உயர்தர மாணவர்களுக்கான திருக்குறள் - THIRUKKURAL FOR A/L STUDENTS


உயர்தர மாணவர்களுக்கான
 
திருக்குறள் 


உயர்தர மாணவர்களுக்கான திருக்குறள் - THIRUKKURAL FOR A/L STUDENTS


அறிமுகம் 

தென்னிந்திய தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்கமருவிய காலத்தில் எழுந்த அற நூலாக திருக்குறள் விளங்குகின்றது. திருவள்ளுவர் எனும் பெருந்தகை ஆக்கிய இந்நூலானது உலகப்புகழ் வாய்ந்த நீதி நூலாக திகழ்கின்றது. திருக்குறளானது முப்பால் நூல், உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை முதலிய வேறு பெயர்களால் சிறப்பிக்கப்படுகின்றது.

திருக்குறளானது 07 சீர்களைக் கொண்ட 1 ¾ அடியினாலான குறள் வெண்பா யப்பால் பாடப்பட்டதாகும். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகிய முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்ட திருக்குறளில் ஒரு அதிகாரத்தில் 10 குறளும் காணப்படுகின்றன. திருக்குறளுக்கு உரை எழுதியோரில் பரிமேலழகர் உரையே தலைசிறந்ததாகும். பொருட்பாலில் 70 அதிகாரங்கள் அமைந்துள்ளதுடன் அதன் முதற்பகுதியான அரசியல் 25 அதிகாரங்களை கொண்டது.

அரசியலில் இடம்பெறும் 25 அதிகாரங்களில் இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி என்பவற்றை தொடர்ந்து வைக்கப்பட்டுள்ள அறிவுடைமை முதல் தெரிந்து வினையாடல் வரையான 10 அதிகாரங்கள் எமது பாடப்பரப்பில் இடம்பெறுகின்றன.

01. அறிவுடைமை 
02. குற்றங்கடிதல் - 
உவமையணி - 03, 05

03. பெரியோரைத் துணைக்கோடல் - 2020 - உவமையணி - 09, உருவக அணி - 05
04. சிற்றினஞ் சேராமை - உவமையணி - 02
05. தெரிந்து செயல்வகை - 2022 - உவமையணி - 05
06. வலியறிதல் - 2021 - ஒட்டணி - 05, 06
07. காலமறிதல் - 2019 - உவமையணி - 01, 06, 10
08. இடனறிதல் - 2023 - ஒட்டணி - 05, 06, 10
09. தெரிந்து தெளிதல் 
10. தெரிந்து வினையாடல்


அறிவுடைமை


அதிகார வைப்பு முறை

அரசியல் எனும் பகுதியில் கல்வி, கேள்வி ஆகிய அதிகாரங்களை தொடர்ந்து அறிவுடைமை எனும் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. அரசன் கல்வி, கேள்விகளினாலான அறிவோடு உண்மை அறிவுடையவனாக இருக்க வேண்டும். இக்காரணத்தால் அறிவுடைமை எனும் அதிகாரம்  கல்வி, கேள்வி ஆகிய அதிகாரங்களை தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது. .


பிரிப்பு

அறிவினது சிறப்பு - 01
அறிவினது இலக்கணம் - 02, 03, 04, 05, 06
அறிவுடையோரது இலக்கணம் - 07, 08
அறிவுடையார்க்கு துன்பம் ஏற்படாமை - 09
அறிவுடையாரது உடைமையும் ஏனையோரது இன்மையும்  - 10


அறிவினது சிறப்பு - 01

01. 
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழி்க்கல் ஆகா அரண்.

அரசனுக்கு அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அதுவுமன்றி பகைவனுக்கு அழிக்க முடியாத அரணுமாகும். 


அறிவினது இலக்கணம் - 02, 03, 04, 05, 06

02. 
சென்ற இடத்தால் செல விடா தீது ஒரீஇ   
நன்றின் பால் உய்ப்பது அறிவு.

மனதை அது சென்ற இடத்தின் கண் செல்ல விடாது தீயவற்றை நீக்கி நல்லவற்றின் வழியே செலுத்துவது அறிவாகும். 

03.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எந்தப்பொருளை எவர் சொல்ல கேட்டாலும், அந்தப்பொருளின் உண்மையான பயனைக் காணவல்லது அறிவாகும்.

04.
எண் பொருளவாகச் செலச் சொல்லித் தான் பிறர் வாய்
நுண் பொருள் காண்பது அறிவு.

தான் சொல்லும் சொற்களை அரிய பொருளாயினும் கேட்பவருக்கு எளிய பொருளாகுமாறு மனம் கொளச்சொல்லி, பிறர் சொல்லும் பொருள் அரியதாயினும் அதனை காணவல்லது அறிவாகும். 

05.
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் 
கூம்பலும் இல்லது அறிவு.

உயர்ந்த அறிவுடைய உலகத்தவரை நட்பாக்கி கொள்வது ஒருவனது சிறந்த அறிவாகும். அத்தகைய நட்பு முதலில் மலர்தலும் பின்னர் கூம்பலும் இன்றி ஒரே நிலையில் இருக்கச் செய்தல் அறிவாகும். 

06.
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு                 
அவ்வது உறைவது அறிவு.

உலகம் எவ்வாறு நடைபெறுகிறதோ, அதனை ஒட்டி அதன்படி ஒழுகுவது அரசனுக்கு அறிவாகும். 


அறிவுடையோரது இலக்கணம் - 07, 08

07.
அறிவு உடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லாதவர்.

சிறந்த அறிவுடையவர்கள் எதிர்காலத்தில் நிகழ இருப்பதை தூர திருஷ்டியால் அறிந்து கொள்வர், அறிவற்றவர்கள் அதனை முன்னறிய மாட்டார். 

08.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது                
அஞ்சல் அறிவார் தொழில்.

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருந்தால் பேதைமை அஞ்சத்தக்கது இது என அறிந்து அஞ்சுதல் அறிவுடையார் செயலாகும். 


அறிவுடையார்க்கு துன்பம் ஏற்படாமை - 09

09.
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை                  
அதிர வருவது ஓர் நோய்.

எதிர்காலத்தில் வரக்கூடிய தீமையை முன்னறிந்து அதிலிருந்து தம்மை காக்க வல்ல அறிவுடையோர்க்கு, அவர் நடுங்கும் வண்ணம் ஏற்படக்கூடிய துன்பமில்லை. 

அறிவுடையாரது உடைமையும் ஏனையோரது இன்மையும்  - 10 

10.
அறிவு உடையார் எல்லாம் உடையார்                         
அறிவு இலார் என் உடையரேனும் இலர்.

அறிவுடையார் தம் அறிவினால் பிறிதொன்றும் இலர் ஆயினும் எல்லாம் உடையவராய் தம்மை நிறைவு செய்வார். அறிவில்லாதவர் எல்லாம் உடையவராயினும் ஒன்றும் இல்லாதவராவார்.


குற்றங் கடிதல்


அதிகார வைப்பு முறை

குற்றங்கடிதல் என்பது காமம், வெகுளி, கடும் பற்றுள்ளம், மானம், உவகை, மதம் எனப்பட்ட ஆறு குற்றங்களையும் ஓர் அரசன் தன்னிடத்தில் நிகழாதவாறு கடிந்து கொள்ளலாகும். குற்றத்தை இனங்காணும் இயல்பு அறிவுடையோரது இடத்தில் விளங்குவதால் அறிவுடைமையின் பின் குற்றங்கடிதல் எனும் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.


