அரசறிவியலை கற்பதற்கான அணுகுமுறைகள் - APPROACHES TO LEARNING POLITICAL SCIENCE


அரசறிவியலை கற்பதற்கான

அணுகுமுறைகள்



அரசறிவியலை கற்பதற்கான  அணுகுமுறைகள் - APPROACHES TO LEARNING POLITICAL SCIENCE

குறிப்பிட்ட ஒரு விடயத்தை இலகுவாக விளங்கிக் கொள்ள பயன்படுத்தப்படும் நுட்ப முறை அணுகுமுறை எனப்படும். 

அரச அறிவியலானது பரந்த விடையப்பரப்புகளை உள்ளடக்கியுள்ளதால் அதன் ஆய்வு முறைகளும் பல உள்ளன. அதன் பாடப்பரப்பை போலவே அதன் ஆய்வு முறைகளும் நீண்டகால வரலாற்றை கொண்டு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் 20 ம் நூற்றாண்டில் ஏற்பட்ட விருத்தி முக்கியமானதாகும். அதே போன்று அரசறிவியலில் ஆய்வு முறைகளாக இன்று நாங்கள் கருதுகின்றவைகளில் பெரும்பாலானவை 20 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்தவையாகும்.

அவ்வாறு வளர்ச்சி அடைந்த அணுகுமுறைகள். 
தத்துவார்த்தை அணுகுமுறை 
ஒப்பிட்டு அணுகுமுறை 
பன்மைதுவவாத அணுகுமுறை 
நடத்தை வாத அணுகுமுறை 
அரசியல், பொருளியல் அணுகுமுறை 
சமூகவியல் அணுகுமுறை 
பெண்ணியல்வாத அணுகுமுறை


தத்துவ வார்த்தை அணுகுமுறை / மெய்யியல் அணுகுமுறை / நியமம் சார் அணுகுமுறை 


அரசறிவியல் முதலில் பயன்படுத்தப்பட்டதும், நீண்டகால நிலப்பினைக் கொண்டதுமான அணுகுமுறை இதுவாகும். இவ்வணுகு முறையானது அரசியலின் உண்மை நிலையை அன்றி கற்பனையில் உதிக்கும் அரசியல் நிலையினைக் கற்பதற்கான ஆய்வுமுறையே ஆகும். 

இவ்வணுகு முறையில் பிளேட்டோ மற்றும் அரிஸ்டோட்டில் ஆகியோர் முன்னோடிகளாகும். 

பிளேட்டோ தன்னுடைய குடியரசு என்ற நூலிலும், தோமஸ்மூர் தன்னுடைய கற்பனை உலகு என்ற நூலிலும் தத்துவ அரசு பற்றிக் கற்பனை செய்துள்ளார்கள். 

மேலும், ஐரோப்பிய அரசியல் சிந்தனையின் பிரதான சக்தியாக இருந்த சிசுரோ, மக்கியவல்லி, தோமஸ் கொப்ஸ், ஜோன் லொக், கால்மாக்ஸ் போன்றவர்கள் இம்முறையினை பயன்படுத்தி உள்ளனர்.

20 ஆம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் மகாத்மா காந்தி, யோன் நோல்ஸ், சார்ஸ் டைலர் போன்றவர்களும் முக்கியம் பெறுகின்றனர். 

இச் சிந்தனையாளர்களின் தத்துவங்களில் பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டிருந்த போதிலும் இவர்களிடையே பொதுவான முக்கிய அம்சங்கள் 2 உள்ளது. 

01. இவர்கள் அரசறிவியலாளர்கள் அன்றி அரசியல் தத்துவவியலாளர்களாக காணப்பட்டமை.

02. இவர்கள் அனைவரும் அரசியலை இலட்சிய கோணத்தில் பார்த்தனர். 


பண்புகள் 

01. உலகைப் பற்றிய அடிப்படை வினாக்களை எழுப்பி பரிசீலனை செய்தல். இங்கு, உலகம் என்பது யாது ?, உலகம் எவ்வாறு இருப்புக் கொண்டுள்ளது ?, மனித வாழ்க்கை என்பது யாது ?, மனித வாழ்க்கை மற்றும் இருப்பிற்கு அர்த்தம் உண்டா ? போன்ற வினாக்களை எழுப்பி உலகைப் பற்றிய பரிசீலணையை மேற்கொள்ளப்படுகின்றது. 

இதே போன்றுதான் அரசியல் பற்றியும் வினாக்களை எழுப்பி அரசியல் பரிசீலிக்கப்படுகின்றது. அதன்படி, அரசியல் என்பது யாது ?, அரசு என்பது யாது ?, அரசின் நோக்கங்கள் எவை ?, அரசுக்கு மனிதன் ஏன் அடிபணிய வேண்டும் ?, அரசுக்கும் ஏனைய சமூக நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு யாது ? ஆகிய வினாக்களை எழுப்பி அன்றும், இன்றும் அரசியல் பற்றி ஆராயப்படுகிறது. 

