இராமாயணம் பகுதி - 38 - RAMAYANAM PART - 38


இராமாயணம் பகுதி - 38


இராமாயணம் பகுதி - 38 - RAMAYANAM PART - 38

இலட்சுமணர் அனுமனிடம், சகோதரனே! நாங்கள் ரகு குலத்தில் பிறந்தவர்கள். அயோத்தியின் சக்ரவர்த்திகள். தசரத சக்ரவர்த்தியின் புதல்வர்கள் இராமர், இலட்சுமணர். கைகெயி தாயின் கட்டளைப்படி, இராஜ்ஜியத்தை பரதனிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் வனவாசம் வந்துள்ளோம். பிறகு அனுமன், சுக்ரீவனை அழைத்து வரச் சென்றார். அனுமன் சுக்ரீவனிடம் சென்று, சுக்ரீவா! இனி நீ வாலியைக் கண்டு அஞ்சி நடுங்க வேண்டாம். இனி உனக்கு துன்பம் நீங்கி இன்பம் வர போகிறது. உன்னை காக்க இராமர் வந்துள்ளார். அவர் வாலியை கொன்று உன்னை காத்தருள்வார். இராமர் நீதிநெறி தவறாதவர். விசுவாமித்திர முனிவரிடம் சீடனாக இருந்தவர். அரக்கர்கள் தாடகையையும், சுபாகுவையும் வதம் செய்தவர். விராதனை கொன்றவர். கரன் முதலிய அரக்கர்களை தனியாக நின்று கொன்றவர். தன் தாய் கைகெயின் கட்டளையினால் இராஜ்ஜியத்தை துறந்து வனம் வந்து உள்ளார். இராமரால் உன் வாழ்வில் பிரச்சனைகள் தீரும். கவலைக் கொள்ளாதே எனக் கூறினான்.

சுக்ரீவன் அனுமனின் வார்த்தைகளை கேட்டு மிகவும் மகிழ்ந்து போனார். உடனே தொலைவில் நிற்கும் இராம இலட்சுமணரை கண்டு மகிழ்ச்சியடைந்தான். சிறிது நேரம் கண்ணிமைக்காமல் இராம இலட்சுமணைரையே பார்த்துக் கொண்டு இருந்தான். பிறகு அவர்களின் பக்கம் சென்று தொழுது வணங்கினான். இராமரும் சுக்ரீவனை தழுவிக் கொண்டார். இராமரோ சூரிய வம்சத்தில் பிறந்தவர். சுக்ரீவன் சூரியனின் குமாரன். இவர்கள் இருவரும் ஒன்றுப்பட்டு இருந்தனர். சுக்ரீவன் இராமனை பார்த்து, பெருமானே! தங்களை கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பெரும் தவம் செய்து இருக்கின்றேன். ஆதலால் தான் தங்களை இன்று நான் சந்தித்து உள்ளேன் என கூறினான். இராமர் சுக்ரீவனிடம், சுக்ரீவரே! மதங்க மகரிஷி ஆசிரமத்தில் சவரி மூதாட்டி உன்னுடைய நற்குணங்களை என்னிடம் கூறி உன்னை சந்திக்கமாறு கூறினார். ஆதலால் தான் நான் உன்னை நாடி வந்துள்ளேன் என்றார்.

