தேம்பாவணி - காட்சிப்படலம் - THEMBAWANI - KAATCHI PADALAM


தேம்பாவணி 

காட்சிப்படலம்



தேம்பாவணி - காட்சிப்படலம் - THEMBAWANI - KAATCHI PADALAM


இடையர் வந்து குழந்தையை வணங்குதல்

01.
இன்ன வாயில் இன்ன தன்மை இன்ன யாவும் ஆகையில் 
பொன்ன நாடு துன்னும் உம்பீர் பொன்னு ருக்கொடு ஆங்குபோல் 
மின்னல் நேரும் அன்னை ஈன்ற வேத நாத னைத்தொழ, 
உன்ன லாத கோவர் இன்பம் உண்ண உற்று அழைத்தனர்.

குகையாகிய இந்த இடத்தில் இந்த விதமாக இலையெல்லாம் நடக்கும்போது. விண்ணுலகத்தில் வாழும் விண்ணவர்கள் பொன்தன்மையான வடிவம்கொண்டு அந்த இடத்தைச் சென்று சேர்ந்து, இடையர் எண்ணுவதற்கு அருமையான மகிழ்ச்சி அடையுமாறு மின்னல் போன்ற கன்னித்தாய் பெற்ற மறைமுதல்வனாகிய குழந்தையைத் தொழுமாறு அழைத்தனர். 

02. 
கொழுந்து உறும்கு ளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமும் 
எழுந்து உறுக்கு டத்தி யாரும் ஏகி, ஆய காட்சியால் 
விழுந்து உறும்க ளிப்பு விஞ்சி வேத நாதன் மேல்பதம் 
தொழுந்தொ றும்தொ ழுந்தொ றும்து எங்கு கின்ற தோற்றமே.

தளிரையுடைய குளிர்ந்த முல்லை நிலத்தைக் குடியிருப்பாகக் கொண்ட இடையர் கூட்டமும், அவர்களுடன் மிகுந்து வரும் இடைச்சியருமாகச் சேர்ந்து சென்று அங்கே கண்ட காட்சியால் உண்டாகும் மகிழ்ச்சி மிகுந்து, திருமறையின் தலைவனாகிய அக்குழந்தையின் கால்மீது விழுந்து வணங்குந்தோறும் வணங்குந்தோறும் விளங்குகின்ற காட்சிகொண்டனர்.

03. 
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது எனமன 
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என்மன 
மாலை ஆக வீங்கு வந்து வாசம் ஆரும் முல்லையார் 
மாலை ஆக ஈங்கு வந்து வாசம் ஆரும் முல்லையார்.

வண்டு மாலையில் மலரும் வேங்கை மலரை நெருங்கித் தேனை உண்ணாத தன்மைபோல, மனமயக்கத்தை அடைவதற்குக் காரணமான பொன்னின்மீது ஆர்வம்கொண்டு குற்றத்தைக் கொள்ளாதது என்று சொல்லத்தகுந்த மன இயல்பு கொண்டு மிகவும் மகிழ்ந்து, மணம் பொருந்திய முல்லை மலர்களால் தொடுத்த மாலையும் கையுமாக வந்து, அந்த இடையர் குடிகொண்டவராக நிறைந்து நிற்பார்கள்.

04. 
பஞ்ச அரங்கில் இன்பு அரங்கு பான்மை யால டைவரத்து 
அஞ்ச லம்கு ழித்து உவந்து அமிழ்ந்த மிழ்ந்து உளம்தனில் 
விஞ்ச இன்பம் நெஞ்சு அடங்கில் மேவல் ஆர்ந்த தம்முயிர் 
ஊஞ்சல் ஆடி வாயின் வாயில் உற்று உரைத்தல் உற்றனர்.

