கம்பராமாயணம் - குகப்படலம் - KAMBARAMAYANAM - KUGAPPADALAM


கம்பராமாயணம்

குகப்படலம்



கம்பராமாயணம் - குகப்படலம் - KAMBARAMAYANAM - KUGAPPADALAM

பரதன் கங்கையையடைதல்

01.
பூ விரி பொலன் கழல் பொரு இல் தானையான்
காவிரிநாடு அன்ன கழனி நாடு ஒரீஇத் 
தாவர சங்கமம் என்னும் தன்மைய 
யாவையும் இரங்கிடக் கங்கை எய்தினான்.

பூ வேலைப்பாட்டினால் சிறப்புப் பெற்ற, பொன்னால் செய்யபட்ட வீரக் கழழை அணிந்த ஒப்பற்ற சேனையை உடைய பரதன் காவிரி நதியால் வளம் பெற்ற சோழ நாட்டை ஒத்த வயல் வளம் மிக்கதாகிய கோசலை நாட்டை விட்டு நீங்கி, நிலத்திணை, இயங்குதிணை ஆகிய இருவகைப்பட்ட எல்லா உயிர்களும் வருத்தமுற கங்கைக் கரையை அடைந்தான்.


பரதனொடு சென்ற சேனையுள் யானையின் மிகுதி

02.
எண்ணரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது 
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெம் கரி மதம் அத்து அருவி பாய்தலால்
உண்ணவும் குடையயும் உரித்து அன்று ஆயதே.

இடம் அகன்ற அதிகளவு நீரை உடைய கங்கையாறு. பெருமையுடைய கொடிய யானைகளின் மதநீர்ப் பெருக்காகிய அருவி எல்லா இடங்களிலும் பாய்ந்து ஓடுவதால், எண்ணிக் கணக்கிடுவதற்கு முடியாத வண்டுக் கூட்டங்களுக்கு அல்லாமல் ஏனைய உயிர்களுக்கு குடிக்கவும். குளித்து மூழ்கவும் உரிமையற்றது ஆகிவிட்டது.


குதிரைகளின் மிகுதி

03.
அடி மிசைத் தூளி புக்கு அடைந்த தேவர்தம் 
முடி உறப் பரந்தது; ஓர் முறைமை தேர்ந்திலேம்; 
நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும் 
பொடி மிசைப் புரண்டவும் புரவி ஈட்டமே.

குதிரைகளின் காலடிகளால் மேலெழுந்த தூசி தேவருலகத்தில் புகுந்து. அங்குள்ள தேவர்களின் தலைகள் மீது படும் படியாகத் தேவருலகம் முழுவதும் பரவியது. இத்தகு இயல்பினை அனுமானிக்க முடிவதேயன்றி, ஆராந்தறிய எம்மால் முடியவில்லை. பெருமூச்சு விட்டு நீரைப் பருகியவை, நீரில் நீந்திக் கொண்டு இருந்தவை, மண்ணில் விழுந்து புரண்டவை எல்லாம் குதிரைத் தொகுதிகளே ஆகும்.


காலாட்படையின் மிகுதி

04.
பாலை ஏய் நிறத்தொடு பண்டு தான் படர் 
ஓலை ஏய் நெடுங்கடல் ஓடிற்று இல்லையால்; 
மாலை ஏய் நெடுமுடி மன்னன் சேனையாம் 
வேலையே மடுத்தது அக் கங்கை வெள்ளமே.

அக் கங்கையாற்றின் நீர்ப் பெருக்கு, பாலினை ஒத்த வெண்மை நிறத்துடன் தான் முன்பு சென்று சேர்கின்ற ஆராவாரம் மிக்க கடலினிடத்தில் சென்று கலந்ததில்லை. ஏனெனில், பூமாலை பொருந்திய நீண்ட மணிமுடியைச் சூடிய இளவரசனாகிய பரதனது சேனையாகிய கடல். அதனை உண்டு விட்டது.


பரதன் பின் சென்ற படையின் அளவு

05.
கான்தலை நண்ணிய காளை பின் படர்
தோன்றலை அவ் வழி தொடர்ந்து சென்றன 
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று பத்தாயிரத்து இரட்டி முற்றுமே.

காட்டினிடத்தே சென்ற இராமன் பின்னே அவனை நாடிச் சென்ற பரதனை அந்த வழியிலே பின் தொடர்ந்து சென்ற சேனைகள் முழுவதும் பெரியோர்களாற் கணக்கிட்டு உணர்த்தப் பெற்ற அறுபதினாயிரம் அக்குரோணிகள் ஆகும்.

06.
அப்படை கங்கையை அடைந்த ஆயிடைத் 
'துப்பு உடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை 
ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே கொலாம்
இப்படை எடுத்தது' என்று எடுத்த சீற்றத்தான்.

அந்த சேனை கங்கையாற்றின் வட கரையை நெருங்கிய அச் சமயத்தில் இந்தச் சேனை புறப்பட்டதன் நோக்கம், பவளமுடைய கடலிலிருந்து நீரை முகந்து சூலுற்ற கருமேகத்தை உவமையாகப் பெற்ற திருமேனியையுடைய இராமபிரானோடு போர் செய்வதற்காகவோ? எனக் கருதி மேலெழுந்த கோபமுடையவனாய்க் கங்கையின் தென்கரையில் வந்து தோன்றினான்.-


படை வரக் கண்ட குகன் நினைவும் செயலும்

07.
குகன் எனும் பெயரிய கூற்றின் ஆற்றலான் 
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான்
நகை மிகக் கண்கள் தீ நாற நாசியில் 
புகை உறக் குனிப்புறும் புருவப் போர் விலான்.

குகன் என்ற பெயரையுடைய, இயமனை ஒத்த வீர பராக்கிரமத்தையுடைய தலைவன். கூட்டமாயுள்ள வலிமைமிக்க சேனையை ஒரு தூசி போலப் பார்ப்பவனாய், இகழ்ச்சிச் சிரிப்பு மிகுந்திட, கண்களில் கோபத்தினால் நெருப்புத் தோன்ற, மூக்கிலிருந்து புகை வெளிவர, மேல் வளைந்த புருவமாகிய போர்க்குரிய வில்லை உடையவனானான்.

08.
மை உறவு உயிர் எலாம் இறுதி வாங்குவான் 
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான் 
ஐ ஐநூறாயிரம் உருவம் ஆயின 
மெய் உறு தானையான் வில்லின் கல்வியான்.

தீமை உண்டாக. இறுதி நாள் வந்தபோது உயிர்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கின்ற கையில் பொருந்தி மூன்று கிளைகளாகப் பிரியும் சூலத்தை ஏந்திய இயமனே அழகிய ஐந்து இலட்சம், வடிவங்கள் எடுத்தாற்போன்ற จอใน உடம்பினையுடைய சேனையை உடையவன், வில்வித்ததையில் தேர்ந்தவன்.

09.
கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன் 
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன் 
'கிட்டியது அமர் 'எனக் கிளரும் தோளினான். 

இடைக்கச்சியில் கட்டப்பட்டுள்ள உடைவாளினையும், பற்களால் உதட்டைக் கடித்துக் கொண்டிருக்கும் வாயினையும், கடுமையாகப் பேசும் சொற்களையும், கண்கள் விழித்துப் பார்க்கையில் நெருப்புத் தன்மையையும், அடிக்கப்படும் உடுக்கையையும், போர் குறித்து ஒலிக்கப்பெறும் கொம்பினையும், “போர் அருகில் நெருங்கி வந்து விட்டது" என்று கருதி மகிழ்சியால் உடையவனாகி.. மேல் எழும்பும் தோள்களையும் ஊது

10.
எலி எலாம் இப்படை; அரவம் யான்' என 
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான்; 
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப் 
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே.

இந்தச் சேனைகள் யாவும் எலிகளாகும். யான் இந்த எலிகளைத் தின்றொழிக்கும் பாம்பாவேன் என்று வீர வார்த்தை பேசி, வலிமை நிரம்பிய உலகத்தில் வாழுகின்ற வன்மையான கூரிய நகத்தையுடை புலிகள் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சேரந்தன என்று சொல்லும் படியாக ஆரவாரம் மிக்க சேனையை மகிழ்ச்சியுடன் அழைத்தனன்.

11.
மருங்கு அடை தன் கரை வந்து தோன்றினான்; 
ஒருங்கு அடை நெடும் படை ஒல் என் ஆர்ப்பினோடு 
அருங் கடையுகம் தனில் அசனி மா மழை 
கருங்கடல் கிளர்ந்து என கலந்து சூழவே.

ஒருங்கு சேர்ந்து வந்த பெரிய சேனை. அரிய கடையூழிக் காலத்தில் இடியோடு கூடிய மேகமும், கரிய கடலும் மிக்கு எழுந்தாற் போல “ஒல்” என்னும் போராரவாரத்தோடு ஒன்று சேர்ந்து தன்னைச் சுற்றி வர குகன் பக்கத்தில் உள்ள தெற்குக் கரையில் வந்து தோன்றினான்.


குகன் தன் படையினர்க்கு இட்ட கட்டளை 

12.
தோன்றிய புளிஞரை நோக்கிச் 'சூழ்ச்சியின் 
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு 
என்றனென்; என் உயிர் துணைவற்கு ஈகுவான் 
ஆன்ற பேர் அரசு; நீர் அமைதிர் ஆம் 'என்றான்.

