பிரித்தானியர் ஆட்சியின் கீழ் இலங்கையின் அரசியல் மாற்றங்கள் - POLITICAL CHANGES IN SRI LANKA UNDER BRITISH RULE

 
பிரித்தானியர் ஆட்சியின் கீழ் 

இலங்கையின் அரசியல் மாற்றங்கள்


பிரித்தானியர் ஆட்சியின் கீழ் இலங்கையின் அரசியல் மாற்றங்கள் - POLITICAL CHANGES IN SRI LANKA UNDER BRITISH RULE


1833 கோல்புறூக் சீர்திருத்தங்கள்

1815 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய ஆளுநர்கள் இலங்கையின் ஆட்சி நடவடிக் கைகளை மேற்கொள்ளும்போது அரசாங்கத்திற்கு வருமானத்தைவிட செலவு அதிகரித்துக்கொண்டு சென்றது. இதனால் இலங்கை ஆளுநர்களுக்கு இந்நாட்டின் செலவுகளை ஈடுசெய்துகொள்ளுவதற்காகப் பிரித்தானிய அரசிடம் பணம் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. குடியேற்ற நாடு ஒன்றின் தேவைக்காக தொடர்ந்தும் பணம் செலவிடுவதற்குப் பிரித்தானிய அரசிற்கு விருப்பம் இருக்கவில்லை. ஆகையால் இந்நாட்டின் நிலைமையை அவதானித்துத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காகக் குடியேற்ற நாடுகளின் செயலாளரால், கோல்புறூக் அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1829 ஆம் ஆண்டில் இங்கு வந்த அவரிடம், இந்நாட்டின் அரசியல், பொருளியல் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தறியும் பொறுப்பு கையளிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் அக்காலத்தில் நிலவிய நீதிமன்ற மற்றும் சட்ட நடவடிக்கை தொடர்பாகப் பரிசீலித்து ஆலோசனைகளை முன்வைப்பதற்காக குடியேற்ற நாடுகளின் செயலாளரால் சார்ள்ஸ் எச், கமரன் நியமிக்கப்பட்டார். அவர் 1830 இல் இங்கு வந்தார். கோல்புறூக் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டே அரசியல் சீர்திருத்தம் 1833 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசால் எமது நாட்டில் அறிமுகஞ் செய்யப்பட்டது. இது கோல்புறூக் சீர்திருத்தங்கள் எனப்பட்டது. கமரனின் ஆலோசனைக்கு இணங்க நீதிமன்ற முறையும் மறுசீரமைக்கப்பட்டது.

கோல்புறூக் சீர்திருத்தங்களின் முக்கியமான அம்சங்கள்

கோல்புறூக் சீர்த்திருத்தங்களின் கீழ் இந்நாட்டின் அரசியல், பொருளியல் துறைக ளில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றுள் சில வருமாறு,

சட்டவாக்கக் கழகம், சட்ட நிருவாகக் கழகம் என்பன அமைக்கப்பட்டன.

கண்டி இராச்சியமும் கரையோரப் பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே ஆட்சி முறையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.

நாடு ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. கட்டாய இராசகாரிய முறைமை ஒழிக்கப்பட்டது.

அரசின் வர்த்தக ஏகபோக முறைமை அகற்றப்பட்டது.

சட்டவாக்கக் கழகமும் சட்ட நிருவாகக் கழகமும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். கோல்புறூக் ஆணைக்குழு இந்நாட்டிற்கு வருகை தருகையில், இலங்கையின் ஆளுநர் அளவுக்கதிகமான அதிகாரங்களைக் கொண்டிருந்தார். அது பொது மக்களின் சுதந்திரத்திற்கு இடைஞ்சலானது எனக் கருதிய ஆணைக்குழு, ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்பதற்காக இச்சபைகளை அமைப்பதற்கு ஆலோ சனை வழங்கியது.

1833ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சட்டவாக்கக் கழகம் 15 பேரை அங்கத்தவர்களாகக் கொண்டிருந்தது. அவர்களுள் 9 பேர் உத்தியோக சார்புள்ள அல்லது பதவி அதிகாரத்தினைக் கொண்டு நியமனம் பெற்றோராவர். எஞ்சிய 6 பேரும் உத்தியோக சார்பற்றோர். ஐரோப்பியர் மூவரும் பறங்கியர், சிங்களவர், தமிழர் என்பவர்களுக்காக தலா ஒவ்வொருவர் வீதம் மூவருமாக ஆறு பேர் நியமிக்கப்பட்டனர். உத்தியோகசார் பற்றோரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருந்தது.

சட்டவாக்கக் கழகத்திற்கு உத்தியோகச் சார்பற்ற அங்கத்தவர்கள் இனரீதியாக நியமிக் கப்பட்டமையால், இது இனவாரிப் பிரதிநிதித்துவ முறை எனப்பட்டது. இம்முறை எதிர்கால இலங்கையில் பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கக் காரணமாயிற்று.

சட்டவாக்கக் கழகத்தில் உத்தியோக சார்பற்றோரை விட, உத்தியோக சார்புள்ளவர்கள் பெரும்பான்மையோராய் இருந்தமையால், பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய உத்தியோக சார்பற்றோர்களிடம் போதிய அதிகாரம் காணப்படவில்லை. உத்தியோக சார்பற்றவர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டு இருந்த மையால் தமக்குச் சார்பானவர்களையே அதற்கு நியமிக்கக்கூடியதாயிருந்தது. இதனால் இச்சபை ஆளுநருக்கு சார்பான ஒன்றாக இருந்து வந்தது.

1833 இல் அமைக்கப்பட்ட சட்ட நிருவாகக் கழகத்திற்கு குடியேற்ற நாட்டுச் செயலாளர், திறைசேரி நாயகம், கணக்காளர் நாயகம், நில அளவைத் திணைக்களத் தலைவர், கொழும்பு சுங்கத் திணைக்களத் தலைவர் போன்றோர் இடம்பெற வேண்டுமென்று கோல்புறூக் ஆலோசனை வழங்கியிருந்தார். இச்சபை அமைக்கப்பட்டமையால் நிதி தொடர்பாக ஆளுநருக்கு இருந்த கூடிய அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு அமைய வரவு - செலவு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது நிருவாகக் குழுவினருடன் கலந்துரையாட ஆளுநர் பணிக்கப்பட்டார். சட்ட நிருவாகக் கழகத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு ஆளுநர் கடமைப்பட்டிருக்கவில்லை. ஆயினும் அவ்வாலோசனைகளை ஏற்றுக் கொள்ளாதவிடத்து அவர் குடியேற்ற நாடுகளுக்குப் பொறுப்பான செயலாளரிடம் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

