நவம்பர் மாதத்தில் உள்ள
சிறப்பு தினங்கள்
நவம்பர் - 6
சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம்
போர் மற்றும் ஆயுத மோதல்களால் இயற்கை பலவிதங்களில் சேதமடைகிறது. பயிர்கள், தண்ணீர் விநியோகம், தண்ணீர் விசமாதல், காடுகள் எரிதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது தவிர பல தொழில்நுட்பங்களும் அழிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஐ.நா. சபை 2001ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.
நவம்பர் - 7
மேரி கியூரி பிறந்த தினம்
மேரி கியூரி 1867ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று போலந்து நாட்டில் பிறந்தார். இவர் ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1903ஆம் ஆண்டிலும், வேதியியலுக்கான நோபல் பரிசினை 1911ஆம் ஆண்டிலும் பெற்றார். உலகில் இரண்டு பரிசுகளைப் பெற்ற முதல் பெண்மணி இவரே ஆவார்.
நவம்பர் - 9
சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம்
கின்னஸ் பிரிவெரி என்பவர் உலக சாதனைகளைத் தொகுத்து 1954ஆம் ஆண்டில் முதன்முதலாக கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டார். உலக சாதனை புரிபவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர். முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9 இல் கொண்டாடப்பட்டது. கின்னஸ் சாதனைகளைத் தொகுத்து இத்தினத்தின்போது புத்தகமாக வெளியிடப்படுகிறது.
நவம்பர் - 10
உலக அறிவியல் தினம்
உலக அறிவியல் தினம் 1994ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று முதன்முதலாக கொண்டாடப்பட்டது. இத்தினம் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவே கொண்டாடப்படுகிறது. அறிவியல் மக்களுக்கே, அறிவியல் நாட்டிற்கே என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. சிறந்த ஆய்வுகளில் ஈடுபடும் இளம் விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கி இத்தினத்தில் கௌரவிக்கிறது.
நவம்பர் - 12
உலக நுரையீரல் அழற்சி தினம்
நிமோனியா என்பது நுரையீரல் இழையங்களின் அழற்சியாகும். இது கிருமித்தொற்றினால் ஏற்படுகிறது. இதனால் இருமல், காய்ச்சல், அதிக வியர்வை, பசியின்மை அதிகளவு சளி மற்றும் அசௌகரிய நிலை என்பன காணப்படும். சிகிச்சை அளித்தால் பூரண குணமடையலாம். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2009ஆம் ஆண்டில் இத்தினத்தை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
நவம்பர் - 14
உலக சர்க்கரை நோய் தினம்
சர்க்கரை நோய் என்பது வலியில்லாமல் ஆளைக்கொல்லும் நோயாக உள்ளது. இந்த நோய்க்கு இன்சுலின் மருத்தினை பிரட்ரிக் பான்ரிங் என்பவர் 1921இல் கண்டுபிடித்தார். இவரின் பிறந்த தினமான நவம்பர் 14ஐ உலக சர்க்கரை தினமாகக் கொண்டாடுகின்றனர். சர்க்கரை நோயாளி இல்லாத உலகைக் காண்போம் என்கிற நோக்கில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சர்வதேச சகிப்புத் தன்மை தினம்
யுனெஸ்கோ அமைப்பு தனது 50ஆவது ஆண்டு விழாவை 1995ஆம் ஆண்டில் கொண்டாடியது. யுனெஸ்கோ தனது சகிப்புத் தன்மை கோட்பாடு மற்றும் திட்டங்களை தயாரித்து நவம்பர் 16 இல் வெளியிட்டது. உலக அமைதியை உருவாக்கியது மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சட்ட ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1996ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் - 16
உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் சுமார் 210 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டு கணித்துள்ளது. புகையிலை, ரசாயனப் புகை, காற்று மாசுபாடு போன்ற பல காரணங்களால் 2030ஆம் ஆண்டில் உலகளவில் இந்த நோயால் அதிக மரணம் ஏற்படப் போகிறது என எச்சரித்துள்ளது. இந்நோய் பற்றிய புரிதலை மக்களிடம் ஏற்படுத்த 2002ஆம் ஆண்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டது.
