ஏப்ரல் மாதத்தில் உள்ள
சிறப்பு தினங்கள்
ஏப்ரல் - 1
முட்டாள்கள் தினம்
ஜனவரி 1 ஐ புத்தாண்டாக 1562ஆம் ஆண்டுமுதல் கொண்டாடினர். ஆனால் இதை அறியாத ஜெர்மனி மற்றும் சில நாடுகள் ஏப்ரல் 1 ஐ பழைய முறைப்படி புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். ஏப்ரல் 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கருதுபவர்களை ஏப்ரல் பூல் எனக் கேலியும், கிண்டலும் செய்தனர். ஆகவே இத்தினத்தில் உண்மையில்லாத வதந்திகளை உலகம் முழுவதும் பரப்பி வந்தனர்.
ஏப்ரல் - 2
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
ஆட்டிசம் என்பது பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோய். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும்வகையில் ஆட்டிசம் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்
இத்தினம் 1967ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது ஆன்சு கிறித்தியன்ஆண்டர்சன் என்னும் குழந்தை எழுத்தாளரின் பிறந்த நாள் (ஏப்ரல் 2, 1805) ஆகும். புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின்மீது கவனத்தை ஈர்த்தல் என்கிற நோக்கத்திற்காக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏப்ரல் - 4
நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்
நிலக்கண்ணிகள் நிலத்தில் ஒரு சில சென்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைக்கப்படும் வெடிபொருட்களாகும். பெரும்பாலும் நாட்டின் எல்லைப்புரங்களிலும், யுத்தம் நடைபெறும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன. நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக் கூறவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் - 6
சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்
விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். அது வளர்ச்சி, அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை உள்ளூர், நாடு மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது. விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையையும் ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் - 7
உலக சுகாதார தினம்
மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம். இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.
ருவாண்டா இனப்படுகொலை நினைவு தினம்
ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று இனப்படுகொலை தொடங்கியது. இது 100 நாட்களுக்கு மேல் நடந்தது. இதில் 20 சதவீதமான மக்கள் இறந்தனர். அதாவது 80000 அப்பாவி மக்கள் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலையில் உயிர் இழந்தவர்களுக்காகவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் - 12
உலக விண்வெளி தினம்
ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்கிற விண்வெளி வீரர் விஸ்டாக் என்கிற விண்கலத்தின்மூலம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று விண்வெளிக் குச் சென்று வந்தார். இவர் பூமியை 1 மணி 48 நிமிடத்தில் சுற்றி வந்தார். யூரி ககாரின் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்த ஏப்ரல் 12ஐ உலக விண்வெளி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்
உலகெங்கும் கோடிக்கணக்கில் வீதியோரங்களில் சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நோக்கில் இத்தினம் சர்வதேச அளவில் ஏப்ரல் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவார்த்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் - 14
தீத்தடுப்பு தினம்
தீ விபத்தினால் உயிர்ச்சேதம், பொருட்சேதம், காயமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே தீ ஏற்பட்டால் அதனைத் தடுத்து, கட்டுப்படுத்துவது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீத்தடுப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 1723ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆம்புரோஸ் காட்ஃபரே என்பவர் தீயணைப்பானைக் கண்டுபிடித்தார். தீயணைப்பானைக் கொண்டு நாமே தீயை அணைத்துவிடலாம்.
ஏப்ரல் - 16
உலக தொழில் முனைவோர் தினம்
ஒருவருடைய வாழ்வாதாரத்திற்கு, வருமானம் ஈட்டக்கூடிய செயலை தொழில் என்கின்றனர். ஒருவர் செய்யும் தொழிலை அடிப்படையாகக்கொண்டு, அவருடைய சமூகநிலை நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலானது நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, வேலை வாய்ப்பைக் கொடுத்து, வறுமையைப் போக்கும். உலகளவில் தொழில் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் - 17
உலக ஹீமோபீலியா தினம்
மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபீலியா நோய் உண்டாகிறது. அதாவது எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்க்கு காயம் ஏற்பட்டால் இரத்தக்கசிவு இருந்துகொண்டே இருக்கும். இரத்தம் உறையாது. இந்த நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் - 18
உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம்
சர்வதேச நினைவுச் சின்னம் பாதுகாப்பு ஆலோசனை சபை சார்பாக 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று ஒரு கருத்தரங்கம் டுனிசியாவில் நடைபெற்றது. உலகளவில் நினைவுச் சின்னங்களைக் கொண்டாட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதனை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது. முதன்முதலாக 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
ஏப்ரல் - 21
சர்வதேச வானவியல் தினம்
தொலைநோக்கிமூலம் கிரகங்கள், நிலாக்கள் மற்றும் வான் நிகழ்வுகளையும் அதன் வியப்பையும் அடித்தட்டு மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம். இது 1973ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 15ஆம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4ஆம் நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஏப்ரல் - 22
உலக புவி தினம்
பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் (Gaylord Nelson) என்கிற அமெரிக்கர் கருதினார். இவர் ஊர்வலம், பொதுக்கூட்டம், தர்ணா போன்றவற்றை மாணவர்களைக்கொண்டு நடத்தினார். புவியைப் பாதுகாக்க 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று 2 கோடி பேர் கலந்துகொண்ட பேரணியை நடத்தினார். இதுவே உலக புவி தினமாக மாறியது.
