பிரித்தானியர் ஆட்சியின் கீழ்
இலங்கையின் பொருளாதார மாற்றங்கள்
பிரித்தானியர் இலங்கையைத் தமது குடியேற்ற நாடாக மாற்றியபோது மரபு ரீதியான பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்ட சமூக முறைமை ஒன்று காணப்பட்டது.
அச்சமூக அமைப்பில் உயர்ந்த பிரபுத்துவ வகுப்பொன்று இருந்த போதிலும் அவர்கள் நாட்டு சனத்தொகையுடன் ஒப்பிடும்போது மிகவும் சொற்பமான தொகையினராகக் காணப்பட்டனர். இவர்கள் நாட்டின் நிருவாக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவரா யிருந்தனர். நாட்டின் பெருந்தொகையான மக்கள் சாதாரண குடிமக்களாகக் காணப் பட்டதுடன் அவர்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர்.
இந்நாட்டின் மக்கள் வாழ்க்கை கிராமத்தை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது. கிராம மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கிராமத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டமையால் அதனை சுயதேவை நிறைவு செய்யும் கிராமியப் பொருளாதாரம் என நாம் அறிமுகப்படுத்தலாம். பரஸ்பரம் உதவி புரியும் சமாதான சக வாழ்வு சமூகத்தில் நிலவியது. அக்கால சமூகத்தில் கூலிக்காக வேலை செய்யும் பண்பு காணப்படவில்லை. தமது விவசாய வேலைகளின்போது அயலவரின் ஒத்துழைப்பு பெறப்பட்டதுடன் அவர்களின் வேலைகளின்போதும் தமது உழைப்பை வழங்கும் உழைப்புப் பரிமாற்றம் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இது "அத்தம்' முறை எனப்பட்டது. எனவே சமூகத்தில் பணப்புழக்கம் மிகக் குறைவாகவே காணப்பட்டது.
கிராம மக்களின் சிறிய பிரச்சினைகளும் வழக்குகளும் கிராம சபைகளால் விசாரிக் கப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டன. கிராமத்தின் குளங்கள், கால்வாய்கள் பராமரிப்பு மற்றும் வீதிகள், விகாரைகள் அமைத்தல் முதலிய பொதுப்பணிகளில் கிராம சபைகள் முதலிடம் வகித்தன. மரபு ரீதியாகப் பின்பற்றப்பட்டு வந்த அரச முறை மூலம் கிராம சபை தேவையான உழைப்பைப் பெற்றுக் கொண்டது. கிராம சபைகள் வழக்குகளைத் தீர்க்கும் நீதிமன்றங்களாகவும் செயற்பட்டன.
1815ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசுக்குத் தேவையான உழைப்பு அரச சேவை முறை மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது. அக்கால கட்டத்தில் கட்டாய சேவை, நிலத்தை அனுபவிக்கும் அரச சேவை முறை என இரண்டு முறைகள் காணப்பட்டன.
இராஜகாரிய முறை
முற்காலத்தில் அரசர்களுக்கு சேவையாற்றிய அதிகாரிகளின் வாழ்வாதாரத்திற்காக நிலங்கள் வழங்கப்பட்டிருந்தன. சேவாபரவேணி என அழைக்கப்பட்ட அம்மானிய நிலங்களில் விவசாயம் செய்தவர்கள் அரசனுக்குத் தேவையான சேவைகளும் வழங்கினர். அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்வதற்காக அவை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. இந்த நிலங்கள் பயிரிடுவதற்கான வரியாகத் தமது உழைப்பை வழங்குவது நிலத்தை அனுபவிப்பதற்கான இராஜகாரிய முறை எனப்பட்டது.
அரச சேவை முறை
நாட்டிலுள்ள வயது வந்த ஆண்கள் அனைவரும் ஆண்டில் குறிக்கப்பட்ட சில தினங்களில் எவ்வித கொடுப்பனவுகளுமின்றி அரசனுக்கு இலவசமாக சேவை வழங்க வேண்டியிருந்தது. கிராமப் பிரதானிகளால் கிராம சபைகளின் கீழ் இந்த அரச சேவைமுறை செயற்படுத்தப்பட்டது. பெரும்பாலும் கிராமத்தின் பொது வேலைகள் கட்டாய அரச சேவை முறை மூலமே நிறைவேற்றப்பட்டன.
