மகாபாரதம் பகுதி - 03
வந்தவன் வேறு யாரும் இல்லை . யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன்களில் ஒருவனான பூரு தான்! அப்பா! தாங்கள் அழ வேண்டிய அவசியம் என்ன? உங்களுக்கு உதவுவதற்கு நான் எப்போதுமே தயாராக இருக்கிறேன் . சொல்லுங்கள்! நான் என்ன செய்ய வேண்டும்? என்றான். அதற்கு யயாதி , அன்பு மகனே! ஒரு தந்தை மகனிடம் யாசிக்கக் கூடாத ஒன்றை யாசிக்கிறேன். இந்த உலகத்திலேயே கொடூரமான வியாதி என்றால் அது பெண்ணாசைதான். அது என்னிடம் அதிகமாகவே இருக்கிறது.
உனது பெரிய அன்னையான தேவயானையை மணம் முடித்திருந்தும் , அவளது தோழியான உனது அன்னை மீதும் ஆசைப்பட்டேன். மன்னர் குலத்துக்கு இது தர்மம் தான் என்றாலும், உனது பெரிய அன்னை கோபித்துக் கொண்டு போய் விட்டாள். எனது மாமனார் சுக்ராச்சாரியாரும் எனது இளமையைப் பறித்து விட்டார். உடல்தான் முதுமை அடைந்துள்ளதே தவிர, மனதில் இளமை உணர்வு இன்னும் என்னை விட்டு அகல மறுக்கிறது. இந்த நோயில் இருந்து நான் விடுதலை பெற வேண்டுமானால், எனக்கு இளமை மீண்டும் வேண்டும். இளமை திரும்பினால் தான், உனது தாய் என்னை அவள் அருகே வர அனுமதிப்பாள், என்று கூறினான். தந்தையின் நிலையை புரிந்து கொண்ட பூரு யயாதியை கட்டியணைத்து தந்தையே! எனது இளமையை உங்களுக்கு தந்து உங்கள் முதுமையை ஏற்கிறேன் . நீங்கள் , சுக்ராச்சாரியார் சொன்னபடி சாப விமோசனம் பெற்று , எனது அன்னையோடு சுகமாக வாழுங்கள். உங்களுக்கு என் இளமையை எப்போது திருப்பித் தர முடியுமோ அன்று தாருங்கள், என்றான்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த யயாதி மகனைப் பாராட்டி அவனிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டு தன் மனைவியோடு காலம் கழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஒரு கட்டத்தில், ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தன் மகனிடம் அவனது இளமையை திருப்பி கொடுத்து விட்டு முதுமையைப் பெற்றுக் கொண்டான். இவ்வாறாக சந்திரவம்சம் தியாக வம்சமாகத் திகழ்ந்ததோடு பூருவின் வம்சமும் விருத்தியாகிக் கொண்டே வந்தது. இவர்களில் பரதன் என்ற மன்னன், மண்ணுலகிலும் , விண்ணுலகிலும் வெற்றிக்கொடி நாட்டினான். இந்த வம்சத்தில் வந்த மற்றொரு மன்னனான ஹஸ்தியின் ஆட்சிக்காலம் தான் பிற்காலத்தில் சந்திர வம்சத்தின் முக்கிய காலமாக கருதப்பட்டது. இவன் தன் பெயரால் ஒரு பட்டணத்தை அமைத்துக் கொண்டதோடு , அதனை தன் நாட்டுக்கு தலைநகரமாகவும் ஆக்கினான்.
