இராமாயணம் பகுதி - 27 - RAMAYANAM PART - 27


இராமாயணம் பகுதி - 27


இராமாயணம் பகுதி - 27 - RAMAYANAM PART - 27

பரதனும், சத்ருகனும் தவக்கோலம் பூண்டு, பரிவாரங்கள் புடைசூழ இராமரை காண கானகம் சென்றனர். அவர்கள் பரிவாரங்களுடன் கங்கைகரையை அடைந்தார்கள். பரதன் பரிவாரங்களுடன் வருவதை கண்ட குகன், இராமரை தாக்க தான் வருகிறார்கள் என்று எண்ணினான். இவன் அரசாட்சியை கவர்ந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் இராமரை இடர் செய்வதற்காக கானகம் வந்துள்ளான் என எண்ணினான், குகன். பரம ஏழையாகிய என்னை இராமர் தம்பி என்று சொன்னாரே. அந்த ஒரு சொல்லுகாக நான் உயிரையும் இராமருக்காக தருவேன். வேடர்களே, எதிர் பரிவாரங்களுடன் வரும் பரதனை போர்புரிய ஆயத்தமாக இருங்கள். குகன் போர் பறையறைந்தான். போர் பறையறந்ததை கேட்ட பரதர், அண்ணாவை தேடி மனம் நொந்து வரும் நம்மீது போர் புரிகின்றவர் யார் என சுமந்திரரிடன் கேட்டார். பெருமானே! கங்கை கரைக்கு அதிபரான குகன் என்னும் வேடன் உள்ளான். அவன் தாங்கள் இராமரை இடர் செய்ய வருவதாக எண்ணி போருக்கு ஆயத்தம் புரிகின்றான், என்றார்.

வேடனுக்கு கூட என் மீது கோபமா? நான் என்ன பாவம் செய்தேன் என்று கூறி சேனைகளை அங்கேயே நிறுத்துவிட்டு பரதர் குகனை பார்க்க சென்றார். அவரை பின் தொடர்ந்து சத்ருக்கனும் சென்றார். பரதர் தொலைவில் வருவதை கண்டார் குகன். வருபவர் இராமர் அண்ணாவை போல் இருக்கின்றாரே, அவருக்கு பின்னே வருபவர் இலட்சுமணர் போல் இருக்கின்றாரே எனக்கூறி இராமர் சென்ற திசை நோக்கி தொழுது வணங்கினான், குகன். அழுத கண்களும் உருகிய உள்ளமுடனும் தவக்கோலத்துடன் வரும் பரதரை கண்டார். இராமர் அண்ணாவிடம் ஒரு நாள் பழகிய எனக்கே நற்குணங்கள் இருக்குமானால், இராமர் அண்ணாவின் உடன் பிறந்த பரதருக்கு தீய குணம் ஒருபோதும் இருக்காது. நான் ஒரு அவசரக்காரன். நல்லவரை தீயவர் என எண்ணிவிட்டேன். பரதர் வந்தவுடன் அவருடைய திருவடியில் விழுந்து வணங்கினான், குகன். பரதர் குகனை கட்டி தழுவி கொண்டார்.

குகன் பரதரை பார்த்து, தாங்கள் ஏன் தவக்கோலத்துடன் வனத்துக்கு வந்துள்ளீர் என வினவினான். பரதர், அரசக்குலத்தில் மூத்தவன் தான் ஆட்சி புரிய வேண்டும். அண்ணன் இராமர் இருக்க நான் ஆட்சி புரியலாமா? ஆதலால் தான் அண்ணனை அழைத்து செல்ல வந்துள்ளேன் என்றார். இதை கேட்ட குகன் மகிழ்ச்சியால் துள்ளி குதித்தான். பரதா! தாய் வரம் கேட்க, தந்தை தந்த மகத்தான அரச பதவியை உதறி தள்ளிவிட்டு கானகம் செல்ல தவக்கோலத்துடன் வந்த உனக்கு ஆயிரம் இராமர்கள் ஒன்று சேர்ந்தாலும் ஈடாகுமா? உன்னை போன்ற உத்தம குணங்கள் நிறைந்தவர் இவ்வுலகில் இல்லை எனக் கூறினான் குகன்.

பரதர், குக பெருமானே! அண்ணன் இராமர் எங்கே தங்கி இருந்தார் எனக் கேட்டார். குகன் இராமர் தங்கி இருந்த ஆசிரமத்தை காட்டினான். பரதர் ஆசிரமத்தை பார்த்து வருந்தினார். குக பெருமானே! இலட்சுமணர் எங்கே படுத்து உறங்கினார். குகன், இலட்சுமணர் படுத்து உறங்கினாரா? அவர் இராமரும், சீதையும் உறங்க விடியும் வரை வில்லூன்றி கண் இமைக்காமல் நின்று காவல் புரிந்தார் என்றான் குகன்.

பிறகு அனைவரும் அக்கரையை கடக்க படகுகளில் ஏறினார்கள். தசரத குடும்பத்தினர் தனி படகில் சென்றனர். குகன், மிக துயரமாய் அமர்ந்திருக்கும் கௌசலையை பார்த்து இவர் யார் எனக் கேட்டார். குகன் அண்ணா, பன்னிரண்டு மாதம் சுமந்து பெற்ற இராமனின் தாய் கௌசலை என்றார், பரதர். குகன் கௌசலையின் மலரடியில் வீழ்ந்து பணிந்து வணங்கினான். கௌசலை, பரதா குழந்தை போல் அழும் இந்த மகன் யார்? என்று கேட்டாள். பரதர், அம்மா இவர் இராம் அண்ணாவுக்கு தம்பி, எனக்கும், இலட்சுமணருக்கும், சத்ருகனக்கும் தமையன் என கூறினார். கௌசலை, ஐவரும் பல்லாண்டு அரசு புரிந்து ஒற்றுமையாக வாழுங்கள் என்று ஆசி கூறினாள். பரதர் மற்ற தாய்மார்களையும் அறிமுகம் செய்தார்.