ஐரோப்பியரின் போராட்டம்

கோல்புறூக் சீர்திருத்தங்களின் சிற்சில அம்சங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் போராட்டம் ஒன்றை முதன்முதலில் தொடங்கியோர் இந்நாட்டில் வாழ்ந்த ஐரோப்பிய வணிகர்களாவர். இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தச் சட்டவாக்கக் கழகத்தில் உத்தியோக சார்பற்ற மூவர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நாட்டில் பெருந்தோட்டத் துறையில் ஈடுபட்டிருந்த ஐரோப்பியர்களுக்குத் தோட்டத்துறைக்கான பெருந்தெருக்கள், புகையிரதப் பாதைகள், உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை மேம்படுத்த வேண்டிய தேவை இருந்தது. என்றாலும் ஆரம்ப காலத்தில் சட்டவாக்கக் கழகத்திற்கு நிருவாக அதிகாரம் கையளிக்கப்படாமையால் நிதியை ஒதுக்கீடு செய்து கொள்வது சிரமமானதாயிருந்தது. அத்தோடு சட்டவாக்கக் கழகத்தில் உத்தியோக சார்பற்றோர் சிறுபான்மையோராக இருந்தமை அவர்களை அதிருப்தி அடையச் செய்திருந்தது. உத்தியோக சார்பற்ற அங்கத்தவர்கள் வாக்குரிமையின் மூலம் தெரிவுசெய்யப்படாது, ஆளுநர் மூலம் நியமிக்கப்படுவது தொடர்பாகவும் அதிருப்திப்பட்டனர். இவற்றை அடைந்து கொள்வதற்காக ஐரோப்பிய முதலீட்டாளர்கள் வரையறுக்கப்பட்ட அளவில் மேற்கொண்ட போராட்டங்கள் சட்டவாக்கக் கழகத்தில் கேள்வி கேட்பது, ஆலோசனைகளைச் சமர்ப்பிப்பது, பத்திரிகைகளில் கவனயீர்ப்புக் கட்டுரைகளை எழுதுவது, போராட்டங்களை மேற்கொள்வதற்கான அமைப்புகளைத் தோற்றுவிப்பது என்பனவையாகும்.
.
ஜோர்ஜ் வோல் அவர்களின் தலைமையில் 1865 ஆம் ஆண்டில் இலங்கையர் சங்கத்தை தோற்றுவித்துக் கொண்டமை ஐரோப்பியாவில் நிலவிய அமைப்பிற்கு ஓர் உதாரணமாகும். இப்போராட்டங்களால் 1889 இல் சட்டவாக்கக் கழகத்தில் உத்தியோக சார்பற்றோரின் தொகை எட்டாக அதிகரிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கும் கண்டிச் சிங்களவருக்கும் இரு பிரதிநிதிகள் நியமனம் பெற்றனர். ஐரோப்பியரின் போராட்டங்களின் நோக்கம் நிருவாக அதிகாரங்களை இலங்கையர் பெற்றுக் கொள்வது அல்லாவிடினும், இலங்கையர்கள் முன்மாதிரியொன்றைப் பெற்றுக் கொள்ளுவதற்கு இப்போராட்டங்கள் வழிகாட்டின.

1910 குறூ மக்கலம் சீர்திருத்தங்கள்

கோல்புறூக்கின் சீர்தித்தங்களினால் 19 ஆம் நூற்றாண்டில் இந்நாட்டின் சமூக, பொருளாதார விடயங்களில் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. அதன் எதிரொலியாக 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தோடு, பழைய பிரபுத்துவ வர்க்கம் மறைந்து, புதிய மத்தியதர வர்க்கம் ஒன்று தோற்றம் பெற்றது. 1833 இல் இருந்து கடந்த 70 ஆண்டு காலகட்டத்தினுள் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு இயைபாக அரசியல் துறையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இதனால் இலங்கை மத்திய தர வர்க்கத்தினர் மனக்குறையோடு இருந்தமையால் 1908 - 1909 ஆம் ஆண்டுகளில் அவர்கள், அரசியல் யாப்புச் சீர்திருத்தம் ஒன்று இந்நாட்டிற்குத் தேவை எனக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

1908 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களால், இலங்கைக்கு அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம் ஒன்றின் தேவை தொடர்பான கோரிக்கை ஒன்று குடியேற்ற நாடுகளின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்னும் பல இயக்கங்களும் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தன. கரைநாட்டு உற்பத்தியாளர் சங்கம், சிலாபச் சங்கம், யாழ்ப்பாணச் சங்கம் போன்றன இவ்வாறான இயக்கங்களுக்கு உதாரணங்களாகும். இவற்றின் முக்கியமான சில கோரிக்கைகள் வருமாறு,

சட்டவாக்கக் கழகத்தில் உத்தியோக சார்பற்றோரின் அங்கத்துவத்தை அதிகரித்தல்.

இனவாரிப் பிரதிநிதித்துவ முறையை நீக்குதல்.

பிரதேசவாரி பிரதிநிதித்துவமுறைக்கேற்ப வாக்குரிமை மூலம் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிரதி நிதிகளைத் தெரிவு செய்தல். 

சட்டவாக்கக்கழகத்தின் அதிகாரங்களை அதிகரித்தல்.

அப்போதைய இலங்கை ஆளுநரான ஹென்றி மக்கலம், இலங்கையரின் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். கோரிக்கைகளை முன்வைக்கும் நபர்களோ இயக்கங்களோ பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தாதவர்கள் என்ற வாதத்தை அவர் முன் வைத்தார். மேற்குறிப்பிட்ட அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் தேவை தொடர்பாக உருவாகி வந்துள்ள தர்க்க ரீதியான கருத்துக்களை நிராகரிப்பதற்குக் குடியேற்ற நாட்டுச் செயலகத்தால் இயலவில்லை. கோல்புறூக்கின் அரசியல் யாப்பு 75 ஆண்டுகள் பழைமையானபடியால், புதிய சீர்திருத்தம் அவசியமானது என்பதை குடியேற்ற நாட்டு செயலக அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டது போல் தெரிகின்றது. இதற்கமைய 1910 நவம்பர் மாதத்தில் புதிய சீர்திருத்தத்தை வழங்குவதாக குடியேற்ற நாடுகளின் செயலாளர் தெரிவித்தார். அப்போதைய ஆளுநர் ஹென்றி மக்கலம் அவர்களின் ஆலோசனைப்படி, குடியேற்ற நாடுகளின் செயலாளர் குறூ பிரபு அவர்களின் திட்டத்தின்படி, இச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையால் இது குறு மக்கலம் சீர்திருத்தம் எனப் பெயர் பெறுகின்றது.

1912 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்த இவ்வரசியல் யாப்புச் சீர்திருத்தத் தின்படி, சட்டவாக்கக் கழகத்தின் அங்கத்தவர் தொகை 21 ஆக அதிகரிக்கப்பட்டது. உத்தியோக சார்புள்ள 11 பேரும் உத்தியோக சார்பற்ற 10 பேரும் அங்கத்துவம் பெற்றனர். உத்தியோக சார்பற்ற 10 பேரில் 6 பேர் நியமனம் பெற்றனர். எஞ்சிய நால்வரில் ஐரோப்பியர் இருவரும் பறங்கியர் ஒருவரும் படித்த இலங்கையர் ஒருவர் என வரையறுக்கப்பட்ட வாக்குரிமை மூலம் தெரிவாகினர்.

குறூ மக்கலம் சீர்த்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள் 

சட்டவாக்கக் கழகத்திற்கு முதன்முறையாக வாக்குரிமை மூலம் பிரதிநிதிகள்

தெரிவு செய்யப்பட்டமை. இலங்கையருக்காக கல்வி கற்ற பிரதிநிதி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டமை.

தொடர்ந்தும் உத்தியோக சார்பற்றோரே பெரும்பான்மையோராய் இருந்தமை.

இச்சீர்திருத்தங்களின்படி சட்டவாக்கக் கழகத்திற்குப் பிரதிநிதிகள் வாக்குரிமை மூலம் தெரிவுசெய்யப்பட்டமை மிக முக்கியமான ஓர் அம்சமாகும் என்றாலும் வாக்காள ராவதற்கு பால், கல்வி, சொத்து தகைமைகள் தேவைப்பட்டமையால், அவர்களின் தொகை மிகவும் குறைவாக இருந்தது. 1912 ஆம் ஆண்டு முதலாவது தேர்தலின் மூலம் கல்விகற்ற இலங்கையரின் பிரதிநிதியாக சேர். பொன்னம்பலம் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

