற்கொள்வதற்கு தொடர்பாடலில் உள்ள தடைகளை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.


தொடர்பாடல் படிமுறைகள் 

தொடர்பாடல் என்பது இருவழிச் செயற்பாடாக அமைகின்றது. தகவலை அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் இடையிலான செய்திப் பரிமாற்றச் செயற்பாடாக அமைகின்றது.

தொடர்பாடல் செயன்முறையில் / படிமுறையில் தகவலை அனுப்புநர் (பேசுவோர்), பெறுநர் (கேட்போர்) செய்தி (பேசப்படும் பொருள்) ஆகிய விடயங்கள் பிரதானமாகத் தொடர்புபடுகின்றன. இவற்றோடு செய்தி அனுப்பப்படும் ஊடகம் (முறை). செய்தி அனுப்பப்படும் சூழல் என்பனவும் அவசியமாகின்றன.


அனுப்புநர் ⇒ செய்தி ⇒ ஊடகம் ⇒ பெறுநர் ⇒ பின்னூட்டல்

செய்தி அனுப்புபவர் (அனுப்புநர்) -

தொடர்பாடல் பற்றிய அறிவைக் கொண்டிருத்தல். தெரிந்த விடயங்களையும், சரியான மற்றும் உண்மையான விடயங்களையும் பரிமாறுதல், விடயத்துக்கு நேரடியாக வருதல், நேர்முறையில் செய்திகளை அனுப்புதல். பொருத்தமான விதத்தில் குறியீடுகளைப் பயன்படுத்துதல்.


செய்தி / தகவல் 

அனுப்பப்படும் தகவலானது பிழையின்றியதாகவும் சுருக்கமானதாகவும், தெளிவானதாகவும், உண்மையானதாகவும், நம்பகத்தன்மையுடையதாகவும், ஏற்புடைமை கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். நடைமுறை வாழ்வில் பொருந்தக் கூடியதாகவும், அறிவுறுத்தக் கூடியதாகவும் வழிகாட்டக் கூடியதாகவும் விளங்க வேண்டும். தகவலானது சிறந்த திட்டமிடலையும் ஒழுங்கமைப்பையும் கொண்டிருத்தல் வேண்டும்.


ஊடகம் / முறை 

ஊடகம் என்பது தகவலை அனுப்புவதற்கான வழிமுறை அல்லது மாக்கம் ஆகும். தொடர்பாடல் ஊடகத்தினைத் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் பின்வருமாறு - கிரயம் / செலவு குறைவானவை, விரைவு, சரியான தன்மை, பெறுபவரின் தன்மையும் அவரிற்கான பொருத்தப்பாடும், ஊடகத்தின் சரியான பாவனை முறை, பழுதுகள் இன்மை, செய்தி அனுப்புநருக்குப் பரிச்சயமானதாக ஊடகம் அமைதல், நம்பகத்தன்மை கொண்ட ஊடகங்களாக அமைதல்.


செய்தியைப் பெறுபவர் (பெறுநர்) 

தகவலைத் தெளிவாகவும் சரியாகவும் புரிந்து கொள்ளுதல். செய்திகளை உள்வாங்கிக் கொள்ளும் திறனைப் பெற்றிருத்தல் (செவிசாய்த்தல் திறன், புரிந்து கொள்ளும் திறன்). கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவராகவும் பதிலளிப்பவராகவும் இருத்தல். தகவல் பெறுநர் பக்கச்சார்பு, திரித்துக்கூறுதல், தவறாகப் புரிந்து கொள்ளுதல், மறத்தல், மறைத்தல். உணர்ச்சிவசப்படுதல், கவனயீனம் ஆகிய பண்புகளைக் கொண்டவராக இருத்தல் கூடாது.


பின்னூட்டல் (Feedback) 

தொடர்பாடலின் பின்னோக்கிய செயற்பாடாகும். மிகச் சிறந்த தொடர்பாடலானது பின்னூட்டலுடன் சேர்ந்ததாகக் காணப்பட வேண்டும். அனுப்பிய செய்தி அனுப்பியவாறு சரியானமுறையில் சென்றுள்ளதா என்பதையும் அனுப்பப்பட்ட தகவல் முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதா, சென்றடைந்துள்ளதா என்பதையும் உறுதி செய்யும் செயற்பாடாகும். அனுப்புநர் தம்மால் அனுப்பப்பட்ட செய்தியானது அதனைப் பெறுவோரால் புரிந்து கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்ள இது உதவுகின்றது. எனவே பின்னூட்டி முறை மூலம் தொடர்பாடலின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற விளைவு மிகவும் சரியாகவும், பொருத்தமானதாகவும் இருக்க வழி செய்கின்றது.


தொடர்பாடல் திறனை விருத்தி செய்யும் முறை

திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சிகளை எடுத்தல்.

முக்கியமான மொழித்திறனை விருத்தி செய்வது அவசியமாகும். அதாவது கேட்டல், பேச்சு, வாசிப்புத் திறன்களை வளர்த்தல்.

சொல்லப்போகும் விடயத்தில் நன்கு பரிச்சயமாக இருத்தல்

அளிக்கையை முன்னமே தயார்படுத்துதல்.

அளிக்கை செய்ய முன்னர் அதில் பரிச்சயமானவரிடம் ஆலோசனை. அபிப்பிராயம் கேட்டல்.

சொல்லப்போகும் விடயத்தை மீட்டல்.

நம்பிக்கையை வளர்த்தல்.

பங்குபற்றுநரிடம் அவர்கள் பெற்றுக்கொண்டது தொடர்பாக அறிந்துக் கொள்ளல்.

பின்னூட்டலை வழங்கக் கூடிய ஆற்றலை வளர்த்தல்.

தொடர்பாடல் தடைகளை இனங்காணல்.


தொடர்பாடல் தடைகள்

தொடர்பாடலை மேற்கொள்ளும் போது பல தடைகளும் இடையூறுகளும் ஏற்படுகின்றன. விளைதிறன்மிக்க தொடர்பாடலை மேற்கொள்வதற்கு முதலில் நாம் தொடர்பாடலில் ஏற்படும் தடைகளை இனங்காண வேண்டும். தடைகளோடுகூடிய தொடர்பாடலினால் பரிமாற்றப்படும் அல்லது வெளிப்படுத்தப்படும் செய்திகள், தகவல்கள் மாற்றமடையலாம், திரிபடையலாம் அல்லது உரியவரைச் சென்றடையாமலும் போகலாம். சிலவேளைகளில் அனுப்பப்படும் தகவல்கள் முழுமையாகவும் உரிய வேளையில் பெறுநரைச் சென்றடையாத நிலைப்பாடும் ஏற்படுகின்றன. 

தொடர்பாடலில் ஏற்படும் தடைகளை மனிதத் தடைகள், உளவியல் தடைகள், மொழித்தடைகள், தொழினுட்பத்தடைகள், சுற்றுச் சூழல் தடைகள் (பௌதிகவியல் தடைகள் / காரணிகள்) என பொதுவாக வகுத்து நோக்கலாம்.


மனிதத்தடைகள் மற்றும் உளவியல் தடைகள் 

மனிதத் தொடர்பாடலில் அனுப்புநர் பெறுநர் ஆகியோருக்கிடையில் ஏற்படும் தடைகளும் இடையூறுகளும் ஆகும். இயல்பாகவே மனிதர்களிடம் உள்ள உடலியல், உளவியல் சார்ந்த பண்புகளும், குறைபாடுகளும், மனித நடத்தைகளும் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. கட்புல. செவிப்புலக் குறைபாடுகள், அங்கவீனக் குறைபாடுகள், வாய் பேச முடியாமை. உடல்சார்ந்த நோய்கள். உடல் சோர்வு, வயது முதிர்வு முதலியன தொடர்பாடலில் தடைகளை ஏற்படுத்துகின்றன. அத்துடன், மனிதனின் நடத்தைகளும், உளவியல் ரீதியான பண்புகளும் தொடர்பாடல் தடைகளை ஏற்படுத்துகின்றன. ஞாபக மறதி, தடுமாற்றம், உணர்வுகள் (பசி, கவலை), மனவெழுச்சிகள் (கோபம், எரிச்சல்) கவனக்குறைபாடுகள், அக்கறையின்மை, ஆர்வமின்மை, செவிசாய்க்கும் திறனின்மை. மன அழுத்தம் (Stress) பதற்றம் (Tension) சோம்பல் விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமை, உளவியல்சார்ந்த நோய்கள், மனச்சோர்வு (Depression) என்பனவும் மனிதத் தொடர்பாடலில் தடைகளை ஏற்படுத்தும் மனிதன் சார்ந்த காரணிகளாக உள்ளன. இவற்றைத் தவிர கவனத்தைத் திசைதிருப்பும் காரணிகளும், மருத்துவக் காரணிகளும், நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்களும் தடைகளாக அமைகின்றன. 

மனிதன் செய்திப்பரிமாற்றம் செய்யும்போது தனது விருப்ப - வெறுப்பின் அடிப்படையில் தகவல்களைத் திரிபுபடுத்தியும் (மாற்றியும்). குறுக்கியும் விரித்தும், தேவையான செய்திகளை மறைத்துத் தேவையற்ற செய்திகளையும் சொந்தக் கருத்துக்களைப் புகுத்தியும் (இடைச்செருகல் செய்தல், கண், காது மூக்கு வைத்துக் கதைத்தல்) செய்திப் பரிமாற்றம் செய்யும்போது தொடர்பாடலில் உண்மையான செய்திகள் பெறுநரைச் சென்றடைவதில்லை. (ஒருவரின் காதில் இரகசியமாகச் சொல்லப்படும் செய்தி ஒன்று இறுதியில் உள்ளவரிடம் வேறொரு செய்தியாக உருமாற்றம் பெறுதல்) அத்தோடு, செய்திப்பரிமாற்றம் செய்யும் நபரைப் பொறுத்தும் (அனுப்புநர், பெறுநர் இருவரின் நட்பு பகைமை உறவின் அடிப்படையில்) செய்திகள் தவறாகப் பரிமாற்றப்படுவதோடு, அந்த உறவுகளின் அடிப்படையில் தவறாகப்புரிந்தும் கொள்ளப்படுகின்றன. செய்திகளை விடுத்து செய்தி வரும் முறையைக் கவனத்திற் கொள்ளுதல் (நல்ல விடயத்தை சற்று உரத்த குரலில் கூறும் போது) செய்தியை விடுத்து செய்தி கொண்டு வரும் நபரைக் கவனத்தில் எடுத்தல் (செய்தி அனுப்புநர் தொடர்பான விருப்பு வெறுப்புக்களை செய்தி கொண்டு வரும் நபர் மீது காட்டுதல், எய்தவன் இருக்க அம்மை நோவது போல அல்லது செய்தி நன்மையான செய்தி எனினும் அச்செய்தியைக் கொண்டு வரும் நபர் தொடர்பான விருப்பு வெறுப்புகள்). நாக்குத் தடுமாறுதல், மனிதனின் குரல் தொனியும்கூட மாறுபட்ட செய்திக் கருத்தினை ஏற்படுத்தி விடுகின்றன.

