அருணகிரிநாதர்
திருமுருகாற்றுப் படை பாடிய நக்கீரர், கந்தபுராணம் பாடிய கச்சியப்ப சிவாச்சாரியார் முதலான முருகனடியார்கள் வரிசையில் அடுத்து முக்கியம் பெறுபவர் அருணகிரி நாதர் ஆவார். இவர் கி.பி பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1422-1447 தமிழகத்தின் திருவண்ணாமலையில் வாழ்ந்தவராவார்.
அவரது இயற் பெயர் பெற்றோர்கள் பற்றி அறியப்படுமாறில்லை. ஆயினும் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் முத்து என்பவர் இவரது தாயாக விளங்கியதோடு இவருக்கு ஆதி என்னும் சகோதரி ஒருவரும் இருந்ததாகவும் அறிய முடிகின்றது. செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், இளமையில் தக்க புலவர்களிடத்தில் தமிழ்மொழியும் வடமொழியும் கற்று இரு மொழிகளிலும் புலமை வாய்ந்தவராக விளங்கினார். இவர் இயல்பாகவே கவிபாடும் ஆற்றல் வாய்க்கப்பெற்றவர். அதனால் நொடிப் பொழுதில் ஆசுகவிபாடும் வல்லமை வாய்க்கப் பெற்றவராக விளங்கினார். இவர் மனைவி மக்களோடு இன்பகரமாக வாழ்க்கை நடாத்தி வந்தார். விதிவசத்தால் தவறான ஒழுக்கங்களில் ஈடுபட்டுவந்தார். ஈற்றில் தனது கைப் பொருள்கள் அனைத்தையும் இழந்து தீராத நோய்களுக்கு ஆளானார். ஊரிலுள்ளவர்கள் அவரது நிலையைக் கண்டு ஏளனம் செய்தனர்.
அதனால் மனம் வருந்திய அருணகிரிநாதர் இவ்வுலகில் வாழவிருப்பமின்றித் தன்னை மாய்த்துக் கொள்ள முற்பட்டார். அந்நிலையில் அவர் முன் தோன்றிய பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு ஏகுமாறு உப தேசித்தார். அருணகிரியார் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் வடகோபுர வாசலில் அமர்ந்து இருந்து பல காலம் தவம்புரிந்தார். ஆயினும் இறைவனது திருவருள் இவருக்குக் கைகூடவில்லை. அதனால் அவர் மனம் கலங்கி உயிரை விடுவதே உத்தமம் என்று கருதினார். கோபுரத்தின் உச்சிமேல் ஏறிக் குதித்தார். அப்போது அவர் முன் முருகப் பொருமான் தோன்றினார். அவரைத் தனது திருக்கரங்களினால் தாங்கினார். திருவடிதீட்சை அளித்து நாவில் வேலினால் சடாட்ஷரம் என்னும் மந்திரத்தினையும் எழுதினார். அத்தோடு அட்சரமாலை ஒன்றினை அளித்து தம் புகழைப்பாடுமாறு அருள் பாலித்தார்.
அருணகிரிநாதர் அவ்வாறு பாடத்தயங்கி நின்ற வேளை முருகப் பெருமான் முத்தைத் தரு பத்தித்திரு நகை..... என அடியெடுத்துக் கொடுத்துத் திருப்புகழினைப் பாட வேண்டிக் கொண்டார். அதன் பிரகாரம் சந்தப்பாவகையைச் சேர்ந்த திருப்புகழ் பாடல்களை அருணகிரியார் பாடியருளினார். அருணகிரியார் முருகன் திருவருளால் பிணியெல்லாம் நீங்கப் பெற்ற செய்தி எங்கும் பரவியது. நாயக்க மன்னாகிய பிரபுடதேவ மகாராஜன் (இரண்டாவது தேவராயர்) அச்செய்தியை அறிந்தான். அருணகிரிநாதரை வரவழைத்து வணங்கித் தனது ஆஸ்தான புலவராக இருக்கும்படி வேண்டிக் கொண்டான். அவ்வேண்டுதலை ஏற்று அருணகிரிநாதர் ஆஸ்தான புலவர் ஆனார்.
