பஞ்ச பாண்டவர்கள்
பஞ்ச பாண்டவர்கள் என்றால் மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்களுக்கும். இவர்களுள் குந்தி மூலம் தர்மன், பீமன் மற்றும் அர்ஜூனன் ஆகியோரும், மாத்ரி மூலம் நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரும் பிறந்தனர். இவர்கள் ஐந்து பேர் என்பதால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கும், இவர்களின் பெரியப்பாவான திருதராஷ்டிரனின் மகன்களான கௌரவர்களுக்கும் இடையே நடந்த போரான குருட்சேத்திரப் போரே மகாபாரத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
யமுனை நதிக்கரையில் யாதவர்கள் மதுரா எனும் செழிப்பான நகரத்தை அமைத்து அட்சி நடாத்தி வந்தனர்.
சூரசேனனும் குந்தி நாட்டு மன்னன் குந்திபோஜனும் சிறந்த நண்பர்கள். இதன் பயனாக சூரசேனனின் மகளான பிரதையை குந்தி போஜன் தத்தெடுத்து குந்தி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். குந்தியும் திருமண வயதை அடைந்தாள். இதனால் குந்திபோஜன் குந்திக்கு சுயம்வரம் நடத்தினார். சுயம்வரத்தில் கூடி இருந்தவர்களில் குந்தி பாண்டுவை தேர்ந்தெடுத்தாள்.
பீஷ்மர் பாண்டுவிற்கு இரண்டாவதாக மத்திர நாட்டின் மன்னன் சல்யனின் சகோதரியான மாதுரியை திருமணம் முடித்து வைக்க விரும்பினார். இதனால் பீஷ்மர் சல்லியனின் தங்கையின் நிச்சயத்திற்கு பல விலை உயர்ந்த பொருட்களை சீராக கொடுத்தார். அவற்றை ஏற்றுக்கொண்ட சல்லியன் மாத்ரியை பாண்டுவிற்கு மணம் முடித்துக் கொடுத்தார்.
தமது நாட்டு வளத்தை விஸ்தரிக்கும் நோக்குடன் பல நாடுகளை வெற்றிகண்ட பாண்டு குந்தியாலும் மாத்ரியாலும் தூண்டப்பட்டு வனவாசத்தை மேற்கொண்டார்.
ஒருநாள் பாண்டு வேட்டையாட சென்ற போது அவனது அம்பு பெண்மானுடன் முயங்கிக் கொண்டிருந்த ஆண் மானின் உடம்பை தைத்துவிடுகிறது. மான் தாக்கப்பட்டதை கண்ட பாண்டு மானின் அருகில் சென்று பார்த்த போது அவனுக்கு உண்மை தெரிந்தது. அதாவது கிண்டமா என்ற முனிவரும் அவரது மனைவியும் காட்டில் சுதந்திரமாக காதல் செய்யும் நோக்கில் தங்களது தவ வலிமையால் மான்களாக உருமாறி இருந்த சந்தர்ப்பத்திலே இந்த தாக்குதல் நிகழ்ந்தது. கிண்டமா முனிவர் இறக்கும் தருவாயில் பாண்டுவிடம் ஒரு ஆணும் பெண்ணும் காதல் புரிவதை நீ ஆக்ரோசமாக தடுத்துவிட்டாய் இதனால் உனக்கு காதல் சுகம் என்ன என்பது தெரியாமல் போகட்டும், நீ எந்த பெண்ணையும் காதல்கொண்டு தொட்டால் உடனே இறந்து போவாய் என்று சாபமிட்டார்.
ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாதவன் அரசன் ஆகமுடியாது என வருந்திய பாண்டு அத்தினாபுரம் செல்ல மறுத்து சதஸ்ருங்க வனத்தில் முனிவர்களுடன் தங்கிவிடுகிறான். இச்செய்தி அத்தினாபுரத்தை அடைகிறது. பாண்டு இல்லாத சமயத்தில் அத்தினாபுரத்தின் ஆட்சியை பீஷ்மர் திருதராட்டிரனுக்கு கொடுத்தார் . சில மாதங்களில் திருதராட்டிரனின் மனைவியான காந்தாரி கருவுற்ற செய்தி பாண்டுவுக்கு தெரியவந்தது. இதனால் கவலை அடைந்த பாண்டு ஒரு முடிவெடுத்தான். சுவேதகேது எனும் முனிவரின் நியதிப்படி ஒரு பெண்ணின் கணவர் விரும்பும் பட்சத்தில் அப்பெண் வேறொறு ஆணுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம், அதன்படி தன்னுடன் இருந்த குந்தியை அழைத்து, நீ யாராவது ஒரு முனிவரின் மூலமாக ஒரு குழந்தையை பெற்றுக்கொள் என வேண்டினான்.இதனால் குந்தி தேவர்களையே அழைக்க முடியும் போது ஏன்? முனிவர்களை அழைக்க வேண்டும் என கூறி, எமதர்மன் மூலம் தர்மனையும், வாயு பகவான் மூலம் பீமனையும், இந்திரன் மூலம் அருச்சுனனையும், பெற்றெடுத்தாள். பின்பு பாண்டு குந்தியிடம் நீ வேறொரு தேவனை அழைத்து நான்காவதாகவும் ஒரு குழந்தையை பெறச் சொன்ன போது அதற்கு குந்தி நான் மூவருடன் இருந்தாயிற்று நான்காவதாகவும் ஒருவருடன் இருந்தால் என்னை வேசி என்று உலகம் தூற்றும். இதுதான் தர்மமும் என மறுத்துவிடுகிறாள். இதனால் பாண்டு நீ மாத்ரிக்காக ஒரு தேவனை அழை என்று சொன்னான். இதை பற்றி மாத்ரியிடம் கூறிய போது அவள் காலை, மாலை நட்சத்திரங்களான அஸ்வினி தேவர்களை அழைக்கச் சொன்னாள். இவர்கள் இருவரின் மூலமும் மாத்ரிக்கு நகுலனும், சகாதேவனும் பிறந்தார்கள். இப்படியாக பிறந்தவர்களை பாண்டவர்கள் என்று அத்தினாபுரத்து மக்கள் அழைத்தனர். இவர்கள் ஐந்து பேர் என்பதனால் பஞ்ச பாண்டவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
பஞ்ச பாண்டவர்கள்
நன்றி
0 Comments