இராமாயணம் பகுதி - 84
மறுபடியும் மகோதரன், இந்திரன் போல் உருவம் கொண்டு ஐராவரத்தின் மீது ஏறிக் கொண்டு வானரங்களுக்கு எதிராக போர் செய்து கொண்டு இருந்தான். ஆனால் இலட்சுமணனுக்கு இந்திரன் போல் வந்திருப்பது மாய வேலையில் வல்லவனான மகோதரன் என்பது தெரியவில்லை. இதைப் பார்த்த இலட்சுமணன் அனுமனிடம், நாம் இந்திரன் முதலிய தேவர்களை காக்கும் பொருட்டு தான் இராவணனுடன் போர் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் இந்திரன் முதலியவர்கள் நம்மீது போர் செய்ய என்ன காரணம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை பிரயோகம் செய்து இலட்சுமணன் மீது ஏவினான். அனுமன், பிரம்மாஸ்திரத்தை ஏவியவனை நான் கொல்வேன் எனத் துணிந்தான். ஆனால் அனுமன் பிரம்மாஸ்திரத்தின் தாக்கத்தால் மயங்கி கீழே விழுந்தான்.
பிரம்மாஸ்திரத்தால் இலட்சுமணன், சுக்ரீவன், அங்கதன் முதலிய வானர வீரர்கள் உயிர் நீத்தனர். நளன் முதலிய வானரப் படைகளும் பிரம்மாஸ்திரத்தால் உயிர் நீத்தனர். அங்கிருந்த வானர வீரர்கள் அனைவருமே வீழ்ந்தனர். பிறகு இந்திரஜித் வெற்றி முழக்கமிட்டு அரண்மனைக்குச் சென்றான். இராவணனிடம் சென்று, தந்தையே! பிரம்மாஸ்திரத்தால் இராமனை தவிர மற்ற அனைவரும் உயிர் நீத்தனர் என்றான். இதைக்கேட்டு இராவணன் மகிழ்ச்சியடைந்தான். ஆனால் இராமன் சாகவில்லை என்பதை நினைத்து வருந்தினான். அதற்கு இந்திரஜித், இராமன் போர்க்களத்தை விட்டு வெகுதூரம் சென்றதால் அவனை பிரம்மாஸ்திரம் தாக்கவில்லை எனக் கூறினான். இருந்தாலும் இராமனின் படைகள் அழிந்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தான். பிறகு இராவணன், இந்திரஜித்துக்கும், மகோதரனுக்கும் விடைகொடுத்து அவரவர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு கூறினான்.
இராமர் தன் படைகலன்களின் பூஜையை முடித்துவிட்டு திரும்பி வந்தார். வரும் வழியில் பிரம்மாஸ்திரத்தால் தாக்கப்பட்டு வீழ்ந்து கிடப்பவர்களை பார்த்தார். இதைப் பார்த்த இராமர் தன் படைகள் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு வருந்தினார். சுக்ரீவனைப் பார்த்து அன்பு தம்பியே! நட்பின் திலகமே! எனக்கு துணையாக வந்த நீ வீழ்ந்து கிடக்கிறாயே எனக் கூறி புலம்பி அழுதார். அனுமனை பார்த்த இராமர், வலிமையில் சிறந்தவனே! சீதைக்கு உயிர் கொடுத்த சேவைமிக்க பண்புடையவனே! தேவர்கள் உனக்கு சாகா வரம் கொடுத்தார்களே. அந்த வரம் பொய்யாகுமா? நான் கனவிலும் உனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என நினைக்கவில்லையே எனக் கூறி புலம்பி அழுதார். இராமர் தன் தம்பி இலட்சுமணன் பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இலட்சுமணனை மார்போடு தழுவிக் கொண்டார்.
தம்பி! எனக்கு தாயும் நீ! எனக்கு தந்தையும் நீ தான். எவ்வாறு நீ என்னை விட்டு பிரிந்துச் சென்றாய். என் ஆருயிர் தம்பியே! கானகத்தில் இந்த 14 வருடம் எனக்கு காய், கனிகள் கொடுத்து நீ உண்ணாமல் இருந்தாய். எனக்கு தூக்கத்தை கொடுத்து நீ தூங்காமல் இருந்தாய். இந்த வனவாசத்தில் நீ எனக்கு துணையாக இருந்து சேவை புரிந்தாயே. இனி எனக்கு துணையாக யார் இருப்பார்கள். நீ என்னைவிட்டு பிரிந்த பின் நான் மட்டும் வாழ்ந்து என்ன பயன்? தம்பி! நீ எனக்காக உன் மனைவியை விட்டு, அரண்மனையை விட்டு, உன் உணர்வையும், தூக்கத்தையும் விட்டு எனக்காக பணி செய்தாயே! நீ இல்லாமல் எனக்கு இந்த புகழ் எதுவும் வேண்டாம். இனி நானும் உயிர் வாழ மாட்டேன் என பலவாறு கூறி புலம்பி அழுதார். தன் மனச்சுமையையும், துக்கத்தையும் தாங்காமல் இராமர் மயங்கி விழுந்தார்.