கோல்புறூக் ஆணைக்குழுவின் பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள்
ஆங்கிலேயரின் ஆட்சியில் அரசின் வருமானத்தை விட நிருவாகச் செலவு அதிகரித்த மையே கோல்புறூக் ஆணைக்குழுவை அனுப்புவதற்கான காரணமாக அமைந்தது. இது பொருளாதாரத்துடன் தொடர்பான விடயமென்பதால் ஆங்கிலேயரின் நோக்கங் களுக்குப் பொருத்தமான முறையிலான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பலவற்றை கோல்புறூக் ஆணைக்குழு முன்வைத்துள்ளமை தெரிகின்றது. அக்காலப் பகுதியில் அரசு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்குப் பொருளாதார ரீதியாகப் பயன்தரக்கூடிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் அரசிடம் அதற்கான மூலதனம் இல்லாத காரணத்தால் தனியார் துறையினரை முதலீடுகளில் ஈடுபடுத்துவதற்கான ஊக்குவிப்பை இந்நாட்டில் ஏற்படுத்துவதே கோல்புறூக்கின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இலங்கையில் நிலவிய மரபு ரீதியான காணி உரிமைகள் தனியார் முயற்சியாண்மையின் வளர்ச்சிக்கான தடையாக இருந்தமையால் அரசு காணி விற்பனைக் கொள்கையை செயற்படுத்த வேண்டும் என்று கோல்புறூக் சிபாரிசு செய்தார். இதன் மூலம் உள்நாட்டினருக்கும் வெளிநாட்டினருக்கும் இலங்கையில் தமக்குத் தேவையான நிலத்தை விலை கொடுத்து வாங்குவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த நாட்டில் இருந்த சிவில் சேவை அதிகாரிகளுக்கு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோல்புறூக் சிபாரிசு செய்ததற்கிணங்க அரச நிலங்களை அவர்களும் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
அவ்வாறு நிலத்தை விலை கொடுத்து வாங்கிய முயற்சியாளர்களுக்கும் அந்நிலத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு உழைப்பு தேவைப்பட்டது. அதுவரை காலமும் அரசின் தேவைகளுக்கான உழைப்பு கட்டாய சேவையான அரச கரும முறை மூலம் எவ்வித கொடுப்பனவுகளும் இன்றியே பெற்றுக் கொள்ளப்பட்டது. இது தனியாள் சுதந் திரத்திற்கு தடையாக இருந்ததைப் போலவே தனியார் துறை முயற்சியாண்மைக்கும் பொருத்தமற்றது எனக் கோல்புறூக் கருதினார். இதற்கிணங்க கட்டாய அரச சேவை முறையை நீக்க வேண்டும் என கோல்புறூக் ஆலோசனை வழங்கினார். அதன்படி உழைப்பு என்பது பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மையைப் பெற்றதுடன் சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர் வகுப்பினர் உருவாகும் வாய்ப்பும் ஏற்பட்டது.
