இராமாயணம் பகுதி - 97
தசரதர் இராமரை, மகனே! உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள். முன்பு கைகேயிக்கு கொடுத்த வரத்தினால் தான் இத்தனை துன்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இராமர், தந்தையே! தங்களை தரிசித்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கின்றது. அதனால் எனக்கு எந்த வரமும் வேண்டாம் என்றார். தசரதர், இராமா! நான் உனக்கு வரம் கொடுக்க விரும்புகின்றேன். அதனால் நீ ஏதேனும் ஒரு வரத்தைக் கேள் என்றார். இராமர், தந்தை தசரதர் கொடுக்கும் வரம் தனக்கு பயன்படாமல் பிறருக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். தந்தை கொடுக்கும் வரம் அவர் ஒருவரே கொடுப்பதாக இருக்க வேண்டும் என நினைத்தார். அப்பொழுது இராமருக்கு நினைவு வந்தது அன்னை கைகேயும், தம்பி பரதனும் தான். தான் கானகத்திற்கு செல்லுமாறு அன்னை சொல்லியதும், தந்தை, கைகேயி இனி எனக்கு மனைவி இல்லை, பரதன் எனக்கு மகனும் இல்லை என்று சொன்னது இராமரின் நினைவுக்கு வந்தது.
இராமர் தசரதரிடம், தந்தையே! தாங்கள் அன்னை கைகேயியையும், தம்பி பரதனையும் மன்னித்தருள வேண்டும் என்றார். மகனே! கைகேயி என்னிடம் கேட்ட வரம் கூர்மையான கத்தி போல் என் மார்பில் குத்தியது. அந்த வலி என் மார்பை விட்டு அகலாமல் இருந்தது. இப்பொழுது நான் உன்னை தழுவிக் கொண்டதால் அவ்வலி மறைந்துவிட்டது. இராமா! நான் பரதனை மகனாக ஏற்றுக் கொள்கிறேன். உன்னை கானகத்திற்கு அனுப்ப காரணமாய் இருந்த கைகேயியை நான் மன்னிக்க மாட்டேன் என்றார். இதைக்கேட்ட இராமர், தந்தையே! நான் அயோத்தியில் பிறந்தது கோசலை நாட்டை ஆள்வதற்கு அல்ல. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பத்தை தரும் இராவணாதி அரக்கர்களை கொல்லும் பொருட்டே நான் இராமனாக அவதாரம் எடுத்தேன். இப்படி இருக்கையில் நான் அயோத்தியின் அரசனாக முடிசூட வேண்டும் என்று நினைத்தது என் தவறு.
இதில் அன்னையின் தவறு என்ன உள்ளது. அதனால் தாங்கள் அன்னையை மன்னித்தருள வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதைக்கேட்ட தசரதர், இராவணாதி அரக்கர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது கைகேயியின் செயல் தான் என்பதை புரிந்து கைகேயியை மன்னிதருளினார். பிறகு தசரதர், இராமருக்கும், இலட்சுமணனுக்கும் விடைக் கொடுத்து வானுலகம் சென்றார். அதன் பின் தேவர்கள் இராமரை பார்த்து, பெருமானே! தங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டனர். இராமர் தேவர்களிடம், போர்களத்தில் மாண்ட வானரங்கள் அனைவரும் புத்துயிர் பெற்று எழ வேண்டும். வானரங்கள் வாழும் கானகத்தில், நீர் வளமும், நில வளமும், பழங்கள், காய்கனிகள் வற்றாது இருக்க அருள் செய்ய வேண்டும் என்று கேட்டார். தேவர்களும் இராமர் கேட்டபடியே வரத்தை அருளினர்.
போர்களத்தில் மாண்ட வானரங்கள் அனைவரும் புத்துயிர் பெற்று எழுந்தனர். இதைப் பார்த்த மற்ற வானரங்கள் மகிழ்ச்சியில் ஆடிபாடினர். அப்பொழுது சிவபெருமானும், பிரம்ம தேவனும் தோன்றி, இராமருடைய பதினான்கு ஆண்டு வனவாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஆதலால் தாங்கள் அயோத்திக்கு விரைந்துச் செல்லுங்கள். தங்கள் வரவை நோக்கி பரதன் எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறான். தாங்கள் குறிப்பிட்ட நேரத்தில் போகவில்லையென்றால் பரதன் அக்னியில் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்வான். ஆதலால் காலம் தாழ்த்தாமல் அயோத்திக்குச் செல்லுங்கள் என்று கூறி இராமரை வாழ்த்திவிட்டு சென்றனர்.
