பரசுராமர் அந்தணர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்று கொடுத்து வந்தார். கர்ணனும், வில்லார்வம் காரணமாக அந்தணனைப் போல் வேடமிட்டு பரசுராமரிடம் வித்தை கற்றான். ஒருமுறை, பரசுராமர் அவனது மடியில் தலை வைத்து படுத்திருந்த போது, வண்டு ஒன்று கர்ணனின் தொடையைத் துளைத்தது. குருவின் துõக்கம் கலைந்து விடக்கூடாது என்பதால், கர்ணன் அந்த வலியையும் தாங்கவே ரத்தம் பெருக்கெடுத்து பரசுராமரின் கையில் பட அவர் விழித்து விட்டார். ஒரு க்ஷத்திரியனால் மட்டுமே இதுபோன்ற வலியைத் தாங்க முடியும் என கணித்த அவர் கோபத்தில் தன்னிடம் பொய் சொன்ன கர்ணனுக்கு, என்னிடம் கற்ற வித்தைகள் தக்க சமயத்துக்கு உனக்கு பயன்படாமல் போகும், என சாபம் கொடுத்து விட்டார். அந்த சாபம் இப்போது பலிக்கிறது. இருப்பினும், தன்னை சபித்த குருவை அவர் இருந்த திசைநோக்கி வணங்கிய கர்ணன் கோபத்துடன் மற்றொரு தேரில் ஏறி அர்ஜுனனின் அருகில் சென்றான். அப்போது கிருஷ்ணர் அவனது கர்ணனின் பலம் குறைந்து விட்டதைக் கவனித்து, அர்ஜுனனிடம், அவன் மீது பாணங்களை ஏவு என்றார். கர்ணனின் உடலே மறையும்படி அர்ஜுனன் விட்ட பாணங்கள் அவனைத் தைத்தன. அவனது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. இவ்வளவு அம்புகள் தைத்த ஒருவனால் நிச்சயமாக உயிருடன் இருக்க முடியாது. ஆனால், அவனுக்கு மரணம் வரவில்லை என்றால் அதற்கு காரணம் என்ன?மாயவன் கிருஷ்ணன் அதை அறிவான்.
அர்ஜுனா! அம்பு விடுவதை நிறுத்து! சூரியன் மறைய இன்னும் சிறிது நேரமே இருக்கிறது. எனக்கு ஒரு வேலை இருக்கிறது, என்றவர் தன்னை ஒரு அந்தணராக வடிவம் மாற்றிக் கொண்டார். ரத்தம் வழிய வீழ்ந்து கிடந்த கர்ணனிடம் சென்ற அவர், சூரியனின் மைந்தனே! கர்ணா! நான் மேருமலையில் இருந்து வருகின்றேன். மிகவும் ஏழை. நீ தானதர்மத்தில் சிறந்தவன். உன்னிடம் உள்ளதில் நல்ல பொருள் ஏதாவது ஒன்றைக் கொடேன், என்றார்.கர்ணன் அந்த வலியிலும் மகிழ்ந்தான்.அந்தணரே! இந்த கடைசி நேரத்திலும், எனக்கு தானம் செய்ய வாய்ப்பளித்த உம்மை என்னவென்று புகழ்வேன்? என்னிடமுள்ளதில் சிறந்தது எது என்று கேட்டு நீரே பெற்றுக் கொள்ளும், என்றான். கர்ணா! உனது புண்ணிய பலன்கள் அனைத்தையும் எனக்குத் தரவேண்டும், என்றார் கிருஷ்ணன். கர்ணனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இருப்பினும் சோகமான குரலில், அந்தணரே! என்னிடம் சிறந்த பொருட்கள் இருந்த நேரத்தில் நீர் வரவில்லை. உமக்கு அவற்றைத் தர முடியாத பாவியாகி விட்டேனே! இருப்பினும், நீர் கேட்ட இந்த சாதாரணப் பொருளைக் கொடுக்கிறேன், என்றவனாய், தன் நெஞ்சில் வழிந்த ரத்தத்தைப் பிடித்து அதை தாரை வார்த்து கிருஷ்ணரிடம் ஒப்படைத்தான்.அந்த களிப்புடன் கர்ணனிடம், கர்ணா! நீ விரும்பும் வரத்தைக் கேள். தருகிறேன், என்றார்.ஐயா! கொடிய பாவங்களைச் செய்ததால், இன்னும் ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் அந்த ஜென்மங்களிலும் என்னிடம் வந்து யாசிப்பவர்களுக்கு அள்ளித்தரும் மனநிலையைக் கொடு, என்று வேண்டினான்.