கோல்புறூக் இலங்கை வரும்போது நிலவிய பொருளாதார முறைக்கேற்ப கறுவா மற்றும் உப்பு வர்த்தகம் அரசின் ஏகபோக உரிமையாகக் காணப்பட்டன. இவ்வாறான அரச ஏகபோக உரிமை தனியார் துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. எனவே கறுவா, உப்பு வர்த்தகத்தின் அரச ஏகபோக உரிமையை நீக்கி தனியார் துறையினருக்கும் அவ்வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு இடமளிக்குமாறு கோல்புறூக் சிபார்சு செய்தார். அக்காலப் பகுதியில் அரசின் வருமான வழிகளாக இருந்த மீன் வரி, மதுவரி, காணிவரி என்பன நேர் வரிகளாக அறவிடப்பட்டன. அதாவது பிடிக்கப்படும் மீனின் ஒரு பகுதி வரியாக செலுத்தப்பட்டது. ஒவ்வொரு பிரதேசத்திலும் வரி அறவிடும் உரிமை ஏலத்தில் விற்கப்பட்டிருந்தது. ஏலத்தில் அவ்வுரிமையைப் பெற்றவர்கள் தமது வரியை மீனாகப் பெற்றுக் கொள்வதைக் கைவிட்டு மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதன் மூலம் நேரில் வரியை அறவிடுவதற்கும் கோல்புறூக் ஆலோசனை வழங்கினார். காணி வரியும் நேர் வரியாகவே அறவிடப்பட்டது. அதாவது வரி அறவிடும் உரிமையை ஏலத்தில் பெற்றவர்கள் அப்பிரதேசக் காணிகளில் விளைந்த பயிர்களின் ஒரு பகுதியை வரியாக அறவிட்டு வந்தனர். இம்முறையை நீக்கி விட்டு எல்லாக் காணிகளிலிருந்தும் சமவளவு வரியைப் பணமாக அறவிடுமாறு கோல்புறூக் சிபார்சு செய்தார்
நாட்டில் சேமிப்பு வங்கி ஒன்றை ஆரம்பிக்குமாறும் கோல்புறூக் சிபார்சு செய்தார். ஏனெனில் பெருந்தோட்டத் துறையில் முதலீடு செய்யும் முயற்சியாளர்கள் சாதாரண வட்டிக்கு கடனைப் பெற்றுக் கொள்வதே அதன் நோக்கமாகும்.
பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்தி
கோல்புறூக் ஆணைக்குழுவின் சிபார்சுகள் 1833 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்த ஆரம்பித்ததன் பின்னர் இந்நாட்டில் பாரிய பொருளாதார மாற்றம் ஒன்றிற்கான அடித்தளமிடப்பட்டது. தனியார் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் கோல்புறூக்கின் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் நோக்கமாக இருந்த போதிலும் இலங்கையில் பணம் படைத்த முதலீட்டாளர்கள் காணப்படவில்லை. எனினும் வெளிநாட்டு முதலீட் டாளர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கொள்வனவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருந்தனர். இதனைக் கோல்புறூக் அறிந்து வைத்திருந்தார்.
இலங்கை வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏற்றுமதி மூலம் அதிக இலாபம் ஈட்டக்கூடிய வர்த்தக விவசாயப் பயிர்ச்செய்கையிலேயே முதலீடுகளை மேற்கொண்ட னர். எனவே 19ஆம் நூற்றாண்டில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை துரித வளர்ச்சி கண்டது.
கோப்பிப் பயிர்ச் செய்கை
இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கரையோரப் பிரதேசத்தில் சிறியளவில் கோப்பிப் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அக்காலத்தில் கறுலாப் பயிர்ச் செய்கை முதலிடம் பெற்ற காரணத்தால் கோப்பிச் செய்கை வளர்ச்சியடையவில்லை.
1833 ஆம் ஆண்டு கோல்புறூக் சீர்திருத்தங்களின் பின்னர் வெளிநாட்டு முதலீட்டா ளர்கள் அதிகளவில் கோப்பித் தோட்டங்களில் முதலீடு செய்தமை.
ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றும்போது சில இடங்களில் வீட்டுத் தோட்டப் பயிராக கோப்பி காணப்பட்டது. ஆங்கிலேயராட்சிக் காலத்தில் அது பெருந்தோட்டப் பயிராக வளர்ச்சி அடைந்தது. 19 ஆம் நூற்றாண்டு கோப்பிச் செய்கையின் வளர்ச்சியில் பல காரணிகள் பங்களிப்புச் செய்துள்ளன.
கோப்பிச் செய்கையின் விருத்தியில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்
ஐரோப்பிய சந்தையில் கோப்பிக்கான கேள்வி அதிகரித்தமை.
கோப்பிச் செய்கை மூலம் அதிசு இலாபம் அடைய முடிந்தமை.
