திருக்குறள் அதிகாரம் 75 - அரண் - ARAN


அரண்


திருக்குறள் அதிகாரம் 75 - அரண் - ARAN


குறள் 741  

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் 
போற்று பவர்க்கும் பொருள் 

மு.வ விளக்க உரை - (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது. 

கலைஞர் விளக்க உரை - பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.  

குறள் 742  

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் 
காடும் உடைய தரண் 

மு.வ விளக்க உரை - மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.  

சாலமன் பாப்பையா விளக்க உரை - தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும். 

கலைஞர் விளக்க உரை - ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும். 

குறள் 743 

உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின் 
அமைவரண் என்றுரைக்கும் நூல் 

மு.வ விளக்க உரை - உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும். 

கலைஞர் விளக்க உரை - உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும். 

குறள் 744  

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை 
ஊக்கம் அழிப்ப தரண் 

மு.வ விளக்க உரை - காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண். 

கலைஞர் விளக்க உரை - உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும். 

குறள் 745  

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் 
நிலைக்கெளிதாம் நீர தரண் 

மு.வ விளக்க உரை - பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண். 

கலைஞர் விளக்க உரை - முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும். 

குறள் 746  

எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும் 
நல்லா ளுடைய தரண் 

மு.வ விளக்க உரை - தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண். 

கலைஞர் விளக்க உரை - போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும். 

குறள் 747  

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் 
பற்றற் கரிய தரண் 

மு.வ விளக்க உரை - முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண். 

கலைஞர் விளக்க உரை - முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும். 

குறள் 748  

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் 
பற்றியார் வெல்வ தரண் 

மு.வ விளக்க உரை - முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண். 

கலைஞர் விளக்க உரை - முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும். 

குறள் 749  

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து 
வீறெய்தி மாண்ட தரண் 

மு.வ விளக்க உரை - போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண். 

கலைஞர் விளக்க உரை - போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும். 

குறள் 750  

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி 
இல்லார்கண் இல்ல தரண் 

மு.வ விளக்க உரை - எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும். 

கலைஞர் விளக்க உரை - கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது கலைஞர் விளக்க உரை - நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும். 

நன்றி

Post a Comment

0 Comments