ஜூன் மாதத்தில் உள்ள சிறப்பு தினங்கள் - SPECIAL DAYS IN JUNE


ஜூன் மாதத்தில் உள்ள 

சிறப்பு தினங்கள் 


ஜூன் மாதத்தில் உள்ள சிறப்பு தினங்கள் - SPECIAL DAYS IN JUNE

ஜூன் - 1

சர்வதேச குழந்தைகள் தினம்

உலகக் குழந்தைகளின் நலனுக்காக 1925ஆம் ஆண்டில் ஜெனிவாவில் மாநாடு நடைபெற்றது. உலகில் வாழும் குழந்தைகளின் நிலையைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது. குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக பெரும்பான்மையான நாடுகள் ஜூன் - 1 ஐ சர்வதேச குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகின்றன.

உலக பெற்றோர் தினம்

பெற்றோர்கள் தன்னலம் கருதாமல், தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோர் மற்றும் குழந்தைகள் என்கிற உறவுடன் வாழ்நாளை தியாகம் செய்கின்றனர். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் ஐ.நா. சபை 2012ஆம் ஆண்டில் இத்தினத்தைப் பிரகடனம் செய்தது.

ஜூன் - 4

ஆக்கிரமிப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம்

இனக்கலவரம், மதக்கலவரம், போர், வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும், பெண்களும் தான். போரின்போது பள்ளிக் கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர். ஐ.நா.வின் முடிவுப்படி 1984-ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜூன் - 5

உலகச் சுற்றுச்சூழல் தினம்

உலகச் சுற்றுச்சூழல் தினம் 1972ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. எங்கு மக்கள் சுத்தமான மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறச்சூழலில் வாழ்கிறார்களோ, அங்கு நன்றாக வேலை செய்வார்கள். அங்கு வாழும் குழந்தைகள் நன்கு படிப்பார்கள். சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, சுற்றுச்சூழலின்மீது தனிக்கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

ஜூன் - 8

உலகப் பெருங்கடல் தினம்

சுற்றுச்சூழல் பாதிப்பால் கடலும் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்களும் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டு, ஜூன் 8 அன்று பூமியைப் பாதுகாப்போம் என்கிற உடன்படிக்கை உருவானது. அன்றைய தினத்தை உலகப் பெருங்கடல் தினமாகக் கொண்டாடுகிறோம்.

ஜூன் - 11

எஃப்.எம். வானொலி ஒலித்த நாள்

பல நிகழ்ச்சிகளை பண்பலை வானொலி நிலையங்கள் காலை தொடங்கி நள்ளிரவு வரை ஒலிபரப்புகின்றன. வானொலியின் இரைச்சலைக் குறைத்து எஃப்.எம். ஒலிபரப்பு அறிமுகம் ஆனது. இதனை எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற அமெரிக்கர் கண்டுபிடித்தார். 1933ஆம் ஆண்டில் எஃப்.எம். ரேடியோவுக்கான காப்புரிமை பெற்று 1935, ஜூன் - 1 அன்று பொதுமக்களுக்காக ஒலிபரப்பப்பட்டது.

ஜூன் - 12

உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்

உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகள் மிகவும் ஆபத்தான வேலைகளை செய்து வருகின்றனர். குழந்தைத் தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

ஜூன் - 14

உலக இரத்தக் கொடையாளர்கள் தினம்

இரத்தத்தில் உள்ள வகைகளை முதன்முதலில் கார்ல் லான்ட்ஸ்டைனர் என்பவர் 1901ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இதன்மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது. இரத்த தானம் செய்வதன்மூலம் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. இரத்தத்தை பணம் பெறாமல் தானம் வழங்குபவர்கள் உள்ளனர். அவர்களை கௌரவிக்கவே உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஜூன் - 15 

உலக மூத்தோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம்

உலகளவில் 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 1995ஆம் ஆண்டில் 542 மில்லியனாக இருந்தது. இது 2025இல் 1.2 பில்லியனாக அதாவது இரு மடங்காக உயரப்போகிறது. சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். முதியவர்களை மரியாதையுடன் நடத்த ஐ.நா. இத்தினத்தை அறிவித்துள்ளது.

ஜூன் - 17

உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்

மனிதனாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும் பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதன்மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியும். இதனை உணர்ந்த ஐ.நா. சபை 1994ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.

ஜூன் - 20

உலக அகதிகள் தினம்

மதக்கலவரம், இனக்கலவரம், உள்நாட்டுப் போர், இயற்கைப் பேரழிவுகள் போன்ற காரணங்களால் தங்கள் நாட்டில் வாழ்வதற்கு வழி இல்லாமல் வெளியேறுபவர்கள்தான் அகதிகள். அகதிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் வாழ உரிமை உண்டு. அவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் 2000ஆம் ஆண்டில் ஜூன் 20 ஐ உலக அகதிகள் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது.

