கடவுள் அல்லது இறைவன் - GOD OR LORD


கடவுள்


கடவுள் அல்லது இறைவன் - GOD OR LORD

கடவுளே உலகத்தில் உள்ள பொருள்கள் யாவிலும் மேலான பொருள். ஆதலால் அவரைப் பரம்பொருள் என்கிறோம். கடவுள் ஒருவரே. அவர் எல்லா உயிர்களுக்கும் உயிராக விளங்குகிறார், எல்லா உலகங்களிலும் இருக்கிறார்; அவை யாவற்றையும் கடந்து அவற்றுக்கு அப்பாலும் இருக்கிறார். எல்லா உலகங்களையும் எல்லா உயிர்களையும் கடந்தும் அவற்றின் உள்ளேயும் இருப்பதால்தான் அவரைக் கடவுள் என்கிறோம். சுருக்கமாகக் கூறின் கடவுள் எங்கும் உள்ளவர், எல்லாவற்றையும் கடந்தவர்.

கடவுளின் இயல்புகள்

சைவசமயம் கடவுளுக்கு இருவகை நிலைகளைக் கூறுகின்றது. ஒன்று சொரூபநிலை, மற்றையது தடத்தநிலை. குணம், குறிகளுக்கு அப்பாற்பட்ட நிலையே சொரூபநிலை  ஆகும். ஆன்மாக்களுக்கு அருள்புரியும் பொருட்டு குணங்குறிகளோடு கூடி வரும் நிலை தடத்தநிலை எனப்படும். தடத்தநிலையில் இறைவன் எண்குணங்களை உடையவனாக விளங்குகிறான். எண்குணங்களாவன,

முற்றும் உணர்தல்
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
இயற்கை உணர்வினனாதல்
வரம்பில் இன்பம் உடைமை
தன்வயத்தனாதல்
முடிவில் ஆற்றல் உடைமை
பேரருள் உடைமை
தூய உடம்பினனாதல்

இவற்றை சத், சித், ஆனந்தம் என்னும் மூன்று இயல்புகளாகத் தொகுத்துக் கூறுவதும் உண்டு. அதனாலேதான் கடவுளை, சச்சிதானந்தரூபி என்கிறோம். கடவுள் எத்தகையவர் என்பது, சிற்றறிவுடைய எங்களுக்கு விளங்கவேண்டும் என்பதற்காகவே இவையிவை கடவுளது குணங்கள் என்று ஒருவாறு வரையறுத்துக் கூறப்படுகிறது. உண்மையில் அவர் குணங்கள் யாவற்றையும் கடந்தவர் - குணாதீதர். குணம் ஒன்றும் இல்லான் என்று திருவாசகம் கூறுகின்றது.

கடவுள் இன்ன குணம் உள்ளவர், இப்படிப்பட்டவர் என்று எங்கள் அறிவினால் அறிந்துகொள்ள முடியாது. அவர் நமக்காகச் செய்யும் திருவருட்செயல்களினால் அவருடைய தன்மையை ஒருவாறு உணர்ந்துகொள்ளலாம் கடவுள் உணர்த்தும் வகையால் உணர்ந்து கொள்ளலாம். கடவுள் எந்தத் தேவையும் அற்றவர். எனினும் அவர் ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்காக, தடத்த நிலையில் ஐந்து தொழில்களைச் செய்தருளுகிறார். அவையாவன:

படைத்தல் (சிருஷ்டி) - ஆன்மாக்களுக்காக தனு, கரணம், புவனம், போகம் என்பவற்றை உருவாக்குதலே படைத்தல் எனப்படும்.

காத்தல் (திதி) - படைக்கப்பட்டவை இருக்கவேண்டிய காலம் வரையும் அவற்றைக் காப்பது காத்தல் எனப்படும்.

அழித்தல்  (சங்காரம்) - அக்காலம் முடிய அவற்றை அழிப்பது அழித்தல்.

மறைத்தல்  (திரோபவம்) - ஆன்மாக்களைப் பீடித்துள்ள மலத்தின் வீரியத்தைத் தடுத்தல் மறைத்தலாகும்.

அருளல்  (அநுக்கிரகம்) - ஆன்மாக்களை மலபந்தத்திலிருந்து முற்றாக நீக்கி, அவற்றுக்குப் பேரின்பத்தைக் கொடுத்தல் அருளல்.

இறைவனின் இந்த ஐந்தொழில்களையும் பஞ்சகிருத்தியம் என்றும் சொல்வர். கடவுள் இந்த ஐந்தொழில்களையும் தமது வரம்பில் ஆற்றலால் - வல்லமையால் செய்தருளுகிறார். இந்த வல்லமையையே நாம் சக்தி என்கிறோம்.