கிருஷ்ணருக்கு அது கேட்டு மகிழ்ச்சி. கடைசி நேரத்தில், இதோ, என் எதிரி அர்ஜுனன். அவனைக் கொல்ல வேண்டும், என் எஜமானன் துரியோதனனை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும், என அவன் கேட்டிருந்தால், கிருஷ்ணரால் மறுத்திருக்க முடியுமா? ஆனால், அவன் தர்மத்தின் தலைவன். சூழ்நிலைக் கைதியாகி துரியோதனனிடம் சிக்கியவன். நண்பனுக்காக உயிர் கொடுப்பவர்கள் நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இதோ, இவன் நண்பனுக்காக தன் உயிரையும் தரப்போகிறான்.கிருஷ்ணர் அப்படியே தன் அத்தை மகன் கர்ணனை அணைத்துக் கொண்டார். இறைவனிடம் நம் கஷ்டத்தைச் சொல்லி நாம் கண்ணீர் வடித்திருக்கிறோம். ஆனால், செந்தாமரைக் கண்ணனான கிருஷ்ணர், கர்ணனை அணைத்தபடியே கண்ணீர் வடித்தார். அந்தக் கண்ணீர் அவனை அபிஷேகிப்பது போல் இருந்தது.கர்ணா! நீ கேட்ட வரத்தைத் தந்தேன். உன் செயல்களால் நீ எத்தனை பிறப்பெடுத்தாலும், உயர்ந்த இடத்திலேயே பிறப்பாய். தானங்கள் செய்து ஒவ்வொரு பிறப்பின் முடிவிலும் மோட்சம் அடைவாய், என வாழ்த்தினார். பின்னர், கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம் தாங்கி விஸ்வரூபம் எடுத்தார். கர்ணனுக்கு கொடுத்த அந்த திவ்யமான காட்சியை தேவர்களும், சித்தர்களும், கந்தர்வர்களும், முனிவர்களும், போர்க்களத்தில் நின்ற மானிடர்களும் காணும் பேறு பெற்றனர். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்பாரே திருவள்ளுவர். அதுபோல், தானம் செய்து பேறு பெற்ற அந்த நல்லவனால் பாவிகளுக்கு கூட கிருஷ்ணனின் விஸ்வரூபதரிசனம் கிடைத்தது.
கர்ணன் அந்த காட்சி கண்டு பரவசமடைந்தான்.
நாராயணா! மதுசூதனா! பத்மநாபா! புண்டரீகாக்ஷா, கோவிந்தா, திரிவிக்ரமா, கோபாலா, கிருஷ்ணா என பல திவ்யநாமங்களால் அவரைப் போற்றினான். ஐயனே! உன்னை என்ன வார்த்தைகளால் புகழ்வேன்! மருதமரங்களுக்கு இடையே சென்று கந்தர்வர்களுக்கு வாழ்வளித்த பெருமாளே! துளசிமாலை அணிந்தவனே! திரண்ட தோள்களை உடையவனே! இந்த போர்க்களத்தில் துரியோதனனிடம் பட்ட செஞ்சோற்று கடன் காரணமாக, தர்மர் முதலான என் தம்பிமார்களிடம் போரிட்டேன். தவறு செய்த எனக்கு நீ விஸ்வரூபம் தரிசனம் தருகிறாய் என்றால் அதற்கு காரணம் முற்பிறவியில் நான் செய்த நல்வினைகளாலேயே ஆகும். நான் அடைந்த இந்த பாக்கியத்தை பூலோகத்தில் வேறு யார் பெற்றுள்ளனர்? என்று புகழ்ந்தான்.இது கேட்ட கிருஷ்ணர், கர்ணா! உன் கவச குண்டலங்களைப் பெறும்படி இந்திரனை அனுப்பியதும் நானே! நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருமுறைக்கு மேல் செலுத்த முடியாதபடி குந்தியின் மூலம் வரம் பெற்றவனும் நானே! நீ அவளுடைய மகன் என்ற உண்மையை சொன்னவனும் நானே! என்று உண்மைகளை உடைத்துவிட்டு, மீண்டும் தேர்சாரதி வடிவமெடுத்து அர்ஜுனனின் தேரில் ஏறினார்.
பின்னர், அர்ஜுனனிடம், பார்த்தா! இதுதான் சரியான சமயம். சூரியன் மறைய இன்னும் சிறிது நேரமே இருக்கிறது. உம்...
