பதினெண் மேற்கணக்கு நூல்கள் - PATHINEN MERKANAKKU NOOLKAL


பதினெண் 

மேற்கணக்கு நூல்கள்


பதினெண்  மேற்கணக்கு நூல்கள் - PATHINEN MERKANAKKU NOOLKAL


எட்டுத்தொகை நூல்கள்

அகத்திணை சார்ந்த நூல்கள்
அகநானூறு
குறுந்தொகை 
நற்றிணை 
கலித்தொகை 
ஐங்குறுநூறு

புறத்திணை சார்ந்த நூல்கள்
புறநானூறு 
பரிபாடல் 
பதிற்றுப்பத்து

பத்துப்பாட்டு நூல்கள்

அகத்திணை சார்ந்த நூல்கள்
குறிஞ்சிப்பாட்டு 
முல்லைப்பாட்டு
பட்டினப்பாலை

புறத்திணை சார்ந்த நூல்கள்
பெரும்பாணாற்றுப்படை 
சிறுபாணாற்றுப்படை 
பொருநராற்றுப்படை 
திருமுருகாற்றுப்படை
மலைபடுகடாம்
நெடுநல்வாடை 
மதுரைக்காஞ்சி


அகநானூறு

எட்டுத்தொகை எனப்படும் சங்ககாலத்தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பாடல்கள் 400 தொகுக்கப்பட்டு அகநானூறு என்ற பெயரால் குறிக்கப்பட்டன. பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மன் என்ற புலவர் இந்நூலைத் தொகுத்துள்ளார். 145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும் பாடியுள்ளனர். இந்நூலுக்கு நெடுந்தொகை என்ற வேறு பெயரும் உண்டு.

இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாக 13 அடிகளையும் அதிக அளவுவாக 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. பாடல்களின் நடை அமைப்பைக் கொண்டு இந்நூல் மூன்று பிரிவுகளைக் கொண்டது.

களிற்றியானை நிரை  1 - 120
மணிமிடை பவளம்  121 - 300
நித்திலக் கோவை  301 – 400
என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

களவு, கற்பு என்ற இரு ஒழுக்கத்திலும் அமைந்த முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய திணைப்பாடல்களைக் கொண்டது.

பாலைத்திணை -  200 பாடல்கள்
குறிஞ்சித்திணை -  80 பாடல்கள்
முல்லைத்திணை -  40 பாடல்கள்
மருதத்திணை - 40 பாடல்கள்
நெய்தல் திணை - 40 பாடல்கள்

எட்டுத்தொகை என்ற தொகுப்பில் உள்ள நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் முழுமையாக அகம் பற்றியே அமைந்துள்ளன. இருப்பினும் இந்நூலுக்கே அகம் என்ற சொல் கொடுத்து அகநானூறு என்று வழங்கியுள்ளனர். இது இந்நூலில் அகப்பொருள் சிறந்திருத்தலைக் காட்டுகிறது.

இந்நூலுக்குரிய நெடுந்தொகை என்னும் பெயருக்கும் தனிச்சிறப்பு உண்டு. மிக அதிகமான அடிகளைக் கொண்ட நெடும் பாட்டுகள், தனித் தனியாகப் பெயரிடப்பட்டுப் பத்துப்பாட்டு எனப் பெயரிடப்பட்டன. சிறு சிறு பாடல்களின் தொகுப்பே எட்டுத்தொகை எனப்பட்டது. எட்டுத்தொகையில் அகநானூற்றைக் காட்டிலும், பரிபாடல், கலித்தொகை ஆகிய இரு நூல்களும் மிகுதியான அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டவையாகும். இருப்பினும் அகநானூற்றிற்கே நெடுந்தொகை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 'நெடு' என்ற அடை, அடிகளின் மிகுதியைக் குறிக்கவில்லை எனத் தெரிகிறது. 'நெடு' என்ற அடைமொழி அகநானூற்றுப் பாடல்களின் பொருட் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே வழங்கப்பட்டுள்ளது.

அகப்பொருள் நூலான அகநானூற்றில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன. தித்தன், நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும் எழினி, ஆட்டனத்தி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது.


