குண்டலகேசி
அவ் வணிகர்களில் ஒருவருக்கு ஓர் அழகான பெண் ஒருத்தி இருந்தாள். அவளது பெயர் பத்ரா. பத்ரா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். இவள் சிறுவயதிலே தனது தாயை இழந்ததால் அவளுக்கு தனது தந்தையின் அரவணைப்பு மாத்திரமே இருந்தது. பத்ராவுக்கு 16 வயதாகும் போது மரண தண்டனை கொடுக்கப்பட்ட வழிப்பறித் திருடன் ஒருவனை ஊர்வழியே கட்டி இழுத்துச் சென்றனர். அவனது பெயர் சத்துவான். இவற்றை எல்லாம் பத்ரா தனது வீட்டின் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். என்னவோ தெரியவில்லை சத்துவானை பார்த்ததும் பத்ராவுக்கு அவன் மீது காதல் வந்துவிட்டது. அதனை தனது தோழிகளிடமும் கூறுகிறாள். அவர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் ஒரு திருடனையா நீ காதலிக்கிறாய் என்று கேட்டனர். அதற்கு அவள் சிறிதும் மனம் தழும்பாமல் ஆம் நான் அவனைத்தான் காதலிக்கிறேன். அவனைத்தான் திருமணமும் செய்யப் போகிறேன் என்று கூறுகிறாள். அப்படியே பத்ரா தனது விரும்பத்தை தனது தந்தையிடமும் கூறினாள். தந்தைக்கு சிறிது தயக்கம் இருந்தாலும் தனது மகளின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்து சத்தவானின் விடுதலைக்காக மன்னனிடம் வேண்டி நிற்கிறார். ஆனால் அதற்கு மன்னன் இவன் சாதாரண திருடன் அல்ல வழியில் செல்பவர்களை அடித்து திருடும் கொடூரமானவன் இவன் உங்கள் மகளுக்கு பொருத்தமானவனாக இருக்க மாட்டான் என்று கூறினார். ஆனால் அதற்கு பக்தராவின் தந்தை எனது மகள் அவனை தனது அன்பினால் மாற்றுவாள் என்ற நம்பிக்கையோடுயும் உறுதியோடும் இருக்கிறாள். எனவே எனது மகளின் நம்பிக்கையை நான் வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். என்று மன்னனிடம் கூற மன்னனும் அவளது தன்னம்பிக்கைக்கு மரியாதை கொடுத்து சத்துவானை விடுவித்தார். ஆனாலும் பத்ராவின் தந்தை அதற்கு நன்றி செலுத்தும் விதமாக 81 யானையையும், சத்துவானின் எடைக்கு சமனான தங்கத்தையும் கொடுத்து அவனை அழைத்து வந்தார்.
சத்துவானுக்கும், பத்ராவுக்கும் திருமணமும் நடந்தது. திருமணம் நடந்து ஒரு சில நாட்கள் அவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் சத்துவானின் திருட்டு புத்தி இன்னும் அவ்வாறேதான் இருந்தது. அதாவது பத்ராவின் நகை மற்றும் அவளது வீட்டில் இருக்கும் பணத்தின் மீதுதான் அவனது ஆசை இருந்தது. அப்படி இருக்கும்போது ஒருநாள் பத்ரா சத்துமாவனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சாதாரணமாக நீ ஒரு திருடன் தானே என்று கூறிவிடுகிறாள். அவள் அவ்வாறு கூறியது சத்துவானின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியதோடு பத்ராவை பழிவாங்கும் எண்ணமும் அவனுக்குள் ஏற்பட்டுவிட்டது. இதனால் சத்துவான் அவளை கொலை செய்யவும் துணிந்து விட்டான். அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பத்ராவிடம் நாம் இருவரும் ஒரு கோயிலுக்கு போகப் போகிறோம் என்று கூறினான். கோயிலோ அவர்களின் ஊரிலிருந்து மிகவும் தொலைவில் இருக்கும் மலை மேல் இருந்தது. அதற்கு அவள் ஏன் அவ்வளவு தூரமுள்ள கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று கேட்க அதற்கு அவன் நான் உயிர் பிழைத்தால் இக்கோவிலுக்கு வந்து வழிபடுவேன் என்று வேண்டுதல் வைத்திருந்தேன். அதற்காகவே இப்போது நாம் அக்கோயிலுக்கு செல்ல போகிறோம் என்று கூறினான்.
அதற்கு அவளும் சம்மதம் தெரிவிக்க ஏதோ சுற்றுலாக்கு செல்வது போல் பெருமதியான ஆடை, ஆபரணம் என அணிந்து இருவரும் சென்றனர். அவர்கள் அக்கோவிலுக்கு சென்று வேண்டுதெல்லாம் முடித்த பின் எவரும் இல்லாத நேரத்தில் சத்துவான் பத்ரா என்று அழைத்து இந்த நகைகளையெல்லாம் கழற்றி இந்த துணியில் வை என்று கோபமான முகத்துடன் கூறினான். அதைப் பார்த்த பத்ராவுக்கு சத்துவான் என்ன செய்யப் போகிறான் என்பது புரிந்து விட்டது. அந்த நொடியிலே அவள் அவனிடம் என் மீது ஏதும் கோபம் உனக்கு இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு அவன் சிரித்தபடியே….. ஆம் உன் மேல் எனக்கு பயங்கரமான கோபம் இருக்கிறது. நீ என்னை ஒருநாள் திருடன் என்று கூறினாய் அந்த வார்த்தை எனது மனதை மிகவும் காயப்படுத்தி விட்டது. அதனால் நான் உன்னை கொலை செய்வது மட்டுமல்லாமல் உனது நகைகளையெல்லாம் எடுத்து கொண்டு வேறொரு நல்ல வாழ்க்கையையும் வாழ போகிறேன் என்று கூறினான்.
