1978 அரசியல் யாப்பு - 1978 CONSTITUTION OF SRI LANKA


1978  அரசியல் யாப்பு


1978  அரசியல் யாப்பு - 1978 CONSTITUTION OF SRI LANKA

1977 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தேசிய அரசுப் பேரவையின் 168 தொகுதிகளில் 140 தொகுதிகளை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றிக் கொண்டது. இத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு 18 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றதோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பெற்றுக் கொள்ளக்கூடியதாயிருந்தது 08 ஆசனங்கள் மட்டுமே யாகும். இதனோடு இலங்கைத் தொழிலாளர் சங்கத்திற்கு 1 ஆசனமும் சுயேச்சை அங்கத்தவருக்கு 1 ஆசனமும் கிடைக்கப்பெற்றன. 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு மூன்றில் இரண்டுப் பங்கிற்கும் கூடிய ஆசனங்கள் கிடைக்கப்பெற்றமையால் அதன் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை யிலான அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. 1978 ஆம் ஆண்டிலிருந்து அப்புதிய அரசியல் யாப்பு செயற்படத் தொடங்கியது.

1978 அரசியல் யாப்புக்கு அமைவாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு எனப்பட்டதோடு, அது ஒன்றுபட்ட நாடு என்றும் குறிப்பிடப்பட்டது. யாப்பின் ஆரம்பத்திலேயே மக்கள் இறைமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. மக்களிடம் உள்ள சட்டத்துறை அதிகாரம், சர்வஜன வாக்குரிமை மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாலும் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலமும் பொதுமக்களினால் செயற்படுத்தப்படும்.

பொது மக்களிடம் உள்ள நிறைவேற்று அதிகாரம் அவர்களால் தெரிவு செய்துகொள்ளப்படும் ஜனாதிபதியால் செயற்படுத்தப்படும்.

பொதுமக்களின் நீதிமன்ற அதிகாரம் யாப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள நீதிமன்றத் தொகுதியால் செயற்படுத்தப்படும். 

1978 அரசியல் யாப்பின் பிரதான அம்சங்கள் 

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி
பிரதமரும் அமைச்சரவையும்
பாராளுமன்றம்
நீதிமன்றம்
அடிப்படை உரிமைகள்

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி

1978 அரசியல் யாப்பின் 30வது சரத்தின்படி இலங்கை ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைவரும் நிறைவேற்றுத் துறையின் தலைவரும் முப்படைகளினதும் பிரதம தளபதியும் ஆவார். இதன்படி ஜனாதிபதிப் பதவி பூரணமான அதிகாரம் வாய்க்கப் பெற்ற அரசாங்கத்தின் அதியுயர் நிறைவேற்றுப் பதவியாக்கப்பட்டது. இவ்வரசியல் யாப்பின்படி ஜனாதிபதியானவர், தேர்தல் ஒன்றின் மூலம் முழு நாட்டினதும் குடிமக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படுவார். இவரது பதவிக் காலம் 6 ஆண்டு களாகும்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள்

பாராளுமன்றத்தைக் கூட்டுதல், ஒத்தி வைத்தல், பொதுத் தேர்தலை அடுத்து வரும் முதலாவது அமர்வுக்குத் தலைமை வகித்தல், அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்துதல் என்பவற்றுடன் அதனைக் கலைக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உரியது. இதற்கமைய ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத போதிலும் சட் டத்துறையின் அதிகாரங்கள் பலவும் அவருக்குள்ளன.

பிரதமரை நியமித்தல், அமைச்சர்களை நியமித்தல், அவர்களுக்கு அமைச்சுகளையும் பொறுப்புகளையும் வழங்குதல், அமைச்சரவையின் தலைவராகச் செயற்படுதல் என்பனவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களாகும். இதற்கமைய நிறை வேற்றுத் துறையின் தலைவரும் ஜனாதிபதியாவார்.

பிரதம நீதிபதி உட்பட, உச்ச நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல். உச்ச நீதிமன்றத்தாலோ அல்லது ஏனைய நீதிமன்றங்களாலோ குற்ற வாளியாகக் காணப்படும் நபருக்கு மன்னிப்பு வழங்கல், தண்டனையைக் குறைத்தல் போன்ற நீதித்துறையின் அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு உரியதாகும்.

அரசின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் பலவும் உள்ளன. யுத்தத்தையும் சமாதானத்தையும் பிரகடனப்படுத்தல், அரச வைபவங்களுக்குத் தலைமை தாங்குதல், சர்வதேச அரங்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தல், அரச இலச்சினையைத் தனது பொறுப்பில் வைத்திருத்தல் போன்றன அதற்கான உதாரணங்களாகும்.

அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக எக்காரணம் கொண்டும் நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தொடர முடியாது என்பது அப்பதவிக்கு வழங்கப்பட்டுள்ள விசே டமான வரப்பிரசாதமாகும்.

