அரசியலின் பிரதான பிரிவுகள் - MAJOR DIVISIONS OF POLITICS


அரசியலின் 

பிரதான பிரிவுகள்


அரசியலின் பிரதான பிரிவுகள் - MAJOR DIVISIONS OF POLITICS

அரசியலை கற்கைக்கு உட்படுத்தல் என்பது அரசியல் தோற்றப்பாட்டின் பல்வேறு பிரிவுகளை விளங்கிக் கொள்ளும் செயற்பாடாகும். 

கடந்த 2500 வருடங்களாக பல்வேறு திசைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ள மற்றும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் பல்வேறு அரசியல் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதாவது, 

அரசியல் நிறுவனங்கள் 
அரசியல் நடைமுறைகள் 
அரசாட்சி 
அரசியல் நடத்தை 
அரசியல் கருத்தியல்கள் 

என்பவைகள் ஆகும்.

அரசியல் நிறுவனங்கள் 

எந்த ஒரு சமூகத்திலும் அரசியலானது நிறுவனம் மயப்படுத்தப்பட்டு காணப்படும். இவ்வாறு நிறுவனம் படுத்தப்பட்ட அரசியல் நிறுவனங்களை பொருத்தமட்டில், 

அரசு 

ஒரு வரையறைக்கப்பட்ட நிலப்பரப்புக்குள் ஒழுங்கமைந்த மனித சமூகத்தில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தையும் இறைமையும் கொண்டதுமான உயர் அமைப்பு. 

இவ்வரசு பற்றி கிரேக்க கால அரசியல் அறிஞரான அரிஸ்டோட்டில் கூறும் போது இயற்கையின் படைப்பே அரசு என்பதுடன் இது மக்களின் நலனுக்காகவே தோன்றி அதற்காகவே நீடிக்கிறது என்கிறார். 

அரசாங்கம் 

அரசினது எண்ணங்களையும் விருப்பங்களையும் செயல் உருவில் நடைமுறைப்படுத்துவது அரசாங்கம் ஆகும். இவ்வரசாங்கமானது ஓர் அரசு கொண்டிருக்க வேண்டிய அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்று மட்டுமே ஆகும். 

இவ்வரசாங்கம் அரசினுடைய ஆட்சித்தலத்தினை வெளிப்படுத்துகின்ற ஒன்றாகவும் காணப்படுகிறது. இவ்வாறு அரசாங்கம் பற்றிய பின்வரும் அரசியல் அறிஞர்கள் கருத்துக்களை கூறுகின்றனர். 

E.F ஸ்ரோங் - சட்டத்தை இயற்றி அதனை அமுல்படுத்துவதற்கு தேவையான அரசின் அதிகாரத்தைப் பெற்ற ஓர் அமைப்பு.

அப்பாத்துரை -  அரசின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக அரசாங்கத்தை விளங்குதல்.

நீதிமன்றங்கள் 

இது மக்களுக்காக நீதியை நிலைநாட்டும் ஓர் நிறுவனமாகும். இது சட்டத்திற்கு விளக்கம் அளித்தல், வழக்குகளை விசாரித்தல், தீர்ப்பு வழங்குதல் மற்றும் பிரசைகளின் உரிமைகளை பாதுகாத்தல், அரசியல் யாப்பினை பாதுகாத்தல் போன்ற பல்வேறுப்பட்ட பணிகளை நீதிமன்றம் ஆற்றுகிறது. 

பாராளுமன்றம் 

பொதுவாக சட்டமன்றங்கள் பாராளுமன்றம் என்ற பெயரினாலே அழைக்கப்படுகின்றது. இப்பாராளுமன்றம் சட்டங்களை இயற்றுதல், புதிய அரசியல் யாப்புகளை உருவாக்குதல் மற்றும் அரசியல் யாப்பை திருத்துதல், வரவு செலவு திட்டத்தினை ஏற்றுக் கொள்ளல் மற்றும் நிராகரித்தல் போன்ற பணிகளை ஆற்றுகிறது. இந்நிறுவனம் ஓரங்க மன்றமாகவும், ஈரங்க மன்றமாகவும் காணப்படலாம்.

அமைச்சரவை 

மந்திரி சபை அரசாங்கத்திலும், ஜனாதிபதித்துவ அரசாங்கத்திலும் அமைச்சரவை காணப்படும். ஆனால் மந்திரி சபை அரசாங்க முறையிலேயேதான் அமைச்சரவை முக்கியப்படுத்தப்பட்ட ஒன்றாக காணப்படுகிறது. 

ஜனாதிபதி தலைமையில் அல்லது பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் சேர்ந்த நிறுவனமே அமைச்சரவையாகும். 

மேற்குறிப்பிட்ட வகையில் காணப்படும் நிறுவனங்களுக்கு அப்பால் அரசியல் கட்சிகள், பணிக்குழு, உள்ளூராட்சி மன்றங்கள் போன்றவைகளும் இதில் காணப்படுகின்றன. இவ்வாறு இந்த நிறுவனங்களின் ஆரம்பம், வளர்ச்சி, அமைவு சேர்க்கை, அதிகாரம், பொறுப்புக்கள், அந் நிறுவனங்களுக்கும் பிரசைகளுக்குமான தொடர்புகள் என்பவற்றை கற்றலையே அரசியல் விஞ்ஞானம் என்று கருதுகின்றனர்.