குறுந்தொகை 

குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. குறுந்தொகை நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனுள் 307, 391 ஆம் செய்யுட்கள் ஒன்பது அடி உடையன. எட்டு அடிப் பேரெல்லையைக் கடந்துள்ள இந்த இரண்டு பாடல்களும் ஐயத்திற்கு இடமானவை. நற்றிணையில் முற்றும் காணப் பெறாத செய்யுள் இவ் இரண்டனுள் ஒன்றாயிருக்குமோ என்று நினைக்கவும் இடமுண்டு. குறுந்தொகை நூலின் செய்யுள் தொகை கடவுள் வாழ்த்தை விடுத்து 401. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். 
உரையாசிரியர்கள் பலராலும் மேற்கோள் காட்டப்பட்டவிடத்து இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புகளை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ எனினும் தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. 

10 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. எஞ்சிய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 205 என்ற வரையறையைப் பூர்த்தி செய்கின்றது. இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
இந்நூல் அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுகின்ற போதும் முதற்பொருள் மற்றும் கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தந்துள்ளது. இதில் வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளைச் சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.
உதாரணமாக எமது பாடப்பரப்பில் உள்ள, 

இளமை பாரார் … 
கன்று தன் பயமுலை … 
பூவொடு புரையும் … 
போன்ற பாடல்களையே குறிப்பிடலாம்.

மேலும், வரலாற்றுச் செய்தியும் இந்நூல் மூலமே எமக்கு கிடைத்தது

குறுந்தொகைப் பாடல்களில் கரிகால்வளவன், பசும்பூண் பாண்டியன் போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் இடம் பெறுகின்றன. 

சான்றாக,
கொங்குதேர் வாழ்க்கை … எனும் இரண்டாம் பாடலை பாடி இறையனார் தருமி என்ற புலவருக்குப் பொற்கிழி வழங்கச் செய்ததை குறிப்பிடலாம்.


நற்றிணை

சங்க இலக்கிய எட்டுத்தொகை வகைப்பாட்டினுள் நல்லொழுக்கம் என்னும் பொருளில் அமைந்துள்ள ஒரு நூலாகும். இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. வெண்பாவினால் முதலிடம் பெற்றுத் திகழ்கிறது. எட்டுத்தொகை நூல்களில் "நல்" என்ற அடைமொழி பெற்ற நூல் இதுவேயாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். 

இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. அவைகளில் பெரும்பான்மையானவை 9 அடி முதல் 12 அடிகள் கொண்ட பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை என்றாலும் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். 

59 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. எஞ்சிய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 175 ஆகும். குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடலில் இடம்பெற்றுள்ள தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். கற்பு நெறி சார்ந்த வாழ்வுதான் வாழ்வின் ஆதாரம் என்பதை  காட்டும் விதமாக தலைவன் பிரிவால் வாடும் தலைவி, தன்தலைவனின் வரவைச் சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கமும், காதலன் வரவைப் பல்லி கத்தும் ஓசையை வைத்துச் சகுனம் பார்க்கும் வழக்கமும், மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் அக்காலமக்களிடம் இருந்தது. மேலும், பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். 

நற்றிணைப் பாடல்கள் அகப்பாடல்களாக இருப்பினும், அவற்றில் புறத்திணை கூறுகளான மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைச் சிறப்பு, வள்ளல்கள், வீரர்கள் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்நூல் காதலுடன் வீரமும் கலந்த கவிச்சுவை மிக்க நூலாக கருதுகிறார்கள்.


கலித்தொகை

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும்.

கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், பாலைக்கலியில் 35 பாடல்களும் குறிஞ்சிக்கலியில் 29 பாடல்களும் மருதக்கலியில் 35 பாடல்களும் முல்லைக்கலியில் 17 பாடல்களும் நெய்தற்கலியில் 33 பாடல்களும் பாடப்பட்டுள்ளன. இவ்வாறே ஒவ்வொரு திணைக்கும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது.

பாலை - 36 பாடல்கள் -  பெருங்கடுங்கோ
குறிஞ்சி - 29 பாடல்கள் - கபிலர்
மருதம் - 35 பாடல்கள் - மதுரை மருதனிளநாகனார்
முல்லை - 17 பாடல்கள் - சோழன் நலுருத்திரன்
நெய்தல் - 33 பாடல்கள் - நல்லத்துவனார்

பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.


ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. அன்பின் ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. அவை, ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகிறது. இந்நூல் குறைந்த அடியெல்லை கொண்ட பாக்களால் அமைந்தமையால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.அந்தப் பாடல் சிவபெருமானின் விரிவாக்கத் தன்மையை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த 100 பாடல்களையும் ஒவ்வொரு புலவர் இயற்றியுள்ளார். அவ்வகையில் இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. 