இராமர் விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! இன்றுடன் என் பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது. நான் இன்று அயோத்தி செல்ல வேண்டும். என் வரவைக் காணாமல் பரதன் நிச்சயமாக இறந்து போவான். நான் உடனே அயோத்திக்குச் செல்ல ஏதேனும் வாகனம் உள்ளதா? எனக் கேட்டார். விபீஷணன், எம்பெருமானே! இராவணன் தன் தமையனான குபேரனிடம் இருந்து பறித்த புஷ்பக விமானம் உள்ளது. அதன் வேகமானது, வாயு வேகத்தை விட அதிகம் என்று சொல்லலாம். நாம் அனைவரும் புஷ்பக விமானத்தில் செல்லலாம் என்றான். இராமர், அன்பர்களே! நீங்கள் அனைவரும் உங்கள் இருப்பிடத்திற்கு சென்று, உங்களின் உறவினர்களை சந்தித்து உங்களின் நலத்தை கூறுங்கள். என் பதினான்கு ஆண்டு வனவாச காலம் முடிந்துவிட்டதால், நான் இன்றே அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்றார்.
அதன்பின் விபீஷணன் மற்றும் வானர வீரர்கள், இராமரிடம் பெருமானே! நாங்கள் எல்லோரும் தங்களின் பட்டாபிஷேகம் காண விரும்புகிறோம். அதற்கு தாங்கள் அனுமதி தர வேண்டும் என வேண்டினர். இராமர், அனைவரும் அவ்வண்ணமே அயோத்திக்கு வாருங்கள் எனக் கூறினார். பிறகு இராமர் புஷ்பக விமானத்தை கொண்டு வரும்படி கூறினார். இராமர், இலட்சுமணர் மற்றும் சீதை மூவரும் புஷ்பக விமானத்தில் ஏறினர். இராமர், விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! உன் மக்களுக்கு நல்லாட்சி புரிந்து, நீதிநெறி விளங்க, தர்மத்தை நிலை நிறுத்துவாயாக என வாழ்த்தி ஆசி கூறினார். பிறகு சுக்ரீவனைப் பார்த்து, சுக்ரீவா! உன் உதவியால் தான், நான் இராவணனை கொன்றேன். நீயும், உன் வானரப்படைகளும் கிஷ்கிந்தைக்கு சென்று எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக எனக் கூறினார்.
அதன் பின், அங்கதன், அனுமன், நீலன், ஜாம்பவானை அழைத்து நீங்கள் அனைவரும் எல்லாவித நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ்வீர்களாக எனக் கூறினார். இராமரை பிரிய முடியாமல் அங்குள்ள அனைவரும் கண்கலங்கி நின்றனர். பிறகு அனைவரும் இராமரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, நாங்கள் அனைவரும் தங்களோடு அயோத்திக்கு வந்து, தங்களின் பட்டாபிஷேகத்தை கண்டு களித்து, அதன் பின் நாங்கள் கிஷ்கிந்தை செல்கிறோம் என வேண்டினர். இராமர் அவர்களின் அன்பை மெச்சி, நீங்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். உங்களின் மனக்கருத்தை தெரிந்துக் கொள்ளவே இவ்வாறு செய்தேன். நீங்கள் அனைவரும் அயோத்திக்கு வாருங்கள்.
நாம் அனைவரும் ஒன்றாக செல்லலாம் என்றார். பிறகு சுக்ரீவன், அங்கதன், அனுமன் முதலிய அனைவரும் மனித உருவம் கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டனர். பிறகு விபீஷணன் இராமரிடம், நாங்களும் தங்களுடன் வந்து பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்க விரும்புகிறோம் என்றனர். இராமர் சம்மதம் தெரிவிக்க விபீஷணனும் அவனின் மனைவி மக்களுடன் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டனர். இராமர், சீதைக்கு இலங்கையை சுற்றி காண்பிக்க விரும்பினார். அதனால் புஷ்பக விமானத்தை இலங்கையை சுற்றி செல்லுமாறு வேண்டினார். இராமரின் வேண்டுகோளுக்கிணங்க புஷ்பக விமானமும் இலங்கையை ஒரு வலம் வந்து சென்றது.