தன்னால் அழைக்கப்பட்டு தன் முன் வந்துநிற்கும் வேடர் சேனையினரை நோக்கி, நிரம்பிய பெரிய அரசாட்சியை, என் உயிர் போலச் சிறந்த தோழனாகிய இராமனுக்குத் தருவதற்காக, அதனைத் தடுக்கும் ஆலோசனையுடன் வடகரையில் காலூன்றி நிற்கும் பரதனின் சேனையைப் போரில் கொன்று வீர சுவர்க்கம் செல்ல விடுவதற்கு தொடங்கியுள்ளேன். நீங்களும் இதற்கு உடன்படுவீர்களாக என்று சொன்னான்.

13.
"துடி எறி; நெறிகளும் துறையும் சுற்றுற 
ஒடி எறி; அம்பிகள் யாதும் ஓட்டலிர்; 
கடி எறி; கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி; எறி பட " எனப் பெயர்த்தும் கூறுவான்.

வருவதற்குரிய வழிகளையும், துறையையும் அழித்து நீக்கிச் சூழலில் இல்லாமற் செய்யுங்கள் தோணிகளில் ஒன்றையும் ஓட்டாதீர்கள். விரைந்து அலைவீசி வரும் கங்கையாற்றின் தென்கரைக்கு வந்தோர்களைப் பிடியுங்கள். அவர்களை இறக்கும்படி அழியுங்கள் என்று குகன் கூறி. மேலும் சில வீர வார்த்தைகளைச் சொல்லலுற்றான்.


குகன் மீட்டும் கூறல்

14.
அஞ்சன வண்ணன் என் ஆர் உயிர்
நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
மன்னரும் வந்தாரே!
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன, உ
செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், "நாய் குகன்"
என்று எனை ஓதாரோ?

என் அரிய உயிர்த் துணைவனாகிய, மைபோலும் கரிய நிற மேனி அழகனாகிய இராமபிரான் ஆட்சியுரிமை எய்தாதபடி சூழ்ச்சியால் அவ்வரசாட்சியை கைப்பற்றிய அரசரும் வந்துள்ளார் அன்றோ! நெருப்பைக் கக்குகின்றனவாய என் சிவந்த அம்புகள் செல்லாமல் போய்விடுமோ? இவர்கள் பிழைத்து இராமன் இருக்கும் இடம் போய் விட்டால், உலகோர் நாய் போன்ற கீழான குணமுடையவன் என்று என்னைப்பற்றி சொல்லாமல் இருப்பார்களா?

15.
ஆழ நெடுந்திரை ஆறு 
கடந்து இவர் போவாரோ? 
வேழ நெடும்படை கண்டு 
விலங்கிடும் வில்லாளோ? 
'ஏழைமை வேடன் இறந்திலன்'
தோழமை என்று அவர் சொல்லிய
சொல் ஒரு சொல் அன்றோ?
என்று, எனை ஏசாரோ? 

நீண்ட அலைகளை உடைய கங்கை ஆற்றைக் கடந்து அப்பாற் செல்வார்களோ? யானைகளை உடைய நீண்ட பெரும் சேனையைப் பார்த்துப் பயந்து புறமுதுகு காட்டிச் செல்கின்ற வில் வீரனோ நான்? உனக்கும் எனக்கும் நட்பு என்பதாக அந்த இராமபிரான் கூறிய வார்த்தை ஒப்பற்ற வார்த்தை அல்லவா? அற்பனாகிய இந்த வேடன் இவ்விதம் மானமழிந்து வாழ்வதைவிட இறந்து போகலாமே! என்று உலகத்தார் என்னைப் பழியாது விடுவார்களோ?

16.
முன்னவன் என்று நினைந்திலன்; 
மொய் புலி அன்னான், ஓர் 
பின்னவன் நின்றனன் என்றிலன்; 
அன்னவை பேசானேல், 
என் இவன் என்னை இகழ்ந்தது? 
இவ் எல்லை கடந்து அன்றோ? 
மன்னவர் நெஞ்சினில், வேடர் 
விடும் சரம் வாயாவோ? 

இப் பரதன், இராமபிரான் தனது அண்ணன் என்று நினைத்தானில்லை. வலிமை நெருங்கிய புலியீனையொத்த இலக்குவன் அவனுக்குத் துணையாக உள்ளான் என்பதையும் கருதினானில்லை. அந்த இராம, இலக்குவணர்களைப் பற்றி நினைக்காவிட்டாலும் என்னையும் ஒரு பொருட்டாக மதியாமல் இகழ்ந்தது எது கருதி? எனது எல்லையைக் கடந்து சென்றால் அல்லவா? வேடர்கள் விடுக்கின்ற அம்புகள் அரசர்களின் மார்புகளில் தைத்து உள் நுழைய மாட்டாவோ?

17.
பாவமும் நின்ற பெரும்பழியும்
பகை நண்போடும் 
ஏவமும் என்பவை மண்ணுலகு 
ஆள்பவர் எண்ணாரோ? 
ஆ! அது போக! என் ஆர் உயிர்த்
தோழமை தந்தான்மேல் 
போவது, சேனையும் ஆர்
உயிரும் கொடு போயன்றோ? 

இப் பூவுலகத்தை ஆளுகின்ற அரசர்கள் பாவத்தையும் தம்மேல் நின்ற பெரும் பழியையும் பகைவர்கள். நண்பர்கள் யார்? யார்? என்பதையும் விளையும் குற்றங்களையும் இவை போலச் சொல்லப்படுவனவற்றையும் நினைக்கமாட்டார்களோ? அது கிடக்கட்டும். எனக்கு அரிய உயிரோடு ஒத்த நட்புறவைத் தந்த இராமன்மேல் படையெடுத்துச் செல்வது. தம்முடைய அரிய உயிரையும், சேனைகளையும் உடன் கொண்டு சென்ற பிறகல்லவா முடியும்.

18.
அருந்தவம் என் துணை ஆள,
இவன் புவி ஆள்வானோ?
மருந்து எனின் அன்று உயிர்; வண் புகழ் 
கொண்டு பின் மாயேனோ?
பொருந்திய கேண்மை உகந்தவர்
தம்மொடு போகாதோ
இருந்ததும் நன்று கழிக்குவென்
என்கடன் இன்றோடே.

எனக்கு நண்பனாகிய இராமன் அரிய தவத்தைச் செய்து கொண்டிருக்க. இப்பரதன் உலகத்தை ஆட்சி செய்வானோ? ஏன்னுடைய உயிர் கிடைத்தற்கரிய தேவாமிர்தமோ என்றால் இல்லை. அதனால் சிறந்த புகழைப் பெற்று அதன் பிறகு உயிர் துறக்கமாட்டேனோ? மிகவும் ஒட்டிய நட்புறவை என்பால் கொண்டு மகிழ்ந்த இராம, இலக்குவர்களோடு உடன் செல்லாமல் இங்கேயே இருந்தது நல்லதாகப் போயிற்று. நான் இராமனுக்குச் செய்ய வேண்டிய கடைமையை இன்றைக்கே செய்து முடிப்பேன்.

19.
தும்பியும் மாவும் மிடைந்த 
பெரும்படை சூழ்வாரும் 
வம்பு இயல் தார் இவர் வாள் வலி 
கங்கை கடந்து அன்றோ? 
வெம்பிய வேடர் உளீர்! துறை 
ஓடம் விலக்கீரோ 
நம்பி முன்னே இனி நம் உயிர் 
மாய்வது நன்று அன்றோ? 

யானைகளும், குதிரைகளும் நெருங்கிய பெரிய சேனையால் சூழப்படுதல் பொருந்திய, புதுமணம் வீசும் மாலையை அணிந்துள்ள இவரது வாளேந்திய படையினரின் ஆற்றலை இக் கங்கையை கடந்து போன பின் அல்லவா காட்ட முடியும் மனப்புளுக்கம் அடைந்துள்ள வேடர்களே கங்கை நீர்த்துறையில் இவர்களுக்கு ஓடம் விடுதலை நிறுத்தி விடுங்கள் இராமனுக்கு முன்னாலேயே நமது உயிர் போவது இனிமேல் நல்லதல்லவா?

20.
போன படைத் தலை வீரர் 
தமக்கு இரை போதா இச் 
சேனை கிடக்கிடு; தேவர் வரின், 
சிலை மா மேகம் 
சோனை படக் குடர் சூறை
பட சுடர் வாளோடும்  
தானை படத் தனி யானை
படத் திரள் சாயேனோ 

வந்துள்ள சேனையிலுள்ள வீரர்களுக்கு ஒரு வேளைப் போருக்கும் காணாத இப் பரதனின் சேனை கிடக்கட்டும். தேவர்களே படையெடுத்து வந்தாலும் என் வில்லாகிய கரிய மேகம் அம்பு மழையைச் சொரிய எதிரிகளின் குடல்கள் சிதைந்து அழிய எதிர்ப் படைகள் தம் கைகளிற் பிடித்த வாள்களோடும் இறந்துவிட, ஒப்பற்ற யானைகளும் அழிய, கூட்டத்தை நிலை குலையச் செய்யாமல் விட்டு விடுவேனோ?

21.
நின்ற கொடைக் கை என் அன்பன் 
உடுக்க, நெடுஞ் சீரை 
அன்று கொடுத்தவள் மைந்தர் 
பலத்தை, என் அம்பாலே 
கொன்று குவித்த நிணம் கொள் 
பிணக் குவை கொண்டு ஓடித் 
துன்று திரைக் கடல், கங்கை 
மடுத்து இடை தூராதோ? 