தென்னிந்திய ஊழியர்கள் மூலம் குறைந்த கூலிக்கு உழைப்பு பெற்றுக் கொள்ளப் பட்டமை.
ஆளுனர் எட்வர்ட் பான்ஸ் (1824-1831) காலத்தில் கோப்பிக்கான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டதும், கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் கட்டாய அரச சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் கோப்பிச் செய்கை விருத்திக்குக் காரணங்களாய் அமைந்தன.
1837-1847 காலப் பகுதியில் மலையகப் பிரதேசத்தில் கோப்பிச் செய்கை வேகமாக விருத்தியடைந்தது. இக்காலப்பகுதியில் கோப்பி மூலம் கிடைத்த அதிக இலாபம் காரணமாக அரசாங்க அதிகாரிகளின் கோப்பித் தோட்டங்கள் 500 அளவில் காணப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே தும்பறை, கம்பளை, பேராதனை மாத்தளை முதலிய மத்திய மாகாணப் பிரதேசங்களிலும் பதுளை மாவட்டத்திலும் வெற்றிகரமான முறையில் கோப்பிச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
1834 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட கோப்பியின் அளவை விட ஐந்து மடங்கு அதிகமாக 1844 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. 1844 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானியா பின்பற்றிய சுதந்திர வர்த்தகக் கொள்கை காரணமாக பிரித்தானிய சந்தையில் இலங்கைக் கோப்பி கடும் முகங்கொடுக்க நேரிட்டது. அதேபோல் 1848 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இலங்கையின் கோப்பிச் செய்கையைப் பாதித்தது. மேற்படி காரணங்களால் கோப்பிக் கான கேள்வி குறைவடைந்ததால் 1847ஆம் ஆண்டளவில் கோப்பித் தோட்டங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ஆயினும் 1850 களின் பின்னர் வெற்றிகரமான தோட்ட முகாமைத்துவம் காரணமாக உற்பத்திச் செலவு குறைந்தமையாலும் ஐரோப்பாவில் கோப்பிக்கான கேள்வி அதிகரித்ததாலும் கோப்பிச் செய்கை இயல்பு நிலையை அடைந்தது, ஆயினும் 1859 ஆம் ஆண்டில் கோப்பிப் பயிருக்கு ஏற்பட்ட ஹெமீலியா வெஸ்டாக்ஸ் (Hemilia Vestatrix) என்னும் இலை வெளிறல் நோய் வேகமாகப் பரவிய காரணத்தால் கோப்பிச் செய்கை முற்றாக வீழ்ச்சியடைந்தது.
சிங்கோனா பயிர் செய்கை
கோப்பிச் செய்கையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சில முயற்சியாளர்கள் சிங்கோனா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். ஆயினும் சிங்கோனா அதியுயர்ந்த பிரதேசங்களில் மட்டுமே வெற்றியளித்ததுடன் அது குவினைன் என்னும் மருந்திற்கான மூலிகைப் பயிராக விளங்கியமையால் அதற்கான கேள்வியும் குறைவானதாகவே காணப்பட்டது. எனவே கோப்பிக்கான மாற்றுப் பயிர் என்னும் வகையில் சிங்கோனா பயிர்ச் செய்கை வெற்றியளிக்கவில்லை.
கொக்கோ பயிர் செய்கை
கோப்பிச் செய்கையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கொக்கோ பயிர்ச் செய்கைக்கு அரச அனுசரணை கிடைத்தது. கொக்கோப் பயிருக்கு நிழல் தேவைப்பட்ட காரணத்தால் உற்பத்தியாளர் அதற்கு மேலதிகமாக செலவு செய்ய நேர்ந்தது. அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் மாத்திரமே கொக்கோ பயிர்ச் செய்கை வெற்றியளித்தது. இது மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்திலும் 12 000 ஏக்கர் பரப்பளவை அது தாண்டவில்லை. எனவே கோப்பிச் செய்கைக்கு பதிலீடாக கொக்கோ பயிரும் வெற்றியளிக்கவில்லை.
