திருக்குறள் அதிகாரம் 14 - ஒழுக்கம் உடைமை - OLUKKAM UDAIMAI


ஒழுக்கம் உடைமை 


திருக்குறள் அதிகாரம் 14 - ஒழுக்கம் உடைமை - OLUKKAM UDAIMAI


குறள் 131 

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும் 

மு.வ உரை - ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும். 

சாலமன் பாப்பையா உரை - ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும். 

கலைஞர் உரை - ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது 

குறள் 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித் 
தேரினும் அஃதே துணை 

மு.வ உரை -ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை - எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும். 

கலைஞர் உரை - எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும் 

குறள் 133 

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் 
இழிந்த பிறப்பாய் விடும் 

மு.வ உரை - ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும். 

சாலமன் பாப்பையா உரை - தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும். 

கலைஞர் உரை - ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர் 

குறள் 134

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் 

மு.வ உரை - கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம். 

சாலமன் பாப்பையா உரை - பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான். 

கலைஞர் உரை - பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான் 

குறள் 135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை 
ஒழுக்க மிலான்கண் உயர்வு 

மு.வ உரை - பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும். 

சாலமன் பாப்பையா உரை - பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை. 

கலைஞர் உரை - பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது 

குறள் 136

ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் 
ஏதம் படுபாக் கறிந்து 

மு.வ உரை - ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர். 

சாலமன் பாப்பையா உரை - ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார். 

கலைஞர் உரை - மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள் 

குறள் 137

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் 
எய்துவ ரெய்தாப் பழி 

மு.வ உரை - ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர். 

சாலமன் பாப்பையா உரை - ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர். 

கலைஞர் உரை - நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும் 

குறள் 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும் 

மு.வ உரை - நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். 

சாலமன் பாப்பையா உரை - நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும். 

கலைஞர் உரை - நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும் 

குறள் 139

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய 
வழுக்கியும் வாயாற் சொலல் 

மு.வ உரை - தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும். 

சாலமன் பாப்பையா உரை - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது. 

கலைஞர் உரை - தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும் 

குறள் 140

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் 
கல்லா ரறிவிலா தார் 

மு.வ உரை - உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர். 

சாலமன் பாப்பையா உரை - முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே. 

கலைஞர் உரை - உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள.

நன்றி

Post a Comment

0 Comments