குங்கிலிய கலய நாயனார்
சித்தத்தைச் சிவன்பால் கொண்ட சைவ நாயன்மார்கள் வாழ்ந்து காட்டிய நமது சைவநெறி, வளர்ச்சி கண்டுள்ளது. அறுபத்து மூன்று தனியடியார் பற்றியும் ஒன்பது தொகையடியார் பற்றியும், அவர்களது வரலாற்றை வகுத்துக் கூறுகின்றது பெரியபுராணம். பன்னிரண்டாம் திருமுறையாக இப்புராணம் சேக்கிழாரால் பாடப்பட்டது. சுந்தரமூர்த்திநாயனாரது திருத்தொண்டத்தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியை வழி நூலாகவும் கொண்டு பெரியபுராணம் ஆக்கப்பட்டது. புராணக்கதை கூறும் நூலாக மட்டுமன்றி சிறந்ததொரு பெருங்காப்பியமாக நிற்பதோடு உள்ளடக்கமாகிய பலவகை நலங்களாலும் ஏனைய பண்டைய காவியங்களையும் விஞ்சியதாக மிளிர்கின்றது. இரண்டு காண்டங்களைக் கொண்ட இக்காப்பியம் பதின்மூன்று சருக்கங்களையும் 4286 பாடல்களையும் கொண்டமைந்தது. 'தொண்டர் சீர் பரவுவார்' எனப்போற்றப்பட்ட சேக்கிழார் சுந்தரமூர்த்திநாயனாரைக் காப்பிய நாயனாகப் படைக்கிறார். இவரது வரலாறு, தடுத்தாட்கொண்ட புராணம், ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணம் சேரமான் பெருமாள் நாயனார் புராணம் என்பன பெரியபுராணத்தைப் பெருமைப் படுத்துகின்றன. சம்பந்தர், அப்பர் புராணங்கள் மிக விரிவாகவும், கண்ணப்பர், சண்டேஸ்வரர், காரைக் காலம்மையார் வரலாறுகள் சற்று விரிவாகவும் அமைந்துள்ள இப்புராணத்தில் குங்கிலியக் கலைய நாயனார் பற்றியும் மிகச்சுருக்கமாகக் கூறி அவரது பக்தியை சைவ உலகிற்குத் தெரியப்படுத்துகின்றார் சேக்கிழார். தொண்டர்தம் பெருமை சொல்லவும்' என்ற கூற்றுக்கிணங்க இந் நாயனார் பற்றி சேக்கிழார் எவ்வாறு கூறுகின்றார் எனக் கற்போம்.
சோழ நாடு காவிரி நதியால் வளம் பெற்றது. அச்சோழ நாட்டின் திருக்கடவூரில் காலனைக் காலால் உதைத்த கங்காதரன் குடிகொண்டிருந்தான். வேதியர்கள் பலர் வாழ்ந்த திருக்கடவூரில் வேத சங்குகள், சாமவேத கானங்கள் எப்போதும் ஒலிக்கும். வயல்களில் எல்லாம் செந்நெற் பயிர்கள் செழித்தோங்கும். நீர் நிலைகளில் எல்லாம் கழுநீர் மலர்கூட்டங்கள் மகிழ்ந்தாடும். நன்னெறிச் செயல்கள் எல்லாம் அங்கு தொழில்களாகும். வானோங்கிய வேள்விச்சாலைகளின் பக்கமாக ஒதுங்கும் மேகங்களும் அவை பொழியும் நீரும் யாகசாலையிலிருந்து எழும்பும் புகையால் மணங்கமழும். அத்தகைய வளமிக்க திருக்கடவூரிலே குங்கிலியநாயனார் திரு அவதாரம் செய்தார்.
குங்கிலியக் கலைய நாயனார் முப்புரி நூல் அணிந்த அந்தணர் செஞ்சடைச் சிவனின் திருவடிகளை நாற்தோறும் வணங்குபவர். சிந்தையில் சிவனை வைத்து நெஞ்சு உருகி, அன்பு பெருகி நிற்கும் சிவனடியார். நல்லொழுக்கம் நிறைந்திருந்த உத்தமர். மார்க்கண்டேய முனிவருக்காக எமனைத் திருக்காலால் உதைத்த அமிர்தகடேசராகிய சிவனுக்குத் திருக்கோயிலிலே நறுமணமிக்க குங்கிலியத்தைத் தூபமாக இடும் வழக்கத்தைக் கொண்டவர். இதனால் குங்கிலியக்கலையர் என அழைக்கப்பட்டார்.