சுக்ரீவன் பெருமானே! குற்றம் செய்யாத என்னை, என் அண்ணன் வாலி மிகவும் துன்புறுத்தி வந்தார். ஆதலால் நான் இம்மலைக்கு வந்து ஒளிந்து கொண்டேன். இம்மலைக்கு வந்தால் என் அண்ணன் வாலியின் தலை வெடித்து விடும். இது மதங்க முனிவரின் சாபம் ஆகும். ஆதலால் நான் இம்மலையில் துன்பம் இன்றி வாழ்ந்து வருகிறேன் என்றான். இதனைக் கேட்ட இராமர் சுக்ரீவனை கட்டி தழுவிக் கொண்டார். சுக்ரீவா! இன்று முதல் நீ என் தம்பி. உன்னுடைய நண்பர் எனக்கும் நண்பர். உன்னுடைய பகைவர் எனக்கும் பகைவர். இன்று முதல் தசரதருக்கு ஆறு புதல்வர்கள். உன்னுடைய இன்ப துன்பங்களில் எனக்கும் பங்கு உண்டு. இனி நீ கவலைக் கொள்ளாதே என ஆறுதல் கூறினார். இந்த கண்கொள்ளா காட்சியைக் கண்ட அனுமன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். மற்ற வானர வீரர்களும் இதனைக் கண்டு மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். பிறகு எல்லோரும் சுக்ரீவனின் குகைக்குச் சென்றனர்.

சுக்ரீவன் தன் குகையில் இராம இலட்சுமணரை அமரச் செய்தார். பிறகு சுக்ரீவன் தன்னிடமிருந்த காய் கனிகளை கொடுத்து உபசரித்தான். இதனை பார்த்த இராமர் தன் மனதில், இவ்வுலகில் மனைவியுடன் இல்லறத்தில் வாழ்பவர்கள், தேடி வரும் விருந்தினருக்கு மனைவிமார்கள் தான் உபசரித்து உணவு படைப்பார்கள். அது தான் நியதி. மனைவி இருக்க கணவர் விருந்ததினை படைக்க மாட்டார்கள். இங்கு சுக்ரீவனின் மனைவி உணவு படைக்க வில்லையே! என நினைத்தார். சுக்ரீவனிடம், தம்பி! நீ உன் மனைவியை பிரிந்து வாழ்கிறாயா? எனக் கேட்டார். இதனை கேட்ட சுக்ரீவன், மிகவும் வருந்தி கண் கலங்கி நின்றான். பிறகு அனுமன் நடந்தவற்றையெல்லாம் கூறினான். வாலியும், சுக்ரீவனும் அண்ணன் தம்பி. வாலியின் மனைவி தாரை, சுக்ரீவனின் ருமாதேவி ஆவாள். 

வாலி மிகுந்த வலிமை உடையவன். தன்னை எதிர்த்து யார் போர் செய்தாலும் அவர்களிடம் உள்ள வலிமை வாலியிடம் வந்து சேரும். இது சிவபெருமான் வாலிக்கு கொடுத்த வரம் ஆகும். ஒரு சமயம் மாயாவி என்னும் அரக்கனை அழிக்க வாலியும், சுக்ரீவனும் சென்றனர். அவ்வரக்கன் மலைக்குகையில் உள்ள ஒரு பொந்தில் ஒளிந்துக் கொண்டான். வாலி, தான் உள்ளே சென்று போரிட்டு அரக்கனை அழித்துவிட்டு வருவதாக சொல்லி சுக்ரீவனை வெளியே இருந்து காவல் புரியும்படி கூறிவிட்டு சென்றான். அக்குகையில் இருந்து வந்த இரத்ததால் அண்ணன் வாலி இறந்து விட்டதாக எண்ணிய சுக்ரீவன், அரக்கன் வெளிவந்தால் அனைவரையும் அழித்து விடுவான் என குகையை ஒரு கல்லை கொண்டு மூடிவிட்டு சென்றான்.

பிறகு வாலி அரக்கனை வதம் செய்துவிட்டு வந்தபோது, குகை மூடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். வாலி கல்லை நகர்த்திவிட்டு குகைக்குள் இருந்து வெளிவந்து கிஷ்கிந்தை அடைந்தான். அங்கு சுக்ரீவன் அரசாள்வதை கண்டு தன்னை கொன்று அரச பதவியை பறிக்க தான் சுக்ரீவன் இவ்வாறு செய்துள்ளான் என சுக்ரீவன் மீது கோபம் கொண்டான். சுக்ரீவனை கொல்ல வேண்டும் என நினைத்து அவன் போகும் இடமெல்லாம் சென்று அவனை துன்புறுத்தி வந்தான். அரக்கன் வெளிவந்தால் அனைவரையும் அழித்து விடுவான் என்பதால் தான் குகையை மூடிவிட்டு வந்தேன் என சொல்லியும் வாலி கேட்கவில்லை. இதனால் சுக்ரீவன் இம்மலையில் வந்து ஒளிந்து கொண்டான். இதனால் கோபம் கொண்ட சுக்ரீவனின் மனைவி ருமாதேவியை அவன் சிறை பிடித்து வைத்துள்ளான் எனக் கூறினான்.

