திலகவதியார் - THILAGAVATHIYAR

 

திலகவதியார்


திலகவதியார் - THILAGAVATHIYAR

சைவ சமயத்துக்கு தொண்டாற்றியவர்களுள் திலகவதியாரும் ஒருவர். சைவ மரபில் சமய குரவர்களாக போற்றப்பெறும் நால்வருள் ஒருவரான திருநாவுக்காசரின் தமக்கையாராக இருந்து, அவரை நெறிப்படுத்தியவர் அவர். திருமுனைப்பாடி நாட்டிலே திருவாமூர் என்ற ஊரிலே புகழனாரும் மாதினியாரும் நடாத்திய இல்லறத்தின் பயனாக அவர்களுக்குப் புதல்வியாக திலகவதியார் பிறந்தார். சில ஆண்டுகளின்பின் அவர்களுக்கு மகனாக மருணீக்கியார். பிறந்தார். மருணீக்கியார் இளவயதிலேயே பல கலைகளையும் கற்றுத் தேறினார்.

திலகவதியாருக்கு வயது பன்னிரண்டை எட்டியது. அக்கால வழக்கப்படி அந்த வயதிலேயே அவருக்குத் திருமணம் செய்துவைக்க, பெற்றோர் முடிவெடுத்தனர். சிவபக்தியும் ஒழுக்கமும் அறிவும் வீரமும் நிறைந்த சுலிப்பகையாரைத் திருமணம் பேசி மணமகனாக நிச்சயித்தனர். கலிப்பகையார் அரசனின் படைவீரராகத் திகழ்ந்தார்.

திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த நிலையில் அயல்நாட்டு அரசனோடு மூண்ட போரில் பங்கேற்பதற்காக, கலிப்பகையார் செல்ல
வேண்டியதாயிற்று. போர் தொடர்ந்தது. அக்காலகட்டத்தில் திலசுவதியாரின் தந்தையார் புகழனார் காலமானார். தாயார் மாதினியாரும் கணவனோடு உடனுயிர் நீத்தார். திலகவதியாரும் மருணீக்கியாரும் தனித்துவிடப்பட்டார்கள். பெற்றோருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடமைகளை, உறவினர்களின் உதவியோடு இருவரும் செய்து முடித்தனர். அந்த நிலையில் போரிலே ஈடுபட்டிருந்த கலிப்பகையாரும் வீரசுவர்க்கம் அடைந் ததாகச் செய்தி வந்தது.

பெற்றோர்களால் தனது கணவனாக நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார். இறந்தபின் தனக்கு இனி வேறு வாழ்க்கை இல்லை என்று முடிவெடுத்த திலகவதியார் தானும் உயிர்விடத் துணிந்தார். தாயையும் தந்தையையும் இழந்து இப்போது தமக்கை யாரையும் இழக்கவேண்டிய நிலைக்கு ஆளானார் மருணீக்கியார். தமக்கையாரைப் பார்த்து தானும் உயிர்விடப் போவதாகக் கூறினார். தமக்கையாரால் அதைத் தாங்க முடியவில்லை. தம்பி வாழவேண்டும், அதற்காகத் தானும் வாழ வேண்டும் என முடிவெடுத்தார். உலக இன்பங்களையெல்லாம் துறந்து இல்லத்தி லேயே துறவறம் மேற்கொண்டு தவவாழ்க்கை வாழ்ந்தார். தமக்கையாரும் தம்பியும் தமது துயரங்களை ஒருவாறு மறந்து அறங்கள் பல செய்து வாழ்ந்தார்கள்.

மருணீக்கியார் தமது இளமைப்பருவத்திலே பெரும் இழப்புகளைச் சந்தித்து விட்டார். உலக நிலையாமை பற்றிய உணர்வு அவரிடம் உள்ளூர் உறைந்திருந்தது. அக்காலத்தில் சமண சமயத்தவர்கள், உலக நிலையாமை முதலான தத்துவங்களை வலியுறுத்தி வந்தார்கள். சமணர்களைச் சார்ந்து அவர்களுடைய சமயதத்துவங்களை கேட்டுணர்ந்த மருணீக்கியார். ஆன்ம விடுதலை தரவல்ல மார்க்கம். சமண மார்க்கமே என்று கருதலானார். மருணீக்கியார், பாடலிபுரம் என்ற இடத்திலே அமைந்த சமணப் பள்ளியை அடைந்து, சமண நூல்களையெல்லாம் சுற்றுத் தேர்ந்து, இறுதியில் அவர்களுக்கெல்லாம் மேலாக தருமசேனர் என்ற நாமத்தோடு சமணர்தம் தலைவரானார்.