பிரிப்பு

குற்றங்களை இனங்காணல் - 01, 02
குற்றங்களை நீக்கும் பொதுவான முறை - 03, 04, 05, 06
குற்றங்களை நீக்கும் சிறப்பான முறை - 07, 08, 09, 10
அணிப்பிரயோகம் - உவமையணி - 03, 05


குற்றங்களை இனங்காணல் - 01, 02

01.
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்                 
பெருக்கம் பெருமித நீர்த்து.

அகந்தை, கோபம், காமம் ஆகிய குற்றங்களை கொண்டிராதவரின் செல்வம் மேம்பாடுடையது.

02.
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா   
உவகையு்ம் ஏதம் இறைக்கு.

உலோகத்தன்மையும், மாட்சிமையில்லாத மான உணர்வும், சிறப்பற்ற மகிழ்ச்சியும் அரசனுக்கு குற்றங்களாகும். 


குற்றங்களை நீக்கும் பொதுவான முறை - 03, 04, 05, 06

03.
தினைத் துணையாம் குற்றம் வரினும் பனைத் துணையாக்                                          
கொள்வர் பழி நாணுவார்.

பழிக்கு அஞ்சுவோர் தமக்கு ஏற்படக்கூடிய தினை அளவு குற்றத்தையும் பனை அளவாகக் கொள்வர். 

04.
குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை.

ஒருவனுக்கு அழிவைத்தரும் பகை குற்றமே, ஆதலால் அது தன்னிடம் ஏற்படாமல் தன்னைக்காப்பதையே குறிக்கோளாக கொள்ள வேண்டும்.

05.
வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்                                     
வைத் தூறு போலக் கெடும்.

குற்றம் உண்டாகுவதற்கு முன்பே உண்டாகாதவாறு காத்துக்கொள்ளாத அரசனின் வாழ்க்கை நெருப்பின் எரிமுகத்து வைத்த வைக்கோல் போன்று அழிந்துவிடும். 

06.
தன் குற்றம் நீங்கிப் பிறர் குற்றம் காண்கில் பின்                   
என் குற்றம் ஆகும் இறைக்கு.

முதலில் தன் குற்றத்தினைப் போக்கி பின் பிறர் குற்றத்தினை காண முற்படும் அரசனுக்கு உண்டாகத்தக்க குற்றம் யாது ? ஒன்றும் இல்லை.


குற்றங்களை நீக்கும் சிறப்பான முறை - 07, 08, 09, 10

07.
செயல் பால செய்யாது இவறியான் செல்வம்                       
உயற்பாலது அன்றிக் கெடும்.

பொருளால் தனக்குச் செய்ய வேண்டியதை செய்யாமல் கஞ்சத்தனத்தோடு சேர்த்து வைத்தவனது செல்வம் பின்னர் உய்வதற்கு இடமின்றி அழிந்து போகும்.

08.
பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்                
எண்ணப் படுவது ஒன்று அன்று.

பொருளிலே பற்றுக்கொண்டு எவருக்கும் ஈயாத உலோகத் தன்மை, எக்குற்றத்துள்ளும் அடங்காத தனி இயல்புடைய ஒரு குற்றமாகும். 

09.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க                                          
நன்றி பயவா வினை.

தம்மைத்தாம் புகழ்கின்ற தற்புகழ்ச்சியை கொள்ள வேண்டாம். தனக்கு நன்மை தராத செயலையும் செய்ய வேண்டாம். 

10.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்                      
ஏதில ஏதிலார் நூல்.

தனது விருப்பத்தை பிறர் அறியாதவாறு அனுபவிக்க வல்லவனாயின் அவனை பகைவர் வஞ்சித்து செய்யும் சூழ்ச்சிகள் அவனிடம் பலிக்க மாட்டா.


அணிப்பிரயோகம் - உவமையணி - 05

குற்றங்கடிதல் எனும் அதிகாரத்தில் 5 ஆவது குறளில் உவமையணி கையாளப்பட்டுள்ளது. 


03.
தினைத் துணையாம் குற்றம் வரினும் பனைத் துணையாக்                                          
கொள்வர் பழி நாணுவார்.

பழிக்கு அஞ்சுவோர் தமக்கு ஏற்படக்கூடிய தினை அளவு குற்றத்தையும் பனை அளவாகக் கொள்வர். 

05.
வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்                                          
வைத் தூறு போலக் கெடும்.

எனும் குறளில், குற்றம் உண்டாவதற்கு முன்பே அது உண்டாகாதவாறு காத்துக்கொள்ளாத அரசனின் வாழ்க்கை நெருப்பின் எரிமுகத்து வைத்த வைக்கோல் அழிந்துவிடும் தன்மைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றங்களை கடிந்து கொள்வதற்கான பொதுவழிப் பண்புகள் பாடப்பட்டுள்ளன.
 
இக்குறளில் உவமையணி பாடப்பட்டதன் நோக்கம், குற்றங்களில் இருந்து அரசன் விடுபட வேண்டும் அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் அரசனுக்கு அழிவு ஏற்படும் என்பதை எடுத்துரைப்பதாகும்.

அரசனுக்கு குற்றங்கள் ஏற்படும்போது அவருக்கு அழிவு உடனடியாக ஏற்படுவதனால் இங்கு  நெருப்பின் எரிமுகத்து வைத்த வைக்கோல் அழிந்துவிடும் தன்மைக்கு உவமிக்கப்பட்டுள்ளது.


பெரியோரைத் துணைக்கோடல் 


அதிகார வைப்பு முறை
 


ஆறு வகையான குற்றங்களையும் நீக்கி, காவல் சக்கரத்தை செலுத்துவதற்குரிய அரசன், தீய நெறியை விளக்கி, நன்நெறி செலுத்தும் பேரறிவு உடையோரை தனக்குத் துணையாக கொண்டு இருத்தல் பெரியோரை துணை கோடல் எனப்படும். பேரறிவுடையார் என்போர் அரசருக்கும், அரச அங்கங்களுக்கும் மானுட, தெய்வக் குற்றங்கள் வராமல் காக்கும் அமைச்சர், புரோகிதர் முதலியவர் ஆவர். குற்றங்களிலிருந்து அரசன் தெளிவடைய பெரியோரின் துணை அவசியமானமையால் குற்றங்கடிதலுக்கு பின்பு இவ்வதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.


பிரிப்பு


பெரியோரது இலக்கணமும், அவரை துணையாகக் கோடல் வேண்டும்,  அவரை கொள்ளுமாறும் கூறல் - 01, 02
பெரியோரை துணைக்கோடலின் சிறப்பு - 03, 04, 05
பெரியோரை துணைக்கோடலின் பயன் - 06, 07
பெரியோரை துணைக்கோடலின் குற்றம் - 08, 09, 10
அணிப்பிரயோகம் - உவமையணி - 09


பெரியோரது இலக்கணமும், அவரை துணையாகக் கோடல் வேண்டும்,  அவரை கொள்ளுமாறும் கூறல் - 01, 02

01.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை 
திறனறிந்து தேர்ந்து கொளல்.

தர்மம் இதுவென அறிந்த மூத்தோரை ஆராய்ந்து அவருடன் நட்பு கொள்ள வேண்டும். 

02.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் 
பெற்றியார்ப் பேணிக் கொளல்.


பெரியோரை துணைக்கோடலின் சிறப்பு - 03, 04, 05

தனக்கு வந்த துன்பங்களை நீக்கும் வழியறிந்து நீக்கி, பின்னரும் அத்தகைய துன்பம் ஏற்படாமல் முன்னரே அறிந்து காக்க வல்ல இயல்புடையாரை அரசன் துணையாக கொள்ள வேண்டும். 

03.
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் 
பேணித் தமராக் கொளல்.

பெரியாரை போற்றிப் பேணி தம்மவராக கொள்ளல் அரசனுக்கு அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அரியதாகும். 