02. தத்துவஞானிகள் உலகையும், அரசியலையும் விளங்கிக் கொள்வதற்காக எண்ணக்கருத்துகளின் பொருள்களை உறுதிப்படுத்தினர். உதாரணம் : 
நீதி 
நியாயம் 
சமத்துவம் 
சுதந்திரம் 
உரிமைகள் 

03. தத்துவம் சார்ந்த கருத்துக்களுக்கு ஈடுபாடு காட்டல். 

04. அரசியலின் உண்மை நிலையை ஆராய்தல்.

05. தத்துவ கருத்துக்களின் அடிப்படையில் அரசியல் நிறுவனங்களின் செயல்பாட்டை மதிப்பிடுதல்.

06. முன் வகுக்கப்பட்ட கோட்பாடுகளிலும், கருதுகோள்களிலும் தங்கியிருத்தல்.


மேற்குறிப்பிட்ட வகையில் மெய்யியல் அணுகு முறையானது பல்வேறுபட்ட பண்புகளைக் கொண்டிருப்பதுடன் அது பின்வரும் நன்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை சிறப்பாகும்.

01. அகநிலை நோக்கில் அரசியலை ஆராயக் கூடியதாக இருக்கும்.

02. ஒரு விடயத்தை சான்று அல்லது நம்பிக்கை சார்பான தீர்ப்பின் அடிப்படையில் நோக்க முடிதல்.

03. ஒரு நிச்சயமான தளத்திலிருந்து கொண்டு அரசியலை அறியக் கூடியதாக இருத்தல்.

04. நன்மையிலிருந்து தீமையை வேறுபடுத்திக் காட்ட உதவுதல்.

05. தத்துவ கருத்துக்கள் அரசியலை கற்பதற்கு ஏற்றதாக கருதப்படல். 

06. அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளின் மூலம் அரசியலைப் பற்றி கற்க முடிதல்.


ஒப்பீட்டு அணுகுமுறை 


ஒப்பீடு என்பதன் கருத்து “தொடர்பு படுத்துவது” என்பதாகும். அதாவது ஒரு சமூக அரசியல் தோற்றப்பாட்டையோ அல்லது பிரச்சனையையோ அல்லது கருப்பொருளையோ இன்னொரு நிலையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் அது பற்றிய சிறந்த அறிவைப் பெற்றுக் கொள்வதை ஒப்பீட்டு அணுகுமுறை என்பர். 

இவ்வணுகுமுறை தொடர்பாக அரசியலை ஏன் ஒப்பீட்டு ரீதியாகக் கற்க வேண்டும் என்பதற்காக கெனன் நியூட்டன் மற்றும் யோன் மெண்டஸ் ஆகியோர் “ஒப்பீட்டு அரசியலுக்கான அடிப்படை” எனும் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் முக்கியமானவை ஆகும். அந்த அடிப்படையில், 


நமது நாட்டின் அரசியலை சிறப்பாக விளங்கிக் கொள்வதற்கு வேறு நாட்டின் அரசியல் பற்றிய அறிவைப் பெறுவது முக்கியமானதாகும்.

ஒவ்வொரு நாட்டினதும் அரசியல் வரலாறு, அரசியல் பின்புலம், அரசியல் நிறுவனங்கள் பற்றிய ஒப்பீடு ரீதியான அறிவில்லாமல் அந்நாடுகளின் அரசியல் பற்றிய சிறப்பான தெளிவினைப் பெற்றுக்கொள்ள முடியாது.
என கூறியிருத்தல் சிறப்பு.


ஒப்பிட்டு அணுகுமுறையை 3 வகைப்படுத்தலாம்.

பழமையான ஒப்பீட்டு அணுகுமுறை
20 ஆம் நூற்றாண்டின் ஒப்பீட்டு அணுகுமுறை
சமகால ஒப்பீட்டு அணுகுமுறை


பழமையான ஒப்பீட்டு அணுகுமுறை 

பழமையான ஒப்பீட்டு அணுகுமுறை கிரேக்க, உரோம மத்திய கால அரசியல் சிந்தனைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரிஸ்டோட்டில் தனது அரசியல் என்ற நூலில் அக்கால கிரேக்க குடியரசுகளில் காணப்பட்ட அரசியல் அமைப்பு வகைப்படுத்தலுக்கு ஒப்பீட்டு அணுகு முறையை பயன்படுத்தி உள்ளார்.

இவர் அரசாங்கத்தின் இயல்புகளை வகைப்படுத்துவதற்காக இருவகையான அளவீட்டு கருவிகளை பயன்படுத்தி உள்ளார்.
ஆட்சியாளர்களின் எண்ணிக்கை ?
அரசாங்கமானது ஊழல் மிக்கதா ?

அரசியலமைப்பு தொடர்பாக ஒப்பீட்டு ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு அரிஸ்டோட்டில் கிரேக்கத்தில் நிலவிய அரசியல் அமைப்புகளை பின்வருமாறு வகைப்படுத்தியமை சிறப்பு அம்சமாகும்.
உயர் குடியாட்சி 
முடியாட்சி 
கொடுங்கோன்மையாட்சி 
சில்லோர் ஆட்சி 
ஜனநாயக ஆட்சி


20 ஆம் நூற்றாண்டின் ஒப்பீட்டு அணுகுமுறை

இம்முறையானது 1960 ஆம் ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அரசியல் கற்கையில் விஞ்ஞான ரீதியான பின்னணியுடன் வளர்ச்சி அடைந்தது.