இராமரின் வேண்டுகோளுக்கிணங்க புஷ்பக விமானமும் இலங்கையை ஒரு வலம் வந்து சென்றது. புஷ்பக விமான இலங்கை நகரின் கிழக்கு நோக்கி பறக்க தொடங்கியது. இராமர் சீதையிடம், சீதா! இதோ இந்த இடத்தில் வானர படைத்தலைவன் நீலன், பிரகஸ்தன் என்னும் அரக்கனை தன் கைகளால் கொன்றான் என்றார். விமானம் தெற்கு நோக்கி பறக்க தொடங்கியது. இராமர், இதோ இடத்தில் தான் அனுமன், துன்மிகன் என்னும் அரக்கனை கொன்றான் என்றார். அதன் பின் விமானம் மேற்கு நோக்கி பறக்க தொடங்கியது. இராமர், சீதா! இதோ இந்த இடத்தில் தான், இலட்சுமணன், மிக வலிமையான, மாயையில் வல்லவான இந்திரஜித்தை கொன்றான் என்றார். விமானம் வடக்கு நோக்கி பறக்க தொடங்கியது.
இராமர், சீதா! இதோ இந்த இடத்தில் தான் நான் இராவணனை பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு கொன்றேன் என்றார். அதன்பின் விமானம் கடல் மேல் பறந்துச் சென்றது. இராமர் சீதையிடம், சீதா! இதோ இந்த பாலத்தை வானர வீரர்கள் ஐந்து நாட்களில் கட்டிமுடித்தனர் என பாலத்தை காட்டி மகிழ்ந்தார். இங்கு வந்து தீர்த்தங்களில் மூழ்கிச் செல்பவர்கள் அனைத்துப் பாவங்களும் நீங்கி நற்கதி அடைவர். இந்த சேதுவில் நீராடுபவர்கள், எத்தகைய பாவங்களைச் செய்திருந்தாலும், இந்த கடலில் மூழ்கினால் தேவர் தொழும் பெருமை பெற்றவர் ஆவார்கள் என்றார். அதன்பின் சீதையிடம், வருணன் தன்னிடம் சரணடைந்த இடத்தையும் காட்டினார். பிறகு விமானம் கடலைக் கடந்து, வடக்கு நோக்கி பொதிகை மலை மேல் சென்றது.
இராமர் சீதையிடம், சீதா! இந்த மலை அகத்திய முனிவர் வாழும் சிறப்புமிகுந்த மலை என்றார். அதன் பின் விமானம் திருமாலிருஞ்சோலைமலை, திருவேங்கடமலை மேல் பறக்கும்போது, இந்த மலையில் முழுமுதற்கடவுளான திருமால் எழுந்தருளும் மலைகளாகும் என்றார். விமானம் ருசியமுக பருவத்தை நெருங்கும் போதும், சீதை இராமரிடம், பெருமானே! தாங்கள் முதன் முதலில் அனுமனை எங்கு பார்த்தீர்கள் எனக் கேட்டாள். இராமர், இதோ இந்த ருசியமுக பருவத்தில் தான் சந்தித்தேன் என்றார். விமானம் ருசியமுக பருவத்தை தாண்டிகிஷ்கிந்தை நோக்கி பறந்துச் சென்றது. இராமர் சீதையிடம், சீதா! இதுகிஷ்கிந்தை. இங்கு தான் நான் வாலியை வதம் செய்தேன். சூரிய குமாரரான சுக்ரீவன் நீதிநெறி தவறாது ஆட்சி செய்யும்கிஷ்கிந்தை இது தான் என்றார்.
சீதை இராமரிடம், பெருமானே! பெண்களின் துணையின்றி நான் மட்டும் அயோத்தி நகருக்கு செல்வது சிறப்பல்ல. அதனால் இந்நகரத்தில் வாழும் வானரப் பெண்களை நம்முடன் அழைத்துச் செல்லலாம் என்றார். இராமர் சரி என்று சம்மதிக்கவே, புஷ்பக விமானம்கிஷ்கிந்தையில் இறங்கியது. சுக்ரீவனின் கட்டளைப்படி, அனுமன் விரைந்துச் சென்று வானரப் பெண்களை அழைத்து வந்தான். வானரப் பெண்கள் அனைவரும் மனித உருவங்கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறினர். வானர பெண்கள் சீதைக்காக சில பரிசுப் பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். சீதை அப்பரிசு பொருட்களை ஏற்று அவர்களை வாழ்த்தினார். பிறகு அங்கிருந்து விமானம் வானில் பறந்தது. விமானம் கோதாவரி ஆற்றில் மேல் பறந்துச் சென்றது.
தொடரும்.....
0 Comments