ஐம்பொறிகளாகிய மண்டபத்தில் இன்பம் நுகின்வர்ந்த தன்மையால் அடைந்த வரம் என்னும் அழகான கடலைத் தோண்டி, அதனுள் மகிழ்ந்து மூழ்கி, மனதில் பேரின்பம் மிகுதியாக அடைந்து, அப்பேரின்பம் மனதிற்குள் அடங்காமல் மேலோங்குமாறு நுகர்ந்த தம் உயிர் ஊஞ்சலாட, வாயின் வழியாக அப்பேரின்பம் வெளிப்பட பின்வருமாறு கூறினர்.

05.
எண்ணு ளேய டங்க லின்றி ஏந்து மாட்சி பூண்டுவான் 
விண்ணுளேபொ லிந்து வந்த விண்ண வரக்கு வேந்தனே 
புணணு ளேம ருந்து நீவிப் போன ஆட்டை மீட்கவோ 
மண்ணு ளேயெ ழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை.

எமது எண்ணத்தினுள்ளே அடங்குதல் இல்லாமல் உயர்ந்த மாண்பை அணிந்து, மேலான விண்ணுலகில் செழிப்புடன் மகிழ்ந்து இருந்த வானவர்க்கு மன்னனே! உன்னைவிட்டுப் பிரிந்து சென்ற ஆட்டை அதன் புண்ணுக்கு மருந்து தடவி, மீட்டுக் காப்பதற்காகவே இம்மண் உலகிற்கு வந்து மனிதனாகப் பிறந்துள்ளாய்.

06.
ஒண்த லங்கள் அண்ட உம்ப ரும்தொ ழும்ப ராபரா 
விண்த லம்க லந்தி லங்கு வெணக் எங்கன் ஒப்பெனா 
மண்த வங்கள் எங்கும் யாரும் வாழ ஈர வெண்குடை 
கொண்டு அவங்கல் கொண்ட தேறல் கொண்ட அன்பு கொற்றவா.

ஒளிமயமான இடங்களையுடைய விண்ணுலகில் வாழும் விண்ணவரும் வணங்கும் இறைவனே! விண்ணுலகமும் கலந்து விளங்கும் மண்ணுலகின் இடங்களெங்கும் யாவரும் நல்வாழ்வு அடைவதற்காக, வான மண்டலத்தில் தங்கி விளங்கும் வெண்ணிலவிற்கு ஒப்பு என்று சொல்லத்தக்க குளிர்ச்சி தரும் வெண்கொற்றக் குடையும் கொண்டு மலர்மாலையில் பொருந்திய தேனைப் போன்ற இனிமையான அன்பினையுடைய மன்னவனே!

07. 
மணிக்க லத்து அகத்து அமைத்த வான மிர்த மார்பினோய்! 
பிணிக்கு வத்து அகத்து உதித்த பெற்றி ஆயந்து வாழ்ந்திடப் 
பணிக்கு லத்து அகத்து அடங்கு இலால்ப ணித்த நின்பணி 
அணிக்கு லத்து அகத்து அணிந்த அன்பு போகில் ஆகுமே.

மாணிக்கப் பாத்திரத்தில் இட்டு வைத்த வானுலக அமிழ்தம் போன்ற மார்பினை உடையவனே! நோய் கொண்ட மனித குலத்தில் நீ வந்து பிறந்த தன்மையை ஆராய்ந்து வாழ்த்துவது என்பது, சொற்களின் கூட்டத்துள் அடங்காமையால், கட்டளையிட்ட உமது பணியினை அணி வகைகளாகக்கொண்டு, மனத்துள் அணிந்து நிற்கும் எங்கள் அன்பு எப்பொழுதும் நீங்காமல் நிலைபெறுவதாகும்.

08.
இரவி வேய்ந்த கஞ்சம் ஈன்ற இலகு முத்தம் ஏய்ந்துவெல் 
புரவில் வேய்ந்த சேயை ஈன்ற பொருவில் அன்னை வாழுதி 
சுருதி வேய்ந்த மாட்சி பூண்ட துணைவன் ஆய மாதவத்து 
உருவில் வேய்ந்த வேந்த வாழி உறுதி என்று வாழ்த்தினார்.