மது ஒழிப்பு இயக்கம் 1912 - 1915

1910 அரசியல் யாப்புச் சீர்த்திருத்தத்தில் இலங்கையரின் கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டிருக்கவில்லை. இதனால் மத்தியதர வர்க்கத்தினரிடையே மனக்குறை நிலவி வந்தது. இதே வேளையில் 1912 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மதுபானசாலைகளை அமைப்பதற்கு அனுமதியளிக்கும் புதிய சட்டமொன்று பிறப்பிக்கப்பட்டமையால் அதனை எதிர்த்து மது ஒழிப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானியரின் ஆட்சியின்போது இலங்கையில் மதுபாவனை அதிகரித்துச் சென் றமையால் சமய மறுமலர்ச்சி இயக்கத்தினூடே மது ஒழிப்பு இயக்கம் உருவான விதம் மூன்றாம் பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மது ஒழிப்பு இயக்கத்தின் நோக்கம் மதுவினால் விளையும் தீமைகளை விளக்கி, மக்களை அதிலிருந்து மீட்பதேயாகும். என்றாலும் 1912 இல் மது ஒழிப்பு இயக்கப் போராட்டம் அரசாங்கத்தின் மதுவரிக் கொள்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது. 1910 ஆம் ஆண்டு சீர்த்திருத்தத்தினால் தமது கோரிக்கைகளைப் பெற முடியாது இருந்த மத்தியதர வர்க்கத்தினரே இவ்வியக் கத்திற்குத் தலைமை தாங்கிச் செயற்பட்டனர். இதனால் மது ஒழிப்புப் போராட்டம், அரசியல் தன்மையுடன்கூடிய ஓர் இயக்கமாக மாற்றமுற்றது. அம்மது ஒழிப்பு இயக்கத்தின் முக்கியமான சில பண்புகள் வருமாறு,

அரசாங்கத்தின் மதுவரிக் கொள்கைக்கு எதிராகப் பொது மக்களின் அபிப்பிராயத்தை உருவாக்க முயற்சித்தமை. 

மத்தியதர வர்க்கத்தினரான ஆங்கிலம் கற்றவர்களும் சமய, கலாசார மறுமலர்ச்சி இயக்கத்தினரும் ஒரே கொள்கை அடிப்படையில் செயற்பட்டமை.

கொழும்பில் மத்திய மது ஒழிப்புச் சபை ஒன்றை அமைத்து, நாடு பூராவும் அதன் கிளைகளைத் தோற்றுவித்து ஒன்றிணைந்த வலையமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டமை.

மது ஒழிப்பு இயக்க மேடைகளில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் விமர்சிக்கப்பட்டமை. 

இவ்வியக்கத்தின் செயற்பாட்டால், சில பிரதேசங்களில் மதுச்சாலைகள் மூடப்பட புதிய மதுச்சாலைகளை அமைப்பதற்கு இடங்களைப் பெற்றுக் கொள்வதும் சிரம மாக இருந்ததென அறிக்கைகள் கூறுகின்றன. இவ்வாறு இவ்வியக்கச் செயற்பாடுகள் வெற்றி பெற்றதனாலும் மது ஒழிப்பு இயக்கத்தினூடாக மக்கள் இயக்க ரீதியாக ஒன்றுபட்டதனாலும் மது ஒழிப்பு இயக்க மேடைகளில் அரசாங்கம் விமர்சிக்கப்பட்டதனாலும் அவ்வியக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பத்தை எதிர்பார்த் திருந்தது. இதற்கிடையில் 1915 ஆம் ஆண்டு கண்டிப் பகுதியில் சிங்கள முஸ்லிம் மக்களிடையே மோதல் ஒன்று ஏற்பட்டது. அது சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் என அழைக்கப்படுகின்றது. மோதல் பரவுவதற்கு இடமளித்த அரசு அதை ஒரு சந்தர்ப்ப மாகப் பயன்படுத்தி மது ஒழிப்பு இயக்கத்தை கட்டுப்படுத்த முயன்றது. தொடர்ந்து, அடக்கு முறையைப் பிரயோகித்து இத்தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டதோடு, சிங்களப் பத்திரிகைகள் பலவும் பிரசுரமாகாது தடைசெய்யப்பட்டன. இவ்வாறான அடக்கு முறைகளால் மது ஒழிப்புச் செயற்பாடுகள் முடக்கப்பட்டன. என்றாலும் மது ஒழிப்பு இயக்கத்தினூடாக அரசியலுக்கு வந்த எஃப். ஆர். சேனாநாயக்க, டீ. எஸ். சேனாநாயக்க, சேர் டீ. பீ. ஜயதிலக போன்ற தலைவர்கள் பிற்காலத்தில் தேசியத் தலைவர்களாகப் பெயர்பெற்றனர்.

இந்தியத் தேசிய இயக்கத்தின் தாக்கம்

19 ஆம் நூற்றாண்டாகும்போது இலங்கையைப் போன்றே இந்தியாவிலும் பிரித்தா னியரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இவ்வாறு பிரித்தானியரின் குடியேற்றமாகத் திகழ்ந்த இந்தியாவிலும் இருபதாம் நூற்றாண்டாகும்போது சக்திவாய்ந்த தேசிய இயக்கம் ஒன்று உருவானது. 1885 ஆம் ஆண்டு இந்தியத் தலைவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்போராட்டத்தால் 1918 ஆம் ஆண்டளவில் இலங்கையை விட முற்போக்கான அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் நடவடிக்கையை மேற்கொண்டனர். சுரேந்திரநாத் பனர்ஜி, பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற தலைவர்கள் பிரித்தானியருக்கு எதிரான போராட்டங்களில் இந்திய மக்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொண்டு சுயராஜ்யம் அல்லது சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குக் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற தலைவர்கள் இலங்கைக்கு வந்து இந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினர். மகாத்மா காந்தி 1927 இல் இலங்கைக்கு வந்து சில நாட்கள் தங்கிச் சென்றார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்தது. பிரித்தானியாவுக்கு முறைப்பாட்டு மனுக்களை முன்வைத்தல், குடியேற்ற நாட்டுச் செயலாளருடன் பேச்சு வார்த்தை நடாத்துதல் போன்ற நடவடிக்கைகள் முக்கியமான அரசியல் சீர்திருத்தங்களை அடைந்து கொள்வதற்கு போதியதாய் இன்மையை இந்நாட்டுத் தலைவர்கள் விளங்கிக் கொண்டனர். அதற்கிணங்க 1915 ஆம் ஆண்டின் பின்னர் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கங்கள் மூலமாகத் தமது போராட் டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்நாட்டுத் தலைவர்கள் செயற்பட்டனர்.

இலங்கை தேசிய சங்கம்

1915 ஆம் ஆண்டில் சிங்கள - முஸ்லிம் கலவரம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இராணுவச் சட்டத்தைப் பிரயோகித்து, மக்களை அடக்கியமையால் நிருவாக நடவடிக்கைகளில் இலங்கையருக்குக் கூடிய அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் தேவை அதிகளவில் உணரப்பட்டது. என்றாலும் 1919 வரை இந்நாட்டில் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான பொதுவான அமைப்பு ஒன்று உருவாகி இருக்கவில்லை. இதுவரை சிறிய அமைப்புக்கள் பலவும் காணப்பட்ட போதிலும் அவற்றால் சக்தி வாய்ந்த முறையில் குரல் எழுப்ப முடியவில்லை. இதனால் அதுவரை இருந்த அமைப்புகளை ஒன்றுபடுத்தி 1919 டிசெம்பரில் இலங்கை தேசிய சங்கம் அமைத்துக்கொள்ளப்பட்டது. 1915 இன் பின்னர் இந்நாட்டு அரசியல் போராட்ட இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சேர். பொன்னம்பலம் அருணாசலம், இலங்கைத் தேசிய சங்கத்தின் முதலாவது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இந்நேரத்தில் அரசியல் செயற்பாடுகளில் கவனம் செலுத்திய சகல இயக்கங்களும் தேசிய சங்கத்தின் தலைமையில் ஐக்கியமுற்றன. அரசியல் அதிகாரத்தை இலங்கையர் வசப்படுத்திக் கொள்வதற்காக பலமிக்க போராட்டங்களை நடத்துவதற்காகத் தேசிய சங்கத்தைத் தோற்றுவித்துக் கொண்டனர். பொதுவான நோக்குடன் செயற்படுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அங்கம் வகிக்கின்ற பல்வேறு இயக்கங்களும் தேசிய சங்கம் என்ற ஒரே அமைப்பின் கீழ் ஒன்றுபட்டமை, இந்நாட்டின் வரலாற்றின் முக்கியமான ஒரு சந்தர்ப்பமாகும்.

