சந்தானகுரவர்
அன்பு வழியில் நின்று, பக்திப் பனுவல்களைப் பாடி சைவசமயத்தை வளப்படுத்திய பெரியோர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சமய குரவர் என அழைப்பது சைவமரபு. இவ்வாறே, அறிவு வழியாலும் இறைவனை அடையலாம் என்பதனைக் காட்டி, சைவசித்தாந்தக் கருத்துக்களை விளக்கம் செய்த பெரியோர்கள் நால்வரைச் சந்தானகுரவர் என அழைப்பதும் சைவமரபாகும்.
சந்தான குரவர்களது சிறப்புக்களை சந்தானாசாரிய புராண சங்கிரகம் குறிப்பிடுகின்றது. சைவ சமய ஆசாரியர்களை சமயாசாரியர்கள் என்றும் சந்தனாசாரியர்கள் என்றும் இருவகையாக வழங்குவது சைவசமய மரபு ஆகும். சமயக் குரவர் நால்வரையும் சமயாசாரிகள் என குறிப்பிடுவர். ஒருவருக்கு புத்திர சந்தானம் போல, இடையறவுபடாமல் வழிவழியாக ஞானபுத்திரர்களாய் உபதேசக்கிரமத்தில் சைவமரபினைக் காத்தவர்களாதலின் இவர்களை சந்தானகுரவர் எனவும், சந்தனா சாரியர்கள் எனவும் அழைப்பர். இவர்களது பரம்பரையில் வந்தவர்களே தற்போது தமிழ் நாட்டில் விளங்கும் சைவ ஆதீனங்களை நடத்துபவர்களாவர்.
சந்தானம் என்றால் பரம்பரை என்றும், குரவர் என்றால் ஞானாசிரியர் என்றும் பொருள்படும். எனவே, சந்தானகுரவர் என்பது, தத்துவஞான பரம்பரையில் வந்த ஞானாசிரியர்களைச் சுட்டுகின்றது. இவர்கள் இரு வகையாகச் சுட்டப்பெறுகின்றனர். ஒரு வகையினர் அகச்சந்தானகுரவர் என்றும், மறு வகையினர் புறச்சந்தானகுரவர் என்றும் அழைக்கப்பெறுகின்றனர்.
பரம்பொருளாகிய ஸ்ரீ கண்ட பரமேஸ்வரனிடத்திலே ஞான உபதேசம் பெற்ற திருநந்தி தேவரும், அவரது மாணவர் பரம்பரையில் வந்த சனற்குமார முனிவர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும் அகச்சந்தானகுரவர் எனப்படுகின்றனர்.
பரஞ்சோதி முனிவரிடம் உபதேசம் பெற்ற மெய்கண்டதேவரும் அவர் மாணவ பரம்பரையில் வந்த அருணந்தி சிவாசாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாசா ரியார் ஆகிய நால்வரும் புறச்சந்தானகுரவர் எனப்படுகின்றனர்.
திருநந்தி தேவர்
சனற்குமார முனிவர்
சத்தியஞான தரிசினிகள்
பரஞ்சோதி முனிவர்
நன்றி
0 Comments