அரச அறிவியலும், கோட்பாடுகளும், விதிமுறைகளும் இயற்கை விஞ்ஞான விதிமுறைகளுக்கு ஏற்ற விஞ்ஞானமாக அமைய வேண்டும் என்ற கருத்தே விஞ்ஞான ரீதியான அரசறிவியல் பாடப் பரப்பின் பிரதான தர்க்கமாக இருந்தது 

இது, அரசியல் யாப்புகள், அரசியல் வரலாறு, அரசாங்க முறைகள், ஆட்சி முறைகள், முரண்பாடுகள் என்பவற்றை பற்றி ஒப்பீடுகளை மேற்கொள்ளாது அனுபவம் சார்ந்த முறையில் அவதானிக்கக் கூடிய நிகழ்கால அரசியல் நவீனமயமாதல், அரசியல் அபிவிருத்தி, அரசியல் கலாச்சாரம், அரசியல் சமூகமயமாதல், அரசியல் நடத்தை போன்ற அரசியல் கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு வேறுபட்ட அரசியல் முறைகளை ஒப்பிட்டு ரீதியாக கற்ற முடியும் என்று கூறுகிறது. 

இம்முறையை பயன்படுத்தியவர்களாக,
ஆள்மன்ட்
கோல்மன்ட் 
லிப்சட்


சமகால ஒப்பீட்டு அணுகுமுறை

சமகால ஒப்பிட்டு அரசறிவியலின் வரலாற்றை நோக்கும்போது அதன் கற்கைக்கு உட்படும் விடயங்கள் நெகிழ்ச்சி தன்மை பொருந்தியதாகும்.
உதாரணம் :  
அரசியல் நிறுவனங்கள் 
அரசியல் நடவடிக்கைகள் 
அரசியல் நிலை மாற்றங்கள் 
சமூக அரசியல் முரண்பாடுகள் 
சமாதான நடவடிக்கைகள் 
பெண்களின் அரசியல் பங்கேற்பு 
சமூக அரசியல் மோதல்கள்

ஜனநாயகம், அரசியல் அபிவிருத்தி போன்ற முன்மாதிரிகள் அவசியமற்றது என்பதை ஒப்பீட்டு அரசியல் விபரிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டினது அரசியலில் இருந்து ஒப்பீட்டு கல்வியை தேர்ந்தெடுத்து அரசியல் விபரிப்பை பலப்படுத்துவதே ஒப்பீட்டு ரீதியான கற்கையின் நோக்கமாக இருந்தது.


நன்மைகள்
 
01. ஒப்பீட்டு ஆய்வு முறை அதிகம் விஞ்ஞானத்தன்மை பொருந்தியதாகும். என்று கூறுவதுடன் இதன் மூலம் சாதாரண நிலைகளை கண்டறிதலும், ஒத்த காரணிகள் மூலம் சமமான பெறுபேறுகள் கிடைத்துள்ளதா ? என்று அறியவும் அவ்வாறு இல்லையேல் பாதித்த காரணிகளை அறியவும், பரிசீலிக்கவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. 

02. ஒப்பீட்டு அரசியல் என்ற புதியதொரு பாடத்துறை அரசறிவியலின் வளர்ச்சிக்கு காரணமாகியது.

03. இரண்டு அரசியல் நிறுவனங்களை ஒப்பீடு செய்யும் போது அவற்றின் வளர்ச்சி, வீழ்ச்சி என்பவற்றை அறிய வாய்ப்பு கிடைக்கிறது. 

04. பல்வேறு முறைகளை ஒப்பிடுவதால் பெறப்படும் முடிவு அதிக அளவு உறுதித் தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

05. சிறந்த கொள்கைகளை உடைய அரசியல் முறையை கண்டுபிடிக்க முடியும்.


பன்மைத்துவ வாத அணுகுமுறை 


அரசறிவியலுக்கு அப்பால் உள்ள துறைகளின் கோட்பாடு, எண்ணக்கருக்கள் மற்றும் விதிமுறைகளை அரசறிவியல் விபரிப்புக்குப் பயன்படுத்துவதே பன்மைத்துவவாத அணுகுமுறை எனப்படும்.

அரசறிவியலின் வரலாற்றினைப் பார்க்கும்போது பன்மைத்துவவாதம் என்ற எண்ணக்கருவில் 3 விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்கள் கூறப்படுகின்றது.

குறிப்பிட்ட பாடத்துறையாக அடையாளப் படுத்தப்பட்டிருந்தாலும் சமூகத்தின் ஏனைய பிரிவுகளுடன் அரசியலானது கூடிக்குறைந்த அளவில் தொடர்புபடுகிறது என்பதை ஏற்றுக் கொள்ளல்.

அரசறிவியலின் தனக்கே உரித்தான கோட்பாடு மற்றும் எண்ணக்கருக்கள் காணப்பட்டாலும் ஏனைய பாடப்பரப்புகளின் கோட்பாடுகள் மற்றும் எண்ணக்கருக்களோடு அது தங்கி இருக்கும் நிலை காணப்படல்.