தேயிலைப் பயிர் செய்கை
கோப்பியின் விலை உலகச் சந்தையில் அடிக்கடி கூடிக் குறைந்தமையால் மலையகப் பிரதேசத்தில் பயிரிடுவதற்கு உகந்த வேறு பயிர்கள் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப் பட்டன. தேயிலையும் அவ்வாறு பரீட்சார்த்தமாகப் பயிரிடப்பட்டது. 1867ஆம் ஆண்டு பெருந்தோட்ட உற்பத்தியாளர் சங்கம், சிலரை அசாமிற்கு அனுப்பித் தேயிலை தொடர்பான மேலதிக விபரங்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்தது. இதற்கிடையில் ஜேம்ஸ் டெய்லர் என்பவர் லுல் கந்துர என்னும் இடத்தில் சில ஏக்கர் பரப்பில் தேயிலைச் செய்கையை மேற்கொண்டார். அதன் பயனாக 1875 ஆம் ஆண்டில் 500 எக்கர் பரப்பில் தேயிலைப் பயிர்ச் செய்கை வளர்ச்சியடைந்தது.
கோப்பிப் பயிர்ச் செய்கையின் வீழ்ச்சி காரணமாக அப்பயிர்ச் செய்கையாளர்கள் தேயிலையைப் பயிரிட்டமையால் அது விரைவாகப் பரவியது. 1894 ஆம் ஆண்டாகும்போது தேயிலை 400000 ஏக்கரில் பயிரிடப்பட்டமையைக் கொண்டு தேயிலைப் பயிச்செய்கை விருத்தியை நாம் புரிந்து கொள்ள முடியும். இலங்கையின் உலர் வலயம் தவிர்ந்த 6000 அடி வரை உயரமான எல்லாப் பகுதிகளிலும் தேயிலையைப் பயிரிட முடிந்தமையால் மத்திய, ஊவா, சபரகமுவ மாகாணங்களில் தேயிலைப் பயிர்ச் செய்கை பரவியது. பின்னர் தென் மாகாணத்திலும் மேல் மாகாணத்திலும் தேயிலை பயிரிடப்பட்டது. 1930 ஆம் ஆண்டாகும்போது மத்திய அளவினதும் பாரியளவினதுமான 1200 தேயிலைத் தோட்டங்கள் இலங்கையில் காணப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
தேயிலைப் பயிர்ச்செய்கையின் வளர்ச்சி காரணமாக அது இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பயிராக மாறியது. முதலாம் உலகப் போரின் பின்னர் பாரியளவில் தேயிலை உலகச் சந்தையில் நிரம்பல் செய்யப்பட்டது. 1929 உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தேயிலையின் விலை இடைக்கிடை குறைவடைந்த போதிலும் அது தற்காலிகமானதாக இருந்தது. பின்னர் மீண்டும் இயல்பு நிலையை அடைந்தது.
தேயிலைப் பயிர்ச்செய்கை, இலங்கையில் கிட்டத்தட்ட 200 ஆண்டு வரலாற்றைக் கொண்டது. 1824 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ காலப்பகுதியில், முதன் முதலாக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாக பல வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. ஆரம்ப காலத்தில் இவை பேராதனை தாவரவியல் பூங்காவில் கண்காட்சிக்காக வரவழைக்கப்பட்டதாகவும், 1839 ஆம் ஆண்டில் இந்தியாவின் அஸ்ஸாம் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வந்த தேயிலை வகை, எமது நாட்டில் விளையக்கூடியவையா என்ற பரிசோதனையின் நிமித்தம் பயிரிடப்பட்டதாகவும் பல சுவாரஸ்யமான பின்னணி கதைகள் உண்டு.
