1848 சுதந்திரப் போராட்டம் - 1848 FREEDOM STRUGGLE

 

1848 சுதந்திரப் போராட்டம்


1848 சுதந்திரப் போராட்டம் - 1848 FREEDOM STRUGGLE

1818 போராட்டம் தோல்வியடைந்து 30 வருடங்களின் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் ஆரம்பமானது. கண்டியருக்குப் பழக்கமான பழைய மன்னராட்சியை மீளவும் உருவாக்கிக் கொள்வதற்காக இரண்டாவது முறையாகவும் முயற்சித்த இவ்வாயுதப் போராட்டம், ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்றும் குறிப்பிடலாம். 1848 இல் ஏற்பட்ட இப்போராட்டம் ஆரம்பமாவதற்குப் பல காரணிகள் பங்களிப்புச் செய்துள்ளன.

1848 சுதந்திரப் போராட்டத்திற்கான காரணங்கள்

அரசின் நிலக் கொள்கை

1833 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்த கோல்புறூக்கின் சீர்திருத்தங்களுக்கு அமைவாக அரசின் நிலங்களை விற்கும் கொள்கை செயற்படுத்தப்பட்டது. கோப்பிச் செய்கைக்குத் தேவையான வளமான நிலமும் அதற்கான சூழலும் கண்டியில் காணப் பட்டது எனினும், அரசின் நிலக் கொள்கையால் அப்பிரதேச பொதுமக்கள் அவல நிலைக்குள்ளாயினர். 1840 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட தரிசு நிலச் சட்டத்திற்கு ஏற்றவாறு 30 வருடங்கள் தொடர்ச்சியாக அனுபவித்தமைக்கான ஏற்றுக் கொள்ள கூடிய சான்றுகளை சமர்ப்பிக்க முடியாத, பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாத நிலம் அரசுடைமையாக்கப்பட்டது. கண்டி மக்கள் பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்த பெரும்பாலான நிலங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு சட்ட ரீதியான ஆவணங்கள் அவர்களிடம் காணப்படவில்லை.

இதனால் அவர்களுடைய சேனை நிலங்கள் அதிகளவில் அரசுடைமையாயின. அர சின் இந்நிலங்கள் மிகவும் குறைந்த விலைக்கு வெளிநாட்டவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டன. இவ்வாறு தமது காணிகள் பறிக்கப்பட்டமையாலும் விவசாய நடவடிக்கைகள் தடைப்பட்டுப் போனதாலும் பொது மக்கள் அரசு தொடர்பாக அவ நம்பிக்கையுற்றனர்.

கிராம சபைகள் செயலற்றுப் போனமை.

கோல்புறூக் சீர்திருத்தத்தினால் கட்டாய அரச சேவை ஒழிக்கப்பட்டது. கிராம சபைகளின் செயற்பாடுகளுக்கு இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. அவ்வப் பிரதேச குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை அமைப்பதும் பராமரிப்பதும் பெரும்பாலும் கிராம சபைகளாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. கிராம சபைகளுக்கு உழைப்பைப் பெற்றுக் கொள்ளும் பிரதான வழிமுறையாக அமைந்தது கரும் முறையாகும். என்றாலும் அரச உழைப்பு முறை அரச ஒழிக்கப்பட்டமையால் கிராம சபைகளுக்கு உழைப்பைப் பெற்றுக் கொள்வது சிரமமாக இருந்தது. கிராமியப் பிரதேசங்களில் சிறிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதும் இதன் முக்கியமானதொரு சேவையாகும். என்றாலும் 1833 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தால் கிராம சபைகளிடம் இருந்த நீதித்துறை அதிகாரம் இல்லாமல் ஆக்கப்பட்டது. இவ்வாறான காரணிகளினால் கிராமிய மக்கள் துன்பத்திற்கு ஆளாகினர்.