04.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் 
வன்மையு ளெல்லாந் தலை.

அறிவு, ஆற்றல் முதலியவற்றால் தம்மிலும் மேலானவரை தம்மவராகக் கொண்டு தாம் அவர் வழி நின்று ஒழுகுதல் அரசருக்குறிய வல்லமைகள் அனைத்திலும் தலையானதாகும்.
 
05.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் 
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

அமைச்சரை கண்ணாக கொண்டு அரசினை நடத்த வேண்டி இருப்பதால் அரசன் அத்தன்மையான அமைச்சரை ஆராய்ந்து தனக்கு துணையாகக் கொள்ள வேண்டும். 


பெரியோரை துணைக்கோடலின் பயன் - 06, 07

06.
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் 
செற்றார் செயக்கிடந்த தில்.

தகுதி வாய்ந்த பெரியோரை இனத்தவராகக் கொண்டு தானும் ஒழுகவல்ல அரசனை அவன் பகைவர் செய்யக் கூடிய தீங்கு யாதும் இல்லை. 

07.
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே 
கெடுக்குந் தகைமை யவர்.

நீதியற்ற நெறியில் அரசன் செல்கையில் அது தவறென இடித்துரைக்கும் துணைவரை சிறந்தவரெனக் கொள்ளும் அரசனை கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்தில் யார் உளர் ? யாருமில்லை.


பெரியோரை துணைக்கோடலின் குற்றம் - 08, 09, 10

08.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பா ரிலானுங் கெடும்.

தன் தவறுகளை இடித்துரைத்து திருத்துவோரை துணையாக கொள்ளாத அரசன் தன்னை கெடுக்க வல்ல பகைவர்கள் இல்லாமலே கெட்டழிவான். 

09.
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் 
சார்பிலார்க் கில்லை நிலை.

முதலின்றி வணிகம் செய்வார்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை.
இதுபோன்று தம்மை தாங்கி காப்பாற்ற வல்ல துணைவரற்ற அரசனுக்கு நிலைத்த வாழ்வில்லை. 

10.
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே 
நல்லார் தொடர்கை விடல்.
தான் தனித்து நின்று பலரோடும் பகை கொள்ளுதலின் பத்து மடங்கு தீமையானது பெரியோரின் நட்பை கொள்ளாது விடலாகும்.


அணிப்பிரயோகம் - உவமையணி - 09

பெரியோரை துணைக்கோடல் எனும் அதிகாரத்தில் 9 ஆவது குறளில் உவமையணி கையாளப்பட்டுள்ளது. 

09.
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் 
சார்பிலார்க் கில்லை நிலை.

எனும் குறளில் தம்மை தாங்கி காப்பாற்ற வல்ல துணையற்ற அரசனுக்கு நிலைத்த வாழ்வில்லை என்பது முதலின்றி வணிகம் செய்வோருக்கு ஊதியம் கிடைக்காத தன்மைக்கு உவமித்து கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரியோரை துணைக்கோடாதவரின் குற்றம் கூறப்பட்டுள்ளது. 

இக்குறள் பாடப்பட்டதன் நோக்கம், இக்குறளில் உவமையணி கையாளப்பட்டுள்ளதன் நோக்கம், என்பவற்றை நோக்கும்போது பெரியோரை துணைக்கோடாதவர்க்கு ஏற்படும் இழுக்கை எடுத்துரைப்பதற்கே ஆகும்.


சிற்றினஞ் சேராமை 


அதிகார வைப்பு முறை 

சிற்றினஞ் சேராமை என்பது சிறிய இனத்தை பொருந்தாமையாகும். சிறிய இனமாவது நல்லதில் நன்மையும், தீயதில் தீமையும் இல்லை என்போரும், பிளவு படுத்துவோரும், காமுகரும், வஞ்சகரும் உள்ளிட்ட குழுவினராவர். அறிவை திரித்து இருமையும் கெடுக்கும் இயல்பு சிற்றினத்தவரிடம் காணப்படுவதால் பெரியோரை துணைக்கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக பெரியோரை துணைக்கோடல் எனும் அதிகாரத்தின் பின்பு சிற்றினம் சேராமை எனும் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.


பிரிப்பு

சிற்றினத்தோடு சேரக்கூடாது என்பதற்கான காரணம் - 01, 02
இனத்தோடு சேர்தலின் முக்கியத்துவமும், இனத்தின் முக்கியத்துவமும் - 03, 04
சிற்றினத்தோடு சேராமல் இருப்பதால் ஏற்படும் சிறப்பு - 05, 06, 07
நல்லிணத்தோடு சேர்தலின் நன்மையும், சிற்றினம் சேர்தலின் தீமையும் - 08, 09, 10
அணிப்பிரயோகம் - உவமையணி - 02


சிற்றினத்தோடு சேரக்கூடாது என்பதற்கான காரணம் - 01, 02

01.
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

சிற்றினத்தைக் கண்டு அச்சமடைவது பெரியோர் இயல்பு அந்த சிற்றினத்தை சுற்றமாக கொள்வது சிறியோர் இயல்பு. 

02.
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் 
கினத்தியல்ப தாகும் அறிவு.

தான் சேர்ந்த நிலத்தின் இயல்பாலே நீரானது தன் தன்மையை திரித்து அந்நிலத்தின் தன்மையை உடையதாகும். அதுபோல மாந்தர்க்கு தாம் சேர்ந்த இனத்தின் இயல்பாலே அறிவும், தன் தன்மையும் திரிந்து அவ்வினத்தின் தன்மையை பெருவர்.


இனத்தோடு சேர்தலின் முக்கியத்துவமும், இனத்தின் முக்கியத்துவமும் - 03, 04

03.
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் 
இன்னா னெனப்படுஞ் சொல்.

மனிதனுக்கு மனம் காரணமாக இயற்கையுணர்வு உண்டாகும், இனம் காரணமாக உலகத்தார் இவர் இப்படிப்பட்டவர் என்று மதிக்கக்கூடிய சொல் உண்டாகும். 

04.
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற் 
கினத்துள தாகும் அறிவு.

ஒருவனுக்கு விசேட அறிவானது மனதில் உள்ளது போல காட்டினாலும் அது உண்மையில் அவன் சேரும் இனத்தில் உள்ளது. 


சிற்றினத்தோடு சேராமல் இருப்பதால் ஏற்படும் சிறப்பு - 05, 06, 07

05.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் 
இனந்தூய்மை தூவா வரும்.

ஒருவன் சேரும் இனத்தை பொறுத்ததாகவே அவனது மனத் தூய்மையும், செயலின் தூய்மையும் அமையும். 

06.
மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க் 
கில்லைநன் றாகா வினை.

மனத்தூய்மை உடையவருக்கு மக்கட்பேறு நன்கு அமையும் இனத்தூய்மை உடையவருக்கு நன்றாகாத செயல் என்று எதுவும் இல்லை. 

07.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் 
எல்லாப் புகழுந் தரும்.
நிலைபெற்ற உயிர்களுக்கு மனத்தின் தன்மை செல்வத்தை கொடுக்கும் இனத்தின் தன்மை அதனோடு எல்லா புகழையும் கொடுக்கும்.


நல்லிணத்தோடு சேர்தலின் நன்மையும், சிற்றினம் சேர்தலின் தீமையும் - 08, 09, 10

08.
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் 
கினநலம் ஏமாப் புடைத்து.

மனநலம் நன்கு உடையவராயினும் சான்றோர்க்கு இனநலமே நல்ல காவலாக அமையும். 

09.
மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும் 
இனநலத்தி னேமாப் புடைத்து.

ஒருவருக்கு மனநலத்தால் மறுமை இன்பம் உண்டாகும். அது இன நலத்தால் மேலும் சிறப்படையும். 