மனிதத் தடைகளை எவ்வாறு நீக்குதல் - மனிதனின் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த குறைபாடுகளுக்கு மருத்துவ உதவியை நாடுதல், அத்துடன் கட்புல மற்றும் செவிப்புலக் கருவிகளை உபயோகித்தல் (மூக்குக் கண்ணாடி, செவிப்புலக் கருவிகள்)


மொழித் தடைகள் 

மனிதத் தொடர்பாடல் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டது. மனிதத் தொடர்பாடலே மொழிசார்ந்தது ஆகும். மனிதத் தொடர்பாடல் மொழியைக் கருவியாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதனால், மொழியின் கட்டமைப்புக்களும் பண்புகளும் மாற்றங்களும் வளர்ச்சிகளும் தொடர்பாடலிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. தொடர்பாடலில் ஒரு குறிப்பிட்ட மொழியின் எழுத்து வழக்கும் பேச்சு வழக்கும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்தவகையில் மொழியானது எழுத்துரீதியான தொடர்பாடலிலும், வாய்மொழிரீதியான பேச்சுத் தொடர்பாடலிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

எழுத்துரீதியான தொடர்பாடலில் ஒரு மொழியின் கட்டமைப்பு அதாவது இலக்கண அமைப்பு, வாக்கிய அமைப்பு, பொருள் வேறுபாடுகள் தாக்கம் செலுத்துகின்றன. எழுத்துப் பிழைகள் (காவல் (காதல்) துறை, கல்வி (கலவி) அமைச்சர்), இலக்கண வழுக்கள் (மஞ்சள் (ல்). கறு(ரு)ப்பு. அத்திபா(வா)ரம்) தவறாக எழுதுதல், தெளிவற்ற கையெழுத்து, பொருத்தமான நிறுத்தக் குறிகளை உபயோகிக்காமை, தட்டச்சு அல்லது கணிப்பொறி செய்யும்போது ஏற்படும் தவறுகள், தெளிவற்ற எழுத்துருக்களைப் (Font Style) பயன்படுத்துதல், எழுத்து மொழியிலுள்ள ஆவணங்களைச் செவ்வை பார்க்காமை (Proof Reading) என்பனவும் காரணிகளாக உள்ளன. அத்துடன், பொருள் மயக்கம், இரட்டை அர்த்தங்களைக் குறிக்கும் சிலேடைத் தன்மை என்பனவும் மொழிரீதியான காரணிகள் ஆகும். (ஐந்து இலட்சம் பெறுமதியான கழிவகற்றும் வாகனம் ஒன்று மட்டக்களப்பு மாநகரசபையினால் கொள்வனவும் செய்யப்பட்டுள்ளது. அறிவில்லாதவன். தோட்டத்திலாடு, வாரும் இரும்படியும், கொஞ்ச லாம்பெண்ணை, பழங்கள் (பழங் கள் பழைய கள்) என்றால் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கும்போதும் தவறுகள் ஏற்படுகின்றன. (உறவு முறைச் சொற்களை மொழிபெயர்த்தல்).

பேச்சுரீதியான தொடர்பாடலில் மொழியைப் பேசும்போது ஏற்படும் நாக்குத் தடுமாறுதல், சொல் தடுமாற்றம், பொருத்தமற்ற குரல்தொனி, தவறான உச்சரிப்பு. தெளிவற்ற வாசிப்பு, பேச்சு, அதிக உரத்துக் கதைத்தல், அதிகளவு மெதுவாகக் கதைத்தல், வேகமாகக் கதைத்தல், சுருக்கச் சொற்கள் என்பன தடைகளாக அமைகின்றன. அத்துடன் பேச்சு மொழியிலுள்ள கிளைமொழிகள் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுதல், சமூகத்திற்குச் சமூகம் வேறுபடுதல், வயது மட்டம் மற்றும் குழுக்களுக்கிடையில் வேறுபடுதல். அதாவது ஆண் பெண், வயது, தொழில், இனம், சமயம் என்பவற்றின் அடிப்படையில் வேறுபடுதல். 

உதாரணம் 

தூள் - மிளகாய்த்தூள், தேயிலைத் தூள்
தூங்குதல் - தூக்கில் தொங்குதல், நித்திரை செய்தல் 

ஓரிடத்தில் பொருத்தமற்ற மொழிகளை உபயோகிக்கும் போது அம்மொழி பற்றிய மொழியறிவு, புரிந்து கொள்ளமுடியாமை காரணமாகத் தவறுகள் ஏற்படலாம். தமிழ் மொழி பேசும் சூழலில் ஆங்கில மொழி. சிங்கள மொழி பாவித்தல். உரையாடுபவருக்கு ஏற்ற விதத்தில் மொழியைப் பிரயோகிக்காமை (Congratulations -தங்கராசநேசன், Yes இயேசு, Yeah -யார்), இருமொழி பேசும் சமூகச் சூழலில் ஒரு மொழியின் செல்வாக்கு (சிங்களம் தமிழ்ச் சூழலில் தமிழ் மக்கள சல்லி, தன்சல், ஒருலோசு என்று தமிழ்ச் சொற்களாகப் பாவித்தல்)

மொழித் தடைகளை எவ்வாறு நீக்குதல் - எழுத்து மொழியில் எழுத்தாற்றலை விருத்தி செய்தல், செவ்வை பார்த்தல், பேச்சு மொழியில் சரியான உச்சரிப்பை விருத்தி செய்தல், பொதுத் தராதர மொழியினைப் பயன்படுத்துதல், உரையாடுபவருக்கு ஏற்ற முறையில் பொருத்தமான, பரிச்சயமான மொழியினைப் பயன்படுத்துதல், குரல் தொனியினைக் கட்டுப்படுத்துதல்.


தொழினுட்பத்தடைகள் 

நவீன தொழினுட்பவியல் வளர்ச்சியின் காரணமாகத் தகவல் தொடர்பாடல் சாதனங்களின் பாவனையும் மனிதத் தொடர்பாடலில் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பாவனையில் பெருகி வரும் நவீன தொடர்பாடல் சாதனங்களின் உபயோகம் பற்றி நன்கு அறிந்திருக்காமை, அவற்றினைக் கையாளுவதற்குரிய அனுபவமும் அறிவும் இன்மை, தொடர்பாடல் சாதனங்களை உபயோகிப்பதற்கு முன் சோதித்துப் பார்க்காமை, தொழினுட்பவியலாளர்களின் பற்றாக்குறை, பயிற்றப்பட்ட தொழினுட்பவியலாளர்கள் இன்மை, போதியளவு தொழினுட்பவியல் சார்ந்த பயிற்சியின்மை,இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களின் சீரற்ற அலைவரிசை (Coverage), பொருத்தமான இடத்தில் பொருத்தமான தொழினுட்ப சாதனங்களை உபயோகிக்காமை, தகவல் தொடர்பாடல் சாதனங்களின் பழுதுகள் மற்றும் சேதங்கள், அனுப்புநருக்கும் பெறுநருக்கும் குறித்த தொழினுட்ப சாதனத்தில் போதிய அனுபவமும் அறிவும் இன்மை என்பன மனிதத் தொடர்பாடலில் தொழினுட்பவியல் சார்ந்த தடைகளாக உள்ளன. 

தொழினுட்பத் தடைகளை எவ்வாறு நீக்குதல் - தொழினுட்ப சாதனங்களைப் பற்றியும் அவற்றினைக் கையாளும் முறை பற்றியும் அறிந்திருத்தல், தொழினுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அவற்றினைச் சோதித்துப் பார்த்தல், தொழினுட்ப சாதனங்களின் பழுதுகளைத் திருத்துதல், பழுதடைந்த / சேதமடைந்த தொழினுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல், பொருத்தமான இடத்தில் பொருத்தமான தொழினுட்ப சாதனங்களை உபயோகித்தல், அனுப்புநருக்கும் பெறுநருக்கும் குறித்த தொழினுட்ப சாதனத்தில் போதிய அனுபவமும் அறிவும் உள்ளதா என்பதைச் சரிபார்த்தல், தொழினுட்பவியலாளர்களுக்குப் போதியளவு பயிற்சியினை வழங்குதல், தேவையான தொழினுட்பவியலாளர்களை நியமித்தல் என்பன தொழினுட்பம் சார்ந்த தடைகளை நீக்குவதற்குரிய வழிமுறைகளாகும்.


பௌதிகத் தடைகள்  

மனிதத் தொடர்பாடலில் சுற்றுச் சூழல் சார்ந்த பௌதிகக் காரணிகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன. சுற்றுச் சூழலில் ஏற்படும் இரைச்சல், அதிகளவான ஒலிகள், இடிமுழக்கம், மின்னல் தாக்கங்கள், பலமான காற்று, மழை, அதிக வெப்பம் மற்றும் துர்நாற்றம், சூழல் மாசு போன்ற காரணிகளால் மனிதத் தொடர்பாடலில் செய்திப் பரிமாற்றத்தின்போது தடைகள் ஏற்படுகின்றன.

பௌதிகத் தடைகளை எவ்வாறு நீக்குதல் - இரைச்சல், அதிகளவான ஒலி உள்ள இடங்களில் தொடர்பாடலை மேற்கொள்வதைத் தவிர்த்தல், இடிமுழக்கம், மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தொடர்பாடலை மேற்கொள்வதைத் தவிர்த்தல், சூழல் மாசடைதலைத் தடுத்தல் போன்றவற்றின் காரணமாக சுற்றுச் சூழல்சார்ந்த தடையினை நீக்கலாம்.


