இராமாயணம் பகுதி - 98 - RAMAYANAM PART - 98


இராமாயணம் பகுதி - 98


இராமாயணம் பகுதி - 98 - RAMAYANAM PART - 98

இராமர், முன்பு கோதாவரி ஆற்றின் பக்கத்தில் தங்கிருந்த இடத்தை காண்பித்து, இந்த இடத்தில் நாம் இருவரும் பிரிந்து மிகுந்த துன்பத்திற்கு உள்ளானோம் எனக் கூறினார். அதன்பின் விமானம் தண்டக வனத்தின் மேல் சென்றது. இராமர் சீதையிடம், இந்த இடம் பல முனிவர்கள் யாகம் செய்து பலன் பெற்ற இடம் என்றார். அதற்குள் விமானம் சித்ரகூட மலை மேல் சென்றது. அங்கு பரத்வாஜ முனிவர், இராமர் இங்கு இறங்க வேண்டும் என மனமுருக வேண்டிக் கொண்டார். பரத்வாஜ முனிவர் வேண்டுகோளின்படி இராமர் சித்ரகூட மலையில் இறங்கினார். இராமர் பரத்வாஜ முனிவரிடம் சென்று அவரை வணங்கினார். பரத்வாஜ முனிவர் இராமரை அன்புடன் ஆசிர்வதித்தார். அதன் பின் இலட்சுமணரும், சீதையும் பரத்வாஜ முனிவரின் திருவடியில் விழுந்து ஆசியை பெற்றனர்.

பரத்வாஜ முனிவர் இராமரை பார்த்து, இராமா! நீ என்னை விட்டு பிரிந்த பின்பு நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் நான் இங்கிருந்தே கண்டு மகிழ்ந்தேன். தாங்கள் இன்று உணவருந்தி எங்களுடன் தங்க வேண்டும் என்றார். பரதன் அங்கு உயிர் துறக்கும் நிலையில் இருக்கும்போது, இராமர், பரத்வாஜ முனிவரிடம், உணவருந்த ஒப்புக் கொண்டார். பரத்வாஜ முனிவர் இராமரிடம், இராமா! தம்பி பரதன்! தன் உடலை வருத்திக் கொண்டு, மனதில் கலக்கத்தை கொண்டு, தினமும் காய், கனிகளை உண்டு, உன் பாதுகைகளுக்கு முப்பொழுதும் மலர்களால் அர்ச்சித்து வருகிறான். இன்றுடன் உன் வனவாசம் முடிவடைவதால் உன் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறான் என்றார். இராமர் இதைக் கேட்டு மிகவும் துயரம் அடைந்தார். இராமர், பரத்வாஜ முனிவரின் உபசரிப்பை ஏற்றார்.

தனக்கு உதவிய அனுமனை கௌரவிக்கும் வகையில், தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார். பிறகு இராமர் அனுமனிடம், அனுமனே! நீ விரைந்துச் சென்று என் கணையாழியை பரதனிடம் காண்பித்து அண்ணன் வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிவிப்பாயாக எனக் கூறினார். பிறகு இராமர் தன் கணையாழியை அனுமனிடம் கொடுத்தார். அதன் பின் அனுமன் இராமரிடன் இருந்து விடைப்பெற்று வான்வெளி நோக்கிச் பறந்தான். வான்வெளியில் அனுமன் மிக வேகமாக பறந்துச் சென்றான். பரதர், அயோத்தி மாநகரையும், அரண்மனையையும் துறந்து அயோத்திக்கு அருகிலுள்ள நந்திக் கிராமத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இராமரின் பாதுகைகளை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தார்.

இராமரின் பாதுகைகளை காலை, மதியம், இரவு என முப்பொழுதும் மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து, வழிபாடு செய்து கொண்டிருந்தார். இன்றும் இராமரின் பாதுகைகளுக்கு பூஜை செய்து மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்தான். அப்பொழுது பரதன், அண்ணன் இராமர் அயோத்திக்கு திரும்பி வரும் நாளை பற்றி சிந்தித்தான். உடனே ஜோதிடர்களை வரவழைத்து இராமர் திரும்பி வரும் நாள் என்று எனக் கேட்டார். ஜோதிடர்கள், இராமரின் பதினான்கு ஆண்டு வனவாச காலம் இன்றுடன் முடிவடைகிறது என்றனர். இதைக் கேட்டு பரதர் மகிழ்ச்சி அடைந்தார். பரதர் இராமரை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.