அந்நாள் திருக்கரக் கரங்களையுடைய எனது அன்பிற்குரிய இராமன் பெரிய மரவுரியை உடுக்கும் நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தவனாகிய கைகேயியின் மைந்தரான பரதன் சேனையை, என் அம்பால் கொன்று குளியல் செய்த. கொழுப்பு மிகுந்த பிணங்களின் திரட்சியை, இந்த கங்கையாறானது இழுத்துக் கொண்டு விரைவாக ஓடி, நெருங்கிய அலைகளை உடைய கடலில் அவற்றைச் சேர்த்து, அக்கடலினிடத்தைத் தூர்த்து விடாதோ?

22.
"ஆடு கொடிப் படை சாடி,
அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது, பார் " எனும்
இப் புகழ் மேவீரோ?
நாடு கொடுத்த என் நாயகனுக்கு 
இவர், நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி,
எடுத்தது காணீரோ? 

அசையும் கொடிகளையுடைய சேனைகளைக் கொண்டழித்து. தருமத்தின் துணைவர்களான இராம, இலக்குவணர்கள் ஆளும்படி வேடுவர்கள் பூமியை மீட்டுக் கொடுத்தனர் என்ற இப் புகழை அடையுங்கள். தான் ஆட்சிபுரிய வேண்டிய நாட்டைக் கொடுத்துவிட்டு வந்த என் தலைவனாகிய இராமனுக்கு, பரதனாகிய இவர் நாம் ஆட்சி செய்யும் நமக்குரிமையாகிய இந்தக் காட்டையும் ஆட்சி செய்யும்படி கொடுக்க மனமில்லாதவராகி படையெடுத்து வந்துள்ளதைக் காணுங்கள்.

23.
மா முனிவர்க்கு உறவு ஆகி, 
வனத்திடையே வாழும் 
கோ முனியத் தகும் என்று, 
மனத்து இறை கொள்ளாதே, 
ஏ முனை உற்றிடில், ஏழு 
கடல் படை என்றாலும் 
ஆ முனையின் சிறு கூழ் 
என இப்பொழுது ஆகாதோ?

பெரிய தவசிகளுக்கு இனிய சுற்றமாகிக் காட்டினிலே வாழும் இராமன் வெறுத்துக் கோபிப்பான் என மனதின் கண் சிறிதும் நினைக்காமல், போர் முனையில் சந்தித்துப் போரிட்டால், இந் நேரத்தில் ஏழு கடலளவு சேனைகள் என்றாலும் பசு, உண்ணும் பொருட்டு முயல்கையில், அதன் எதிரில் கிடந்த சிறிய புல் என்று சொல்லும் படி அனைத்தும் அழிந்து போகாதோ?


சுமந்திரன் பரதனிடம் குகன் தன்மை சொல்லல்

24.
என்பன சொல்லி, இரும்பு அன
மேனியர் ஏனோர் முன்
வன் பணை வில்லினன், மல் உயர் 
தோளினன், வாள் வீரற்கு
அன்பனும், நின்றனன்; நின்றது
கண்டு, அரி ஏறு அன்ன
முன்பனில் வந்து, மொழிந்தனன்
மூரிய தேர் வல்லான்.

வலிய கட்டமைந்த பருத்த வில்லினை உடையவனும், மல் யுத்தத் தொழிலால் சிறப்புற்ற தோளினை உடையவனும், வாள் வலிமையிற் சிறந்த இராமபிரானுக்கு அன்பு பூண்டவனும் ஆகிய குகன், இரும்பினை ஒத்த வலிமையுடைய ஏனைய வேடுவ வீரர்களுக்கு முன்னால் இத்தகைய வீர வார்த்தைகள் பலவற்றைக் கூறி நின்றான். குகன் நின்ற கோலத்தைப் பார்த்து, வலிய தேரை ஓட்டுதலில் வல்லவனாகிய சுமந்திரன், ஆண் சிங்கத்தை ஒத்த வலிமை படைத்த பரதனுக்கு முன்னால் வந்து நின்று சில சொற்களைக் கூறலுற்றான்.

25.
"கங்கை இருகரை உடையான்,
கணக்கு இறந்த நாவாயான், 
உங்கள் குலத் தனி நாதற்கு 
உயிர் துணைவன், உயர் தோளான், 
வெம் கரியின் ஏறு அனையான்,
வில் பிடித்த வேலையினான்,
கொங்கு அலரும் நறும் தண் தார்க் 
குகன் என்னும் குறி உடையான்"

கங்கையாற்றின் இரண்டு கரைப் பகுதிகளிலும் உடைய நிலங்களை தனக்குச் சொந்தமாக உடையவன், அளவில்லாத படகுகளை உடையவன். உங்கள் சூரிய வம்சத்தில் திருவவதாரம் செய்த ஒப்பற்ற தலைவனாகிய இராமனுக்கு உயிர் நண்பன், உயர்ந்த தோள்களை உடையவன். கொடிய ஆண் யானையை ஒத்தவன், வில்லேந்திய வேட்டுவச் சேனைக் கடலை உடையவன், மகரந்தமணிகள் சிந்த இதழ்கள் விரிந்த மலர்களாலான வாசைன மிக்க குளிர்ந்த மாலையை அணிந்துள்ள குகன் எனும் பெயரையுடையவன்

26.
"கல் காணும் திண்மையான்.
கரை காணாக் காதலான், 
அல் காணில் கண்டு அனைய 
அழகு அமைந்த மேனியான், 
மல் காணும் திரு நெடுந்தோள் 
மழை காணும் மணி நிறத்தாய்! 
நின் காணும் உள்ளத்தான், 
நெறி எதிர் நின்றனன்" என்றான்.

மற்போரில் எல்லைகண்ட நெடிய தோள்களை உடைய கார் மழையைக் கண்டால் போன்ற நீல மணி போலும் நிறம் வாய்ந்த திருமேனி அழகனே, மலையைக் கண்டால் போன்ற வலிமையுடையவன், இராமனிடம் எல்லை காணமுடியாத பேரன்பினையுடையவன். அவனது வடிவத்தைக் காணில், இருளைப் போன்ற அழகு நிறைந்த உடம்பினை உடையவன், இத்தகைய குகன் நீ செல்கின்ற வழியின் எதிரில் நின்னைக் காணும் மனம் உடையவனாய் நின்றுகொண்டிருக்கின்றான் என்று சுமந்திரன் கூறினான்.


பரதன் குகனைக் காண விரைதல்

27.
தன்முன்னே, அவன் தன்மை 
தன் துணைவன் முந்து உரைத்த 
சொல் முன்னே உவக்கின்ற 
துரிசு இலாத் திரு மனத்தான், 
'மன் முன்னே தழீஇக் கொண்ட 
மனக்கு இனிய துணைவனேல், 
என் முன்னே; அவற் காண்பென் 
யானே சென்று 'என எழுந்தான்.

தன் எதிரில் அந்தக் குகனின் நல்லியல்புகளை தனது தந்தையாகிய தசரதனின் நண்பனாகிய சுமந்திரன் முற்பட்டுச் சொல்லிய சொல்லின் முன்பாக, மகிழ்ச்சியடைகின்ற சிறிதளவும் குற்றமில்லாத தூய மனத்தை உடையவனாகிய பரதன், நம் அரசனாகிய இராமன். வுனம் புகு முன்னரே தழுவிக்கொண்ட அவன் மனதுக்கு இனிய துனைவன் ஆனால், என்னை அவன் வந்து பார்ப்பதற்கு முன்னமே நானே சென்று அவனைப் பார்ப்பேன் என்று சொல்லிப் புறப்படுவதாக எழுந்தான்.


பரதன் தோற்றம் கண்ட குகன் நிலையும் செயலும்

28.
என்று எழுந்து தம்பியொடும் 
எழுகின்ற காதலொடும்
குன்று எழுந்து சென்றது எனக் 
குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், 
திருமேனி நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங்குஞ்சி 
எயினர்கோன் துண் என்றான்.

இவ்வாறு சொல்லி, தன்னுடன் புறப்பட்ட சத்துருக்கனோடும் உள்ளத்திலே மேன்மேலும் உய்டாகின்ற பேரன்பினோடும், ஒரு மலை புறப்பட்டுச் சென்றது போல, குளிர்ச்சி மிகுந்த கங்கையின் வடகரையை அணுகி நின்ற பரதனை. நெருங்கிய கருமையான மணம் வீசும் தலை முடியினை உடைய வேடர் தலைவனான குகன் கங்கையின் தென்கரையிலே நின்று கண்ணால் பார்த்தான். வாடிச் சோர்ந்துள்ள பரதனின் திருமேனி நிலையைத் தன் அனுபவத்தால் உணர்ந்து திடுக்குற்றான்.

29.
வற்கலையின் உடையானை 
மாசு அடைந்த மெய்யானை 
நல் கலை இல் மதி என்ன 
நகை இழந்த முகத்தானைக் 
கல் கனியக் கனிகின்ற 
துயரானைக் கண் உற்றான், 
வில் கையின் நின்று இடைவீழ, 
விம்முற்று நின்று ஒழிந்தான்.

மரவுரியாலான ஆடையினை உடுத்துள்ள, புழுதி படிந்த உடம்பையுடைய, நல்ல சுலைகள் இல்லாத சந்திரன் போல ஒளியிழந்த மூகத்தையுடைய, கல்லும் கரைந்து உருகும்படி குழைந்துருகும் துன்பத்தையுடைய, பரதனை தன் கண்ணால் நோக்கிப் பார்த்து. தன் கையிலிருந்த வில்லானது தானாகவே சோர்ந்து நிலத்தின் கீழ் விழும்படி துன்பத்தால் கலக்கமுற்று ஒரு செயலுமற்று நின்றுகொண்டிருந்தான்.