கதிரவனை அணிந்து, தாமரைமலர் பெற்ற ஒளியினையுடைய முத்துப் போன்று, எவரையும் வெற்றிகொள்ளும் கொடையில் சிறந்த மகனைப் பெற்றெடுத்த ஒப்பு இல்லாத அன்னையே! நீ வாழ்க! திருமறையை அணிந்த மாண்பினையுடைய துணைவனாகிய பெருந்தவத்து வடிவமாகத் தோன்றிய மன்னனே! நீ நன்கு வாழ்க! என்று அந்த இடையர் வாழ்த்தினர்.

09.
இடத்து இடத்து அடர்த்தி உற்ற இக்கு உடைத்த இன்பு சொல் 
குடத்தி யர்க்கு அமைத்த பற்றல் கூர்ந்து தோன்றல் தாள்மிசை 
தடத்து ணர்க்கு அமைத்த தேறல் தாங்கு மாலை சாத்தலும்
முடித்த திங்களைத் தொடுத்து உடுக்கள் துற்றல் ஒத்ததே.

இடங்கள் தோறும் நெருக்கமாக நின்ற கரும்பை வென்ற இனிய சொல்லையுடைய இடைச்சியர்க்கு உண்டான ஆசை அதிகமாகி, பெரிய மலரிதழ்களிடையே பொருந்திய தேனைத் தாங்கிநின்ற மாலைகளைத் திருமைந்தனின் திருவடிகளில் அணிந்தனர். அது நிறைநிலவைச் சூழ்ந்து விண்மீன்கள் நெருங்கி இருத்தலை ஒத்திருந்தது.

10. 
ஏதம் இன்றி மாலி ஈன்ற காந்தி என்று தோன்றலைக் 
கோது அகன்று உயிர்த்த கோதை தாள்முன் அன்ன கோவலர்
சீத இன்ப மோடு இரங்கு தேன மிழ்தம் ஈகலும்
பாதம் ஒன்று சோமன் ஈன்ற பால்நி லாவை மானுமே.

குற்றம் இல்லாமல் கதிரவன் தந்த ஒளிக்கதிரைப் போல, தன் கன்னிமைக்குக் குற்றம் இல்லாமல் திருமைந்தனைப் பெற்றெடுத்த மலர்மாலை போன்ற மரியாளின் அடிகளில், குளிர்ந்த மகிழ்ச்சியுடன் இனிய பாலை அந்த இடையர் காணிக்கையாகத் தந்தனர். அது மரியாளின் பாதங்களில் பொருந்தியுள்ள நிலவு தந்த பால் ஒளியை ஒத்து இருந்தது.


11.
பானி லத்து அமைத்த அன்பு பதுமம் நேரு கண்செயத் 
தேனி லத்தி னாரை நோக்கு சிறுவன் இன்பு காட்டலால் 
மேனி லத்தி னாரின் ஒத்த விரியு காட்சி உற்றுளம் 
வானி லத்தின் ஆர்ந்த இன்பு மலிய வாழ மாந்தினார்.

தேன் மிகுந்த முல்லை நிலத்து இடையரை நோக்கி, குழந்தை நாதன், மரியாளின் காலடியில் நிலத்தில் காணிக்கையாகப் பாலை இட்டு வைத்த அந்த அன்பைத் தாமரை மலர் போன்ற தன் கண்களால் பார்த்து. இன்பத்தைக் காட்டியதால் அந்த இடையர், விண்ணவருக்குச் சமமான விரிந்த அறிவைப் பெற்று. தம் மனம் விண்ணுலகிலுள்ள மிகுதியான இன்பத்தைப் பெற்று வாழுமாறு அருந்தினர். (அனுபவம் பெற்றனர்.)