நவம்பர் - 17
உலக குறைப்பிரசவ குழந்தை தினம்
உலக முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவக் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10 இல் 1 குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. ஒரு குழந்தை 37 வாரத்திற்கு குறைவாகப் பிறந்தால் அது குறைப்பிரசவம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மாணவர்கள் தினம்
செக்கோஸ்லோவோக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் 1939ஆம் ஆண்டு நவம்பர் 17இல் நடந்தது. நாஜிப் படையினரால் போராட்டம் நசுக்கப்பட்டதோடு 10 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். மாணவர்களின் எழுச்சியை சர்வதேச அளவில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 அன்று சர்வதேச மாணவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நவம்பர் - 19
உலகப் கழிப்பறை தினம்
உலக நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் சுகாதாரத்தைப் பேணுவதில்லை. 1.1 மில்லியன் மக்கள் திறந்தவெளிக் கழிப்பறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகள் நோயால் பாதிக்கின்றனர். இவர்களைப் பாதுகாக்க, உலக சுகாதாரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 19 ஐ உலகக் கழிப்பறை தினமாக 2013ஆம் ஆண்டில் அறிவித்தது.
சர்வதேச பத்திரிகையாளர்கள் மாவீரர் தினம்
பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடாக பாகிஸ்தான் உள்ளது. ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் குண்டு வெடிப்பு அல்லது கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். 2012ஆம் ஆண்டில் 86 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தங்கள் கடமையை நிறைவேற்றும் வேலையில் தங்கள் வாழ்க்கையை இழந்த பத்திரிகையாளர்களுக்காக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சர்வதேச ஆண்கள் தினம்
சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடுவது என்பது பெண்களுக்கு எதிரானது அல்ல. இத்தினம் ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில்தான் உள்ளது. இது ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் விளங்குகிறது. உலகில் ஆண்களைக் கௌரவப்படுத்தவும், சமூகத்திற்கு புரிந்த மகத்தான தியாகங்களை நினைவு கூரவும், அவர்களின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது.
நவம்பர் - 20
ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினம்
ஆப்பிரிக்கா இயற்கை வளம் நிறைந்த நாடு. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த நாடு. ஆனால் தொழில் வளர்ச்சி ஏற்படாததால் பஞ்சம், பசி, பட்டினி போன்றவை நிரந்தரமானதாக உள்ளது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை, உணவுப் பஞ்சம் போன்ற மிகப் பெரிய சவால்கள் உள்ளன. ஆகவே ஆப்பிரிக்காவின்மீது ஐ.நா. தனிக்கவனம் செலுத்தி நவம்பர் 20ஐ ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினமாக அறிவித்தது.
சர்வதேசக் குழந்தைகள் தினம்
ஐ.நா. பொதுச்சபை குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் 1954ஆம் ஆண்டில் குழந்தை உரிமைகள் சட்டத்தைக் கொண்டுவந்தது. வறுமை, எட்ய்ஸ் போக்கவும், குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும், யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் நவம்பர் 20ஐ சர்வதேசக் குழந்தைகள் தினமாக அறிவித்தது.
நவம்பர் - 21
உலகத் தொலைக்காட்சி தினம்
உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாச்சாரம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வதற்கு இத்தினம் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஐ.நா. சபையானது 1996ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று நவம்பர் 21 ஐ உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.
நவம்பர் 3 ஆம் வியாழன்
உலக தத்துவ தினம்
நீதி, நேர்மை மற்றும் சுதந்திரத்தை தத்துவங்கள்மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது. தத்துவங்களால் மக்களிடம் அமைதியைக் கொண்டுவரமுடியும். தத்துவங்களே உலகை ஆள்கின்றன. தத்துவத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டுசேர்த்துப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்கிற நோக்கில் யுனெஸ்கோ உலக தத்துவ தினத்தை அறிவித்துள்ளது.
நவம்பர் - 24
படி வளர்ச்சி நாள்
சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிற நூலை 1859ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று வெளியிட்டார். நூல் வெளியிடப்பட்ட நாள் படிவளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியிடப்பட்ட 150ஆவது ஆண்டு நிறைவு விழாவானது 2009ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
நவம்பர் - 25
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்
உலகளவில் பெண்கள், பலவிதமான வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்குக் காட்டி அதற்கான, நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஐ.நா. சபை 1999ஆம் ஆண்டு டிசம்பர் 17இல் கூடியபோது ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்தது.
நவம்பர் - 26
உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்
கட்டுக்கு மீறிய வகையில் உடல் பெரிதாக சதைப் போடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு என்கின்றனர். அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. உடல் பருமனால் ஆண்டிற்கு 2.6 மில்லியன் மக்கள் உளகளவில் இறக்கின்றனர். உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நவம்பர் - 29
சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம்
அமைதி திரும்பாமல் தொடர்ந்து கலவரம் நடக்கும் ஒரே நாடு பாலஸ்தீனம்தான். ஐ.நா. பொதுச்சபை பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பலமுறை முயன்றது. இருப்பினும் பிரச்சினை தீர்க்க முடியாமல் போனது. பாலஸ்தீன மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையைக் கொண்டுவர 1979ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
நன்றி
0 Comments