மகாபாரதம் பகுதி - 98
கிருஷ்ணர் சிரித்தார்.
தர்மரே! நல்ல கேள்வி கேட்டீர். பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற வீராதிவீரர் களை ஜெயித்த நீர், சல்லியனைப் பார்த்து பயப்படுகிறீரே! இந்தப் படையின் உதவியுடன் தானே அவர்களைக் கொன்றீர்! முதலில் உமது படை மீது நம்பிக்கை கொள்ளும். சல்லியன் திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. உமது தம்பிகளை விட வலிமையானவன். அவனை ஜெயிக்க உங்களால் முடியாது என்பது நிஜம். ஆனால், நான் சொல்வதைப் போல செய்ய வேண்டும். மாவீரன் அஸ்வத்தாமனுடன் அர்ஜுனன் போர் செய்ய வேண்டும். சகாதேவன் சகுனியுடன் மோத வேண்டும். நகுலன் கர்ணனின் பிள்ளைகளுடன் போரிட வேண்டும். நீயும் பீமனும் இணைந்தால் சல்லியனைக் கொன்று விடலாம். இது நிச்சயம், என்றார்.கண்ணபிரான் சொன்னால் அதற்கு மறுபேச்சு ஏது? அது அப்படியே நடந்து விடுமே.போர் தொடங்கியது. கிருஷ்ணர் வகுத்த வியூகப்படி அவரவருக்குரிய வீரர்களுடன் பாண்டவர்கள் மோதினர். கர்ணனின் புத்திரர்களான சித்திரசேனன், சூரியவர்மன், சித்திரகீர்த்தி ஆகியோரை நகுலன் கொன்றான். சகுனியையும், அவனது புத்திரர்களான உலுõகன், சைந்தவனை சகாதேவன் விரட்டியடித்தான். இந்நேரத்தில் பீமனும், சல்லியனும் சமஅளவு பலத்துடன் மோதினர். நகுலனும், சகாதேவனும் பீமனுடன் சேர்ந்து சல்லியனைத் தாக்கினர். சல்லியனோ எதற்கும் அஞ்சவில்லை. மூவர் மீதும் பாணங்களை எய்தான். அவர்கள் தளர்ந்து போனது கண்டு ஏளனமாக சிரித்தான். இதுகண்டு ஆத்திரமடைந்த பீமன், சல்லியனைச் சுற்றி பாதுகாப்பாக நின்ற பலநாட்டு அரசர் களைக் கொன்று குவித்தான். சல்லியன் இப்போது பலமிழந்து நின்றான். இதற்குள் அஸ்வத்தாமனை புறமுதுகிட்டு ஓடச்செய்த அர்ஜுனனும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
தர்மர் அவர் களையெல்லாம் விலக்கிவிட்டு, ஒருவனுக்கு ஒருவன் என்ற ரீதியில் சல்லியனுடன் போரிட்டார். கடும் கோபத்துடன் வேல் ஒன்றை எடுத்து வீசினார். அந்த வேல் சல்லியனின் தலையைத் துண்டித்தது. சல்லியன் இறந்ததும், வருத்தமடைந்த துரியோதனன் தன் படையுடன் தர்மருடன் மோதினான். அவனுடன் ஜயகந்தன், ஜயவர்மா, ஜயத்ரதன், ஜயவிந்து, ஜய விக்ரமன், ஜயசேனன், சேநாவிந்து ஆகியோர் வந்தனர். அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தான் பீமன். தம்பியரை தன் கண் முன்னாலேயே இழந்த துரியோதனன் அடைந்த சோகத்திற்கு அளவேயில்லை.பின்னர், ஜயசூரன், பலசேனன், சித்ரவாகு, சித்திரன், உத்தமவிந்து என்ற துரியோதனனின் தம்பிகள் அவனுடன் இணைந்தனர். அவர்களையும் மிக வேகமாக சொர்க்கத்தை தழுவ வைத்தான் பீமன். ஒரே நேரத்தில் 12 சகோதரர் களை பறிகொடுத்தால் என்னாகும்? துரியோதனன் மேலும் மனம் தளர்ந்தான். இதையடுத்து உத்தமன், உதயபானு, பலவர்மா, கீர்த்தி, பிரபலநாதன், சீலன், சுசீலன், விக்ரமபாகு, பலபீமன் என்ற ஒன்பது தம்பிமார்கள் களத்தில் புகுந்தனர். அவர்களை ஒரு வினாடி நேரத்தில் பீமன் விண்ணுலகம் அனுப்பிவிட்டான்.