இராமர் குறித்த காலத்திற்குள் வர கால தாமதமானதால் பரதர், அண்ணன் இராமரை இன்னும் காணவில்லையே! அவருக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்துவிட்டதோ! என எண்ணினார். இல்லை பகைவர்களால் ஏதேனும் துன்பம் நேர்ந்ததோ! ஆனால் அண்ணனுடன் இலட்சுமணன் இருக்கிறாரே அதனால் அவருக்கு ஏதும் நேராது மன அமைதி அடைந்தார். இல்லை பரதனே அயோத்தியை ஆளட்டும் என நினைத்து வராமல் இருக்கிறாரோ! அண்ணன் இராமர் வரவில்லையெனில் நான் உயிர் வாழ மாட்டேன். இனி நான் உயிர் வாழ்வது சிறந்தது அல்ல. நான் உயிர் துறக்க வேண்டும் என எண்ணி பரதர் உயிர் விடத் துணிந்தார். அதன்பின் தன் ஏவலாட்களை அழைத்து சத்துருக்கனை அழைத்து வர கட்டளையிட்டார். அவ்வாறே சத்ருக்கனும் அங்கு வந்து பரதரை பணிந்து நின்றான்.

பிறகு பரதன் சத்ருக்கனை பார்த்து, தம்பி! பதினான்கு ஆண்டு வனவாச காலம் முடிந்த பின்பும் அண்ணன் இராமர் குறிப்பிட்டப்படி நாடு திரும்பவில்லை. அதனால் நான் உயிர் திறக்க போகிறேன். நீ எனக்கு தீ வார்த்திக் கொடு எனக் கேட்டார். சத்ருக்கன், பரதர் இவ்வாறு கூறியதைக் கேட்டு துடிதுடித்து போனான். சத்ருக்கனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அண்ணா! தாங்கள் இல்லா இவ்வுலகில் நான் மட்டும் இருந்து என்ன பயன்? நானும் தங்களுடன் வருகிறேன். இருவரும் ஒன்றாக உயிரைத் துறப்போம். நீங்கள் இல்லாத இவ்வுலகில் இந்த இராஜ்ஜியம் மட்டும் எனக்கெதற்கு? தாங்கள் தீயில் விழுந்தால் நானும் தீயில் விழுந்து மாள்வேன் எனக் கூறி அழுதான்.

பரதன், தம்பி சத்ருக்கனா! நீ இவ்வாறு சொல்லுதல் கூடாது. எனக்காக நீ உயிர் வாழ வேண்டும். என் பொருட்டு தான் இராமர் வனவாசம் சென்றுள்ளார். வனவாச காலம் முடிந்த பின்பும் இராமர் இன்னும் நாடு திரும்பவில்லை. நான் அயோத்தியை ஆட்சி புரிவதால், தம்பி பரதனே ஆட்சி புரியட்டும் என இராமர் வராமல் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. நான் இறந்துவிட்டால் அயோத்தியை ஆட்சி புரிய எவரும் இருக்க மாட்டார்கள். அப்பொழுது இராமர் அரசு புரிய இங்கு வந்து ஆக வேண்டும். அதனால் தான், நான் என் உயிரை விட துணிந்துள்ளேன் எனக் கூறினான். என் செயலை நீ புரிந்துக் கொள்ள வேண்டும். அதனால் நீ எனக்கு தீ மூட்டி கொடு. இது என் கட்டளை எனக் கூறினான். பரதன் இவ்வாறு கூறியதால் சத்ருக்கனால் எதுவும் செய்ய முடியவில்லை. கண்களில் கண்ணீர் தழும்ப பரதரின் கட்டளைப்படி தீமூட்டினான்.