30.
"நம்பியும் என் நாயகனை 
ஒக்கின்றான்; அயல் நின்றான் 
தம்பியையும் ஒக்கின்றான்; 
தவம் வேடம் தலைநின்றான்; 
துன்பம் ஒரு முடிவு இல்லை; 
திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின்பிறந்தார் 
இழைப்பரோ பிழைப்பு?" என்றான்.

ஆடவரிற் சிறந்த இப் பரதனும் என் தலைவனாகிய இராமனை ஒத்திருக்கின்றான். அருகில் இருக்கின்ற சத்துருக்கனும் இலக்குவனை ஒத்திருக்கின்றான். இப் பரதன் தவவேடம் மேற்கொண்டுள்ளான். இவனது துன்பத்திற்கு ஓர் அளவே இல்லை, இராமன் சென்ற தென்திசையை நோக்கி அடிக்கடி வணங்குகின்றான். எமது இராமனாகிய கடவுளுக்குத் தம்பிமார்கள் தவறு செய்வார்களோ? ஏன நினைத்தான்.

31.
"உண்டு இடுக்கண் ஒன்று; உடையான்,
உலையாத அன்புடையான் 
கொண்ட தவவேடமே 
கொண்டிருந்தான்; குறிப்பு எல்லாம் 
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன்; 
காமின்கள் நெறி; " என்னாத் 
தண் துறை ஓர் நாவாயில் 
ஒரு தனியே தான் வந்தான்.

புதிதாய் உண்டான துன்பமொன்றை உடையவனும், இராமனிடம் சிறிதும் குன்றாத பேரன்புடையவனும், இராமன் கொண்டிருந்த தவ வேடத்தையே தானும் கொண்டிருப்பவனும் ஆகிய இப் பரதனின் மனக்கருத்தெல்லாம் நேரில் நான் பார்த்து உணர்ந்து திரும்பி வருகிறேன்; அதுவரை வழியைப் பார்த்திருங்கள் என்று சொல்லிக் குளிர்ந்த நீர்த்துறையில் தான் மட்டும் ஒரு படகில் வேறெவரும் இன்றி தனியே வந்து தென் கரையைச் சேர்ந்தான் குகன்.


பரதன் வணங்கக் குகன் தழுவுதல்

32.
வந்து, எதிரே தொழுதானை 
வணங்கினான்; மலர் இருந்த 
அந்தணனும் தனை வணங்கும் 
அவனும், அவனடி வீழ்ந்தான்; 
தந்தையினும் களி கூரத் 
தழுவினான், தகவு உடையோர் 
சிந்தையினும் சென்னியினும் 
வீற்றிருக்கும் சீர்த்தியான்.

கங்கையின் வடகரைக்கு வந்து. தன்னை எதிர் நின்று வணங்கிய பரதனைக் குகனும் வணங்கினான். திருமாலின் திருவுந்தியாகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் வேதியனான பிம்மனும் தன்னை வணங்கும் சிறப்புப் பெற்ற பரதனும், அந்தக் குகனின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். நடுவு நிலைமையால் சிறந்த மேலோர்கள் மனதிலும், தலையிலும் வைத்துப் போற்றப்படுகின்ற உத்தமனாகிய குகனும், பெற்ற தந்தையிலும் பார்க்க மகிழ்ச்சி அதிகரிக்கப் பரதனை மார்போடு எடுத்து அணைத்துக் கொண்டான்.


குகன் வினாவும் பரதன் கூறும் விடையும்

33.
தழுவின புளிஞர் வேந்தன் 
தாமரைச் செங்கணானை
'எழுவினும் உயர்ந்த தோளாய்!
எய்தியது என்னை?' என்ன,
முழுது உலகு அளித்த தந்தை 
முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன், அதனை நீக்க
மன்னனைக் கொணர்வான் 'என்றான்.

வேடர் தலைவனாகிய குகன், செந்தாமரை மலர் போலும் கண்களையுடைய பரதனைப் பார்த்து. கணைய மரத்திலும் வன்மைமிக்க உயர்ந்த தோள்களையுடையவனே! நீ வந்த காரணம் என்னவென்று வினாவ, உலகம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்த சக்கரவர்த்தியாகிய எனது தந்தை. முந்தையோர் காட்டிய முறையினின்றும் தவறி விட்டான். அந்த அநீதியை நீக்கும் பொருட்டு, முறைப்படி அடுத்து அரசாள வேண்டிய இராமனைத் திரும்ப அழைத்துக் கொண்டு செல்வதற்காகவே வந்துள்ளேன் என்றான்.


பரதன்பால் தீதின்மை கண்ட குகன் வணங்கிக் கூறல்

34.
கேட்டனன் கிராதர் வேந்தன்; 
கிளர்ந்து எழும் உயிரன் ஆகி, 
மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான்; 
விம்மினன், உவகை வீங்கத் 
தீட்ட அரு மேனி மைந்தன்
சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன் பொய் இல் 
உள்ளத்தன் புகலல் உற்றான்.

வேடர் தலைவனான குகன். பரதன் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டு. மேலெழுந்து மிகும் பெருமூச்சு உடையவனாகித் திரும்பவும் பூமியில் விழுந்து வணங்கி, மனமகிழ்ச்சி மேலும் பெருகிட உடம்பு பூரித்து, எழுத முடியாத திருமேனியை உடைய பரதனின் திருவடிகளாகிய தாமரை மலர்களில் இருக அணைத்த கைகளுடன், பொய்யற்ற தூய மனத்துடன், சில வார்த்தைகள் சொல்லலானான்.

35.
தாய் உரை கொண்டு, தாதை
உதவிய தரணி தன்னைத்
தீ வினை என்ன நீத்துச்
சிந்தனை முகத்தில் தேக்கிப் 
போயினை என்ற போழ்து, 
புகழினோய்தன்மை கண்டால்! 
ஆயிரம் இராமர் நின் கேழ் 
ஆவரோ? தெரியின் அம்மா!

புகழையுடையவனே! தூயாகிய கைகேயியின் வார்த்தைகளைக் கொண்டு. உன் தந்தை தசரதன் அளித்த கோசல நாட்டு அரசுரிமையைத் தீயவினை வந்து சேர்ந்தது போலக் கருதிக் கைவிட்டு. முகத்தில் கவலை தேங்கியவனாய். காட்டுக்கு வந்தாய் என்ற காலத்தில், நல்லியல்புகளை அறிந்து ஆராய்ந்தால் ஆயிரம், உன் இராமர் உளராயினும் நின் ஒருவருக்குச் சமானம் ஆவாரோ அம்மா!

36.
என் புகழ்கின்றது ஏழை
எயினனேன்? இரவி என்பான் 
தன் புகழ்க் கற்றை மற்றை 
ஒளிகளைத் தவிர்க்குமா போல, 
மன் புகழ் பெருமை நுங்கள் 
மரபினோர் புகழ்கள் எல்லாம் 
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் 
உயர் குணத்து உரவு தோளாய்!

உயர்வான உத்தம குணங்களையும், வலிமையான தோள்களையும் உடைய பரதனே! அறிவில்லாத வேடனாகிய யான் உன்னை முடியும்? சூரியன் தன் எவ்வாறு புகழ் புகழாகிய ஒளித் தொகுதியால் மற்றைய கோள்கள், உடுக்கள் ஆகியவற்றின் ஒளிகளையெல்லாம் அடக்கிக் கீழ்ப்படுத்தி மேற்செல்வது போல எல்லா அரசர்களாலும் பாராட்டப் பெறும் பெருமை படைத்த உங்கள் சூரியவம்சத்து முன்னைய அரசர்களது எல்லாப் புகழ்களையும், உனது புகழுக்குள் அடக்குமாறு செய்து கொண்டாய். 


பரதன்பால் குகன் ஒப்பற்ற அன்பு கொள்ளுதல்

37.
என இவை அன்ன மாற்றம் 
இவைவன பலவும் கூறிப்
புனை கழல் புலவு வேல் கைப்
புளிஞர் கோன் பொரு இல் காதல்
அனையவற்கு அமைவில் செய்தான்; 
ஆர் அவற்கு அன்பு இலாதார்? 
நினைவு அருங்குணம் கொடு அன்றோ 
இராமன்மேல் நிமிர்ந்த காதல்.

ஆலங்கரிக்கப்பட்ட வீரக்கழலை அணிந்த, புலால் மணம் வீசும் வேலினைப் பிடித்த கைகளினையுடைய, வேடர் தலைவனாகிய குகன், இவ்வாறு இவை போன்ற பொருத்தமான சொற்கள் பலவற்றையும் செல்லி, இராமனிடத்தும் அதனால் தன்னிடத்தும் ஒப்பற்ற பேரன்பினை உடைய பரதனுக்குப் பொருந்திய நல்லுபசரிப்புக்களை நகுதியாகச் செய்தான். அப்பரதனிடம் அன்பு செய்யாதவர்கள் யாருளர்? இராமன் மீது சென்று உயர்ந்து நிற்கும் பேரன்பானது நினைக்கவும் முடியாத நற்குணங்களின் உறைவிடமாக அவன் விளங்கினான் என்பதனாலல்லவா? 


இராமன் உறைந்த இடத்தைப் பரதனுக்குக் குகன் காட்டுதல்

38.
அவ் வழி அவனை நோக்கி,
அருள் தரு வாரி அன்ன
செவ்வழி உள்ளத்து அண்ணல்,
தன் திசைச் செங்கை கூப்பி,
'எவ்வழி உறைந்தான் நம் முன்?'
என்றலும், எயினர் வேந்தன்,
'இவ்வழி வீரயானே!
காட்டுவல்; எழுக' என்றான்.

