மகாபாரதம் பகுதி - 04
பேரழகி கங்காதேவி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்த சந்தனு, பெண்ணே! நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு அழகுக்கன்னியை நான் எனது வாழ்நாளில் இதுவரையில் பார்த்ததும் இல்லை. நான் இந்த பூவுலகில் மிகச்சிறந்த அரசன் என்ற வகையில் , உன்னை மணந்து கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறது. நீ எவராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எனக்கு வேண்டும். எனவே என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? என்று சங்கோஜத்துடன் கேட்டான். அதைக்கேட்ட கங்காதேவி தலை குனிந்து வெட்கப்பட்டு நின்றாள். மவுனமொழி சம்மதத்திற்கான அறிகுறி என்பதைப் புரிந்து கொண்ட சந்தனு, பெண்ணே! நீ உனது மவுனத்தைக் கலைத்து விட்டு நேரடியாக பதில் சொல், என்றான். அதற்கு கங்காதேவி , சந்தனுவிடம், மன்னா! உன்னைத் திருமணம் செய்து கொள்ள நான் சம்மதிக்கிறேன். ஆனால், தாங்கள் எனது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். அதற்கு சம்மதமென்றால், திருமண ஏற்பாடுகளைச் செய்யலாம், என்றாள்.
கங்காதேவியின் பேரழகியின் மெய்மறந்து நின்ற சந்தனு, அவளுக்கு கட்டுப்பட்டு அவள் விதித்த நிபந்தனைகளைக் கேட்டான். மன்னா! நான் தங்களின் மனைவியான பிறகு , நான் என்ன செய்தாலும் என்னை மறுத்து கேள்வி கேட்கக்கூடாது. என்றாள். இதைக் கேட்ட மன்னனுக்கு இதை ஏற்பதா , இல்லை மறுப்பதா என்ற குழப்பம் இருந்தாலும், மோகத்தின் பிடியில் சிக்கியிருந்த அவன் சரியென சம்மதித்து விட்டான்.
இதுவே மகாபாரதத்தின் ஆரம்பமாகும். இந்த பாரதக் கதையின் துவக்கமே மனிதகுலத்துக்கு , பெண்ணாசைக்கு ஒருவன் அடிமையாகி விட்டால், அவன் படப்போகும் துன்பங்களின் எல்லைக்கு அளவிருக்காது. என்பதை கற்றுத்தருவதாக அமைந்திருக்கின்றது. இக்கதையில் சந்தனு தன் அழிவின் முதல் கட்டத்தில் அடியெடுத்து வைக்கப்போவதை அவதானியுங்கள் . பேரழகியே! கலங்காதே, நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன். நீ நாட்டைக் கேட்டால் உனது பெயரில் எழுதி வைக்கிறேன். அரச செல்வமும் உன்னுடையது. நீ என்ன சொல்கிறாயோ, அதன்படியே நான் நடக்கிறேன், எனச் சொல்லி அவள் முன்னால் மண்டியிட்டு நின்றான் சந்தனு.
சந்தனு சொன்ன சொல் மாறமாட்டான் என்பதைப் புரிந்து கொண்ட கங்கா, அவனைத் திருமணம் செய்து கொண்டாள். உலகிலேயே இதுவரையில் கண்டிராத அந்த அழகியை அனுபவிப்பதில் மட்டுமே சுகம் கண்ட சந்தனு, ராஜ்ய விஷயங்களைக் கூட மறந்து விட்டான். அனைத்தும் கங்காவின் விருப்பப்படியே நடந்தது. இந்த நிலையில் கங்காதேவி கர்ப்பமானாள். சந்தனுவுக்கு சொல்லமுடியாத மகிழ்ச்சி. அவளைக் கண்ணும் கருத்துமாக பாதுகாத்தான். அவளது உடல் அதிரக்கூடாது என்பதற்காக மலர்கள் பரப்பிய பாதையில் நடக்க வைத்தான்.
பிரசவ நாள் வந்தது. கங்கா அழகான ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். சிறிதுகாலம் கடந்ததும், அக்குழந்தையை எடுத்துக் கொண்டு கங்கைக்கு சென்றாள் . இவள் யாரிடமும் சொல்லாமல் எங்கே போகிறாள் எனக்கருதிய சந்தனு அவளைப் பின் தொடர்ந்து சென்றான். அவள் செய்த செயலைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டான். அதுவரை தேவதையாக திகழ்ந்த கங்கா, இப்போது அரக்கியாகத் தெரிந்தாள். ஆம். பெற்றெடுத்த குழந்தையை ஆற்றில் வீசியவளை என்னவென்று சொல்வது? கோபத்தின் விளிம்பிற்கே சென்ற சந்தனுவிடம் அவனது இதயம் பேசியது. சந்தனு நில்! நீ காம வயப்பட்டு, இவளை மணந்தாய். இவள் உன்னை திருமணம் செய்யும் முன், நான் என்ன செய்தாலும், கேள்வி கேட்கக்கூடாது. அது கொடூரமான செயலாக இருந்தாலும் சரி... என சொன்னாள் அல்லவா? இப்போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அவளைக் கேட்கப் போகிறாய்? என்றது.
தொடரும் .....
0 Comments