ஜேம்ஸ் டெய்லர் என்ற ஸ்கொட்லாந்து நாட்டவர், தேயிலைப் பயிர்ச்செய்கையை மற்றொரு பரிமாணத்திற்கு ஈட்டிச்சென்றார். அதுவரை சிறியளவில் மேற்கொள்ளப்பட்ட தேயிலைப் பயிர்ச்செய்கை, இவரது காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக உருவெடுத்து வணிகமயமானது. மேலும் இதனை விருத்தி செய்யும் நோக்கத்தில் 1866 ஆம் ஆண்டளவில் தேயிலை பயிர்ச்செய்கையின் நுட்பங்களை அறிந்துகொள்வதற்காக இந்தியா சென்று வந்த இவர், கண்டிக்கு அருகேயுள்ள ‘லூல்கந்துரை’ என்ற இடத்தில், 19 ஏக்கர் விசாலமான தேயிலைத்தோட்டம் ஒன்றை முதன்முதலில் நிறுவினார். காலப்போக்கில் அவ் இடத்திலே, 1872 ஆம் ஆண்டு முதலாவது தேயிலைத் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1875 ஆம் ஆண்டளவில் லண்டனில் நடைபெற்ற தேயிலை கொள்வனவு ஏலத்திற்கு இலங்கையில் இருந்து முதன் முதலாக தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.
1867களில் கண்டியில் 19 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட இப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, நுவரெலியா, டிம்புள, உடபுஸ்ஸெல்லாவ மற்றும் ஊவா முதல் தென்மாகாணம் வரை வளர்ச்சி கண்டது. இதன் விளைவாக இலங்கை உலகின் 19% தேயிலைக் கிராக்கியை நிவர்த்தி செய்ததுடன், உலகில் அதிகம் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்தது. 2019 ஆம் ஆண்டில், அண்ணளவாக 300,000 மெற்றிக் டொன் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் பெருமதி 1.5 $ பில்லியனுக்கும் அதிகமாக விளங்குவதோடு, GDP என்று கூறப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பங்கை வகிக்கின்றது. மேலும் இப் பயிர்ச்செய்கை மூலம் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக இது விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குளிரான காலநிலை, மழை வீழ்ச்சி போன்ற காரணிகள் தேயிலையின் தரம், சுவை மற்றும் வாசனைக்கு அதிகம் தாக்கம் செலுத்தும் அம்சங்களாக விளங்குகின்றன. பொதுவாக ஊவா மாகாணங்களில் விளையும் தேயிலை, வித்தியாசமான பருவகால காரணிகள் கொண்டடங்குவதுடன், இவை ஜேர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அதிகம் பகிரப்படுகின்றன. கடின நிறம் மிகுந்த தேயிலை வகைககள் ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும், தாழ் மலைப்பிரதேசங்களில் பெறப்படும் தேயிலை வகைகள் அதிகமாக மேற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையும் ஏற்றமதி செய்யப்படுவதுடன், இத் தேயிலை வகைகளுக்கே உலகளாவிய ரீதியில் அதிக கிராக்கி உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தேயிலையின் கனவளவிற்கு அமைய Dust, BOP, BOPF மற்றும் OP என, தர நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் குறைவான தரமாக கருதப்படும் Dust என்று அழைக்கப்படும் தேயிலையே இலங்கையில் அதிகமானோர் நுகர்வதாகும். அப்படிப் பார்த்தால், எமது நாட்டிலே விளையும் தரமான தேயிலையின் உண்மையான சுவை, இலங்கையர்களுக்கு தெரியாது என்பதே கசப்பான உண்மை. தேயிலை இவ்வாறாக தர நிர்ணயம் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனால்தான், நம் நாட்டு தேயிலைக்கு உலகளவில் இன்றும் கிராக்கி உண்டு. மேலும் இலங்கையில் விளையும் அனைத்து தேயிலைகளிலும் மெதெய்ல் ப்ரோமைட் என்ற சேதன பதார்த்தம் நீக்கப்படுவதனால், ‘Ozon free tea’ என்று உலகளவில் போற்றப்படுகின்றது.
தேயிலைப் பயிரின் விருத்தியில் பங்களிப்புச் செய்த காரணிகள்
இலங்கைத் தேயிலைக்கு உலசு சந்தையில் சிறந்த கேள்வி நிலவியமை.