கருனைப் பெருங்கடலை ஒத்த, நேர் வழியில் செல்லும் மனத்ததை உடைய பரதன், அப்போது குகனைப் பார்த்து, இராமன் சென்ற தென் திசையை நோக்கித் தன் சிவந்த கைகளைக் குவித்து வணங்கி, நம்முடைய அண்ணன் எந்த இடத்தில் தங்கியிருந்தான் என்று கேட்டலுடனே வேடர் அரசனாகிய குகன், வீரனே! இந்த இடத்தில் நானே காண்பிப்பேன் என்னுடன் புறப்படுவாயாக என்றான்.


இராமன் வைகிய இடம் கண்ட பரதன் நிலையும் நினைவும்இராமன் பள்ளிகொண்ட இடம் கண்ட பரதனுடைய செயலும் சொல்லும்

39.
கார் எனக் கடிது சென்றான்; 
கல் இடைப் படுத்த புல்லின் 
வார் சிலைத் தடக்கை வள்ளல் 
வைகிய பள்ளி கண்டான்; 
பார் மிசைப் பதைத்து வீழ்ந்தான்; 
பருவரல் பரவை புக்கான்.
வார் மணிப் புனலால் மண்ணை 
மண்ணுநீர் ஆட்டும் கண்ணான்.

மேகம் போல் விரைவாகச் சென்று, கட்டிறுக்கமான வில்லினை ஏந்திய இராமன் தங்கியிருந்த, கற்களின் இடையே பரப்பப்பட்ட புல்லால் ஆகிய படுக்கையைப் பார்த்துப் பூமி மேல் துடிதுடித்து வீழ்ந்து துன்பம் எனும் கடலில் புகுந்து. பெருகிடும் முத்துமணி போன்ற கண்ணீரினால் பூமியை திருமஞ்சன நீரினால் குளிப்பாட்டுகின்ற கண்ணுடையவனானான்.

40.
இயன்றது என் பொருட்டினால் இவ்
இடர் உனக்கு என்ற போழ்தும்,
அயின்றனை கிழங்கும் காயும்
அமுது என, அரிய புல்லில்
துயின்றனை எனவும், ஆவி 
துறந்திலென்; சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும் 
செல்வமும் கொள்வென் யானே.

இராமா! உனக்கு இவ்வனவாசமாகிய துன்பம் என் காரணமாக ஏற்பட்டது என அறிந்த அவ்வேளையிலும், பின்னர் கிழங்கு, காய் முதலியவற்றை அமுது போலக்கருதி உண்டாய் உறங்குவதற்கு ஏற்றதல்லாத கடினமான புற்படுக்கையில் துயின்றாய் என்று அறிந்த இவ்வேளையிலும் யான் உயிர் போகப் பெற்றேன் இல்லை. ஒளிவிடும் பொன்னாலான உயர்வான திருமுடியைச் சூட்டிக் கொள்ளும் அரசுச் செல்வத்தையும் ஏற்றுக் கொள்வேன் போலும்,


பரதன் இலக்குவன் இரவை எங்கே கழித்தான்? எனக் குகன் கூறல்

41.
தூண் தா நிவந்த தோளான்
பின்னரும் சொல்லுவான், 'அந்
நீண்டவன் துயின்ற சூழல்
இது எனில், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே
போந்தவன், பொழுது நீத்தது 
யாண்டு?'என இனிது கேட்டான்; 
எயினர் கோன் இதனைச் சொன்னான்.

தூணினை ஒத்த உயர்ந்த தோள்களை உடைய பரதன் மீண்டும் குகனை நோக்கிக் கூறுவான். அந்த நெடியவனாகிய இராமன் உறங்கிய இடம் இதுவென்றால், அந்த இராமனிடம் மேலான அன்புகொண்டு அவனைப் பின்னால் தொடர்ந்து வந்த இலக்குமணன் இரவுப் பொழுதைக் கழித்தது எவ்விடத்தில்? என்று இனிமையாக வினாவினான் வேடர் அரசனாகிய குகன், இந்த விடையினைக் கூறினான்.

42.
'அல்லை ஆண்டு அமைந்த மேனி
அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும்
வெய்து உயிர்ப்போடும் வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்! 
கண்கள் நீர் சொரியக் கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்; 
இமைப்பு இலன் நயனம்' என்றான்.

மலையினைக் கீழ்ப்படுத்திய உயர்ந்த தோள்களை உடையவனே! இருளைப் பயன்படுத்தி அமைத்தாற் போன்ற கரிய திருமேனியுடைய அழகிற் சிறந்த இராமனும், அந்தச் சீதாப் பிராட்டியும் உறக்கம் கொள்ள, இலக்குமணன் வில்லின் மீது வைத்த கையுடன். வெப்பமான மூச்சு உடையவனாய், தன் இரண்டு கண்களும் நீரைச் சொரிய, இரவானது தன் முடிவின் எல்லையாகிய விடியலைக் காணும் வரையும், கண்கள் இமை கொட்டாமல் நின்றுகொண்டே காவல் செய்திருந்தான் என்று குகன் கூறினான்.


பரதன் இலக்குவன் நிலை கண்டு பாராட்டுதலும் தன் நிலை கண்டு நொந்து கூறலும்

43.
என்பத்தைக் கேட்ட மைந்தன், 
"'இராமனுக்கு இளையார்' என்று 
முன்பு ஒத்த தோற்றத் தேம் இல், 
யான் என்றும் முடிவு இலாத 
துன்பத்துக்கு ஏது ஆனேன்; 
அவன் அது துடைக்க நின்றான்; 
அன்பத்துக்கு எல்லை உண்டோ? 
அழகிது என் அடிமை" என்றான்.

என்று சொன்னதைக் கேட்ட பரதன். இராமனுக்குத் தம்பிகள் என்று சொல்லும்படி, பிறக்கும் போது ஒத்த தன்மையான பிறப்பைப் பெற்ற எங்கள் இருவரிலும், பரதனாகிய நான் எக்காலத்தும் கரைகாண முடியாத பெருந்துன்பத்தை இராமன் அடைவதற்குக் காரணமாக ஆகிவிட்டேன். அந்த இலக்குமணன், அத்துன்பத்தை இராமனிடமிருந்து நீக்குவதற்குத் இராமனுக்குத் துணையாக நின்றான். அன்புக்கு ஒரு வரையறை உண்டோ? நான். இராமனுக்குச் செய்யும் அடிமைத் திறம் நன்றாயிருந்தது என்றான்.


கங்கையின் தென்கரை சேர்க்குமாறு குகனைப்  பரதன் வேண்டல்.

44.
அவ் இடை அண்ணல்தானும், அன்று 
அரும் பொடியின் வைகி,
தெவ் இடைதர நின்று ஆர்க்கும்
செறி கழல் புளிஞர் கோமா அன்!
இவ் இடை, கங்கை ஆற்றின் 
ஏற்றினை ஆயின், எம்மை
வெவ் இடர்க் கடல் நின்று ஏற்றி, 
வேந்தன்பால் விடுத்தது என்றான்.

தலைவனாகிய பரதனும், அந்த இடத்தில் அன்றைய இரவு தங்குதற்கியலாத புழுதி மண்ணில் தங்கியிருந்து (பொழுது விடிந்ததும்), பகைவர்கள் தோற்றோடும் தங்கி ஒலிக்கும் கட்டப்பட்ட விரக்கழல் அணிந்த, வேடர்களுக்கு அரசனாகிய குகனே! இந் நேரத்தில் கங்கையாற்றிலிருந்து எம்மைக் கரையேற்றித் (தென்கரை) சேரச் செய்தால் கொடிய துன்பக்கடலிலிருந்து கரையேற்றி அரசனாகிய இராமனிடத்தில் அனுப்பியது போலாகும் என்று சொன்னான்.


குகன் கட்டளைப்படி நாவாய்கள் வருதல்

45.
'நன்று' எனப் புளிஞர் வேந்தன் 
நண்ணினன் தமரை; 'நாவாய்
சென்று இனித் தருதிர்' என்ன, வந்தன - 
சிவன் சேர் வெள்ளிக்
குன்று என, குனிக்கும் அம் பொன் குவடு என, 
குபேரன் மானம்
ஒன்று என, நாணிப் பல் வேறு 
உருவு கொண்டனைய ஆன. 

(பரதன் கூறியதைக் கேட்டு) வேடர அரசனாகிய குகன். நல்லது என்று சொல்லித் தம் இனத்தவரை அடைந்து, நீங்கள் (தென்) கரைசென்று இனிமேல் படகுகளைக் கொண்டு வருக வென்று சொன்னதும், நாவாய்கள் சிவபெருமானின் வெள்ளிமலை போல (சிவன் முப்புரம் எரித்தபோது) வில்லாக வளைத்த அழகிய மகாமேருவாகிய பொன் மலையைப் போல. குபேரனின் புட்பக வாகனம் போல தாம் தனித்தனியாக இருப்பதற்கு வெட்கமுற்று, ஒவ்வொன்றும் பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொண்டு கங்கையாற்றிலே வந்தன.


நாவாய்களின் தோற்றப் பொலிவு

46.
நங்கையர் நடையின் அன்னம் 
நாண் உறு செலவின் நாவாய்,
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன 
கலந்த எங்கும்,
அங்கொடு, இங்கு, இழித்தி ஏற்றும் அமைதியின், 
அமரர் வையத்து 
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் 
இருவினை என்னல் ஆன. 

