அக்டோபர் மாதத்தில் உள்ள
சிறப்பு தினங்கள்
உலக முதியோர் தினம்
மருத்துவ வசதி மற்றும் கல்வி அறிவால் மனிதனின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. முதியோர்களின் அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு பல திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. முதியோர்களின்மீது கவனம் செலுத்த உலக முதியோர் தினம் 1991ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
உலக சைவ தினம்
தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை சைவ உணவு என்கிறோம். வட அமெரிக்கன் சைவக் கழகம் 1977ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் - 2
சர்வதேச அகிம்சை தினம்
காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னுமிடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு கொள்கைகளைக் கடைப்பிடித்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என ஐ.நா. சபை அறிவித்தது. அதன் அடிப்படையில் காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 2007இல் அறிவித்தது.
அக்டோபர் முதல் திங்கள்
உலக குடியிருப்பு தினம்
மக்கள் நகரங்களில் குடியேறுவதால் வாழ்விட பிரச்சினை ஏற்படுகிறது. இதன்மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஐ.நா. பொதுச்சபை 1985ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இதன்படி அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக குடியிருப்பு தினமாக அறிவித்தது. நகரத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது இதன் நோக்கமாகும்.
உலக கட்டிடக்கலை தினம்
கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும், அறிவியலும் ஆகும். கட்டிடக் கலையானது கணிதம், அறிவியல், கலை, தொழில் நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஒரு பல்துறைக்களமாகும். சர்வதேச கட்டிடக் கலையினர் ஒன்றியம் 2005ஆம் ஆண்டில் உலக கட்டிடக்கலை தினத்தை அறிவித்து கொண்டாடி வருகிறது.
அக்டோபர் - 3
சர்வதேச போராட்ட தினம்
போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாத்திடவும், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, சம உரிமைகள் பெற்றிடவும், தொழிலாளர்கள் போராட வேண்டியுள்ளது. இதனை கருத்தில்கொண்டு உலகத் தொழிற் சங்க சம்nனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3ஆம் நாளை சர்வதேச போராட்ட தினமாக அனுசரிக்குமாறு உழைப்பாளிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அக்டோபர் - 4
உலக வனவிலங்குகள் தினம்
உலக வனவிலங்குகள் தினம் முதன்முதலாக இங்கிலாந்து நாட்டில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 4 இல் கொண்டாடப்பட்டது. காட்டு விலங்குகளை அழியாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்கிற உறுதிமொழியை மக்களை எடுக்கச் செய்ய வேண்டும். அதன் மூலம் அழியும் தருவாயில் உள்ள விலங்குகளை பாதுகாக்கலாம்.
அக்டோபர் - 5
உலக ஆசிரியர்கள் தினம்
ஒரு சிறந்த சமூகத்தை திறமையான ஆசிரியரால் உருவாக்க முடியும். உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்காக சர்வதேச ஆசிரியர் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க யுனெஸ்கோ 1994ஆம் ஆண்டில் அக்டோபர் 5 ஐ உலக ஆசிரியர் தினமாக அறிவித்தது. ஒரு நல்ல சமூகத்தை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் முதல் வெள்ளி
உலகப் புன்னகை தினம்
புன்னகை என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. ஆரோக்கியமான மனிதனிடமிருந்து வெளிப்படும். இது மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. ஹார்வே பால் (Harvey Ball) என்பவர் 1963இல் புன்னகை முகம் என்பதை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து உலகப் புன்னகை தினம் 1999ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பின்னர் இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் - 9
உலக அஞ்சல் தினம்
உலகத் தபால் யூனியன் என்பது 1874ஆம் ஆண்டு அக்டோபர் 9 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தபால் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. உலகத் தபால் யூனியனின் மாநாடு 1969ஆம் ஆண்டு டோக்கியாவில் நடைபெற்றது. இதில் உலக அஞ்சல் தினத்தை அக்டோபர் 9 அன்று கொண்டாடுவது என மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் - 10
உலக மனநல தினம்
இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மன நல மருத்துவக்கழகம் தெரிவிக்கிறது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது. மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடம் விளக்குதல், முறையாக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் - 2 ஆவது புதன்
சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம்
புயல், வெள்ளம், பூகம்பம், எரிமலை, சுனாமி, காட்டுத்தீ, கனமழை, சூறாவளி போன்றவையும் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. இயற்கைப் பேரழிவுகளைத் தடுத்தல், குறைத்தல் மற்றும் இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் போன்றவற்றின்மீது கவனம் செலுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினம் ஐ.நா. சபையின் மூலம் 1989ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் - 11
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகள் உலகம் முழுவதும் பாலின பாகுபாட்டால், சமத்துவமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கல்வி, மருத்துவம், சட்ட உரிமை ஆகியவை மறுக்கப்படுகிறது. அது தவிர குழந்தை திருமணம், வன்கொடுமை போன்றவற்றால் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு சமத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 11 ஐ சர்வதேச குழந்தைகள் தினமாக ஐ.நா. சபை 2011இல் அறிவித்தது.
