சமூக நல்லுறவு
மனிதன் தனித்து வாழமுடியாதவன். அவன் ஏனைய மக்களோடும், சமூகத்தோடும் இணைந்து வாழவேண்டியுள்ளது. சமூகத்தின் நோக்கம். மனிதனை வழிநடாத்துதலும் அவனுக்குச் சமூகத்தில் இணக்கமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதுமாகும். நல்லிணக்கமான வாழ்வுக்கு மனிதனைத் தயார்ப்படுத்தல் ஊடாக ஒரு சமூகத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்ப முடியும், அந்த வகையில் இன்றைய சமூகத்தில் சமூக நல்லுறவு என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது.
இன்றைய உலகில் முரண்பாடு என்பது இல்லாத ஒரு இடமே இல்லை என்று கூறுமளவிற்கு முரண்பாடுகளும் வன்முறைகளும் மக்களின் வாழ்வில் அன்றாட விடயமாகிவிட்டது. கிராம மட்டத்திலிருந்து சர்வதேசம் வரை முரண்பாடுகளும் மோதல்களும் இடம்பெற்றவண்ணமே உள்ளன. இதற்குப் பல காரணிகள் அடிப்படையாக அமைகின்றன. இதில் மிகப் பிரதானமானது மக்கள் மத்தியில் புரிந்துணர்வின்மையும், விட்டுக் கொடுப்பற்ற தன்மையும் சமூகநல்லுறவின்பால் ஆர்வமற்ற தன்மையும் காரணமாக அமைகின்றன. இவ்வாறான நிலையிலிருந்து நீங்க மக்கள் மத்தியில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பி சமூக நல்லுறவைத் தோற்றுவிக்க வேண்டியது மிக அவசியமாகும். இந்த வகையில் சமூகநல்லுறவு அல்லது சமூக நல்லிணக்கம் என்றால் என்ன? என்று நோக்குவதும் சமகாலத்தில் சமூகநல்லுறவின் அவசியத்தை உணர வேண்டியதும் மிக அவசியமானதாகும்.
நல்லுறவு என்பதன் ஆங்கிலப்பதம் “ஹாமொனி" என்ற சொல்லாற் சுட்டப்படுகின்றது. இது கிரேக்கமொழிச் சொல்லான "ஹாமொனியா" என்பதிலிருந்து தோற்றம் பெற்றது. இச்சொல்லின் பொருள். ஒத்திசைவு, உடன்பாடு எனக் குறிப்பிடப்படுகின்றது.
இந்த வகையில் சமூக நல்லுறவு என்பதற்குச் சமூக நல்லிணக்கம், சமூக ஒருங்கிணைவு. சமூக ஒருமைப்பாடு, சமூக ஒற்றுமை, சமூக ஒத்திசைவு, சமூக உடன்பாடு எனப் பல அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
சமூக நல்லுறவு என்பதற்கு அறிஞர்கள் பல்வேறு வரைபிலக்கணங்களை வழங்கியிருக்கின்றனர். நன்கு இசைவுபட்டனவான மக்கள் நடவடிக்கைகள் ஓரிடத்தில் காணப்படுகின்றபோது, அந்தச் சமூகம் நல்லுறவுடன் வாழ்கின்றது எனக் கருதப்படுகின்றதாகப் பிரட் போல்ட்வரி என்பவர் கூறியுள்ளார். அத்துடன் சமூக நல்லுறவு என்பது கலாசாரத்தை மேவிச் செல்லும் ஓர் ஒழுக்க நியதி என்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
லுக் ரெயிச்லர் மற்றும் தினியா பப்பென்ஹோல்ஸ் என்போர் குறிப்பிடுகையில் "சமூக நல்லுறவு என்பது முரண்பட்டு நிற்பவர்களிடையே காணப்படும் வன்மம், மனக்கசப்பு, விரோதம், என்பவற்றிற்குப் பதிலாக நட்புறவு, தோழமை என்பவற்றை ஏற்படுத்துவதாகும் என்றனர். ஜோன் போல் லேட்றச் என்பவர் "மக்கள் மனதில் ஏற்படும் சமயம் சார்ந்த இரக்கம் நல்லிணக்கமாகும்” என்றார்.