1920 மனிங் சீர்திருத்தங்கள்

குறூ - மக்கலம் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தால் திருப்தியடையாத இலங்கையர்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களால் 1920 இல் இச்சீர்திருத்தம் பெற்றுக் கொள்ளப்பட்டது. இச்சீர்திருத்தத்தால் சட்டவாக்கக் கழகத்தின் அங்கத்தவர் தொகை 37 ஆக அதிகரிக்கப்பட்டது. அவர்களுள் 14 பேர் உத்தியோக சார்புள்ளோர் ஆவர். எஞ்சிய 23 பேரும் உத்தியோகச்சார்பற்றோர்களாகும். உத்தியோக சார்பற்றோரில் 7 பேர் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். எஞ்சிய 16 பேரும் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையில் வரையறுக்கப்பட்ட வாக்குரிமை மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். உத்தியோக சார்பற்றோர் சட்டவாக்கக் கழகத்தில் பெரும்பான்மையினராயினும் முக்கியமான சந்தர்ப்பங்களில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட 7 அங்கத்தவர்களும் உத்தியோக சார்புள்ள 14 பேருடன் சேர்ந்து கொள்ளக்கூடிய பின்னணி ஒன்று காணப்பட்டமையால், சட்டவாக்கக் கழகத்தில் ஆளுநருக்குச் சார்பான பெரும்பான்மை வாக்குகளைப் பெறக்கூடிய நிலை இருந்தது. 1920 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கியமான பண்புகள் சில கீழே தரப்பட்டுள்ளன,

சட்டவாக்கக் கழகத்தில் முதன்முறையாக உத்தியோக சார்பற்றோர் பெரும்பான்மை பெற்றமை.

பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை அறிமுகமானவை.

இனவாரிப் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் காணப்பட்டமை.

இச்சீர்திருத்தத்தாலும் ஆளுநரின் அதிகாரங்கள் குறைந்துவிடவில்லை. இலங்கை தேசிய காங்கிரஸின் கோரிக்கைகள் கவனியாதுவிடப்பட்டது. இதனால் இலங்கைத் தலைவர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இலங்கை தேசிய சங்கம் ஆரம்பத்தில் இச்சீர்த்திருத்தங்களை நிராகரிப்பதற்குக் கூட ஆயத்தமாகியது. இதனால் குறுகிய காலத்தினுள் இன்னுமொரு அரசியல் யாப்பு சீர்திருத்தத்தைப் பெற்றுத் தருவதாக வில்லியம் மனிங் ஆளுநர் வாக்குறுதி அளித்தார். அதன் பெறுபேறாக 1924 இல் இன்னும் ஓர் அரசியல் சீர்திருத்தம் இடம்பெற்றது. அது மனிங் - டெவன்ஷயர் சீர்திருத்தம் என அறிமுகப்படுத்தப்பட்டது.

1924 மனிங் டெவன்சயர் சீர்த்திருத்தங்கள்

இச்சீர்திருத்தத்தின்படி சட்டவாக்கக் கழக அங்கத்தவர் தொகை 49 ஆக அதிகரிக் கப்பட்டது. அவர்களுள் உத்தியோக சார்புள்ள 12 பேரும் உத்தியோக 37 பேரும் அங்கத்துவம் பெற்றனர். 37 பேரில் 8 பேர் ஆளுநரால் நியமிக்கப்பட்டதோடு, 29 பேர் வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்டமை முக்கியமான ஒரு விடயமாகும். உத்தியோக சார்புள்ள 12 பேருடன் நியமனம் பெற்ற 8 பேரும் ஒன்று சேர்ந்தாலும் தெரிவு செய்யப்பட்ட 29 பேர் இருந்தபடியால் வர்கள் சபையில் பெரும்பான்மையினராக இருந்தமை இச்சீர்த்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சமாகும். 

ஆட்சியைக் கொண்டு நடத்தும் பொறுப்பு ஆளுநர் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் சட்டவாக்கக் கழகத்தில் பெரும்பான்மை பிரதிநிதித்துவப் பலம் அவரிடம் காணப்படாமையால், அங்கு மக்கள் பிரதிநிதிகளின் கைவசமே அதிகாரம் காணப்பட்டது. இதனால் இச்சீர்திருத்தம் அதிகாரமும் பொறுப்பும் வேறுபடுத்தப்பட்ட ஆட்சி முறையாகக் காணப்பட்டமையால் ஆட்சி முறையைக் கொண்டு நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டன. வில்லியம் மனிங் அவர்களுக்குப் பிறகு ஆளுநராக நியமனம் பெற்ற ஹியூ கிளிபர்ட், இந்நிலையைக் குடியேற்ற நாட்டு செயலகத்திற்கு அறிவித்தபடியால், இதனைப் பரிசீலித்து அரசியல் யாப்புத் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக டொனமூர் ஆணைக் குழுவை பிரித்தானிய அரசு நியமித்தது.

1931 டொனமூர்  சீர்த்திருத்தங்கள்

டொனமூர் பிரபு தலைமையிலான ஆணைக்குழு 1927 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து, மக்களின் கருத்துக்களைப் பெற்று, முன்வைத்த அரசியல் யாப்பு, 1931 இல் இருந்து செயற்படத் தொடங்கியது. இதுவரை நிலவி வந்த பல்வேறு அரசியல் யாப்புச் சீர்த்திருத்தங்களில் இருந்து, இலங்கையரிடம் குறிப்பிடத்தகு அரசியல் பொறுப் புக்களை கையளித்த ஒன்று என்ற முறையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது. அது சுதந்திரத்திற்கான பயணப் பாதையில் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படக் கூடியதாகும்.

டொனமூர் அரசியல் யாப்பின் முக்கியமான பண்புகள் சிலவற்றைச் சுருக்கமாக அவதானிப்போம்,

இவ்வரசியல் யாப்பின்படி 61 அங்கத்தவர்களைக் கொண்ட அரசுக் கழகம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்கான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்ட முறை கீழே காட்டப்பட்டுள்ளது. 

அரசுக் கழக அங்கத்தவர்களில் இருந்து அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவரே தலைமைப் பொறுப்பை வகித்தார்.

சர்வசன வாக்குரிமை

1912 ஆம் ஆண்டிலிருந்து சட்டவாக்கத் துறைக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு சொத்து செய்வதற்கு வாக்குரிமை பயன்படுத்தப்பட்டாலும் அவ்வுரிமை உடையோர் தொகை மிகவும் குறைவாகும். வாக்குரிமையைப் பெறுவதற்கு கல்வி அல்லது தகைமைகள் தேவைப்பட்டன. இதனால் பாமர, ஏழை மக்களுக்கு வாக்குரிமை கிட்டவில்லை. 1924 வரை இந்நாட்டு வாக்காளரின் தொகை 4 வீதமாக மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டு வந்தது. பெண்களுக்கு வாக்குரிமை கிட்டியிருக்கவில்லை. இவ்வாறு சனத்தொகையில் கல்வி, செல்வம் உள்ளோருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கப்பட்டபடியால், ஏழைகளின் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் கவனம் ஈர்க்கப்படுவது குறைவாயுள்ளதாக டொனமூர் ஆணைக்குழு கருதியது. அத்தோடு பெரும்பான்மையான பொது மக்களுக்கு வாக்குரிமை கிட்டாமையால், அரசியல் விடயங்களில் அவர்களின் கவனம் குறைவாக உள்ளதாக இக்குழு கருதியது. இதனால் கல்வி, சொத்து தகைமைகளை விடுத்து 21 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என ஆணையாளர்கள் பரிந்துரை செய்தனர். 1931 இல் இலங்கையருக்கு சர்வசன வாக்குரிமை கிடைக்கப் பெற்றமை அதன் பெறுபேறாகும். அது பொது மக்கள் அடையப்பெற்ற மிகப் பெரும் வெற்றியுமாகும்.