12. 
கன்னி ஆய தாயும், ஓங்கு காவ லானும் அன்புற 
இன்னி றாலி னும்க னிந்த இன்ப அம்சொல் ஓதலால் 
உன்னம் மேவும் ஈர அன்பு முன்னம் உள்ளு றாமையால் 
மின்ன மாரி தூவல் ஒத்த வீழும் நாட்ட மாரியே.

கன்னியாகிய தாய் மரியாளும், அக்கன்னிகைக்குச் சிறந்த காவலனாகிய சூசையும் இனிமையான தேன் அடையினும் இளகிய மனதுடன் மகிழ்ச்சி தரும் அழகிய சொற்களை அன்புடன் கூறியமையால், அந்த இடையர் தம் சிந்தனையில் பொருந்திய குளிர்ச்சியான அன்புள்ளத்தினுள் அடங்காமையால் அவர்களின் கண்களிலிருந்து விழும் மகிழ்ச்சிக் கண்ணீர் மழை. மின்னலுடனான மழைநீர்த் துளிகளோடு ஒத்திருந்தது.

13.
ஏவ லாகி மூவ ரையிறைஞ்சி ஏங்கி ஏகினர் 
ஆவல் ஆகி ஆங்கு வைத்த ஆவி அல்லது இல்லதால் 
மேவல் ஆகி ஆவி யாக வேய்ந்த அன்பு இலாதெனில் 
ஓவல் ஆகி வெற்று உடல்கள் ஊரை உற்றல் ஒத்ததே.

பிரிந்து செல்லுமாறு கட்டளை ஆனதால். மூவரையும் வணங்கி அந்த இடையர் ஏக்கத்தோடு சென்றனர். ஆர்வம் கொண்டு அங்கு இட்டுவைத்த உயிரேயல்லாமல் வேறு உயிர் தங்களுக்கு இல்லாமையால், அதற்கு இசைந்து. தங்களுக்கு உயிராக அந்த மூவர்மீது கொண்ட அன்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால் வெறும் உடல்கள் மட்டுமே நீங்கி ஊரை அடைவதற்கு ஒப்பாக இருந்திருக்கும்.

14. 
ஏக ஆணை ஏக எங்கும் ஏகன் ஆகி ஆள்பவன் 
மாகம் மேவு மாடம்நீக்கி மாடு மேவுஉழைக்குறைந்து
ஆகம் ஆடை வேந்தர் நீக்கி ஆய ரைத்தெ ரிந்ததென்று 
ஓகை யாக ஓரு னோடும் ஓங்கு தாயும் வாழ்த்தினாள்.

தன் ஒரே ஆணை எல்லா இடங்களுக்கும் ஒருவனாக இருந்து ஆட்சி செய்யும் செல்ல இறைவன், வானத்தைத் தொடும் மாளிகையை விலக்கி, மாடுகள் தங்கும் இடத்தில் தங்கி, உடலில் பொன் அணிகலன்கள் அணிந்த மன்னரை நீக்கி இடையரைத் தெரிந்து கொண்டதால் உவகை கொண்டு மகிழ்ச்சி அடைந்த சூசையோடு சிறந்த தாயும் திருமைந்தனை வாழ்த்தினாள்.


சாந்தி ஐயமும் கன்னித் தாய் பதிலும்

15. 
முன்ன ருந்திய தீஞ்சுவை முல்லையார்
பின்ன ருந்திடப் பெட்புறீஇ நாடொறும்
மின்ன ருந்திய மெல்லடி யாள்கரத்து
அன்ன ருந்திருச் சேய்தொழ அண்ணுவார்.

இனிய சுவையை முன் அருந்திக் கண்ட இடையர், பின்னும் அதனை நுகர்வதற்கு ஆர்வங்கொண்டு. மின்னல் ஒளியை உட்கொண்டு விளங்கிய மென்மையான அடிகளையுடைய மரியாளின் கைகளில் அந்த அருமையான திருமைந்தனைக் கண்டு தொழுவதற்காக ஒவ்வொரு நாளும் நெருங்குவர்,

16. 
அண்ணி நீர்தவழ் தீயென அம்புயக்
கண்ணி தாள்மீசை பெய்துழி. காதலன் 
விண்ணின் நீர்முகில் மின்னென நோக்கலோடு 
உண்ணி வாவொழன்பு ஓர்மழை தூவினான்.