அக்டோபர் 2 ஆவது வியாழன்
உலகக் கண்பார்வை தினம்
உலகளவில் சுமார் 37 மில்லியன் மக்கள் கண்பார்வையின்றி வாழ்கின்றனர். மேலும் சுமார் 124 மில்லியன் மக்கள் குறைந்த பார்வையுடனே வாழ்கின்றனர். குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறையினால் பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. குறிப்பாக 75 சதவீதமான பார்வைக்குறைபாடுகளை சரிசெய்து விட முடியும். கண் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் - 12
உலக ஆர்த்ரைடிஸ் தினம்
ஆர்த்ரைடிஸ் எனப்படுவது மூட்டு வலியாகும். இது ஆண், பெண், குழந்தைகள், சிறு வயதினர் என எல்லா தரப்பினரையும் தாக்கும் நோய். முன்னோர்களிடமிருந்து பரம்பரை நோயாகவும் பரவும். கீல்வாத நோயால் வரும் பெரும்பாலான ஆர்தரைடிஸ்கள் உடலின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்குகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அக்டோபர் - 14
உலகத்தர நிர்ணய தினம்
உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக 1946ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. உலகத் தர நிர்ணய தினம் 1970ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. நுகர்வோர்க்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். தரமான பொருட்களே உலகைக் காக்கும் என தர நிர்ணய அமைப்பு கூறுகிறது.
உடல் உறுப்புகள் தானம் மற்றும் சிகிச்சை தினம்
நாம் இறந்த பிறகும் ஒருவரை வாழவைப்பது என்பது உடல் உறுப்புகளை தானம் செய்வதன்மூலம் நடக்கிறது. ஒருவர் இருபதிற்கும் மேற்பட்ட உறுப்புகளை தானமாக வழங்கலாம். இறந்த பிறகு யாருக்கும் பயன்படாது போகின்ற உறுப்புகளை தானம் செய்வதன்மூலம் பலரை வாழ வைக்கலாம். உடல் உறுப்புதானத்தை வலியுறுத்தி 2005ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் - 15
உலக வெண்மைத்தடி தினம்
பிரிஸ்டல் நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் பிக்ஸ் என்பவர் 1921ஆம் ஆண்டில் ஒரு விபத்தின்போது தனது பார்வையை இழந்தார். இவர் சாலையை கடக்கும்போது தனது கையில் வெள்ளைத் தடியைப் பயன்படுத்தினார். வெண்மைத்தடி பயன்படுத்தும் முறை என்பது 1931ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது. 1964ஆம் ஆண்டில் உலக வெண்மைத்தடி தினம் அறிவிக்கப்பட்டது.
சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்
விவசாயத் துறையின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் கிராமப்புற பெண்களாவர். உலகின் வளர்ச்சிக்கு, கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மறக்க முடியாது. இவர்கள் கிராம வளர்ச்சிக்கும், உணவு பாதுகாப்பிற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் பாடுபடுகின்றனர். அதுதவிர நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகளையும் பாதுகாக்கின்றனர். ஐ.நா.சபையானது 2008ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தைக் கொண்டாடுகிறது.
உலக கைகழுவும் தினம்
முதன்முதலாக உலக கைகழுவும் தினம் 2008ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று கொண்டாடப்பட்டது. நம்மையும் அறியாமல் கைகளில் அசுத்தங்கள் இருக்கின்றன. இதில் பல்வேறு நோய்க்கிருமிகள் இருக்கின்றன. கைகளை நன்றாக கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, ஜலதோசம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்கள் ஏற்படும். ஆகவே கைகளை சோப்பு போட்டு 30 வினாடியாவது கழுவ வேண்டும்.
அக்டோபர் - 16
உலக உணவு தினம்
உணவு மற்றும் nhண்மை அமைப்பு 1945ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று ஆரம்பிக்கப்பட்டது. உணவுப் பிரச்சினை, பசி, வறுமைக்கு எதிராக போராடுவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். உணவு இருந்தும் அது கிடைக்காமல் பலர் இறப்பதைக் கண்டு ஐ.நா. சபை வேதனையடைந்தது. மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் 1980இல் இத்தினத்தை அறிவித்தது.