10.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் 
அல்லற் படுப்பதூஉ மில்.

ஒருவனுக்கு நல்ல இனத்தை போன்று மிக்க துணை வேறு இல்லை. தீய இனத்தைப் போன்று மிக்க துன்பம் தருவதும் வேறு இல்லை.


அணிப்பிரயோகம் - உவமையணி - 02

சிற்றினஞ் சேராமை எனும் அதிகாரத்தில் 2 ஆவது குறளில் உவமையணி கையாளப்பட்டுள்ளது. 

02.
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் 
கினத்தியல்ப தாகும் அறிவு.

இங்கு மாந்தர்க்கு தாம் சேர்ந்த இனத்தின் இயல்பாலே அறிவும், அவ்வினத்தின் தன்மையும் உண்டாகும் என்பது உவமேயமாகவும், தான் சேர்ந்த நிலத்தின் இயல்பாலே நீரின் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மையை உடையதாகும் என்பது உவமானமாகவும் சேரும் இடத்தை பொறுத்து தன் இயல்பும் வெளிப்படும் என்பதும் பொதுத்தன்மையாகக் கூறப்பட்டுள்ளது.


தெரிந்து செயல் வகை 


அதிகார வைப்பு முறை 


அரசன் தான் செய்யும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறன், தெரிந்து செயல்வகை எனப்படும். அச்செயல் பெரியோரை துணைக்கோடல் பயனுடைய வழியாதலில் அவரோடு செய்யப்படுவதால் சிற்றினஞ் சேராமையின் பின்னர் வைக்கப்பட்டுள்ளது.


பிரிப்பு

செயலை செய்யும் முறையும், செய்யத் தகும் செயலும் - 01, 02 
செய்யாது கைவிட வேண்டிய செயலும், கைவிடாது செய்தால் ஏற்படும் இழுக்கும்  - 03, 04, 04, 05
செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை - 06
செயலை செய்வதற்குரிய வழிமுறையும், உரிமையும் - 07, 08, 09, 10


செயலை செய்யும் முறையும், செய்யத் தகும் செயலும் - 01, 02 

01.
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் 
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

செய்யப் போவதாகிய செயலால் ஏற்படுகின்ற அழிவு, ஆக்கம் பெறும் ஊதியம் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து செயலை செய்ய வேண்டும்.
 
02.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் 
கரும்பொருள் யாதொன்று மில்.

இவர் தக்கவர் என்று ஆராய்ந்து தெரிந்து கொண்ட இனத்தவரோடு சேர்ந்து செய்யப்படும் செயலை நன்கு ஆராய்ந்து பின்னர் தாமும் எண்ணிச் செய்து முடிக்க வல்ல அரசருக்கு அடைய முடியாத பொருள் எதுவும் கிடையாது. 


செய்யாது கைவிட வேண்டிய செயலும், கைவிடாது செய்தால் ஏற்படும் இழுக்கும்  - 03, 04, 05

03.
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை 
ஊக்கா ரறிவுடை யார்.


பின்னர் உண்டாகக்கூடிய ஆக்கத்தை மனதிற்கொண்டு இப்போது இருக்கும் முதலினை இழப்பதாகிய செயலினை அறிவுடையோர் செய்யமாட்டார். 

04.
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் 
ஏதப்பா டஞ்சு பவர்.


இதனைத் தொடங்குவதால் பகைவரின் குற்ற நிலைக்கு ஆளாக நேரிடும் எனப் பயப்படுவோர் தெளிவில்லாத செயலை தொடங்கமாட்டார். 

05.
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் 
பாத்திப் படுப்பதோ ராறு.

செய்வதற்குரிய செயல்களை முற்றாக ஆராய்ந்து பார்க்காமல் அவற்றைத் தொடங்குதல் பகைவரை அவர் வளரும் நிலத்தில் நிலைபெறச் செய்வதற்கு ஒரு நெறியாகும். 


செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை - 06

06.
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க 
செய்யாமை யானுங் கெடும்.

அரசன் தான் செய்யக்கூடாத செயல்களை செய்வதாலும் கேடு உண்டாகும் அத்துடன் செய்ய வேண்டிய செயல்களை செய்யாமையாலும் கேடு உண்டாகும். 


செயலை செய்வதற்குரிய வழிமுறையும், உரிமையும் - 07, 08, 09, 10

07.
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின் 
எண்ணுவ மென்ப திழுக்கு.

ஒரு செயலை நன்றாக எண்ணித் துணிந்த பின் மேற்கொள்க. செயலைத் தொடங்கிய பின்னர் எண்ணுவோம் என்பது இழுக்கினைத் தந்துவிடும். 

08.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று 
போற்றினும் பொத்துப் படும்.

பொருத்தமான உபாயத்துடன் தொடங்காத முயற்சி பலர் நின்று தவறு வராமல் காத்தாலும் நிறைவுபடாது. 

09.
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் 
பண்பறிந் தாற்றாக் கடை.

அவரவர் குணமறிந்து அவற்றுக்கேற்ப செயல் புரியாவிடின் நல் நோக்கத்துடனான செயல்களிலும் குற்றம் ஏற்படுவதுண்டு. 

10.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொட 
கொள்ளாத கொள்ளா துலகு.

உலகம் இழிவாக கொள்ளாத செயல்களை சிந்தித்து செய்ய வேண்டும் ஏனெனில் அரசர் தமக்கு பொருந்தாத உபாயங்களை மேற்கொள்வாராயின் உலகம் அதனை ஏற்றுக் கொள்ளாது.


வலியறிதல்


அதிகார வைப்பு முறை 


அரசன் போருக்கு செல்ல முன்னர் தன்னுடையதும் பகைவரதும் வலிமைகளை அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் வலியறிதல் எனப்படும். ஒரு செயலை செய்ய முற்படும் அரசன் தனக்கும், பகைவருக்கும், தனக்கு துணையாய் நிற்பவருக்கும், பகைவருக்கு துணையாய் நிற்பவருக்கும் எத்தகைய வலிமையுள்ளது என்பதனை அறிந்து செயல்பட வேண்டும். செயல்களை செய்ய முற்படும் போது வலியறிதல் முக்கியமானதால் தெரிந்து செயல்வகையின் பின்பு வலியறிதல் எனும் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. 


பிரிப்பு

வலிமையின் பகுதிகளும் அவற்றை அறிந்து போருக்கு செல்வோர் பயன் - 01, 02 
தன் வலிமை அறியாததால் ஏற்படும் இழுக்கு - 03, 04
பகைவனதும், பகைவனின் துணைவரதும் வலிமையை அறியாத போது ஏற்படும் இழுக்கு - 05
வினை வலிமை அறியாத போது ஏற்படும் இழுக்கு - 06
பொருள் செல்வத்தின் வலியறிதல் - 07, 08, 09, 10
அணிப்பிரயோகம் - ஒட்டணி - 05, 06


வலிமையின் பகுதிகளும் அவற்றை அறிந்து போருக்கு செல்வோர் பயன் - 01, 02 

01.
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் 
துணைவலியுந் தூக்கிச் செயல்.

தான் செய்யக் கருதியை செயல், செய்து முடிக்கும் தனது வல்லமை, பகைவனது வல்லமை, தமக்கும் பகைவருக்கும் துணையாக உள்ள துணையின் வலிமை ஆகியவற்றுடன் சீர்தூக்கி அறிந்தே ஓர் அரசன் செயலில் இறங்க வேண்டும். 

02.
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச் 
செல்வார்க்குச் செல்லாத தில்.