ஜூன் - 21

உலக இசை தினம்

மொழி தெரியாதவர்களையும் ஒன்று சேர்க்கும் சக்தி இசைக்கு உண்டு. ஆகவே இசையை ஒரு உலக மொழி என்கின்றனர். இசையே நாட்டியத்திற்கு அடிப்படை. மனிதர்கள் அனைவரையும் ஆட்டி வைப்பது இசை. இசையை ரசிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள இசையமைப்பாளர்கள் 1982ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று பிரான்சில் கூடினர். அந்த நாளையே உலக இசை நாளாக அறிவித்தனர்.

உலக யோகா தினம்

யோகா என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு கலையாகும். யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. உடலையும், உள்ளத்தையும் நலத்துடன் வைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் கலை. சர்வதேச யோகா கூட்டமைப்பு 1987ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு உலக யோகா தினத்தைக் கொண்டாடி வருகிறது.

ஜூன் - 23

சர்வதேச விதவைகள் தினம்

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைப் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. சபை விவாதித்து ஜூன் 23 ஐ சர்வதேச விதவைகள் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது. உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து, ஆதாரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம்

அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் விலை மதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர். சேவையானது நல்லொழுக்கம் கொண்டதாக இருக்கிறது. சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23 ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது. 2003ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி, பாராட்டுகள் தெரிவித்து வருகிறது.

ஜூன் மூன்றாம் ஞாயிறு

உலக தந்தையர் தினம்

சோனாரா ஸ்மார்ட் டோட் என்ற பெண் அமெரிக்காவில் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் என்பவருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டார். தனது தந்தையே கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தார். தனது தந்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1910ஆம் ஆண்டில் தந்தையர் தினத்தைக் கொண்டாடினார். இதனை அடிப்படையாகக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி 1966ஆம் ஆண்டில் தந்தையர் தினத்தை அறிவித்தார்.

ஜூன் - 24

உலக இளம் மருத்துவர்கள் தினம்

மாறிவரும் சமுதாயத்தில் இளம் மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் அதிகம் உள்ளது. இவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே இளம் மருத்துவர்கள் அடிப்படை சட்ட அறிவினைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்கிற நோக்கில் 2011ஆம் ஆண்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டது.

ஜூன் - 26

மனித மரபணுவின் மாதிரி வரைபடம் வெளியான நாள்

மனித உடலில் உள்ள டி.என்.ஏ. இரசாயன அடிப்படை இணைவுகள் உருவாக்கப்பட்ட விதம் சார்ந்த ஆய்வு 1984இல் தொடங்கப்பட்டது. மரபணுவின் மாதிரி வரைபடம் உருவாக்கப்பட்ட செய்தி 2000ஆம் ஆண்டு ஜூன் 26இல் அமெரிக்காவின் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் பிரிட்டனின் அதிபர் டோனி பிளேர் இணைந்து வெளியிட்டனர். ஆய்வின்படி மனித இனத்தில் 20,500 விதமான மரபணுக்கள் உள்ளன எனத் தெரியவந்தது.

ஜூன் - 25

உலக வெண்புள்ளி தினம்

வெண்புள்ளி என்பது ஒரு தொற்றுநோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பால் மெலானின் என்னும் கருப்புநிற பொருளை உற்பத்தி செய்யும் திசு அணுக்களை அழிப்பதால் ஏற்படுகிறது. இது சிறியவர்முதல் பெரியவர்வரை யாரை வேண்டுமானாலும் தாக்கும். இதனை வெண்குட்டம் எனக் கூறுவது முற்றிலும் தவறு. இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 2003 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஜூன் - 25

மாலுமிகள் தினம்

உலக வர்த்தகத்தில் 90 சதவீதம் கடல் வழியாகவே நடத்தப்படுகிறது. இதற்கு மாலுமிகளின் பங்கு மிக முக்கியமானதாகும். உலகம் முழுவதும் உள்ள 1.5 மில்லியன் மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும் அவர்களை கௌரவிக்கவும் ஜூன் 25 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தை சர்வதேச கடல்கள் அமைப்பு 2011ஆம் ஆண்டு அறிவித்தது. இது ஐ.நா. தினப்பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

ஜூன் - 26

சர்வதேச போதை ஒழிப்பு தினம்

போதைப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவது இளைஞர்கள்தான். இதனால் ஊழல், வன்முறை, குற்றங்கள், பாலியல் நோய்கள், எய்ட்ஸ், உடல் நலக்கோளாறு, மனநல நோயால் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனிதசமூகத்திற்கு பின்னடைவும், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு இத்தினம் 1988ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

ஜூன் - 26

சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினம்

சர்வதேச சட்டத்தின்படி சித்திரவதை என்பது ஒரு சமூகக்குற்றம் என ஐ.நா. சபை கூறுகிறது. சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான சட்டமும் உள்ளது. சித்திரவதை என்பது வீடுகளில் தொடங்கி, சிறைச்சாலை மற்றும் போர்க் கைதிகள்வரை தொடர்கிறது. 1997ஆம் ஆண்டில் ஐ.நா. சபை இத்தினத்தை அறிவித்தது.

நன்றி

Post a Comment

0 Comments