மே மாதத்தில் உள்ள
சிறப்பு தினங்கள்
மே - 1
உலகத் தொழிலாளர் தினம்
உலகத் தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம் என்பன 8 மணி வேலை நேரம் கேட்டுப் போராடியதால் பிறந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, கியூபா, சிலி போன்ற நாடுகள் 1890ஆம் ஆண்டில் மே - 1 ஐ தொழிலாளர்கள் தினமாகக் கடைப்பிடித்தனர். இதே சமயத்தில் சர்வதேச பொதுவுடமை மற்றும் தொழிற்சங்க மாநாடு 8 மணி நேர வேலையை உலகம் முழுவதும் கொண்டு வர மே - 1 ஐ தொழிலாளர் தினமாக கொண்டாட அறைகூவியது.
மே - 3
உலக பத்திரிகைச் சுதந்திர தினம்
பத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் இதனை அங்கீகரித்து 1973ஆம் ஆண்டு மே 3 ஐ உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவித்தது. அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது. மேலும் பத்திரிகையையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்கிறது.
மே முதல் செவ்வாய்
உலக ஆஸ்துமா தினம்
ஒருவருக்கு தொடர்ந்து சளி பிடித்தால் அவர்களுக்கு 50 முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. இந்த நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். சிகரெட் புகை, காற்று மாசுபாடு, பாஸ்ட்புட், பவுடர், வாசனை திரவியம் பூசுதல் போன்ற காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் 1999ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
மே - 4
சர்வதேச தீயணைக்கும் படையினர் நாள்
ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தீயணைப்புப் படையினர் தினம் கொண்டாடி வந்தனர். 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4 ஆம் நாள் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மே - 5
சர்வதேச மருத்துவச்சி நாள்
மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய் சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி புரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
மே - 8
உலக தாலசீமியா நோய் தினம்
தாலசீமியா என்கிற நோய் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். இது ஒருவித இரத்த சோகை. தாலசீமியா பாதித்தக் குழந்தைக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இதனால் சுவாசிக்கும் ஆக்சிஜன், நுரையீரலில் இருந்து மற்ற பகுதிக்குச் செல்வதில் தடை ஏற்படுகிறது. மக்களிடம் இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே மே 8 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
செஞ்சிலுவை தினம்
போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் உருவான அமைப்புதான் ரெட் கிராஸ். இதற்குக் காரணமானவர் ஹென்றி டுனான்டு. இவர் 1828ஆம் ஆண்டு மே 8 இல் பிறந்தார். முதன்முறையாக 1948ஆம் ஆண்டு மே 8 அன்று செஞ்சிலுவை தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் 1984ஆம் ஆண்டிலிருந்து செஞ்சிலுவை தினம் மற்றும் சிகப்பு பிறை நிலா தினமாக மே 8 இல் கொண்டாடப்படுகிறது.
மே 8 - 9
இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோருக்கான நினைவு நாள்
இரண்டாம் உலகப் போரின்போது பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது பூமியில் நிகழ்ந்த கொடுமையான வரலாற்று நிகழ்வாகும். எதிர்காலத்தில் மீண்டும் இது போன்று ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்பதை நினைவுறுத்தும் வகையில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நினைவஞ்சலி மற்றும் நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
மே - 10, 11
உலக வலசை போதல் தினம்
பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன. வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன. வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பது, அதன் இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 2006ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மே - 12
சர்வதேச செவிலியர் தினம்
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) என்பவர் 1820ஆம் ஆண்டு மே 12 இல் பிறந்தார். இவர் மக்களுக்கும், போரின்போது பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் சிறந்த மருத்துவ சேவை புரிந்தார். இவரின் மருத்துவ சேவையை கௌரவிக்கும் வகையில் இவர் பிறந்த தினமான மே 12 ஐ சர்வதேச செவிலியர் தினமாக 1965ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
மே - இரண்டாவது சனிக்கிழமை
உலக நியாயமான வர்த்தக தினம்
உலகம் முழுவதும் நியாயமான வர்த்தகம் செய்பவர், உற்பத்தியாளர் மற்றும் வாடிக்கையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக நியாயமான வர்த்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலக நியாயமான வர்த்தகர் சங்கம் இத்தினத்தை அறிவித்துள்ளது. 75 நாடுகளில் 450 அமைப்புகளின் ஒப்புதலுடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
மே - இரண்டாவது ஞாயிறு
உலக அன்னையர் தினம்
அண்ணா ஜார்விஸ் என்கிற அமெரிக்கப் பெண் தன் அன்னைமீது கொண்ட அன்பின் காரணமாக அன்னையர் தினம் ஏற்பட்டது. இவரின் கடும் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் அவர்கள் 1914ஆம் ஆண்டில் அன்னையர் தினத்தை அறிவித்தார். தாயின் ஆரோக்கியம், கல்வி, பொருளாதார வாய்ப்பு போன்ற சிறந்த வசதிகளை செய்து கொடுப்பதே அன்னையர் தினத்தின் நோக்கமாகும்.
