டிசம்பர் மாதத்தில் உள்ள
சிறப்பு தினங்கள்
டிசம்பர் - 1
உலக எய்ட்ஸ் தினம்
எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோயை 1981ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடித்தனர். இது எச்.ஐ.வி. (HIV) என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை தாக்கி அழிப்பதால், உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது. இதனால் பல நோய்கள் தொற்றி, இறப்பு ஏற்படுகிறது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1987இல் இத்தினம் அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் - 2
சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
அடிமை என்கிற நிலை இன்னும் தொடர்கிறது என்பதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது. ஆகவே 2002ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஒரு தீர்மானத்தின்மூலம் டிசம்பர் - 2ஐ சர்வதேச அடிமை ஒழிப்பு தினமாக ஐ.நா. அறிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என ஐ.நா. கூறுகிறது.
உலக கணினி கல்வி தினம்
கணினிப் பொறியானது மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாகச் செய்து முடிக்கிறது. கணினி தற்போது வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஒரே இடத்தில் இருந்துகொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடிகிறது. ஆகவே அனைவருக்கும் கணினி கல்வி அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் - 3
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்
மனித சமூகத்தில் காது nhதவர், கண் தெரியாதவர், வாய் பேச முடியாதவர், கை கால்களைப் பயன்படுத்த இயலாதவர்கள், மன நோயாளிகள் அனைவரையுமே ஊனமுற்றோர் என்பதற்குப் பதிலாக, மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கின்ற முறை 2007ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டது. 2012ஆம் ஆண்டுமுதல் டிசம்பர் 3ஆம் நாள் உலக மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
டிசம்பர் - 5
சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம்
தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பாதிப்படையும்போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும். இதற்காக ஐ.நா. சபை 1985ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை தனியார் நிறுவனங்களும் 2006ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடுகின்றன.
டிசம்பர் - 7
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்
விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டப்பிறகு பயணத்தின் நேரம் குறுகிப் போனது. தற்போது சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. இதற்கான ஒரு அமைப்பு 1944இல் ஆரம்பிக்கப்பட்டு, அதன் 50 ஆவது ஆண்டு விழா 1994ஆம் ஆண்டில் கொண்டாடியது. இந்த அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஐ.நா. பொதுச்சபை டிசம்பர் 7 ஆம் தேதியை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமாக அறிவித்தது.
டிசம்பர் - 9
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
ஊழல் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு வேலையை முடிக்க இரண்டில் ஒருவர் லஞ்சம் கொடுக்கிறார் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வு கூறுகிறது. ஊழல் நாட்டின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளது. ஊழலற்ற சமுதாயத்தை படைக்க ஐ.நா. 2000ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.
டிசம்பர் - 10
நோபல் பரிசு விழா
உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு நோபல் பரிசாகும். இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களால் 1895இல் ஆரம்பிக்கப்பட்டு 1901ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. நோபல் நினைவு நாளான டிசம்பர் 10 இல் நோபல் பரிசு விழா நடக்கிறது.
சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம்
மனித உரிமைகளுக்காக போராடுவதற்காக மனிதர்கள் இருக்கின்றனர். ஆனால் விலங்குகளின் உரிமைக்காக விலங்குகள் போராட முடியாது. விலங்குகளின் நலன் காக்க அவைகளின் உரிமைக்காக மனிதர்கள்தான் போராட வேண்டும். ஆண்டுதோறும் கோடிக்கான ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் என உயிர்கள் கொல்லப்படுகின்றன. விலங்குகளின் நலன் கருதி இத்தினம் டிசம்பர் 10 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
உலக மனித உரிமைகள் தினம்
ஐ.நா. பொதுச்சபை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அனைத்துலக மனித உரிமைகள் என்கிற பிரகடனத்தை வெளியிட்டது. சாதி, மதம், இனம், பால், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடுகாட்டி வேறுபடுத்தக் கூடாது. தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வகை செய்வதே மனித உரிமையாகும். இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் - 11
சர்வதேச மலைகள் தினம்
மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் ஐ.நா. சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஐ சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது.
டிசம்பர் - 12
சர்வதேச கன உலோக தினம்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12 ஆம் நாள் உலகளவில் உள்ள கன உலோக ரசிகர்கள் மற்றும் ஊழியர்கள் இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் விளையாடி ஆல்பங்களை வெளியிடுகின்றனர். வீடுகள், வேலை செய்யும் இடம், கார் ஆகியவற்றிலும் சிறந்த இசையைப் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இத்தினம் ஐயர்ன் மேத்யூ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
டிசம்பர் - 15
சர்வதேச தேயிலை தினம்
தேயிலை என்றாலே தேநீரை நமக்கு ஞாபகப்படுத்தும். தேநீரை அனைவரும் விரும்பி அருந்துகின்றனர். தேயிலையில் பல ரகங்கள் உண்டு. வெளிநாடுகளில் தேயிலைக்கு என்று தனிப்பட்ட கலாச்சாரம் ஒன்று உள்ளது. தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகள் டிசம்பர் 15ஐ புதுடில்லியில் சர்வதேச தேயிலை தினமாக அறிவித்து 2008ஆம் ஆண்டு முதல் கொண்டாடுகிறது.
டிசம்பர் - 17
முதல் விமானத்தில் ரைட் சகோதர்கள்
ரைட் சகோதர்கள் என்றழைக்கப்படும் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்கிற இருவரும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களே விமானத்தைக் கண்டுபிடித்த முன்னோடிகள். முதன்முதலில் டிசம்பர் 17 அன்று 1903ஆம் ஆண்டில் பூமிக்கு மேலே மணிக்கு 30 மைல் வேகத்தில் 12 வினாடிகளில் 120 அடி தூரம் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தனர்.
பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்
அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்காக டாக்டர் அன்னி தெளி மற்றும் பாலியல் தொழிலாளி அவுட் ரீச் ஆகியோர் இணைந்து பாலியல் தொழிலாளருக்கு எதிரான வன்முறையை நிறுத்த வலியுறுத்தும் வகையில் 2003ஆம் ஆண்டில் இத்தினத்தை அமெரிக்காவில் கடைப்பிடித்தனர். மேலும் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சின்னமாக சிவப்பு குடை அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் - 18
சர்வதேச குடிபெயர்ந்தோர் தினம்
வேலை வாய்ப்பிற்காக பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுகின்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. மேலும் வன்முறை, துன்புறுத்தல், அடக்கு முறைக்கும் ஆளாகின்றனர். ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களை தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக இத்தினம் 2001ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் - 20
சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20இல் உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியை நிறுவியது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும். 21ஆம் நூற்றாண்டில் மக்கள் அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்பட இத்தினம் கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் - 26
சார்லஸ் பாபேஜ் பிறந்த தினம்
சார்லஸ் பாபேஜ் என்பவர் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று லண்டனில் பிறந்தார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை உருவாக்கினார். இதனால் இவரை கணினியின் தந்தை என்றும் அழைக்கின்றனர். இவரால் உருவாக்கப்பட்ட கணினி மிகப்பெரிய அறைக்குள் ஏராளமான இயந்திரங்களைக் கொண்டது.
நன்றி
0 Comments