பரதன் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்தி அயோத்தி முழுவதும் பரவியது. மக்கள் அனைவரும் பரதனை காண ஓடி வந்தனர். இச்செய்தி கௌசலைக்கு தெரிவிக்கப்பட்டது. கௌசலை கண்களில் கண்ணீர் தழும்ப பரதனை காண நந்தி கிராமத்திற்கு ஓடி வந்தாள். பரதனை பற்றி கதறி அழுதாள். என் அன்பு மகனே! என்ன காரியம் செய்ய துணிந்துள்ளாய். இராமன் இன்று வரவில்லையென்றால் நாளை வருவான். இராமன் இங்கு வந்து உன்னைப் பற்றி கேட்டால் நாங்கள் என்ன சொல்வது. இச்செய்தியை அறிந்து இராமனும் மாள மாட்டானா? நீ இராமன் மேல் வைத்த அன்புக்கும், உன் பண்புகளுக்கும் ஆயிரம் இராமர்கள் வந்தாலும் உனக்கு ஈடாகா மாட்டார்கள். உன்னைப் போல் ஒருவன் இவ்வுலகில் பிறக்கப் போவதில்லை. உன் அன்பு மேரு மலையைக் காட்டிலும் மிகப் பெரியது. நீ உன் உயிரை தீயிக்கு இரையாக்கி விடாதே எனக் கூறி புலம்பி அழுதாள்.

பரதன், அன்னையே! அண்ணன் இராமர், பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்த பின்பு திரும்பி வருவேன் என உறுதியளித்தார். அப்பொழுது நான் தாங்கள் பதினான்கு ஆண்டு முடிந்து வரவில்லையென்றால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என சபதம் செய்துக் கொண்டேன். இன்று அண்ணன் இராமரின் பதினான்கு ஆண்டு வனவாசம் காலம் முடிந்துவிட்டது. ஆனால் அவர் இன்னும் இங்கு வரவில்லை. அதனால் நான் ஏற்றுக்கொண்ட சபதத்தின்படி உயிர் விடுவேன். தந்தை, என் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் பொருட்டு சத்தியத்திற்காக உயிரைவிட்டவர். அதுபோல் நானும் என் சபதத்திற்காக உயிரை விடுவேன் என்றான். பரதன் கூறிய சொற்களை கேட்டு கௌசலை துடிதுடித்து போனாள்.

கௌசலை, பரதனை எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தும், அத்தனையும் தோல்வியில் முடிந்தன. பரதன் தீயில் இறங்குவதில் உறுதியாக இருந்தான். பரதன், அக்னிக்கு அருகில் சென்று பூஜையை செய்தான். அக்னிக்கு தன் உயிரை காணிக்கையாக கொடுக்க முன்னே வந்தான். அப்பொழுது அனுமன் பரதன் இருக்கும் நந்தி கிராமத்தை அடைந்தான். அனுமன், பரதன் தீயில் இறங்க முன் வந்திருப்பதை கண்டு இவர் தான் பரதர் என்பதை உகித்துக் கொண்டான். அனுமன், இராமர் வந்துவிட்டார், ஸ்ரீ இராம சந்திர மூர்த்து வந்துவிட்டார் எனக் கூறிக் கொண்டு வேகமாக வந்து இறங்கி பரதனை தடுத்தான். அனுமன் வந்து இறங்கிய வேகத்தில் அக்னித்தீயும் அணைந்தது. பரதரே! ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி வந்துவிட்டார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்துவிடுவார். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு ஆசிரமத்தில் தங்கியிருக்கின்றார்.

பிறகு அனுமன், பரதரே! தாங்கள் என்ன காரியம் செய்ய துணிந்துள்ளீர்கள். தாங்கள் உயிர் விட்ட செய்தியை அறிந்து இராமர் மட்டும் மகிழ்ச்சியாக உயிர் வாழ்வாராக என நினைத்தீர்களா? நிச்சயம் இல்லை. அவரும் தங்களுடன் உயிரை மாய்த்துக் கொள்வார். தாங்கள் அவசரப்பட்டு இச்செயலை செய்வது சரியானது அல்ல. ஸ்ரீராமர் பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்து அயோத்திக்கு வருவதற்கு இன்னும் நாற்பது நாழிகை பொழுது மீதம் இருக்கிறது. அதற்குள் இராமர் இங்கு வந்துவிடுவார். தாங்கள் யாரும் வருந்த வேண்டாம். நான் செல்வது அனைத்தும் உண்மை. பரதரே! ஸ்ரீராமர் அவர்கள் அவரின் அடையாளமாக இந்த கணையாழியை தங்களிடம் காண்பிக்க சொன்னார் எனக் கூறிவிட்டு இராமர் கொடுத்த கணையாழியை பரதரிடம் காண்பித்தான்.