அக்டோபர் - 17
உலக வறுமை ஒழிப்பு தினம்
உலகின் மிகப்பெரிய 3 பணக்காரர்களின் ஆண்டு வருமானத்தைவிட 46 ஏழை நாடுகளின் வருமானம் குறைவாகவே இருக்கிறது. உலகில் வாழும் மக்களில் பாதி பேர் ஒரு நாளைக்கு 2 டாலருக்குக் குறைவான பணத்தில் தான் உயிர் வாழ்கின்றனர். தினமும் வறுமையின் காரணமாக 30,000 குழந்தைகள் இறந்துவிடுவதாக யூனிசெஃப் கூறுகிறது. இந்த வறுமையினை ஒழிக்க அக்டோபர் 17இல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அக்டோபர் - 18
உலக வேசெக்டொமி தினம்
ஆண்களுக்கும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். இந்த அறுவைச் சிகிச்சையை வேசெக்டொமி என்கின்றனர். இதற்கு குழாய் அறுப்பு என்று பொருள். உலகளவில் அளவான குடும்பங்களை ஏற்படுத்த ஆண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 18ஐ உலக வேசெக்டொமி தினமாக 2013இல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் - 20
உலக எலும்புப்புரை தினம்
மாதவிடாய் நிற்றலுக்குப் பிறகு எலும்புப்புரை நோய் பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. எலும்புப்புரை என்பது அதிகமாக எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோய். உலக எலும்புப்புரை அமைப்பு 1996ஆம் ஆண்டில் அக்டோபர் 20 ஐ உலக எலும்புப்புரை தினமாக அறிவித்தது. உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகப் புள்ளியியல் தினம்
ஏழை, எளிய மக்களுக்காக அரசால் வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் புள்ளிவிவரங்களைச் சார்ந்தே உள்ளன. பல்வேறு அரசுத்துறைகளிலும், பல்வேறு வகையான இடைநிலைப் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 20ஆம் தேதியை உலகப்புள்ளியியல் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது. புள்ளிவிபரங்களின் வெற்றி மற்றும் சேவையைக் கொண்டாடுவதே இத்தினத்தின் நோக்கம்.
அக்டோபர் 2 ஆம் வெள்ளி
உலக முட்டை தினம்
உலக முட்டை தினம் 1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஒரு மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஆண்டிற்கு சராசரியாக 180 முட்டைகள் சாப்பிட வேண்டும். முட்டை கலப்படம் செய்ய முடியாத உணவாக விளங்குகிறது. முட்டை நுகர்வின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் - 21
உலக அயோடின் தினம்
ஆண்டுதோறும் உலக அயோடின் தினம் அக்டோபர் 21ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. அயோடின் சத்துக் குறைபாட்டால் இனம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவர்க்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்த வேண்டும்.
அக்டோபர் - 24
ஐக்கிய நாடுகள் தினம்
ஐக்கிய நாடுகள் சபை 1945ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கான சர்வதேச நீதிமன்றம், சட்டதிட்டங்கள் ஆகியன அக்டோபர் 24 அன்று அமுலுக்கு கொண்டுவரப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையே உலகின் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இது ஒரு அரசு அல்ல. இந்தச் சபை எந்தப் பொருள் பற்றியும் விவாதம் செய்யவும், ஆராயவும், உலகின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கும் உரிமையையும் கொண்டுள்ளது.
உலக தகவல் வளர்ச்சி தினம்
உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவு செய்தது. 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஐ ஐ.நா. சபை அறிவித்தது. 1973ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. தகவல்களைப் பெருமளவில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஐ.நா. சபை கூறுகிறது.
அக்டோபர் 4 ஆவது திங்கள்
சர்வதேசப் பள்ளி நூலக தினம்
அமெரிக்காவைச் சேர்ந்த பிளான்ச் உல்ஸ் (Blanche Wools) என்கிற பெண்மணி சர்வதேச அளவில், பள்ளி நூலகங்களுக்கான ஒரு அமைப்பை 1999ஆம் ஆண்டில் உருவாக்கினார். இவரின் முயற்சியால் முதன்முதலாக 1999ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திங்கட்கிழமை சர்வதேசப் பள்ளி நூலக தினம் கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில்தான் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் - 27
உலக ஆடியோ பாரம்பரிய தினம்
யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டில் அங்கீகரித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கொண்டாடுவதன் நோக்கம். தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007இல் கொண்டாடப்பட்டது.
அக்டோபர் - 31
உலக சிக்கன தினம்
பணத்தை சேமித்து வைக்க வங்கி, தபால் துறை, சிறுசேமிப்பு அலுவலகம், இன்சூரன்ஸ் போன்றவை இருக்கின்றன. அரசு நிறுவனங்கள் நியாயமான வட்டியை வழங்குவதோடு, உங்கள் பணத்திற்கு பாதுகாப்பை கொடுக்கிறது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் கம்பெனிகளில் ஏமாந்த கதைகள் ஏராளம் உண்டு. முறையான பாதுகாப்பு வழியில் பணத்தை சேமிக்க இத்தினம் வலியுறுத்துகிறது.
நன்றி
0 Comments