தொடர்பாடல் வலைப்பின்னல்

ஒரு குறிப்பிட்ட தகவலானது / செய்தியானது எவ்வாறு பரிமாறப்படுகின்றது என்பதனை எடுத்துக்காட்டும் ஒரு கட்டமைப்புமுறை தொடர்பாடல் வலைப்பின்னல் எனப்படுகின்றது. எந்தவிதமான தடைகளுமின்றி சுதந்திரமாகத் தமக்கிடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இது வழிவகுக்கின்றது. ஒவ்வொருவரும் இன்னொருவருடன் முறைசார்ந்தோ அல்லது முறைசாராமலோ நேரடியாகத் தொடர்புகொள்ள இது வழிவகுக்கின்றது. இவ்வாறான தொடர்பாடல் வலைப்பின்னல்கள் பின்வருமாறு அமைகின்றன. அவையாவன,

வட்டவடிவ வலைப்பின்னல் முறை
சங்கிலி முறை 
சக்கர வடிவ வலைப்பின்னல் முறை 
Y வடிவ வலைப்பின்னல் முறை 
சகல வழித் தொடர்பாடல் வலைப்பின்னல் 


தொடர்பாடலின் வகைகள்

பொதுவாக தொடர்பாடலின் வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். அவை,

வாய்மொழிசார்ந்த தொடர்பாடல்
வாய்மொழிசாராத தொடர்பாடல்
எழுத்துமூலமான தொடர்பாடல்

நிறுவனங்களில் தொடர்பாடலின் வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். நிறுவனமானது நபர்களுக்கிடையிலான உறவுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்தி அதன்மூலம் தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்காகவும் நிறுவனங்களில் முகாமைத்துவச் செயற்பாடுகளான திட்டமிடல். ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்துத்தல் முதலியவற்றை மேற்கொள்வதற்கும் நிறுவனமானது தொடர்பாடலை மேற்கொள்கின்றது. இவ்வாறான தொடர்பாடல்கள் இருவகைகளில் அமையலாம். அவை,

முறையான தொடர்பாடல்
முறையற்ற தொடர்பாடல்


முறையான தொடர்பாடல் 

முறையான தொடர்பாடல் என்பது முகாமையாளரினால் அமைக்கப்பட்ட அமைப்பு வரைபடத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொடர்பாடல் முறையாகும். இது மூன்று வகைப்படும். அவை,

நிலைக்குத்தான தொடர்பாடல்
கிடையான தொடர்பாடல்
பக்கவாட்டான தொடர்பாடல் 

நிலைக்குத்தான தொடர்பாடல் 

இத்தொடர்பாடல் முறையானது இருவகைப்படும். நிலைக்குத்தான கீழ் நோக்கிய தொடர்பாடல், நிலைக்குத்தான மேல் நோக்கிய தொடர்பாடல் என்பன அவையாகும். மேல் மட்ட ஊழியர்களிடமிருந்து கட்டளைகள். கொள்கைகள், தீர்மானங்கள் போன்றன ஊழியர்களுக்கு நிறுவனப் படிமுறைகளிற்கு ஏற்ப அனுப்பப்படுவது நிலைக்குத்தான கீழ் நோக்கிய தொடர்பாடல் ஆகும். கீழ் மட்ட ஊழியர்களிடமிருந்து கருத்துக்கள், முன்மொழிவுகள் போன்ற மேல்மட்ட ஊழியர்களிற்கு அனுப்பப்படுவது நிலைக்குத்தான மேல் நோக்கிய தொடர்பாடல் ஆகும்.


கிடையான தொடர்பாடல் 

நிறுவனங்களில் உள்ள ஒரே வகையான ஊழியர்களிற்கிடையே மேற்கொள்ளப்படும் தொடர்பாடல் கிடையான தொடர்பாடல் ஆகும்.


பக்கவாட்டான தொடர்பாடல் 

நிறுவனங்களில் பல்வேறுபட்ட நிலையில் உள்ளவர்களிற்கிடையிலும் பல்வேறு நிறுவனங்களிற்கு இடையிலும் மேற்கொள்ளப்படும் தொடர்பாடல் பக்கவாட்டான தொடர்பாடல் ஆகும்.


முறையற்ற தொடர்பாடல்

நிறுவனங்களில் சுற்றறிக்கை, அறிவித்தல் பலகை, கடிதங்கள், உள்ளக நினைவூட்டல் குறிப்புக்கள். அக இணையம், தொலைபேசி, தொலைநகல், கூட்டங்கள் போன்றன உள்ளகரீதியான தொடர்பாடல் ஊடகங்கள் ஆகும். தொலைபேசி, மின்னஞ்சல், கடிதம், தொலைத்தந்தி என்பன வெளியகத் தொடர்பாடல் ஊடகங்கள் ஆகும். முறையற்ற தொடர்பாடல் என்பது நிறுவனங்களில் பதவிரீதியற்ற முறையில் பரிமாற்றப்படும் தொடர்பாடல் முறைகள் ஆகும். இத்தொடர்பாடல் தேநீர் இடைவேளை, மதிய இடைவேளையின் போது ஏற்படலாம். தமது பணிகளுக்கிடையே கிடைக்கப்பெறும் ஓய்வு நேங்களிலும் பொதுவான ஒன்று கூடல் நிகழ்வுகளிலும் இத்தகைய தொடர்பாடல் முறை மேற்கொள்ளப்படுகின்றது. இது நிறுவனங்களின் ஊழியர்களுக்கிடையே உறவுமுறைகளை மேம்படுத்த உதவுகின்றது.


வாய்மொழிசார்ந்த தொடர்பாடல் 

வாய்மொழிசார்ந்த தொடர்பாடல் என்பது ஒருவருக்கொருவர் நேரடியாகத் தமது கருத்துக்களை வாய் மூலம் பரிமாற்றம் செய்வதைக் குறிக்கின்றது. வாய்மொழிசார்ந்த தொடர்பாடல் வடிவங்களிற்கு தொலைபேசி உரையாடல், கூட்டங்கள், பேச்சுக்கள், உரைகள், நேர்காணல்கள் / பேட்டிகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றை உதாரணங்களாகக் கூறலாம்.

இத்தொடர்பாடலில் எழுத்து மூலமான தொடர்பாடலிலும் பார்க்க வேகம் கூடுதலாகக் காணப்படுவதுடன், பின்னூட்டல் முறைக்குச் சிறந்த வாய்ப்பும் காணப்படுகின்றது. இதன்மூலம் உரிய நேரத்தில் தவறுகளைத் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உடனுக்குடன் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அத்துடன் வாய்மொழிரீதியான தொடர்பாடலில் தகவல்களை வலியுறுத்திக் கூறுவதற்கான வாய்ப்பும் மீள மீளக் கூறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எழுத்தறிவற்ற மக்களுடன் வாய்மொழிசார்ந்த தொடர்பாடலை மேற்கொள்ள முடிகின்றது.

இத்தொடர்பாடலில் எதிர்காலத் தேவையின் பொருட்டுத் தகவல்களை நிரந்தர ஆவணமாகப் பேணமுடியாது. அத்துடன் வாய்மொழிசார்ந்த தொடர்பாடலில் மறதி காரணமாகத் தகவல்களை முழுமையாக நினைவில் வைத்திருக்க முடியாது. கூறிய தகவல்களை மறப்பதற்கும் மறுதலிப்பதற்கும் திரிபுபடுத்துவதற்குமான சந்தர்ப்பங்களும் இத்தொடர்பாடலில் உள்ளன. சிலநேரங்களில் நீண்ட கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் என்பவற்றினால் நேரவிரயம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. குரல் வேகம், குரல்தொனியின் தன்மைக்கேற்ப கருத்துக்களும் வேறுபடுவதற்கு இடம் உள்ளதுடன், தெளிவான உச்சரிப்பு, விரைவான பேச்சு, பிரதேச மற்றும் சமூக வழக்குகளை உள்ளடக்கிப் பேசுவதன் ஊடாக ஏனையோருக்குப் புரிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.


பேட்டி முறை / நேர்காணல்

நேர்காணல் என்பது ஒரு வகையான தொடர்பாடல் முறையாகும். செய்தியாளர்களின் பணிகளில் பேட்டி காணுதல் அல்லது நேர்காணுதல் என்பது மிகவும் முக்கியமானதொரு செயற்பாடு ஆகும். நேர்காணல் என்பது ஒருவரோடு அல்லது பலரோடு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ கடிதம் மூலமோ தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டு அறிவது ஆகும்.

நேர்காணல் காணுதல் மூலம் தான் பல நடைமுறைச் செய்திகளையும் சம்பவங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது. 'நேர்காணல் இல்லையேல் செய்திகள் இல்லை' என்பது ஊடகவியலின் வாசகமாகவும் உள்ளது. பேட்டி காணுதல் மூலம் ஒரு நெகிழ்ச்சியான முறையில் நடப்புச் செய்திகள் பலவற்றினை அறிந்து கொள்ள முடிகின்றன.

ஒவ்வொரு பேட்டியும் ஏதோவொரு நோக்கத்துடன் நடத்தப்படுகின்றது. தகவல்களைப் பெறுவதற்காகவும், நடப்பினை அறிந்து கொள்வதற்காகவும், நிகழ்ச்சி மற்றும் திட்டங்கள் பற்றிய செயதிகளை அறிந்து கொள்வதற்காகவும், கண்ணோட்டங்களை வெளிப்படுத்துவதற்காகவும் பேட்டியானது நடத்தப்படுகின்றது.

ஊடகங்களில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகிவற்றில் பேட்டி காணுதல் என்பது தனிப்பட்டதொரு நிகழ்ச்சியாக இன்று இருந்து வருகின்றது. பேட்டியானது தகவல்களையும் விபரங்களையும் பெறும் நோக்குடன் நடத்தப்படுகின்றது. சில பேட்டிகள் திடீரென கருத்துக்களைப் பெறும் நோக்குடன் நடத்தப்படுவதும் உண்டு. சிலநேரங்களில் பேட்டியானது பேட்டிக்காகவும் நடத்தப்படுகின்றது. பிரமுகர்கள், நிபுணர்கள், சாதனையாளர்கள் ஆகியோருடன் மேற்கொள்ளப்படும் பேட்டி முறைகளை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

பேட்டியானது திட்டமிடப்பட்ட பேட்டியாகவும் திட்டமிடப்படாத பேட்டியாகவும் நடத்தப்படுகின்றது. திட்டமிடப்படாத பேட்டி முறையில் ஓர் ஒழுங்கமைப்பினைக் காண முடியாது. ஆயினும் அது கருத்துக்களை மட்டும் அறிந்து கொள்ளும் நோக்குடன் இப்பேட்டியானது நடத்தப்படுகின்றது.