இவன் ஒரு திருடனாக இருந்தாலும் தமது அன்பினால் இவனை நல்லவனாக மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையோடு இந்தனை நாள் வாழ்ந்த பத்ராவின் மனம் உடைந்து போனது. நான் இத்தனை காலம் அவனிடம் காட்டிய அன்பினை சிறிதேனும் மதிக்காமல் ஒருநாள் விளையாட்டுத்தனமாக பேசிய வார்த்தையை வைத்து இப்போது என்னை கொள்ளவும் துணிந்து விட்டானே என்று யோசித்த பத்ரா அந்நேரத்தில் ஓர் முடிவெடுக்கிறாள். அதாவது நாம் இப்போது இவனை விட்டு விட்டோம் என்றால் இவன் இவ்வாறு பல பெண்களின் வாழ்க்கையை அழித்து விடுவான். இதனால் இவனை நாம் உயிரோடு விடுவது தவறு என்று யோசித்த பத்ரா. அவனிடம் அன்பாக கேட்கிறாள் நான் இத்தனை காலமும் உங்களிடம் ஒரு நல்ல மனைவியாக வாழ்ந்து விட்டேன். எனவே நான் இறக்கும் தருவாயிலும் அவ்வாறே இருக்க விரும்புகிறேன். அதனால் உங்களை நான் மூன்று தடவை சுற்றி வந்து வணங்கிய பின் என்னை கொன்றுவிடுங்கள் என்று கூறினாள். அதற்கு அவனும் சம்மதம் தெரிவிக்க, அவள் இரண்டு தடவை சுற்றி மூன்றாவது தடவை சுற்றும் போது அவனை மலையில் இருந்து கீழே தள்ளி விடுகிறார். அவனும் மலையில் இருந்து கீழே விழுந்ததால் இறந்து விடுகிறான்.
மலையின் உச்சியில் தனி மரமாக நின்ற பத்ராவுக்கு தனது வீட்டுக்கு செல்வதற்கு மனம் வரவில்லை. தன்னுடைய முடிவு தவறாக போய்விட்டது, தனது காதலும் தோல்வி அடைந்து விட்டது. ஒருத்தனை அன்பினால் திருத்த முடியும் என்று நான் நினைத்தேன் ஆனால் அது இப்போது பொய்யென்று ஆகிவிட்டது. அவளுக்கு இந்த வாழ்க்கையே வெறுத்துவிட்டது. மலையிலிருந்து கால் போன போக்குக்கு நடக்க ஆரம்பிக்கிறாள்.
அவ்வாறே வழியில் பணமட்டையினால் தனது முடியை சிரைத்தும் விடுகிறாள். அப்படி முடியை சிரைத்த அவளுக்கு இரண்டாவதாக வளர்கின்ற முடி சுருள் சுருளாக வளர்ந்தது. இதன் காரணமாகவே இக்காப்பியத்திற்கு குண்டலகேசி என்று பெயர் வந்தது. குண்டலகேசி என்பதன் பொருள் சுருண்ட கூந்தலை உடையவள் என்பதாகும். ஒரு நாள் அவள் நடந்து போகும்போது ஒரு புத்த பெண் துறவியை காண்கிறாள். அதுவரையிலும் எந்த நோக்கமும் இல்லாத அவளுக்கு அப்பெண் துறவியை பார்த்தவுடன் நாமும் புத்த மதத்தை சார்ந்த பெண் துறையை போல் மாறிவிடலாம். என்று யோசித்து அவளின் பின்னால் செல்கிறாள். அப்படியே புத்த மதத்தின் அனைத்து விதமான போதனைகளையும் கற்று இறுதியில் பத்ரா ஒரு புத்த மத பெண் துறவியாகவே மாறிவிடுகிறாள். இவள் தர்க்கத்தில் சிறந்தவள் அதாவது வாதம் செய்வதில் வல்லவளாக காணப்பட்டாள் இதுவே இவளது சிறப்பாகும் என்று கூறுவதோடு குண்டலகேசி எனும் காப்பியம் நிறைவு பெறுகிறது.
எனவே ஒரு பெண் ஒரு திருடனை தனது அன்பினால் திருத்திட முடியும் என்ற நம்பிக்கையோடு காதலித்து அவனை திருமணமும் செய்து இறுதியில் தனது முடிவு தவறாகிவிட்டது என்று மனம் வருந்தி புத்த மத பெண் துறவியாகவும் மாறுகிறாள். இக்கதையின் மூலம் எமக்கு புலப்படுவது யாதெனின் நாம் விளையாட்டாக பேசும் சிறு வார்த்தைகள் கூட மற்றவர் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தி பல விபரீதங்களுக்கு காரணமாகி விடும் எனவே நாம் பிறரிடம் பேசும் போது சற்று சிந்தித்து பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
0 Comments