குங்கிலியத்தூபம் செய்து வருமிவர் வாழ்வில் இறைவன் திருவருளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர். வறுமை வந்த போதும் குங்கிலியத்தூபத்தை தவறாமல் நடத்தியவர். நிலங்கள், சொத்துக்களையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர். வறுமையின் எல்லைக்குச் சென்றார். மனைவி, மக்கள், உற்றார் அனைவருடனும் உண்ண ஒரு கவளம் உணவிற்கும் வழியில்லாமல் முழுப்பட்டினியையும் சந்தித்தவர். மனைவியின் வேண்டுகோட்படி தாலியை விற்று நெல்வாங்கச் சென்றவர். வணிகன் ஒருவனது குங்குலியப் பொதியைக் கண்டு முகமலர்ந்து தாலியைக் கொடுத்து அதைப் பெற்ற பக்தியாளர். பெற்றுக்கொண்ட குங்கிலியப்பொதியை தாமதிக்காமல் விரைந்து சென்று அவனுக்கு குங்குலியத்தூபம் இட்டவர். மனைவி, மக்கள், உறவினர், பசி வறுமைத் தன்மையை முற்றாக மறந்தவர். சிவசிந்தையுடன் திருக்கோயிலிலே தங்கிய மிகச் சிறந்த பக்தியாளர்.
அன்றிரவு கலையனாரின் இல்லத்தில் மனைவி உட்பட அனைவரும் பசியால் வருந்தி மிகவும் வாடி உறங்கி விட்டனர். இறைவன் திருவருளால் கலையனார் இல்லத்தில் நெற்குவியலும் பொற்குவியலும் நிரம்பி வழிந்தன. இறைவன் திருவருள்தான் என நினைத்த மனைவி தன் கணவருக்கு உணவு சமைப்பதற்காக சமையலறை செல்கின்றார். ஆனால் கலையனாரோ கோயிலிலே தங்கி இறைசிந்தனையோடு திருத்தொண்டைச் செய்த வண்ணம் இருந்தபோது 'கலையா நீ மிகவும் பசித்திருக்கிறாய், உன்னுடைய இல்லம் சென்று, பாலுடன் கலந்த இனிய சோற்றை உண்டு, பசித்துன்பத்தை ஒழிப்பாயாக" என இறைவன் அசரீரிவாக்கால் உணர்த்தினார். கலையனாரும் இரு கரம் கூப்பிய வண்ணம் இல்லம் சென்றார். அங்கே உற்ற செல்வங்களையெல்லாம் கண்டு வியப்புற்று இவை எல்லாம் எவ்வாறு உண்டாயின என மனைவியைக் கேட்டார். இறைவன் திருவருள்தான் என்று மனைவி கூற, என்னையும் ஆட்கொண்ட எம்பெருமான் இருந்த வண்ணம்தான் என்ன! என்று வியந்து இறைவனைக் கை கூப்பித் தொழுகின்றார். அந்த வேதியரான கலையனார் தன் மனைவியால் பரிமாறப்பட்ட திருவமுதை உண்டு ஆனந்தம் அடைந்தார். அத்துடன் இறைவன் திருவருளால் கிடைத்த செல்வத்தை ஏனைய சிவனடியார்களுக்கும் பகிர்ந்தளிக்கும் பொருட்டு நல்ல அன்னம் செழுமையான காய்கறிகள், தயிர், நெய், பால் முதலானவற்றோடு விருந்திட்டு மகிழ்ந்தார். வழக்கம் போல் தன் திருத்தொண்டையும் செய்து வந்தார்.
இவ்வாறு குங்கிலியக் கலையனார் வாழ்ந்து வரும் நாளில் "திருப்பனந்தாள்” என்னும் ஊரில் ஒரு பெண் மணியின் பூசையை முன்னிட்டு சிவன் தன் திருமேனியைச் சாய்த்ததால் சிவலிங்கத் திருவுருவம் சிறிது சாய்ந்திருந்தது. சோழ மன்னரால் சிவலிங்கத்தை நிமிர்த்தும் முயற்சி கைவிடப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட கலையனார், திருப்பனந்தாள் வந்தடைந்தார். கலையனார் வலிமையான கயிற்றைத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டு சிவலிங்கத்தை நிமிர்த்தினார். இதைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து மலர்மாரி பொழிய, சோழமன்னன் கலையனாரின் திருவடிகளில் தலை வைத்து வணங்கி, தன் நகருக்குச் சென்றடைந்தான். கலையனாரும் சில நாள் இத்தலத்தில் தங்கி இறைவனை வழிபட்ட பின் திருக்கடவூர் வந்து தன் குங்குலியத் திருப்பணியைச் செய்தார்.
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசு நாயனாரும் திருக்கடவூருக்கு அச்சமயம் எழுந்தருளிய போது அவர்களை எதிர்கொண்டு அழைத்து, வணங்கியவர் கலையனார். தன் இல்லத்துக்கு வரவழைத்து திருவமுது படைத்து மகிழ்ந்தவர். சமய குரவர்களது அன்பையும் பெற்றவர். அத்துடன் சிவனது திருவருளையும் பெற்றவர்.
குங்கிலியக் கலையநாயனார் தான் யாருக்காக இவ்வளவு காலமும் வாழத் தலைப்பட்டாரோ அது, சிவனது திருவருளால் கை கூடிவிட்டது. திருக்கடவூர்ப் பெருமானுக்காக வாழ்ந்து, குங்குலியத் தூபம் இட்டு ஈற்றில் சிவபதம் அடைந்தார்.
நன்றி
0 Comments