நாமும் படித்தல், விளையாடுதல், உண்ணுதல், உறங்குதல் முதலாக பல தொழில்களைச் செய்கிறோம். அத்தொழில்களால் ஒருவேளை மகிழ்கிறோம்; ஒருவேளை துக்கப்படுகிறோம். எங்களுடைய மனநிலை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். கடவுளோ, பஞ்சகிருத்தியங்களைச் செய்யும்பொழுது ஒரு வகையான மாறுபாடும் அடைவதில்லை. சூரியக் கதிர்களின்முன் சில பூக்கள் மலருகின்றன; சில கூம்புகின்றன. ஆயினும் சூரியன் எந்தவித மாற்றத்துக்கும் உள்ளாவதில்லை. அதுபோலவே இறைவனும் எந்த விகாரமும் அடைவதில்லை. அதனால் இறைவனை நிர்விகாரி என்பர்.

உலகத்திலே பலவிதமான பொருள்கள் உள்ளன. சூரியன், சந்திரன், மரம், விலங்குகள், ஆறு முதலான பொருள்களைக் கண்ணாற் காண்கிறோம். கண்ணுக்குத் தோன்றாத காற்று, வெப்பம் முதலானவற்றை, தொடுகை முதலான உணர்வுகளால் கண்டுணர்கிறோம். இவையெல்லாம் மாயையிலிருந்து தோன்றிய பொருள்கள். மாயைப் பொருள் அல்லாத கடவுளை கண் முதலிய பொறிகளால் அறியமுடியாது.

ஏற்கனவே பொறிகளாற் கண்டுணர்ந்த பொருள்களைக் காணாத வேளையிலும் மனதால் எண்ணிப்பார்க்க முடியும். நாம் ஒரு பொருளை ஒருபோதும் கண்டிராவிட் டாலும் அது இப்படிப்பட்டது என்று வேறொருவர் எடுத்துரைத்தால், அப்படிப்பட்ட பொருளை நாம் மனதிலே நினைத்துப்பார்க்க முடியும். கடவுளை நாம் இப்படி நினைத்துப்பார்த்து உணரவும் முடியாது. அதனாலேதான் உள்ளத்து உணர்ச்சியிற் கொள்ளவும் படான் என்றும் சித்தமும் செல்லாச் சேட்சியன் என்றும் மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளினார்.

ஆயினும், நாம் ஈடேற வேண்டுமாயின் கடவுளை எப்படியும் நினைத்தே ஆகவேண்டும். கடவுள்மேல் பற்று வளர வளர நமது பாசங்கள் வலிகெடுகின்றன. நாம் கடைசியாய் அடையவேண்டிய பொருள் கடவுளே. ஆகையாலும் நாம் அவரை நினைவிலே கொள்ள வேண்டியது அவசியம். கடவுளை அறியாத நாம் அவரை எப்படி நினைப்பது? இதற்கான வழியை வேதங்களும் ஆகமங்களும் காட்டியுள்ளன. கடவுளை வழிபடுவதற்காக அவருக்குத் திருவுருவங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. பரம்பொருளை நாங்கள் சிவபிரானாகக் கொள்ளுகிறோம். இறைவனின் வேறாகாத அவருடைய திருவருட் சக்தியை நாம் உமாதேவியார் என்கிறோம். விநாயகர், முருகன், வைரவர், வீரபத்திரர் என சிவபிரானின் புத்திரர்களாகக் கொள்ளப்படும் மூர்த்தங்களும் அவரது திருவருட் சக்திகளைக் குறிப்பனவே. சிவபிரானும் அவருடைய திருவருட் சக்தியும் நெருப்பும் சூடும்போல ஒன்றானவை. எந்தப் பேரில், எந்த வடிவத்தில் வழிபட்டாலும் கடவுள் ஒருவரே. என்று வேதம் கூறுகின்றது.