கோட்பாடு மற்றும் எண்ணக்கருக்களுக்கு மேலாக விதிமுறைகள் தொடர்பிலும் அரசறிவியலின் ஏனைய பாடத்துறைகளின் விதிமுறைகளோடு தொடர்புபடலும் அதன் மூலம் போதிக்கப்படல். 

அரசருவியலின் வரலாற்றினை பார்க்கும்போது அரசறிவியல் எப்போதும் ஏனைய பாடத்துறைகளுடன் தொடர்புபட்டுப் போதிக்கப்படுகின்றது என்பது தெளிவாகிறது. 

உதாரணம் :
கிரேக்க யுகம் - தத்துவவியல், 
உரோம காலம் - இறையியல், வரலாறு, சட்டவியல் 
19 ஆம் நூற்றாண்டு -  அரசியல், பொருளியல், சட்டவியல் 
20 ஆம் நூற்றாண்டு - சமூகவியல், மானிடவியல், உளவியல், புவியியல், கலை, கலாச்சாரம்

போன்றவைகளில் அடிப்படையில் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அரசறிவியல் பாடப்பரப்புடன் ஏனைய பாடங்கள் தொடர்புபட்டு வளர்ச்சியடைந்துள்ளமையை அவதானிக்க முடிவதுடன் அரசியல் என்பது சமூகத்தில் ஏனைய அம்சங்களில் தனிப்பட்டிருப்பது அல்லாமல் அது அவற்றுடன் இணைத்துள்ளதையும் சமூகத்தினால் மேலெழுந்துள்ள தோற்றப்பாடு ஒன்றாக இருப்பதாக கண்டுகொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது.


நடத்தை வாத அணுகுமுறை / விஞ்ஞான அணுகுமுறை 


அரசியலில் ஈடுபடும் மனிதர்களினதும், மனித குழுக்களினதும் அரசியல் சார்ந்த நடத்தைகளை விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி ஆராய்ந்து அதனுடாக அரசியலைப் பற்றி விளக்கும் ஆய்வு முறையே நடத்தை வாத அணுகுமுறை எனப்படும். 

நடத்தை வாதம் என்பது 20 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் அறிமுகமாகி 2 ஆம் உலகப்போரின் பின்னர் அரசறிவியலில் பிரபல்யமான ஒரு முறையாக பின்பற்றப்படுகிறது. அதாவது இத்தலையிடானது “நடத்தை சார் விடுதலை” என்ற அடிப்படையில் வளர்ச்சி அடைந்தது.

இவ்வணுகுமுறையினை அறிமுகப்படுத்தியவர்களில் கரல் லாஸ்வே, டேவிட் ட்ரூமன், டேவிட் ஈஸ்டன், அல்மன்ட் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவ்வணுகுமுறையானது பல்வேறு சூழ்நிலைகளை விளக்கும் மரபுசார் ஆய்வுமுறைகள் போதுமாக அமையாததாலே நடத்தைவாத அணுகுமுறை அரசியலில் அறிமுகமாகியது.

பழைய முறையில் கோட்பாட்டிற்கும், நடைமுறைக்கும் இடையில் தொடர்பு காணப்படாமை அரசறிவியலின் நம்பகத்தன்மையை வளர்க்க முடியாமை, துறையிடை அணுகுமுறைக்கு இடமளிக்காமை போன்றன மரபுசார் அணுகுமுறையின் குறைபாடுகளை எதிர்க்கும் ஒன்றாக நடத்தைவாதம் உருவெடுத்தது.

இவ்வணுகுமுறையில் அனுபவம் சார்ந்த கற்கைகளுக்கு உட்படுத்தப்படுவது தனித்தனி மனிதர்களின் அரசியல் நடத்தையையும், அதனைப் பாதிக்கும் காரணிகளையும் ஆராய்வதே இவ்வணுகுமுறையின் நோக்கமாகக் காணப்பட்டது.

இவ்வணுகுமுறையில் மனிதனின் அரசியல் நடத்தையை ஆய்வுக்கு உட்படுத்தும் போது மனிதன் அரசியல் செயன்முறையில் பங்கேற்றல், தேர்தல்களில் வாக்களித்தல், தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடல், அரசியல் தீர்மானங்களில் எடுத்தல், தமது அரசியல் நடத்தைகளைப் பாதிக்கும் நம்பிக்கைகளையும், நடத்தைகளையும், கருத்துக்களையும் கொண்டிருத்தல் போன்ற நடத்தையாகும். 

