நூல் இல்லாத காத்தாடி
ஒரு முறை ஒரு தந்தையும் மகனும் காத்தாடி விடும் திருவிழாவிற்குச் சென்றனர். வண்ணமயமான காத்தாடிகளால் வானம் நிரம்பியிருப்பதைக் கண்டு மகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன் தனது தந்தையிடம் ஒரு காத்தாடி மற்றும் ஒரு நூல் கண்டை வாங்கி வரச் சொன்னான். எனவே, திருவிழா நடைபெறும் பூங்காவில் உள்ள கடைக்கு தந்தை சென்றார். அவர் தனது மகனுக்காக காத்தாடிகளையும் ஒரு நூல் கண்டையும் வாங்கினார்.
அதை வாங்கிக் கொண்டு அந்த பையன் காத்தாடியை பறக்க விட ஆரம்பித்தான். அந்த காத்தாடி சிறுது நேரத்தில் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பறந்தது. அதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான் அந்த பையன். சிறுது நேரம் கழித்து அந்த பையனுக்கு ஏதோ ஒரு எண்ணம் தோன்ற.. தன் அப்பாவை பார்த்து, "அப்பா! இந்த காத்தாடி நல்ல உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இன்னும் உயரமாக பறக்க, இந்த நூல் தடையாக உள்ளது. எனவே இந்த நூலை நாம் அறுத்து விடலாம்" என்றான். அவனது அப்பாவும் சரி என்று கூறி அந்த நூலை காத்தாடியில் இருந்து அறுத்து விட்டார்.
சிறுது நேரத்தில், அது கீழே விழுந்தது. இதை பார்த்த அந்த பையன் ஆச்சரியப்பட்டான். உடனே அந்த பையன் தன் அப்பாவைப் பார்த்து, "அப்பா! காத்தாடிக்கு இடையூறாக இருந்த நூலை அறுத்து விட்டால், அது இன்னும் உயர பறக்கும் என நினைத்தால், அது மாறாக கீழே விழுந்து விட்டதே.. ஏன்? என்று கேட்டான்.
அதற்கு அப்பா, "மகனே! நம்முடைய வாழ்வில் நாம் மிகப்பெரிய உயரத்திற்கு செல்கிறோம். அதன்பிறகு நம் வாழ்வில் ஒரு சில விஷயங்கள் நமக்கு இடையூறாக உள்ளது என நினைத்து, அவற்றை விட்டு விலகி விட்டால் நாம் இன்னும் உயர பறக்கலாம் என நினைக்கிறோம். ஆனால் அது தவறு. அதைப்போலத் தான் இந்த நூலும், உண்மையில் அந்த நூலானது அந்த காத்தாடி உயர பறக்க தடையாக இல்லை. மாறாக அந்த காத்தாடி காற்றின் வேகத்தில், மாட்டி கீழே விழாமல், உயரத்தில் இருப்பதற்கு உதவியாக இருந்தது. அந்த நூல் காத்தாடியை விட்டு பிரிந்ததும் அது தன் நிலையில் இருந்து கிழே விழுந்து விட்டது. இதுபோலத்தான் நாமும் நமது வாழ்வில் எந்த உயரத்திற்கு சென்றாலும், கடந்து வந்த நிலையை மறக்க கூடாது என்றார்.
இதை கேட்டபின் அந்த மகன் தனது தவறை உணர்ந்தான்.
நன்றி
0 Comments