சமூக நல்லுறவென்பது இனம், மத, மொழி, சாதி, பால், வர்க்க, கலாசார வேறுபாடுகள் அனைத்திற்கும் அப்பால் உயர்வான விழுமியங்களாகக் கருதப்படுகின்ற ஐக்கியம், புரிந்துணர்வு, சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு, மற்றும் சகிப்புத்தன்மை போன்றன. ஒரு சமூகத்தில் மேலோங்கிக் காணப்படுமாயின் அதனைச் சமூக நல்லுறவு எனக் கூறலாம்.
சமூக நல்லுறவானது சமூகத்தில் வேறுபட்டிருக்கும் குழுக்களுக்கிடையில் அமைதியான இடைத்தொடர்பை ஏற்படுத்தும் ஒரு ஊடகமாகக் காணப்படுகிறது. சீன இனத் தலைவரான Hujinato.A. என்பவர், "சமூக நல்லுறவானது மத்தியதர சமூகத்தைக் குறித்து நிற்கின்றது என்றார்”. இவரது காலத்தில் சீனாவில் சமூகமானது அநீதியாகவும் ஏற்றத்தாழ்வுடனும் காணப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு 2006 இல் Harmony என்ற பதமானது தூரநோக்கத்தைக் குறிக்கின்றது என்று அடையாளப்படுத்திக் காட்டினார். இச்சொற்றொடரானது கன்பூசியஸ் காலத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் இதமான இசையைப் போன்று சமூகத்தை நல்லுறவுக்கும் சமநிலைக்கும் இட்டுச் சென்றுள்ளார்.
சமூக நல்லுறவு எனப்படுவது "முற்றிலும் வேறுபட்ட தேசிய, சமய, சாதி கோட்பாடுகளுக்கு உட்பட்டுள்ள மக்கள் ஒன்றிணைந்து சகவாழ்வு வாழ்தல் சமூகநல்லுறவு எனப்படுகின்றது. பொதுவாக சமாதானமான சகவாழ்வு எனப்படுவது, ஒன்று சேர்ந்து வாழக்கற்றல். ஒன்று சேர்ந்திருத்தல், வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளல் என்பன சமாதானமான சகவாழ்வு எனப்படுகின்றது. சமாதானமான சகவாழ்வானது ஏனையவர்களுடன் வேற்றுமைகளை ஏற்றுக் கொண்டும். உறுதியான உறவினைக் கொண்டும் ஒருமித்து வாழ வைக்கின்றது. இச்சகவாழ்வானது உறவுகளை உறுதி செய்வதோடு பெருந்தன்மை, உரிமை, சுதந்திரம் என்பவற்றை சமமாக கருதுவதனையும் அதிகப்படுத்துகின்றது. இந்தவகையில் வேறுபாடுகளுக்கு மத்தியில் சமாதானமான சகவாழ்வு வாழ்தல் என்பதும் கூட சமூக நல்லுறவு எனப்படுகின்றது.
சமூகத்தில் சமூக நல்லுறவின் செயற்பாடுகளாக, வலு அல்லது பெறுமானம் காணல், உணர்ச்சிகளை வெளிப்படுத்தல். அன்பை அதிகரித்தல், சமாதானம், மதிப்பு, நம்பிக்கை. மற்றும் சமத்துவம் என்பவற்றை ஏற்படுத்துவதாக அமைகின்றது. மற்றும் சமூகத்தில் இனம்,மதம்,மொழி, பால், வர்க்கம், கலாசார பாரம்பரியங்கள், தரம், வயது, திருமண அந்தஸ்து. போன்ற அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் சமத்துவத்தை வழங்குதல் என்பதே சமூக நல்லுறவின் குறிக்கோளாகும்.