பேட்டி முறையில் பேட்டி காண்பவர், பேட்டி வழங்குபவர் என்று இரு நபர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். ஒரு வெற்றிகரமான பேட்டி ஒன்றினை நடத்துவதற்கு முதலில் பேட்டி காணவேண்டியவரோடு முன்கூட்டியே தொடர்பு கொண்டு ஒப்புதல் பெற்று இடம் நேரம் காலம் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். அடுத்து பேட்டிக்கான திட்டத்தினைத் தீர்மானித்து ஒழுங்கமைக்க வேண்டும். பேட்டி காண்பவரிடம் கேட்கப்படும் வினாக்களைத் தயார் செய்வதுடன், அவரிடம் பெற்றுக் கொள்ளவேண்டிய தகவல்களையும் வரையறை செய்து கொள்ளவும் வேண்டும். கேட்கப்படும் வினாக்களையும் ஓர் ஒழுங்குமுறையில் தயாரித்து வைத்திருத்தல் அவசியமாகும். வினாக்களும் பேட்டி காண்பவரின் மனதினைப் பாதிக்க வண்ணமும் அவரை வற்புறுத்தாத வண்ணமும் அமைதல் வேண்டும். பேட்டியில் கேட்கப்படுகின்ற வினாக்கள் தகவல்களைப் பெறுவதற்காகவே கேட்கப்படுகின்றன. இவ்வினாக்கள் குறுக்கு விசாரணைகளாகவும் குழப்பத்ததையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக அமைதல் கூடாது.

அடுத்து பேட்டி எடுப்பவரின் பின்னணியைப் பற்றி பேட்டி காண்பவர் தெளிவாக அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும். அவருடைய துஐற, பணிகள் குறித்து முன்னேற்பாடான அறிவு பேட்டி காணபவுரக்கு இருத்தல் அவசியமாகும். பேட்டி எடுப்பவர் நெகிழ்ச்சியான முறையில் இருந்தால்தான் பேட்டி வழங்குபவரும் அவர்மீது நம்பிக்கை கொண்டு முழுமையானதும் உண்மையானதுமான தகவல்களைத் தரமுற்படுவார். பேட்டியில் தகவல்களைப் பதிவு செய்து கொள்ள விரும்பினால் முன்னரே பேட்டி காண்பவரிடம் அதற்கான அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் பேட்டி காண்பவர் சிறந்த முறையில் செவிசாய்பவராகவும் புரிந்து கொள்பவராகவும் இருத்தல் வேண்டும். பேட்டி வழங்குபவர் தகவல்களை வழங்கக்கூடிய மனநிலையில் இருக்க வேண்டும் என்பதுடன் சிறந்த முறையில் தொடர்பாடல் திறனையும் கொண்டிருத்தல் வேண்டும். பேட்டியில் கேட்கப்படும் வினாக்களைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தெளிவாகவும் சுருக்கமாகவும் பதில்களைக் கூறுதல் வேண்டும்.

பேட்டியில் குறுக்கீடுகள். தற்பெருமை. இறுமாப்பு, விவாதம், வெட்டிப்பேச்சு என்பன இருத்தல் கூடாது. கருத்துக்களை அலட்சியப்படுத்தக் கூடாது. இந்தவகையில் ஊடகத்துறையில் தற்போது செய்திகளைப் பெறும் தொடர்பு சாதனமாகவும் தொடர்பாடல் முறையாகவும் பேட்டி முறை அமைந்துள்ளது.


நேர்காணல் இரண்டு நிலைகளில் இடம்பெறும். அவை,
மனிதனைப் பற்றி நேர்காண்பது
ஒரு நிலை பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு நேர்காண்பது


நோக்கத்தின் அடிப்படையில் நேர்காணலின் வகைகள்

தகவல், விபரங்களை பெறும் நோக்குடனான நேர்காணல்: தகவல்களை சேகரிப்பதே இங்கு முக்கிய நோக்கம். நடந்த அல்லது நடக்கவிருக்கும் ஒரு விடயம் தொடர்பாக இத்தகைய போட்டிகள் நடாத்தப்படும்.

கருத்துக்களை பெறும் நோக்குடனான நேர்காணல் நடந்த ஒரு சம்பவம் அல்லது நடக்க போகும் ஒரு அம்பவம் ஏற்பட போகும் தாக்கம் போன்ற நிலைகளில் கருத்துக்களை பெறும் நோக்குடன் இப் பேட்டிகள் நடத்தப்படும். இவை திட்டமிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட பேட்டிகளாக அமைவதில்லை. இவை திடீர் பேட்டிகளாக அமையும். உதாரணமாக எரிப்பொருள் விலையேற்றம் இடம் பெறவுள்ள நிலையில் மக்களின் கருத்துக்களை அறிதல்.

பேட்டியொன்றை பெறும் நோக்குடனான நேர்காணல் துறை சார் வல்லுனர்கள் பிறமுகவர்கள், சாதனையாளர்களிடம் மேற்கொள்ளும் நேர்காணல்.


நேர்காணலை நடாத்தும் போது கவனிக்க வேண்டியவை

நேர்காணலை மேற்கொள்ள முன்னர் திட்டமிடல் என்பது முக்கியமானது. ஒரு விடயத்தை அறிய யார். யாரை அணுகலாம். எந்த மூலங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தலாம். தேவையான விடயங்களை தந்து ஒத்துழைப்பார்களா. என்பதையெல்லாம் திட்டமிட்டு நேர்காணலை தயாரித்தல் வேண்டும். ஒருவரை பற்றிய பேட்டியை திட்டமிடும் போது குறித்த நபரினுடைய பின்னிணியை தெளிவாக அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.

பேட்டியாளர்களை அல்லது பேட்டி காணும் விடயம் பற்றி முழுமையாக முன்கூட்டியே தெரிந்துக் கொண்டு அவரைப் பற்றிய விடயங்கள் அனைத்தும் தெளிவாக தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

செய்தியாளர் முதலில் நேர்காணுவருக்கு முன் தோன்றி தன்னை அறிமுகப்படுத்துவதும் தன்னை பற்றிய மனப்பதிவை ஏற்படுத்துவதும் நல்லது.

செய்தியாளன் போட்டியாளனை அணுகும் போது முதலில் தனது நோக்கைத் தெளிவாக விளக்குதல் வேண்டும்.

கேள்விகளைத் தயாரித்தலும், கேட்கும் முறையியலும் கேள்விகளைத் தயாரிக்கும் போது ஒருவரின் நிலைப்பாடு, அவரது செயல்கள், கருத்துக்கள், என்பவற்றைத் தெளிவாக வெளிக்கொணரத்தக்க கேள்விகளைத் தயாரிக்க வேண்டும். மக்கள் என்ன செய்கின்றார்கள். என்ன செய்ய திட்டமிட்டிருக்கின்றார்கள். என்ன விசேட தகவல்களை வைத்திருக்கின்றார்கள். குறித்த விடயம் தொடர்பாக என்ன நினைக்கிறார்க்ள என்பவற்றையெல்லாம் இங்க வெளிக்கொணர்தல் வேண்டும்.

ஆரம்பக் கேள்வி குறித்த நபரின் பின்னணி, அனுபவம். பணி முதலானவற்றை வெளிக்கொணரத் தக்கதாக அமைய வேண்டும்.

இந்த விடயம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள். இது பற்றி என்ன அறிந்திருக்கின்றீர்கள். இந்த நேரத்தில் என்ன செய்ய திட்டமிட்டிருக்கின்றீர்கள். முதலான கேள்விகள் விடயத்தை விபரமாக வெளிக்கொணரத் தூண்டும் ஆரம்பக் கேள்விகளாக அமையும்.

கேள்வியின் இறுதியில் பேட்டியாளரைப் பேச அழைக்கின்ற விதமாகச் சில கேள்விகளைக் கேட்டு விடயங்களைத் தூண்டிவிடுதல் வேண்டும். இக் கேள்விகள் விடயத்தை இனங்காண்பவையாகவும் விடயத்தை தெளிவாக செல்பவையாகவும் அமைய வேண்டும். கேளிவிகள் திறந்த கேள்விகளாக அமைய வேண்டும்.

ஆரம்ப கேள்வியின் நோக்கம் போட்டியாளரை பேச வைப்பதாகும். அவர் முழுமையாகப் பேச தொடங்கிய பின்னர் ஆழமான விடயங்களைப் பெற்றுக் கொள்ளும் விதமாக பதிலுக்கேற்ற விதமாக கேள்விகளைக் கேட்பதாக திட்டமிட்டுக் கொள்ளலாம்.

கேள்விகளைக் கேட்கும் போது தூண்டும் வகைக் கேள்விகளைக் கேட்கலாம். இக் கேள்விகள் புதிய தேடலுக்கான ஒரு களத்தை கண்டிபிடித்து தரலாம்.

ஆம்,இல்லை என்ற பதில்களைத் தரத்தக்க மூடிய கேள்விகளை கேட்பது விரும்பத்தக்கதல்ல. எனினும் சில சந்தர்ப்பங்களில் இத்தகைய கேள்விகளும் கேட்கப்படலாம்.

செய்தியாளர் கவனமாகத் தயாரிக்க வேண்டிய மற்றொரு வகை கேள்வி பிரச்சினை கேள்வியாகும். இத்தகைய ஒரு விடயம் நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்ற ஒரு நிலையை உருவாக்கித் தரப்படும் கேள்வியாகும். இதற்கான பதில் கவனத்தோடும் கெட்டித்தனத்தோடும் தரப்பட வேண்டியது.

நேர்காணலைத் தயாரிக்கும் போது நேரம் இடம் என்பவற்றையும் கவனம் செலுத்துதல் வேண்டும். செய்தியாளர் அவசர வேளைகளில் நேர்காணல் மேற்கொள்வதைத் தவிர்த்தல் சிறந்தது. உதாரணம் - அரசியல் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு அவசரமாக நடந்து செல்லும் வேளை

எப்போதும் நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கொடுக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்ற விதமாக கேள்விகளை தயாரித்து அதன்படி பதில்களை பெறுவது சிறந்தது. பேட்டிக்காக போட்டியாளருடைய தங்குமிடம் அல்லது காரியலாயம் போன்ற இடங்களை தெரிவு செய்வது நல்லது. பொறுமையாகவிருந்து விடயங்களை விளக்கமாக தெரிவிக்க பேட்டியாளர்களின் சொந்த இடம் சிறந்தது. இதை விட பேட்டிக்கென்று சிறப்பாக ஒதுக்கப்படும் இடம் நல்லது.

