இராமாயணம் பகுதி - 88
போரைக் காண்பதற்காக விண்ணுலகத்தவர் வானில் வந்து தோன்றினர். அப்பொழுது இந்திரஜித் விபீஷணனிடம், நீ அரக்க குலத்தையே கெடுக்க வந்தாயா? சிறிது கூட உனக்கு வம்ச ரத்தம் ஓடவில்லையா? நம் விரோதியே கதி என்று இருக்கின்றாய். உனக்கென்ன மூளை மழுங்கிவிட்டதா? இன்று உன் யோசனையால் தான் இந்த யாகம் தடைப்பட்டு விட்டது என்றான். விபீஷணன், நான் அரக்க குணம் கொண்டவனல்ல. நேர்மையை விரும்புபவன். அதனால்தான் இவர்களோடு நட்பு கொண்டேன். நட்பு நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தது. பிறர் பொருளைக் கவர்ந்தவன் என்றுமே வாழ்க்கையில் உயரமாட்டான். நீ இராவணனுக்காக போர் புரிகிறாய். அதனால் நீயும் அழிய வேண்டியவன் தான் என்றான். இதைக்கேட்டு இந்திரஜித் மிகவும் கோபம் கொண்டான்.
இலட்சுமணனை பார்த்து, நான் உன்னையும், உன் அண்ணனையும் நினைவிழக்கச் செய்தேனே. அதை நீ மறந்துவிட்டு இப்பொழுது என் கையால் இறக்கவா வந்திருக்கின்றாய்? எனக் கேட்டான். இலட்சுமணன், வீரனே! இனி என்னை கொல்வது என்பது முடியாத காரியம். அதனால் என்னிடம் வீண்பேச்சு பேசாதே. மறைந்து தாக்குவது தான் வீரனின் பலமா? என்னுடன் வந்து நேருக்கு நேர் போர் புரிந்து வென்றுக்காட்டு எனக் கூறினார். இருவருக்கும் போர் ஆரம்பமானது. இவர்களுக்கிடையில் நீண்ட நேரம் போர் நடந்தது. இந்திரஜித்தால் இலட்சுமணனின் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. விபீஷணன், வானரர்களே, அரக்கர்களை அழியுங்கள். இராவணனுக்கு இந்த இந்திரஜித் ஒருவனே மாவீரன். இவனைக் இலட்சுமணன் கொன்று விடுவார்.
நாம் இலட்சுமணனுக்கு உதவி புரியும் வகையில் அரக்கர்களை அழிப்போம் என கூறினான். வானர வீரர்கள், அரக்கர்களை கொன்று வீழ்த்தினர். இலட்சுமணன் இந்திரஜித்தின் தேர்ப்பாகனைக் கொன்றான். அதனால் இந்திரஜித் தானே தேரை ஓட்டிக் கொண்டு போர் புரிந்தான். வானர வீரர்கள் இந்திரஜித்தின் தேரைத் ஒடித்தெறிந்தனர். பிறகு இந்திரஜித் தரையில் நின்றுக் போர் புரிந்தான். இலட்சுமணனின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் இந்திரஜித் சக்தி வாய்ந்த படைக்கலன்களை ஏவ ஆரம்பித்தான். இந்திரஜித் இலட்சுமணன் மீது வாயுப்படையை ஏவினான். இலட்சுமணன் தன்னிடமிருந்த அக்னிப் படையை ஏவி அதை அணைத்தார். இந்திரஜித் வருணாஸ்திரத்தை இலட்சுமணன் மீது ஏவினான். இலட்சுமணன் தன்னிடமிருந்த வருணாஸ்திரத்தால் அதனைத் தூள்தூளாக்கினார்.
இந்திரஜித் ஏவும் படைக்கலனைக் அதே படைக்கலனைக் கொண்டு அழித்தார். வெகு நேரம் போர் புரிந்ததால் இந்திரஜித் சோர்வை உணர்ந்தான். அதனால் அவன் இலட்சுமணனை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரம்மாஸ்திரத்தை இலட்சுமணன் மீது ஏவினான். இதைப் பார்த்த தேவர்கள் இலட்சுமணன் வீழ்வது உறுதி என நினைத்து வருந்திக் கொண்டு இருந்தனர். உடனே இலட்சுமணன் தன்னிடமிருந்த சக்தி வாய்ந்த பிரம்மாஸ்த்திரத்தை நாணில் பூட்டி, இந்திரஜித் தொடுத்த படைக்கலனை மட்டும் அழிப்பாயாக. இந்திரஜித்தின் உயிரையும் ஏனைய உலகங்களையும் அழிக்காதே எனக் கூறி ஏவினான். அதேபோல் இலட்சுமணன் ஏவிய பிரம்மாஸ்த்திரம், இந்திரஜித்தின் படைக்கலனை மட்டும் அழித்தது. இதைக் கண்டு தேவர்கள் இலட்சுமணனை பாராட்டினர்.