இப்படி பீமனின் பராக்கிரமத்தை பார்த்து போர்க்களத்திலுள்ள இருதரப்பினருமே ஆச்சரியப்பட்டனர். கிருஷ்ணர் அவனை மனதுக்குள் வெகுவாகப் பாராட்டினார். இதுகண்டு எஞ்சிய மற்ற சகோதரர்கள் பீமனுடன் ஒன்றாக இணைந்து போருக்கு வர, அவர்களும் அழிக்கப்பட்டனர். கவுரவர் என்ற வம்சமே அன்று அழிந்தது துரியோதனனைத் தவிர! துரியோதனன் இதைப் பார்த்து அழுதே விட்டான். அழுதென்ன பலன்! வம்பு செய்பவனுக்கும், பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவனுக்கும், அண்ணி என்றும் பாராமல் பெற்றவளுக்கு சமமான பெண்ணை அவமானப்படுத்தியதற்கும் தண்டனை அனுபவித்து தானே ஆக வேண்டும்! அவன் சோர்ந்து நின்ற வேளையில். இத்தனைக்கும் மூல காரணமான பாழாய்ப் போன சகுனி,துரியோதனனிடம் வந்தான்.
மருமகனே! கவலை கொள்ளாதே. போர்க்களத்தில் இது சகஜம். நீ நீடுழி வாழ வேண்டுமானால், நான் சொல்வதைக் கேட்க வேண்டும். நம்மீடம் கிருதவர்மா, கிருபாச்சாரியார் போன்ற வீரர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் வலிமையில் குறைந்தவர்களா என்ன! நானும் வருகிறேன். நாம் எல்லாருமாக தர்மரைத் தாக்குவோம், என்றான்.அந்தக் கொடியவனின் பேச்சைக் கேட்டு, ஏற்கனவே சூதாட்டம் என்ற கொடிய விளையாட்டுக்கு சம்மதித்த துரியோதனன், இதற்கும் சம்மதித்தான்.
சகுனி இம்முறை பெரும் போராட்டத்தில் இறங்கினான். பீமனுக்கும் சகுனியைச் சுற்றி நின்ற படைகளுக்கும் இடையே யுத்தம் நடந்தது. பீமன் வழக்கம் போல் அவர்களைக் கொன்று குவித்தான். துரியோதனனுக்கு பயம் அதிகரித்தது. ஆனால், சகுனி சற்றும் தைரியம் குறையாமல், மருமகனே! கவலை கொள்ளாதே. ஒட்டுமொத்த சேனையையும் இங்கே திருப்பு. நாம் பீமனைக் கொன்று விடலாம், என்று கொக்கரித்தான். அப்போது சகாதேவன் வேகமாக வந்து, சகுனியின் மீது அம்பொன்றை எய்தான். ஆனால், துரியோதனன் சகாதேவன் மீது வேல் ஒன்றை எறியவே, அவன் மயங்கி விழுந்தான். இப்படியாக கடைசிநாள் போரும் விடாப்பிடியாக தொடர்ந்தது. ஒரு வழியாக பாண்டவர்களின் கை ஓங்க, கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன் போன்ற மாவீரர்களெல்லாம் ஒடுங்கிப் போனார்கள். சகுனி மட்டும் மிகத்தீவிரமாக போரிட்டான். அவனை அழிப்பது தன் வேலை என சகாதேவன் சபதம் செய்திருந்தான். மயக்கம் தெளிந்து எழுந்த அவன், கண்ணபிரானால் தனக்கு தரப்பட்ட வேலை எடுத்து சகுனி மீது எறிந்தான்.
அது அவனது சபதத்தை நிறைவேற்றியது. அந்தக் கொடுமைக்காரனின் வாழ்வை அந்த வேலாயுதம் முடித்துவிட்டது. இவ்வளவு பெரிய போர்...
வரலாற்றில் இன்றும் பேசப்படும் போர், லட்சக்கணக்கான உயிர்களைக் கொள்ளை கொண்ட போர் நடக்க காரணமானவனும், அண்ணன், தம்பிகளைப் பிரித்தவனுமான சகுனியின் வாழ்வு முடிந்தது பாண்டவர்களுக்கு பெரும் ஆனந்தத்தை இழந்தது. தாய்மாமனைப் பறிகொடுத்த துரியோதனன் வேரற்ற மரம் போல் ஆனான். இனி தன்னைக் காக்க வல்லவர் யாரும் இல்லை என்பது அவனுக்கே தெரிந்து விட்டது.
அப்போது அவனுக்குள் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. அவன் முகம் மலர்ந்தான். ஆம்...
ஆம்...