இதைக் கேட்டு இராமர் கோபம் கொண்டு எழுந்தார். சுக்ரீவா! உடனே எனக்கு வாலியைக் காட்டு. அவனை வதம் செய்துவிட்டு உனக்கு முடிசூட்டுகிறேன் என்றார். ஆனால் சுக்ரீவனுக்கு வாலியை எதிர்க்கும் அளவிற்கு இராமனுக்கு வலிமை உள்ளதா? என சந்தேகம் எழுந்தது. இதைப் பார்த்த அனுமன் சுக்ரீவனை தனியே அழைத்துப் சென்று, வாலியை கொல்லும் அளவிற்கு இராமனரிடம் வலிமை உள்ளதா என நீ சந்தேகப்படுகிறாய். வானளவில் படர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களை இராமரின் வில் துளைத்தால், வாலியின் உயிரையும் துளைக்கும். ஆதலால் நாம் இதனை சோதித்துப் பார்ப்போம் என்றான். பிறகு அவர்கள் ஓர் இடத்தில் ஏழு மராமரங்கள் இருப்பதை கண்டனர்.

இவர்கள் இராமனிடம் சென்று தங்களால் இந்த மரங்களை துளைக்க முடியுமா? எனக் கேட்டனர். இராமர் தன்னுடைய வலிமையை இவர்கள் அறிய எண்ணுகிறார்கள் என எண்ணினார். உடனே தன் கோதண்டத்தை எடுத்து நாணை பூட்டி அம்பை மரங்களை நோக்கி எய்தினார். நாணின் ஒலியைக் கேட்டு வானரங்கள் எல்லாம் பயந்து ஓடி ஒளிந்தன. இராமரின் பாணம் ஏழு மராமரங்களையும் துளைத்தது. அந்த மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. இதைப் பார்த்த சுக்ரீவன் ஆச்சர்யமடைந்து நின்றான். ஒரு மரத்தை துளைப்பதே மிகவும் அரிது. அதுவும் ஏழு மரங்களை துளைப்பது மிகவும் பாராட்டக்குரியது என இராமரை வணங்கி தொழுதான்.

பிறகு அவர்கள் அங்கிருந்து போகும் வழியில் துந்துபி என்ற எலும்பு, மலை வடிவில் கிடப்பதை கண்டனர். இராமர் சுக்ரீவனிடம், சுக்ரீவா! இது என்ன எலும்பு? மலை போல் இவ்வளவு பெரியதாக உள்ளது எனக் கேட்டார். சுக்ரீவன், பெருமானே! துந்துபி என்ற அரக்கன் மலைபோல் பெரிய வடிவத்தை உடையவன். ஒரு சமயம் இவ்வரக்கன் வாலியிடம் போருக்கு வந்தான். அப்போரில் வாலி அரக்கனை கொன்று விட்டான். அரக்கனுடைய இரத்தம் சிந்திய இடமே எலும்பாக மாறி உள்ளது என்றான். இராமர் இலட்சுமணரை பார்த்து, தம்பி! இந்த எலும்பை அகற்றிவிடு என்றார். இலட்சுமணர் தன் கால் பெருவிரலால் அதனை அகற்றினார். இதனைக் கண்ட சுக்ரீவன், இராமருக்கு நிகரான பேராற்றால் உடையவர் என இலட்சுமணரை போற்றி வணங்கினார்.

தொடரும்.....

Post a Comment

0 Comments