தன்னால் செய்யக்கூடிய செயலையும், அதற்கு தேவையான வலிமையையும் அறிந்து அதனிடத்தில் எப்பொழுதும் கவனஞ் செலுத்தி பகைமுடிக்கச் செல்பவர்களால் முடியாதது எதுவுமில்லை. 


தன் வலிமை அறியாததால் ஏற்படும் இழுக்கு - 03, 04

03.
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி 
இடைக்கண் முரிந்தார் பலர்.

தமது வலிமையின் அளவறியாது மன ஊக்கத்தினால் தம்மிலும் வல்லமையுடையவர்களுடன் போர் செய்ய தொடங்கி அவர்கள் எதிர்த்ததால் வினை முடிவுறாமல் இடையே கெட்ட அரசர்கள் உலகத்தில் பலர் உள்ளனர். 

04.
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை 
வியந்தான் விரைந்து கெடும்.

அயல் வேந்தருடன் பழகும் முறை தெரியாதவனாயும், தன் வலிமையின் அளவை அறியாதவனாயும், தன்னைத்தானே புகழ்ந்து கொள்பவனாயும் இருக்கும் அரசன் விரைவில் அழிவான். 


பகைவனதும், பகைவனின் துணைவரதும் வலிமையை அறியாத போது ஏற்படும் இழுக்கு - 05

05.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் 
சால மிகுத்துப் பெயின்.

பாரம் குறைந்த மயில் இறகை அளவுக்கதிகமாக வண்டியில் ஏற்றினால் அதன் அச்சு முறிந்துவிடும். அதுபோல அரசனும் தனது வலிமைக்கு மேலாக முயன்றால் அழிவது உறுதியாகும். 


வினை வலிமை அறியாத போது ஏற்படும் இழுக்கு - 06

06.
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் 
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

மரத்தின் உச்சாணிக் கொம்பினை ஏறியவர் மேலும் ஊக்கத்தினால் மேலே ஏற முற்படின் அவ்வூக்கமே அவரின் உயிருக்கு இறுதியாய் முடிந்துவிடும். அதுபோல அரசனும் ஒரு எல்லை வரையே முயற்சிக்க முடியும் மேலும் முயற்சித்தால் அழிய நேரிடும். 


பொருள் செல்வத்தின் வலியறிதல் - 07, 08, 09, 10

07.
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள் 
போற்றி வழங்கு நெறி.

பிறருக்கு கொடுக்கும் போது தம்மிடம் உள்ள பொருளின் அளவை அறிந்து ஈதல் வேண்டும் அவ்வாறு ஈதல் பொருளைப் போற்றி வாழும் நெறியாகும். 

08.
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை 
போகா றகலாக் கடை.

அரசன் பொருளை செலவு செய்யும் வழி விரிவுபடாமல் இருக்குமாயின் ஆக்கிக் கொள்ளும் பொருளின் அளவு அறியதாய் இருந்தாலும் அதனால் கேடு இல்லை. 

09.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல 
இல்லாகித் தோன்றாக் கெடும்.

தனது செல்வத்தின் அளவை அறிந்து அதற்கேற்ற வாழாதவன் வாழ்க்கை உள்ளது போல தோன்றி இல்லாது போய்விடும். 

10.
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை 
வளவரை வல்லைக் கெடும்.

தனது பொருளின் அளவை சீர்தூக்கி பாராதவனின் ஒப்புரவு என்னும் ஆண்மையால் அவனது செல்வத்தின் அளவு விரைவில் அழிந்து விடும்.


அணிப்பிரயோகம் - ஒட்டணி / பிறிதுறமொழிதல் அணி - 05, 06

தான் கூறவந்த விடயத்தை மறைத்து வேறொரு விடயத்தை கூறுவதன் மூலம் தான் கூறவந்த விடயத்தை கூறுவது ஒட்டணியாகும். 

வலியறிதல் எனும் அதிகாரத்தில் 05, 06 ஆகிய குறள்களில் ஒட்டணி கையாளப்பட்டுள்ளது. 

05.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் 
சால மிகுத்துப் பெயின்.

எனும் குறளினூடாக, வள்ளுவர் வெளிப்படையாக கூறமுற்பட்டது யாதெனில் பாரங்குறைந்த மயிலிறகே ஆனாலும் அளவுக்கு மேலே ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும் இதன் மூலம் குறிப்பாக கூறப்படுவது யாதெனில் அயலில் இருக்கும் மன்னர்கள் சிறிய படைகளை கொண்டவர்களாக வலிமை குறைந்தவர்களாக இருந்தாலும் அத்தகைய பலருடன் பகைக்கும் போது மன்னன் அழிந்து போக நேரிடும் என்பதாகும். 

06.
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் 
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

எனும் குறளினூடாக, உச்சிக்கொப்பில் ஏறியவர் அதற்கு மேலே ஏற முயன்றால் மரணத்தை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையாக கூறப்படுவதுடன் தனது படைவலிமையின் எல்லைக்கு அப்பால் மன்னன் போரிட முயலும் போது தோல்வியே ஏற்படும் என்பது குறிப்பால் கூறப்பட்டுள்ளது.


காலமறிதல் 


அதிகார வைப்பு முறை 

காலமறிதல் என்பது வலிமை மிக்க அரசனானவன் தனது பகைவர் மேல் போர் தொடுத்து அவரை அளித்து வெற்றி காண்பதற்கு பொருத்தமான காலத்தினை அறிந்து செயல்படுதலை குறிக்கும். அதிகாரமுறையால் காலமறிதல் வலியறிதலுக்கு பின் வைக்கப்பட்டமைக்கு காரணம் வலிமையுள்ளவனாயினும் பகையை செய்வதற்குரிய காலத்தைக்கருத வேண்டும் என்பதனாலாகும். 


பிரிப்பு

காலத்தின் சிறப்பு - 01
காலமறிதலின் பயன் - 02, 03, 04
காலங்கருதி செயலை செய்தல் - 05
காலங்கருதி செயலாற்றுவதன் சிறப்பு - 06
இருக்கும் வழியில் பகைமை தோன்றாமல் இருக்கும் தன்மை - 07, 08
காலம் வந்தபோது விரைந்து செய்க - 09
இரும்புக்கும் கொக்குக்குமான இலக்கணம் - 10
அணிப்பிரயோகம் - உவமையணி - 01, 06, 10 


காலத்தின் சிறப்பு - 01

01.
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் 
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

தன்னிலும் வலிமை படைத்த கூகையை காக்கையானது பகல் பொழுதில் வென்று விடும். அதுபோல பகைவரை வெற்றி கொள்ள கருதும் அரசனுக்கு அதற்கேற்ற காலம் வேண்டும். 


காலமறிதலின் பயன் - 02, 03, 04

02.
பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத் 
தீராமை ஆர்க்குங் கயிறு.

அரசின் காலமறிந்த செய்யும் செயலானது ஒருவனிடம் நிலைத்திராத செல்வத்தை நிலைத்திருக்குமாறு கட்டி வைக்கும் கயிறாகும். 

03.
அருவினை யென்ப உளவோ கருவியாற் 
கால மறிந்து செயின்.

பொருத்தமான கருவிகளுடன் காலமறிந்து செயல்புரியும் அரசருக்கு அவரால் செய்ய முடியாத செயலென்று எதுவுமில்லை. 

04.
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் 
கருதி இடத்தாற் செயின்.

காலமறிந்து இடத்தோடு பொருந்துமாறு ஒருவன் செயல் புரிவானாயின் அவன் பூமி முழுவதையும் தானே ஆள நினைத்தாலும் அது கைகூடிவிடும்.


காலங்கருதி செயலை செய்தல் - 05

05.
காலங் கருதி இருப்பர் கலங்காது 
ஞாலங் கருது பவர்.