இடையர் நெருங்கி, நீரில் தவழும் நெருப்பு போன்ற தாமரை மலர்களால் ஆன மாலையைத் தன் அடியில் வைத்தபோது, அன்பு கொண்ட இறைமைந்தன், வானத்தில் நீரைக்கொண்ட மேகம் மின்னுவதுபோல அவர்களைப் பார்த்த பார்வையால் இடையர் உள்ளத்தில் மெய்யறிவு ஒளியைத் தந்ததோடு மகிழ்ச்சியையும் ஒரு மழை போலத் தூவினான்.

17. 
தூவி ஓடிய வாரிது வற்றொடு 
காவில் ஓடிய முத்தெனக் காதலால் 
நாவில் ஓடிய நல்புகழ் சிந்துவார் 
ஏவி ஓடிய கோல்விழி ஏந்தினார்.

மகிழ்ச்சி மழை பொழிந்து ஓடிய வெள்ளம் மிகுவதால் காட்டில் ஓடி, கரையில் ஒதுங்கிய முத்துப்போல. வில்லிலிருந்து ஏவப்பெற்று விரைந்து சென்ற அம்பு போன்ற கூர்மையான கண்களைத் தாங்கிய அந்த இடைச்சியர். அன்பினால் தம் நாவில் பொருந்திய நல்ல புகழுரைகளைப் பொழிந்து நிற்பர்.

18. 
ஏந்தி ஓங்குளத்து இன்பநெ டுங்கடல்
நீந்தி நீந்திநி லைக்கரை காண்கிலா
காந்தி வேய்ந்தன ளைக்கனிந்து ஒதுவாள் 
சாந்தி நாமம்த ரித்தகு டத்தியே.

சாந்தி என்னும் பெயரைப் பெற்ற ஓர் இடைச்சி, உயர்ந்தோங்கிய தன் மனதில் கொண்ட மகிழ்ச்சி என்னும் நீண்ட கடலை நீந்தி நீந்தி நிலையான கரையைக் காணமுடியாமல். சூரியனின் ஒளியை ஆடையாக அணிந்துள்ள மரியாளைப் பார்த்து. கனிவுடன் பின்வருமாறு கூறுவாள்.

19. 
குடத்தி வாய்மொழிக் கோதெனக் கோதையாய்
உடத்தி நீயொரு வாதருள் ஓர்ந்துகேள்
மடத்து யாதெனும் கிள்ளைவ குத்தன 
இடத்து யாவரும் கேட்பதுஇல் ஆவதோ?

மலர்மாலை போன்றவளே! இடைச்சியின் வாய்ச்சொல் குற்றமுள்ளதென்று வெகுண்டு நீ விலகாமல் அருளை நினைந்து கேள். கிளி அறியாமையால் சொல்லிய எதையேனும் இவ்வுலகத்தில் எவராவது கேட்பது இல்லை என்பது உண்டா?

20. 
ஆவ தேமுனர் ஆயது போலறிந்து 
ஈவ தேநசை பின்றவ ளித்திடும் 
கோவ தேமிசை ஆள்தனிக் கோலினான் 
நோவ தேயினிது என்றுதித் தான்கொலோ?

நடக்க இருப்பதனை முன்னர் நடந்தது போல் அறிந்து மக்களுக்குக் கொடுப்பதென்றால் அவருடைய ஆசை பின்னடையுமாறு மிகுதியாகக் கொடுப்பவனாய் விண்ணிலிருந்து தனியரசு செலுத்தும் ஒப்பற்ற செங்கோலையுடைய இறைவன். துன்புறுத்துவதே தனக்கு இனிமை என்று நினைந்து இந்த எளிமையான கோலத்தில் பிறந்தானோ?