நேர அளவு கணிக்கப்பட வேண்டும். கட்டுப்பாடுகள் இல்லாத போதும் நேருக்குநேர் எடுக்கப்படும் நேர்காணல் 15 நிமிடங்கள் நீடிக்கலாம். தொலைபேசி மூலம் களத்திலிருந்து பெறப்படும் நேர்காணல் ஐந்து நிமிடம் நீடிக்கலாம். ஒரு நீண் ஆழமான நேர்காணல் 45 நிமிடம் 2 மணித்தியாலம் வரை நீடிக்கலாம்.

நேர்காணலை மேற்கொள்வதற்கு காலை நேரம் சிறந்தது. மாலை நேரங்களில் செய்தியாளர் பொறுமையாக இருந்து ஓய்வெடுக்கும் நேரமும் சிறந்தது. மதிய வேளை நேர்காணலுக்கு உகந்ததல்ல.

செய்தியாளரின் ஆளுமை தோற்றம், குண நலம், கேட்கும் பாணி, கேள்வி கேட்கும் விதம், நுணுக்கமாக நடத்திச் செல்லும் விதம் என்பவை முக்கியமானவை.

செய்தியாளன் எப்போதும் நேர்காணலை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருத்தல் வேண்டும். பேட்டியாளர் செய்தியாளரிடம் கேள்வி கேட்கும் நிலையை ஏற்படுத்தி விட கூடாது.

செய்தியாளர் எப்போதும் பேட்டியாளரை மனம் புண்படச் செய்யவோ, ஆத்திரமூட்டச் செய்யவோ கூடாது. பேட்டியாளரால் ஏற்கப்படும் நிலையை அடைவதற்காக செய்தியாளர் தம்மை தயாரப்படுத்தி நடுவு நிலைமை உடையவராக தன் நடை, உடை, பாவனையில் இருக்க வேண்டும்.

தர்ம சங்கடமான கேள்விகளைக் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதனை இறுதியில் கேட்பது நல்லது. பேட்டியாளரை பேசும் படி தூண்டிவிட்டு இடையிடையே குழப்பாமல் இருத்தல் வேண்டும்.

பேட்டியாளன் எந்த நிலையில் இருந்தாலும் அவரை வேலைப்பழு உள்ளவராக கருத வேண்டும்.

குறிப்பெடுக்கும், பதிவு செய்யும் போது சில விதிமுறைகளைக் கடைபிடித்தல் வேண்டும்.

பேட்டியாளன் எப்போதும் புரிந்துணர்வு உள்ளவனாக இருத்தல் வேண்டும்.

திடீரென உணர்ச்சிப் பேதங்களை காட்டுவதை தவிர்த்தல் வேண்டும்.


கூட்டம்

பிரச்சினைகளைத் தீர்க்கவும் தீர்மானங்களை எடுக்கவும் நிறுவனங்கள், சங்கங்கள். தனிநபர்களால் கூட்டங்கள் கூட்டப்படுகின்றன.


கூட்டங்களின் நன்மைகள்

அங்கத்தவர்களிடையே தகவல்கள் விரைவாகப் பரவுதல்.

புதிய எண்ணங்கள் உருவாகலாம்.

ஒத்துழைப்பு தூண்டப்படுகின்றது.

பல்வேறுப்பட்ட அபிப்பிராயங்களையும் பகிர்ந்துக் கொள்ளல்.

ஒரு முறையான கூட்டத்தை நடத்துவதற்கு முன்னறிவித்தல், நிகழ்ச்சிநிரல் கூட்ட அறிக்கை முதலிய அம்சங்கள் தேவையாகும்.


கூட்டத்தைக் கூட்டுதல்

கூட்டத்தை தன்னியக்கமாகவும், முன்னறிவித்தல் கொடுத்தும் கூட்டலாம்.

முன்னறிவித்தல் முறை - கூட்டத்தைக் கூட்டுவதற்கான முன்னறிவித்தல் தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். அச்சிடப்பட்ட அட்டை, துண்டு, கடிதம், விளம்பரப் பலகை அறிவித்தல் முதலியவற்றின் மூலம் கூட்டத்தக்கான அழைப்பை விடுக்கலாம். அந்த அறிவித்தலோடு கலந்துரையாட இருக்கும் விடயங்களும் அதற்குரிய தயாரிப்பைச் செய்ய வழிகாட்டியாக நிகழ்ச்சிநிரலும் சேர்க்கப்படும். சிலபோது கூட்ட அறிக்கையும் இணைக்கப்படலாம்.


நிகழ்ச்சி நிரல்

கூட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்கள் கலந்துரையாட வேண்டி இருப்பின் அவ்விடயங்களை நிகழ்ச்சி நிரல் எனப் பட்டியலொன்று இடவேண்டும். நிகழ்ச்சிநிரல் கூட்டத்தைக் கால அட்டவணைக்குள்ளும் வரையறைக்குள்ளும் வைத்துக்கொள்ள தலைவருக்கு உதவும். நிகழ்ச்சிநிரல் தெரிவுசெய்யப்பட்ட தலைமை அல்லது செயலாளரால் தயாரிக்கப்பட வேண்டும்.


நிகழ்ச்சிநிரல் உள்ளடக்கியிருக்கவேண்டிய பகுதிகள்

அங்கத்துவம், புதிய அங்கத்தவரை அறிமுகம் செய்தல், இளைப்பாறியவர், இராஜினாமா செய்தவர்களை அறிவித்தல்.

சமூகமளிக்காமைக்கு மன்னிப்பு: கூட்டம் தொடங்கியதும் கூட்டத்துக்கு வர முடியாதவர்கள் செயலாளருக்கு அனுப்பிய மன்னிப்புக் கடிதங்கள் வாசிக்கப்படுதல் வேண்டும்.

சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்படல், இங்கு அறிக்கையின் சொற்பிரயோகங்கள், நிகழ்வுகளின் உண்மைத் தன்மை பரிசீலிக்கப்பட்டு திருத்தப்படல் வேண்டும். சரியாயின் சரியென தலைவர் ஒப்பமிடல்.

முன்னைய கூட்டத்தினால் ஒரு நிலைமை விருத்தியடைந்திருந்தால் அல்லது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பின் அதுபற்றி அறிவித்தல்.

அக்கூட்டத்துக்கு ஏற்புடைய கடிதங்கள் வேறு பிரிவினரிடமிருந்து செயலாளருக்கு வந்திருப்பின் அதனை அறிவித்தல்

கூட்டத்தின் புதிய விடயங்கள் நிகழ்ச்சிநிரலில் எடுத்தாளப்படும். இதில் மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டங்கள், கலந்துரையாடவுள்ள அறிக்கைகள். தீர்மானமெடுக்க இருக்கும் முன்மொழிவுகள் முதலியன சேர்க்கப்படும்.

வேறு விடயங்கள் ஏதாவது விடயங்கள் எடுபடாது விடப்பட்டிருந்தால் அல்லது நிகழ்ச்சிநிரல் தயாரிப்புக்கும் கூட்ட நிகழ்வுக்கும் இடையில் நடந்திருந்தால் அவற்றைச் சேர்த்தல்.

கூட்ட இறுதியில் கூட்டம் முறையாக நிறைவுற்றதெனப் பிரகடனப்படுத்தப்படும். அடுத்த கூட்டத்துக்கான திகதியும் அறிவிக்கப்படலாம்.

நன்றி


கூட்டத்தை ஏற்படுத்தல்

நிர்ணயிக்கப்பட்ட ஆகக்குறைந்த எண்ணிக்கையான நபர்கள் சமூகமாயிருத்தல் வேண்டும். இது நிறைவெண் அல்லது கோரம் எனப்படும். கோரம் இல்லையாயின் கூட்டம் பிரிதொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படும்.


பிரேரணைகளும் தீர்மானங்களும்

கூட்டத்தில் ஒவ்வொரு விடயத்தையும் பிரேரணை வடிவத்தில் எடுத்தல் உதவியாக அமையும் கலந்துரையாட எடுத்த விடயத்தையும் தீர்மானிக்க வேண்டிய முக்கிய விடயங்களையும் பிரேரணை விளக்கும். பிரேரணை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு சில சமயம் திருத்தப்படும். பிரேரணை ஏற்றக் கொள்ளப்படின் தீர்மானமாக மாற்றமடையும். பிரேரணை பின்வரும் அம்சங்களைக் கொண்டதாக அமைக்கப்படும்.

எதிர்மறையாகவன்றி திட்டமானதாக இருத்தல்

பலபொருள்படாது செயற்பாட்டுக்கு இலகுவாக தேவையான விபரங்களை உள்ளடக்கியிருத்தல்.

பொருத்தமான விதிகள், சட்டவாக்கங்களுக்கு அமைவாக இருத்தல்

அலுவலக இலக்குக்குள் அமைதல்


கூட்டத்தைக் கட்டுப்படுத்தல்

கூட்டத்தைத் திறம்பட நடத்துவது தலைவரின் பொறுப்பாகும். அந்தவகையில்,

கூட்டத்தின் ஒழுங்கைப் பேணுதல் வேண்டும். நியாயமானவராகவும் பாரபட்சம் இல்லாதவராகவும் கூட்டத்தை நடத்த வேண்டும். கூட்ட நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக கூட்டத்தை வைத்திருக்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு நபர்தான் உரையாற்ற முடியும் என்பதை வற்புறுத்தல், தேவை ஏற்படும் போது எச்சரிக்கை செய்தல். தொடர்ச்சியாக குறுக்கீடு செய்யும் அங்கத்தவர்களை வெளியேற்றுதல்.


கூட்ட அறிக்கை தயாரித்தல்

கூட்ட அறிக்கையை பெரும்பாலும் செயலாளர் தயாரிப்பார். இவ்வறிக்கை பின்வரும் பண்புகளை கொண்டிருக்க வேண்டும்.

சரியாகவும், முழுமையாகவும் கையடக்கமாகவும் தயாரிக்கப்படல்

படர்க்கைப் பேச்சில் எழுதப்படல்.