கர்ணன் மீது அம்பை விடு, என்றார். அவன் தனது சகோதரன் என்பதை அதுவரை அறியாத அர்ஜுனனும், தன் எதிரி வீழப்போகிறான் என்ற மகிழ்ச்சியுடன் அஞ்சரீகம் என்ற அம்பை எய்தான். அது அர்ஜுனனின் மார்பில் பாய்ந்தது. தனக்கு துன்பம் செய்தவர்களுக்கு முனிவர் ஒருவர் விடும் சாபம் எப்படி உடனே பலிக்குமோ, அதுபோல் கர்ணன் மீது அர்ஜுனன் விட்ட அம்பும் உயிரையே எடுக்கும் விதத்தில் பாய்ந்தது. அவன் குற்றுயிராகக் கிடந்தான். அப்போது, அவனது கண்களில் தான் கண்ட நாராயணனின் விஸ்வரூபக்காட்சி நிழலாடியது. அது தெரிந்தவுடனேயே நாராயணா, கோவிந்தா, பத்மநாபா, புண்டரீகாக்ஷா, கேசவா, மாதவா, ஸ்ரீஹரி என்பது உள்ளிட்ட நாமங்களை அவனது நாக்கு ஜபித்தது. மரண நேரத்தில் உயிர் துடிக்கும். உடல் என்னவோ போல் ஆகும், பயம் வாட்டி வதைக்கும். அத்தகைய நிலையில் இருந்து தப்ப வேண்டுமானால், ஸ்ரீமன் நாராயணனை மனதில் நினைத்து அவன் நாமங்களை மானசீகமாகச் சொல்ல வேண்டும். அப்படி சொல்பவர்களுக்கு வைகுண்ட பதவி நிச்சயம். கர்ணனும் அத்தகைய பிறப்பற்ற நிலைக்காகவே இவ்வாறு செய்தான். அவனிடம் இல்லாத பணமா? அவன் செய்யாத தர்மமா? சூரியனுக்கே பிள்ளையாகப் பிறந்ததால் எதையும் செய்யும் வல்லமையுள்ளவன், அவன் துரியோதனனை விட்டுப் பிரிந்திருந்தால் அவனுக்கு இப்போது இந்த உலகமே அடிமையாயிருக்கும்...
அப்படி பட்ட சவுகரியங்களுக்கு சொந்தக்காரனும், மரணநேரத்தில் தவிக்கும் தவிப்பை பார்த்தீர்களா? கடைசியில் அவனுக்கு கை கொடுத்தது எது? நாராயணனின் திருநாமம் தான். கர்ணனின் மரணம், நம் ஒவ்வொருவருக்கும் பாடம். வாழும் காலத்திலேயே உங்களுக்கு பிடித்த இறை நாமங்களை தினமும் சொல்லுங்கள். மனதில் கெட்ட எண்ணங்கள் தோன்றினாலும் பரவாயில்லை. அதைச் சொல்லுங்கள். காலப்போக்கில், உங்களுக்குள் மாற்றம் நிகழ்வதை உணர்வீர்கள். குந்திதேவிக்கு அசரீரியின் மூலம் கர்ணனின் இறுதிக்காலம் பற்றிய அறிவிப்பு கிடைத்தது. அவள் களத்துக்கு ஓடோடி வந்தாள்.
தன் மகனை எடுத்து மடியில் வைத்தாள். மகனே! நீயே என் மூத்தமகன். உனக்கு பாண்டவர்களாகிய ஐந்து தம்பிமார்களும், துரியோதனன் உள்ளிட்ட நுõறு தம்பிமார்களும் உண்டு. இந்தப் போர் வராமல், நான் உண்மையைச் சொல்லியிருந்தாலோ அல்லது தேவர்கள் சதிசெய்யாமல் இருந்திருந்தாலோ நீயே இந்த உலகத்தின் தலைவனாக இருந் திருப்பாய். மழை தரும் மேகமே வெட்கப்படும் அளவுக்கு தர்மம் செய்தவனே! விதிவசத்தால் நீ மறையப் போகிறாய். என்னால் துக்கத்தை தாங்க முடியவில்லையே, எனக் கதறினாள். அவளது கூந்தல் அவிழ்ந்து கிடந்தது.