மே - 13
வெசாக் தினம்
வெசாக் என்பது மே மாதத்தின் முழு நிலவு நாள். இதே நாளில் கி.மு. 623ஆம் ஆண்டில் புத்தர் பிறந்தார். ஆகவே உலகம் முழுவதும் உள்ள புத்தமதத்தை பின்பற்றுவோர் இத்தினத்தை புனித நாளாகக் கருதுகின்றனர். இத்தினத்தை ஐ.நா. சபையும் சர்வதேச தினமாக 1999ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின் மூலம் பிரகடனம் செய்தது.
மே - 15
சர்வதேச குடும்ப தினம்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சர்வதேச குடும்ப தினம் மே 15 அன்று அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது. குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டுள்ளது.
மே - 17
உலக தொலைத்தொடர்பு தினம்
உலக தந்தி சங்கம் 1865ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே 1934ஆம் ஆண்டில் உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவக்கப்பட்டதன் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே - 17 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது
உலக உயர் இரத்த அழுத்த தினம்
ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம். இதைவிட 140/90 அதற்கு மேல் தொடர்ந்து இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்கிறோம். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மே - 18
சர்வதேச அருங்காட்சியக தினம்
அருங்காட்சியகங்கள் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகிக்கின்றன. உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பு இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்புடன் உலகில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தொடர்பு வைத்துள்ளன. 1978ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 அன்று கொண்டாடப்படுகிறது.
உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்
எச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான, அவசரத் தேவையாக உள்ளது. இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயன்று வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிப்பதன்மூலம் எய்ட்ஸ் ஆபத்தைக் குறைக்க முடியும். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ஆம் ஆண்டிலிருந்து மே 18 அன்று எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
மே - 3 ஆவது ஞாயிறு
சர்வதேச எய்ட்ஸ் கேண்டில் லைட் நினைவு நாள்
உலகில் தற்போது 33 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரம் உலகில் மிகப்பெரிய பிரச்சாரங்களில் ஒன்றாகும். சமூக விழிப்புணர்வு, சமூகத்தை அணி திரட்டல் போன்ற காரணங்களுக்காக 1983ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 115 நாடுகளில் 1200 சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இதனைக் கடைப்பிடிக்கின்றனர்.
மே - 21
உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம்
கலாச்சாரம் என்பது பழங்கால வரலாற்றையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. ஒரு குழுவின், இனத்தின், நாட்டின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடிகிறது. ஐ.நா. பொதுச்சபை 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அதன்மூலம் மே 21ஐ உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினமாக அறிவித்தது.
மே - 22
உலக கோத் தினம்
உலக கோத் தினம் என்பது பிரிட்டனில் 2009ஆம் ஆண்டு பிபிசி ரேடியோ 6 என்ற எண்ணில் உருவானது. கோத் பிஜேக்கன் மற்றும் மார்டின் ஒல்டு கோத் ஒரு நிகழ்ச்சியை இயக்கினர். ஒவ்வொரு வருடமும் மே 22 இல் இந்த நிகழ்வை நடத்துவது என முடிவு செய்தனர். இசை, பேசன் ஷோக்கள், கலை, கண்காட்சி என இந்நாளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உலக பல்லுயிர் பெருக்க தினம்
மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 இல் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
மே - 23
கார்ல் லின்னேயஸ் பிறந்த தினம்
கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23 இல் சுவீடன் நாட்டில் பிறந்தார். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். இவர் புதிய மற்றும் தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர் முறைக்கும் அடிப்படையை உருவாக்கினார். எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்
வளரும் நாடுகளில் சுமார் 2 - 3.5 மில்லியன் பெண்கள் மகப்பேறு ஃபிஸ்துலாவுடன் வாழ்கின்றனர். ஆண்டிற்கு ஐம்பதாயிரம்முதல் ஒரு லட்சம் பேர் இதனால் பாதிப்படைகின்றனர். இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆகவே இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என 2003இல் பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஐ.நா. சபையும் மே 23ஐ மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினமாக அறிவித்தது.
உலக ஆமைகள் தினம்
ஆமைகள் மிகப் பழங்கால உயிரினமாகும். இவை சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. சிறப்பு அமைப்பு கொண்ட ஒரு கவசத்தால் ஆன ஓட்டினால் இதன் உடல் மூடப்பட்டுள்ளது. இந்த ஆமை இனம் தற்போது விரைவாக அழிந்து வருகிறது. அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
மே - 29
ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம்
யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உரிய இடங்களில் ஐ.நா. சபை பணியமர்த்துகிறது. ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரவும் 2001ஆம் ஆண்டுமுதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
மே - 31
உலகப்புகையிலை ஒழிப்பு தினம்
புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ஒரு போதைப்பொருளாகும். ஆகவே புகையிலையைப் பயன்படுத்தினால் எளிதில் இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள். புகையிலையில் 28 வகையான புற்றுநோய் காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்ல உலகப்புகையிலை ஒழிப்பு தினம் மே 31 அன்று கொண்டாடப்படுகிறது.
நன்றி
0 Comments