தனிநபர்கள் மோதல்களையும் வருத்தம் தெரிவிக்கப்பட்டதும் கூட்டத்தின் நற்பெயரைக் கெடுப்பதுமான விடயங்களையும் வேண்டாத வார்த்தைப் பிரயோகங்களை பரிமாறிய விடயங்களையும் நீக்கியும் தயாரித்தல்.

பங்குபற்றியவர்களின் அபிப்ராயங்கள், கூற்றுக்களின் சரியான வடிவத்தைத் தருதல்


வாய்மொழிசாராத தொடர்பாடல் 

வாய்மொழிசாராத தொடர்பாடல் என்பது ஒருவர் மற்றவரோடு தொடர்பாடலை மேற்கொள்ளும் போது மொழிப் பிரயோகங்களைப் பாவிக்காமல் தொடர்பினை மேற்கொள்ளும் முறையாகும். குறியீடுகள், சைகைகள், அங்க அசைவுகள் மற்றும் உடல்மொழி என்பவற்றின் மூலம் தொடர்பாடலை மேற்கொள்ளும் முறையாகும். எமது உடல் அசைவுகள் மூலம் எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் முறையாகும். எமது நடை, உடை, பாவனை முறைகள் அனைத்தும் இங்கு தொடர்பாடலை மேற்கொள்கின்றன. மௌனம் கூட ஒரு வாய்மொழிசாராத தொடர்பாடலாகும். காட்சிசார்ந்த அல்லது கட்புலரீதியான தொடர்பாடல்களும் இதனுள் அடங்கும்.

இத்தொடர்பாடல் முறையில் இரகசியமாகத் தகவல் பரிமாற்றம் செய்யப்படுவதோடு, ஏனையோருக்கு அச்செய்தியானது புரியாமல் இருக்கின்றது. ஒரு குழுசார்ந்தோருக்கிடையில் இத்தகைய முறையில் தகவலானது பரிமாற்றப்படுகின்றது. கட்புலரீதியான காட்சிசார்ந்த தொடர்பாடலில் திரைப்படங்கள், வரைபடங்கள், சமிக்ஞைகள் ஆகியன உள்ளடங்குகின்றன. இவற்றினூடாகத் தகவல்களை எளிமையாக எடுத்துக்காட்ட முடிவதுடன், மனதில் பதிய வைக்கவும் முடியும். இத்தொடர்பாடலின் மூலம் கல்வியறிவற்ற மக்களுக்கும் தகவல்களைப் புரிந்துகொள்ள முடியும்.

வாய்மொழிசாராத தொடர்பாடலில் குறிப்பிட்ட சைகைகளையும் குறியீடுகளையும் உடல் அசைவுகளையும் புரிந்துகொண்டவர்களுக்கு மாத்திரமே அக்குறிப்பிட்ட தகவல்களைப் பரிமாற்றம் செய்ய முடியும். சைகைகளுக்கும் குறியீடுகளுக்கும் பொருத்தமான அர்த்தங்கள் தெரிந்தால் மாத்திரமே அத்தகவலைப் புரிந்து கொள்ள முடியும். அல்லது தவறான முறையிலும் பொருள் கொள்ள நேரிடும்.


எழுத்துமூலமான தொடர்பாடல் 

எழுத்து மூலமான தொடர்பாடல் என்பது. தகவலானது எழுத்து வடிவில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அனுப்பப்படும் முறையாகும். இது மொழிசார்ந்த தொடர்பாடலாகவும் முறைசார்ந்த தொடர்பாடலாகவும் உள்ளது. நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அதிகமாக இத்தொடர்பாடல் முறையானது பின்பற்றப்படுகின்றது. கடிதங்கள், அறிக்கைகள், படிவங்கள், அறிவித்தல்கள், மின்னஞ்சல்கள், வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள், வினாக்கொத்துகள், சுற்றுநிருபங்கள், தொலைநகல், ஞாபகக்குறிப்புகள், ஆவணங்கள், கையேடுகள் ஆகியன எழுத்துமூலமான தொடர்பாடல் வடிவங்கள் ஆகும்.


எழுத்துமூலமான தொடர்பாடல் முறையின் நன்மைகள் 

கடந்தகாலம் பற்றிய தகவல்களையும் பதிவுகளையும் எதிர்காலத்திற்குரிய ஆவணங்களாகச் சேகரித்து வைக்க உதவுதல்.

வரலாற்றின் அடிப்படையில் வளர்ச்சிநிலைகளை ஒப்பீட்டு அறிவதற்கு உதவுதல்.

தகவல்களையும் விளக்கங்களையும் விரிவான முறையிலும் அதிகளவிலும் வழங்குதல்.

தகவல்களைப் பிழையாகவும் அரைகுறையாகவும் விளங்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படுதல்.

தகவல்களில் உறுதிப்பாடும் பூரணத்துவமும் காணப்படுதல்.

யார், யாருக்கு, எங்கிருந்து, எப்போது போன்ற தகவல் பற்றிய விபரங்களும் உள்ளடங்கியிருப்பதனால் நம்பகத்தன்மையும் ஏற்புடைமையும் காணப்படுதல்.

எழுத்து மூலமான தொடர்பாடல்முறையானது சட்டபூர்வமான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, பாதுகாப்பானதாகவும் இருத்தல்.


எழுத்துமூலமான தொடர்பாடல் முறையின் தீமைகள் 

எழுத்து மூலமான தொடர்பாடலில் காலவிரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

தகவலானது பெறுநரைச் சென்றடைவதற்கும் காலநேரம் எடுப்பதுடன், தகவலானது பெறுநரைச் சென்றடைந்துள்ளதா? புரிந்துகொள்ளப்பட்டு விட்டதா? ஆகிய பின்னூட்டல் செயற்பாடுகளும் குறைவான நிலையில் காணப்படுதல்.

இத்தொடர்பாடல் முறையானது கல்வியறிவற்ற மக்களுக்குப் பொருத்தமற்ற ஒன்றாகவும் காணப்படுதல்.

எழுத்து மூலமான தகவல்களைச் சிறந்த முறையில் ஆவணப்படுத்துவதற்குரிய இடவசதிகளும் ஒழுங்குமுறைகளும் தேவைப்படுதல்.

பெறுநருக்குப் பொருத்தமான மொழிப்பிரயோகத்தைத் தெரிவு செய்வதோடு, பொருள் மயக்கம், இலக்கண வழு, எழுத்துப்பிழை, அச்சுப்பிழை, தெளிவற்ற எழுத்துமுறை, அளவுக்கதிகமான விபரணமுறை, பொருத்தமான நிறுத்தக்குறிகள் உபயோகிக்காமை, சமூக மற்றும் பிரதேச மொழி வழக்குகளின் பாவனை, கடின சொற்பிரயோகங்கள் என்பன இத்தொடர்பாடலில் சிக்கல்களை ஏற்படுத்துதல்.


கடிதங்கள்

பண்டைக் காலமிருந்து கடிதங்கள் முதன்மையானதொரு தொடர்பாடல் கருவியாக இருந்துவந்துள்ளது.

இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பச் சாதனங்கள் வந்துள்ள போதும் கடிதங்கள் அன்றாட நடைமுறைகளில் மட்டுமன்றி அலுவலக நடைமுறைகளிலும் அரசியல், வர்த்தக நடவடிக்கைகளிலும் முதன்மையான தொடர்பாடல் சாதனமாக இருந்து வருகின்றது.

இன்று கடிதங்களை அனுப்பும் முறைகளிலே பல வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில் கடிதங்களின் முக்கியத்துவங்களைப் பின்வருமாறு கூறலாம்,

வரலாற்றுப் பதிவுகளாக அமைந்துள்ளன.

தகவல்களை ஆவணப்படுத்திப் பாதுகாத்து வைக்கலாம்.

ஆதாரத் தன்மையும் சட்டபூர்வத் தன்மையும் கொண்டவை.

நம்பகத் தன்மையும் கொண்டவை.

மாற்றமடையக் கூடியவை அல்ல. நிரந்தரத் தன்மையுடையவை.

ஏளிமையானவை. இலகுவாக தொடர்புகொள்ளத்தக்கவை.

தேவைகளையும் அலுவல்களையும் முறையாக நிறைவேற்றிக் கொள்வதற்குச் சிறந்த ஊடகம்.

விடயங்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக்கொள்ள முடியும். பதிவுத் தபால் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவை.

குறைந்த செலவில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

அதிகமான தகவல்களை விரைவாக அனுப்பலாம்.


அதேவேளை கடிதத் தொடர்புகொள்ளலில் சில பாதகங்களும் உள்ளன. அவை,

சாதாரண கடிதங்கள் சென்றடைவதில் காலதாமதங்கள் ஏற்படுவதுண்டு. இதனால் நேரவிரயம் ஏற்படுகின்றது.

எழுத்தறிவு இல்லாதவரோடு கடிதத் தொடர்பு கொள்ள முடியாது.

பின்னூட்டலைப் பெறுவதும் சிரமமாக உள்ளது.


எனினும் கடிதங்கள் விரைவாகச் சென்றடையக் கூடிய முறைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. Tele mail என்பது அண்மையில் தந்தி முறைக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ளது.  இதனூடாக தகவல் பரிமாற்றத்தினுடைய வேகம் விருத்தியடைந்துள்ளது. 

கடிதத்தின் பொது அமைப்பு

உரியவரின் பெயர், விலாசம், திகதி
அனுப்பப்படுபவரின் பெயர், விலாசம்
விளிப்பு
தலைப்பு
விடயம்
முடிப்பு
கையொப்பம்

கடிதங்கள் பல்வேறு வகைப்படுகின்றன. ஒவ்வொரு வகைக்கும் ஏற்ப தடிதங்களின் தன்மை வேறுபடுகின்றது. அந்தவகையில்,

உறவுமுறைக் கடிதங்கள்
அலுவலக கடிதங்கள்
விண்ணப்பக் கடிதங்கள்
வர்த்தகக் கடிதங்கள்


அலுவலக கடிதம்


அனுப்புநர் →
அ.சுதாகர்,
1ஆம் வருடம் 2ஆம் அரையாண்டு,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை 
2020.05.15.