பொதுவாக மனிதர்களின் அரசியல் நடத்தைகளை பின்வரும் காரணிகள் தீர்மானிக்கின்றன. அந்தவகையில், 
உளப்பாங்கு 
மக்களின் பொருளாதாரம் 
இனம்
சாதி 
வரலாற்றுப் பாரம்பரியம் 
அரசியல் கட்சிகள் 
அமுக்க குழுக்கள் 


பண்புகள் 

01. மனித நடத்தையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்கைமுறையாக இருத்தல்.
இங்கு மனிதனினதும், மனித குழுக்களினதும் அரசியல் நடத்தையை அதன் மீது பாதிப்புச் செலுத்தும் காரணிகளின் ஊடாக ஆராய்ந்து அந்நடத்தை பற்றிய பொதுமைப் படுத்தப்பட்ட கருத்தை ஒழுங்கமைத்து அரசியல் எதிர்வுகூறல்களை முன்வைக்க முடியும் என கூறப்படுதல்.
உதாரணம் : 
தேர்தல் மற்றும் வாக்களிப்பு நடத்தை 

02. சரியான வகையில் உறுதிப்படுத்தப்படும் விடயங்களை மட்டும் பரிசோதனையில் பயன்படுத்தல.
நடத்தைவாதிகள் பரிசீலனை மூலம் நிரூபிக்கக்கூடிய காரணிகளைக் கொண்ட விடயங்களை மட்டுமே பரிசீலனை செய்வார்கள்.

03. புதிய நுட்பங்களை பயன்படுத்தல்.
நடத்தை வாதிகள் தமது கற்கைகளின் நேர்முகப்போட்டி, கள ஆய்வு, வினாக்கொத்து போன்ற விஞ்ஞான நுட்பமுறைகளை பயன்படுத்தி அரசறிவியல் கற்கையை விஞ்ஞானமாக்கியுள்ளனர். 

04. பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகிய விடயங்களை ஆராயாது இருத்தல்.
 
05. தேவையற்ற பரிசீலனைகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருத்தல்.


நன்மைகள் 

01. மனிதனின் அரசியல் நடத்தைகளை ஆய்விற்கு உட்படுத்துவதால் மனித உரிமைகள், சுதந்திரங்களை பாதுகாப்பதற்கான வாய்ப்பு கிடைத்தல்.

02. அரசறிவியலிலும் ஓரளவு விஞ்ஞானத்தன்மை பொருந்திய முடிவுகளை முன்வைப்பதற்கும் வகை செய்தல்.

03. புதிய அணுகுமுறைகள் மற்றும் எண்ணக்கருக்கள் அரசறிவியலில் முன்வைப்பதற்கு வாய்ப்பளித்தல்.
உதாரணம் : 
அரசியல் அபிவிருத்தி 
அரசியல் நவீனத்துவம் 

04. இவ்வணுமுறையால் அரசறிவியல் விஞ்ஞானமாக மாற்றமடைந்தது.

05. அரசறிவியல் என்பது வரலாறு கற்கின்ற பாடமாக இருந்த நிலை மாறி தற்போது மனிதனோடு சம்பந்தப்பட்ட நாளாந்த பிரச்சனைகளை ஆராய்கின்ற ஒரு துறையாக மாறி இருத்தல்.

06. மனிதவள அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு துணை புரிந்திருத்தல். 

07. இவ்வணுகுமுறை மூலம் மனிதர்களும், மனித குழுக்களும் முக்கியத்துவம் பெற வாய்ப்பு ஏற்படல். 


குறைபாடுகள் 

01. மனித நடத்தையை பொதுமைப்படுத்த முடியும் என்று கூறினாலும் நிதமும் மாறும் நிலையை உடைய நடத்தையை பொதுமைப்படுத்த முடியாது.

02. நடத்தை வாதிகள் மனிதர்களின் நலன்களை இயந்திரங்களின் மூலம்   பகுப்பாய்வதால் மனிதனைப் பற்றிய பூரணமான விளக்கம் முன்வைக்கப்படுவதில்லை.

03. நடத்தை வாதிகள் அளவுக்கு அதிகமாக ஏனைய சமூக விஞ்ஞானங்களில் தங்கி இருப்பதனால் அரச அரசியலில் சுயாதீனத் தன்மையை அழிந்து விடல். 

04. மனிதனின் அரசியல் நடத்தை என்பது அரசியலின் ஒரு பகுதி மட்டுமே இதனால் இது ஏனைய பகுதிகளை குறிப்பாக அரசியல் நிறுவனங்கள் போன்ற பேரின விடயங்களை கைவிட்டிருத்தல்.

மேற்குறிப்பிட்ட வகையில் நடத்தைவாதத்தின் குறைபாடுகள் காரணமாக நடத்தைவாத அணுகுமுறையின் முக்கியத்துவம் குறைந்தது. மரபுசார் அணுகுமுறைகளான தத்துவவார்த்தை அணுகுமுறை, வரலாற்று அணுகுமுறை, சமூகவியல் அணுகுமுறைகளின் முக்கியத்துவம் மேல் வரலாயிற்று. இதன் காரணமாகவே 1970 களில் அரசியல் நிகழ்வுகளை ஆராய்வதில் மரபுசார் அணுகுமுறைகளும், நடத்தைவாத அணுகுமுறைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் இரு அணுகுமுறைகளுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டு பின்வந்த நடத்தைவாதம் தோற்றம் பெற்றது.

1930, 1940 களில் அமெரிக்க அரசறிவியலாளர்கள் இயற்கை விஞ்ஞானங்களினதும், பொருளியல், உளவியல் போன்ற சமூக விஞ்ஞானங்களிலும் பயன்படுத்தப்பட்ட செயல்முறைகளையும், பரிசோதனை முறைகளையும் அரசியல் கற்கையில் பயன்படுத்த முற்பட்டபோது விஞ்ஞான அணுகுமுறையானது அரசறிவியலோடு இணைந்தது.