பரதன், அக்கணையாழியை பார்த்து இது என் அண்ணல் இராமரின் கணையாழி தான் எனக் கூறி அக்கணையாழியை வாங்கி கண்ணீரால் அபிஷேகம் செய்தார். பிறகு அக்கணையாழியை அனைவரிடமும் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார். அனைவரும் இராமரின் கணையாழியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பிறகு பரதன் அனுமனை பார்த்து, ஐயனே! எங்களுக்கு உயிரினும் மேலான இத்தகையை இன்பச் செய்தியை கூறிய தாங்கள் யார்? என்று எங்களிடம் கூறவில்லையே! நீங்கள் வந்த வேகத்தில் அக்னித்தீயும் அணைந்துவிட்டது. அப்படியென்றால் நீங்கள் மும்மூர்த்திகளில் ஒருவரா? எனக் கேட்டான்.

அனுமன், பரதரிடம் பெருமானே! நான் வாயுக்குமாரன் குரங்கினத்தைச் சேர்ந்தவன். வாயு பகவானுக்கும், அஞ்சனா தேவிக்கும் பிறந்தவன். அதன்பின் அனுமன் தன் விஸ்வரூபத்தை காண்பித்தான். அனுமனின் இந்த உருவத்தைக் கண்டு சத்ருக்கனும் மற்றவர்களும் அஞ்சி நடுங்கினார்கள். பிறகு அனுமன் அவர்களை பார்த்து, இது தான் என் உண்மையான உருவம் என்றான். அங்கு இருந்தவர்கள் பயப்படுவதைப் பார்த்த அனுமன் தன் உருவத்தை சிறியதாக மாற்றிக் கொண்டான். அதன் பின் பரதன், அனுமனே! அண்ணல் வந்துவிட்டார் என்னும் சுபச்செய்தியை கூறியதால் உனக்கு பல பரிசுகளை தர விரும்புகின்றேன். பிறகு பரதன், அனுமனுக்கு விலையுயர்ந்த பொன்னும், பொருளும், இரத்தமணிகளும் பரிசாக கொடுத்து மகிழ்ந்தான்.

பரதன் தம்பியிடம்! தம்பி சத்ருக்கனா! அண்ணல் இராமர் வந்திவிட்ட செய்தியை முரசறைந்து அறிவிக்கச் சொல். அயோத்தியையும் அலங்கரிக்கச் சொல் எனக் கட்டளையிட்டார். சத்ருக்கன் இச்செய்தியை சுமந்திரரிடம் கூறினான். சுமந்திரர் இச்செய்தியை முரசறைந்து அறிவிக்கும்படி வள்ளுவனிடம் கூறினான். பரதனின் கட்டளைப்படி நாடு முழுவமும் இராமரின் வருகையை முரசறைந்து அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். அவரவர் வீடுகளில் மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்தனர். அயோத்தி நகரமே மகிழ்ச்சி கடலில் திளைத்தது. பரதன் அனுமனிடம், நாங்களும் உன்னுடன் வந்து அண்ணலை வரவேற்க விரும்புகிறோம் என்றான். பரதனின் தவிப்பை அறிந்த அனுமன் சம்மதித்தான்.

அயோத்தி மக்களும், முனிவர்களும், இராமரின் அன்னை கௌசலை உட்பட்ட மூன்று தாய்மார்களும், சத்ருக்கனையும் இராமரை அழைத்து வரச் செல்ல தயாராக இருந்தனர். பரதன், இராமரின் பாதுகைகளை தன் தலையில் வைத்துக் கொண்டு இராமரை எதிர்நோக்கி அழைத்து வர புடைசூழச் சென்றான். போகும் வழியில் பரதன் அனுமனிடம், நீ அண்ணல் இராமரை முதலில் எங்கு சந்தித்தாய் என்பதை விரிவாக கூறு எனக் கேட்டான். அனுமன், நான் எம்பெருமான் இராமரை ருசியமுக பருவத்தில் சந்தித்தேன் என்றான். அதன் பின் அனுமன், வாலியின் வதத்தையும், இராவணனனின் வதத்தையும், விபீஷணனுக்கு பட்டாபிஷேகத்தை செய்ததையும் அதம்பின் அங்கிருந்து புஷ்பக விமானத்தில் வந்து பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுகிணங்க அங்கு தங்கியிருந்ததை பற்றியும் விரிவாக கூறினான்.