பெறுநர் →
தலைவர்,
வரலாற்றுத் துறை,
கலை கலாசார பீடம், 
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை 

விளிப்பு →
அம்மணி/ஐயா, 

தலைப்பு →
பரீட்சையை மீள நடாத்துதல்  

உடல் →
மேற்படி பெயரையுடைய நான் (பதிவிலக்கம்: EU/IS/2018/AVC/17) தங்களுக்கு அறியத்தருவதாவது, நான் தற்போது 2ஆம் வருட, 2ஆம் அரையாண்டில் படித்துக் கொண்டிருக்கின்றேன். எனது காலிலே ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஏப்ரல் 2016 இல் நடந்த 1ஆம் அரையாண்டுப் பீட்சையில் இலங்கை வரலாறு (பாட இல.) என்ற பாடத்திற்குத் தோற்றமுடியாமல் போய்விட்டது (வைத்திய சான்றிதழ் இணைக்கப் பட்டுள்ளது). எனவே தயவுசெய்து இப்பரீட்சையை மீண்டும் நடாத்த ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முடிவு →
நன்றி.

கையொப்பம் →
இங்ஙனம்,
உண்மையுள்ள,
(அ.சுதாகர்)


உறவுமுறைக் கடிதம்


அனுப்புநர் →
சுதாகர்,
கிழக்குப் பல்கலைக்கழகம். இலங்கை 
2020.05.23

விளிப்பு →
அன்புள்ள அம்மா,

உடல் →
நான் இங்கு நலமாக இருக்கின்றேன். பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகளெல்லாம் இப்போது குறைந்துவிட்டன. அடுத்த மாதம் பரீட்சை தொடங்கவுள்ளது. அதனால் பரீட்சை முடிந்த பின்னரே ஊருக்கு வருவேன். அப்பாவிடமும் அண்ணாவிடமும் நான் கேட்டதாகச் சொல்லவும். இத்துடன் முடிக்கின்றேன்.

கையொப்பம் →
இப்படிக்கு,
அன்புள்ள மகன்,
(அ.சுதாகர்)


விண்ணப்பக் கடிதம்


அனுப்புநர் →
அ.சுதாகர், 
ஆசிரியர், 
மட்/செங்கலடி மகாவித்தியாலயம், 
செங்கலடி.
2020.07.10.

பெறுநர் →
மாகாண கல்விப் பணிப்பாளர்,
மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம்,
கிழக்கு மாகாணம்,
திருகோணமலை.

ஊடாக →
வலயக் கல்விப் பணிப்பாளர்,
பிரதிக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம், 
மட்டக்களப்பு.

அதிபர்,
மட்/செங்கலடி மகாவித்தியாலயம்,
செங்கலடி,

விளிப்பு →
அம்மணி/ஐயா,

தலைப்பு →
இடமாற்றம் கோருதல்

உடல் →
மேற்படி பெயரையுடைய நான் தங்களுக்கு அறியத் தருவதாவது. நான் கடந்த எட்டு வருடங்களாக மேற்படி பாடசாலையில் தமிழ் பாட ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன். அதேவேளை எனது ஊராகிய களுவாஞ்சிகுடியில் இருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தினமும் 30 கிலோமீற்றர் தூரம் பிரயாணம் செய்து பாடசாலைக்கு வருகின்றேன். எனவே தயவுசெய்து எனது நிலையைக் கருத்திற்கொண்டு எனக்கு கறுவாஞ்சிகுடி மகாவித்தியாலயத்துக்கு இடமாற்றம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முடிவு →
நன்றி.

கையொப்பம் →
இங்ஙனம்,
உண்மையுள்ள,
(அ.சுதாகர்)


அலுவலக கடிதம்


அனுப்புநர் →
அதிபர்,
மட்/செங்கலடி மகாவித்தியாலயம், 
செங்கலடி, 
மட்டக்களப்பு.
2020.07.02.

பெறுநர் →
மாகாண கல்விப் பணிப்பாளர், 
மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம், 
கிழக்கு மாகாணம், 
திருகோணமலை.

ஊடாக →
வலயக் கல்விப் பணிப்பாளர்
வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம், 
மட்டக்களப்பு.

விளிப்பு →
அம்மணி/ஐயா,

தலைப்பு →
கணினி கோருதல்

உடல் →
எமது பாடசாலையில் மாணவர்களின் கற்பித்தல் செயற்பாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்த 5 கணினிகளில் 2 கணினிகள் திருத்தமுடியாதவகையில் பழுதடைந்துவிட்டன. இதனால் மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சி அளிப்பதிலே சிரமங்கள் ஏற்பட்டுள்ளமையைத் தங்களின் மேலான கவனததிற்குக் கொண்டுவருகின்றேன். எனவே மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இரு பெற்றுத்தர அவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். கணினிகளைப்

முடிவு →
நன்றி.

கையொப்பம் →

இப்படிக்கு,
(அதிபர்)


அறிக்கை 

குறிப்பிட்ட ஒரு விடயம் சம்பந்தமான தகவல்களை ஒன்று திரட்டி அதனை ஒழுங்குபடுத்தி முன்வைப்பது அறிக்கை எனப்படும். அறிக்கை. நிர்வாக, சமூக நடவடிக்கைகளில் மட்டுமன்றி அரசியல், பொருளாதார சமய நடவடிக்கைகளிலும் முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றது.


அறிக்கையின் பயன்கள்

முகாமைத்துவ நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்துவதன் மூலம் முகாமைத்துவத்திற்கு உதவுகின்றது.

ஒரு சம்பவத்தின் பிரச்சினையின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதற்கு.

ஒரு பிரச்சினை முரண்பாட்டுக்கான தீர்வினை எடுப்பதற்கு.

எதிர்காலச் செயற்பாடுகளை முறையாகத் திட்டமிட்டுச் செயற்படுத்த.

ஒரு நிரந்தரப் பதிவாகவும் தொடர்புக்கான மூலமாகவும் அமைதல்.

தேவையானவருக்குத் தகவல்களை வழங்குவதற்கு.


அறிக்கையின் பண்புகள்
ஒழுங்குபடுத்திக் கூறுதல்.
உள்ளதை உள்ளபடி கூறுதல்.
தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறுதல்.
எளிமையாகக் கூறுதல்.


அறிக்கையின் வகைகள்
கூட்டங்களுக்கான அறிக்கை 
அலுவலகம் சார்ந்த அறிக்கை - அரச, தனியார் 
ஆய்வு அறிக்கை - காணாமல் போனோர் தொடர்பான  
வருடாந்த அறிக்கை - சங்கங்கள், பாடசாலைகள் 
நிகழ்வுகள் தொடர்பான அறிக்கை - சிரமதானம், சுற்றுலா


அறிக்கையின் படிமுறை


அறிக்கைக்கான தகவல்களைத் திரட்டுதல் 

திரட்டப்பட்ட தகவல்களை ஒழுங்குபடுத்துதலும் 

தொகுதியாக்குதலும் சட்டகம் அமைத்தல்

அறிக்கையின் தலைப்பு - மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் 2வது ஆண்டறிக்கை

யாருக்கு யாரிடமிருந்து அனுப்பப்படுகின்றது என்பது - யாருக்காக உத்தேசிக்கப்பட்டது. இன்னாருக்குச் சமர்ப்பிக்கப் படுகின்றது என்பது.

எழுதிய திகதி

அதன் கீழ் அறிக்கையின் தராதரம் - அவசரமானது, இரகசியமானது என்பதைக் குறிப்பிடல்

அறிமுகம் - அறிக்கை என்ன விடயம் பற்றியது என்பதை எடுத்துக் கூறுவதாக இது அமையும். அதாவது அறிக்கையின் நோக்கம்.

உறுப்பினர்கள் பற்றி - மன்றங்கள் பற்றிய ஆண்டறிக்கையில்

பிரதான விடயம்

பிரதான விடயங்களுக்குத் தனித்தனியாக தலைப்புக்கள் அல்லது பந்திகள் கொடுக்க வேண்டும்.

அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொகுத்துக் கூறுதல். அந்த விடயம் சம்பந்தமான நடைமுறைகள், செயல்முறைகள் பற்றிய விபரிப்பாக அமையும்.

மேற்கொண்ட நடவடிக்கைகள், தொடர்புகள் அல்லது விஜயங்கள்

உசாவிய ஆவணங்கள், கோப்புகள்.

செய்யப்பட்ட கணிப்புகள், பகுப்பாய்வுகள்

முதலியவற்றைச் சுருக்கமாக விளக்க வேண்டும். உதாரணமாக தமிழ்ச்சங்கம் ஒன்றின் ஆண்டறிக்கை ஒன்றிலே குறித்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பற்றிய விபரிப்புகள் இடம்பெறும் கூட்டங்கள். விழாக்கள், தமிழிகைப் போட்டி, நாடக விழா, ஆன்மீக வகுப்புகள்.

பிரதான விடயம் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களாக அமையுமிடத்து பொருத்தமான தலைப்புக்கள், உப தலைப்புக்களுடன் கால ஒழுங்கு, முக்கியத்துவ ஒழுங்கு அல்லது வேறு தர்க்கரீதியான தொடர்புப்படி விளக்கமாக எழுதப்படும்.

சில அறிக்கைகளில் கண்டுபிடிப்புக்கள் கூறவேண்டி இருக்கும் பட்சத்தில் பிரதான விடயத்தின் பின் கூறலாம்.

முடிவுகள் - அடைந்த தீர்மானங்கள் ஏதும் இருப்பின் அவற்றைக் குறிப்பிடலாம். விசாரணைகளின் அடிப்படையில் எடுத்த செயற்பாடு அல்லது அடைந்த தீர்மானங்கள் இங்கு இடம்பெறும்.

சிபாரிசுகள் - தீர்மானம் எடுப்பதற்கு ஏதுவாக விசாரணை செய்யப்பட்ட பிரச்சினைக்கான தீர்வு ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். அதாவது சில வகையான அறிக்கைகளுக்கு விதப்புரைகள் எழுதவேண்டி இருக்கும். அப்படியானவற்றுக்கு விதப்புரைகள் என உப தலைப்பிட்டு விதப்புரைகளைச் சுருக்கமாக எழுதவேண்டும்.