நிருவாகக் குழு முறைமை

டொனமூர் சீர்திருத்தங்களுக்கு முன்னர் சட்டவாக்க, சட்ட நிருவாகத் துறையினருக்கு இடையேயான தொடர்பு குறைவாகக் காணப்பட்டது. ஆயினும் இவ்வரசியல் யாப்பின் மூலம் இவ்விரு துறைகளினதும் செயற்பாட்டு அதிகாரம் சட்ட நிருவாகக் கழகத்திற்குக் கிட்டியது. தேர்தல் ஒன்றின் பின்னர் அரசுக் கழக அங்கத்தவர்கள் ஏழு நிருவாகக் குழுக்களாகப் பிரிந்தனர். அந்நிருவாகக் குழுக்கள் ஒவ்வொன்றிடமும் கையளிக்கப்பட்ட துறைகள் வருமாறு,

உள்நாட்டு அலுவல்கள்
விவசாயமும் காணியும்
உள்ளூராட்சி
சுகாதாரம்
கல்வி
போக்குவரத்தும் பொது வேலைகளும் 
தொழில், கைத்தொழில், வர்த்தகம்

ஒவ்வொரு நிருவாகக் குழுவின் தலைவரும் அந்தந்தத் துறைக்கான அமைச்சர் களாயினர். இதனால் டொனமூர் யாப்பின்படி ஏழு இலங்கையர் அமைச்சர்களா யினர். அதன் வாயிலாக இலங்கையரின் தேவைக்கேற்ப அந்தந்த அமைச்சைச் செயற் படுத்துவதற்கான அதிகாரம் கிடைக்கப்பெற்றது. அரசுக் கழகக் காலகட்டத்தில் சுதந்திரமான கல்வி முறை, விவசாயக் குடியேற்றத் திட்டங்கள் போன்ற பொதுமக்கள் சார்ந்த முக்கியமான பல விடயங்களைச் செயற்படுத்துவதற்கு அமைச்சரவைக்கு இயலுமாயிருந்தது.

ஆளுநரும் அரச அதிகாரிகளும்

இதற்கு முன்னர் செயற்பட்ட அரசியல் யாப்பு முறையுடன் ஒப்பிட்டால், டொனமூர் யாப்பின் கீழ் ஆளுநரின் அதிகாரம் பெருமளவிற்குக் குறைக்கப்பட்டிருந்தது.ஆளுநர் அரசுக்கழகத்துடனும் அமைச்சர்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டி யிருந்தது. ஆயினும் தேசிய பாதுகாப்பு, நிதி, சட்ட நடவடிக்கைகள் ஆகிய முக்கியமான துறைகள் அரச உத்தியோகத்தர்களின் அதிகாரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தமை டொனமூர் யாப்பின் குறைபாடாகக் கருதப்பட்டது.

1947 சோல்பரி யாப்பின் பின்னணி 

டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் இலங்கையருக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் ஆளுநரிடமும் அரச அதிகாரிகளிடமும் முக்கி யமான ஆட்சித் துறை அதிகாரங்கள் கையளிக்கப்பட்டிருந்தன. ஆகையால் 1931 இலிருந்து ஆளுநரின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தல், அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்த அமைச்சுகளை இலங்கை அமைச்சர்களிடம் கையளித்தல் எனும் விடயங்களுக்கான போராட்டம் ஆரம்பமானது. அதில் அரசுக் கழகமும் அமைச்சர்களும் கோரிக்கைகளை முன்வைப்பதில் முன்னின்று செயற்பட்டனர்.

சூரியமல் இயக்கம்

டொனமூர் அரசியல் யாப்பைச் சீர்திருத்தி நிர்வாக அதிகாரங்களை இலங்கையர் பெற்றுக் கொள்வதற்கு அரசுக் கழகம், அமைச்சரவை, இலங்கை தேசிய சங்கம் என்பவை மேற்கொண்ட போராட்டங்களுக்கு மேலதிகமாக இந்நாட்டு இடதுசாரிகளால் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற் கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 1935 இல் இலங்கை சமசமாஜக் கட்சியை அமைத்துக் கொண்ட கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டீ. சில்வா போன்ற இடதுசாரித் தலைவர்கள் சுதந்திரம் கோரி மேற்கொண்ட போராட்டங்களுக்குப் பிரசார முறையாக சூரியமல் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

சூரியமல் இயக்கம் பொப்பி மலர் மாற்றாக ஆரம்பிக்கப்பட்டது. முதலாம் இயக்கத்திற்கு உலக மகா யுத்தத்தில் அங்கவீனமுற்ற பிரித்தானிய இராணுவ வீரர் களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவி புரிவதற் காக பொப்பி மலர்களை விற்பனை செய்யும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நவம்பர் 11 ஆந் திகதியை உலக சமாதான தினமாகப் பிரகடனப்படுத்தி, ஒவ்வொரு வருடமும் அத்தினத்தில் பொப்பி மலர் விற்பனை இடம்பெற்று வந்தது. இதனோடு அத்தினத்தில் ஊர்வலம் கொண்டாட்டங்களை மேற்கொண்டு பிரித்தானியப் பேரரசிற்கு இலங்கையரின் ஆதரவைத் தெரிவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பொப்பி மலரை விற்பதன் மூலம் பெறப் படும் பணம் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1926 இல் இலங்கையில், பிரித்தானிய படையில் பணி புரிந்தோர் சங்கத்தால், பொப்பி மலர் விற்கப்பட்ட அதே தினத்தில் சூரியகாந்தி மலரை விற்கும் இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் இடதுசாரித் தலைவர்கள் இவ்வியக்கத்துடன் சம்பந்தப்படலாயினர்.

அத்தோடு சூரிய காந்தி மலர் விற்பனையின் மூலம் கிடைத்த பணம் இந்நாட்டு ஏழை மக்களின் நலன்களுக்காகச் செலவிடப்பட்டது. பொப்பி மலர் விற்கப்பட்ட பணம் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டபடியால், அம்மலரை வாங்குவது பிரித்தானியப் பேரரசுக்கு ஆதரவைத் தெரிவிப்பதாகும் என பிரசாரத்தை மேற்கொண்ட இடது சாரிகள், சூரியகாந்தி மலரை அணிந்து கொள்வது சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவை நல்குவதாகும் என்ற பிரசாரத்தை மேற்கொண்டனர். பொப்பி மலர் அடிமையின் சின்னம் என்றும் சூரியகாந்தி மலர் சுதந்திரத்தின் சின்னம் என்றும் மேற்கொண்ட பிரசா ரத்தின் மூலம் பிரித்தானியருடைய கொள்கைகளை விமர்சனத்திற்குள்ளாக்கினர். இதற் கமைய சூரியமல் இயக்கம், சுதந்திரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் பிரசார இயக்கமாக மாற்றமுற்றது.

அமைச்சரவையும் தேசிய சங்கமும்

1939 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் பெரும்போர் ஆரம்பமானபடியால், பிரித்தானிய அரசுக்கு இலங்கையரின் உதவி தேவைப்பட்டது. இதற்கு உதவுவதற்கு அமைச்சரவை முன்வந்தாலும் யுத்தம் முடிவுற்ற பின்னர் புதிய அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம் ஒன்றின் அவசியம் பற்றியும் கருத்துக்களை முன்வைத்தனர். யுத்தத்தின்போது இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விஷேட பாதுகாப்புச் சபை ஒன்று நிறுவப்பட்டது. அப்போதைய காணி விவசாய அமைச்சராக இருந்த டீ. எஸ். சேனாநாயக்க அச்சபையில் அங்கத்துவம் பெற்றிருந்தார். யுத்தம் இடம்பெற்ற கஷ்டமான காலகட்டத்தில் அமைச்சரவை பெற்றுக் கொடுத்த உதவிகளினால் திருப்தியுற்ற ஆளுநர் உட்பட்ட உயர் அதிகாரிகள், யுத்தம் முடிந்த பின்னர் இலங்கையரின் கோரிக்கைகள் நிறைவேறும் வண்ணம் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் ஒன்றை வழங்கும்படி பிரித்தானியாவுக்கு அறிவித்தனர்.