விஞ்ஞான அணுகுமுறையின் மிக முக்கியமானது பரிசோதனை முறையாகும். சமூக சூழ்நிலைகளை குறிப்பிட்ட விதத்தில் ஏற்படுத்தி அரசியல் பரிசோதனை செய்வது முடியாத காரியமாகும்.

இரசாயனம், பௌதீகம் போன்ற விஞ்ஞானங்களில் பரிசோதனை முறையை முழுமையாக கையாள வாய்ப்புள்ளது. ஆனால், அரசியலில் முழுமையாக கையாள முடியாவிட்டாலும் ஓரளவு பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. உதாரணம் :

இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களின் சுதந்திர தாகத்தை தடுப்பதற்காக அவர்களால் கொண்டுவரப்பட்ட 1901, 1919 சீர்திருத்தங்களும், 1935 சுய ஆட்சி சட்டமும், பிரித்தானிய ஆட்சியாளர்களால் நடத்திப்பார்த்த அரசியல் பரிசோதனையாகும்.

இதேபோல், சுதந்திர இந்தியாவில் இன்று அமுல்படுத்தப்பட்டிருக்கும் அதிகார பங்கீடு, சமூக வளர்ச்சித் திட்டங்கள், ஜனநாயகம், சோசலிசம் என்பன அரசியல் பரிசோதணையாக காணப்படுகின்றது.

அனுபரீதியான ஆய்வுகளில் இருந்து பெறப்படும் முடிவுகள், சான்றுகள், தரவுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவினை உருவாக்குவதே சமூக அரசியல் கற்கையின் இலக்காக இருக்க வேண்டும். இதனால்தான் விஞ்ஞான அணுகுமுறையோடு இணைந்து நடத்தைவாத அணுகுமுறை அரசறிவியலுக்குள் அறிமுகமாகியது.

இயற்கை விஞ்ஞானங்களில் பயன்படுத்தப்படும் “விஞ்ஞான ரீதியானதும் அனுபவம் சார்ந்ததுமான செயல்முறைகளை அரசறிவியலில் பயன்படுத்தும் போது அரசறிவியலிலும் ஒரு உண்மையான விஞ்ஞானமாக மாறுமென்று கூறப்பட்டது. இவ்விஞ்ஞான அணுகுமுறையின் பயன்பாட்டின் பின்னரே அரசியல் என்ற மரபு பெயர் “அரசியல் விஞ்ஞானம்” என பெயர் பெற்றது”


அரசியல் பொருளியல் அணுகுமுறை 


அரசியல் பொருளியல் அணுகுமுறை தற்பொழுது முற்றுமுழுதாக மாக்சிசவாத கோட்பாடு மற்றும் அணுகுமுறையிலே அடையாளப்படுத்துகிறது. 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற சிந்தனையான மாக்சிசவாதத்தின் தத்துவம் பொருளியல், அரசியல் மற்றும் சமூக விஞ்ஞான பிரிவுகளில் காணப்படுகின்றன.

அரசியல் பொருளியல் என்ற எண்ணக்கருவானது 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சிந்தனையாளர்களாளே முதலில் பயன்படுத்தப்பட்டது. இம்முறையில் பொருள் உற்பத்தி, வர்த்தகம், தேசிய வருமானம், சந்தைப்படுத்தல் போன்ற பொருளாதார செயல்முறைகள் அரசாங்கத்தின் கொள்கைகளோடு தொடர்புபடும் முறை, பொருளாதார செயல்முறைக்கு அரசாங்கத்தின் கொள்கைகளின் தாக்கம் என்பவற்றை ஆய்வு செய்வதே இதன் ஆரம்பகால நிகழ்ச்சி நிரலாக அமைந்தது. 

மேலும், இவ்வணுகுமுறையை பின்பற்றிய சிந்தனையாளர்களுக்கு உதாரணமாக, 
அடம் ஸ்மித் ( தேசங்களின் செல்வம் )
டேவிட் ரிக்கார்டோ
யோன் ஸ்டுவன்ட் மில் 

கால்மாக்ஸ் அரசியல் பொருளியல் தொடர்பில் காணப்பட்டிருந்த சம்பிரதாய புரிதலை மாற்றி அமைப்பதற்காக பொருளாதார துறை பற்றி ஆய்வு செய்ததோடு 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அரசியல் பொருளியலாளர்கள் செய்யாத ஒரு கோட்பாட்டு அணுகுமுறையை கட்டியெழுப்பினார்.

இவ்வணுகுமுறையே “வரலாற்று பொருள் முதல் வாதம்” என அடையாளப்படுத்தப்படுகிறது.

வரலாற்று பொருள் முதல் வாதத்தின் இரு தலங்களாக பொருளாதார அடிப்படை, அரசியல் சமூக கலாச்சாரம் என்பன காணப்படுகின்றது.

இக்கோட்பாடு மானிட வரலாறு, சமூக கட்டமைப்பு, பொருளாதார அரசியல் சிந்தனைகள் என்ற அனைத்தையும் முழுமையாக கற்பதற்காக முன்வைக்கப்பட்ட கோட்பாடு ஆகும். 