அப்பொழுது சூரியன் எழ தொடங்கினான். அங்கு பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில், இராமர் பரத்வாஜ முனிவரின் உபசரிப்பை ஏற்று மகிழ்ச்சியுடன் இருந்தார். பிறகு இராமர் பரத்வாஜ முனிவரிடம் இருந்து விடைப்பெற்று அங்கிருந்து புஷ்பக விமானத்தில் சென்றனர். புஷ்பக விமானம் கங்கை கரையை அடைந்தது. இராமர், கங்கை கரையில் இறங்கி குகனை சந்தித்தார். குகன், ஸ்ரீராமரின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். இராமர், குகனை தன் மார்புடன் அன்பாக தழுவிக் கொண்டார். இராமர் குகனை பார்த்து, தம்பி! நீ எவ்வாறு இருக்கின்றாய். உன் சுற்றமும் அனைவரும் நலமாக இருக்கிறார்களா? எனக் கேட்டார். குகன், எம்பெருமானே! தங்களின் அருளால் நாங்கள் எந்தவிதக் குறையின்றி மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றான். ஆனால் இலட்சுமணரை போல் எங்களால் உங்களுக்கு துணையாக இருந்து சேவை செய்ய முடியவில்லை என்ற குறை தான் உள்ளது என்றான். இதைக் கேட்டு இராமர், எனக்கு இலட்சுமணனும், நீயும் வேறுவேறு அல்ல எனக் கூறி குகனை சமாதானம் செய்தார். குகன் இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தான். பிறகு குகன் சீதையிடமும், இலட்சுமணனிடமும் ஆசிப் பெற்றான். பிறகு இராமர், குகனை, சுக்ரீவன், அங்கதன் முதலானவர்களுக்கு அறிமுகம் செய்தார். இராமர், இவன் பெயர் குகன். வேடர்களின் தலைவன். நற்குணத்தில் சிறந்தவன் என்றார். பிறகு சுக்ரீவனும், விபீஷணனும் குகனை அன்போடு தழுவிக் கொண்டனர்.

அதன் பின் இராமர் குகனிடம் இருந்து விடைப்பெற்று அயோத்தியை நோக்கி புஷ்பக விமானத்தில் பறந்தனர். இராமர், விமானத்தில் இருந்து விபீஷணன், சுக்ரீவன், அங்கதன் முதலானவர்களுக்கு கண்ணுக்கு எட்டிய அயோத்தி நகரை காண்பித்து, அதோ அயோத்தி நகரம் தெரிகிறது பாருங்கள் என்றார். அனுமன், புஷ்பக விமானத்தை பார்த்தார். உடனே பரதரிடம், பரதரே அதோ! பாருங்கள் அண்ணல் இராமர், இலட்சுமணர், சீதை வரும் புஷ்பக விமானம் என்றார். பரதர், அந்த விமானத்தை பார்த்து வணங்கினார். இராமரை பார்த்த அயோத்தி மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அனுமன், உடனே பறந்துச் சென்று இராமர் முன் வணங்கி நின்றான். அனுமன் இராமரிடம், எம்பெருமானே! தங்களின் கட்டளைப்படி நான் நந்தி கிராமத்திற்குச் சென்று, தங்களின் வருகையை காணாமல் தீக்குளிக்க முயன்ற பரதரை தடுத்து நிறுத்தினேன்.

தங்களின் வருகையை அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். இதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பரதர், உடனே அயோத்தி நகரை அலங்கரிக்குமாறு கட்டளை அருளினார் என்றான். இராமர் அனுமனை பார்த்து, அனுமனே! எனக்கு துன்பம் நேரும்போது தக்க சமயத்தில் நீ எனக்கு உதவி செய்துள்ளாய். நீ என்றும் மகிழ்ச்சி உடன் வாழ்வாயாக எனக் கூறி வாழ்த்தினார். அனுமன் இராமரிடம், பரதரும், சுற்றமும் தங்களை எதிர்நோக்கி அழைத்து வர என்னுடன் வந்துள்ளார்கள் எனக் கூறி பரதர் மற்றும் சுற்றத்தாரை காண்பித்தான். இராமர், பரதரை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார். உடனே இராமர் புஷ்பக விமானத்தை தரையில் இறங்கும்படி வேண்டினார். புஷ்பக விமானம் தரையில் இறங்கியது.

தொடரும்.....

Post a Comment

0 Comments