மருதத் திணை - ஓரம்போகியார்
நெய்தல் திணை - அம்மூவனார்
குறிஞ்சித் திணை - கபிலர்
பாலைத் திணை - ஓதலாந்தையார்
முல்லைத் திணை - பேயனார்

இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்னும் புலவர். தொகுப்பித்தவன் யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற வேந்தன் ஆவார்.

எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். 

சான்றாக, 
மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே … என்ற அடிகளை குறிப்பிடலாம்.


புறநானூறு

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு, நந்தா விளக்கம் என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் புறநூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சிறுபான்மையாக வஞ்சி அடிகளும் விரவி வரும். புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. 

இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இந்நூலில் இடம்பெறும் புலவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்லர். அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.

புறநானூற்றுப் பாடல்கள் மூலம் பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் கவித்தல், நடுகல் நடுதல், நட்ட கல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து, கைம்மை நோன்பு நோற்றல், உடன்கட்டையேறல் போன்ற பழக்க வழக்கங்களையும், 10 வகை ஆடைகளையும், 28 வகை அணிகலன்களையும் 30 படைக்கலக்கருவிகளையும் 67 வகை உணவுகளையும் அறியக்கூடியதாக உள்ளது.

அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போல புறப்பாடல்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன. இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். 

அந்த வகையில் புறநானூற்றுப் பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.


பரிபாடல் 

எட்டுத்தொகை நூல்களுள் அகமும், புறமும் கலந்து அமைந்த நூல் பரிபாடலாகும். பரிபாடல் என்பது யாப்பு வகையால் பெற்ற பெயர். இதில், திருமால், முருகன், கொற்றவை என்ற தெய்வங்கள் பற்றியும், மதுரை நகர் பற்றியும், வையையாறு பற்றியும் புகழ்ந்து பேசும் எழுபது பாடல்கள் இருந்தன. அழிந்தவை போக இப்போது 22 பாடல்களும் சில சிதைந்த உறுப்புகளுமே எஞ்சியுள்ளன. புறத்திரட்டிலிருந்து வேறு இரு பாடல்கள் கிடைத்துள்ளன.

இந்நூலைத் தொகுத்தார் தொகுப்பித்தார் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. இதிலுள்ள பாடல்களை இயற்றியோர் பதின்மூவர். இவற்றுக்கு இசை வல்லுநர்களைக் கொண்டு பண் வகுக்கப்பட்டுள்ளன. பாடலாசிரியர் பெயருடன், இசை வகுத்தவர் பெயரும், பண்ணின் பெயரும் ஒவ்வொரு பாடலுக்கும் கீழ தரப்பட்டுள்ளன. கண்ணகனார் முதல் மருத்துவன் நல்லச்சுதனார் ஈறாகப் பத்து இசையறிஞர்கள் பண் வகுத்துள்ளனர்.

இதில் திருமால் பற்றியனவும், முருகன் பற்றியனவுமான புராணச் செய்திகள் மிகுதி. மேலும், புதிய இலக்கணக் கூறுகளும், புதிய சொல்லாட்சியும், வடசொற் கலப்பும் மிகுந்து காணப்படுகின்றன.

முருகப் பெருமானுக்கும் திருமாலுக்கும் தொடர்புடைய புராணச் செய்திகளும், வையையில் நீராடுவாரின் பல்வேறு செயற்பாடுகளும் சுவையுடன் இதில் கூறப்பட்டுள்ளன. இசை, கூத்து ஆகிய கலைகள் பற்றிய நுட்பமான செய்திகள் இதில் உண்டு. திருப்பரங்குன்றத்தில் ஓவிய மண்டபம் இருந்த செய்தியை அறியலாம்..
பிற உயிர்களைக் கொல்வோர், வெகுளி உடையோர், அறநெறியைப் பின்பற்றாதார், கூடா ஒழுக்கம் கொண்டோர், அறுமையை நம்பாதோர் ஆகியோர் முருகன் அருள் பெற மாட்டார்கள் என்று ஒரு பாட்டுக் கூறுகின்றது.

முருகப்பெருமானிடம் பொன்னும் பொருளும் வேண்டாமல், அருளும் அன்பும் வேண்டும் அன்பர்களையும் இருநூலில் காணலாம்.


பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.

இந்நூற்பாக்கள் புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றியது ஆகும். சேர மன்னர்களின் கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் விளக்குகின்றன.