பெண்களின் நடையையும், அன்னப்பறவைகள் நாணும்படியாக நீரில் செல்லுதலையும் உடைய படகுகள், அக்கரையில் உள்ளவர்களை இக்கரையில் ஏற்றியிறக்கும் தன்மையினால், தேவருவகமாகிய அவ்வுலகோடு இவ்வுலகத்தினரை ஏற்றி இறக்கும் புண்ணியம், பாவம் ஆகிய இரு வினைகள் என்று சொல்லத்தக்கனவாக இருந்தனவாய், கங்கை நதியிலும் இடமில்லை என்னும்படி நெருங்கின. எல்லா இடங்களிலும் சேர்ந்தன.


பரதன் சேனையோடு கங்கையை கடத்தல்

47.
வந்தன, வரம்பு இல் நாவாய்; 
வரி சிலைக் குரிசில் மைந்த! 
சிந்தனை யாவது? என்று, 
சிருங்கிபேரியர்கோன் செப்ப,
சுந்தர வரி விலானும் 
சுமந்திரன் தன்னை நோக்கி
'எந்தை! இத் தானைதன்னை ஏற்றுதி, 
விரைவின்' என்றான் .

சிருங்கிபேரம் என்னும் நகரிலுள்ளோர்க்கு அரசனாகிய குகன்(பரதனைப் பார்த்து) இறுக்கமான கட்டமைந்த விற்றொழிலில் சிறந்தவனாகிய தசரதனின் மைந்தனே! கணக்கற்ற படகுகள் வந்து சேர்ந்துள்ளன. (உன்) மனக்கருத்து யாது? என்று சொல்ல. அழகிய, இறுக்கிய கட்டமைந்த வில்லினையுடைய பரதனும் மூத்த அமைச்சனாகிய சுமந்திரனை நோக்கி, என் தந்தையே! இச் சேனைகளை விரைவாகப் படகுகளில் ஏற்றுக என்றான்.

48.
குரிசிலது ஏவலால், அக் 
குரகதத் தேர் வலானும்
வரிசையின் வழாமை நோக்கி, மரபுளி
வகையின் ஏற்ற,
கரி, பரி, இராதம், காலாள்,
கணக்கு அறு கரை இல் வேலை,
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு 
ஏறிற்று அன்றே!

பரதனது கட்டளையால் குதிரைகள் பூட்டிய தேரினைச் செலுத்துதலில் வல்லவனாகிய அச்சுமந்திரனும், முறை தவறாமற் பார்த்து அவரவர்குரிய மரபின்படி படகுகளில் ஏற்றியனுப்ப, நாற்படைகளாகிய, கணக்கிட முடியாத சேனைக்கடல், ஒளிவீசும் மணிகளைக் கரையில் அலைகள் எறிகின்ற கங்கையாற்றைக் கடந்து அக்கரை சென்று ஏறியது.

49.
இடிபடு முழக்கம் பொங்க 
இன மழை மகா நீரை
முடிவு உற முகப்ப, ஊழி 
இறுதியின் மொய்ப்ப போலக்
கொடியொடு வங்கம் வேலை 
கூம்பொடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின, 
நெடுங் கை வேழம்

மேகக் கூட்டங்கள், ஒன்றுடன் ஒன்று மோதியுண்டான முழக்கவொலி அதிகரிக்க, ஊழிக் காலத்தில் கடல் நீர் முழுவதும் வற்றுமாறு முகந்து உண்பதற்குத் திரண்டன போலவும், கொடியோடு கூடிய கப்பல்கள் பாய்மரத்தோடு பரந்து செல்வதைப் போலவும், நீண்ட துதிக்கையையுடைய யானைகள் தமது நீண்ட துதிக்கையை உயர்த்திக் கொண்டு கங்கையில் நீந்திச் சென்றன. கடலில்

50.
சங்கமும் மகர மீனும் 
தரளமும் மணியும் தள்ளி,
வங்க நீர்க் கடலும் வந்து 
தன் வழிப் படர, மானப்
பொங்கு வெங் களிறு நூக்க,
கரை ஒரீஇப் போயிற்று அம்மா
கங்கையும் இராமற் காணும் 
காதலது என்ன மாதோ!

பெருமை மிக்க. மேற்கிளம்பிய கொடிய யானைகள் தள்ளுதலால் சங்கு, சுறாமீன், முத்து. மாணிக்கக்கற்கள் ஆகியவற்றை (அலைகள்) கரையில் சேர்க்கின்ற, மரக் கலங்களையுடைய நீர் மிகுந்த கடலானது தன்னிடத்து வந்து பரவும்படி கங்கையாறானது கரைகடந்து சென்றது.

51.
பாங்கின் உத்தரியம் மானப் 
படர் திரை தவழ, பாரின்
வீங்கு நீர் அழுவம் தன்னுள், 
விழு மதக் கலுழி வெள்ளத்து
ஓங்கல்கள் தலைகள் தோன்ற, 
ஒளித்து அவண் உயர்ந்த கும்பம்,
பூங் குழற் கங்கை நங்கை முலை எனப் 
பொலிந்த மாதோ! 

பக்கத்தில் பெண்களின் மேலாடைபோலக் கரைமேல் அலைகள் தவழ்ந்து செல்ல. உலகின் மிகுந்த நீர்ப்பரப்பினையுடைய ஆற்றுப் பள்ளத்துள் விழுகின்ற மதநீர்ப் பெருக்காகிய கலங்கள் வெள்ளத்தையுடைய மலைபோன்ற யானைகள், ஆற்றுநீரால் உடல் முழுவதும் மறைக்கப்பட்டுத் தலைகள் மாத்திரம் மேலே தோன்ற. அங்கே கங்கைநீர்ப் பரப்பில் உயர்ந்து தோன்றுகின்ற அவற்றின் தலைமேடுகள் (யானைகளின்), பூச்சூடிய கூந்தலையுடைய கங்கையாகிய இளம்பெண்ணின் மார்பகங்கள் போல விளங்கின.

52.
கொடிஞ்சொடு தட்டும், அச்சும், ஆழியும், 
கோத்த மொட்டும், 
நெடுஞ் சுவர்க் கொடியும், 
யாவும், நெறி வரு முறையின் நீக்கி,
விடும் சுவல் புரவியோடும் 
வேறு வேறு ஏற்றிச் சென்ற-
மடிஞ்சபின் உடம்பு கூட்டும் வினை என
வயிரத் தேர்கள்!

வலியதேர்கள் கொடிஞ்சி, தேர்த்தட்டு, சக்கரம் ஆகியன சேர்திணைத்த மொட்டும். நீண்ட இருபக்கச் சுவர்களின்மேல் கட்டிய கொடியும். பிறவற்றையும் முறைப்படி தனித்தனியாகப் பிரித்து, கத்தரியாமல் விட்ட பிடரி மயிர்களையுடைய குதிரையோடும் தனித்தனியாகப். இறந்தபின் அவ்வுயிர்க்கு வேநோர் உடம்பினைக் கூட்டுவிக்கும் செயல்போல, தென்கரைக்கு ஏற்றிச் செல்லப்பட்டன.

53.
நால் - இரண்டு ஆய கோடி, நவை, இல் 
நாவாய்கள் மீதா, 
சேல் திரண்டனைய ஆய கதியொடும், 
நிமிரச் சென்ற 
பால் திரண்டனைய மெய்ய,
பயம் திரண்டனைய நெஞ்ச,
கால் திரண்டனைய கால, 
கடு நடைக் கலினப் பாய் மா. 

பால் திரண்டதைப் போன்ற உடம்பையும், அச்சம் திரண்டதைப் போன்ற மனத்தையும், காற்று ஒன்று கூடியதைப்போன்ற காலினையும், விரைந்து செல்லும் நடையையும், பூட்டிய கடிவாளத்தையும் உடைய எட்டுக்கோடி பாயும் குதிரைகள், கயல்மீன் கூட்டம் விரைந்து செல்வதைப் போன்ற வேகத்தோடு, எதுவித பிழையுமில்லாத படகுகளின்மேல் நிமிர்ந்து சென்றன.


மகளிர் ஓடத்தில் செல்லுதல்

54.
ஈடு உற நெருக்கி, ஓடத்து
ஒருவர்முன் ஒருவர் கிட்டி,
சூடகத் தளிர்க் கைம் மாதர் 
குழுமினர் துவன்றித் தோன்ற, 
பாடு இயல் களி நல் யானைப் பந்தி அம் 
கடையின் குத்தக்
கோடுகள் மிடைந்த என்ன, 
மிடைந்தன குவவுக் கொங்கை.

வளையல்கள் அணிந்த தளிர்போன்ற கைகளையுடைய மகளிர் இடையே புகுந்து நெருக்கி, நாவாய்களில் ஒருவர்முன் ஒருவர் அண்மித்துத் திரண்டு நெருங்கித் தோன்றுதலால் பெருமையும், மத மகிழ்ச்சியும் உடைய உத்தமமான யானை வரிசையில், அழகிய முனைகளால் குத்துமாறு கொம்புகள் நெருங்கின எனும்படி, அம்மகளிரின் திரட்சியான முலைகள் நெருங்கின.

55.
பொலங் குழை மகளிர், நாவாய்ப் 
போக்கின் ஒன்று ஒன்று தாக்க,
மலங்கினர்; இரண்டு பாலும் 
மறுகினர் வெருவி நோக்க,
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி 
அழிதர, அங்கும் இங்கும்
கலங்கலின், வெருவிப் பாயும் 
கயற்குலம் நிகர்த்த, கண்கள்.