தவறாமல் உலகினை அடிப்படித்தி ஆள நினைக்கும் அரசன் அதற்குரிய பொருத்தமான காலம் வருமளவும் பகைமேல் செல்லாது காத்திருப்பர். 


காலங்கருதி செயலாற்றுவதன் சிறப்பு - 06

06.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் 
தாக்கற்குப் பேருந் தகைத்து.

வலிமைமிக்க அரசன் பகைமேற்செல்லாது பொருத்தமான காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது தனது பகையுடன் பொருந்தி வெற்றி கொள்ளும் பொருட்டு ஆட்டுக்கடா பின்னோக்கி கால் வைத்து செல்வது போன்றது. 


இருக்கும் வழியில் பகைமை தோன்றாமல் இருக்கும் தன்மை - 07, 08

07.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த் 
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

அறிவுடைய அரசன் தமது பகைவரின் செயல்கள் மிகுந்த போதிலும் அவர்கள் மீது வெளிப்படையாக கோபத்தைக்காட்டாமல் அவர்களை செல்வதற்குரிய காலம் வரும் வரை உள்ளத்திலே ஒளித்து வைத்திருப்பர்.

08.
செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை 
காணிற் கிழக்காந் தலை.

நாம் வெல்லக்கருதிய பகைவரை வெல்வதற்குரிய காலம் வரும்வரை அவரைக்கண்டால் பணிவுடன் காத்திருக்க வேண்டும். அவர்களது இறுதிக்காலம் வரும் போது அவர்களது தலை தானாகவே தரையில் வீழ்ந்து விடும். 


காலம் வந்தபோது விரைந்து செய்க - 09

09.
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே 
செய்தற் கரிய செயல்.

அரசன் பகையை வெல்வதற்குரிய காலம் கைகூடியபோது அத்தகைய காலம் கழிய முன்னர் தம்மால் செய்யக்கூடிய செயல்களை செய்ய வேண்டும். 


இரும்புக்கும் கொக்குக்குமான இலக்கணம் - 10

10.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 
குத்தொக்க சீர்த்த இடத்து.

செயலை செய்யாது காலம் பார்த்திருக்கையில் கொக்கு போல அமைதியை கடைப்பிடிக்குக செயலை முடிக்கக்கூடிய காலம் பொருந்தி வந்ததும் செயலினை தாழ்த்தாது செய்து முடிக்குக.


அணிப்பிரயோகம் - உவமையணி - 01, 06, 10 

காலமறிதல் எனும் அதிகாரத்தில் 1, 6, 10 ஆகிய குறள்களில் உவமையணி கையாளப்பட்டுள்ளது. 

01.
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் 
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

எனும் குறளினூடாக, பகைவரை வெற்றி கொள்ள கருதும் அரசருக்கு அதற்கேற்ற காலம் வேண்டும் எனும் தன்மையானது வலிமை படைத்த ஆந்தையை பகல் பொழுதில் வெல்லும் காக்கையின் தன்மைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. 

06.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் 
தாக்கற்குப் பேருந் தகைத்து.

எனும் குறளினூடாக, பகைமேல் செல்லும் அரசன் பொருத்தமான காலம் வரும்வரை காத்திருக்கும் தன்மையானது ஆட்டுக்கடா பின்நோக்கி கால் வைக்கும் தன்மைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. 

10.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 
குத்தொக்க சீர்த்த இடத்து.

எனும் குறளினூடாக, அரசன் செயலை செய்யாது காலம் பொருந்தி வரும்வரை காத்திருக்கும் தன்மையானது கொக்கின் தன்மைக்கு உவமிக்கப்பட்டுள்ளது.


இடனறிதல் 


அதிகார வைப்பு முறை 

தனது வலிமையையும், பகையை வெல்வதற்குரிய பொருத்தமான காலத்தையும் அறிந்து பகைமேல் செல்லும் அரசன் வெல்வதற்குரிய நிலத்தின் தன்மையை அறிந்து செயல்படுதலை இடனறிதல் என்று கூறுவர். இதனால் காலமறிதல் எனும் அதிகாரத்தின் பின்பு இடனறிதல் எனும் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.


பிரிப்பு

பகைவர்கள் தமது அரணில் மறைந்திருப்பார்கள் என்பதற்கான இடனறிதல் - 01, 02, 03, 04 
வினை செய்வதற்குரிய இடனறிதல் - 05, 06, 07
பகைவரை சேரக்கூடாத இடமும் சேர்ந்த பின் ஏற்படும் இழுக்கும் - 08, 09, 10
அணிப்பிரயோகம் - ஒட்டணி - 05, 06, 10


பகைவர்கள் தமது அரணில் மறைந்திருப்பார்கள் என்பதற்கான இடனறிதல் - 01, 02, 03, 04 


01.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது.


பகைவரை சூழ்ந்து முற்றுகை இடுவதற்கான இடத்தை அறிவதற்கு முன்னர் அவரை வெல்வதற்கான எம்முயற்சியிலும் இறங்கக்கூடாது அவரை பலவீனமானவர் என்று இகழவும் கூடாது. 


02.

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவுந் தரும்.


ஒன்றுக்கொன்று மாறுபட்ட வலிமை உடையவர்களுக்கும் அரணை சேர்ந்திருப்பது எனும் ஆக்கமானது பல பயன்களை கொடுக்கும். 


03.

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.


பகைவரை வெல்லக்கூடிய பொருத்தமான இடத்தை அறிந்து தம்மை பாதுகாத்து பகைவரை எதிர்த்து போர் செய்ய முனைந்தால் வலிமை இல்லாதவனும் வலிமை உடையவனாய் வெற்றி காண்பர்.


04.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.


தமக்குப் பொருத்தமான இடமறிந்து சென்ற அரசன் அரணை பொருந்த நின்று போர் புரிதலை செய்வாராயின் அவரை வெல்லக்கருதிய பகைவரின் எண்ணம் பழுதாகிவிடும். 


வினை செய்வதற்குரிய இடனறிதல் - 05, 06, 07


05.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.


ஆழமான நீரில் இருக்கும் போது முதலையானது எப்பகையையும் வென்றுவிடும். அந்த நீரில் இருந்து நீங்குமாயின் அதனை ஏனைய பிராணிகள் வென்றுவிடும். அதேபோல் தமக்குரிய காப்பிடத்தோடு பொருந்தி நின்று போர் புரியும் அரசன் எப்பகையையும் வென்றுவிடுவான். மாறாக காப்பிடமின்றி போர்புரியின் வலிமை குன்றிய பகைவனும் அவனை வென்று விடுவர். 


06.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.


நிலத்தின் ஓடக்கூடிய வலிமைமிக்க சக்கரங்களை உடைய வலிமையான தேர்தள் கடலில் ஓட மாட்டாது. அதுபோல கடலில் ஓடக்கூடிய பெரிய நாவாய்கள் தரையில் ஓடமாட்டாது. எனவே அவரவர்க்கு ஏற்ற இடத்தில்தான் வலிமை காணப்படும். 


07.

அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி யிடத்தாற் செயின்.


பகைவரை வெல்லத்தக்க செயல்களை எல்லாம் முடிவாக எண்ணி அவற்றை பொருத்தமான இடத்திலிருந்து அரசன் செயற்படுவாராயின் அச்செயலுக்கு தமது வலிமையை தவிர வேறு ஒரு துணையும் அவருக்கு தேவையில்லை. 


பகைவரை சேரக்கூடாத இடமும் சேர்ந்த பின் ஏற்படும் இழுக்கும் - 08, 09, 10


08.

சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.