அதன் விளைவாக வரையறுக்கப்பட்ட விதத்தில் இலங்கையருக்குப் பொருத்தமான அரசியல் யாப்புத் திட்டம் ஒன்றை வரைவதற்கான அதிகாரம் அமைச்ச ரவைக்கு வழங்கப்பட்டது. 1944 இல் அமைச்சரவையால் வரையப்பட்ட திட்டத்திற்கு அமைவாக இந்நாட்டின் உள்நாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பூரணமான அதிகாரத்தை இலங்கையருக்கு வழங்கும் வண்ணம், பாராளுமன்ற ஆட்சி முறை ஒன்று பற்றிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை தேசிய சங்கம், 1942 இலிருந்து நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக் கொள்வதைத் தமது பிரதான நோக்கமாகக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. தேசிய சங்கம் இக்காலத்தில் அமைச்சரவையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வந்தது.

1947 சோல்பரி யாப்பு சீர்திருத்தத்தின் இயல்பு 

இலங்கையின் அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக ஆராய்ந்தறிந்து உரிய ஆலோசனைகளை முன்வைப்பதற்காக பிரித்தானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழு 1944 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இலங்கைக்கு வந்தது. 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அவர்களுடைய அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்படி நாட்டின் உள்நாட்டு விடயங்களில் முழுமையான அதிகாரத்தை இலங்கையருக்கு வழங்கும் அரசியல் யாப்பு ஒன்றை அவர்கள் முன்வைத்தனர். அவர்களின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட வெள்ளை அறிக்கை இந்நாட்டு அரசுக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் சோல்பரி அரசியல் யாப்புத் தொடர்பான அனுசரணை 1946 ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரித்தானியாவால் வெளியிடப்பட்டது. 

சோல்பரி யாப்பின்படி நடைபெற வேண்டிய முதலாவது பாராளுமன்றத் தேர்தலை 1947 ஆம் ஆண்டின் மத்தியில் நடத்துவதற்குத் தீர்மானித்திருந்தாலும் இலங்கைக்கு சுதந்திரம் வழங்குதல் தொடர்பாக அதுவரை பிரித்தானியா எவ்வித அறிவிப்பும் செய்திருக்கவில்லை. இதனால் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையருக்கு உள்ள உரிமை பற்றி டீ.எஸ். சேனாநாயக்க உட்பட இந்நாட்டுத் தலைவர்கள் பிரித்தானியாவுக்கு தத்துவார்த்த ரீதியிலான கருத்துக்களை முன்வைத்தனர். இதற்கமைவாக தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பதாக விசேட பிரகடனம் ஒன்றைக் குடியேற்ற நாடுகளின் செயலாளர் வெளியிட்டார். அதன்படி பொதுநலவாயத்திற்கு உட்பட்ட சுதந்திர நாடொன்றின் அந்தஸ்தை இலங்கைக்கு வழங்குவதாகப் பிரகடனப்படுத்தினார். இதற்கிடையில் டீ.எஸ். சேனாநாயக்க அவர்களால் ஐக்கிய தேசியக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் கட்சிகளின் நிலை வருமாறு,

ஐக்கிய தேசியக் கட்சி - 42 ஆசனங்கள்
இலங்கை சமசமாஜக் கட்சி - 10 ஆசனங்கள்
தமிழ் காங்கிரஸ் கட்சி - 07 ஆசனங்கள்
இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சி - 06 ஆசனங்கள்
போல்ஷவிக் - லெனினிஸ்ட் கட்சி - 05 ஆசனங்கள்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி - 03 ஆசனங்கள்
தொழிலாளர் கட்சி - 01 ஆசனங்கள்
சுயேச்சைகள் - 21 ஆசனங்கள்
மொத்தம் - 95 ஆசனங்கள்

இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றியமையால் சுயேச்சை அங்கத்தவர்கள் பலரினது ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்தது. 1946 ஆம் ஆண்டிலிருந்து இந்நாட்டின் உள்நாட்டு நிருவாக நடவடிக்கைகளை இலங்கையர்வசம் கையளிப்பதற்கு பிரித்தானிய அரசு விரும்பினாலும் வெளிநாட்டு விவகாரங்களைத் தொடர்ந்தும் பிரித்தானியாவின் கைவசம் வைத்திருப்பதற்கான ஏற்பாடு ஒன்று இருந்து வந்தது. தீவின் புவியியல் அமைவிடம், பாதுகாப்பு, யுத்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவமானபடியால் இந்நாட்டுடன் கொண்டிருந்த தொடர்புகளைப் பூரணமாகக் கைவிட்டுவிடப் பிரித்தானிய அரசு முன்வராமையே அதற்கான காரணமாகும். பிரித்தானியரின் இந்த எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்ட புதிய பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்க அவர்கள் 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரித்தானிய அரசாங்கத்துடன் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு தொடர்பான இரு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முன்வந்தார். 

பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமைவாக, தேவை ஏற்படும்போது கப்பல், விமானம் உட்பட ஏனைய படை நடவடிக்கைகளுக்கும் இலங்கையை உபயோகித்துக் கொள்வதற்கு இடமளிப்பதற்கு இணங்கினார். வெளிநாட்டு உறவு தொடர்பான ஒப்பந்தத்தின்படி சுதந்திர நாடு ஒன்றாக வெளிநாடுகளுடன் புதிதாக உறவுகளை மேற்கொள்வதற்கு பிரித்தானியாவின் உதவியை இந்நாட்டிற்கு வழங்குவதற்கு இலங்கை விரும்பியது. அதன்பின்னர் இந்நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய இலங்கையின் சுதந்திரப் பிரகடனம் 1947 ஆம் ஆண்டு டிசெம்பர் 19 ஆந் திகதி வெளியிடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆந் திகதி தொடக்கம் அவற்றின் விதிகள் செயற்படுத்தப்பட்டதோடு, இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. இதனடிப்படையில் இலங்கைக்கான சட்டங்களை இயற்றுவதற்கும் இந்நாட்டின் நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பிரித்தானிய அரசுக்கு இருந்த அதிகாரம் முற்றுப் பெற்று அவ்வதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்தது. 1948 ஆம் ஆண்டு பெப்பிரவரி 10 ஆந் திகதி புதிய பாராளுமன்றம் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டதோடு, பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்க அவர்களால் ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு, மீண்டும் சிங்கக் கொடி ஏற்றப்பட்டது. இதற்கமைய பெப்ரவரி 4 ஆந் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1947 சோல்பரி யாப்பு சீர்திருத்தம்

1931-1947 வரையான டொனமூர் அரசியல் யாப்பின் பின்னர், சோல்பரியின் அரசியல் யாப்பு செயற்படத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியல் யாப்புவரை அது செயற்பட்டது. சோல்பரி யாப்பின்படி அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆளுநர் நாயகம், பிரதமரும் அமைச்சரவையும்,பாராளுமன்றம்,நீதி என நான்கு துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆளுநர் நாயகம்

அதுவரை இருந்து வந்த ஆளுநர் பதவி அகற்றப்பட்டு, இங்கிலாந்தின் முடிக்குரிய பிரதிநிதியாக ஆளுநர் நாயகம் பதவி உருவாக்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பின் கீழும் பிரித்தானிய மகாராணியே தொடர்ந்தும் இலங்கையின் தலைவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டபடியால் அரசியின் இந்நாட்டு பிரதிநிதியாக ஆளுநர் நாயகம் செயற்பட்டார். ஆளுநர் நாயகம் பதவி முழுமையாக பெயரளவு நிறைவேற்றுத் துறைப் பதவியாக இருந்ததோடு, அவர் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது எப்போதும் போன்று பிரதமரின் ஆலோசனைப்படியே செயற்பட வேண்டியிருந்தது.