அரசியல் நடைமுறைகள் 

நிறுவனப்படுத்தப்பட்டுள்ள அரசியல் சமூகத்தின் அரசியல் நிறுவனங்களை மையமாகக் கொண்டு நிலைத்திருக்கும் நடைமுறைகளே அரசியல் நடைமுறை எனப்படும். இதற்கு உதாரணம், 

பாராளுமன்ற நிறுவனத்தின் இருப்புக்காக அதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட நடைமுறைகள் பல உள்ளன. அந்த அடிப்படையில் ஜனநாயக தேர்தல் செயற்பாடுகள், சுதந்திரமானதும் நீதியானதுமானதுமான தேர்தல், பெரும்பான்மையோரின் விருப்பம், மக்கள் இறைமையை ஏற்றுக் கொள்ளல் என்பன இந்த நடைமுறைகள் ஆகும். இதே போன்றுதான் ஏனைய எல்லா அரசியல் நிறுவனங்களும் பல நடைமுறைகளுடன் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. 

அரசாட்சி 

அரசாட்சி என்பது அரச அறிவியல் ஆய்வுக்கு உட்படும் அரசியலில் காணப்படும் பிரதான பிரிவாகும். ஜனநாயக அரசாங்க முறைமையினுள் பிரஜைகள் அரசாங்கத்தை தெரிவு செய்து அரசியல் சமூகத்தினை சரியாக வழி நடத்தி அதன் மூலம் சமூகத்தின் பொது எதிர்பார்ப்புகளை  பூர்த்தி செய்வதற்கும், அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக ஒழுங்குபடுத்துவதற்கு மே பிரஜைகள் அரசாங்கத்தினை தெரிவு செய்கின்றனர்.

இவ்வாறு இந்த பிரஜைகளின் நோக்கங்களை அரசாங்கம் சரியாக செயல்படுத்துவதையே ஆட்சி எனலாம். ஆட்சி செயல் முறையில் பின்வரும் பணிகளும் உள்ளடங்கப்பட்டுள்ளன. 

சமூகத்தின் சிறப்பான இருப்புக்கு தேவைப்படும் சட்டங்களை இயற்றுதல். 

சமூகத்தின் நல்வாழ்வுக்காகவும், முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காகவும், முரண்பாட்டின் ஊடாக ஏற்படும் மோதல்களை தீர்ப்பதற்காகவும் தேவைப்படும் சட்டங்களையும் உருவாக்குதல்.

சட்டத்தையும், ஒழுங்கையும் பேணுவதற்கும், பொருளாதார அரசியல் பாதையை ஒழுங்குபடுத்துவதற்கும் தேவையான சட்டத்தை உருவாக்குதல். 

அரசாங்க கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அரசின் நிர்வாக செயல்பாடுகளை உருவாக்குதல். 

பிரஜைகளுக்கு அரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை முகாமை செய்தலும், பேணி செல்தலும்.

சமூக குழுக்களுக்கிடையிலும் சமூக குழுக்களுக்கும் அரசுக்கிடையிலும் ஏற்படும் முரண்பாடுகளை முகாமை செய்தல்.

அரசியல் நடத்தைகள் 

அரசியல் பிராணியான மனிதன் தற்போது பிரஜையாக கருதப்படுகின்றான். அதாவது அரசின் அங்கத்தினர் என்ற வகையிலாகும். ஓர் அரசியல் சமூகத்தில் மனிதர்களின் அரசியல் விருப்பு, வெறுப்புக்களையும், செயல்பாடுகளையும் விவரிக்கும் அரசியல் எண்ணக்கருவே அரசியல் நடத்தை எனப்படும். 

இந்த அரசியல் நடத்தையில் பொருளாதாரம், இனம், சாதி, மக்களின் சமூகத்தரம், கல்வி, விருப்பம் போன்ற காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இவ்வாறு பிரஜைகளுக்கு நவீன அரசாங்க முறையினுள் நிறைவேற்றக்கூடிய சில பணிகளும் உள்ளன. அவை, 

அரசியலில் ஈடுபடுதல். 

தேர்தலில் வாக்குகளை பயன்படுத்துதல் அல்லது பயன்படுத்தாமை. 

அரசியலில் உயர் பதவிகளை வகித்தல் அல்லது வகிக்காமை. 

தேர்தல் செயற்பாடுகளில் செயத்திரனுடன் ஈடுபடுதல் அல்லது ஒதுங்கி இருத்தல். 

அரசியல் கட்சிகளின் உறுப்பினராக இருத்தல் அல்லது இருக்காமை. 

நாளாந்த அரசியல் நிகழ்வுகள் குறித்து ஈடுபாடு காட்டுதல் அல்லது காட்டாது இருத்தல். 

அரசியல் கட்சிகளை அமைத்தல் அல்லது அமைக்காமை. 

மேற்குறிப்பிட்ட வகையில் பிரஜைகளின் அரசியல் விருப்பு, வெறுப்புகள் மற்றும் செயற்பாடுகளை விபரிக்கும் அரசியல் எண்ணக்கருவே அரசியல் நடத்தை எனலாம். 

அரசியல் கருத்தியல்கள் 

ஒரு சமூகத்தின் அரசியல் நிறுவனங்களின் நடைமுறைகள் மற்றும் பிரஜைகளின் அரசியல் நடத்தைகள், அரசாட்சி போன்ற செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் பிரதான சாதகமாக அமைவதையே அரசியல் கருத்தியல் எனலாம். 

தற்போதைய உலக அரசியலில் பிரதானமாக சில கருத்தியல்கள் காணப்படுகின்றன. அவை, 

சாவுடைமை வாதம் 
தாராண்மை வாதம் 
ஜனநாயக வாதம் 
குடியரசு வாதம் 
நலன்புரி வாதம் 
பெண்ணியல் வாதம் 
தேசியவாதம்

நன்றி

Post a Comment

0 Comments