21.
கொல்லும் வேலொடும் கூர்நெடும் வாளொடும் 
வில்லும் வாளியும் ஆழியும் வில்செய 
ஒல்லும் ஆழியு ருட்டிடக் கோன்துணை 
செல்லும் வீரவெஞ் சேனையில் ஆயதேன்.

பகைவரைக் கொல்லுகின்ற வேலோடும் கூர்மையான நீண்ட வாளோடும் வில்லும் அம்பும் சக்கரமும் ஆகிய படைக்கலன்கள் ஒளிவிட, தனக்கு உரிமையான ஆணைச்சக்கரத்தைச் செலுத்தி ஆட்சி செய்ய ஒரு மன்னனுக்குத் துணையாகச் செல்லக்கூடிய வீரமுள்ள கொடிய சேனை இவனுக்கு இல்லாமல் போனது ஏன்?

22. 
ஆய வான்மணி ஆர்ந்தணி உச்சியால்
காய நெற்றிக டந்துயர் மாடமும்
தூய பொன்னொடு சூழ்சுடர் பூணுமித்
தேய வேந்தர்தம் செல்வமொன்று இல்லதேன்?

ஆராய்ந்தெடுத்த அழகிய சிறந்த மணிகளை மிகுதியாக அணிந்த கோபுர உச்சியால் ஆகாயத்தின் நெற்றியையும் கடந்து உயர்ந்து நிற்கும் மாளிகையையும் தூய்மையான பொன்னால் செய்து சுற்றிலும் பதித்த மணிகள் ஒளிதரும் அணிகலன்களும் இங்குள்ள நாடுகளை ஆளும் மன்னர்களுக்கு உரிய மற்றச் செல்வங்களும் என ஒன்றும் இவருக்கு இல்லாது போனது ஏன்?

23.
இல்ல தேயில இவ்வழி வந்ததேன்
செல்ல வான்வழி செய்யவந் தானெனில் 
வல்ல வேடம ணிந்தும றைவற 
வெல்ல வானுரு வேய்ந்தின்றநன்று அல்லதோ!

தான் குடியிருக்க வீடும் இல்லாமல். இந்தக் குகை இடத்தைத் தேடி வந்து பிறந்தது ஏன்? மக்கள் வானுலகம் செல்ல வழியைக் காட்ட வந்தார் என்றால் அதற்குரிய வல்லமையான கோலம் கொண்டு வெற்றி பெறுவதற்குரிய தன்னுடைய விண்ணுலக வடிவத்தை மறைவு இல்லாமல் வெளிப்படையாக வந்து தோன்றினால் அது நல்லது ஆகாதோ?

24. 
ஓவுண்டு ஆயவு குக்கொடு என்னுளத்து 
ஆவுண்டு ஆயின ஐயமி தேயினித் 
தூவுண் தாதுவ தூய்மலர் வாய்திறந்து 
ஏவுண்டு ஓதுதி ஆயிழை யாய்என்றாள்.

அழகிய மெய்யறிவு அணிகளை உடையவளே! துன்பத்தை உட்கொண்டு அமைந்த இக்குழந்தை இறை மைந்தனின் வடிவத்தை நினைத்ததால் என் உள்ளத்தில் உண்டான ஆர்வம் காரணமாக எழுந்த ஐயம் இதுவே. இனி தெளிக்கின்ற உண்ணத் தகுந்த தேனைக் கொண்ட உன் மலர்வாய் திறந்து, எனக்குத் தகுந்த கட்டளையையும் மனதில் கொண்டு இதற்கு மறுமொழி கூறுவாயாக என்று சாந்தி கூறி முடித்தாள்.

25. 
என்ற வாசகம் எந்தைம னுக்குலம் 
சென்ற வாயருள் காட்டிய சீருணர் 
ஒன்றல் ஆகியு ருகிய தாய்புனல் 
மின்த வாவிழி தூவிவி எம்பினாள்.