பாராளுமன்றம்

சோல்பரி யாப்பின்படி சட்டத்துறை தொடர்பாக பிரதிநிதிகள் சபை, செனட் சபை என்ற இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றம் உருவாக்கப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் 101 அங்கத்தவர்கள் இடம்பெற்றனர். அதில் 95 பேர் தேர்தல் தொகுதி அடிப்படையில் பொது மக்களினால் தெரிவு செய்யப்படுவதுடன் எஞ்சிய 6 பேரும் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத சிறுபான்மையோருக்காக, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர் நாயகத்தால் நியமிக்கப்பட்டோராவர். இச்சபையின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.

மூதவை (செனட்) எனப்பட்ட மேல் சபை அல்லது இரண்டாவது சபைக்கு 30 அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டனர். பிரதிநிதிகள் சபை மூலம் 15 பேர் நியமிக்கப் படுவதோடு, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர் நாயகத்தால் 15 பேரும் நியமனம் செய்யப்பட்டனர். இச்சபையின் பதவிக் காலம் 6 ஆண்டுகளாகும்.

பிரதமரின் தலைமையிலான அமைச்சரவை

பிரதமர் அமைச்சரவையின் தலைவராவார். பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை அங்கத்தவர்களின் ஆதரவைப் பெறும் ஒருவர் ஆளுநர் நாயகத்தால் பிரதமராக நியமிக்கப்படுவார். இவ்வரசியல் யாப்பின்படி நிறைவேற்று அதிகாரம் அமைச்ச ரவையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் பிரதமரின் ஆலோசனைப்படி ஆளுநர் நாயகத்தால் நியமனம் செய்யப்படுவர்.

பிரதமர், பாதுகாப்பு, வெளிநாட்டு விவகார அமைச்சுககளின் பொறுப்புக்களை வகிப்பார். நீதி அமைச்சரும் மேலும் இன்னொரு அமைச்சரும் மேல் சபையில் இருந்து நியமனம் செய்யப்படுவர். இங்கிலாந்தின் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாக அமைச்சரவைக் கூட்டாகப் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியிருந்தது.

நீதிச் செயற்பாடுகள்

சோல்பரி அரசியல் யாப்பின்படி உயர் நீதிமன்றம் உட்பட நீதிமன்றத் தொகுதி ஒன்றால் நீதித்துறையின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆளுநர் நாயகத்தால் பிரதம நீதிபதியும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர். பிரதம நீதிபதியின் தலைமையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நீதிமன்றங்களுடன் தொடர்பான நீதிபதிகளின் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில் அரசியல் கட்சி முறைமை 

அரசியல் கட்சி முறை என்பது பாராளுமன்ற ஜனநாயகம் நிலவும் எல்லா நாடுகளிலும் காணப்படுகின்ற கட்டாயமான ஒரு பண்பாகும். பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆரம்ப காலத்தில் இரு கட்சிகள் மட்டுமே காணப்பட்டன. அவை இரு கட்சி முறை ஆட்சி எனப்பட்டன. பிரான்ஸ், ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா, இலங்கைப் போன்ற ஆசிய நாடுகளிலும் பல அரசியல் கட்சி கள் காணப்படுகின்றன. அவை பல கட்சி முறை ஆட்சி எனப்பட்டன.

அரசியல் கட்சி முறையால் அவ்வவ் கட்சிகளின் கொள்கை அடிப்படையில் மக்களை ஒன்றுதிரட்டுவது, கட்சியின் கொள்கைகளை மக்கள் முன்கொண்டு செல்வது என்பன இலகுவாயுள்ளன. அத்தோடு பாராளுமன்ற ஜனநாயகம் மக்கள் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் ஆட்சி முறையானபடியால், அரசியல்வாதிகளுக்கும் பொதுமக் களுக்குமிடையிலான உறவைக் கட்டியெழுப்புவதற்கும் அரசியல் கட்சி முறைமை அவசியப்படுகிறது. இலங்கையில் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டது பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலேயாகும். 1931 ஆம் ஆண்டில் இந்நாட்டிற்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த போதிலும் 1947 ஆம் ஆண்டு வரை பொதுத் தேர்தல்களில் கட்சி முறைமைக் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்நாட்டில் முதன்முறையாகக் கட்சி முறைமை பிரயோகிக்கப்பட்டது 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போதேயாகும். அத்தேர்தலில் இலங்கை சமசமாஜக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி என்னும் பல கட்சிகள் போட்டியிட்டன.

இலங்கை சமசமாஜக் கட்சி

இலங்கை சமசமாஜக் கட்சி இந்நாட்டின் பழைய அரசியல் கட்சியாகும். பிரித்தானியரின் ஆட்சியின்போது கல்வி கற்பதற்காக வெளிநாடு சென்றிருந்த கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டீ சில்வா, திரு பிலிப் குணவர்தன போன்ற தலைவர்கள் வெளிநாடுகளில் நிலவிய இடதுசாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டு அம்முறையை இந்நாட்டில் செயற்படுத்துவதற்காக 1935 ஆம் ஆண்டு இலங்கை சமசமாஜக் கட்சியை உருவாக்கிக் கொண்டனர். பின்னர் அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியினரால் வைத்தியர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 1943 ஆம் ஆண்டில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி

1946 ஆம் ஆண்டளவில் இடதுசாரி, சிறுபான்மை இனக் கட்சிகள் சிற்சிலவும் தொடங்கப்பட்டிருந்தாலும் இந்நாட்டு நடுநிலை அரசியல்வாதிகளுக்கு என்று ஓர் அரசியல் கட்சி உருவாகி இருக்கவில்லை. 1947 ஆம் ஆண்டில் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற இருந்தமையால் டீ.எஸ். சேனாநாயக்க அவர்களின் தலைமையில் 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அப்போதிருந்த இலங்கை தேசிய சங்கம், எஸ். டபிள்யூ. ஆர். டீ.பண்டாரநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த சிங்கள மகா சபை அங்கத்தவர்கள் பலரும் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து கொண்டனர். ஆகையால் அக்கட்சி ஆரம்பத்திலிருந்தே பலம் வாய்ந்த ஓரணியாகத் திகழ்ந்தது. 1947 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 95 வேட்பாளர்களை நிறுத்தி, 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின்னர் 1952 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 54 தொகுதிகளில் வென்று ஆட்சியை அமைத்துக் கொள்ளும் பலம் அக்கட்சிக்குக் கிடைத்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

எஸ். டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி,1951ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவினார். ஐக்கிய தேசியக் கட்சியை விட அதிகமாக சாதாரண மக்களின் தேவைகள் தொடர்பாகக் கவனஞ் செலுத்திய அக்கட்சி, சுயமொழி அறிஞர்கள், புத்த பிக்குகள், தேசியவாதிகள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றிருந்தது. 1951ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பங்கேற்று 9 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அக்கட்சி இன்னும் பல அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்துக் கொண்டு மக்கள் ஐக்கிய முன்னணி என்ற பெயருடன் 1956 பொதுத் தேர்தலில் பங்கு பற்றி 51 தொகுதிகளில் வென்று அரசாங்கம் ஒன்றை அமைத்தது. அதற்கமைய 1956 இலிருந்து 1959 வரை பண்டாரநாயக்க அவர்கள் இந்நாட்டின் பிரதமராகச் செயற்பட்டார். 1959 ஆம் ஆண்டில் அவர் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் அவரது மனைவியான திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவர் உலகின் முதலாவது பெண் பிரதமர் ஆவார்.