பெரும் படையை உடைய அரசன் சிறுபடையை உடைய பகைவனை அழிக்க கருதி அவனது பாதுகாப்பான இடத்தை சேருவானாயின் அவனால் இவனது பெருமை அழிந்து விடும். 


09.

சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோ டொட்ட லரிது.


பகைவரிடம் பாதுகாப்பான அரணும், பெருமையுடைய வலிமையும் இல்லாவிடினும் அவர்களது உறைகின்ற இடத்தில் சென்று அவர்களை தாக்கி அழித்தல் அரிதாகும். 

10.
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

பாகர்க்கு அடங்காமல் வேலை தாங்கிய போர்வீரர்களை கொம்பினால் குத்திக் கோர்த்த வலிமைமிக்க ஆண் யானை கால்கள் புதையக்கூடிய சேற்று நிலத்தில் அகப்படின் சிறிய நரியும் அதனை கொன்றுவிடும். அதுபோல மிகுந்த வல்லமை உள்ளவரும் தமக்கு பொருந்தாத இடத்தில் சென்றால் மிக குறைந்த வல்லமை உள்ளவராலும் தோற்றுப்போவர்.


அணிப்பிரயோகம் - ஒட்டணி / பிறிதுறமொழிதல் அணி - 05, 06, 10

இடனறிதல் எனும் அதிகாரத்தில் 5, 6, 10 ஆகிய குறள்களில் ஒட்டணி கையாளப்பட்டுள்ளது. 

05.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

எனும் குறளினூடாக, ஆழமான நீரில் இருக்கும் போது முதலையானது எப்பகையையும் கொன்றுவிடும் அந்த நீரிலிருந்து நீங்குமாயின் அதனை ஏனைய பிராணிகள் கொன்றுவிடும் என்பது வெளிப்படையாக கூறப்படுவதுடன் தமக்குரிய காப்பிடத்தோடு பொருந்தி நின்று போர் புரியும் அரசன் எப்பகையையும் வென்று விடுவான். மாறாக காப்பிடமின்றி போர் புரியின் வலிமை குன்றிய பகைவரும் அவனை வென்று விடுவர். என்பது குறிப்பால் கூறப்பட்டுள்ளது. 

இக்குறளில் ஒட்டணி கையாளப்பட்டமைக்கு காரணம், திருவள்ளுவர், இடனறிதலின் அவசியத்தை விளக்குவதற்காக ஆழமான நீரில் இருக்கும் போது முதலையானது எத்தகைய பகையையும் வென்றுவிடும் அந்த நீரிலிருந்து நீங்குமாயின் அதனை ஏனைய பிராணிகள் வென்றுவிடும். எனும் சான்றினை கூறி, தமக்குரிய காப்பிடத்தோடு பொருந்தி நின்று போர் புரியும் அரசன் எப்பகையையும் வென்று விடுவான். மாறாக அவன் காப்பிடமின்றி போர் புரியிம் வலிமை இல்லாத பகைவரும் அவனை வென்றுவிடுவர். எனும் கருத்தினை வலியுறுத்துவதற்காகவே இக்குறளில் ஒட்டணியை கையாண்டுள்ளார். 

06.
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

எனும் குறளினூடாக, நிலத்தில் ஓடக்கூடிய வலிமைமிக்க சக்கரங்களை உடைய பெரிய தேர்கள் கடலில் ஓட மாட்டாது. அதுபோல கடலில் ஓடக்கூடிய பெரிய தோணிகள் நிலத்தில் ஓட மாட்டாது. எனும் கருத்து வெளிப்படையாக கூறப்படுவதுடன் அவரவர்களுக்கு ஏற்ற இடத்தில்தான் அவரவர் வலிமை காணப்படும் எனும் கருத்து மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. 

இக்குறளில் ஒட்டணி கையாளப்பட்டமைக்கு காரணம்,  திருவள்ளுவர், இடனறிதலின் அவசியத்தை விளக்குவதற்காக நிலத்தில் ஓடக்கூடிய வலிமைமிக்க சக்கரங்களை உடைய பெரிய தேர்கள் கடலில் ஓடமாட்டாது. அதுபோல கடலில் ஓடக்கூடிய பெரிய தோணிகள் நிலத்தில் ஓடமாட்டாது. எனும் சான்றிணை கூறி அரசன் தன்னுடைய இடத்தில் இருக்கும் போது அவனுக்கு பாதுகாப்பாக படைகளும், அரண்களும் காணப்படும் ஆனால் தனக்கு பொருந்தாத இடத்தில் இத்தகைய துணையின்றி தோல்வியடைய ஏற்படும் எனும் கருத்தினை வலியுறுத்துவதற்காகவே இக்குறளில் ஒட்டணியை கையாண்டுள்ளார். 

10.
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

எனும் குறளினூடாக, பாகனுக்கு அடங்காமல் வேலைத்தாங்கிய போர் வீரர்களை தனது கொம்பினால் குத்திக்கோர்த்த வலிமைமிக்க ஆண்யானை கால்கள் புதையக்கூடிய சேற்றுநிலத்தில் அகப்படின் நரியும் அதனை கொன்றுவிடும் எனும் கருத்து வெளிப்படையாக கூறப்படுவதுடன் மிகுந்த வல்லமை உடையவரும் தமக்கு பொருந்தாத இடத்திற்கு சென்றால் மிகக்குறைந்த வல்லமை உடையவராலும் தோற்கடிக்கப்படுவர் என்ற கருத்து மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. 

இக்குறளில் ஒட்டணி கையாளப்பட்டமைக்கான காரணம், திருவள்ளுவர், இடறிதல் எனும் அதிகாரத்தினூடாக பகைவரை சேரக்கூடாத இடமும் சேர்ந்தவிடத்து ஏற்படும் இழுக்கு போன்றவற்றை விளக்குவதற்காக பாகனுக்கு அடங்காமல் வேலைதாங்கிய போர் வீரர்களை தனது கொம்பினால் குத்திக் கோர்த்த வலிமைமிக்க ஆண்யானை கால்கள் புதையக்கூடிய சேற்று நிலத்தில் அகப்படின் நரியும் அதனைக் கொன்றுவிடும் எனும் சான்றினை கூறி அரசன் தமக்கு பொருந்தாத மாற்றானுடைய இடத்தில் சென்று வெற்றி பெறுவது கடினம் ஆனால் அவ்விடத்தில் பொருந்தியிருக்கும் மாற்றான் சிறிய வலிமை கொண்டவனாக இருந்தாலும் அவன் அவ்வரசனை அளித்து விடுவான் எனும் கருத்தினை வலியுறுத்துவதற்காகவே இக்குறளில் ஒட்டணியை கையாண்டுள்ளார்.


தெரிந்து தெளிதல் 


அதிகார வைப்பு முறை

ஒரு அரசன் தமது அமைச்சர் முதலானோரின் பிறப்புக்குணம், அறிவு, செயத்திறன் ஆகியவற்றை காட்சி, கருத்து, ஆகமம் எனும் அளவைகளால் ஆராய்ந்து தெளிதல் தெரிந்து தெளிதல் எனப்படும். சான்றோர், ஞானிகள் போன்றோர்களின் அனுபவ உண்மைகள், வலி, காலம், இடம் ஆகியன அறிந்து பகைமேல் செல்பவனுக்கு தனது செயல் நிறைவேறும் பொருட்டு தெரிந்து தெளிதல் தேவைப்படுவதனால் அம் மூன்று அதிகாரங்களை அடுத்து இவ்வதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.


பிரிப்பு

குணம் உடையாரை இனங்காணல் - 01, 02, 03
குணம் உடையாரை இனங்காணுதலின் சிறப்பு - 04
குற்றம் நாடுவதற்கான கருவி - 05
தெளியப்படாதவர் இவர் என்பதும், அவரை தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்படல் - 06, 07, 08, 09, 10


குணம் உடையாரை இனங்காணல் - 01, 02, 03

01.
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப் படும்.

