திருக்குறள் அதிகாரம் 124 - உறுப்புநலன் அழிதல் - URUPPUNALAN AZHITHAL


உறுப்புநலன் அழிதல் 


திருக்குறள் அதிகாரம் 124 - உறுப்புநலன் அழிதல் - URUPPUNALAN AZHITHAL


குறள் 1231                                                          

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி 
நறுமலர் நாணின கண் 

மு.வ விளக்க உரை - இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.  

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன. 

கலைஞர் விளக்க உரை - பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன  

குறள் 1232                                                          

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் 
பசந்து பனிவாரும் கண் 

மு.வ விளக்க உரை - பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.  

சாலமன் பாப்பையா விளக்க உரை - பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்! 

கலைஞர் விளக்க உரை - பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன 

குறள் 1233                                                          

தணந்தமை சால அறிவிப்ப போலும் 
மணந்தநாள் வீங்கிய தோள் 

மு.வ விளக்க உரை - கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும். 

கலைஞர் விளக்க உரை - தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும் 

குறள் 1234                                                       

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் 
தொல்கவின் வாடிய தோள் 

மு.வ விளக்க உரை - துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன. 

கலைஞர் விளக்க உரை - பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக 

குறள் 1235                                                       

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு 
தொல்கவின் வாடிய தோள் 

மு.வ விளக்க உரை - வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன. 

கலைஞர் விளக்க உரை - வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன 

குறள் 1236                                                       

தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக் 
கொடியார் எனக்கூறல் நொந்து 

மு.வ விளக்க உரை - வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன். 

கலைஞர் விளக்க உரை - என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன் 

குறள் 1237                                                       

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் 
வாடுதோட் பூசல் உரைத்து 

மு.வ விளக்க உரை - நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ? 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ? 

கலைஞர் விளக்க உரை - நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ? 

குறள் 1238                                                       

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது 
பைந்தொடிப் பேதை நுதல் 

மு.வ விளக்க உரை - தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே! 

கலைஞர் விளக்க உரை - இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது 

குறள் 1239                                                       

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற 
பேதை பெருமழைக் கண் 

மு.வ விளக்க உரை - தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - (அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ? 

கலைஞர் விளக்க உரை - இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன 

குறள் 1240                                                       

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே 
ஒண்ணுதல் செய்தது கண்டு 

மு.வ விளக்க உரை - காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே! 

கலைஞர் விளக்க உரை - பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது

நன்றி

Post a Comment

0 Comments