இராமரின் துயரத்தைக் கண்டு தேவர்கள் முதலானோர் அழுதனர். இதை அறிந்த அரக்க தூதர்கள் இராவணனிடம் ஓடிச் சென்று வானரப் படையோடு இலட்சுமணன் மாண்டான். இலட்சுமணனின் பிரிவை தாங்க முடியாமல் இராமன் மாண்டான். இதனால் தங்களின் பகை தீர்ந்தது எனக் கூறினார்கள். பிரம்மாஸ்திரத்தால் இராம இலட்சுமணன் உட்பட வானர வீரர்கள் மாண்டதை அறிந்து இராவணன் மகிழ்ச்சி அடைந்தான். இந்த மகிழ்ச்சியை விழாவாக கொண்டாட நினைத்தான். உடனே மருத்தன் என்னும் அரக்கனை அழைத்து, நீ உடனே போர்களத்திற்குச் சென்று, போரில் மாண்ட அரக்கர்களை அனைவரையும் ஒன்று விடாமல் கடலில் எடுத்து வீசி விடு. இந்த வேலையை உன்னைத் தவிர வேறு யாரும் செய்யக்கூடாது. இது உன்னை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது.
அப்படி யாருக்கேனும் தெரிந்தால் உன் தலையை சீவி விடுவேன் எனக் கட்டளையிட்டு அனுப்பினான். (இதற்கான காரணம் என்னவென்றால் அரக்கர்களின் பிணங்கள் போர் களத்தில் இருந்தால், பார்ப்பவர்கள் இராவணனின் அரக்கர்கள் தான் போரில் அதிகம் மாண்டவர்கள் என்பது தெரிய வரும் அதனால் தான்.) இராவணனின் கட்டளைப்படி மருத்தன், போர்களத்திற்குச் சென்று அரக்கர்களின் பிணங்களை கடலில் போட்டுவிட்டான். இப்பொழுது போர்களத்தில் வானர வீரர்கள் மட்டும் வீழ்ந்துக் கிடந்தனர். இராவணன், சீதையை போர்களத்திற்குச் அழைத்துச் சென்று, போரில் அரக்கர்கள் யாரும் மாளவில்லை என்பதை தெரியப்படுத்த நினைத்தான். உடனே இராவணன், சீதையை அழைத்துச் சென்று இராம இலட்சுமணனுக்கு நேர்ந்த கதியை காட்டுங்கள் என கட்டளையிட்டான்.
இதனால் சீதை, இராம இலட்சுமணர் மாண்டு விட்டனர் என நினைத்து தன்னை ஏற்றுக் கொள்வாள் என நினைத்தான். அரக்கியர்கள் சீதையை ஒரு புஷ;பரக விமானத்தில் ஏற்றி ராம இலட்சுமணனின் நிலையை காட்டினர். சீதை, இராம இலட்சுமணரின் நிலையைக் கண்டு கதறி அழுதாள். என் பெருமானே! இராவணாதி அரக்கர்களை கொன்று தண்டகவனத்தில் வாழும் முனிவர்களுக்கு அனுகூலம் புரிவதாக கூறினீர்களே! தங்களின் இந்த நிலைமைக்கு நான் தானே காரணம். நான் அந்த மாய மான் மேல் ஆசைப்படாமல் இருந்திருந்தால் தங்களுக்கு இந்த நிலைமை நேர்ந்திருக்காது. நான் தங்களை மானின் பின் அனுப்பியது என் தவறு. இனி நான் என்ன செய்வேன். எனக்கு துணையாக இனி யார் இருப்பார்கள். எம்பெருமானே தயவுகூர்ந்து எழுங்கள் என கதறி அழுதாள்.
சீதை இலட்சுமணனை பார்த்து, இளையவனே! வலிமையானவனே! என் அண்ணன் இராமனுக்கு துணையாக இருப்பேன் எனக் கூறினாயே! நான் அன்று உன்னை இகழ்ந்து பேசியதற்கு பதிலாக தான் இன்று இங்கு சிறைப்பட்டு கொண்டிருக்கிறேன். நீ மாய மான் எனக் கூறியும் நான் அதைக் கேட்காமல் உன் அண்ணனை சென்று தேடி வருமாறு கூறியது என் தவறு என்பதை உணர்ந்துவிட்டேன். நீ அன்று என்னுடன் இருந்திருந்தால் தங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. இரவும் பகலும் பாராமல் கண்விழித்து காவல் புரிவாயே. நான் செய்த தவறால் தங்களுக்கு இந்நிலைமை நேர்ந்துவிட்டதே. நான் மதியை இழந்ததால் தான் இராவணனின் சிறையில் அகப்பட்டு விட்டேன். இனி என்னை காக்க யார் இருக்கிறார்கள் என கூறிக் கதறி அழுதாள்.
தொடரும்.....




0 Comments