மரக்கலங்கள் வேகமாகச் செல்கையில் ஒன்றுடன் ஒன்று மோதக் கண்ட மகளிர் கலங்கி, மயங்கி, அச்சமடைந்து இருபக்கமும் பார்க்கையில் அவர்களது கண்கள் நீர் பெருகித் தள்ளி நிலை கெடுவதானது. ஆற்று நீர் கலங்குவதனால் பயந்து துள்ளும் கயல்மீன் கூட்டம் போல் இருந்தது.

56.
இயல்வு உறு செலவின் நாவாய், 
இரு கையும் எயினர் தூண்ட,
துயல்வன துடுப்பு வீசும் 
துவலைகள், மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு 
அறத் தளிப்ப, உள்ளத்து 
அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு 
அயாவுயிர்ப்பு அளித்தது அம்மா!

இயல்பாகச் சென்ற மரக்கலங்களில் வேடர்கள் இருபக்கத்திலும் உந்த அசைகின்ற துடுப்புகள் சிந்தும் நீர்த் திவலைகள், மகளிரது மெல்லிய ஆடைக்குள் மறைந்திருந்த அல்குலை வெளித்தோன்றச் செய்ய, இதுவரை இராமனின் பிரிவால் மனச் சோர்வுடன் கல்வியில் ஈடுபடாதிருந்த மனவலிமை கொண்ட வீரர்களுக்குத் துன்பம் நீங்கி, உற்சாகத்தை உண்டாக்கியது.


மரக்கலங்கள் சென்று சென்று மீளும் காட்சி

57.
இக் கரை இரைத்த சேனை 
எறி கடல் முகந்து, வெஃகி,
அக் கரை அடைய வீசி, வறியன 
அணுகும் நாவாய் 
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன 
போக்கிப் போக்கி,
அக் கணத்து உவரி மீளும் 
அகல் மழை நிகர்த்த அம்மா! 

கங்கையின் வடகரையில் உள்ள ஆராவாரமிக்க சேனைக் கடலை விரும்பி ஏற்றிக் கொண்டு தென்கரை அடைந்து. அவற்றை முற்றாக இறக்கிவிட்டு, ஒன்றுமிலாததாய் மீண்டும் வடகரை வந்து சேரும் மரக்கலங்கள், அலைகடலுட் புகுந்து மிகுதியான நீரை முகந்து சுமந்தனவாய்ப் புறப்பட்டுச் சென்று மழையாகப் பொழிந்து கழித்துக் கழித்து. அடுத்த கணத்திலேயே மீண்டும் கடல் நீரை முகப்பதற்காக கடலுக்குத் திரும்புகின்ற அகன்ற மேகத்தை ஒத்திருந்தன.

58.
அகில் இடு தூபம் அன்ன 
ஆய் மயில் பீலி ஆர்த்த
முகிழுடை முரண் மாத் தண்டு 
கூம்பு என, முகிலின் வண்ணத்
துகிலொடு தொடுத்த செம் பொன் 
தகட்டிடை தொடுத்த முத்தின்
நகு கொடி நெடிய பாயா, 
நவ் எனச் சென்ற நாவாய்.

மரக்கலங்கள், அகிற் கட்டைகளால் உண்டாக்கப்பட்ட புகையைப் போன்று அழகிய மயிற்றோகைகள் கட்டப் பெற்ற அரும்பு போன்ற உறுப்பினைத் தலையிற் கொண்ட தண்டுகள் பாய்மரமாகத் தோன்ற, மேகநிறமான துணியொடு கட்டப்பெற்ற செம்பொன்னாலான தகட்டின் இடையே அழகுறத் தைத்த முத்துக்களால் விளங்கும் கொடிகள், நீண்ட பாயாகத் தோன்ற, பெரிய பாய்மரக் கப்பல்கள் போலச் சென்றன.

59.
ஆனனம் கமலத்து அன்ன, 
மின் அன்ன, அமுதச் செவ் வாய்,
தேன் நனை, குழலார் எறும் 
அம்பிகள் சிந்து முத்தம்
மீன் என, விரிந்த கங்கை 
விண் என, பண்ணை முற்றி
வானவர் மகளிர் ஊரும் 
மானமே நிகர்த்த மாதோ!

கங்காநதி ஆகாயம் ஆக, கங்கையாறு சிந்தும் முத்துக்கள் விண்மீன்கள் ஆக. தாமரை மலர் போன்ற முகம், அழுதுறும் சிவந்த வாய் ஆகியவற்றையுடைய மின்னலையொத்த இடையையுடைய தேன் சிந்தும் கூந்தலையுடைய மகளிர் ஏறிச் செல்லும் ஓடங்கள், தேவமகளிர் நீர் விளையாடிய பின் மேலேறிச் செல்லும் விமானங்களை ஒத்தன.

60.
துளி படத் துழாவு திண் கோல் 
துடுப்பு இரு காலின் தோன்ற,
நளிர் புனல் கங்கை ஆற்றில் 
நண்டு எனச் செல்லும் நாவாய், 
களியுடை மஞ்ஞை அன்ன, 
கனங் குழை, கயல் கண், மாதர்
ஒளிர் அடிக் கமலம் தீண்ட, 
உயிர் படைத்தனவே ஒத்த.

துளிகள் உண்டாகும்படி (நீரை) துழாவுகின்ற. வலிய கோல்களையுடைய துடுப்புகள் இருகால்களைப் போல தோன்ற. குளிர்ந்த நீரையுடைய கங்கையாற்றில் நண்டு என்று சொல்லும் படியாகச் செல்லும் மரக்கலம், மகிழ்வுற்ற மயிலை ஒத்த பொன்னாலாகிய தோடு அணிந்த, கயல்மீன் போன்ற கண்களையுடைய, மகளிரின் விளங்குகின்ற காலடித் தாமரைகள் படுதலால், உயிர் பெற்றன போன்றிருந்தன.


முனிவர் வான் வழியாகக் கங்கையை அடைதல்

61.
மை அறு விசும்பில், மண்ணில்
மற்றும் ஓர் உலகில், முற்றும் 
மெய் வினை தவமே அன்றி 
மேலும் ஒன்று உளதோ? கீழோர்
செய் வினை நாவாய் ஏறித் தீண்டலர்; 
மனத்தின் செல்லும்
மொய் விசும்பு ஓடம் ஆக, 
தேவரின் முனிவர் போனார். 

(நாவாயில்களில் பலரும் ஏறிச் செல்ல) முனிவர்கள், கீழான மனித சாதியாற், செய்யப்பட்ட மரக்கலத்ததைத் தீண்டி, ஏறாதவர்களாய். தாம் நினைத்தவுடன் செல்லும் ஆகாயத்தையே ஓடமாகக் கருதி தோவர்களைப் போல வான்வழியே சென்றார்கள். குற்றமற்ற விண்ணுலகிலும், மண்ணுலகிலும், வேறு உலகிலும் தவத்தைப் போல செய்து முடிக்கக்கூடிய உண்மையான தொழில் வெறொன்று உள்ளதா? இல்லை என்பதாகும்.


சேனைகளும் ஏனையோரும் கங்கையை கடத்தல்

62.
“அறுபதினாயிரம் அக்குரோணி" என்று 
இறுதி செய் சேனையும், எல்லை தீர் நகர் 
மறு அறு மாந்தரும், மகளிர் வெள்ளமும், 
செறி திரைக் கங்கை, பின் கிடக்கச் சென்றவே. 

'அறுபதினாயிரம் அக்குறோணி' எனக் கணக்கிட்டு முடிவாகிய சேனைகளும், அளவு கடந்த அயோத்தி நகரத்துக்குக் குற்றமற்ற மக்கள் கூட்டமும், பெண்கள் கூட்டமும். நெருக்கமாக அலைவீசுகின்ற கங்கையாற்றைக் கடந்து சென்றன.


பரதன் நாவாயில் ஏறுதல்

63. 
கழித்து நீர் வரு துறை ஆற்றை, சூழ் படை
கழித்து நீங்கியது என, கள்ள ஆசையை
அழித்து, வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து, மேல் ஏறினான் தானும் ஏறினான்.

தன்னைச் சுற்றியுள்ள சேனையானது நீர்சுழித்துப் பெருகிவரும் கரையமைந்த கங்கையாற்றிைைனக் கடந்துவிட, வஞ்சகமான மண்ணாசையைப் போக்கிய குணத்தினால் இம் மண்ணினை முன்னர் ஆட்சிபுரிந்த அரசர்கள் யாவரையும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களாக ஆக்கி மேம்பட்டு நின்ற பரதனும் நாவாயில் ஏறினான்.


பரதன் குகனுக்குக் கோசலையை அறிமுகம் செய்தல்

64.
சுற்றத்தார், தேவரொடும் தொழ நின்ற 
கோசலையைத் தொழுது நோக்கி
'கொற்றத் தார்க் குரிசில்இவர் ஆர்?' என்று 
குகன் வினவ, 'கோக்கள் வைகும் 
முற்றத்தான் முதல் தேவி; மூன்று 
உலகும் ஈன்றானை முன் ஈன்றாளைப் 
பெற்றத்தால் பெறும் செல்வம், யான் 
பிறத்தலால், துறந்த பெரியாள்' என்றான். 