உலர் வலயம் தவிர இலங்கையின் ஏனைய பிரதேசங்கள் தேயிலைப் பயிர்ச் செய்கைக்கு உசுந்ததாகக் காணப்பட்டமை.
நவீன இயந்திர சாதனங்களுடனான தொழிற்சாலைகள் காரணமாக தரமானதேயிலை உற்பத்தி செய்யப்பட்டமை.
பெருந்தெருக்கள், புகையிரத வீதிகள் காரணமாக போக்குவரத்து வசதிகள் மேலும் முன்னேற்றமடைந்தமை.
தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டு குறைந்த கூலிக்கு உழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டமை.
தென்னை பயிர்ச்செய்கை
தென்னை பண்டைக் காலம் முதல் இலங்கையில் பயிரிடப்பட்டு வந்த வீட்டுத் தோட்டப் பயிராகும். 1850களில் கோப்பியின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தென்னையின் மீது கவனம் செலுத்தப்பட்டது. ஐரோப்பியரை விட இலங்கையர் தென்னை பயிரிடுவதில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 1880 ஆம் ஆண்டளவில் தென்னந்தோட்ட உரிமையாளர்கள் 65 வீதமானோர் இலங்கையராக இருந்தனர்.
மலைநாட்டுப் பிரதேசங்களை விடப் பரந்த சமவெளிப் பிரதேசங்களிலே தென்னை பயிரிடப்பட்டது. குருணாகல், சிலாபம், கம்பஹா முதலிய பிரதேசங்கள் தெங்குப் பயிர்ச் செய்கையில் முக்கிய இடம்பெற்றன. 1920களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் 275 தென்னை மூலம் கிடைக்கப்பெற்றது. தெங்குப் பயிர் பரவலடைந்தபோது லுணுவில என்னும் இடத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டதுடன் அப்பயிர்ச்செய்கை அபிவிருத்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையின் தெங்கு உற்பத்தியில் அரைவாசிக்கு மேல் உள்நாட்டில் நுகரப்படுவதால் அது ஏனைய பெருந்தோட்டப் பயிர்களைப் போல் முற்றுமுழுதாக ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு பயிர் செய்யப்படவில்லை என்பது தெளிவாகின்றது. கோப்பி, தேயிலைப் பயிர்ச் செய்கை காரணமாக மலைநாட்டுப் பிரதேசந்தில் பெருந்தெருக்களும் புகையிரத வீதிகளும் அபிவிருத்தியடைந்ததைப் போலவே தெங்குப் பயிர்ச் செய்கை காரணமாக அது பயிரிடப்பட்ட பிரதேசங்களிலும் வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டதை அவதானிக்க முடிகின்றது.
இறப்பர் பயிர்ச் செய்கை
1877 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இறப்பர் பயிர் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அக்காலப் பெருந்தோட்ட உற்பத்தியாளர்கள் தேயிலைப் பயிர்ச் செய்கையில் ஈடுப்பட்டிருந்தமையால் இறப்பர் மீது கவனம் செலுத்தவில்லை. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மோட்டார் வாகனக் கைத்தொழில் அபிவிருத்தியடைந்தமையால் இறப்பரின் விலை கூடியது. இலங்கைக்குப் பொருத்தமான இறப்பர் இனத்தை அறிந்து அதற்குப் பொருத்தமான தொழினுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டமை, தேயிலை விலை தற்காலிகமாக வீழ்ச்சி கண்டமை போன்ற காரணங்களால் இறப்பர் பயிர்ச் செய்கை வேகமாகப் பரவலடைந்தது. ஆரம்பத்தில் களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் பயிரிடப்பட்ட இறப்பர் பிற்காலத்தில் சப்ரகமுவ, மேல், தென், மத்திய மாகாணங்களிலும் பரவலடைந்தது. 1920ஆம் ஆண்டுகளில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 30 வீதம் இறப்பர் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் அகலவத்த என்னுமிடத்தில் இறப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு இறப்பர் பயிரின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நன்றி
0 Comments