அரசனால் அறிந்து தெளியப்படும் ஒருவரின் அறம், பொருள், இன்பம், உயிரச்சம் ஆகிய நான்கினதும் திறத்தால் ஆன மன இயல்புகளை அறிந்து தெளிவு காண வேண்டும். 

02.
குடிப் பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப் பரியும்
நாண் உடையான் கட்டே தெளிவு.

அரசன் நல்ல குடியில் பிறந்தும், குற்றங்களில் இருந்து நீங்கியும், பழிச்செயல்களுக்கு அஞ்சும் நாணமுடைமையும் உள்ள ஒருவனை தெரிந்து தெளிதல் வேண்டும். 

03.
அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

கற்பதற்கு அரிய நூல்களை கற்று, குற்றங்களில் இருந்து நீங்கியவர் இடத்திலும் நுண்ணியதாக ஆராயுமிடத்து அறியாமை இல்லாது இருத்தல் அரிது.


குணம் உடையாரை இனங்காணுதலின் சிறப்பு - 04

04.
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்.

ஒருவருடைய குணங்களை ஆராய்ந்து, ஏனைய குற்றங்களையும் ஆராய்ந்து பின் அவற்றுள் மிகுதியானவை எவை என ஆராய்ந்து பின் அவனின் அந்த மிகுதியினூடாக அவனை அறிய வேண்டும். 


குற்றம் நாடுவதற்கான கருவி - 05

05.
ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

பிறவிக்குணம், அறிவு என்பவற்றால் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைய சிறுமைக்கும் உரைகல்லாவது அவரவர் செய்யும் செயல்களாகும். 
தெளியப்படாதவர் இவர் என்பதும், அவரை தெளிந்தால் படும் இழுக்கும், 


தெளிவிற்கு எல்லையும் கூறப்படல் - 06, 07, 08, 09, 10

06.
அற்றாரைத் தேறுதல் ஒம்புக மற்று அவர்
பற்று இலர் நாணார் பழி.

ஒரு செயலை செய்வதற்கு தமக்கென உறவுகள் இல்லாதவர்களை தெளிவதை தவிர்க்குக. அவர்கள் உலகத்தோடு பற்று, பாசம் இல்லாதவர்கள் என்பதால் பழிக்கு அஞ்சமாட்டார்கள். 

07.
காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்

அறிய வேண்டியவற்றை அறியாதவராயினும் தமக்கு அன்புள்ளவர் என்பதால் அவரை தெளிந்து கொள்ளல் அரசனுக்கு எல்லா வகையான அறியாமையையும் கொடுக்கும். 

08.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

தன்னோடு தொடர்பில்லாதவனை தேராமல் தெளிந்த அரசனுக்கு அத்தெளிவு அவ்வரசனின் பரம்பரையினருக்கும் நீங்காத துன்பத்தை கொடுக்கும். 

09.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள்.

யவரையும் ஆராயாது தெளியக்கூடாது. தெளிந்த பின் அவர்களுடாக தெளியும் பொருட்களை நம்ப வேண்டும். 

10.
தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

ஒருவனை ஆராயாது தெளிதலும், ஆராய்ந்து தெளிந்தவனிடத்தில் சந்தேகம் கொள்வதும் அரசனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.


தெரிந்து வினையாடல் 


அதிகார வைப்பு முறை 

ஆராய்ந்து அறிந்து தெளிந்தவரிடம் அவர் செய்யக்கூடிய செயல்களை அறிந்து, அவற்றை கையாளும் திறனை தெரிந்து வினையாடல் என்பர். இதனால் தெரிந்து தெளிதல் எனும் அதிகாரத்தின் பின்பு தெரிந்து வினையாடல் எனும் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.


பிரிப்பு

தெரிந்து வினையாடலின் இலக்கணம் - 01, 02, 03
ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இயல்பு - 04
வினையின் இயல்பு - 05
தெளிந்து வினையாடலை ஆளும் திறன் - 06, 07, 08, 09
ஆண்டவழி செய்வது கூறப்படல் - 10


தெரிந்து வினையாடலின் இலக்கணம் - 01, 02, 03

01.
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப் படும்.

அரசன் முன்வைத்ததொரு செயலின் நன்மை, தீமைகளை ஆராய்ந்து அறிந்து அவற்றுள் நன்மையானவற்றை விரும்பும் இயல்புடைய ஒருவனே பின்னர் சிறந்த செயல்களை செய்வதற்காக அரசனால் வேலைக்கு அமர்த்தப்படுவான். 

02.
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

பொருள் வரும் வருவாயை பெருக்கி அவற்றால் செல்வங்களை வளர்த்து பொருள் வாயில்கள், பொருள், செல்வம் ஆகியவற்றுக்கான இடையூறுகளை ஆராய்ந்து நீக்கும் தன்மை உடையவனே அரசனுக்காக வேலை செய்ய வேண்டும்.

03.
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இந்நான்கும்
நன்கு உடையான் கட்டே தெளிவு.

அன்புடைமை, அறிவுடைமை, தெளிவுடமை, பற்றின்மை ஆகிய நான்கு குணப்பண்புகளும் நன்கு அமைந்தவனிடத்தில் செயலை ஒப்படைப்பதே தெளிவாகும். 


ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இயல்பு - 04

04.
எனை வகையான் தேறியக் கண்ணும் வினை வகையான்
வேறு ஆகும் மாந்தர் பலர்.

எல்லா வகையாலும் ஆராய்ந்து தெளிந்த பின்னும் அவ்வாறு தெளியப்பட்டவர்கள் அச்செயலின் இயல்பாலே  நிலைமாறும் மனிதர்கள் இவ்வுலகத்தில் பலர் உள்ளனர். 


வினையின் இயல்பு - 05

05.
அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.

செய்யும் உபாயங்களை அறிந்து செயலாலும், இடையூறாலும் வரும் துன்பங்களை பொருத்து முடிவுசெய்ய வல்லவனை அல்லாது இவன் நம்மீது அன்புடையவன் என பிறன் ஒருவனை செயல்புரிய ஏவுதல் கூடாது. 


தெளிந்து வினையாடலை ஆளும் திறன் - 06, 07, 08, 09

06.
செய்வானை நாடி வினை நாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.

செய்பவன், செயல், பொருந்திய காலம் என்பவற்றை ஆராய்ந்து அறிந்து செயலினை செய்ய வேண்டும். 

07.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

இச்செயலை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் என்று ஆராய்ந்தாய்ந்து அவை மூன்றும் இயைபுடையவனாய் அமையின் இச்செயலை செய்யுமாறு அவனிடம் விடுக.

08.
வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
அதற்கு உரியனாகச் செயல்.

ஒருவனை அரசன் தனது செயலை செய்வதற்கு உரியவனாக ஆராய்ந்து தெளிந்தால் பின் அவனை அதற்கு தகுதியானவனாக உயர்த்துக. 

09.
வினைக்கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு.

தனது செயலை செய்வதற்கு உரியவன் இவன் தெரியப்பட்டவனின் உறவினை பிறர் சொற்கேட்டு மாறுபட கருதுவான் ஆயின் அவனை விட்டு செல்வம் நீங்கும். 


ஆண்டவழி செய்வது கூறப்படல் - 10

10.
நாள் தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
கோடாமை கோடாது உலகு.

செயல் புரியவன் கோணாது இருக்கும் வரை உலகம் கெடாது இருக்கும் என்பதால் அரசன் அவனது செயலை நாள்தோறும் ஆராய வேண்டும்.

நன்றி. 

Post a Comment

0 Comments