புதிய நீதிமன்ற முறை

கமரனின் நீதிமன்ற சீர்திருத்தங்களுக்கு அமைய கிராமிய மக்களின் சிறு பிரச்சி னைகளுக்குக் கூட நீதி மன்றங்களை நாடிச் செல்லவேண்டி இருந்தது. இதற்கு முன்னர் இவ்வாறான பிரச்சினைகளை கிராம மட்டத்தில் தீர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் இருந்து வந்தன. புதிய நீதி மன்றங்களில் பயன்படுத்தப்பட்ட ஆங்கில மொழி அறிவோ, சட்டதிட்டங்கள் தொடர்பான அறிவோ கிராம மக்களிடம் காணப் படவில்லை. இந் நீதிமன்றங்களிடம் உதவி பெறச் சென்றபோது வழக்கறிஞர் களுக்கான கொடுப்பனவுகளுக்கும், முத்திரைக் கட்டணங்களுக்கும் பணம் செலவிட வேண்டியிருந்ததாலும், பல நாட்களைச் செலவிட வேண்டி இருந்தமையாலும் கிராமிய மக்கள் இடர்பாடுகளை எதிர்நோக்கினர். இதனால் அவர்களது சேனைச் செய்கைகளும் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்புற்றது.

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பு விலகிச் சென்றமை.

கோல்புறூக்கின் சிபாரிசுகளுக்கு அமைய சிவில் சேவையாளர்களின் தொகையைக் குறைத்தமையும் அவர்களுக்குப் பெருந்தோட்டச் செய்கையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டமையும் பிரதேசங்களின் நிருவாக சேவை செயற்றிறன் அற்றுப் போனதற்கான காரணங்களாக அமைந்தன. இதற்கமைய நிருவாக உத்தியோகத்தர் களின் நிருவாகப் பிரதேசம் முன்பை விட விரிவடைந்ததால் அவர்களுடைய மேற்பார்வை செயற்பாடுகளை முறையாகச் செய்வது சிரமமாய் இருந்தது. சில அதிகாரிகள் பெருந்தோட்ட நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்தியமையால் மக்களின் தேவை தொடர்பாகப் போதிய காலத்தைச் செலவிட அவர்களால் இயலவில்லை. இவ்வாறான காரணங்களினால் பொது மக்களினது பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முறையாக அறிக்கைப்படுத்தப்படாததினால் அரசுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் தடைப்பட்டுப் போவதற்கும் அது காரணமாகியது.

அரசின் புதிய வரிக் கொள்கை

இலங்கையில் ஆங்கிலேய ஆளுநரான டொரிங்டனினால் 1848 ஆம் ஆண்டில் புதிய பல வரிகள் விதிக்கப்பட்டமை போராட்டத்திற்கு உடனடிக் காரணியாய் அமைந்தது. இக்கால கட்டத்தில் கோப்பியின் விலை வீழ்ச்சியால் அரசின் வருமானம் குறைந்து செல்லவே, அதனைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு பொதுமக்களிடம் இருந்து வசூலித்துக் கொள்வதற்காக ஆளுநரால் வரிச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முத்திரை வரி, வண்டி வரி, படகு வரி, கடை வரி, துப்பாக்கி வரி, ஆள் வரி, நாய்வரி என பல வரிகள் விதிக்கப்பட்டன. இவ்வரி வகைகள் அனைத்திற்கும் பொதுமக்களின் எதிர்ப்பு இருந்து வந்ததோடு துப்பாக்கி, நாய், ஆள் வரிகளுக்குக் கடும் எதிர்ப்பு உருவாகியது.

கிராமிய மக்கள் துப்பாக்கியைப் பாவித்தது தமது பயிர்ச் செய்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகும். புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட துப்பாக்கி வரியாக வருடத்திற்கு இரண்டரை சிலிங் கொடுக்க வேண்டி இருந்தது. இதற்காக மக்கள் அரச அலுவலகங்களுக்குச் செல்லவேண்டி நேர்ந்ததுடன் அதற்காகச் காலச் செலவும் ஆங்கிலேய மொழியிலான படிவங்களை நிரப்புவதற்கும் மேலதிக செலவும் ஏற்பட்டது. துப்பாக்கிக்காகச் செலவிடப்பட்ட பணம், அதன் பெறுமதியை விடவும் கூடியதாக சில சந்தர்ப்பங்களில் காணப்பட்டன. இதனால் துப்பாக்கி வரிக்கு எதிராகக் கடும் எதிர்ப்புக் காணப்பட்டது.

