திருக்குறள் அதிகாரம் 15 - பிறனில் விழையாமை - PIRANIL VIZHAIYAMAI


பிறனில் விழையாமை 


திருக்குறள் அதிகாரம் 15 - பிறனில் விழையாமை - PIRANIL VIZHAIYAMAI


குறள் 141 

பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் 
தறம்பொருள் கண்டார்க ணில் 

மு.வ உரை - பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை. 

சாலமன் பாப்பையா உரை - இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.

கலைஞர் உரை - பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை 

குறள் 142

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை 
நின்றாரிற் பேதையா ரில் 

மு.வ உரை - அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

சாலமன் பாப்பையா உரை - பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை 

கலைஞர் உரை - பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள் 

குறள் 143

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் 
தீமை புரிந்தொழுகு வார் 

மு.வ உரை - ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர். 

சாலமன் பாப்பையா உரை - தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன் 

கலைஞர் உரை - நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான் 

குறள் 144

எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும் 
தேரான் பிறனில் புகல் 

மு.வ உரை - தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்? 

சாலமன் பாப்பையா உரை - அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன? 

கலைஞர் உரை - பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும் 

குறள் 145

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் 
விளியாது நிற்கும் பழி 

மு.வ உரை - இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான் 

சாலமன் பாப்பையா உரை - அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான். 

கலைஞர் உரை - எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான் 

குறள் 146

பகைபாவம் அச்சம் பழியென நான்கும் 
இகவாவாம் இல்லிறப்பான் கண் 

மு.வ உரை - பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம். 

சாலமன் பாப்பையா உரை - அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா. 

கலைஞர் உரை - பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை 

குறள் 147

அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான் 
பெண்மை நயவா தவன் 

மு.வ உரை - அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே 

சாலமன் பாப்பையா உரை - அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான் 

கலைஞர் உரை - பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான் 

குறள் 148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் 
கறனென்றோ ஆன்ற வொழுக்கு 

மு.வ உரை - பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும். 

சாலமன் பாப்பையா உரை - அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும் 

கலைஞர் உரை - வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும் 

குறள் 149

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் 
பிறற்குரியாள் தோள்தோயா தார் 

மு.வ உரை - கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர் 

சாலமன் பாப்பையா உரை - அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே 

கலைஞர் உரை - பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர் 

குறள் 150

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் 
பெண்மை நயவாமை நன்று 

மு.வ உரை - ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது 

சாலமன் பாப்பையா உரை - அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது. 

கலைஞர் உரை - பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.

நன்றி

Post a Comment

0 Comments