அவ்வூரே ஹஸ்தினாபுரம் என்றழைக்கப்பட்டது . ஒரு காலத்தில் கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து காப்பாற்ற விஷ்ணு கருட வாகனத்தில் வந்தார். பிற்காலத்தில் அந்த யானை, இந்திரத்யுநன் என்ற பெயரிலும், முதலை அநுரு என்ற பெயரிலும் பூமியில் சந்திரகுலத்து மன்னர்களாகப் பிறந்தனர். இவர்களுக்கு பின் குரு என்ற மன்னன் ஹஸ்தினாபுரத்து அரசனாக பொறுப்பேற்றான்.இவன் மிகச்சிறப்பாக ஆட்சி செய்ததால், சந்திரகுலம் என்ற பெயர் மறைந்து குரு குலம் என்ற பெயரில் சந்திர வம்சம் அழைக்கப்பட்டது.குருகுலத்தில் பிறந்த மன்னன் சந்தனு மிகவும் அழகானவனும் , வேட்டையாடுவதில் விருப்பமுள்ளவனுமாக திகழ்ந்தான் .ஒருமுறை காட்டிற்கு சென்றிருந்த சந்தனு தாகத்தால் தவித்தபோது, அவன் குதிரையில் வேகமாக கங்கைக்கரைக்குச் சென்றான். கங்கைக்கரையில் ஒரு பெண் ஒய்யாரமாக நடந்து கொண்டிருந்தாள். தண்ணீர் அருந்த வந்த சந்தனு, தனது தாகத்தை மறந்து தாபத்தால் தவித்தான்.
ஆஹா...இப்படி ஒரு அழகியா? மணந்தால் இவளைத் தான் மணக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். இவள் எந்த நாட்டு இளவரசி? இவளைப் பெண் கேட்க வேண்டுமே! என்ற ஆசையுடன், சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கு யாருமில்லை என்று தெரிந்தவுடன் அவளருகே துணிச்சலுடன் சென்ற சந்தனு, பேரழகியே! நீ யார்? யாருமில்லாத இடத்தில் தனியாகத் திரிகிறாயே! உன்னை யாராவது அபகரித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வாய்? உன் இருப்பிடத்தைச் சொல். நான் உன்னைப் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கிறேன், என்றான்.
இதை கேட்ட அவள் கலகலவென நகைத்தாள். பேரழகியே! உன் நன்மை கருதி தான் எச்சரிக்கிறேன். ஆனால் நீ கேலி செய்வது போல நகைக்கிறாயே! இருந்தாலும், முத்துகள் சிதறுவது போல், உந்தன் நகைப்பும் இனிமையாகத்தான் இருக்கிறது! என்று கண் சிமிட்டினான். அதற்கு அவள் திரும்பவும் நகைத்தபடியே, இளைஞனே! எனக்கு பயமா? இன்று நள்ளிரவில் நீ இங்கே இரு. நீ பயப்படுகிறாயா? நான் பயப்படுகிறேனா என்பது உனக்குப் புரியும். இரவும், பகலுமாய் நான் இங்கே தான் இருக்கிறேன். இனியும் இருப்பேன். இந்த பூமி உள்ளளவும் இருப்பேன். இன்னும் பல யுகங்கள் இருப்பேன். ஆனால், அழியும் மானிட பிறவி அடுத்த நீ, என்னை இங்கிருந்து போகச் சொல்கிறாய், என்று அலட்சியமாகப் பேசினாள். அதற்கு சந்தனு அப்படியானால் நீ தேவலோக கன்னிகை தான் சந்தேகமேயில்லை.
பூலோகத்தில், இத்தகைய லட்சணமுள்ள ஒரு பெண்ணை நான் இதுவரையில் பார்த்ததேயில்லை. சரி...இருக்கட்டும். தேவதையான நீ பூமியில் பிறந்ததால், நான் உன்னை அடைய முடியாதா? உன்னை அடையும் தகுதிதான் எனக்கில்லையா? என்றான். சந்தனுவைப் பார்த்த படி நின்ற அப்பெண், தனது தற்போதைய நிலையை நினைத்தாள். அவளது பெயர் கங்கா. ஒரு சமயம் அகபாவத்தின் காரணமாக, பூமியில் ஒரு மானிடனிடம் காலம் கழிக்க வேண்டும் என்ற சாபம் பெற்றவள். அதற்கு இவன்தான் சரியான ஆள் எனக் கருதிய கங்கா, அவன் யார் என்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பின்னர் அவள், அன்பனே! எனது பெயர் கங்கா. நதிகள் பெண்ணுருவமாக இருப்பதை நீர் அறிந்திருப்பீர் அந்த வகையில் நான் இந்த கங்கை நதியாக இருக்கிறேன். ஒரு சாபத்தால் இந்த பூமிக்கு நான் வந்தேன், என்றாள்.
தொடரும் .....
0 Comments