அப்போது, அவளது தனங்களில் பால் சுரந்தது. அதைக் கர்ணனுக்குப் புகட்டினாள். இறப்பின் போது, மனிதர்களுக்கு பசும்பால் கொடுப்பது இன்றைக்கும் சம்பிரதாயம். இறப்பிற்கு பிறகு கூட சமாதியிலோ, சிதையிலோ அதை ஊற்றுகிறோம். அதனால் தான் கோமாதா என்று பசுவைத் தாயாகக் கருதி அழைக்கிறோம். ஆனால், இந்த உலகத்திலேயே தாய்ப்பால் குடித்து மரணத்தைச் சந்தித்த ஒரே ஜீவன் கர்ணன் மட்டுமே! எல்லாம் தர்மத்துக்கு கிடைத்த பலன்! அவனை போல் இல்லாவிட்டாலும், சராசரி தர்மவானாகவாவது இருக்கவேண்டும் என்பதே மகாபாரதம் இவ்விடத்தில் நமக்கு உணர்த்தும் கருத்து. தாய்ப்பால் குடித்த கர்ணனின் உயிர் ஒரு ஒளிப்பிழம்பாக மாறி, அவனது தந்தை சூரியனைச் சேர்ந்தது. அவனது இழப்பைத் தாங்க முடியாத சூரியன் மேற்குக் கடலில் மறைந்து விட்டான். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு வைகுண்டப்பதவிக்காகச் சென்றது. அவனை வரவேற்கும் வகையில் தேவர்கள் ஆரவாரம் செய்தனர். துந்துபி என்னும் இசைக்கருவி முழங்கியது. துரியோதனன் கலங்கிப் போய்விட்டான்.
கர்ணா! என் அன்பு நண்பனே! உன்னை இழந்த பிறகு இந்த ராஜ்யம் எதற்கு? இந்தப் போர் எதற்கு? யாருடைய துணையுடன் இந்த ராஜ்யத்தை நான் ஆள்வேன்? நீயும் போய்விட்டாய்.
99 தம்பிமார்களும் போய்விட்டார்கள். பீமனுடன் போர் செய்ய வேண்டியது மட்டும் இல்லாவிட்டால், இப்போதே உன்னோடு வந்திருப்பேன். பீமனை ஒழித்து விட்டு இதோ நானும் வந்து விடுகிறேன், என்று கதறினான். கர்ணனை தங்கள் தாய் மடியில் கிடத்தி அழும் காரணத்தைத் தெரிந்து கொண்ட பாண்டவர்கள் நடுங்கி விட்டார்கள். சொந்த சகோதரனையே கொன்ற பாவிகளாகி விட்டோமே என்று கதறினார்கள். அண்ணனைக் கொன்று கிடைக்கும் இந்தப்பதவி தேவை தானா என்று கண்ணீர் வடித்தார்கள். சகோதர ஒற்றுமை குறைந்து விட்ட இக்காலத்தில், இந்தக் கட்டத்தை கவனமாகப் படிக்க வேண்டும். ஒருவர் இருக்கும்போது அவரது அருமை தெரியாது. ஒரு கஷ்டம் வந்த பிறகு தான், ஐயோ, அண்ணனைப் பிரிந்தோமே, தம்பியைப் பிரிந்தோமோ என்று மனம் வலிக்கும். மகாபாரதம் சகோதர ஒற்றுமையை வலியுறுத்துகிறது. வீட்டுக்குள் மட்டுமல்ல, நாட்டிலும், உலகத்திலும் கூட இந்த ஒற்றுமை வேண்டும். ஒருவரை ஒருவர் சகோதரராக மதித்தால், உலகத்தில் கஷ்டமேது? அம்மாவிடம் சென்ற பாண்டவர்கள், தங்களிடம் கர்ணனைப் பற்றிய உண்மையை மறைத்ததற்காக வருந்தினார்கள்.உலகத்தில் பெற்ற தாயே பிள்ளைகளுக்கு தெரியாமல் தவறு செய்தது இதுவே முதல் முறை. இப்படி ஒரு கொடுமையை எங்கும் நாங்கள் பார்த்ததில்லை, என்று பெற்றவளிடம் முதன்முறையாக சற்று கடுமையாகவே பேசினார்கள்.
பீமன் கர்ணனின் முகத்தைப் பார்த்து, அண்ணா! நாங்கள் ஐவரும் உமக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால், எங்களைத் தவிக்கவிட்டு எமலோகம் சென்றீரே! என வருந்தினான். அர்ஜுனன், என் கண்ணையே நான் குத்திக்கொண்டேனே! நான் எய்த அம்பு எனக்கே தீமை செய்கிறது என்று எண்ணிக்கூட பார்க்கவில்லையே, என்றான்.அர்ஜுனனின் இந்தப்புலம்பலில் ஒரு தத்துவம் புதைந்து கிடக்கிறது. அது என்ன?
0 Comments