மருணீக்கியாருக்காகவே உயிர் வாழ்ந்த தமக்கையார் திலகவதியார், மிக்க துயரம் அடைந்தார். அவரை எவ்வாறேனும் சமணரிடமிருந்து மீட்டு தூய நெறியான சைவநெறியிற் சேர்க்கவேண்டும் எனத் தீர்மானித்தார்: திருவீரட்டானத் தலத் தில் எழுந்தகுளியுள்ள இறைவனைச் சரணடைந்தார்; தொண்டுகள் பல புரிந்தார்; தம்பியாரைச் சமண சமயத்தினின்றும் மீட்டுச் சைவத்தைச் சார்வித்தருளுமாறு இறைவனிடம் மன்றாடினார். இறைவனும் திருவுனம் இரங்கினாள்.

பாடலிபுரத்தில் சமணப்பள்ளியிலே தருமசேனராக இருந்த மருணீக்கியாருக்கு நோய் உண்டாகியது, வேதனை வயிற்றைக் குடைந்தெடுத்தது, சூலை வலிதாங்கமுடியாது விழுந்தார். கூட இருந்த சமணர்கள் எத்தனையோ பரிகாரங்கள் செய்து பார்த்தார்கள். வேதனை அதிகரித்ததேயன்றிக் குறைந்தபாடில்லை. சமணர்கள் செய்வதறியாதவர்களாய் அவரைக் கைவிட்டார்கள்.

மருணீக்கியாருக்கு துணை யாரும் இல்லை. வலி தாங்க முடியவில்லை. அப்போதுதான்அவருக்குதமக்கையாரின் நினைவு வந்தது. தன் நிலைமையைச் சொல்லி அவரை அழைத்து வருமாறு ஒருவனை அனுப்பினார். அவனும் போய், விடயத்தைச் சொன்னான். ஆனால் திலகவதியாரோ, 'சமனர் இடத்துக்கு நான் வரமாட்டேன்" என்று மருணீக்கியாருக்குத் தெரிவிக்கும்படி கூறி அனுப்பினார். இறைவன் அருள் கைகூட, மருணீக்கியாரும் சமணர் அறியாத வகையில், திருவதிகையை அடைந்து, திலகவதியாரிடம் அடைக்கலம் புகுந்தார். திலகவதியாரும் இறைவனது திருவருளை வியந்து, தம்பியாருக்குத் திருநீறு சாத்தி, அவரை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

மருணீக்கியார், வீரட்டானேஸ்வரரை வலம் வந்து வணங்கினார்; நிலத்திலே தெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்தார், இறைவன் திருவருளால் திருப்பாடல்களைப் பாடும் உணர்வும் கைவரப் பெற்றார், வயிற்றில் நின்று வருத்தும் சூலை நோயினின்றும் தம்மை விடுவிக்கக் கோரி கூற்றாயினவாறு விலக்ககிலீர்..... எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி இறைஞ்சினார். அவ்வளவில், அதுவரை அவரை வருத்தி நின்ற சூலைநோய் இருந்த இடம் தெரியாது அகன்றது. பதிகம் பாடிய திறத்தை மெச்சி நாவுக்கரசர் என்னும் நாமம் உலகில் நிலைபெற்று வழங்குக என்று அசரீரி ஒலித்தது. தன் தம்பியாரின் உயர்நிலை கண்டு தமக்கையார் திலகவதியார் உள்ளம் பூரித்தார். திருநாவுக்கரசரும் காலமெல்லாம் - தன் தள்ளாத வயதிலும் - இறைவனுக்குத் திருப்பணி செய்தும் திருப்பதிகம் பாடியும் சைவமக்களுக்கு நன்னெறி காட்டி நின்றார். திலகவதியாரும் திருவதிகை மடத்திலே தங்கியிருந்து திருத்தொண்டு பலபுரிந்து முத்தி எய்தினார்.

நன்றி 




Post a Comment

0 Comments