அருணகிரிநாதர் பிரபுட மகாராஜனது ஆஸ்தான புலவராக விளங்கியமையால் அவரது சமகாலத்தில் வாழ்ந்த புலவர்களில் சிலர் அவர் மீது பொறாமை கொண்டனர். பிரபுடதேவ மன்னனின் முன்னைய ஆஸ்தான புலவனாக விளங்கிய சம்மந்தாண்டான் அவர் மீது பொறாமை கொண்டான். பொறாமை மிகுதியினால் சம்மந்தாண்டான் மன்னனை நோக்கி நான் தேவி பராசக்தியை இச்சபையில் காட்சி அளிக்கச் செய்வேன். இவர் தமது கடவுளாகிய முருகப் பெருமானைக் காட்சியளிக்கச் செய்வாரா என சூழுரைத்தான். அதனைக் கேட்ட அருணகிரி நாதர் அதலசேடனாராட..... என்ற திருப்புகழ் பாடலைப் பாடினார். அப்போது முருகப் பெருமான் சபைமுன் தோன்றி அருணகிரியாருக்கு அருள்பாலித்தார்.
அருணகிரியாரது சமகாலத்தில் வாழ்ந்த மேலும் பல புலவர்கள் அவர் மீது பொறாமை கொண்டனர். அவர் மீது போட்டியிட்டு தோல்வியுற்றனர். இறுதியில் தமது தவறை உணர்ந்தனர். அவரிடத்தில் அன்பு கொண்டு ஒழுகலாயினர். வில்லிப்புத்தூரர் என்னும் புலவர் அருணகிரியாரை வாதில் வெல்ல வேண்டும் என்னும் நோக்கில் திருவண்ணாமலைக்கு வந்தார். அவ்விருவரும் அரசர் முன்னிலையில் அறிஞர் குழாம் சூழ்ந்திருக்க தம் வாதத்தை ஆரம்பித்தனர். ஒருவர்பாட மற்றவர் பொருள் கூறுவது என்ற அடிப்படையில் அவ்வாதம் நடை பெற்றது. அருணகிரிநாதர் கந்தரந்தாதி பாடல்களைப் பாட வில்லிபுத்தூரர் உரை கூறினார். அதன் 54 ஆம் பாடலாகிய திதத்தத்த..... எனத் தொடங்கும் பாடலைப் பாடிய பொழுது வில்லிபுத்தூரர் அவரை வணங்கிப் போற்றினார்.
அருணகிரியார் முருகனைத் தரிசிக்கும் பொருட்டு முருகனாலயங்கள் தோறும் யாத்திரை செய்து அங்கு எழுந்தருளியுள்ள முருகப் பெருமானது அருட்சிறப்புக்களைத் தனது திருப்புகழ் பாடல்கள் ஊடாக விபரித்துப் பாடியுள்ளார். இவர் ஆறுபடை வீடுகள், பஞ்சபூதத்தலங்கள், வைப்புத்தலங்கள், ஈழநாட்டுத் தலங்கள், வடநாட்டுத்தலங்கள் என்பவற்றுக்குத் தலயாத்திரை மேற்கொண்டுள்ளார்.
அருணகிரிநாதர் அட்டமா சித்திகளும் வாய்க்கப் பெற்றவராக விளங்கினார். அவர் சித்தர்களைப் போன்று கூடுவிட்டுக் கூடுபாயும் ஆற்றலுடையவராகவும் காணப்பட்டார். அவரை ஆதரித்து அன்பு கொண்டொழுகிய பிரபுடதேவ மன்னன் பார்க்கும் சக்தியை இழந்தான். அவருக்கு ஏற்பட்ட நிலை கண்டு அருணகிரிநாதர் மனம் வருந்தினார். அப்போது அங்கு வந்த பெரியவர் ஒவர் தேவலோகத்தில் உள்ள பாரிஜாதமலரினைக் கொடுத்தால் மன்னனுக்கு மீண்டும் கண்பார்வை வரும் என ஆலோசனை கூறினார். அருணகிரிநாதர் திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறி, அங்கு தமது உடலை வைத்து விட்டு, கிளி உடம்பில் புகுந்து தேவலோகம் சென்றார். இந்நிலையில் சம்பந்தாண்டான் மன்னனுக்கு வேண்டிய பாரிஜாத மலரைக் கொண்டுவரும் திறமையற்றவராக அருணகிரி நஞ்சுண்டு இறந்தார் என்றும் அவரது உடல் ஆலயக்கோபுரத்தில் கிடப்பது ஆலயத்துக்கு தீட்டாகும் எனவும் பொய்யுரைத்தான். அதனைக் கேட்டவர்கள் அருணகிரிநாதரின் வெற்றுடலைத் தீயிலிட்டனர். கிளியுருவில் வானுலகு சென்ற அருணகிரிநாதர் பாரிஜாதமலருடன் திரும்பி வந்தார். தமது உடலுக்கு நேர்ந்த கதியினைக்கண்டு மனம் வருந்தினார். கிளியுருவுடனே தமது இறுதி நாட்களைக் கழித்தார்.