பிரதமரும் அமைச்சரவையும்

பாராளுமன்ற அங்கத்தவர்களில் இருந்து அமைச்சர்களை நியமிப்பது ஜனாதிபதியின் அதிகாரமாகும். 1972 ஆம் ஆண்டு யாப்பின்படி பிரதமரிடம் இருந்த அதிகாரங்கள் அனைத்தும் இந்த யாப்பில் ஜனாதிபதிக்கு உரியதாகும். அமைச்சரவையின் தலை மைப் பொறுப்பும் ஜனாதிபதியையே சாரும். அமைச்சரவை கூட்டாகப் பாராளு மன்றத்திற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

அமைச்சர்களுள் அதிக செல்வாக்குள்ளவர் பிரதமராவார். இவரை ஜனாதிபதி நியமிப்பார். 

அமைச்சரவையின் பொறுப்புகளில் சில வருமாறு,

பாராளுமன்றத்தால் பிறப்பிக்கப்படும் சட்டங்களை செயற்படுத்துதல்.

ஒவ்வொரு அமைச்சுக்கும் என்று வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டைத் தயாரித்தல்.

அமைச்சர்களிடம் வழங்கப்பட்டுள்ள துறைகளைப் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துதல்.

பாராளுமன்றம்

1972 ஆம் ஆண்டு யாப்பின்படி தேசிய அரசுப் பேரவை என அழைக்கப்பட்ட சட்ட சபைக்குப் பதிலாக, இந்த யாப்பில் மீண்டும் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டது. பாராளுமன்றம் 225 பிரதிநிதிகளைக் கொண்டது. 196 பேர் விகிதாசார தேர்தல் முறையில் பொதுமக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படுவதுடன், அவ்வவ் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கின் விகிதாசாரத்திற்கு ஏற்ப எஞ்சிய 29 பேரும் தேசிய பட்டியலிலிருந்து நியமிக்கப்படுவர்.

பாராளுமன்றத்திற்கு உரிய அதிகாரங்கள் சில வருமாறு,

சட்டத்தைப் பிறப்பித்தல்
நிதியைக் கையாளுதல்
வரவு செலவுத் திட்டத்தை அனுமதித்தல் 
அபிவிருத்தித் திட்டங்களை வகுத்தல்

நீதிமன்றம்

1978 யாப்பின்படி சுயாதீனமான நீதித்துறை ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றக் கட்டமைப்புகள் வருமாறு,

உச்ச நீதிமன்றம்
மேன்முறையீட்டு நீதிமன்றம்
மேல் நீதிமன்றம்
மாவட்ட நீதிமன்றம் நீதவான் (மஜிஸ்ரேட் நீதிமன்றம்
குடும்ப நீதிமன்றம்
முதல் நிலை நீதிமன்றங்கள்

நீதிமன்றத் தொகுதிக்கு அமைய நாட்டின் முதன்மையானதும் இறுதியானதுமான அதிகாரம் வாய்க்கப் பெற்றிருப்பது உச்ச நீதிமன்றத்திற்காகும். இதன் தலைவரான பிரதம நீதிபதியும் அந்நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகளும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்தல், ஜனாதிபதிக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் குற்றப் பிரேரணை தொடர்பாகப் பரிசீலித்தல், பாராளுமன்றத்தின் வரப்பிரசாதங்கள் மீறப்படல் தொடர்பான குற்றங்களை விசாரித்தல், தேர்தல் ஆட்சேபணை மனுக்களை விசாரித்தல் என்பன உச்ச நீதிமன்றத்திற்குரிய செயற்பாடுகளில் சிலவாகும். கீழ்நிலை நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்வுகளுக்கு எதிரான வழக்குகளை விசாரித்தல் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு உரியதாகும்.

நீதிமன்றங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விதமாகச் செயற்படுவ தற்கும் நீதிபதிகளின் நடுநிலை யைப் பேணிக் கொள்வதற்கும் நீதிசேவை ஆணைக்குழு ஒன்று நிய மிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதிபதி அதற்குத் தலைமை தாங்குவதுடன் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் இருவர் அதில் அங்கத்தவர்களாவர். மேல் நீதிமன்ற நீதிபதிகளின் இடமாற்றங்களை மேற்கொள்ளும் அதிகாரம், நீதித்துறை, உத்தியோகத்தர்களின் பயிற்சி, பதவி உயர்வு உட்பட ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பன நீதிச் சேவை ஆணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அடிப்படை உரிமைகள்

1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் மூன்றாம் அதிகாரத்தில் அடிப்படை உரிமைகள் தொடர்பாக விவரிக்கப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பைவிட இவ்விடயத்தில் விரிவான விளக்கம் வழங்கப்பட்டிருப்பது இதன் சிறப்பியல்பாகும்.

அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுள் சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக மதித்தல், சுதந்திரம், பேச்சு, கருத்துத் தெரிவித்தல் தொடர்பான சுதந்திரம், கொடூர தண்டனைகளிலிருந்து விடுபடும் சுதந்திரம், விரும்பும் சமயத்தை, கொள்கைகளை, நம்பிக்கைகளைப் பின்பற்றும் சுதந்திரம், விருப்பமான தொழில் என்பவற்றைப் புரியும் சுதந்திரம் என்பன இதில் உள்ளடங்கும்.