(குகன்) உறவினர்கள், தேவர்களோடு வணங்கத்தக்கவாறு இருந்த கோசலைப் பிராட்டியை வணங்கிப் பார்த்து. வெற்றிமாலை சூடிய பரதனே! இவர் யாரவர் என்று கேட்க, (அதற்குப் பரதன்) அரசர்கள் தங்கியிருக்கும் முன்றிலையுடைய தசரதனின் முதல் பட்டத்தரசி, மூவுலகையும் படைத்த பிரமதேவனை முன்னால் தோற்றுவித்த (தனது திருவுந்தியினின்றும் தோற்றுவித்த ஸ்ரீநாராயணன் அவதாரமாகிய) இராமனை மகனாகப் பெற்றதால், தான் பெறவேண்டிய அரசுச் செல்வத்தை, நான் பிறந்த காரணத்தால் இழந்த பெருமைக்குரியவள் என்று கூறினாள்.


பரதன் கோசலைக்குக் குகனை அறிமுகம் செய்தல்

65.
என்றலுமே, அடியின் மிசை நெடிது வீழ்ந்து 
அழுவானை, 'இவன் யார்?' என்று,
கன்று பிரி காராவின் துயர் உடைய 
கொடி வினவ, கழல்கால் மைந்தன், 
'இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும் 
இளையவற்கும் எனக்கும், மூத்தான்; 
குன்று அனைய நெடுந் தோள்குகன் 
என்பான், இந் நின்ற குரிசில்' என்றான். 

என்று பரதன் கூறியவுடன் கோசலையின் திருவடிகள் மீது நீண்டநேரம் வீழ்ந்து கிடந்து அழுகின்ற குகனை, கன்றைப் பிரிந்த காராம் பசுவின் துயருடைய கோசலை இவன் யார்? என்று கேட்க, வீரக் கழலலணிந்த கால்களையுடைய பரதன், இதோ வணங்கி நிற்கும் ஆண்மகன் இராமனுக்கு இனிய சகோதரன், இலக்குவணனுக்கும் சத்துருக்கனுக்கும் எனக்கும் அண்ணன், மலையையொத்த திரண்ட அழகிய நீண்ட தோள்களையுடைய குகன் என்னும் பெயருடையவன் என்றான்.


கோசலை குகனை அவர்களுக்குச் சகோதரனாக்கி உரைத்தல்

66.
'நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால்; 
நாடு இறந்து காடு நோக்கி,
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று 
ஆம் அன்றே! விலங்கல் திண்தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன் 
தன்னோடும் கலந்து, நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய், அகல் இடத்தை நெடுங் 
காலம் அளித்திர்' என்றாள்.

(அது கேட்ட கோசலை அவர்களை நோக்கி) என் பிள்ளைகளே! இனிமேல் துன்பத்தால் நீங்கள் வருந்தாது இருப்பீர்களாக. சுத்தவீரர்களாகிய இராம இலக்குமனர்கள் கோசவ நாட்டைத் துறந்து காடு நோக்கிப் புறப்பட்டுச் சென்றதுவும் நன்மைக்கு காரணமாயிற்றல்லவா? (குகனைச் சகோதரனாகப் பெற்றதால்) மலைபோன்ற வலிய தோளையும், துதிக்கையாற் செய்யும் வீரச் செயலை உடைய ஆண்யானையை ஒத்த ஆண் மகனாகிய இந்தக் குகனோடு ஒன்றுபட்டு, நீங்கள் ஐவருமாக அகன்ற நிலவுலகை நீண்டகாலம் அரசாட்சி செய்து காப்பாற்றுவீர்களாக! என்றாள்.


சுமித்திரையை பரதன் குகனுக்கு அறிமுகம் செய்தல்

67. 
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்தனை 
நோக்கி, 'ஐயஅன்பின்
நிறைந்தாளை உரை' என்ன, 'நெறி திறம்பாத் 
தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான் தன் இளந் தேவி; யாவர்க்கும் 
தொழுகுலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் தனைப் 
பயந்த பெரியாள்' என்றான். 

அறக்கடவுளே என்று கூறத்தக்கவளாய் அருகில் நின்ற சுமித்திராதேவியைக் குகன் பார்த்து, பரதனே! அன்பால் நிறைந்த இப் பெருமாட்டியை யாரென்று எனக்குச் சொல் என்று கேட்க, (அதற்குப் பரதன்) சத்திய வழியினின்றும் சிறிதும் மாறுபடாத தன் வாய்மையை என்றும் நிலைநிறுத்தி (பொய்யுடலை நீத்து இறந்தவனாகிய தசரதனின் இளைய பட்டத்தரசியாவாள். மேலும் இவள் யாவர்க்கும் வணங்கத்தக்க குலதெய்வமாகிய இராமனுக்குப் பின்னே பிறந்த தம்பியும் ஒருவன் உளன் என்று அனைவரும் சொல்லுமாறு இராமனை விட்டு நீங்காத இலக்குமணனைப் பெற்றெடுத்த பெருமைக்குரியவள் என்றான்.


குகன் கைகேயியை யார் என வினவுதல்

68. 
சுடு மயானத்திடை தன் துணை ஏக
தோன்றல் துயர்க் கடலின் ஏக,
கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி 
ஏக, கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம்
தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால், அளந்தாளை, 'ஆர் இவர்? 
என்று உரை' என்ன, குரிசில் கூறும்.

(பின்னர் குகன்) தன் கணவனாகிய தசரதன் சுடுகாட்டுக்குச் செல்ல, மகனாகிய பரதன் துன்பக் கடலில் செல்ல. அருட்கடலாகிய இராமன் கொடுமையான காட்டினிடையே செல்ல, (இவ்வாறு செய்து) கழலலணிந்த கால்களையுடைய திருமால் எடுத்த நெடிய திருவுருவத்தால் முன்பு மூவடியில் ஈரடியால் அளந்த எல்லா உலகங்களையும் (திருமாலைப் போல அவதாரம் எடுத்து சிரமப்படாமல்) தன் மனத்தின்கண் தானே எண்ணிச்செய்கின்ற கொடுமையால் எளிதாக அளவு செய்தவளாகிய கைகேயியை "இவர் யார்?" என்று கேட்க, பரதன் கூறுவான் ஆயினான்.


பரதன் கைகேயியை குகனுக்கு அறிமுகஞ் செய்தல்

69.
படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும் 
செவிலியை, தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும் 
உயிர்ப் பாரம் குறைந்து தேய,
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும் 
உலகத்தே, ஒருத்தி அன்றே,
இடர் இலா முகத்தாளை, அறிந்திலையேல், 
இந்நின்றாள் என்னை ஈன்றாள்.

துன்பங்கள் யாவற்றையும் உண்டாக்கியவளை, பழியாகிய குழந்தைக்கு வளர்ப்புத்தாயை, தனது பாழான தீவினையுடைய வயிற்றிலே. நீண்ட நாட்கள் கிடந்த எனக்கும் உயிராகிய சுமை குறைந்து தேயும்படி உடல்கள் எல்லாம் உயிரில்லாதன என்று தோன்றும் உலகில், இவ் ஒருத்தி மட்டும் அல்லவா துன்பமற்ற முகத்தைக் கொண்டே அறிந்திராவிடில். இதோ இருக்கின்றவள் என்னைப் பெற்ற கைகேயியாவாள்.


குகன் கைகேயியை வணங்குதலும், தோணி கரை சேர்தலும்

70. 
என்னக் கேட்டு அவ் இரக்கம் இலாளையும்
தன் நல் கையின் வணங்கினன் தாய் என்;
அன்னப் பேடை சிறை இலது ஆய்க் கரை
துன்னிற்று என்னவும் வந்தது, தோணியே.

குகன், பரதன் இவ்வாறு சொல்லக் கேட்டு, அந்த இரக்கமற்ற கைகேயியையும் தனது நல்ல கைகளால், தனது தாயெனக் கருதி கைகேயியை வணங்கினான். தோணியானது, பெண் அன்னம் சிறகுகளின்றிக் கரையைசேர்ந்ததெனக் கூறும்படிகரையினை அடைந்தது.


தாய்மார்கள் பல்லக்கில் வர, பரதனும் குகனும் நடந்து செல்லல்

71.
இழிந்த தாயர் சிவிகையின் ஏற, தான்,
பொழிந்த கண்ணின் புதுப் புனல் போயினான்
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் 
கழிந்தனன், பல காவதம் காலினே.

தோணியிலிருந்து இறங்கிய தாய்மார்கள் பல்லக்கில் ஏறி உடன்வரப் பரதன் கண்ணிலிருந்து பொழிந்த புதிய கண்ணீரில் நடந்து சென்றான். குகனும் தனது நாட்டில் தங்காது அவனுடன் கூடவே சென்றான். இவ்வாறு பரதன் பல காவத தூர வழிகளைக் காலால் நடந்து கடந்தான்.


பரதனை, பரத்துவாச முனிவர் எதிர்கொண்டு வரவேற்றல்.

72.
பரத்தின் நீங்கும் பாத்துவன் என்னும் பேர்
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்,
அருத்தி கூர, அணுகினன்; ஆண்டு, அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான்.

(பரதன் தனது கூட்டத்தவருடன்) வினைச் சுமையிலிருந்து விலகிய பரத்துவாசன் எனும் பெயர் கொண்ட, மேன்மை மிக்க, உயர்ந்த முனிவர் தங்கிய ஆச்சிரமத்தை அன்பு மிகுந்திட அடைந்தான். அப்பரத்துவாச முனிவனும் அவ்விடத்தில் அறுதொழிலுடைய அந்தனரோடு அவனை எதிர்கொண்டு வந்தான்.


நன்றி 

Post a Comment

0 Comments