சஞ்சிவினி மந்திரத்தைப் பயன்படுத்த இதுவே சரியான நேரம். இந்த மந்திரத்தின் துணையுடன் இறந்து போன என் படைகளை அனுப்பிவிட்டால் மீண்டும் முழுபலத்துடன் அவர்களுடன் மோதலாம். அசுரகுருவான சுக்ராச்சாரி யாருக்கு மட்டுமே தெரிந்த இந்த மந்திரத்தை கசன் என்ற சீடன் மூலம் தேவகுரு பிரகஸ்பதி கற்றார். அதை அவர் மற்ற முனிவர்களுக்கு சொல்லித் தந்தார். அதில் ஒரு முனிவர் மூலம் நான் கேட்டறிந்தேன். அதை இப்போது பயன்படுத்தினால் என்ன! அவன் தனக்குள் ளேயே சொல்லிக்கொண்டான். தன் கிரீடத்தை கழற்றிவிட்டு, கதாயுதத்துடன் மட்டும் ஒரு தடாகத்தை நோக்கி அவன் சன்றான். நீருக்குள் மூழ்கி, மூச்சையும் மனதையும் அடக்கி சஞ்சிவினி மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். அப்போது சஞ்சய முனிவர் அங்கு வந்தார். அவர் மூலமாக, துரியோதனன் நீருக்குள் மறைந் திருக்கும் விபரத்தை கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன் ஆகியோர் அறிந்தனர். அவர்கள் துரியோதனனுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பேசி வெளியே வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். அஸ்வத்தாமன் அவனிடம், இன்றே நான் நம் பகைவர்களை ஒழிப்பேன். அவ்வாறு செய்யாவிட்டால் இன்றுமுதல் நிச்சயம் நான் வில்லைத் தொடமாட்டேன், நான் துரோணரின் புத்திரனும் இல்லை, என்று ஆவேசமாகப் பேசினான். கிருபரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். துரியோதனன் வருவதாகத் தெரியவில்லை.
இந்த விஷயம் பீமன் மூலமாக கிருஷ்ணருக்கு தெரிய வந்தது. அவர் பாண்டவர்களிடம், துரியோதனனின் இந்த மந்திரம் இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்யும். பின்னர் அவன் தீவிரமாக போரிட சிந்தித்திருக் கிறான் என்று எண்ணுகிறேன், என்றார். இதுகேட்ட பீமன் ஆவேசமாக அந்தப் பொய்கைக்குச் சென்றான். அவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் குளக்கரையில் நின்று பேசினான். துரியோதனா! சுத்தவீரன் எவனாவது தண்ணீரில் போய் மறைந்து கொள்வானா? நீ கோழை என்பதற்கு இதை விட என்ன உதாரணம் இருக்க முடியும்? நீ எங்கு போய் ஒழிந்தாலும் சரி...என் கையால் தான் உனக்கு அழிவு. உன் தலையை எடுப்பேன். தேவலோகத்துக்கு அனுப்புவேன். அங்கே உன் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல தேவமாதர்கள் காத்திருக்கிறார்கள். இப்படி ஒளிந்து கொள்ளும் நீயா, இந்த பூமியை அரசாள ஆசைப்படுகிறாய். கோழைகளுக்கு ஏனடா நாடு? இப்போது நான் ஆக்னேயாஸ்திரத்தை விடுவேன். அது இந்த தடாகத்திலுள்ள தண்ணீரை அப்படியே உறிஞ்சிவிடும். உன்னைக் கொல்வேன், என்றான். இதுகேட்டு உள்ளிருந்த துரியோதனனுக்கு உணர்ச்சி கிளர்ந்து ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்துவிட்டது.
அவன் மந்திரம் ஜெபிப்பதை விட்டுவிட்டு, தண்ணீருக்குள் இருந்து ஆவேசமாக வெளியே வந்தான். துரியோதனனின் கையில் இருந்த கதாயுதம் கண்ட பீமன், தானும் கதாயுதத்தால் மட்டும் போர் செய்ய முடிவெடுத்தனர். அந்நேரத்தில், தீர்த்த யாத்திரை சென்றிருந்த கிருஷ்ணரின் அண்ணன் பலராமனும், துரியோதனின் சித்தப்பா விதுரரும் அங்கே வந்தனர். இருதரப்பாரும் அவர்களை வரவேற்றனர்.அவர்கள் தங்கள் தீர்த்த யாத்திரை குறித்த விபரங்களை அங்கிருந்தோரிடம் எடுத்துக் கூறினர். அவர்கள் அதுகேட்டு மகிழ்ந்து, அவர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர், கண்ணபரமாத்மா அவர்களிடம் 18
நாட்களாக நடந்து வந்த போரைப் பற்றி விவரித்தார். பின்னர், பீமனும், துரியோதனனும் போர் செய்ய தகுந்த இடம் ஒன்றைத் தேர்வு செய்து தரும்படி பலராமனிடம் கிருஷ்ணர் கேட்டார். கிருஷ்ணரே இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என பலராமன் கூற, பரசுராமரால் கொல்லப் பட்ட அரசர்களின் ரத்தம் நிறைந்த இடமான ஸ்யமந்த பஞ்சகம் என்னும் இடத்தை கிருஷ்ணர் தேர்வு செய்தார்.
உடனடியாக தன் தம்பிமார் நால்வரும் புடைசூழ படையினருடன் தர்மர் ஸ்யமந்த பஞ்சகம் புறப்பட்டார். துரியோதனனோ, அத்தனை தம்பிகளையும் இழந்து விட்ட நிலையில் தனித்து கிளம்பினான். தம்பியரோடு செல்லும் தர்மரை ஏக்கத்துடன் பார்த்தான். தர்மர் அதைக் கவனித்து விட்டார். தன் தேரை விட்டு இறங்கி, துரியோதனனிடம் சென்றார். என் அன்புத்தம்பியே, என ஆரம்பித்தார்.
0 Comments