ஏப்ரல் - 23
உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்
யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது ஏப்ரல் 23ஐ உலக புத்தக தினமாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் தனிப்பிரசுர உரிமைக்கான தினத்தையும் கொண்டாட வேண்டும் என ரஷ்யப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். ஆகையால் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் மற்றும் தனிப்பிரசுர உரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தக தினத்தின்போது புத்தகங்களைப் பரிசளித்து மகிழ்வோம்.
ஆங்கிலமொழி தினம்
ஆங்கிலமொழி ஐக்கிய நாடுகளின் 6 அலுவலக மொழிகளில் ஒன்றாகும். வில்லியம் சேக்ஷ்பியரின் பிறந்த நாளை அடிப்படையாகக்கொண்டு ஆங்கிலமொழி தினம் ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2010ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது. வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை அறிந்துகொள்ளவும் மொழி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் - 24
உலக ஆய்வக விலங்குகள் தினம்
உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24ஐ உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.
ஏப்ரல் - 25
உலக மலேரியா தினம்
ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கின்றனர். ஆகவே இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல், மலேரியா தினமாக ஏப்ரல் 25ஐ அறிவித்துக் கொண்டாடி வருகிறது.
ஏப்ரல் - 26
உலக அறிவுசார் சொத்துரிமை தினம்
அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 26 இல் உருவாக்கப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினம் 2001ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் - 27
சாமுவெல் மோர்ஸ் பிறந்த தினம்
சாமுவெல் மோர்ஸ் 1791ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று அமெரிக்காவில் பிறந்தார். மின்சாரம் மூலம் செய்தியை அனுப்ப முடியும் என்பதை நிரூபித்தார். ஒற்றைக் கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். 1844ஆம் ஆண்டு மே 24 அன்று உலகின் முதல் தந்திச் செய்தியை வாஷிங்டன் டிசிஇலிருந்து பால்டிமோருக்கு அனுப்பி புரட்சியை ஏற்படுத்தினார்.
ஏப்ரல் - 28
வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள்
வேலைத் தொடர்பான விபத்துகள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா. சபை ஏப்ரல் 28ஐ இத்தினமாக அறிவித்துள்ளது. அனைத்து நாடுகளிலும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இந்நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் கடைசி சனிக்கிழமை
உலக கால்நடை தினம்
உலக கால்நடை அமைப்பு 1863ஆம் ஆண்டில் டாக்டர் ஜிம் எட்வர்டு (Jim Edward) மற்றும் இவரின் மனைவி பாம் ஆகியோரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு சர்வதேச அளவில் விலங்குகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. 2001ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமையை உலக கால்நடை தினமாகக் கொண்டாடி வருகிறது.
ஏப்ரல் - 29
சர்வதேச நடன தினம்
சர்வதேச நடனக் கமிட்டி, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச திரையரங்க நிறுவனம் ஆகியவை இணைந்து இத்தினத்தை 1982ஆம் ஆண்டுமுதல் ஏப்ரல் 29 அன்று கொண்டாடுகிறது. ஏப்ரல் 29 அன்றுதான் ஜூன் ஜார்ஜ்ஸ் நோவீர் (Jean - Georges Noverre) என்ற நடனக் கலைஞர் பிறந்த நாளாகும். நடனத்தின் மூலம் பாலியல் வேறுபாட்டைப் போக்கி சமத்துவத்தைக் கொடுக்கலாம் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது.
இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக தினம்
இரசாயண ஆயுதங்களை பயன்படுத்துதல் என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு வருந்தத்தக்க குற்றம் என இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு கூறுகிறது. சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதால் பலர் உயிர் இழந்தனர். இரசாயன ஆயுதங்களால் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்காக 1997இல் இருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் - 30
சர்வதேச ஜாஸ் தினம்
ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது. ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது. கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது. ஜாஸ் பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது. இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது. இத்தினத்தை ஐ.நா. சபை 2011 இல் அறிவித்தது.
நன்றி
0 Comments