நாம் இவ்வுலகில் வாழ்கின்றோம். எம் தாய் தந்தையர் எம்மைப் பெற்றார்கள் என்று சொல்லக் கேட்கிறோம். இவ்வுலகுக்கு எப்படி வந்தோம் என்று வேறு எவ்வகையாலும் நாம் கண்கூடாகக் காண முடிவதில்லை. மக்களும் மற்ற உயிருள்ளனவும் இறப்பதையும் காண்கின்றோம். அவ்வாறே நாமும் ஒருநாள் இறப்போம் என்பதை உணர்கின்றோம். ஆனால் நாம் எப்போது இறப்போம், இறந்தபின் எமது நிலை என்னவாகும் என்று எம்மால் அறியமுடிவதில்லை. இதனாலேயே வந்தவாறெங்ஙனே போமாறேதோ மாயமாம் என்று அப்பர் சுவாமிகளும் பாடினார். எம்மைப் போலவே பிற உயிரினங்களும் தோன்றி, வாழ்ந்து இறப்பதைக் காண்கிறோம். இந்நிகழ்ச்சிகளுக்கு மூலகாரணமான பேரறிவுடைய பொருள் ஒன்று இருக்கவேண்டும் என்று கொள்ள வேண்டியதாகின்றது. ஆகவே, ஒருவன், ஒருத்தி, ஒன்று என்று உலகம் முத்திறப்பட்டுத் தோன்றி நின்று அழிவதால் அதை இயற்றியவன் ஒருவன் உளன் என்றும் அவனே கடவுள் என்றும் சித்தாந்த நூல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.

சைவ சித்தாந்தம் கடவுளுக்கு இரண்டு நிலைகள் உண்டு என்று கூறும். ஒன்று சொரூபலக்கணம் எனப்படுஞ் சிறப்பியல்பாகும். மற்றது தடத்தலக்கணம் எனப்படும் பொதுவியல்பாகும். சொரூபலக்கணம் என்பது கடவுளின் உண்மைத் தன்மையைக் காண்பிப்பது. இந்த நிலையிலுள்ள கடவுளுக்குப் பெயர், குணம், குறி முதலிய ஒன்றும் இல்லை. அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்றும் இல்லை. மனம், வாக்கு, காயம், ஆகிய மூன்றாலும் அறியப்படாத அனாதிமுத்த சித்தாயிருக்கும். இந்த நிலையிலுள்ள கடவுளைச் சித்தாந்திகள் பரமசிவம் என்றும் சிவம் என்றும் குறிப்பிடுவர். இக்கடவுளே வேதாந்த நூல்களிற் குறிப்பிடப்படும் பிரமம் ஆகும். பெயர் இல்லாத கடவுளுக்குப் பெயர் கொடுக்கப்படும். 

இத்தகைய சொரூபலக்கணத்தையுடைய சிவம், உயிர்களுடைய துன்பங்களைப் போக்கி, அவைகளுக்கு அருள் செய்தற்காக இரக்கங் கொண்டு, தானாகவே பல படிகள் இறங்கி வந்து, பல நிலைகளிலுள்ள கடவுளரை அதிட்டித்து நின்று, அவர்கள் மூலமாக ஆணை செலுத்திப் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்கின்றது. இந்த நிலை கடவுளின் தடத்தலக்கணம் என்று சொல்லப்படும். தடத்த நிலையிற் சிவத்தோடு பிரிவின்றி நிற்கும் சிவசக்தி முதன்மை பெற்று விளங்கும். உயிர்களின் பொருட்டுப் படியிறங்கி வந்து தொழில் புரியும் தடத்த நிலையிலே பரம சிவம், பரமசிவன் என்று ஆண்பால் வாய்பாட்டாற் சொல்லப்படும். அவனுடைய சக்தி, பராசக்தி என்று பெண்பால் வாய்பாட்டாற் பேசப்படும். உலக வழக்கை யொட்டிச் சிவம், சக்தி இரண்டையும் நாயகன், நாயகி என்றும் கூறுவதுண்டு. 

அன்பர்கள் அவனை அப்பன் என்றும் அவளை அம்மை என்றும் அழைத்து வழிபடுவார்கள். உயிர்களுக்கு அருள் செய்யும் இந்த நிலையிலே தாயின் பண்பே சிறந்து நிற்றலால் அடியார்கள் கடவுளை அம்மையே அப்பா' என்று அகங் குழைந்து அழைப்பார்கள். இறைவனின் அருட் பண்பை விதந்து காட்டும் நோக்கமாகவே திருவருட்பயன் என்ற சித்தாந்த நூல் இயற்றப்பட்டது. உயிர்களுக்கு அருள் செய்யும் வகையிற் சிவசக்தி பல்வேறு பெயர்களைப் பெறும். அச்சக்தி பேதங்களை அதிட்டித்து நிற்கும் ஈசனுக்கும் பல்வேறு பெயர்கள் சொல்லப்படும். இவற்றின் விரிவுகளைச் சிவஞான சித்தியாரிலும் சிவஞான பாடியத்திலும் காணலாம்.