என்று சாந்தி கூறிய வார்த்தையும் நம் தந்தையாகிய இறைவன் மனித இனத்தில் தானும் ஒருவனாய் வந்து பிறந்தபோது, அருள் காட்டிய சிறப்பும் தன் உணர்வில் பொருந்துமாறு ஏற்றுக்கொண்டு உருகிய தாயாகிய மரியாள், மின் ஒளி நீங்காத தன் கண்களிலிருந்து நீரைப் பொழிந்தவாறு பின்வருமாறு கூறினாள்.

26.
அம்பி னாலப யர்செயும் அத்துணை 
நம்பி னார்தனி நற்செய்கை ஈடிலார் 
கொம்பில் ஏறுமி டைத்துவ ளும்கொடி 
எம்பி ரான்வலிக்கு இத்துணை வேண்டுமோ?

அம்பினால் வீரர் தமக்கு அடைக்கலம் தரும் அந்தத் துணையை நம்பி இருப்பவர். தனியாக நல்ல வீரச் செயலைச் செய்யும் வலிமை இல்லாதவர் ஆவார். இடையே துவண்டு விழக்கூடிய மென்மையான படரும் கொடியே கொம்பைத் துணையாகக் கொண்ட ஏறிப்படரும். ஏம்பெருமானின் வலிமைக்கு இவ்விதமான துணையெல்லாம் வேண்டுமோ?

27. 
வேண்டும் ஓர்வினை வேண்டுமென் றால்முடித்து 
தூண்டும் ஓர்சினம் தோன்றுழி அப்பகை 
தாண்டும் ஓர்வலி தாங்குவர் யாவரோ?
ஆண்டும் ஓர்தனிக் கோலர சான்எரி

தான் செய்ய வேண்டிய ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்றால் நினைத்து அதை முடித்து ஓர் ஒப்பற்ற செம்மையான ஆட்சியால் உலகங்களையெல்லாம் ஆளும் அரசனாகிய இறைவனிடம் நெருப்பைத் தூண்டிவிட்டது போன்ற ஒரு சினம் தோன்றும் போது, அப்பகையைக் கடந்து செல்லத்தக்க ஒரு வலிமை கொண்டவர் யாரோ?

28. 
யாவ ரும்கடிது அஞ்சலொடு எஞ்சுவான் 
மீவ ரும்துளி மேதினி மொய்த்ததும் 
தீவ ரும்துளி ஐம்புரம் தீந்ததும் 
தூவ ரும்பல வும்தொகை சொற்றவோ?

மக்கள் யாவரும் மிகுதியான அச்சத்தோடு இறந்து ஒழியுமாறு  வானத்திலிருந்து பொழியும் மழைவெள்ளம், உலகத்தின் மேல் பரவி மூடிக்கொண்டதும், நெருப்பாக இறங்கி வரும் மழையால் சோதோம் கொமாரா முதலிய ஐந்து நகரங்கள் எரிந்ததும் ஆகிய இந்த இறைவனின் தூய்மையினால் வரும் வல்லமையான செயல்களைக் கணக்கிட்டுச் சொல்ல வேண்டுமோ?

29. 
சொற்த விர்ந்தவ ருள்தொழில் காலிதென்று 
உற்று அவிர்ந்தவு டுமுடி யாளுரைத்து
இற்று அவிர்ந்தவி டைச்சியு ணர்ந்தபின் 
பற்று அவிர்ந்தவு ரைப்பயன் கூறுவாள்.

மேலும் சொல்லுக்கு அடங்காத அருட்செயலைக் கடவுள் செய்யும் காலம் இது என்று, மிகுதியாக ஒளி வீசிய விண்மீன்களை முடியாக அணிந்த மரியாள் கூறவும், ஒளியுள்ள இடைச்சியாகிய சாந்தி இதனை அறிந்த பின்னும், தன் ஆர்வம் விளங்க வார்த்தைகளைக் கூறத் தொடங்குவாள்.