ஏனைய அரசியல் கட்சிகள்

முழு நாட்டிலும் வேட்பாளர்களை நிறுத்தக்கூடியதாயிருந்த ஐக்கிய தேசிய கட்சி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளைத் தவிர சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இன்னும் பல சிறிய கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. ஏ.ஈ.குணசிங்க அவர்களால் அமைத்துக் கொள்ளப்பட்ட தொழிலாளர் கட்சி,ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் தமிழ் காங்கிரஸ் கட்சி என்பன அதில் குறிப்பிடத்தக்கவையாகும். இந்நாட்டுத் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகத் தீவிர கவனஞ் செலுத்திய அக்கட்சி 1947 பொதுத் தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1949 ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் சமஷ்டிக் கட்சியை ஆரம்பித்ததுடன், தமிழ் காங்கிரஸ் கட் சிக்கு கிடைத்து வந்த மக்களின் ஆதரவு குறைவடைந்தது.

இலங்கையில் காணப்பட்ட அரசியல் கட்சி முறையின்படி ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற இரண்டிற்கும் மேலதிகமாக மேலும் சிறிய கட்சி கள் பலவும் காணப்பட்டமையால் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஒரு கட்சிக்கும் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்கள் காணப் பட்டன. ஆகையால் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணிகளை அமைத்துக் கொண்டு கூட்டரசாங்கங்கள் உருவாவது பொதுவாகக் காணப்படுகின்றது.

1956 பொதுத் தேர்தலும் சமூக மாற்றமும்

சுதந்திரத்தின் பின்னர் நீண்ட காலம் பதவியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியைத் தோல்வியுறச் செய்து 1956 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டீ பண்டார நாயக்க அவர்கள் தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று பதவிக்கு வந்தது. புதிய சக்திகள் பல ஒன்று சேர்ந்து பண்டார நாயக்கவின் தலைமையில் அணிதிரண்டமையாலும் சுதேச மொழி, கலாசாரத்தை மதிக்கும் கொள்கையைக் கடைப்பிடித்தமையாலும் அதுவரை தீர்க்கப்படாதிருந்த சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றிற்கும் தீர்வு வழங்க முயற்சித்தமையாலும் அவ்வரசாங்கத்தின் கீழ் சமூக மாற்றம் ஒன்று ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது.

1947 ஆம் ஆண்டு தேர்தலின் மூலம் பதவிக்கு வந்த டீ.எஸ்.சேனாநாயக்க அவர்கள், 1952ஆம் ஆண்டு மார்ச் மாதம் அகால மரணமடைந்தபடியால், அவருடைய மகன் டட்லி சேனாநாயக்க அவர்கள் பிரதமர் பதவிக்கு நியமனம் பெற்றார். 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் ஒருமுறை ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் கூடிய தொகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டபடியால் திரும்பவும் ஒருமுறை அவர் பிரதமராக நியமனம் பெற்றார். எனினும் அரிசி மற்றும் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்தமையால் 1953 ஆகஸ்ட் மாதத்தில் இடதுசாரிக் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் செயற்பாட்டினால் டட்லி சேனாநாயக்க அவர்கள் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். இச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக்
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜோன் கொத்தலாவல அவர்கள் பிரதமர் பதவிக்கு நியமனம் பெற்றார். அடுத்த பொதுத் தேர்தல் 1957 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெறவிருந்த வேளையில் அவரின் ஆலோசனைப்படி ஆளுநர் நாயகத்தால் 1956 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால் தேர்தல் ஒன்று இடம்பெறும் நிலை உருவானது.

1956 - பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ இன்னும் பல கட்சிகளை ஒன்று சேர்த்துக் கொண்டு பொதுஜன ஐக்கிய முன்னணியாகப் போட்டியிட்டது. இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிலிப் குணவர்தன அவர்கள் தலைமை தாங்கிய புரட்சிகர சமசமாஜக் கட்சி விஜயானந்த தஹநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பாஷா பெரமுண, ஐ.எம். ஆர்.ஏ. ஈரியகொல்ல அவர்களும் இன்னும் சுயேட்சை வேட்பாளர்களும் ஒன்று சேர்ந்து மக்கள் ஐக்கிய முன்னணியை ஆரம்பித்திருந்தனர். மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கை சமசமாஜக் கட்சியுடன் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்தமை அவ்விரு கட்சிகளுக்கும் நன்மை தருவதாயிருந்தது.

1956 தேர்தல் மேடைகளில் பிரதான தொனிப் பொருளாக இருந்தது. சிங்களத்தை அரசாங்க மொழியாக மாற்றுதல் தொடர்பானதாகும். சுதந்திரத்திற்குப் பின்னரும் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தமையால், தாய்மொழியை மட்டும் கற்றவர்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர். ஆகையால் மக்கள் ஐக்கிய முன்னணியைச் சூழ உருவான சக்திகள் தேர்தலுக்கு முன்பிருந்தே சிங்களம் அரசகரும மொழியாக வேண்டும் என்று கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தல் நெருங்கியபோது அக்கொள்கைக்கு இணங்கியது.

தேர்தலின்போது பிக்குகள், சுதேச வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலா ளர்கள் ஆகிய ஐம்பெரும் சக்திகளின் ஆதரவு மக்கள் ஐக்கிய முன்னணிக்குக் கிடைக்கப் பெற்றமையும் பல கட்சிகள் ஒன்று கூடி முன்னணி ஒன்றாகப் போட்டியிட்டமையும் இடதுசாரிக் கட்சிகளுடன் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தமையும் மக்கள் ஐக்கிய முன்னணி இலகுவாக வெற்றி பெறுவதற்கான காரணிகளாக அமைந்தன. மேலே கூறப்பட்டவாறு அம்முன்னணி 51 ஆசனங்கள் இலங்கை சமசமாஜக் கட்சி 14 ஆசனங்கள் வெற்றியீட்டின. இத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியால் 08 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமாயிருந்தது. சமஷ்டிக் கட்சி 10 ஆசனங்கள் வெற்றி பெற்றது.

மக்கள் ஐக்கிய முன்னணியின் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.டபிள்யூ.ஆர்.டீ பண்டார நாயக்க அவர்கள் பிரதமரானார். அவர் பிரதமர் பதவி வகித்த இக்காலம் இந்நாட்டு வரலாற்றிலேயே பெருமாற்றங்கள் இடம்பெற்ற ஒரு காலகட்டமாகும். அக்காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள், மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் என்பனவற்றில் முக்கியமானவை சில வருமாறு,

சிங்களத்தை அரச கரும மொழியாக்கியமை

பிரித்தானியாவுடன் 1947ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு, வெளிநாட்டு விவகார ஒப்பந்தத்தை இரத்துச் செய்தமை.

வல்லரசுகளின் அணிகளிலிருந்து விலகி நடுநிலைமையான வெளிநாட்டுக் கொள்கையொன்றைக் கைக்கொண்டமை.

தேசியமயப்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக துறைமுகம், போக்குவரத்துப் பேருந்துகள் என்பவை அரசுடைமையாக்கப்பட்டமை. 

தேசிய விவசாயத்தையும் கைத்தொழிலையும் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டமை.

உயர் கல்வித் துறையின் விருத்திக்காக வித்தியோதய, வித்தியாலங்கார பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்களாகத் தரமுயர்த்தப்பட்டமை.

பண்டாரநாயக்க அவர்கள் செயற்படுத்திய தேர்தல் இயக்கத்தால் இந்நாட்டுச் சாதாரண குடிமக்களில் இருந்து தோன்றிய தலைவர்கள் பலருக்குத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதே போன்று அவருடைய ஆட்சிக் காலத்தில் தேசிய பண்புகளை மதித்து நடைமுறைப்படுத்தியமையும் அதுவரை தீர்க்கப்படாது இருந்த பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனஞ் செலுத்தப்பட்டமையும் அவ்வரசாங்கத்தின் காலத்தில் சமூக மாற்றமொன்று நிகழ்ந்தமையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

நன்றி 

Post a Comment

0 Comments