இலட்சுமணர், பரதருடைய படைகள் வருவதை கண்டு கோபம் கொண்டு எழுந்தார். பரதர் இராமரின் திருவடியில் வீழ்ந்து அழுதார். இராமர், அப்பா நலமாக இருக்கிறாரா? எனக் கேட்டார். பரதர் தந்தை சத்தியத்தை நிலை நாட்டிவிட்டு விண்ணுலகை சேர்ந்தார் என்ற செய்தியை கூறினார். இச்செய்தியை கேட்ட இராமர் அதிர்ச்சி அடைந்தார். தந்தையரை நினைத்து புலம்பி அழுதார், இராமர். வசிஷ்டர் இராமரை தேற்றினார். பரதர், அண்ணா! தாங்கள் அயோத்திக்கு வந்து ராஜ்யத்தை ஏற்று ஆட்சி புரிய வேண்டும் என்றார். இராமர், தம்பி நான் பதினான்கு ஆண்டு வனவாசம் செல்ல வேண்டும் என்பது தந்தையின் கட்டளை. ஆகவே, இதை நான் கைவிடக்கூடாது. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்து வந்து அரசு புரிவேன். என் சொல்லை தட்ட வேண்டாம். நீ அயோத்திக்கு சென்று கடமையை செய் என்றார்.

இராமபிரானிடம் எவ்வளவோ வேண்டிக் கொண்டும் அவர் நாடு திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். வேறு வழியின்றி இராமனுடைய பாதுகைகளை பெற்று கொண்டு இராமரை பலமுறை தொழுதுவிட்டு புறப்பட்டார், பரதர். பாதுகைகளை தன் தலைமேல் வைத்துக் கொண்டு அவரை நமஸ்கரித்துவிட்டு சென்றார். அயோத்தியில் அருகில் இருக்கும் நந்தி கிராமத்தில் மணி மண்டபத்தை அமைத்து இராமருடைய பாதுகைகளை வைத்து வழிப்பட்டனர். தினந்தோறும் ஆயிரம் மந்திரங்களால் இராமரின் பாதுகைகளுக்கு அர்ச்சனை செய்து இடையுறாது இராமபக்தியுடன் தவநெறி தவறாமல் ஆட்சி புரிந்தார், பரதர்.

இராமர், தம்பி இலட்சுமணரோடும், சீதையோடும் தெற்கு நோக்கிப் பயணித்தார்கள். அவர்கள் நெடுந்தூரம் நடந்து அத்திரி மகரிஷி வாழும் ஆசிரமத்தை அடைந்தனர். அத்திரி முனிவர் சப்த ரிஷிகளில் ஒருவர். இவருடைய மனைவி அனுசூயை. அனுசூயை என்றால் பொறாமையற்றவள் என்று பொருள். இவள் கலங்கமில்லாத கற்புகரசி ஆவாள். இராமர், இலட்சுமணர், சீதை மூவரும் அத்திரி முனிவரை வணங்கினார்கள். தமது ஆசிரமத்திற்கு வந்திருக்கும் இவர்கள் யார் என்பதை கேட்டறிந்த முனிவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர்களுக்கு காய் கனிகள் கொடுத்து பசியாற செய்தார்.

முனிவரின் மனைவி சீதையை அன்புடன் தழுவி, ஜனக மகராஜரின் குமாரியாகிய நீ மரவுரியுடன் (மரவுரி முனிவர்கள் உடுத்தும் ஆடை) கணவனை பிரிய முடியாமல் கானகத்துக்கு வந்துள்ளாய்? நீ கற்புகரசி. அணிகலன்கள் இல்லாமல் வெறுமையுடன் இருக்கின்றாயே? நீ சுமங்கலி பெண். அணிகலன்கள் இல்லாமல் இருக்கக் கூடாது. இவை என்னுடைய அணிகலன்கள். நீ என் மருமகள். இந்த அணிகலன்களை அணிந்துகொள் என அன்புடன் கூறி அணிகலன்களை நிரம்ப சீதைக்கு அணிவித்தாள். மகளே! ஒரு சமயம் நீ உன் கணவனை பிரிந்திருக்க கூடும். உனக்கு பசி எடுக்காத வரத்தை அருள்கிறேன். உன் புகழ் வாழ்க எனக் கூறி அருள் புரிந்தாள் அனுசூயை. இராமர், இலட்சுமணர், சீதை மூவரும் அத்திரி முனிவரின் ஆசிரமத்தில் ஓர் இரவு தங்கினார்கள். மறுநாள் காலை அவர்கள் முனிவரை வணங்கி விட்டு தண்டகவனத்தை நோக்கி புறப்பட்டனர்.

தண்டகவனம் வரலாறு  

இட்சுவாகு மன்னனின் மகன்களில் ஒருவன் தான் தண்டன். தண்டன் தீய குணங்கள் நிறைந்தவன். எனவே மன்னன் தண்டனை, நாட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார். பிறகு அவன் தென்னாடு சென்று அங்கே ஓர் பகுதியைப் பிடித்துக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். அங்கு அசுரகுருவான சுக்கராச்சாரியாரின் மகளை தகாத வழியில் காதலித்தான். அதனை அறிந்த முனிவர் தண்டன் அழியவும், நாடு பாழாகவும் சபித்தார். அதனால் அந்த தேசம் காடாக மாறி தண்டகவனம் எனப் பெயர் பெற்றது என்பது புராணக்கதை.

தொடரும்.....

Post a Comment

0 Comments