குறிப்பாக மதங்கள் அனைத்துமே சகோதரத்துவத்தினையும் சமூக நல்லுறவினையுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. மதங்கள் குறிப்பிடும் நற்கருத்துக்களையும், சமூக நல்லுறவுச் செயற்பாடுகளையும் அனைவரும் விளங்கக்கூடிய வகையில் மதங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறான நற்கருத்துக்களின் ஊடாக மதங்களை ஊடகமாகக் கொண்டு சமூக நல்லுறவினை ஏற்படுத்த முடியும். உதாரணமாக ஜோன் டோசன் என்பவரால் “South Central Los - Angeles" இல் 20வருட ஆன்மீகப் பணியின் வழியில் வெள்ளையருக்கும் கறுப்பர்களுக்குமிடையே நல்லிணக்கச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டமையைக் குறிப்பிடலாம்.
ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியானது சமூக நல்லுறவு என்பது. ஒருவர் மற்றொருவருடன் நம்பிக்கைக்கு ஏற்றவகையிலான செயற்பாடுகளினை மேற்கொள்ளல் எனக் குறிப்பிடுகின்றது. இதே போன்று கேம்பிறிட்ஜ் ஆங்கில அகராதியானது நல்லிணக்கம் தொடர்பாகக் கூறுமிடத்து, “குறித்த சந்தர்ப்பம் ஒன்றின் போது, இரு நபர்கள் அல்லது குழுக்களுக்கிடையே ஏற்பட்டத் தகராற்றின் பின்னரான நட்புநிலை. இருவேறுபட்ட தன்மையுடையவர்கள் ஒரு செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான நம்பிக்கைகள், வழிகாட்டல்கள் என்பவற்றை ஏற்றுக்கொள்கின்ற தன்மை” எனக் குறிப்பிடுகின்றது.
சமூக நல்லுறவு முறையாகக் கட்டியெழுப்ப வேண்டுமாயின். அனைத்துச் சமூகங்கள் மத்தியிலும் மனிதம் என்ற சிந்தனை விதைக்கப்பட வேண்டும். நல்லுறவு எனப்படுவது இனம், மதம், மொழி, கலாசாரம், என்ற சமூக வேறுபாடுகளைக் கடந்தும், அரசியல் பொருளாதார வேற்பாடுகளினைக் கடந்தும் ஒரு குறித்த வரையறைக்குட்பட்ட எல்லைக்குள் வாழ்கின்ற அனைத்து மக்களும் விட்டுக்கொடுப்பு, பரஸ்பரம், நம்பிக்கை. ஒற்றுமை. சமத்துவம். சகிப்புத்தன்மை என்பவற்றை வளர்த்துக் கொண்டு ஐக்கியமக வாழ்தலைக் குறிக்கின்றது. இவை அனைத்துமே சமூகம் என்ற கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுகின்றது.
சமூகம் என்னும்போது அது மனிதன் வாழ்கின்ற சூழலை குறித்து நிற்கின்றது. இம்மனித சூழலை பல்வேறுபட்ட காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனுள் இன, மத, மொழி, பால், வர்க்கம், அரசியல், பொருளாதாரம், கலாசாரம், பண்பாடு போன்ற இன்னோரன்ன காரணிகள் உள்ளடக்கப்படுகின்றன. இக்காரணிகள் மூலம் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துதலே சமூக நல்லுறவின் நோக்கமாகும்.
சமூகம் என்ப மனிதர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு ஒரேயொரு நிபந்தனையே உண்டு. மனித இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. மனித இனம் இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களுள்ளும் வளர்ச்சியால் மேம்பட்டது.. அறிவால் உயர்ந்தது. நாகரிகம், பண்பாடு, கலாசாரம் எனும் முதுசொத்துக்களையுடையது.