பண்புகள் 

01. ஒரு அரசியல் தோற்றப்பாட்டினை ஆராயும் போது அதன் சமூக பொருளாதார வர்க்கங்களின் தலைமையை இணங்கண்டு அம்முழுமை தொடர்பாகவே தமது ஆய்வை மேற்கொள்ளல்.

02. அரசியல் பொருளாதாரம், சமூக வர்க்க பிரிவுகளினால் தீர்மானிக்கப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளல்.

03. அரசியலின் அடிப்படை கருப்பொருட்கள் என்ற வகையில் அதிகாரம், இறைமை, அரசு, வர்க்க பிரிவு, வர்க்க முரண்பாடுகள் அதற்கு எதிரான சமூக வெளிப்பாடுகள் போன்றவற்றை கவனத்தில் எடுத்தல்.

04. அரசியல் கற்கையானது அரசியல், பொருளாதார, சமூக எண்ணக்கருக்கள் ஆகிய துறைகளில் உள்ள ஆதிக்க தன்மை பொருந்திய அதிகார கட்டமைப்புகளை தீவிரமாக விமர்சிக்கும் இலக்கினை கொண்டிருத்தல்.

05. சமூக, அரசியல் பரிமாற்றத்திற்கு “விமர்சன அரசியல் ஆய்வு” உதவ வேண்டும் என நம்புதல்.


சமூகவியல் அணுகுமுறை 


அரசியலை கற்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள ஒரு நவீன அணுகுமுறையாகும். சமூகவியல் கோட்பாடுகளையும், அணுகுமுறைகளையும், செயன்முறைகளையும் பயன்படுத்தி அரசறிவியல் கற்கைகளை மேற்கொள்ளும் முறையே சமூகவியல் அணுகுமுறை ஆகும்.

ஆரம்பத்தில் சமூகவியல் அரசறிவியலோடு நெருங்கிய தொடர்புடைய பரப்பாகும். இவ்விடயங்கள் இரண்டும் வெவ்வேறாக 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க பல்கலைக்கழகத்தால் பிரிக்கப்பட்டது. என்றாலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவ் வேறுபடுத்தல் உறுதிப்படுத்தப்பட்டாலும் அந்த விடயங்கள் இரண்டிற்கும் இடையில் இடைத்தொடர்பு இன்றும் காணப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இரு பாடங்களிலும் சிந்தனையாளர்கள் பல அரசறிவியல் மற்றும் சமூகவியல் கோட்பாடுகளினதும் செயன்முறைகளினதும் முன்னோடிகளாக இருந்தனர். இவ்வாறு இருந்தவர்களுக்கு உதாரணமாக,
ஆகஸ்ட் கொம்டன்
கால்மாக்ஸ் 
மொண்டஸ் கியூ
போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

அரசறிவியல் கற்கும் கருப்பொருட்கள் பற்றி சமூகம் தொடர்பான பரந்ததுமான அறிவை பெறுவதற்கு சமூகவியல் அணுகுமுறைகள் பயன் உடையனவாகின்றன. இதற்கு உதாரணம் : 

அரசியல் கட்சி பற்றிய கற்கையில் அரச அறிவியலாளர்கள் சமூகவியல் மற்றும் மானிடவியலின் அணுகுமுறைகள் பயன்படுத்தப்படும் விதத்திற்கும் இடையிலான வேறுபாட்டில் இருந்து அறிய முடிகிறது. இவ் அரசறிவியல் சமூகவியல் பாடத்துறையில் அரசியல் கலாச்சாரம், அரசியல் நவீனத்துவம், அரசியல் சமூகவியல் ஆக்கல் வன்முறை, தேர்தல் நடத்தை போன்ற எண்ணக்கருக்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதன்விளைவாகவே இன்று இரு பாடங்களினதும் ஒரு துணைப் பிரிவாக “அரசியல் சமூகவியல்” என்ற பாடம் உருவாகி சகல பல்கலைக்கழக மட்டங்களிலும் கற்பிக்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.


பண்புகள் 

01. மனிதர்களின் அரசியல் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மாதிரிகளை கற்றல் இவ்வணுகுமுறையின் பிரதான கருப்பொருளாக இருத்தல்.

02. இவ்வணுகுமுறையானது அரசியல், பொருளாதாரம், சமூக அடிப்படைகளையும் அரசியல் நிறுவனங்களின் செயற்பாட்டை உருவாக்கி ஊக்குவிக்கும் சமூக காரணிகளையும் ஆய்வு செய்தல்.

03. சமூக விஞ்ஞான பாடங்களில் பயன்படுத்தப்படும் நேரடி போட்டி, பங்கேற்பு, அவதானிப்பு, நேரடி அவதானிப்பு, வினா கொத்து போன்ற ஆராய்ச்சி முறைகள் அரசறிவியல் பாடத்திலும் பயன்படுத்தப்படல். 

04. மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சி முறைகளின் அடிப்படையில் மனிதர்களின் அரசியல் நடத்தை தொடர்பாக அனுபவரீதியான முடிவுகளுக்கு வர முயற்சி எடுக்கப்படும். 