சிவனும் சக்தியும் பிரிவின்றி இருக்கும் நிலையை சித்தாந்த நூல்கள் பல உவமைகளால் விளக்குகின்றன.

பழமும் சுவையும் போல 
பண்ணும் இசையும் போல 
மணியும் ஒலியும் போல 
நெருப்பும் சூடும் போல 

சொரூப நிலையிலே குணங்குறி ஒன்றும் இல்லாத கடவுளுக்குத் தடத்த நிலையிலே மெய்யன்பர்கள் பற்பல குணங்களையும் குறிகளையுங் கூறுவார்கள். இறைவனுக்குக் கூறப்படும் இக்குணங்களையெல்லாஞ் சைவ நூல்கள் எட்டுக் குணங்களிலே அடக்கிவிடுகின்றன. குணங்களை கூறியது போலவே அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவங்களும்  கடவுளுக்குக் கூறப்படுகின்றன. இறைவன் உயிர்களுக்கு அருளும் பொருட்டு இச்சா சத்தி, கிரியா சத்தி, ஞான சத்தி என்ற மூன்று ஆற்றல்களோடு கூடி நிற்பான். திருவருளே திருமேனியாகக் கொள்வான். அப்பொழுது அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று திருமேனிகளைக் கொள்வான்.

அருவம் - கண்ணிற்கு புலனாகாது சக்தி வடிவமாக இருந்தே, காரியங்களை செய்வது. சதாசிவன் (நிஷ்கள சிவன், சத்தர்) என்று அழைக்கப்படுவர். சிவ பெருமான் ஞான சக்தியுடன் மட்டுமே பொருந்தியிருக்கும் தன்மையால் அருவ வடிவம் தாங்குகின்றார்.

அருவுருவம் - ஞானசக்தியையும், கிரியாசக்தியையும் சம அளவில் கொள்வதன் மூலம் பூணுகின்ற வடிவம். ஒருமுறை புலனாகியும், புலனாகாமலும் இருப்பது இவ்வடிவமாகும். புலனாகும்போது முகம், கை, கால் போன்ற உறுப்புக்கள் ஏதுமின்றி காட்சியளிப்பது. ஒளி,இலிங்கம் ஆகியன அருவுருவத் திருவடிவங்களாகும்.

உருவம் - ஞானசக்தியை விட கிரியாசக்தியை மிகுவித்து அதன்மூலம் கண்களுக்கு புலனாகும் வகையில் முகம், கை, கால் போன்ற உறுப்புகளுடன் தெளிவாகத் தோன்றுவது உருவத் திருவடிவமாகும். தென்முகக்கடவுள், சோமஸ்கந்தர், அர்த்தநாரீஸ்சுவரர், நடராசர் போன்ற மகேசுவர மூர்த்தங்கள் இதற்குள் அடங்கும்.

பதிப்பொருள் அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்று தன்மையும் இல்லாதது. ஆயினும் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு அருவாகியும் உருவாகியும் அருவுருவாகியும் தான் நினைத்த வண்ணம் தோற்றம் கொள்கிறது.

உயிர்களின் பொருட்டு அருவமாயும் உருவமாயும் அருவுருவமாயும் தனது பேரருளாலே திருமேனி கொண்டு தோன்றுங் காலத்து இறைவன் குணமும் குறியுமின்றியே நிற்பன். இங்கு குணம் என்றது மாயையின் காரியங்களாய் உயிர்களை மருவும் இராசத தாமத சாத்துவிக குணங்களையே ஆகும். ஏனெனில் எவ்வகைக் குணங்களும் அற்ற ஒரு பொருள் இருத்தல் இயலாது. அவ்வாறு இருப்பின் அப்பொருள் பயன்படாது. எனவே நிர்க்குணம் என்பது முக்குணங்களின் நீங்கிய நிலையேயன்றி வேறொன்றுமில்லை.

நாம் இறைவனைப் பல்வேறு நாமங்களில், பல்வேறு வடிவங்களில் கோயில்களில் வழிபடுகிறோம். எங்கும் அத்திருவுருங்களை மனதிலே தியானித்து வழிபடுகிறோம். அத்திருவுருவங்களில் இறைவனுடைய இயல்புகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் தத்தமக்குப் பொருத்தமான வழியில் இறைவனை வழிபடலாம். தர்மத்துக்குப் புறம்பாக நடக்காது இருத்தலும் எல்லா உயிர்களையும் நேசித்தலும் கடவுளை வணங்குவதற்கு நிகரானவையே.

நன்றி 


Post a Comment

0 Comments