1972 முதலாம் குடியரசு அரசியலமைப்பு - 1972 CONSTITUTION OF SRI LANKA


1972 முதலாம் குடியரசு 

அரசியலமைப்பு


1972 முதலாம் குடியரசு அரசியலமைப்பு - 1972 CONSTITUTION OF SRI LANKA

1948-1972 காலகட்டத்தில் சோல்பரி அரசியல் யாப்பு இந்நாட்டில் நடைமுறையில் இருந்தது. இவ்வாட்சி முறையின்படி பிரித்தானிய மகாராணி இந்நாட்டின் பெயரளவு ஆட்சித் தலைவராயிருந்தாலும் சட்டம் இயற்றுவதில் பாராளுமன்றத்திற்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தமையாலும் இந்நாட்டிற்குக் கிட்டிய சுதந்திரம் பரிபூரணமான ஒன்றாக இருக்கவில்லை. இதனால் சோல்பரியின் அரசியல் யாப்பு செயற்படத் தொடங்கியதிலிருந்து, அரசியல் யாப்பு முறையை மாற்றி புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் எழுந்தது. எனினும் இது தொடர்பான பயன்தரக்கூடிய செயற்பாடு 1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் பின்னரே மேற்கொள்ளப்பட்டது.

1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காக சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கம்யூனிசக் கட்சி என்பன ஒன்று சேர்ந்து ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்துக் கொண்டன. அக்கட்சிகள் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் மூலம் ஒரே அணியாகப் பொதுத் தேர்தலை எதிர்கொண்டன. தேர்தலில் தெரிவாகும் பிரதிநிதிகளுக்கு அரசியல் அமைப்புச் சபையாக ஒன்றுகூடி, புதிய அரசியல் யாப்பை அமைப்பதற்கு, ஐக்கிய முன்னணியினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொது மக்களின் ஆணையைக் கோரியிருந்தது. இத்தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டு, ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டது. அதற்கமைய திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமரானார். மேலே குறிப்பிட்ட மக்கள் ஆணையுடன் செயற்பட்ட அவ்வரசாங்கம் 1972ஆம் ஆண்டு மே 22 ஆந் திகதி புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தியது. அது முதலாம் குடியரசு அரசியல் யாப்பு எனப்படுகின்றது.

1972 அரசியல் யாப்பின் பிரதான அம்சங்கள் 

இதுவரை லங்கா எனப்பட்ட இந்நாடு இதன்பிறகு ஸ்ரீலங்கா என்ற பெயரால் அழைக்கப்படல்.

பிரித்தானியப் பேரரசுடன் கொண்டிருந்த அரசியல் யாப்பு ரீதியான தொடர்புகளை முடிவுக்குக் கொண்டுவரல்.

இலங்கையை ஒன்றுபட்ட குடியரசாக்குதல்.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல்.

அடிப்படை மனித உரிமைகள்

1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் 18 ஆவது விதியில் அடிப்படை மனித உரிமைகள், சுதந்திரம் பற்றிக் கூறப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள விடயங்கள் சில கீழ்வருமாறு, 

சட்டத்தை அனுபவித்தல், செயற்படுத்தல், பாதுகாப்புப் பெறல் அனைவருக்கும் பொதுவானதாகும். சட்டத்தின் மூலமாகவன்றி நபர் ஒருவரின் உயிரிற்கும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் இடைஞ்சல் புரியக்கூடாது.

அனைத்து குடிமக்களுக்கும் சிந்திக்கும் சுதந்திரத்திற்கும் மனசாட்சிப்படி நடக்கும் சமய சுதந்திரத்திற்கும் உரிமையுண்டு.

குடிமக்களுக்கு அமைதியாக ஒன்றுகூடலுக்கும் தமது கருத்துக்களை வெளியிடு வதற்கும் சுதந்திரமுண்டு.

இவ்வாறு அடிப்படை உரிமைகள் அரசியல் யாப்பின்மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது முக்கியமான ஒரு விடயமாகும்.

ஜனாதிபதிப் பதவி

சோல்பரி யாப்பின்படி இருந்த ஆளுநர் நாயகம் பதவிக்குப் பதிலாக புதிய அரசியல் யாப்பின்படி பெயரளவு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதி பதிப் பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. அவரை நியமனம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டது. அதுவரை இருந்து வந்த ஆளுநர் நாயகத்திற்குரிய அதிகாரங்கள் புதிய அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. அப்போது ஆளுநர் நாயகமாகப் பதவி வகித்து வந்த வில்லியம் கொப்பலாவ அவர்கள் இந்நாட்டின் முதலாவது பெயரளவு ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

தேசிய அரசுப் பேரவை

1972 க்கு முன்னர் பாராளுமன்றம் என்றழைக்கப்பட்ட சட்ட சபைக்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது. இது பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டதாகும். பொதுமக்களிடமுள்ள சட்ட அதிகாரம் இச்சபையால் செயற்படுத்தப்பட்டது. இலங்கை தொடர்பான சட்டமியற்றும் பூரண அதிகாரம் தேசிய அரசுப் பேரவைக்கு உரியது. அதன் பதவிக் காலம் ஆறு ஆண்டுகளாகும்.

பிரதமரின் தலைமையிலான அமைச்சரவை

இவ்வரசியல் யாப்பின்படி நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவது அமைச்சர் (கெபினட்) அவைக்கு உரியது. அமைச்சரவையின் தலைவர் பிரதமராவார். ஜனாதிபதியால் பிரதமர் நியமனம் செய்யப்படுவார். தேசிய அரசுப் பேரவையில் பெரும்பான்மையோரின் ஆதரவைப் பெற்றவரே இவ்வாறு நியமிக்கப்படுவார். பிரதமரின் ஆலோசனையுடன், ஜனாதிபதி ஏனைய அமைச்சர்களை நியமிப்பார்.

நீதிமன்றம்

1972 அரசியல் யாப்பின்படி உரிமைகளை அனுபவிப்பதற்காக நீதிமன்றத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டது. அவையாவன,

உச்ச நீதிமன்றம்
மேல் நீதிமன்றம்
மாவட்ட நீதிமன்றம் 
மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் (நீதவான் நீதிமன்றம்)
அரசியல் யாப்பு நீதிமன்றம்

இந்த நீதிமன்றத் தொகுதியின் பிரதான நிறுவனங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றமும் மேல் நீதிமன்றமும் ஆகும். அந்தந்த மாவட்டத்தின் குடியியல் வழக்குகள் மாவட்ட நீதி மன்றங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் மஜிஸ்ரேட் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. நீதிமன்றங்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நீதிச்சேவை ஆலோசனைச் சபையும் நீதிமன்ற ஒழுக்காற்றுச் சபையும் உருவாக்கப்பட்டன. தொழிலாளர் நீதிமன்றங்கள் அச்சபை யால் செயற்படுத்தப்படும்.

அரசியல் யாப்புத் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கும் தேசிய அரசுப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்கள் யாப்புக்குப் பொருத்தமானதா எனப் பரிசீலிப்பதற்கும் அரசியல் யாப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

நன்றி

Post a Comment

0 Comments