பராசரர்
முன்னொரு காலத்தில் வசிஷ்ட முனிவரின் மாணவர்களுள் ஒருவரான கல்மாஷபாதன் எனும் அரசன் ஓர் நாட்டை ஆட்சி செய்து வந்தான். இவனிடம் நிறைய நற்பண்புகள் காணப்பட்டது. இவனால் பல்வேறு யாகங்கள் மற்றும் பூஜைகள் என்பன நடாத்தப்பட்டு வந்தன. அதே நேரத்தில் காடுகளில் சென்று பல விலங்குகளை வேட்டையாடுவதையும் பழக்கமாக கொண்டிருந்தான்.
அப்படி ஒரு நாள் இவன் காட்டிற்குச் சென்று வேட்டையாடி விட்டு திரும்பும் போது ஓர் ஒற்றையடி பாதை வாயிலாக கடக்க வேண்டி இருந்தது. அந்தப் பாதையால் சென்று கொண்டிருந்த போது எதிர்ப்புறத்திலிருந்து ஓர் அந்தணரும் அப்பாதையை கடந்து கொண்டிருப்பதை மன்னன் கண்டான். இருவரும் ஒரே நேரத்தில் நடந்து சென்றால் அப்போதையை கடக்க முடியாது. இவர்களில் யாராவது ஒருவர் பாதையை விட்டு சற்று விலகி நின்றால் தான் மற்றவர் செல்ல முடியும். இவ்வாறு மன்னனின் எதிர்ப்புறத்தில் நடந்து வந்த அந்தனர் வசிஷ்ட முனிவரின் புதல்வரான சக்தி மகரிஷி ஆவார். அவரைப்பற்றி அந்த கல்மாஷ பாதன் அறிந்திருக்கவில்லை.
ஆகவே அவரை சற்று ஒதுங்கி நிற்குமாறு மன்னன் கூறினார். அதற்கு சக்தி மகரிஷி ஓர் அந்தணர் நடந்து வரும் சாலையில் வழிவிட வேண்டும் என்பது சாஸ்திர விதி என்பதனால் கல் மாஷபாத மன்னனை சாலையை விட்டு விலகி நிற்குமாறு கூறினார். அதை கேட்ட கல்மாஷ பாதன் கடுமையாக கோபம் கொண்டு சக்தி மகரிஷி ஓரமாக தள்ளிவிட்டு பாதையை கடந்து சென்றான். தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி வருந்திய சக்தி மகரிஷி அந்த மன்னன் மனிதகுல மாமிசம் தின்னும் ராட்சசனாக மாறட்டும் என சாபம் விட்டார். உடனே கல்மாஷ பாதனும் மாமிசம் உண்ணும் குணம் கொண்டவனாக மாறி வசிஷ்டருடைய பிள்ளையான சக்தி மகஷிரியையும், அவருக்கு இருந்த 100 பிள்ளைகளையும் கொன்று தின்று விட்டார்.
இதை அறிந்த வசிஷ்டர் மிகவும் மனம் வருந்தி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால் இறந்து போன சக்தி மகரிஷியின் மனைவி தடுத்து நிறுத்தி நான் கர்ப்பமாக இருக்கிறேன் அதனால் எனக்கு துணையாக இருந்து என்னையும் எனது குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். இதனால் வசிஷ்டரின் தற்கொலை செய்யும் எண்ணம் விலகியது. அடுத்த சில மாதங்களில் அவள் ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
ஒரு நாள் வீட்டில் ஏதோ மந்திரம் உச்சரிக்கும் சத்தம் கேட்டது. உடனே வசிஷ்ட முனிவரும் இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சக்தி மகரிஷியின் மனைவியிடம் கேட்டார். அதற்கு அவள் தன்னுடைய வயிற்றில் உள்ள குழந்தை தான் வேதம் ஒலிக்கிறது என்றாள். அவளுடைய கணவரான சக்தி மகரிஷி ஓதும் மந்திரங்களை வயிற்றில் இருந்த படியே குழந்தை கற்றுக்கொண்டு அப்படியே ஓதியது. நாளடைவில் குழந்தை நன்கு வளர்ந்தது. அதற்கு பராசரர் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். தன்னுடைய தந்தைக்கு ஏற்பட்ட நிலையை அறிந்து கொண்ட பராசரர் அனைத்து ராட்சசர்கள் மீதும் கோபம் கொண்டு அவர்களை அழிக்கும் விதமாக ஓர் யாகத்தை துவங்கினார். ராட்சசர்களும் அந்த யாக குண்டத்தில் விழுந்து மடிந்த வண்ணம் இருக்க வசிஷ்டர் வந்து அவரிடம் ஒரு ராட்சசன் செய்த தவறு எப்படி அனைத்து ராட்சசர்களும் பொறுப்பாக முடியும். முன்கோபம் என்பது ஒருவனது விரோதி என்றும் உன்னுடைய தந்தையின் முன் கோபத்தினால்தான் கல்மாஷ பாதன் அரக்கனாக மாறினான் உனது தந்தையையும் கொன்றான். எனவே அவரவர் வினைக்கேற்ப அவரவர் தண்டனை அனுபவிப்பர் என்று அறிவுரை கூறி யாகத்தை நிறுத்துமாறு கூறினார். பராசரரும் பிரம்மாவின் ஒரு மகனான புலசஸ்தி மகரிஷிக்கு அர்க்கயம் தந்து யாகத்தை நிறுத்தினார்.
ஒருநாள் பராசர முனிவர் நதிக்குச் சென்று மறு கரையை அடைய படகை தேடிய பொழுது ஒரு பெண் படகோட்டியை சந்தித்தார். அவளுடனே பயணமும் செய்தார். அவள் மிகவும் அழகானவள் ஆனால் உடல் முழுவதும் மீன் வாசனை கொண்டவள். இருப்பினும் அவளின் அழகில் மயங்கிய பராசரர் அவளுடன் சல்லாபிக்க ஆசை கொண்டார். அவளிடம் தனது ஆசையை எடுத்துக் கூறி அவளை சமாதானப்படுத்தி அவளுடன் அந்த படகிலேயே உறவு கொண்டார். அவ்வாறே தன்னுடைய சக்தியால் நதியின் இன்னொரு இடத்தில் சிறிய தீவொன்றை அமைத்து அவளை அங்கு தங்க வைத்து ஓர் குழந்தையையும் பெறச் செய்தார். அழகான குழந்தையும் பிறந்தது. அவளுடைய உடலும் நறுமணம் பெற்றது. அப்படி ஒரு மீனவனுக்கும் பராசர முனிவருக்கும் இடையிலான உறவில் பிறந்தவரே வேதங்களைப் படைத்த வியாசர் ஆவார்.
நன்றி.
0 Comments