ஜூலை மாதத்தில் உள்ள
சிறப்பு தினங்கள்
ஜூலை - 6
உலக ஜூனோசிஸ் தினம்
ஜூனோசிஸ் என்பது விலங்குகளுக்கு ஏற்படும் வியாதி. இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. காட்டு விலங்குகள், வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், எலி, பறவைகள்மூலம் மனிதர்களுக்குப் பரவுகின்றன. சில ஆட்கொல்லி நோய்களும் விலங்குகள்மூலம் பரவுகின்றன. விலங்குகள்மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 6 அன்று ஜூனோசிஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
ஜூலை முதல் சனிக்கிழமை
சர்வதேசக் கூட்டுறவு தினம்
ஜனநாயகம், சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டதுதான் கூட்டுறவு அமைப்பு. இந்த அமைப்பு உலகம் முழுவதும் விரிந்து காணப்படுகிறது. 1895ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் கூட்டுறவு அமைப்புகள் ஒன்றிணைந்தன. 100 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேசக் கூட்டுறவு தினம் கொண்டாடப்படுகிறது.
ஜூலை - 11
உலக மக்கள் தொகை தினம்
உலக மக்கள் தொகை 1987ஆம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ.நா. சபை ஜூலை 11 ஐ உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. பெருகிவரும் மக்கள் தொகையால் வனப்பகுதிக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
ஜூலை - 12
மலாலா யூசுப்சாய் தினம்
பாகிஸ்தானில் கல்விக்காக குரல் கொடுத்த மலாலாவை தாலிபன் தீவிரவாதிகள் சுட்டனர். ஆபத்தான நிலையிலிருந்து அவர் உயிர் பெற்றார். ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா உலகை மாற்றிவிடும் என்றார். இளைஞர்களிடம் புத்தகங்களைக் கொடுங்கள், துப்பாக்கி ஒருபோதும் வேண்டாம் என ஐ.நா. சபையில் உரையாற்றினார். ஐ.நா. சபை கல்விக்காக குரல் கொடுத்த இவரது 16ஆவது பிறந்த தினத்தின்போது மலாலா தினமாக அறிவித்தது.
ஜூலை - 17
சர்வதேச உலக நீதி தினம்
சர்வதேச உலக நீதி தினம் 2010ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தினம் தேர்வு செய்யப்பட்டது. இத்தினத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற பிரச்சினைகள்மீது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஜூலை - 18
சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்
தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18 ஆம் நாளை ஐ.நா. சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு அறிவித்தது. அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் நெல்சன் மண்டேலா ஆற்றிய பணியைக் கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜூலை - 20
நீல் ஆர்ம்ஸ்ட்ராங் முதன்முதலாக நிலவில் காலை பதித்த தினம்
அமெரிக்காவிலிருந்து அப்பலோ 11 என்கிற விண்கலம் நிலாவில் 1969ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று தரை இறங்கியது. முதன்முதலாக நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஜூலை 21 அன்று அதிகாலை 2.56 மணிக்கு நிலவில் தனது காலை பதித்தார். மனித குல வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும். இவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் என்பவரும் நிலவில் கால் பதித்தார்.
கிரிகோர் மெண்டல் பிறந்த தினம்
கிரிகோர் மெண்டல் 1822ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று ஆஸ்திரிய நாட்டில் பிறந்தார். இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள். மரபுப்பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில் இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டன.
சர்வதேச சதுரங்க நாள்
உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு 1924ஆம் ஆண்டு ஜூலை 20 இல் பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. இது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனம். இதன் குறிக்கோள் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பு ஜூலை 20 ஆம் நாளை சர்வதேச சதுரங்க நாளாக 1966ஆம் ஆண்டில் அறிவித்தது.
ஜூலை - 26
உலக சதுப்புநிலக் காடுகள் தினம்
புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும் கேடயமாக சதுப்புநிலக் காடுகள் உள்ளன. இவை கடற்கரையை ஒட்டி உள்ளன. இதனை மாங்ரோவ் காடுகள் அலையாத்திக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றினை அழியாமல் பாதுகாத்திடவும், இதன் பெருமைகளை உலகறியச் செய்யவும் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் நாளை உலக சதுப்புநிலக் காடுகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஜூலை - 28
உலக கல்லீரல் விழிப்புணர்வு தினம்
கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைடிஸ் A வைரஸால் 1.5 மில்லியன், ஹெபடைடிஸ் B வைரஸால் 2 பில்லியன் மற்றும் ஹெபடைடிஸ் C வைரஸால் 150 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை கட்டுப்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்
உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
ஜூலை - 29
சர்வதேச புலிகள் தினம்
உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமானது புலி மட்டுமே. புலியின் எண்ணிக்கை உலகளவில் வேகமாகக் குறைந்துகொண்டே வருகிறது. புலிகள் பாதுகாப்பு மாநாடு ஜெயின்ட், பீட்டர்ஸ்பர்க் நகரில் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. இயற்கையால் படைக்கப்பட்ட இந்த புலிகளை பாதுகாக்க வலியுறுத்தி சர்வதேச புலிகள் தினத்தை அறிவித்தது.
ஜூலை - 30
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள்
ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. இதனைத் தடுத்திட ஐ.நா.வின் 68ஆம் பொதுச்சபை, மூன்றாவது குழுவின் 46 ஆவது கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டுமுதல் இத்தினத்தை கொண்டாடுமாறு அறிவித்தது.
சர்வதேச நட்பு தினம்
அழகு, அறிவு, அந்தஸ்து, பணம், பதவி, ஜாதி, மதம், இனம், மொழி, நாடு போன்ற வேறுபாடுகளைக் கடந்து உள்ளத்தை மட்டுமே நேசிக்கும் உயரிய பண்பு கொண்டது நட்பு. இளைஞர்களே நாட்டின் தலைவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள். அவர்களை நட்பின்மூலம் இணைப்பதால் உலகளவில் சமாதானம், அமைதி நிலைபெறும் என்பதற்காக ஐ.நா. சபை ஏப்ரல் 2011இல் இத்தினத்தை அறிவித்தது.
நன்றி
0 Comments