1972 யாப்பை விட முற்போக்காக 1978 ஆம் ஆண்டு யாப்பில் 126 ஆவது சரத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுகையிலோ, அதனை அண்மிய சந்தர்ப்பத்திலோ மூன்று மாதத்திற்கு உட்பட்ட காலத்திற்குள் எவருக்கும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய முடியும் என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதில் உரிமைகள் மீறப்பட்டிருந்தால் அது தொடர்பாக விசாரித்து, நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அரச சேவையில் பணியாற்றும் ஒருவருக்கு அவரது அதிகாரிகளினால் இழைக்கப் படுகின்ற அடிப்படை மனித உரிமைகள் மீறல்கள் அல்லது ஏனைய அசாதாரணங்கள் இழைக்கப்படும்போது அல்லது ஏனைய அநீதிகள் தொடர்பாக பாராளுமன்ற ஆணையாளர் நாயகத்திற்கு (ஒம்புட்ஸ்மேன்) மனு ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலம் அவரது உதவியைப் பெற்றுக் கொள்ளவும் யாப்பில் இடமளிக்கப்பட்டுள்ளது.

1978 யாப்பின் வாக்களிப்பு முறை

ஜனாதிபதித் தேர்தல்
விகிதாசார பிரதிநிதித்துவ முறை
பொதுசன அபிப்பிராயத் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல்

இத்தேர்தலின்போது நாடு முழுவதும் ஒரே தேர்தல் தொகுதியாகக் கணிக்கப்படும். அளிக்கப்பட்ட வாக்குகளில் அறுதிப் பெரும்பான்மையை அதாவது 50% இற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் அபேட்சகர் வெற்றி பெறுவார்.

1978 இல் பிரதமர் பதவி வகித்துக் கொண்டிருந்த ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் முதலாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியானார். அடுத்து 1982 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவரே தெரிவானார். அரசியல் யாப்பின்படி 6 வருடங்கள் கொண்ட பதவிக் காலத்தில் 4 வருடங்கள் முடிந்த பின்னர் மீண்டும்

ஒருமுறை தேர்தலுக்குத் தோற்ற முடியும் என்ற விடயம் 1978 யாப்பின் இரண்டாவது சீர்திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. திரு ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களை அடுத்து, திரு ஆர். பிரேமதாஸ, திரு டீ.பீ. விஜயதுங்க (ஜனாதிபதியின் மரணத்தை அடுத்து பிரதமராயிருந்த இவர் அப்பதவிக்கு வந்தார்). திருமதி சந்திரிக்கா குமாரதுங்க, திரு மகிந்த ராஜபக்க்ஷ, திரு மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிகளாவர்.

விகிதாசார பிரதிநிதித்துவ முறை

1978 ஆம் ஆண்டு யாப்பில் அறிமுகமான இன்னொரு புதிய விடயம் இதுவாகும். பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சிச் சபை என்பவற்றிற்கு அங்கத்தவர்கள் விகிதாசார முறைப்படியே தெரிவுசெய்யப்படுவர்.

இதன்படி அங்கத்தவர்கள் ஒரு குழுவாகத் தேர்தலில் போட்டியிடுவர். ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்கும் தெரிவாகும் பிரதிநிதிகளின் தொகை தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிடும். வாக்காளர்கள் வாக்கினைப் பிரயோகிக்கும்போது கட்சிக்கு ஒரு வாக்கினை வழங்கி, தேர்தலில் போட்டியிடும் அங்கத்தவருக்கும் ஒரு விருப்பு வாக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு மூவருக்கு விருப்பு வாக்கினை வழங்கலாம். இதில் ஒரு கட்சி பெற்ற மொத்த வாக்குகளுக்கு அமைய கட்சிகளுக்கான அங்கத்தவர் தொகை தீர்மானமாவதுடன் அங்கத்தவர்கள் பெற்ற விருப்பு வாக்கிற்கு அமைய வெற்றி வாய்ப்புக்கள் தீர்மானிக்கப்படும்.

பொதுசன அபிப்பிராயத் தேர்தல்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தில் நேரடியாக மக்கள் ஆணையைக் கோரிப் பெறுவதற்கான ஒரு முறையாக இதனைக் கொள்ளலாம்.

இதன்படி குறிப்பிட்ட விடயம் ஒன்று தொடர்பாகத் தமது விருப்பை ஆம் அல்லது இல்லை என்று தீர்மானிக்கலாம். 1982 இல் இந்நாட்டிற்குப் பொதுசன அபிப்பிராயத் தேர்தல் ஒன்றை நடத்திய அனுபவம் கிட்டியதுடன், அப்படி இடம்பெற்ற ஒரே தேர்தலும் அதுவேயாகும். அப்போதிருந்த பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை இன்னொரு பருவத்திற்கு அதிகரித்துக் கொள்வதற்காகவே இது நடத்தப்பட்டது.

பொதுசன அபிப்பிராயத் தேர்தலில் முன்வைக்கப்படும் விடயமொன்று வாக்காளர் களால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அறுதிப் பெரும்பான்மை (50% மேல்)யைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றி

Post a Comment

0 Comments