முரண்பாடு, யுத்தம், பலாத்காரம் என்பன இருக்குமாயின் மனித தேவைகள் பலவற்றை இழக்க வேண்டி ஏற்படும். ஆதலால் தேவைகள் பல பூர்த்தி செய்யப்படுவதற்கு சமூகநல்லுறவு முக்கியமானதாகும். இது நமது நோக்கங்களால் பூர்த்தி செய்யக் கூடியது. மனித குலம் அனைத்தினதும் முக்கியமான தேவை மகிழ்ச்சியாகும். சமூகநல்லுறவானது மகிழ்ச்சிக்குத்தடையான விடயங்களை நீக்கி எல்லோருக்கும் மகிழ்வு தரக்கூடியதாகும். அதேபோல் எல்லோரும் விரும்பியபடி வாழ்வதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற நோக்கமும் எல்லோருக்கும் பொதுவானதாகும். விரும்பியமொழி பேசுவதற்கும். விரும்பிய கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கும். விரும்பிய இடத்தில் வாழ்வதற்கும். விரும்பிய சமயத்தை பின்பற்றவும் பூரண சுதந்திரம் அவசியமாகும். முரண்பாடு. யுத்தம் என்பன சுதந்திரத்தை இல்லாமல் செய்யும். சமூகங்களுக்கிடையே சமூகநல்லுறவு நிலவுமேயானால் சுதந்திரம் இயல்பாகவே கிடைக்கும்.
சமூக நல்லுறவின்மை பல்வேறு பாதிப்பினை ஏற்படுத்தும். அவை மனிதன். குடும்பம். சமூகம் என்ற அனைத்தையும் பாதிக்கும் சம்பவங்களாகக் காணப்படும். சித்த சுவாதீனமுற்றுப்போதல், தற்கொலை செய்தல், பலாத்காரம் புரிதல் போன்றன சிலவாகும். பலாத்காரமென்பது தனிமனித பலாத்காரம். குடும்ப ரீதியான பலாத்காரம், தேர்தல் பலாத்கரம். இனரீதியான பலாத்காரம் எனப் பலவகையாகக் காணப்படுகின்றது. இதைவிட உளரீதியான பாதிப்புக்களும் உண்டு. அவற்றில் சகிப்புத்தன்மையின்மை, வீண்பேச்சுக்கள். பொருத்தமற்ற தொடர்பாடல்கள் போன்றன சிலவாகும். சகிப்புத்தன்மை என்பதில் மற்றவரிடையே காணப்படும் வேறுபாட்டுத்தன்மையினை ஏற்றுக்கொள்ள முடியாதிருத்தல், மற்றவரது நம்பிக்கை, விழுமியம், கலாசார ரீதியான நடத்தை என்பவற்றை சகிக்க முடியாதிருத்தல் என்பன சிலவாகும். வன்மையான முறைகளைப் பாவித்தல், கெட்டவார்த்தைகளை உபயோகித்தல் என்பனவும் உளரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும். இதேபோன்றே மற்றவர்கள் முன்வைக்கின்ற கருத்துக்களை கலந்தலோசித்து முடிவெடுக்காமல் நேரடியாக நிராகரித்தல் போன்றவையும் சமூகநல்லுறவின்மையின் விளைவே. இதேபோன்றே வீட்டிலும், வேலைத்தளங்களிலும், வீட்டுக்கு வெளியேயும் பயத்துடன் இருத்தல் மற்றும் அவநம்பிக்கைகள் என்பனவும் சமூகநல்லுறவின்மையின் விளைவே. இதுபோன்றே தலைமைத்துவத்தின் தவறான நடவடிக்கையும் கூட சமூகநல்லுறவின்மையினால் ஏற்படுவதாகும். ஒரு வீட்டின் தலைவரோ குறைபாட்டு ஒழுக்க வழிகளைப் பின்பற்றல், துஷ்பிரயோகங்களை செய்தல், பாகுபாடு, புறக்கணிப்பு போன்றவையெல்லாம் சமூகநல்லுறவின்மையினால் ஏற்படுவதாகும். இவ்வாறான தவறான விளைவுகள் தோன்றாதிருக்க சமூகநல்லுறவானது தனிமனிதன் முதல் சர்வதேசம் வரை இருக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் பிறப்பினால் அனைவரும் சமத்துவமுடையவர்கள். மனித உரிமைகளில் சமமான உரித்துடையவர்கள். ஆண், பெண் என இருபாலராக இருப்பினும் இந்து, முஸ்லிம், பௌத்த, கிறிஸ்தவராக இருப்பினும், தமிழ், சிங்கள, முஸ்லிமாக இருப்பினும் மனித இனத்தால் ஒன்றுபட்டவர்கள். அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லை. சமத்துவமே