30. 
கூறு வாள்செயும் கொள்கையின் என்றுளம்
பீறு வாளெனப் பின்னையோர் ஐயமும்
தேறு வாய்மொழி கேட்டிடச் செப்புவேன்
ஈறு வாயில எந்தையின் அன்னையே.

முடிவு காலம் இல்லாத நம் தந்தையாகிய இறைவனின் தாயே! வாள் பிளவுபடுத்தும் தன்மை போல. என் உள்ளத்தைக் கிழிக்கும் வாள் போல் மேலும் எழுந்த ஓர் ஐயமும் உண்டு. தெளிவடைவதற்காக உன் வாய்ச் சொல்லைக் கேட்டு, அறிவதற்காக இதைக் கூறுவேன்.

31. 
அன்னை தந்தையி லானறை நூல்படி
என்னை இங்களித் தோன்வரும் எல்லையின்
மின்னை ஒன்றிய வேடமெடுத்தவன்
தன்னை யாவரும் தாழவி றைஞ்சுவார்.


திருமறை நூலில் கூறியவாறு, தாயும் தந்தையும் இல்லாமல் தானாய் விளங்கும் இறைவன், என்னையும் என் போன்ற மனிதரையும் மீட்டுக் காப்பவனாய் இவ்வுலகில் வந்து தோன்றும் இறுதிக் காலத்தில் மின்னல் போன்ற வேடம் எடுத்து வர, அவரை யாவரும் தாழ்ந்து வணங்குவர்.

32. 
அஞ்சு வாரவன் முன்னுலகு ஆள்பவர் 
எஞ்சு வாரவ னையிறைஞ் சாரேன 
விஞ்சும் ஆரணம் ஆகவி ளம்பினார் 
துஞ்சு மாதவ ரேயெனச் சொல்லினாள்.

இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் மன்னர் யாவரும் அவன் முன் அஞ்சி நடுங்குவர் என்றும் அவனை வணங்காதவர் கெட்டு அழிவர் என்றும் மறைந்துவிட்ட பெருந்தவத்தோர் மேலான திருமறை வாக்காகச் சொல்லியுள்ளார்கள் என்று கூறினாள்.

33.
சொல்லக் கேட்டனள் தொன்மொழித் தன்மையும் 
வெல்லக் கேட்பரும் வெஞ்சினத்து எல்லைநாள் 
ஒல்லக் கேட்டனர் உட்குற ஆவதைப் 
புல்லக் கேட்கில் யான்புகல் வேனென்றாள்.

சாந்தி சொன்னதைக் கேட்ட மரியாள், உலக முடிவு நாள் வருவது பற்றிப் பழங்காலத்தில் சொல்லப்பட்ட செய்திகளை வெல்லும் வகையிலும் கேட்பதற்கரிய கொடிய வெகுளியோடும் கேட்டவர் அஞ்சி நடுங்குமாறும் நடக்க இருப்பதனைப் பொருத்திக் கேட்க நீங்கள் விரும்பினால் நான் சொல்வேன்" என்றாள்.

34. 
தாளெ ழும்கம லம்சுடர் தாவிய
கோளெ ழுங்கதிர் கொண்டெனக் கேட்டலும் 
வாளெ ழுந்தகண் மாதொடு யாவரும் 
சூளெ ழுந்துறச் சொல்லெனச் சொல்லுவாள்.

இவ்வாறு சொல்லக் கேட்டதும் வாள் போன்ற கூர்மையான கண்களையுடைய சாந்தியுடன் மற்ற இடையர் யாவரும் மலர்த்தண்டில் எழுந்து நின்ற தாமரையின் ஒளி பரந்த சூரியனின் ஒளியை உட்கொண்டு மலர்ந்தது போல, வஞ்சினம் கூறிய முறையில் எழுந்துநின்று நன்றாகச் சொல் என்று விரும்பிக் கேட்க மரியாள் பின்வருமாறு தொடர்ந்து சொல்லுவாள்.

நன்றி

Post a Comment

0 Comments