செப்டம்பர் மாதத்தில் உள்ள
சிறப்பு தினங்கள்
செப்டம்பர் - 2
சர்வதேச தேங்காய் தினம்
ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு 1998ஆம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. தென்னை பயிரின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக் கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
செப்டம்பர் முதல் சனிக்கிழமை
சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினம்
உலகளவில் 23 பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இந்தியாவில் 9 வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இக்கழுகு உள்ளன. இக்கழுகு இனங்கள் உலகளவில் விரைவாக அழிந்து வருகின்றன. டைகுளோபினாக் மருந்தை சாப்பிட்ட கால்நடைகள இறந்த பின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும். இந்தக் கால் நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடுகின்றன. இவ்வினத்தைப் பாதுகாக்க இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
செப்டம்பர் - 5
சர்வதேச கருணை தினம்
குறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பிரச்சினைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இவர்களின் துயரங்களை மனிதாபிமான அடிப்படையில் துடைக்க வேண்டும். அன்னை தெரசா (Mother Teresa) தன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கு சேவை புரிந்தார். அவர் இறந்த நினைவு தினமான செப்டம்பர் 5 ஐ சர்வதேச கருணை தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.
செப்டம்பர் - 8
உலக எழுத்தறிவு தினம்
அனைவருக்கும் எழுத்தறிவு என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்பாட்டை உலகளவில் யுனெஸ்கோ உருவாக்கியது. அதன் அடிப்படையில் உலக எழுத்தறிவு தினம் 1965ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. கல்வியறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அனைவருக்கும் எழுத்தறிவை போதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.
செப்டம்டர் - 10
உலக தற்கொலை தடுப்பு தினம்
உலகில் சராசரியாக 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலை என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாக உள்ளது. தற்கொலையை தடுப்பதற்கு உலக தற்கொலை தடுப்பு அமைப்பு 1960ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் செப்டம்பர் 10 ஐ உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவித்தது. இது 2003ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
செப்டம்பர் - 12
தெற்கு தெற்கு ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் தினம்
நிதி, உணவுப் பொருட்கள், வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வளரும் நாடுகள் மத்தியில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துகின்றன. தெற்கு - தெற்கு வியாபாரம், முதலீடு போன்றவை உயர்ந்துள்ளன. அதே சமயத்தில் வெப்ப நிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. டிசம்பர் 19 அன்று கொண்டாடப்பட்ட இத்தினம் ஐ.நா. வால் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு 2012 இல் மாற்றப்பட்டது.
செப்டம்பர் - 15
அனைத்துலக மக்களாட்சி நாள்
சனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தைக் கொடுக்கும் நோக்கில் ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு நவம்பர் 8 இல் அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஐ அறிவித்தது. அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என ஐ.நா. கூறுகிறது.
செப்டம்பர் - 16
உலக ஓசோன் தினம்
பூமியை கவசமாக இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. ஓசோன் படலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் க்ளோரோ புளோரோ கார்பன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டில் உருவானது. இதனை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
செப்டம்பர் - 18
உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்
உலகம் முழுவதும் தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்க வேண்டும். உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றை பரிசோதித்து பார்த்து, நீரின் தரம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும். மேலும் தண்ணீரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் Clean Water Foundation இத்தினத்தை 2003இல் அறிவித்தது.
செப்டம்பர் - 21
உலக அமைதி தினம்
உலக யுத்தத்தின் பாதிப்பை உணர்ந்து அமைதி தினம் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் நடந்து வந்தது. ஐ.நா.வின் பொதுச்சபை 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூடும் முதல் நாளை உலக அமைதி தினமாக அறிவித்தது. அதன்பின்னர் தங்களின் உறுப்பு நாடுகளின் வாக்குகளை அதிகம் பெற்று செப்டம்பர் 21 ஐ உலக அமைதி தினமாக அறிவித்தது. இது 2002ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
செப்டம்பர் - 22
மைக்கேல் பாரடே பிறந்த தினம்
மின்சாரம் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மருத்துவத் துறைகளிலும் மின்சாரம் பயன்படுகிறது. மின்சாரம் இல்லை என்றால் தொலைகாட்சி, ரயில், மின் விசிறி, கணினி, தொழிற்சாலைகள் என பலவும் இயங்காது. மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையை முதன்முதலில் மைக்கேல் பாரடே கண்டுபிடித்தார். இவர் 1791ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று இங்கிலாந்து நாட்டில் பிறந்தார்.