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை . ஏனைய எட்டுப் பத்துகளும் கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூன்று சேர மன்னர்களும் ஆக மொத்தம் எட்டு பேர் பற்றிய வரலாறு நமக்கு பதிற்றுப்பத்தின் 80 பாடல்கள் வாயிலாக கிடைக்கப் பெற்றுள்ளது. இந்நூல் சேரரின் வலிமையை முழுமையாக எடுத்து வைப்பதால் இரும்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.

இந்நூலின் காலம் (பொது ஊழி) இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவோரும் உண்டு. ஆயினும் அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பில்லை எனலாம்.


குறிஞ்சிப்பாட்டு 

புலவர் கபிலர், பிரகத்தன் என்ற ஆரிய மன்னனுக்கு, தமிழரின் களவு ஒழுக்கத்தைப் பற்றியும் கற்பு ஒழுக்கத்தைப் பற்றியும் விவரிக்கும் பாட்டு குறிஞ்சிப்பாட்டு. இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும் உண்டு. 261 அடிகளாலான இப் பாடல் அகப்பொருளில் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் பாடலாகும். இதன் இறுதியில் இரண்டு வெண்பாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை இந்தப் பாடலின் தொகுப்புச் செய்திகளைக் கூறுகின்றன.  குறிஞ்சி என்பது புணர்தலை உரிப்பொருளாகக் கொண்ட திணை. நச்சினார்க்கினியர் கூற்று, “இதற்குக் குறிஞ்சி என்று பெயர் கூறினார். இயற்கைப் புணர்ச்சியும் பின்னர் நிகழும் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறுதலின், அன்றியும் முதலானும் கருவாலும் குறிஞ்சிக்கு உரியயாகவே கூறுதலானும் அப்பெயர் கூறினார்”.

இந்தப் பாடல் தோழி செவிலியிடம் கூறும் கூற்றாக அமைந்துள்ளது.

அகத்திணையில் களவு ஒழுக்கம், கற்பு ஒழுக்கம் என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. இவ்விரண்டையும் இணைத்து நிற்பது அறத்தொடு நிற்றலாகும். தலைவியின் களவு ஒழுக்கத்தை வெளிப்படுத்துதல் அறத்தொடு நிற்றல் ஆகும். தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகியவர்கள் அறத்தொடு நிற்பதுண்டு. அறத்தொடு நிற்றலின் விளைவு, தலைவியை அவள் விரும்பிய தலைவனுடன் கற்பு வாழ்க்கையில் இணைப்பதாகும். தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்வித்தல் ஆகும்.


முல்லைப்பாட்டு

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு.  இது நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படுகிறது. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப்  பாட்டுடைத்தலைவனாகக்  கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.

முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள்  பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாழாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.

இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு.


பட்டினப்பாலை

பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.

வஞ்சி நெடும்பாட்டு என்றும் இது கூறப்படும். இப்பாடலின் தலைவன் கரிகாற் பெருவளத்தான். பொருள் காரணமாகத் தலைவியைப் பிரியக் கருதும் தலைமகன், மிக்க சிறப்புடைய காவிரிப்பூம் பட்டினத்தைப் பரிசாகப் பெற்றாலும் கரிய நீண்ட கூந்தலை உடைய தலைவியைப் பிரிய மாட்டேன் என்று தன் நெஞ்சுக்குக் கூறுவதே இப்பாடலின் முதன்மையான செய்தியாகும்.

பண்டைத் தமிழகத்தில் சிறப்புப் பெற்றிருந்த கடல் வாணிகம் துறைமுகச் சிறப்பு, ஏற்றுமதியாகும் பண்டங்கள், சுங்கம் கொள்ளும் முறைமை, கடைத்தெருக்கள், வணிகரின் நேர்மை முதலிய செய்திகளை விளக்கிக் கூறுகிறது இந்நூல்.

பட்டினப்பாலையின் செய்யுள்கள் இடையிடையே வஞ்சிப்பாவின் அடிகள் விரவி இருந்தாலும் ஆசிரியப்பாவால் இயன்றவை.


பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல். 500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை. பேரியாழ் (21 நரம்புகள்) வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனை வெல் வேல் கிள்ளி என்ற சோழ அரசனுக்கும் நாக கன்னிகை பீலிவளை என்பவளுக்கும் பிறந்த தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர். இந்நூலினைச் சமுதாய பாட்டு எனத் தமிழண்ணல் அவர்கள் குறிப்பிடுவார்கள்.


சிறுபாணாற்றுப்படை 

சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய சிறுபாணாற்றுப்படை எனும் நூல் நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இது 269 அடிகளாலமைந்தது. ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தன் எதிர்ப்பட்ட இன்னொரு பாணனிடம் நல்லியக்கோடனின் நல் இயல்புகளையும் அவன் நாட்டின் வளத்தையும் செல்வச் செழிப்பையும் எடுத்துக் கூறி மன்னனிடம் வழிப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.