இலட்சுமணன், படைக்கலன்கள் அழித்ததை பார்த்து தேவர்கள் பாராட்டினர். ஆனால் இந்திரஜித் இதைக் கண்டு திகைத்து நின்றான். பிறகு இந்திரஜித் இலட்சுமணனை பார்த்து, இலட்சுமணா! இப்பொழுது நான் விடும் அஸ்திரத்தால் நிச்சயம் நீ மாண்டொழிவாய். உன்னால் இதிலிருந்து தப்பிக்க முடியாது எனக் கூறி விட்டு மிகச்சிறந்த அஸ்திரமான நாராயணஸ்திரத்தை ஏவினான். இலட்சுமணனும், அதே அஸ்திரத்தைக் கொண்டு அதை தூள்தூளாக்கினார். இதைப் பார்த்த இந்திரஜித் மிகவும் கோபங்கொண்டு இதற்கெல்லாம் விபீஷணன் தான் காரணம். அதனால் அவனை கொல்ல ஓர் அஸ்திரத்தை ஏவினான். அந்த அம்பு விபீஷணனை நோக்கி வரும்போது, இலட்சுமணன் அதையும் உடைத்தெறிந்தார். பிறகு இந்திரஜித் அங்கிருந்து மறைந்து அரண்மனையில் வீற்றிருக்கும் இராவணன் முன் தோன்றினான்.
இந்திரஜித் இராவணனை பார்த்து, உன் தம்பி விபீஷணனால் இன்று என் யாகம் தடைப்பட்டு போனது. பிறகு அங்கு நடந்த போரை பற்றிக் கூறினான். இலட்சுமணனின் வில்வேகத்தையும், போர்திறமையும் பற்றிக் கூறினான். அதனால் நீ சீதையை மறந்து விடு. இதுவே உனக்கு நன்மை. அவர்களும் போரை நிறுத்திக் கொள்வார்கள் எனக் கூறினான். இராவணன் கோபத்துடன், நான் சீதையை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு பதில், அவர்கள் முன் என் உயிரைத் துறப்பது மேல். உனக்கு போருக்குச் செல்ல பயமாக இருந்தால் என்னிடம் சொல், நானே போருக்குச் செல்கிறேன் எனக் கூறினான். பிறகு இந்திரஜித் இராவணனிடம், தந்தையே! தாங்கள் கோபம் கொள்ள வேண்டாம். நானே போருக்கு செல்கிறேன் என்றான். இந்திரஜித் இராவணனிடம் இருந்து விடைப்பெற்று போர் நடக்கும் இடத்திற்குச் சென்றான்.
அங்கு இலட்சுமணனுக்கும் இந்திரஜித்துக்கும் கடும்போர் நடந்தது. இலட்சுமணன், ஒரு அம்பை ஏவி இந்திரஜித்தின் தேரை உடைத்தெறிந்தார். பிறகு இந்திரஜித் கையில் வாளை ஏந்திக் கொண்டு வானத்தில் சென்று மறைய முற்பட்டான். அப்போது இலட்சுமணன், அம்பை எய்தி இந்திரஜித்தின் வாளோடு கையை வெட்டினான். தன் கையை இழந்த நிலையில் இந்திரஜித் இலட்சுமணனை நோக்கி, ஒரு சூலாயுத்தை வீசினான். இலட்சுமணன் அதையும் உடைத்தெறிந்தார். பிறகு இலட்சுமணன் வேதங்களைத் தெளிந்து கூறும் கடவுளும், அந்தணர்கள் வணங்கும் கடவுளும் இராமனே என்பது உண்மை என்றால், இந்திரஜித்தைக் கொல் என்று ஓர் கடிய பாணத்தை ஏவினான். அப்பாணம் இந்திரஜித்தின் தலையை சீவிக் கொண்டு விழுந்தது.
மாவீரனும், மந்திர வேலையில் வல்லவனான இந்திரஜித் அந்த இடத்திலேயே தன் உயிரை விட்டான். இதைக்கண்டு விபீஷணன் ஆர்ப்பரித்தான். வானரர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். தேவர்கள் இலட்சுமணனை வாழ்த்தி பூமாரி பொழிந்தனர். பிறகு அங்கதன், இந்திரஜித்தின் தலையை கையில் ஏந்திக் கொண்டு, அனுமன் இலட்சுமணனை தோளில் ஏற்றிக் கொண்டு இராமரிடம் இச்செய்தியைக் கூறச் சென்றனர். இதைக் கேட்டு இராமர், இலட்சுமணனைத் தழுவிக்கொண்டு, இராவணனுக்கு இனி யார் இருக்கிறார்கள்? அவனின் முடிவு காலம் வந்து விட்டது எனக்கூறி தன் மகிழ்ச்சியை காட்டினார். பிறகு இராமர் இலட்சுமணனிடம், தம்பி இலட்சுமணா! இந்த வெற்றிக்கு நீயும் காரணம் இல்லை, நானும் காரணம் இல்லை. இதற்கு காரணம் விபீஷணன் தான் எனக் கூறி விபீஷணனை பாராட்டினார். பிறகு அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
தொடரும்.....
0 Comments