அருணகிரிநாதர் கிளியுருவில் திருத்தணிகை முருகனாலயத்தில் இருக்கும் போது கந்தரனுபூதி, கந்தர் அலங்காரம் என்னும் நூல்களைப் பாடியுள்ளார். இறுதியில் கிளியுருவிலேயே திருத்தணிகை முருகனது கையில் வாசம் செய்து முத்திப்பேற்றினை அடைந்தார். அவர் முத்திப்பேற்றை அடைந்த தினமாக ஆனிமாத மூல நட்சத்திர தினம் அனுட்டிக்கப்படுகின்றது. திருவண்ணாமலை ஆலயத்தில் அவரது திருவுருவச் சிலை காணப்படுகின்றது.
வாக்குக்கு அருணகிரி, ஸார்வபௌமடிண்டிமகவி, அஷ்டபாஷா பரமேஸ்வரர் என்ற சிறப்புப் பெயர்களைக் கொண்ட அருணகிரிநாதர் முருக பக்தி இலக்கியங்கள் பலவற்றைப் படைத்துள்ளார். திருப்புகழ், கந்தரந்தாதி, கந்தரனுபூதி, கந்தரலங்காரம், திருவகுப்பு, வேல் விருத்தம், மயில்விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக் கூற்றிருக்கை என்பன அவையாகும். அருணகிரிநாதர்பாடிய நூல்களுள் சிறப்பானது திருப்புகழ் ஆகும். இது 16000 பாடல்களைக் கொண்டு இருந்தது. ஆயினும் நமக்குக் கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1346 ஆகும். திருச்செந்தூர் முருகனாலயத்துக்கு சென்ற அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களை முருகன் ஏற்றுக் கொள்ள
வேண்டும் என வேண்டியதாகவும் அவற்றை முருகன் ஏற்கத் தாமதித்தபோது அவற்றை அருணகிரிநாதர் கடலில் வீசியதாகவும் அவற்றில் எஞ்சியவையே இன்றைய திருப்புகழ் பாடல்கள் எனவும் குறிப்பிடுவர். இத் திருப்புகழ் சந்தச் சிறப்பும் தாளச் சிறப்பும் ஒருங்கு சேரப் பாடப்பட்டுள்ளது. இது முருகனடியார்களது தேவாரம் எனவும் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது.
நமது நாட்டிலே உள்ள மூன்று முருகனாலயங்கள் திருப்புகழ் பாடல்கள் பாடப் பெற்றவையாகக் காணப்படுகின்றன. அருணகிரிநாதர் திருகோணமலை, கதிர்காமம், யாழ்ப்பாணம் என்ற ஒழுங்கில் தனது தலயாத்திரையை மேற்கொண்டு இலங்கை வந்தபோது, முதலில் திருகோணமலையில் விளங்கிய முருகனாலயத்தை தரிசித்துள்ளார். இவ்வாலயமே இன்றைய திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமியார் ஆலயமாகக் கருதப்படுகின்றது.
அடுத்து அருணகிரிநாதர் கதிர்காம ஆலயத்திற்குச் சென்று கதிர்காமத்தின்
இயற்கை அழகையும், மாணிக்ககங்கை பாய்ந்து வருகின்ற சிறப்பினையும் அங்கு எழுந்தருளியுள்ள முருகப் பொருமானது சிறப்புக்களையும் தனது கதிர்காமத் திருப்புகழ் பாடல்கள் வாயிலாக விபரித்துள்ளார்.
அருணகிரி நாதர் இறுதியாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து அங்கு எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை தரிசித்துள்ளார். அவ்வாலயமே இன்றைய நல்லூர் கந்தசுவாமி ஆலயமாக குறிப்பிடப்படுகின்றது. இதனை நினைவு கூருமுகமாக இன்றைய ஆலயத்தின் தெற்கு வாசல் இராஜகோபுரத்தினைக் கிளிக் கோபுரம் என அழைக்கின்றனர். அதனை நோக்கியவாறு அருணகிரிநாதர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
நன்றி
0 Comments