வயதுவந்த ஆண்கள் அனைவரும் வருடத்தில் 6 நாட்கள் பாதைகள் அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் 3 சிலிங் ஆள் வரியாகச் செலுத்த வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது. இதற்கும் பொதுமக்களின் எதிர்ப்புக்காணப்பட்டது. நாய்களுக்கும் வரி செலுத்த வேண்டி இருந்தது. இது மிகவும் பொருத்தப்பாடற்ற வரியாகக் காணப்பட்டமையால் இதன் மீதும் பொதுமக்களின் எதிர்ப்புக் காணப்பட்டது.

இவ்வாறான வரிகள் பலவும் விதிக்கப்பட்ட சூழ்நிலையில் அரசாங்கம், நீலப் புத்தகத்திற்கான தகவல்களைப் பெற குடிமக்கள் தொடர்பான புள்ளி விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தது. இது இன்னுமொரு புதிய வரிக்கான எத்தனம் என்று பொது மக்கள் சந்தேகப்பட ஆரம்பித்தனர்.

1848 சுதந்திரப் போராட்டத்தின் இயல்பு

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக பொதுமக்கள் ஒன்றுபட்டதுடன், அரசுக்கும் மக்களுக்கும் இடையே மோதல்கள் ஆரம்பமாகின. கொழும்பு, காலி, கண்டி, பதுளை போன்ற நகர்களில் இம்மக்கள் ஒன்றுகூடியதுடன். ஆங்கில அரசின் சிவில் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் எதிர்ப்பு வலுத்தது. பதுளையில் திரண்ட விவசாயிகளில் சிலர், துப்பாக்கி வரிக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக அரச அதிபரின் முன்பாகவே தமது துப்பாக்கிகளை நிலத்தில் அடித்து உடைத்தெறிந்தனர். 4000 பேரளவில் கண்டி கச்சேரிக்கு அண்மையில் கூடி வரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் நடாத்துவதற்கு ஆயத்தமாயினர். பொலிசாருக்கு இவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாயிருக்கவே இராணுவத்தை அழைக்க நேர்ந்தது. கொழும்பு, கண்டிப் பிரதேசங்களில் உருவான எதிர்ப்பு மாத்தளை, தம்புளை, குருணாகலை, வாரியபொல போன்ற பிரதேசங்களுக்கும் பரவியது.

மாத்தளை, குருநாகல், வாரியபொல போன்ற பிரதேச மக்கள் ஆயுதங்களைக் கைகளில் ஏந்தி ஒன்றுபட்டு அரச கட்டடங்களையும் நீதிமன்றங்களையும் தாக்குவதற்குத் தொடங்கினர். அரசின் வரிக் கொள்கையினால் சாதாரண மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தமையால் அவர்களில் இருந்து தோன்றிய கொங்காலேகொட பண்டா, வீரபுரன் அப்பு, டிங்கிரால, தீனிஸ் போன்ற தலைவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வந்தனர். போராளிகளில் சிலர் தம்புள்ளை விகாரையில் ஒன்று சேர்ந்து அதன் தலைமைப் பிக்குவின் உதவியுடன் கொங்காலேகொட பண்டாவை அரசனாக்கிக் கொண்டனர்.