05. ஆய்வுகளின் போது வரலாற்றாளர்களும், பொருளியலாளர்களும், சமூகவியலாளர்களும், மானிடவியலாளர்களும், உளவியல்களும் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை அரசறிவியலில் பயன்படுத்தல். 

06. துறையிடை அணுகுமுறைக்கு இடமளித்தல்.


பெண்ணியல்வாத அணுகுமுறை 


அரசியல் விடயங்களை பெண்ணியல்வாத நோக்கில் கற்கும் முறையே பெண்ணியல்வாதா அணுகுமுறையாகும். இது அரசியல் மற்றும் சமூக ஆய்வுகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான தாக்கமானது 1970 களில் மாற்றமடைந்த பெண்ணியல்வாதமானது அரசியலை அடிப்படையான கேள்விக்கு உட்படுத்தியதோடு அரசியல் எண்ணக்கருவின் பொருளையும் அபிவிருத்தி செய்துள்ளது.

அரசியல் விபரிப்பின் போது ஆண்களுக்கு சமனாக பெண்களுக்கும் பொருளாதார, அரசியல் ரீதியாக சம உரிமை வழங்குவதை நோக்காக கொண்ட கருத்தியல்களினதும் இயக்கங்களினதும் கூட்டுமொத்தமே பெண்ணியல்வாதமாகும். இது கல்வி மற்றும் தொழில் வாய்ப்பில் பெண்களுக்கான சம உரிமையை வலியுறுத்துகிறது.

பெண்ணியல் இயக்கத்தினை சார்ந்தோர் பெண்ணியல்வாதி என அழைக்கப்படுகின்றனர். இவர்களே பெண்களின் சமூக உரிமைகளுக்காக வாதிடுபவர்களாகவும் காணப்பட்டனர். 

மேலும், பெண்ணியல்வாதிகள் வீட்டு வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல் போன்றவற்றிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்காகவும் போராடி உள்ளதுடன் வேலைத்தள உரிமைகள், தாய்மை விடுமுறைகள், பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களையும் எதிர்த்தல் என்பவற்றுக்காகவும் வாதாடுகின்றனர். இவர்கள் பிரதானமாக பெண்கள் பிரச்சினைகள் பற்றியே கருத்தில் கொள்கின்றனர். எனினும் அது பால்நிலை சமத்துவம் குறித்து கருத்தில் கொள்ளாமல் விடவில்லை. சில பெண்ணியலாளர்கள் ஆண்களின் பால் மற்றும் பால்நிலை வகிபாகங்களால் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர் என வாதாடுகின்றனர்.

பெண்ணியல்வாதிகள் அரசியல் ஆய்வில் எழுப்பும் கேள்விகள் மிகவும் வித்தியாசமானது. அதற்கு உதாரணம் : 

01. பெண்களை ஏன் அரசியல் பரப்பிலிருந்து புறந்தள்ளப்படுகின்றனர் ? 

02. அரசியல் என்பது ஆண்களின் துறையாகவும் என்றும் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா ? 

03. சமூக, வரலாற்று ரீதியாக பெண்கள் ஏன் இரண்டாம் நிலைக்கு ஓரம் கட்டப்பட்டும், அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டும் பாரபட்சம் காட்டுதலுக்கும் ஆளாக்கப்பட்டிருப்பது ஏன் ? அவ்வாறு செய்வதை தொடர்ந்தும் வைத்திருப்பதா ?

04. பெண்களை துன்பத்திற்கு உள்ளாக்கும் சமூகம், அரசியல், கலாச்சார கருத்தியல் கட்டமைப்புகள் யாவை ?

05. சமூக மற்றும் மனித விடுதலை தொடர்பில் தராண்மைவாதம் மற்றும் சம உடமை வாதத்தின் அனுபவங்கள் போதுமானதா ?

மேற்கூறிப்பட்ட பிரச்சனைகளை ஆராய்ந்து பெண்ணியல் வாதிகள் அரசியல் மற்றும் சமூக விபரிப்பிற்கு பின்வரும் எண்ணக்கருக்களின் வகைகளையும் சேர்த்துள்ளனர். அதன்படி,
பால் நிலை 
ஆண் தொழில் பிரிப்பு 
ஆண் தலைமைத்துவம் 
பெண் அடக்கு முறை 
ஆண்மைவாதம் 
ஆணாதிக்கம் 
பெண் விடுதலை 
போன்றவற்றை குறிப்பிடலாம்.

பெண்ணியல்வாதிகளாக, 
கேத் மில்டன் 
கிரைமன் க்ரீன் 
பாராசிமிர் 
போன்றவர்களை குறிப்பிடலாம்.

அரசறிவியல் ஆய்வுகளிலும், எண்ணக்கருக்களிலும் மற்றும் கோட்பாடுகளிலும் பெண்ணியல்வாத அணுகுமுறை பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
உதாரணம் :
அரசு, அரசியல் அதிகாரம், ஜனநாயகம், தேசியவாதம், உரிமைகள், சமத்துவம், நீதி போன்ற அரசறிவியல் எண்ணக்கருக்கள் அனைத்திலும் பால்நிலை பற்றிய அணுகுமுறை சேர்ப்பது முக்கியமாகும்.

நன்றி

Post a Comment

0 Comments