உண்டு. உதாரணமாக "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்று சொல்லப்பட்டு வருவதிலிருந்து பெண்ணையும், ஆணையும் சமூக மட்டத்திலிருந்து தெய்வீக நிலை வரை உயர்த்தி சமத்துவம் உள்ளவர்களாக மதிக்கப்படும் தன்மை தெளிவாகின்றது, உரிமைகளைக் கோருவதிலும், அனுபவித்தலிலும் சமத்துவம். சமசந்தர்ப்பம், சம வாய்ப்பு என்பன சமூக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்ட கட்மைகள், பொறுப்புக்கள். பணிகள் ஆகியவற்றை சரிவர நிறைவேற்றுவதனாலேயே சமூகத்தின் கட்டுக்கோப்பு, உறுதி, ஒருமைப்பாடு என்பன பேணப்படுகின்றது. சமூகத்தின் பலமும் பலவீனமும். வளர்ச்சியும் - தேய்வும், பாதுகாப்பும் - பாதுகாப்பின்மையும் நல்லுறவும் நல்லுறவின்மையும் போன்றன சமூக உறுப்பினர்கள் எந்தளவிற்கு தத்தம் பொறுப்புக்களை நிறைவேற்றுகின்றார்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.
ஒரு நாட்டிலோ அல்லது பிரதேசத்திலோ வாழுகின்ற மக்கள் அல்லது சமூகம் மிகவும் ஆரோக்கியமுள்ளதாக இருக்க வேண்டுமாயின் சமூகநல்லுறவு இன்றியமையாததாகும். சமூகநல்லுறவு மக்கள் மத்தியில் உறவுப் பாலத்தினை ஏற்படுத்துகின்றது. வித்தியாசங்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதற்கு சமூகநல்லுறவு மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. மனிதன் சமூகத்தினால் ஒன்றிணைக்கப்பட்ட உறவுகள் நிறைந்த இப்பிரபஞ்சத்தினுள் அவதரிக்கின்றான். அன்று முதல் அவன் இறக்கும் வரை மனிதனுடைய வாழ்வு சமூகத்துடன் இணைந்ததாக அமைகின்றது. இதனால்தான் மனிதன் சமூகப் பிராணி என அழைக்கப்படுகின்றான். அவனது ஒவ்வொரு அசைவுகளும் சமூகத்தைச் சார்ந்ததாகவும் இருப்பதனால் ஏனைய மனிதனுடைய உதவி அவனுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. இத்தகையச் சூழலானது மனிதர்களிடையே நல்லுறவை ஏற்படுத்த ஏதுவாக அமைகின்றது எனலாம்.
உலக நாடுகளில் ஏற்பட்டுவரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், போர்கள், புரட்சிகள் என்பன தோன்றுவதற்கு நிலையான சமாதானம் இன்மையே காரணமாகும். யுத்தம் நிறுத்தப்பட்ட போதும். சமூகத்தில் நிலவும் அநீதிகள், சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வுகள், ஏகாபத்தியம் போன்ற நிகழ்வுகளால் சமூகம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நிலையான சமாதானத்தின் தேவை எல்லா மக்களினதும் எதிர்பார்ப்பாகும். இது எமக்குள்ளும் சமூகத்திற்குள்ளும் நல்லுறவை உருவாக்கும் போதே அது சாத்தியமாகின்றது. நல்லுறவு என்பது சகல மக்களினதும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் வெளிப்பாடாகும். அதனை ஏற்படுத்துவது மக்களின் பொறுப்புமாகும். இதன் மூலம் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
சமூகநல்லுறவானது சமூகத்தில் பிரச்சினைகள் இன்றி உறவுகளுக்கிடையே இறுக்கமான உறவை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் உள்ள பேதங்களை இல்லாமல் செய்கின்றது. வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒன்றாக சமூக நல்லுறவு காணப்படுகின்றது. எனவே சமூகநல்லுறவானது ஒரு சமுதாயத்தின் இன்றியமையாத தேவையாக உள்ளதனைக் காணலாம்.
நன்றி
0 Comments