குறிஞ்சி நாட்டுத் தலைவன் நல்லியக்கோடனைக் காண, நெய்தல் நில எயிற்பட்டினம், முல்லை நிலம், மருத நிலம் ஆகிய ஊர்களைக் கடந்து செல்லவேண்டும். இச்செய்தியைக் கூற வந்த புலவர் இந்நான்கு நிலச் சிறப்புகளை மட்டும் கூறாது மூவேந்தர்களின் தலை நகரான வஞ்சியும், உறையூரும், மதுரையும் முன்போல் செழிப்பாக இல்லை. வந்தவருக்கு வாரி வழங்கும் வன்மை அந்த அரசுக்கும் இல்லை. மேலும் கொடை கொடுப்பதில் வள்ளன்மை படைத்தவர்கள் கடையெழு வள்ளல்கள் என்பதை வரிகளில் எடுத்துக் கூறுகிறார் புலவர். இவர்களையும் விட ஓவிய மன்னர் குலத்து நல்லியக்கோடனை நாடிச் சென்றால் அதிகமாகக் கொடை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மன்னனின் கொடைச்ச்சிறப்பு எடுத்துக்காட்டப்பட்டுள்ளதை காணலாம்.


பொருநராற்றுப்படை 

பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இவரைப் பெண்பாற் புலவர் என்று கூறுவரும் உளர். இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்தஆசிரியப்பாவாலானது. இது பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும்.

பொருநர் என்றால் புகழ்ந்து பாடுவோர் என்று பொருள். இவர்கள் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்று மூவகையினர். பொருநராற்றுப்படையில் போர்க்களம் பாடுவோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கரிகால் பெருவளத்தான் என்னும் அரசனிடம் பொருநன் ஒருவன் பரிசு பெற்று வந்தான். அவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு பொருநனிடம் கரிகால் பெருவளத்தானிடம் சென்று பரிசு பெறும் வகையில் வழிப்படுத்தியதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஒரு பொருநன் வேறொரு பொருநனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் பொருநராற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.


திருமுருகாற்றுப்படை

இந்நூலின் பாட்டுடைத் தலைவன் முருகக் கடவுள். இக்கடவுள் இருக்கின்ற இடங்கள், வழிபடும் முறைகள் ஆகியவற்றைக் கூறி முருகக் கடவுளின் அருளைப் பெறுவதற்கான வழிகள் இப்பாட்டில் கூறப்பட்டுள்ளன. எனவே, அரசன் அல்லது வள்ளலிடம் பொருள்களைப் பெறுவதற்கு உரிய வழிகளைக் கூறுவது போல, முருகக் கடவுளின் அருளைப் பெறுவதற்கு உரிய வழிகளை இப்பாடல் கூறுவதால், இதற்குத் திருமுருகாற்றுப்படை என்னும் பெயர் வழங்கலாயிற்று. இந்நூலுக்குப் புலவராற்றுப்படை என்னும் பெயரும் உண்டு. இந் நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார். இவரது இயற்பெயர் கீரன் என்பதாம். நெடுநல்வாடையை இயற்றியவரும் இவரே. இதுகடைச்சங்கநூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்த நூல் என்று கருதுவதுமுண்டு. எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து இது சங்கநூல் என்பதேயாம். செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.

திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. 

முதற்பகுதி - திருப்பரங்குன்றமும்
இரண்டாம் பகுதி - திருச்செந்தூர்
மூன்றாம் பகுதி - பழநி
நான்காம் பகுதி - சுவாமிமலை
ஐந்தாம் பகுதி - திருத்தணிகை
ஆறாம் பகுதி - பழமுதிர்ச் சோலை 


மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று கூத்தராற்றுப்படை. இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் மலைபடுகடாம் எனவும் குறிப்பிடுவர்.

நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.


நெடுநல்வாடை 

பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

இது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்கள் தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.


மதுரைக்காஞ்சி

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின் தொடக்கத்தில் திரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.

பெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த் திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டையை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார். 

சான்றாக,
நாடெனும்பேர் காடுஆக ஆசேந்தவழி மாசேப்ப ஊர் இருந்தவழி பாழ்ஆக … என்ற அடிகளை குறிப்பிடலாம்.

நன்றி

Post a Comment

0 Comments