மகாபாரதம் பகுதி - 100
இதனிடையே உயிருக்குப் பயந்து ஓடிய அஸ்வத்தாமனை அர்ஜுனன் பின் தொடர்ந்தான். அவனிடமிருந்து தப்பிக்க கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒரு யோசனை சொன்னார். அர்ஜுனா! அந்த அஸ்திரம் உன்னை அழித்து விடும். பதிலுக்கு, நீயும் உன்னிடமுள்ள பிரம்மா ஸ்திரத்தை விடு, என்றார். அப்போது வேதவியாசர் அங்கு வந்தார். கிருஷ்ணனிடம், கிருஷ்ணா! என்ன இது விளையாட்டு! இரண்டு பிரம்மாஸ்திரங்கள் மோதினால் உலகமே அழிந்து விடும் என்பது உனக்குத் தெரியாதா! காக்கும் கடவுளே! நீயே இப்படி செய்யலாமா? என்றார். தாங்கள் சொல்வது சரிதான்! அர்ஜுனன் அழிந்தால் தர்மம் தோற்றதாக ஆகிவிடுமே! தர்மத்துக்குப் புறம்பாக பிராமணனாகிய அஸ்வத் தாமன் இந்த அஸ்திரத்தை எய்தான். பிராமணனே இப்படி செய்தால் உலகம் ஏது? சரி... இப்போது நீங்களே சொல்லுங்கள், உலகத்தைக் காக்கும் உபாயம் பற்றி... என்றார் கிருஷ்ணர். கிருஷ்ணா! நீ அறியாதது ஏதுமல்ல. அஸ்வத்தாமனுக்கு அஸ்திரத்தை விட மட்டும் தான் தெரியும். அர்ஜுனனுக்கோ விட்ட அஸ்திரத்தை திரும்பப்பெறும் மந்திரமும் தெரியும். எனவே அவன் விட்ட அஸ்திரத்தைத் திரும்பப் பெறச்சொல், என்றார் வியாசர். அப்படியானால், அஸ்வத் தாமனின் அஸ்திரம் அர்ஜுனனைக் கொன்று விடுமே, அதற்கென்ன தீர்வு, என்றதும் சிரித்த வியாசர், பரந்தாமா! உன் லீலைக்கு எல்லையே இல்லை, மாயவனே! எல்லாசக்தியும் படைத்த உனக்கா இதற்கான உபாயம் தெரியாது! இரண்டு அஸ்திரமும் அர்ஜுனனின் கைக்கே வந்து சேரும்படி மந்திரத்தைச் சொல்லி விட வேண்டியது தானே! அர்ஜுனனும் பிழைப்பான், உலகமும் பிழைக்கும், என்றார். வியாசரின் புத்திசாலித்தனம் கண்டு கிருஷ்ணருக்கு மிகுந்த ஆனந்தம். அதன்படியே, அர்ஜுனன் இரண்டு அஸ்திரங்களையும் திரும்பப் பெற்றான். இதுகண்டு, அதிர்ச்சியடைந்த அஸ்வத்தாமனை இழுத்து வந்தான் அர்ஜுனன்.அவனை திரவுபதியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான்.
பாஞ்சாலி! உன் ஐந்து புத்திரர்களையும் கொன்றவன் இதோ உன் முன்னால் நிற்கிறான். இவனுக்குரிய தண்டனையை நீயே வழங்கலாம், சொல், இவனைக் கொன்று விடலாமா? என்றான். கருணைக்கடலான பாஞ்சாலி, தலை குனிந்து நின்ற துரோண புத்திரனைப் பார்த்தாள். இவன் எனக்குச் செய்த கொடுமைக்கு மரணம் சரியான தண்டனை தான்! ஆனால், இவன் பிராமணன். இவனைக் கொல்வது தீராத பாவத்துக்கு ஆளாக்கும். அது மட்டுமல்ல! இவனது தந்தையிடம் வில்வித்தை பயின்றதால் தான், உங்களுக்கு உலகம் புகழும் சிறப்பு கிடைத்தது. குரு மைந்தனைக் கொல்லக்கூடாது. அது மட்டுமல்ல! துரோணரின் மனைவியும், இவனது தாயுமான கிருபி, கணவர் இறந்த பின்பும், இவனுக்காகத்தான் தன் உயிரை வைத்துக் கொண்டிருக் கிறாள். ஐந்து பிள்ளைகளை இழந்த எனக்குத்தான் குழந்தைகளை இழந்த அருமை தெரியும். என் நிலைமை, அவளுக்கும் வர வேண்டாம், என்று கருணையுடன் சொன்னாள். இதைக் கேட்ட தர்மர் ஆனந்தப் பட்டார். பழிவாங்கும் உணர்வு கூடாது என்பது மகாபாரதம் நமக்கு உணர்த்தும் பெரிய தத்துவம்.ஆனால், பீமன் விடவில்லை.
0 Comments