அறிக்கையைப் பூர்த்தி செய்த பின்னர் அதனை வாசித்து தேவையான திருத்தங்களைச் செய்தல் வேண்டும். தேவைப்படின் மீண்டும் அறிக்கையை எழுதிக்கொள்ளலாம். கொடுக்கப்பட்ட தகவல்களுக்கு ஆதாரங்களையும் உசாத்துணை களையும் அறிக்கையுடன் இணைத்தல் வேண்டும். இறுதியில் எழுதியவரின் ஒப்பம். பதவி முதலியவை இடம்பெறவேண்டும். ஒரு மன்றத்தின் அறிக்கை (ஆண்டறிக்கை. கூட்டறிக்கை) பெயலாளரால் தயாரிக்கப்பட்டு அவரால் ஒப்பமிடப்படும்.


ஆண்டறிக்கை

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் 10ஆவது ஆண்டறிக்கை

முன்னுரை - கடந்த ஓராண்டு மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய கலை, இலக்கிய. சமூகப்பணிகளை அறிக்கையாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். சங்கத்தின் இத்தகைய பணிகள் நமது பிரதேச மக்களுக்கும் கலை. இலக்கிய ஆர்வலர்களுக்கும் அதிகம் நன்மை அளித்துள்ளன.

சங்க உறுப்பினர்கள் - சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களாக 20 பேரும் சாதாரண உறுப்பினர்களாக 70 பேரும் உள்ளனர். இவ்வாண்டு மேலும் 20 உறுப்பினர்கள் சாதாரண உறுப்பினர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளனர். எனவே எமது சங்கம் வளர்ச்சியை நோக்கிச் செல்வதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். 

கூட்டங்கள் - இந்த ஆண்டில் ஐந்து செயற்குழுக் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களிலே பல செயற்றிட்டங்கள் ஆராயப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான விடயங்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

விழாக்கள் - கடந்த ஆவணி மாதம் பாரதிக்கு விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவில் கலை நிகழ்வுகளும் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. ஐப்பசி மாதம் பாரம்பரியக் கலை விழா நடாத்தப்பட்டது. இவ்விழாவில் உள்ளூர்க் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும். இவ்விழா சங்கத்திற்குப் பெரும் புகழை ஈட்டித்தந்தது. சங்கம் நடத்திய இந்த விழாக்களின்போது ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் கலந்து சிறப்பித்தவர்களுக்கும் நன்றிகள்.

இலவச வகுப்புக்கள் - சங்கம் ஞாயிறு தோறும் அறநெறி வகுப்புக்களையும் சங்கீத நடன வகுப்புக்களையும் நடத்தி வருகின்றது. இவ்வகுப்புக்களின் ஊடாக சங்கம் எமது பிரதேச மாணவர்களின் ஒழுக்க சீலத்தையும் சங்கீத நடன ஆற்றலையும் வளர்த்து வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி - இந்த ஆண்டில் சங்கத்தின் செயற்பாடுகளை முழுமையாக நிறைவேற்ற துணை புரிந்த உறுப்பினர்களுக்கும் ஒத்தாசைகள் வழங்கிய மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சங்கம் நிகழ்வுகளையும் விழாக்களையும் நடத்தியபோது பொருளாதார உதவிகள் புரிந்த அன்பர்களுக்கும் அவற்றில் கலந்துகொண்டு சிறப்பித்த ஆர்வலர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

செயலாளர்,
(பெயர்/பதவி முத்திரை)


துண்டுப் பிரசுரங்கள்

அரசியல், சமய, நடைமுறைச் சமூகத் தேவைகளுக்காக பல்வேறுபட்ட ஆக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றே துண்டுப் பிரசுரங்கள். மக்களுக்குத் தகவல்களை இலகுவாகப் பரப்புவதற்கு இந்த துண்டுப்பிரசுரங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவை பின்வரும் முக்கிய நோக்கங்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றன.

மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு
முக்கிய அல்லது அவசரத் தகவல்களைத் தெரிவிப்பதற்கு
சில வேண்டுகோள்கள், கட்டளைகளை விடுப்பதற்கு

துண்டுப்பிரசுரங்கள் பல வகைப்படும். அவையாவன,

கொள்கைகளைப் பரப்புகின்ற துண்டுப்பிரசுரங்கள்
அறிவுறுத்தல் துண்டுப் பிரசுரம்
மக்களுக்கு வேண்டுகோள்களை விடுக்கும் துண்டுப்பிரசுரம்
விளம்பரத்திற்கான பொருட்கள் தேவைகள் பற்றிய துண்டுப் பிரசுரம்


கொள்கைகளைப் பரப்புகின்ற துண்டுப்பிரசுரங்கள்


சமயப்பிரசாரம்

பல்றுேபட்ட மதங்களும் தமது சமயக் கருத்துக்களைப் பரப்புவதற்கும் மதம் மாற்றுவதற்கும் பக்தி உணர்வை ஊட்டுவதற்கும் துண்டுப்பிரசுரங்களைப் பிரசுரித்து வருகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே கிறிஸ்தவ மதமாற்றச் செயற்பாட்டுக்கு துண்டுப்பிரசுரங்கள் முக்கியமான ஊடகங்களாக பயன்படுத்தப்பட்டன. இந்தச் சூழலில் சைவசமயக் கருத்துக்களைப் பரப்பவும் அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்வதைத் தடுக்கவும் ஆறுமுகநாவலர் போன்றோர் துண்டுப் பிரசுரங்களை முக்கிய கருவியாகப் பயன்படுத்தினர். அதேவேளை இந்தத்துண்டுப் பிரசுரங்கள் இலக்கியத்தின் ஒரு பகுதியாகவும் கருதப்பட்டன.


அரசியல் பிரசாரம்

அரசியல் கட்சிகள் தமது அரசியல் பிரசாரத்துக்காக துண்டுப் பிரசுரங்களைப் பெருமளவு வெளியிட்டு வருகின்றன. முக்கியமாக தேர்தல் காலங்களிலே மக்களைத் தம் பக்கம் ஈர்ப்பதற்காக துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்படுகின்றன. இப்பிரசுரங்களிலே கட்சியின் கொள்கைப் பிரகடனங்கள் தமது எதிர்காலத் திட்டங்கள். தாம் செய்த சாதனைகள் என்பவற்றோடு குறித்த அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை வாழ்த்துதல், எதிர்க் கட்சியினரைப் பழித்துரைத்தல் என்பனவும் முக்கிய விடயங்களாக அமைந்திருக்கும்.


அறிவுறுத்தல் துண்டுப் பிரசுரம்

மக்களை அறிவுறுத்தவும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவும் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்படுகின்றன. டெங்கு ஒழிப்பு. பொலித்தீன் ஒழிப்பு, சிறுவர் துஸ்பிரயோக ஒழிப்பு. சூழல் சுத்தம், மது ஒழிப்பு என்பன தொடர்பாக துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்படுகின்றன. இத்தகைய துண்டுப்பிரசுரங்களை சுகாதாரத் திணைக்களம், பிரதேச சபை, மாநகர சபை, தொண்டர் நிறுவனங்கள் முதலான நிறுவனங்கள் தயாரிக்கின்றன.


மக்களுக்கு வேண்டுகோள்களை விடுக்கும் துண்டுப்பிரசுரம்

அனர்த்த நிவாரணத்துக்கு உதவி கோரல்

சிரமதான அழைப்பு

பாதுகாப்புத் தொடர்பான வேண்டுகோள்

நோயாளிகளுக்கு உதவி கோரும் பிரசுரம்

மேற்குறிப்பிட்டவை வேண்டுகோள்களாக அமையும். 
உதாரணம் - சந்தேகத்துக்கு இடமான ஆட்கள். பொருட்களை அவதானித்தால் அறிவிக்கும் படி பிரசுரம் வெளியிடுவது.


விளம்பரத்திற்கான பொருட்கள் தேவைகள் பற்றிய துண்டுப் பிரசுரம்

இன்று அதிகம் நிலவுகின்றன.

பொருட்கள் தேவைகளை வழங்குவதற்காக, விற்பதற்காக துண்டுப்பிரசுரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வர்த்தக நோக்கம் வர்த்தக நோக்கில் பல்வேறு நிறுவனங்கள் துண்டுப்பிரசுரங்களை வெளியிடுகின்றன. (காணி, நகை விளம்பரம்)

சேவை நோக்கம் - இலவச மருத்துவ சேவை, இலவச கண் பரிசோதனைச் சேவை


துண்டுப்பிரசுரங்களை எவ்வாறு எழுத வேண்டும்?

கவர்ச்சிகரமான மொழிநடையில் எழுத வேண்டும்.

நிறுத்தற்குறிப் பயன்பாடு, பந்தியமைப்பு

சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுத வேண்டும்

கருத்துச் செறிவுடன் எழுத வேண்டும்.

மக்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக அமைதல் வேண்டும்.

நிறப்பயன்பாடு, பிரசுத்தின் அளவு, வடிவம், எழுத்து வடிவம், பயன்படுத்தும் படங்கள் என்பன கவனிக்கப்பட வேண்டும்.

அனைத்து துண்டுப்பிரசுரங்களும் அவசியம் கவர்ச்சியான படங்களுடன் கூடியதாக இருக்க வேண்டும் என்றில்லை. தேர்தல் பிரசாரத் துண்டுப் பிரசுரம், பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு. சமூக சீர்கேடு பற்றிய அறிவூட்டல், முதியோரைப் பேணுதல் முதலானவை கவர்ச்சியாக அமைவதில்லை.


துண்டுப்பிரசுரங்களின் அமைப்பு

பிரசுரத்தின் தலைப்பு கவர்ச்சிகரமானதாக அமைய வேண்டும்
விடயத்தை தெளிவாக உணர்த்த வேண்டும்.
மக்களை / வாடிக்கையாளர்களை விளித்தல்.
விடயம் பற்றிய சுருக்கமான தெளிவான விபரிப்பு.
பிரசுரத்தை வெளியிடுவோர் பற்றிய விடயங்கள் (பெயர், முகவரி. திகதி.)

பாடநெறி வகுப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் -
கவர்ச்சியான விளிப்பு
பாடநெறிப் பிரிவுகள் தெரிவு செய்யும் வாய்ப்பு
கட்டணம்
இடம்
தொடங்கும் திகதி, விண்ணப்ப திகதி
விண்ணப்பத்திற்கான தகுதி
சலுகைகள் பற்றிய விபரம்
தொடர்பிலக்கம்
வெளியிடுவோர் பற்றிய விபரம்
அதன் அவசியம்

நன்றி

Post a Comment

0 Comments