1848 ஆம் ஆண்டு போராட்டத்தின் பிரதான மத்திய நிலையமாக மாத்தளைப் பிரதேசம் திகழ்ந்தது. அதனுடன் கண்டி, குருணாகலை மாவட்டங்களில் சில பிரதே சங்களிலும் போராட்டம் பரவியது. என்றாலும் 1818 ஆம் ஆண்டு போராட்டத்தை அடக்கி, அனுபவம் பெற்றிருந்த ஆங்கிலேயர் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆளுநர் டொரிங்டனால் இராணு வத்தைப் பிரயோகித்து, போராட்டக்காரர்களை ஒன்று சேராது தடுத்து மேற்கொண்ட நடவடிக்கையால் கலவரம் தோல்வியுற்றது. இதனால் போராட்டம் ஆரம்பித்து இரு மாதங்களுக்கிடையில் அதன் தலைவர்கள் பலரையும் கைதுசெய்யக்கூடிய தாயிருந்தது. அவ்வாறு கைதான வீர புரன் அப்புவிற்கு மரண தண்டனை விதிக் கப்பட்டதோடு அவர் அதனை வீரத்துடன் எதிர்கொண்டார். போராட்டத்தில் ஈடுபட்ட ஏனையோருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதற்கிடையில் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டிருந்த கடஹப் பொல தேரரிற்கு எதிரான வழக்குப் போதியளவு விசாரிக்கப்படாமலேயே மறுநாள் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்காக அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி கொண்டனர். கொங்காலேகொட பண்டாவுக்கு எதிராக வழக்கை விசாரித்து கசையடி யுடன் அவரை நாடுகடத்தும் தண்டனை வழங்கப்பட்டது.

1848 ஆம் ஆண்டு போராட்டத்தின் தோல்வி


1818 ஆம் ஆண்டு போராட்டம் போன்றே முறையாக ஒழுங்குபடுத்தப்படாமை இப்போராட்டத்தின் தோல்விக்கான முக்கிய காரணமாகும். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெருந் தொகையினர் சாதாரண பொதுமக்களாகக் காணப்பட்டதோடு, தேவையான படைப் பயிற்சியோ ஆயுதங்களோ அவர்களிடம் காணப்படவில்லை. இப்போது மலைநாட்டு வீதிகள் தொடர்பாக ஆங்கிலேயருக்குப் போதிய அறிவு இருந்தது. அவர்களுடைய படைப் பலம், ஆயுதம் கையாளும் முறைகளுக்கு எதிராகப் போராட மக்களால் முடியவில்லை. இப்போராட்டம் மலைநாட்டின் சில பிரதேசங்களுக்கு மட்டும் எல்லைப்படுத்தப்பட்டிருந்தமையால் இலகுவாக அடக்கிவிடுவதற்கு ஆங்கிலேயரால் முடிந்ததது.

1848 போராட்டம் நடக்கும்போது ஆளுநராகக் கடமையாற்றிய டொரிங்டனின் செயற்பாடு தொடர்பான பலத்த விமர்சனம் எழுந்தமையால், இந்நாட்டின் நிலைமையை அறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகப் பிரித்தானிய அரசு ஓர் ஆணைக்குழுவை நியமித்தது. அதற்கமைய ஆளுநர் டொரிங்டன் பிரித்தானியாவுக்குத் திருப்பி அழைக்கப்பட்டார். பொது மக்களின் கடும் எதிர்ப்புக்குள்ளான வரிகள் நீக்கப்பட்டன. இதற்கமைய கடைகள் மீதான வரியும் நாய் வரியும் முழுமையாக நீக்கப்பட்டது. ஏனைய வரிகளை மீள் பரிசீலனை செய்து, அவற்றில் பாதகமான அம் சங்களை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. புத்த சமயம் தொடர்பாக அதுவரை அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பாக மக்களிடையே காணப்பட்ட மனக் குறையை விளங்கிக் கொண்டு அதற்குச் தீர்வினைக் காண்பதற்கு அரசாங்கம் முன்வந்தது. இந்நாட்டு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 1850ஆம் ஆண்டுக்கு முன்னர் முக்கிய கவனம் செலுத்தப்படாதிருந்தாலும் பின்னர் அக்கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.

நன்றி 

Post a Comment

0 Comments