உலக கார் இல்லாத நாள்
நகரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்து செல்வதே பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. நடந்து செல்லும் தூரத்திற்குக்கூட காரை எடுத்துச் செல்கின்றனர். ஆகவே மிக அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிள் அல்லது நடந்து செல்ல வேண்டும். காரை செப்டம்பர் 22 அன்று ஒரு நாள் பயன்படுத்தாமல் இருக்க வாஷிங்டன் போஸ்ட் இத்தினத்தை 1995இல் அறிவித்தது.
செப்டம்பர் - 27
உலக சுற்றுலா தினம்
பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் மற்றும் சமுதாய ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச அளவில் உலக சுற்றுலாஅமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு செப்டம்பர் 27ஐ உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. இத்தினம் 1980ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் சுற்றுலா துறைகள் அதிகம் லாபம் ஈட்டும் துறையாக மாறியுள்ளன.
செப்டம்பர் - 28
பசுமை நுகர்வோர் தினம்
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செப்டம்பர் 28ஐ பசுமை நுகர்வோர் தினமாக கொண்டாடி வருகிறது.
உலக ரேபிஸ் தினம்
ரேபிஸ் என்பது ஒரு வகையான வைரஸ். இது வௌவால், நரி, ஓநாய் மற்றும் நாய் ஆகியவற்றை எளிதில் தாக்கும். ரேபிஸ் தாக்கிய விலங்கு மனிதனைக் கடித்தால் இந்நோய் மனிதனை தாக்கிவிடும். இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டம்பர் 28ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் - 29
சர்வதேச காப்பி தினம்
பலரும் விரும்பி அருந்தக்கூடிய மிகவும் பிரபலமான பானம் காப்பி. கொட்டையை பக்குவாமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீரை பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி. உலகில் 50 நாடுகளில் பயிரிடப்படுகிறது. முதன்முதலாக 1983ஆம் ஆண்டில் ஜப்பானில் சர்வதேச காப்பி தினம் கொண்டாடப்பட்டது.
செப்டம்பர் கடைசி வாரம்
உலக கடல்வாழ் பாதுகாப்பு தினம்
கடலின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக ஐ.நா. அமைப்பானது சர்வதேச கடல்வாழ் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பானது செப்டம்பர் கடைசி வாரத்தில் ஏதோ ஒரு நாளை உலக கடல்வாழ் பாதுகாப்பு தினமாக கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கடல் மாசு அடையாமல் பாதுகாப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
செப்டம்பர் கடைசி ஞாயிறு
உலக இதய தினம்
புகையிலைப் பழக்கம், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்கள், கொழுப்பு போன்றவை இதய நோயை ஏற்படுத்துகின்றன. சரியான உணவுப் பழக்கம் இல்லாததாலும் இதயக் கோளாறு ஏற்படுகின்றது. உலக இதய அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, யுனெஸ்கோ மற்றும் ஐக்கிய நாட்டின் விளையாட்டு மற்றும் முன்னேற்ற அமைப்பு ஒன்றிணைந்து உலக இதய தினத்தை 2000ஆம் ஆண்டில் முதன்முதலாக கொண்டாடியது.
செப்டம்பர் கடைசி ஞாயிறு
காது nhதோர் தினம்
சிலர் பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமோ காது nhதோர் ஆகின்றனர். காது கேட்கும் திறனை இழந்து விட்டால் வாழ்வு முடிந்துவிட்டதாக அர்த்தம் அல்ல. இவர்களின் தொடர்புக்கு சைகை மொழி கைகொடுக்கிறது. இவர்களையும் சக மனிதர்களாக அங்கீகரித்து அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நன்றி
1 Comments
Sep 17 periyar birthday
ReplyDelete